New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருஞானசம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
திருஞானசம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும்
Permalink  
 


சம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும் - 1

 

 

பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் திருஞான சம்பந்தரைப் பல்வேறு அடைமொழிகளால் சிறப்பித்துக் கூறுகின்றார். அதில்

“இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட

வந்த வைதிக மாமணி

என்ற தொடர் மிகவும் அழகானது. தமிழக வரலாற்றில் அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் சமூகம், சமயம், கலாசாரம் ஆகிய அனைத்துப் பண்பாட்டுக் கூறுகளிலும் கவிந்திருந்த இருளை சம்பந்தர் அகற்றினார் என்ற முக்கியமான வரலாற்றுச் செய்தியை உள்ளடக்கியதாக இந்தப் புராணக் குறிப்பு உள்ளது.

களப்பிரர் காலம்:

தமிழகப் பண்பாட்டு வரலாறு சங்ககாலத்துடன் தொடங்குகிறது. தமிழ்ச் சங்கங்கள் இலக்கியத்தையும், கலைகளையும் வளர்த்த மதுரை மாநகரே இதன் மையமாக விளங்கியது எனலாம். இதன் பின்னர் இருண்ட காலம் என்று பொதுவாகக் கருதப் படும் களப்பிரர் காலம் நான்கைந்து நூற்றாண்டுகள் நீடிக்கிறது. அதைத் தொடர்ந்து பக்திப் பெருவெள்ளம் இந்த மண்ணிலே பாய்ந்தோடி, சைவ வைணவ சமயங்கள் செழித்து, பெரும் ஆலயங்களும், பேரரசுகளும் உருவாகும் காலகட்டம்.

இதில் களப்பிரர் காலத்தை இருண்ட காலம் என்று முந்தைய சமூக, அரசியல் வரலாற்றாசிரியார்கள் கூறியதற்கு இக்காலம் பற்றிய முழுமையான சித்திரத்தை அளிக்கும் தெளிவான சான்றுகள் இல்லை என்று அவர்கள் கருதியது காரணம். ஆனால் இலக்கிய வரலாற்றை எழுதிய தமிழறிஞர்கள் வேதநெறியும், சைவசமயமும் மறையும் நிலையிலிருந்து, தமிழ் நூல்கள் உத்வேகத்துடன் எழாத காலமாதலால், இருண்ட காலம் என்று பெயரிட்டார்கள்.

பின்னர் களப்பிரர்கள் பற்றிய விரிவான ஆய்வுகள் செய்யப் பட்டன, அந்தக் காலகட்டத்தைப் பற்றி ஓரளவு நன்றாகவே நாம் இப்போது புரிந்து கொள்ள முடியும். களப்பிரர்கள் தமிழகத்திற்கு வெளியேயிருந்து இங்கே வந்தவர்கள். அவர்களது மூல இருப்பிடம் கர்நாடகத்தின் தற்போதைய மைசூர் பகுதியாக (சிரவணபெளகொளா) இருக்கலாம் என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப் படும் கருத்து. 3ம் நூற்றாண்டு தொடங்கி 6-7ஆம் நூற்றாண்டுகள் வரை தொண்டை மண்டலம், சேர, சோழ, பாண்டிய நாடுகள் இவற்றை அவர்கள் கைப்பற்றி ஆண்டனர். அரசு அதிகாரம் மட்டுமின்றி தமிழகத்தின் சமயம் மற்றும் பண்பாட்டு விழுமியங்களிலும் இதன் தாக்கம் பெருமளவில் இருந்தது. சமணம், பௌத்தம் இரண்டும் தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் பரவின.

களப்பிரர் காலத்தின் தொடக்கத்தில், இந்தத் தாக்கம் மிக ஆக்கபூர்வமாகவே இருந்த்து. திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற உன்னத இலக்கியங்கள் படைக்கப் பட்டன. “பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும், நீலமேனி நெடியோன் கோயிலும், அருகர் பள்ளியும், தவத்தோர் உறைவிடமும், கொற்றவைக் கோட்டமும்” அருகருகே அமைந்து அனைத்து சமயங்களும் பெருமளவில் மோதல்கள் ஏதுமின்றி, மிக்க தோழமையுடன் ஒன்றோடொன்று உறவாடி வாழ்ந்த காட்சியை சிலப்பதிகாரம் காட்டுகிறது. சமணரான இளங்கோ “நாராயணா என்னா நாவென்ன நாவே” என்று எந்த மனத்தடையும் இன்றி உள்ளம் உருகப் பாடிய சூழல் அது.

2005072200230301.jpgஒரு கட்டத்தில் சமணம் அரசு மதம் என்ற அளவில் பல பகுதிகளில் நிலை பெற்றது. மகேந்திர வர்ம பல்லவன், கூன்பாண்டியன் போன்ற மன்னர்கள் மூலம் தனது அதிகாரத்தையும், செல்வாக்கையும் அது நிலைநாட்ட முயன்றது. இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டுச் சமணம், வேதநெறி, பௌத்தம் இரண்டையுமே பின்னுக்குத் தள்ளியிருந்தது. மிக இறுக்கமான தன்மையதாகி, ஒரு வெறித்தனமான போக்கைக் கொண்டதாகவும் ஆகி விட்டிருந்தது. காலத்தால் மூத்த திருக்குறள் தவிர்த்து பெரும்பாலான மற்றைய பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இக்காலத்தில் எழுந்தவை.

