இராமசேது பற்றிய விவாதத்தின் மத்தியில், இராமகாதையையும், இராமனையும் பற்றிய தமிழக முதல்வரது இழிமொழிகளுக்கு நாடு தழுவிய எதிர்ப்பு அலை எழுந்துள்ளது. தமிழகத்திலும் மிக உறுதியான எதிர்ப்பு பதிவு செய்யப் பட்டிருக்கின்றது. பல ஆங்கில, தமிழ் இதழ்களும், ஊடகங்களும் முதல்வரின் பேச்சை வன்மையாகக் கண்டித்திருக்கின்றன. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அஇஅதிமுக மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தி முடித்துள்ளது. ஊட்டியில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா தலைமையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் “புண்படுத்தாதே புண்படுத்தாதே, இந்துக்களின் உணர்வைப் புண்படுத்தாதே”, “மமதை பிடித்த கருணாநிதியே, மன்னிப்புக் கேள், மன்னிப்புக் கேள்” என்ற கோஷங்கள் எழுந்து விண்ணை முட்டின. பாஜக, மதிமுக, தேமுதிக, சரத்குமாருடைய புதிய கட்சி இவையும் முதல்வரின் அருவருக்கத் தக்க பேச்சைக் கண்டிருத்திருக்கின்றன. ஆளும் கூட்டணியில் உள்ள, இந்து உணர்வுகளை ஓரளவு மதிப்பவை என்று எண்ணப் பட்ட பாமக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள், கூட்டணி (அ)தர்மம் கருதியோ என்னவோ, முதல்வரின் இந்த அப்பட்டமான இந்து விரோதப் போக்கைக் கண்டிக்காமல் இருந்து பெரும் தவறிழைக்கின்றன.
இந்த சூழலில், அறிவுலகத்தால் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டு விட்ட, வெறுப்பியலில் திளைத்த பழைய ஆரிய-திராவிட இனவாதத்தை உயிர்ப்பித்து, இந்தப் பிரசினையை விமரிசிக்கும் விஷமத் தனமான போக்கும் ஊடாகத் தென்படுகிறது. “ராமர் வழிபாடு என்பது தமிழ் நாட்டில் இல்லாத ஒன்று. தெற்கே ராமரை ஆரிய மன்னர் என்று தான் தமிழர்கள் பார்த்து வந்திருக்கிறார்கள்” என்ற அப்பட்டமான பொய்யை என்.டி.டி.வி, சி.என்.என் ஆங்கிலத் தொலைக்காட்சிகளின் சென்னை நிருபர்கள் அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒரு என்.டி.டி.வி கலந்துரையாடலில் இந்த அபாண்டத்தைக் கேட்கச் சகியாத பேராசிரியர் நந்திதா கிருஷ்ணா நடுவில் பாய்ந்து, “என்ன கதைக்கிறார் உங்க நிருபர், தமிழ் நாட்டில் ஊருக்கு ஊர் ராமர், அனுமார் கோயில்கள் இருக்கிறதே கண்ணுக்குத் தெரியவில்லையா?” என்று வெடிக்கும் நிலைமை ஏற்பட்டது.
எம்.எஸ்.எஸ்.பாண்டியன் (வன்னிய சத்திரியர் என்று தமிழக மக்களில் பெரும்பாலர் கருதும்) இராமர் “பிராமணர் அல்லாதவர்களான, தமிழர்களின் பார்வையில்” மிக எதிர்மறையாகவே எப்போதும் கருதப் படுவதாக, பழைய திராவிட இயக்க அபத்தங்களை ஆங்கில இதழ்களில் மறுசுழற்சி செய்யத் தொடங்கியிருக்கிறார் [1]. இவற்றுக்குச் சிகரம் வைத்தாற்போல இந்த வார ஜூனியர் விகடனில் திருமாவளவன் 'சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த இராவணனை’ போற்றுவதாகத் தெரிவிக்கிறார்.
கவிச்சக்கரவர்த்தி கம்பன் படைத்த தமிழின் ஒப்புயர்வற்ற இலக்கியமான கம்பராமாயணம் ஒன்று போதாதா, இராமன் தமிழர் போற்றும் தெய்வம் என்று நிறுவுவதற்கு? தமிழர் சமயத்தின் இரு கண்கள் சைவமும், வைணவமும். அதில் ஒன்றான வைணவத்தின் பன்னிரு ஆழ்வார்களும் தெய்வமாக இராமனைப் போற்றுகிறார்களே, அது போதாதா? ஆனால் விதி வலியது. ஈவேரா காலத்திலிருந்து, அப்பேர்ப்பட்ட கம்பனுக்கே ஆரியஅடிவருடி, மனுவாதி போன்ற முத்திரைகள் இந்த அறிவீனர்களால் குத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆழ்வார்கள் எம்மாத்திரம்?
