சாரு நிவேதிதாவின் தடாலடி சாய்பாபா சந்திப்பு பரவசத்தை முன்வைத்து நேசகுமார் எழுதியிருந்தது மிகவும் ரசிக்கும்படியாகவும், சிந்தனையைத் தூண்டுவதாகவும் இருந்தது. சில விமரிசனங்கள்.
// வேதத்தின் முடிவு, சிகரம் என்றெல்லாம் புகழப்படும் வேதாந்தத்தின் மீது எனக்கு அபரிதமான மரியாதை உண்டு. ஆனால், வேதங்கள்? அங்கொன்றும் இங்கொன்றுமாய் படித்ததில் எனக்கு இது நமக்கு விளங்காத விஷயம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன். //
நேசகுமார், இதை நீங்கள் சொல்வது எனக்குக் கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது. குரானையும், ஹதீஸ்களையும், பற்பல இஸ்லாமிய இலக்கியங்களையும் சளைக்காமல் படித்துக் கரைத்துக் குடித்திருக்கும் நீங்கள் இந்த முயற்சியில் அயர்ந்து விட்டீர்களா? ஒருவேளை மேற்சொன்ன நூல்கள் போன்று “வெட்டு ஒன்று துண்டு இரண்டு” (literally) என்று உள்ள சமாசாரங்களை நீங்கள் மிக அதிகமாகப் படித்துவிட்ட பழக்க தோஷத்தால், பல தளங்களையும், பற்பல படிமங்களையும், பல்வேறு அதீத உருவகங்களையும் உள்ளடக்கிய ஆகத் தொன்மையான வேத இலக்கியத்தை நிதானமாகப் படிக்கப் பொறுமை இல்லாமல் போய்விட்டதோ?
// சாருவைப் போன்று வேதங்களை திட்டத் தோன்றாததற்குக் காரணம் – உபநிஷத்துக்கள். வேதத்தின் சாரமென்று சொல்கிறார்களே அந்த உபநிஷத்துக்கள் உன்னதமானவை, இந்த பூமியில் என்றோ இத்துனை உயர் கருத்துக்களை சிந்தித்து போதித்துள்ளார்களே, அந்த முன்னோர்களை , மகான்களை நினைத்து பெருமைப்படுகின்றேன். அதே சமயம், வேதத்தின் பக்கம் போக வேண்டாம். உபநிஷத்துக்களுடன் நமது தேடலை நிறுத்திக்கொள்வோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். //
உபநிஷதங்களும் வேதத்தின் பகுதி தான் என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறீர்கள். அதனால் இங்கே ‘வேதங்கள்’ என்று நீங்கள் சொல்ல வருவது சடங்குகள் மற்றும் தேவதைகள் பற்றிப் பேசும் கர்மகாண்டப் பகுதியை என்று எடுத்துக் கொள்கிறேன்.
நான்கு வேதங்களிலும் சம்ஹிதா (துதிப் பாடல்கள்), பிராமணம் (யாக செயல்முறைகள்), ஆரண்யகம் (விளக்கங்கள்), உபநிஷத் (தத்துவம்) என்ற எல்லா பகுதிகளும் உள்ளன. மந்திரங்கள் ரிஷிகளின் மெய்யுணர்வில் உதித்த காலத்தில் இந்த எல்லாப் பகுதிகளிலும் உள்ள பாடல்கள் ஒன்று கலந்தே வந்தன. இத்தகைய பகுப்புகள் பின்னால் வேதவியாசரால் உருவாக்கப் பட்டவை.