சம்பந்தரது காலமான 7ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொண்டை நாட்டில் அப்பர் பெருமானின் பெரும்பணியால் வேதநெறியும், சைவ சமயமும் புத்துயிர் பெறத் தொடங்கியிருந்தன. சோழ நாடு குறுநில மன்னர்களால் ஆளப் பட்டு வந்தாலும், கலாசார ரீதியாக உயிர்த் துடிப்புடன் விளங்கியது. ஆனால் சங்கம் வளர்த்த தமிழ் மதுரையில், தமிழ்ப் பண்பாட்டுத் தொடர்ச்சியே அற்றுப் போகும் நிலை இருந்தது. சைவ நூல்கள் “பரசமய இருள்” என்று இந்த நிலையைத் தான் குறிப்பிடுகின்றன. அக்காலத்திய இலக்கியங்களில் இந்த சமூகத் தேக்கம் நேரடியாகவும், குறியீட்டுத் தன்மையுடனும் சொல்லப் படுகிறது. இதனை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: திருஞானசம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும் - 1
Permalink  
 


இலக்கியம்:

இறையனார் களவியல் உரை என்ற தமிழின் முக்கியமான உரைநூல் 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த உரையின் தோற்றம் குறித்து இதில் வரும் ஒரு கதை முக்கியமானது. “ஒருகால் பாண்டி நாட்டைக் கடும் பஞ்சம் சூழ்ந்தது. மக்கள் உணவின்றித் தவித்தனர். புலவர்களையும், அறிஞர்களையும் போற்றிக் காக்கும் பாண்டிய மன்னன் அவர்களிடம் “புலவர்களே, இந்தப் பஞ்சகாலத்தில்,உங்களைப் புரக்கும் நிலையில் நான் இல்லை. அதனால் நீங்கள் வேறு இடங்களுக்குச் சென்று விடுங்கள். பஞ்சம் அகன்றதும் உங்களைத் திரும்ப அழைத்துக் கொள்கிறேன்” என்று வேண்டினான். பன்னிரண்டாண்டுகள் இந்தக் கொடும் பஞ்சம் நீடித்தது. பின்னர் வான்மழை பொழிந்து பஞ்சம் அகன்றது. அப்போது பாண்டிய மன்னன் தமிழகமெங்கும் தன் ஏவலர்களை அனுப்பி புலவர்களையும், நூல்வல்லாரையும் அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டான். எழுத்து, சொல், யாப்பு ஆகிய மூன்று துறைகளிலும் (தொல்காப்பியத்தில் இவை மூன்றும் ஒவ்வொரு அதிகாரங்கள்) வல்லவர்கள் கிடைத்து விட்டனர். ஆனால் பொருள்” நூல்வல்ல யாருமே கிடைக்கவில்லை. எழுத்து, சொல், யாப்பு முதலிய மொழியின் அனைத்துக் கருவிகளும் இருப்பதே பொருளை விளக்கும் பொருட்டுத் தானே, அந்தப் பொருள் பற்றிய ஞானமே அழிந்து விடுமோ? என்று மன்னன் துயருற்றான்,

அப்போது ஆலவாய் அண்ணலாகிய சிவபெருமானே பொருளதிகாரத்தை விளக்கும் 60 சூத்திரங்களை அருளி, அவற்றை மன்னனின் பீடத்திற்கடியில் மறைத்து வைத்தார். அந்த ஏடுகளைக் கண்டு அளப்பற்ற மகிழ்ச்சியுற்ற மன்னன், இவற்றிற்குப் பொருள் சொல்வாரைத் தேடுக என்று ஆணையிட இறைவனே உருத்திரசன்மன் (ருத்ர சர்மன்) என்னும் புலவனாய்த் தோன்றி, அந்தச் சூத்திரங்களை விளக்கவும் செய்தான். பொருள் ஆழ்ந்தது, அதனினும் மையமானது காதல் நெறியைப் பேசும் அகப்பொருள், அந்த அகப்பொருளிலும் சாரமானது களவியல் என்பதால் களவியல் உரையாக அது மலர்ந்த்து.

கல்லாடம் (3.10-16) இதனை மிக அழகாகக் கூறும் –

“உலகியல் நிறுத்தும் பொருள் மரபொடுங்க

மாறனும், புலவரும் மயங்குறு காலை

முந்துறும் பெருமான் முளைத்தருள் வாக்கால்

அன்பின் ஐந்திணை’ என்று அறுபது சூத்திரம்

கடலமுதெடுத்துக் கரையில் வைத்தது போல்

பரப்பின் தமிழ்ச்சுவை திரட்டி மற்றவர்க்குத்

தெளிதரக் கொடுத்த தென் தமிழ்க் கடவுள்

இந்தக் கதையில் முக்கியமான வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. பொருள்” என்று இங்கே குறிப்பிடப் படுபவை வாழ்வியல் நெறிகள், சமூக மதிப்பீடுகள் ஆகியவையே. சங்க காலத் தமிழகம் காதல், வீரம், வேதவேள்விகள், சிவன், திருமால் ஆகிய பெருந்தெய்வ வழிபாடுகள், இயற்கை வழிபாடு, இசை நடனம் முதலான கலைகள், சடங்குகள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றைத் தனது மையக் கொள்கைகளாகக் கொண்டது. களப்பிர சமணர்கள் தங்கள் மதக் கொள்கைகளுடன் இவை ஒத்துப் போகாதமையால் இந்த வாழ்வியல் நெறிகளையும், அவற்றைக் கூறும் நூல்களையும் அழித்தனர். அவை இறைவன் அருளால் புத்துயிர் பெற்றன என்பதைத் தான் குறியீட்டுத் தன்மையுடன் இந்தக் கதை விளக்குகிறது.