ஆதாரமில்லாத இத்தகைய உளறல்கள் ஊடகங்களின் மூலம் தொடர்ந்து பரப்பப் படுவதால், உண்மையை உரக்க உரைப்பது மிக அவசியமாகிறது, ‘’புலிநகக் கொன்றை’ ஆசிரியரும், மார்க்சிய சார்புடையவராகக் கருதப் படும் அறிஞருமான பி.ஏ.கிருஷ்ணன் ‘பயனியர்’ இதழில் எழுதியுள்ள “Karunanidhi wrong, Ram an ancient Tamil icon” என்ற அருமையான ஆங்கிலக் கட்டுரையில் [2] சங்க இலக்கியம் தொட்டு பண்டைத் தமிழரின் போற்றுதலுக்குரிய தெய்வமாக இராமன் இருந்து வந்ததற்கான ஆதாரங்களை அளிக்கிறார். அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள “சிலப்பதிகாரம் தெரியாத கருணாநிதி” என்ற பதிவில் [3] “கடுந்தெறல் இராமன்”, “வெல்போர் இராமன்” என்று இராமன் சங்கப் பாடல்களில் போற்றப் படுவதையும், சமண முனிவரான இளங்கோவடிகள் தனது காப்பியத்தில் திருமாலின் அவதாரமாக இராமனைப் பாடுவதையும் மிக அழகாக எடுத்துக் கூறுகிறார்.
சங்ககால பாமர மக்களின் வழக்கிலே கூட இராமாயணம் என்ற இதிகாசம் போற்றுதலுக்குரிய காவியமாக மட்டுமன்றி, உவமைகளைச் சுட்டும்போது கூட பண்டு நிகழ்ந்த சான்றுகளாய்க் கையாளும் வண்ணம் அமைந்திருப்பதை இந்த இரு கட்டுரைகளும் குறிப்பிடுகின்றன. வேறு சிலவற்றைப் பார்ப்போம்.
மணிமேகலையில் இராமாயணம்:
கம்பராமாயணத்திற்கு 6-7 நூற்றாண்டுகள் முற்பட்ட பௌத்த காவியமான மணிமேகலையில் ராமாயணச் செய்திகள் சான்றுகளாகவே அளிக்கப் பட்டிருக்கின்றன.
'நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு
இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப்
பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால்
(உலக அறவி புக்க காதை, 10-20)
காயசண்டிகை கூறினாள் - “நெடியோனாகிய திருமால் இராமனாக மண்ணில் அவதாரம் புரிந்து, அவன் அடங்காத பெரிய கடலை அடைத்த போது, குரங்குகள் பெயர்த்துக் கொண்டு வந்து எறிந்த பெரிய பெரிய மலைகள் எல்லாம் கடலின் வயிற்றில் சென்று மறைந்தது போல, இந்த அடங்காப் பசியை நிரப்ப இடும் மலை மலையான உணவு எல்லாம் என் வயிற்றின் ஆழத்தில் சென்று மறைந்து விடுகிறது”.
இந்த வரிகளில் பல செய்திகள் அடங்கியுள்ளன - ராமன் திருமாலின் அவதாரம். அவனது ஆணையில் வானரர்கள் கடலை அடைத்து அணை கட்டியது. மேலும், இந்த வரலாறு உவமையாகக் கூறப் படும் அளவுக்கு பிரசித்தி பெற்றிருந்தது.
இதே காப்பியத்தில் பிறிதோரிடத்தில், வாத விவாதத்தில், “ராமன் வென்றால் என்றால் மாண்பில்லாத ராவணன் தோற்றான் என்று தானே அர்த்தம்?” என்று அடிப்படையான தர்க்கமாகவே இராமகாதைச் சான்று வைக்கப்படுகிறது, அதுவும் ஒரு புத்தமதம் சார்ந்த புலவரால் என்றால் அது பண்டைத் தமிழகத்தில் எவ்வளவு அறியப் பட்ட விஷயமாக இருக்க வேண்டும்!
"மீட்சி என்பது "இராமன் வென்றான்" என
மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல்
உள்ள நெறி என்பது "நாராசத் திரிவில்
கொள்ளத் தகுவது காந்தம்" எனக் கூறல்"
(சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை, 50-60)
இந்த வரிகளில் “மாட்சி இல் இராவணன்” என்று இராவணன் உரைக்கப் படுவதையும் காண்க.
சைவத் திருமுறைகளில் இராமாயணம்:
சைவம் தழைக்கப் பாடிய சமயக் குரவர்களது பாடல்களிலும் இராமாயணம் இருக்கிறது.