பதிற்றுப் பத்து, பரிபாடல் போன்ற சங்க நூல்கள் நமக்கு முழுமையாக்க் கிடைக்காமல், சில பகுதிகள் விடுபட்டுப் போயிருப்பதற்கும் இதுவே காரணம். இந்த மீட்சிக்குப் பிறகு எட்டுத் தொகை, பத்துப் பாட்டு என்று தொகுப்புகள் உருவான போது பாரதம் பாடிய பெருந்தேவனார் என்னும் புலவர் இதில் ஒவ்வொரு நூலுக்கும் கடவுள் வாழ்த்துப் பாடலை எழுதி இணைத்தார் என்பர். இந்த வாழ்த்துப் பாடல்களில் அருகரும், புத்தரும் இடம்பெறவில்லை, அவை சிவன், திருமால் ஆகிய தெய்வங்களையே போற்றின என்பது குறிப்பிடத் தக்கது. திருஞான சம்பந்தப் பெருமான், பாண்டி நாட்டில் சமணத்தை வென்று சைவத்தை நிலைநிறுத்தியதற்குப் பின்னர் தான் இந்த மீட்சி ஒரு புதிய உத்வேகத்துடன் நிகழ்ந்தது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

மொழி:

மதுரையில் அந்தக் காலகட்டத்தில் தமிழ் மொழி வழக்கு தொலைந்து அயல் வழக்கே மிகுந்திருந்தது என்று சைவப் புராணங்கள் கூறுவதும் உண்மையான வரலாற்றுக் குறிப்பாகவே இருக்கக் கூடும். பிற்காலச் சமணர் பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் சிலவற்றையும், காப்பியங்களையும் யாத்தனர் ஆயினும் தமிழை உயர்ஞானம் பகர்வதற்கு ஏற்ற மொழியாக அவர்கள் கருதவில்லை. அதனால் தான் சமண சமயத்தின் மையத் தத்துவ நூல்கள் தமிழில் எழுதப் படவே இல்லை, அவை “பாகதம்” எனப் பட்ட பிராகிருத மொழியிலேயே கற்கப் பட்டன. (ஒப்பீட்டில் பௌத்தம் தனது தத்துவ வாதத் தரப்பைத் தமிழில் மணிமேகலையில் மிகத் தெளிவாக முன்வைத்தது என்பது குறிப்பிடத் தக்கது).

தமிழ் மட்டுமல்ல, வேதநெறியின் மொழியான சம்ஸ்கிருதமும் சமணர்களால் ஒதுக்கப் பட்டது. “ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலா அந்தகர்” என்றும்,

“ஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமாப்

பாகதத்தொடு இடித்துரைத்த

என்றும் தெளிவாகவே சம்பந்தர் இதனைக் கூறுகிறார். சம்பந்தர் தமது ஒவ்வொரு பதிகத்திலும் “தமிழ் விரகன்”, “தமிழ் முனிவன்” தமிழ்ஞானசம்பந்தன் என்று வெளிப்படையாக்க் கூறிக் கொள்வது, தமிழை இழிவாகக் கருதிய சமணர்களுக்கு சவால் விடும் போக்கில் இருக்கிறது என்றே கூறலாம்.

இசை:

n15.gifவரலாற்றில், நாகரீகத்தில் மேலோங்கிச் செல்லும் சமூகங்கள் எல்லாம் நுண்கலைகளைப் போற்றி வளர்ப்பதைக் காணமுடியும். சங்ககாலத் தமிழகத்தில் இசை மக்களின் வாழ்வில் மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது. இசை வல்லுனர்களான பாணர்களும், பாடினிகளும் நிறைந்திருந்தனர். அவர்கள் ஊர்கள் தோறும் சென்று, வள்ளல்களைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்று வந்தனர். பெரும்பாணாற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை என்ற இரு சங்க நூல்கள் பாணர்களின் பெயரைத் தாங்கியுள்ளன. வாழ்க்கையின் இன்பங்களையும் சரி, துயரங்களையும் சரி, பாடல்களாகப் புனைந்ததோடு மட்டுமல்லாமல், யாழ், முழவு (மிருதங்கம்) முதலிய கருவிகளின் துணையோடு அவற்றை இசைக்கும் கலாசாரமும் செழித்து வளர்ந்திருந்தது. இதன் தொடர்ச்சியாகவே, தொடக்க கால சமண காவியமான சிலப்பதிகாரத்தில் இசையும், நடனமும் முக்கிய இடத்தைப் பெறுவதைப் பார்க்கின்றோம்.

ஆனால், வாழ்க்கையைக் கொண்டாட்டமாக அல்லாமல், கர்மவினையின் சுழற்சியாகவே பார்க்கும் தன்மையை மிக அதிகமாக பிற்காலச் சமணம் வலியுறுத்தத் தொடங்கியது. இசை என்கிற கலை மேன்மையான விஷயமாக அல்ல, மேலும் மேலும் வினையில் ஆழ்த்தும் ஒரு பந்தமாக, மனித மனத்தை மயக்கி வீழ்த்தும் விஷயமாகவே சமண இறையியலில் கூறப் பட்டது. அதனால் களப்பிரர் ஆட்சியின் வளர்ச்சி நிகழ்கையில் இசையின் வீழ்ச்சி தொடங்கியது. பாணர்கள் சமூக அடுக்கில் கீழ்நோக்கிச் சென்றனர். பாணர்களை இழிசினர்என்ற கீழ்ச்சாதியினருடன் இணைத்துக் கூறும் ஒரு சங்கப் பாடல் இந்தப் போக்கைக் காட்டுகிறது.

காலப் போக்கில், இசையும், பாணர்களும், பாடினிகளும் தமிழ் மண்ணிலிருந்து ஏறக்குறைய அழிந்தே போகும் தறுவாயிலிருந்தார்கள். நான்மணிக்கடிகை என்ற பதினெண்கீழ்க்கணக்கு நூலில் பண் அமைத்துப் பாடுபவர்கள் இல்லையே, யாழ் இசைப்பவர்கள் இல்லையே என்றெல்லாம், நல்ல இசையைக் கேட்க முடியவில்லையே என்ற ஆதங்கம் தொனிக்கும் வரிகளைக் காணலாம் - “பறை நன்று பண்ணமையா யாழின்”, “பண்ணதிர்ப்பின் பாடல் அதிர்ந்து விடும்”. இன்னா நாற்பது என்ற நூலும், “பண்ணமையா யாழின் கீழ்ப் பாடல் பெரிதின்னா” என்று புலம்புகிறது. இஸ்லாமியக் கொடுங்கோலன் ஔரங்கசீப் தனது மதநம்பிக்கைக்கு எதிரானது என்று கூறி, தனது ஆட்சிக் காலத்தில் இசையைத் தடைசெய்தான். இசையின் மரணம் (“Death of Music”) என்று வரலாற்று ஆசிரியர்கள் இதைக் குறிப்பிடுவார்கள். சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியின் போதும் இசை வன்முறைக் கோட்பாடுகள் மூலம் தடை செய்யப் பட்டது. இது போன்று வன்முறையும், கொடுங்கோன்மையும், வெறுப்பும் இல்லாத போதும், கருத்தளவிலும், நடைமுறையிலும் களப்பிரர்கள் தமிழிசையை அழித்த செயலை இதற்கு ஈடாகவே கருத இடமிருக்கிறது.

சைவ சமயப் புராணச் செய்திகள் இந்த நிலையிலிருந்து இசை மீண்டெழுந்ததை உறுதி செய்கின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

குழந்தை சம்பந்தர் கையைத் தட்டித் தாளம் போடும்போது அவர் கை நோகும் என்று மனமிரங்கி, அன்னை பார்வதி தங்கத்தால் செய்த “பொற்றாளத்தை” அருளினாள் என்கிறது பெரியபுராணம். அழிந்துகொண்டிருந்த தாளம் பற்றிய இசை ஞானம் இறையருளால் காப்பாற்றப் படுகிறது என்ற வரலாற்றுச் செய்தி இது.

இதே போன்று, திருநீலகண்ட யாழ்ப் பாணர் புராணத்தில், மறைந்து போய்விட்ட யாழிசையை சிவனருளால் தன் குடும்பம் காப்பாற்றி வருவதாக அவர் கூறுகிறார். யாழிசையைக் கேட்க ஆளில்லையே என்று வருந்தி அலைகையில் அவர் சம்பந்தரைச் சந்திக்கின்றார். பின்னர் அவர்கள் இருவரது இறுதிக் காலம் வரை அவர்கள் இணைந்தே தமிழகம் முழுவதும் உள்ள தலங்களுக்குப் பயணிக்கிறார்கள்.

திருநீலகண்ட யாழ்ப்பாணர் மதுரைக் கோயிலுக்குள் சென்று சுருதி மீட்டும்போது தரையின் ஈரப் பதத்தால் சுருதி கலைகையில், இறைவனே தோன்றி அவர் அமரவும், யாழை வைக்கவும் பொற்பலகை இடுமாறு ஆணையிடுகிறான். வேறொரு தலத்தில் புற வாயிலாக வந்து கோயிலுக்குள் வழிபட்டு வந்த யாழ்ப்பாணரை, நேர்வழியாக சம்பந்தர் அழைத்துச் செல்கிறார். திருநீலநக்கர் என்ற வேதியரது இல்லத்திலே சென்று சம்பந்தர் தனது அடியார் குழாத்துடன் தங்குகிறார். அப்போது இழிகுலத்தவராகக் கருதப் பட்டு வந்த யாழ்ப்பாணருக்கு தனது யாகசாலையின் பக்கலிலே இடம்கொடுத்துத் தங்கவைக்கிறார் அந்த வேதியர். அப்போது எரிந்து கொண்டிருக்கும் யாகத்தீயும், அந்தச் செயலை ஆமோதிப்பது போல வலப்புறமாக சுழித்து சுடர்விட்டு எரிகிறதாம்!

இந்தப் புராணச் செய்திகள் அனைத்தும் பாணர்கள் தாங்கள் இழந்த சமூக அந்தஸ்தைத் திரும்பப் பெறுவதையே சுட்டுகின்றன. “வேதநெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்க” சம்பந்தர் திருஅவதாரம் செய்தார் என்று பின்னாளில் சேக்கிழார் பாடுகிறார். ஆனால் சம்பந்தருக்கு சிலகாலம் கழித்து வந்த சுந்தர மூர்த்தி சுவாமிகள், அவர் இசையையும், தமிழையும் வளர்த்தவர் என்றே பாடுகிறார். நல்லிசை ஞானசம்பந்தனும்” என்றும் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்” என்றும்

“நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும்

ஞானசம்பந்தனுக்கு உலகவர்முன்

தாளம் ஈந்து அவன் பாடலுக்கிரங்கும்

தன்மையாளனை

என்றும் சுந்தரர் தேவாரம் சுட்டுகிறது.

இப்படி மீண்டெழத் தொடங்கிய தமிழிசை மறுபடியும் செழித்து வளர்வதற்கு இன்னும் சில நூற்றாண்டுகள் பிடித்தன என்றே சொல்லவேண்டும். “திருமுறை கண்ட புராணம்” இன்னொரு செய்தியைச் சொல்லுகிறது. இராஜராஜ சோழ மன்னன் காலத்தில் (11-ஆம் நூற்றாண்டு) நம்பியாண்டார் நம்பிகள் தில்லையில் தேவாரப் பாடல்களின் சுவடிகளைக் கண்டெடுத்தபோது அவற்றைப் பாடும் பண்முறைகளை வரையறை செய்ய விரும்பினார். அப்போது தேவாரப் பாடல்களின் பண்முறைகள் அறிந்தவர்கள் இருக்கிறார்களா என்று நாடெங்கும் வலைவீசித் தேடியபோது ஒருவரும் அகப்படவில்லை. பாணர்கள் வேறுவேறு தொழில்களுக்குச் சென்று விட்டனர். மன்னன் மனம் வருந்தி இறைவனை வேண்ட, பண்முறை அறிந்த பாடினி என்ற இளம்பெண் எருக்காத்தம்புலியூர் என்ற தொண்டைநாட்டுச் சிற்றூரில் கிடைத்தாள். இவள் திருநீலகண்ட யாழ்ப்பாணர் வாழ்ந்த அதே ஊரில், அவர் மரபில் வந்தவள். இவள் வந்து தேவாரப் பாடல்களை அவற்றுக்கு உரிய பண்களுடன் பாடினாள். அவையே பின்னர் தேவாரப் பண்முறைகளாக வகுக்கப் பட்டன. இசை, நடன மரபுகள் இதுபோன்று மங்கிவிடக் கூடாது என்ற காரணத்தினாலேயே பின்னர் வந்த சோழமன்னர்கள் இந்தக் கலைகளைப் பாதுகாப்பதற்காக ஏராளமான நிவந்தங்களை வழங்கினார்கள். 


tblanmegamnews_1628839970.jpg


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பெண்டிர் நிலை:

வேத நெறி தழைத்த காலத்தில் பெண்கள் கல்வியிலும், ஞானத்திலும் சிறந்து விளங்கினர். இந்துமதத்தின் ஆதார நூல்களான நான்கு வேதங்களில் மிகப் பழமையானது ரிக்வேதம். ரிக்வேத மந்திரங்களை மெய்யுணர்வில் கண்டறிந்த ரிஷிகளை “மந்திர திரஷ்டா” என்று அழைப்பர், இந்துமதத்தின் ஆதிகுருநாதர்கள் இவர்களே. இறைவாக்கினரான இவர்களில் 26 பேர் பெண் ரிஷிகள். உபநிஷதங்களிலும் கார்கி, மைத்ரேயி என்று பிரம்மவாதினி என்றழைக்கப் படும் ஞானப் பெண்களைக் காண்கிறோம்.

சங்க்காலத் தமிழ் இலக்கியத்திலும் ஔவையார், நன்முல்லையார், ஆதிமந்தியார், நச்செள்ளையார், காக்கை பாடினியார் என்று 30க்கு மேற்பட்ட பெண் கவிஞர்கள் மிகச் சிறப்பாகக் குறிப்பிடப் படுகின்றனர். ஔவை போன்று மன்னர்களுக்கே அறிவுரை கூறும் அளவுக்கு அவர்கள் நிலை இருந்தது. ஆனால் அதைத் தொடர்ந்து வந்த நானூறு ஆண்டுகளில் பதினெண்கீழ்க்கணக்கு உள்ளிட்ட களப்பிரர் கால இலக்கியங்களில் பெண்புலவர் ஒருவர் கூட இல்லை. பெண்களின் நிலையும் இவ்விலக்கியங்களில் அவ்வளவு சிறப்பாகக் குறிப்பிடவில்லை.

இதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால் சமண சமயம் பெண் பிறவியைக் கீழானதாகக் கருதியதே. சிலப்பதிகாரத்தில் வரும் கவுந்தியடிகள் போன்று விதிவிலக்காக இருந்த சமணப் பெண் துறவியரும் பிற்காலத்தில் இல்லாது போனார்கள். பெண்கள் மோட்சத்திற்கு அதிகாரிகள் அல்லர் என்ற கருத்து மேருமந்தரபுராணம், அருங்கலச்செப்பு, சூளாமணி, சீவகசிந்தாமணி போன்ற சமண நூல்களில் மிகத் தெளிவாகவே குறிப்பிடப் படுகிறது. நல்வினைப் பயனாக அவர்கள் அடுத்த பிறவியில் ஆணாகப் பிறந்து அப்போது தான் மோட்சத்திற்குத் தகுதியுள்ளவர்களாவார்கள்.

இந்த சமயக் கோட்பாட்டின் தாக்கத்தால், நடைமுறையில் பெண்கல்வியும், சமூகத்தில் பெண்களுக்கு இருந்த உயர் இடமும் வீழ்ந்தது என்றே கூறலாம்.

சம்பந்தரது வரலாற்றில் வரும் சில அற்புதச் செயல்களைப் பார்க்கலாம். திருப்பாச்சிலாச்சிரமம் என்ற ஊரில் கொல்லி மழவன் என்ற வணிகனின் மகள் முயலகன்” என்ற வலிப்பு நோய் வந்து இறந்து விடுகிறாள். அங்கு வரும் சம்பந்தர் “மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே” என்று இறைவனைப் பாடி அந்தப் பெண்மகவை உயிர்ப்பிக்கிறார். திருமருகல் என்ற திருத்தலத்தில், ஒரு வணிகப் பெண், தன் காதலன் பாம்பு கடித்து இறந்ததால் துயருற்று அழுகிறாள். தன் தந்தை வாக்குப் படி மணம் செய்து தராமல் வணிகரை ஏமாற்றியதால், வீட்டைத் துறந்து வணிகரின் வாழ்க்கைத் துணையாக வேண்டி அவருடன் புறப்பட்டு வந்த சுதந்திர உணர்வு கொண்ட பெண் இவள். அவ்வழியாக வரும் சம்பந்தர் இந்தப் பெண்மீது கருணை கொண்டு இறைவனைப் போற்றிப் பாட, வணிகர் உயிர் மீண்டு வருகிறார்.

“சடையா எனுமால், சரண் நீ எனுமால்

விடையாய் எனுமால் வெருமா விழுமால்

மடையார் குவளை மலரும் மருகல்

உடையாய் தகுமோ இவள் உள் மெலிவே

என்று பெண் வருந்துவதை நீ பார்த்திருப்பாயோ” என்று இறைவனிடம் மன்றாடுகிறார் சம்பந்தர்.

பின்னர் திருமயிலாப்பூரில் பாம்பு கடித்து இறந்த பூம்பாவை என்னும் இளம்பெண்ணை, அவள் சாம்பல் இட்ட குடத்திலிருந்து உயிர்ப்பிக்கும் அற்புத்தையும் நிகழ்த்துகிறார். ஒவ்வொரு மாதத்தின் திருவிழாக்களையும் கூறி, இவற்றைக் காணாமல் “போதியோ பூம்பாவாய்” என்று அழைக்கும் இந்த அழகிய பதிகம், வாழ்க்கையின் இன்பங்களைத் துய்க்காமல் இந்தப் பெண் மறைந்து விட்டாளே என்ற ஆற்றாமையையும் உள்ளடக்கியது.

பாண்டி நாடு சென்ற சம்பந்தர், மங்கையர்க்கரசியாரை சந்திக்கிறார். அந்த சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திடப் போகும் பெண் அவள் என்பதை அறிந்து கொள்கிறார். இறைவனையும், அடியார்களையும் வாழ்த்திப் பாடிய தம் தமிழால்,

“மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மடமானி

பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாள்தொறும் பரவ

என்று அரசியைப் பலவாறு சிறப்பித்துக் கூறுகின்றார்.

இந்தப் புராண வரலாறுகள் எல்லாம் பெண் மகவை உயிர்ப்பிப்பதாகவும், பெண்ணின் துயர் தீர்ப்பதாகவும், பெண்ணரசியைப் போற்றுவதாகவும் இருப்பது குறிப்படத்தக்கது. சைவ சமய எழுச்சியில், பெண்மை தான் இழந்த உன்னதத்தை ஓரளவு திரும்பப் பெற்றது என்ற வரலாற்றுச் செய்தியையே இவை கூறுகின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

சமயம்:

அக்காலகட்டத்தில் வேத நெறியையும், சைவ சமயத்தையும் பின்பற்றும் மக்களுக்குப் பலவிதமான இடையூறுகள் ஏற்பட்டன என்பதைக் கூறும் பல இலக்கியச் செய்திகள் உள்ளன.

களப்பிரர் காலத் தொடக்கத்தில் எழுந்த திருக்குறள் மறப்பினும் ஓத்துக் கொளலாகும், பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்” என்று கூறும். இதில் “மறப்பினும்” என்ற சொல்லுக்கு உரையாசிரியர்கள் பொருள் கூறுகையில், வேதம் ஓதும் அந்தணர் அவர் கற்ற வித்தையை ஒருபோதும் மறப்பதில்லை. அவர் வாயை விட்டு வேதம் அகல்வதே இல்லை என்ற கருத்து தொனிக்கிறது. ஆனால், இனியவை நாற்பது என்ற பிற்கால நூல் அதற்கே உரிய அங்கதத் தொனியில்அந்தணர் ஓத்துடைமை ஆற்ற மிக இனிதே”, அதாவது வேதம் ஓதத் தெரிந்த அந்தணர் கிடைப்பது எவ்வளவு இனிது!என்கிறது. வேதம் ஓதுதல் அவ்வளவு அரியதாகி விட்ட்து என்ற வரலாற்றுச் செய்தியையே இது கூறுகிறது. திருஞானசம்பந்தர் புராணத்திலும், அவரது தந்தையார் யாகம் செய்வதற்குப் பொருள் இல்லாமல் தவிக்க, இறைவனை வேண்டி சம்பந்தர் பொற்கிழி பெறுவதாக வருகிறது. வேதநெறி புழக்கத்திலிருந்த சோழநாட்டிலேயே யாகத்திற்குப் பொருள் கொடுப்பவர்கள் மிகுதியும் இல்லாமல் போய்விட்டனர் என்பதையே அந்த அற்புதச் செயல் உணர்த்துகிறது.

தண்டி நாயனார் புராணத்தில், அவர் கோயில் குளத்தைத் தூரெடுக்கும் பணியில் ஈடுபடுகையில், அதில் உள்ள உயிரினங்கள் அழியும் என்று விதண்டாவாதம் செய்து சமணர் ஆட்சேபிக்கின்றனர். நமிநந்தி நாயனார் புராணத்தில், அவர் விளக்கேற்ற எண்ணெய் வேண்டும் என்று சமணர் வீடுகளில் கேட்க, அவரது சமய நம்பிக்கையை சமணர்கள் கேலி செய்கின்றனர்.

சம்பந்தருக்கு நூறாண்டுகள் முன்பு வாழ்ந்தவர் காரைக்கால் அம்மையார். அம்மையார் தெய்வப் பெண் என்று அவர் கணவர் உணர்ந்து கொண்ட பின், அவர் மதுரைக்கு வருகிறார். ஆனால் அங்கே இருக்கமுடியாமல், பேய் உருக்கொண்டு வடக்கு நோக்கிச் சென்றார் என்பது புராணம். சிவபக்தியுள்ள ஒரு சைவப்பெண், பாண்டி நாட்டில் அந்தக் காலகட்டத்தில் வாழவே முடியாத நிலை இருந்தது என்ற வரலாற்றுச் செய்தியைத் தான் அது கூறுகிறது.

foursaints.gifசைவ, வைணவ சமயங்களின் முதல் குருமார்களில் பாண்டிநாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. நாயன்மார்களில் 8 பேர் தொண்டை நாட்டினர். 30-40 பேர் சோழ நாட்டினர். நடுநாடு, மலைநாடு, சேரநாட்டிலும் நாயன்மார் தோன்றியிருக்கின்றனர். ஆனால் தொன்மையான பண்பாட்டுப் பாரம்பரியம் உடைய, சங்கம் வைத்துத் தமிழ்வளர்த்த தென்பாண்டி நாட்டில் தோன்றியவர் நால்வரே. இதில் மூவர் - மங்கையர்க்கரசியார், குலச்சிறையார், நின்றசீர் நெடுமாறனாக மாறிய கூன்பாண்டியன் ஆகியோர் சம்பந்தருடைய தொடர்பாலேயே நாயன்மார்களானவர்கள். மூர்த்தி நாயனார் மிகக் குறுகிய காலம் அரசாண்ட ஒரு சைவக் குறுநிலமன்னர். வைணவத்திலும் முதலாழ்வார் மூவர் தொண்டை நாட்டினர், பிறர் சோழநாட்டினர்.

சம்பந்தரது காலத்திற்குப் பின்பு தான் வேத நெறியும், சைவ வைணவ சமயங்களும் பாண்டி நாட்டில் புத்தெழுச்சி பெறுகின்றன. மாணிக்கவாசகர், நம்மாழ்வார், பெரியாழ்வார் ஆகிய அருளாளர்கள் அங்கு தோன்றுகின்றனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

மதக் காழ்ப்பா?

சம்பந்தரது தேவாரப் பாடல்களில் மதக் காழ்ப்பு அதிகம் இருக்கிறது என்று தற்போதைய இலக்கியவாதிகள் கூறுகிறார்கள். சம்பந்தரின் ஒவ்வொரு பதிகத்திலும் “திருக்கடைக்காப்பு” என்று சொல்லப்படும் கடைசிப் பாடலுக்கு முந்தைய பாடலில் புத்த,சமண மதங்களாகிய பொய்நெறிகள் அகலவேண்டும் என்று இறைவனிடம் வேண்டும் பகுதி வருகிறது. “தோடுடைய செவியன்” என்ற தனது முதல் திருப்பதிகத்திலேயே “புத்தரோடு சமணும் பொறியில் புறம்கூற நெறிநில்லா” என்று ஆரம்பித்து விடுகிறார். பாண்டி நாட்டுக்குக் கிளம்பும்போது பாடிய கோளறு பதிகத்தில் “புத்தரோடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்” என்கிறார். இப்படி ஒவ்வொரு பதிகத்திலும் அவர் கூறவேண்டியதற்கான சமூக, வரலாற்றுப் பின்னணி என்ன என்பதை நாம் மேற்சொன்ன செய்திகளால் ஒருவாறு ஊகிக்கலாம். சமணத் துறவிகள் அரசு ஆதரவு பெற்று, பொதுமக்களில் ஏராளமானோர் தங்கள் சைவ நெறியைத் துறந்து வந்தபோது, அதனை மீண்டும் மீண்டும் நினைவுறுத்தவே அவ்வாறு கூறுகிறார் என்பது தெளிவு.

சீக்கிய புனித நூலான “குரு கிரந்த சாகிப்” என்ற நூலில், குரு அங்கதர், குரு தேக் பகதூர், குரு அர்ஜுன், குரு கோவிந்த் சிங் ஆகியோர் இயற்றிய பாடல்களில் அப்போதைய முகலாய ஆட்சியாளர்களின் கொடூரங்கள் பற்றிய செய்திகளும், அந்த ஆட்சியாளர்களின் மதத்தைக் கண்டனம் செய்யும் பகுதிகளும் உள்ளன. இவை முக்கியமான வரலாற்றுச் செய்திகளைச் சொல்கின்றனவே அன்றி குருட்டுத்தனமான மதக் காழ்ப்புடன் எழுதப் பட்டவை அல்ல. சம்பந்தரது பதிகங்களையும் அவ்வாறே நாம் மதிப்பிடவேண்டும்.

குறிப்பாக, சமண சமயத்தைப் பொறுத்த வரையில், துறவிகளே முழுமையாக அந்த சமயத்தைச் சார்ந்தவர்களாக அறியப் பட்டார்கள். அவர்களுக்கு ஆதரவு அளித்து வந்த குடும்பத்தார்கள், மன்னர்கள் உட்பட அந்த சமயத்தின் புரவலர்களே அன்றி, சமண சமயத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. ஒருவிதத்தில் பார்த்தால், இந்த்த் துறவிகள் கருத்து ரீதியாக தங்களை ஆதரித்துவந்த பொதுமக்கள் மீது ஆதிக்கம் செலுத்தினர் என்றே சொல்லவேண்டும். மேலும் சம்பந்தரது கண்டன்ங்கள் அனைத்தும், சமண தெய்வங்களை அல்ல, சமணத் துறவிகளின் நடவடிக்கைகளைக் குறிப்பதாகவே உள்ளதையும் நோக்கவேண்டும்.

வேதாந்தத்தை மூலமாகக் கொண்ட சைவ சமயத்தில், தத்துவ அளவில் முற்றாகிய தீமை என்ற கருத்தும் அதனின்று பெருகும் துவேஷ உணர்வும் கிடையவே கிடையாது. அனைத்தும் பரம்பொருளின் விளையாட்டே, அந்த பிரபஞ்ச லீலையின் ஒரு அங்கமே எனும்போது, நன்மையும், தீமையும், இந்தச் சமயங்களும், அவற்றைப் பின்பற்றுபவர்களும் கூட அதன் ஒரு பகுதியே தான் அல்லவா?

அதனால் தான், வேதங்களை ஆக்கியவனும் அவனே, உலகை மயக்குவதற்காக சமண, சாக்கிய மதங்களையும் அவனே ஆக்கினான் என்ற கருத்தையும் மிகத் தெளிவாகவே சம்பந்தர் கூறுகிறார் -

இணையில் இரும்பூளை இடங்கொண்ட ஈசன்

அணையில் சமண் சாக்கியம் ஆக்கியவாறே”.

வாக்கினால் மறை ஓதினாய், அமண்

தேரர் சொல்லிய சொற்களான பொய்

ஆக்கி நின்றவனே, அடைந்தார்க்கருளாயே”.

எனவே சம்பந்தரின் கண்டனங்கள் அனைத்தும், உள்ளார்ந்த வெறுப்புணர்வால் அல்ல, சமணர் நிகழ்த்திய சமூகச் சீரழிவினைக் கண்டு மனம் நொந்து கூறியது என்றே கொள்ள இடமிருக்கிறது. இது காந்தியடிகளும், பாரதியாரும் கடும் சொற்களால் பிரிட்டிஷ் அரசின் அராஜகத்தை விமர்சித்ததற்கு இணையான செயலே ஆகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

கழுவேற்றம்:

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய வரலாற்றை எழுத ஆரம்பித்த சில பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள், மதப்பூசலும், ரத்தம் பெருக்கெடுத்து ஓடி, சிலுவைப் போர்களால் நிரம்பிய மத்திய கால ஐரோப்பா பற்றிய அதே கருத்துச் சட்டகத்துடன், இந்தியாவிலும் இது போன்ற மதப்போர்கள் நடந்திருக்கும் என்று கற்பனை செய்தார்கள். இது அவர்களது பிரித்தாளும் கொள்கைக்கு வலு சேர்ப்பதாகவும் இருந்தது. இதன் தொடர்ச்சியாகவே, சுதந்திரத்திற்குப் பின் இந்திய வரலாற்றை எழுதிய இடதுசாரி வரலாற்றாசிரியர்களும், அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கும் சில தகவல்களைச் சேர்த்து ஆதாரமற்ற மதப்போர்களை உற்பத்தி செய்ய முற்படுகிறார்கள்.

இன்றைக்கு தமிழில் நவீன இலக்கிய ஏடுகள், சிற்றிதழ்கள், அறிவுஜீவித்தனமான சஞ்சிகைகள் இவற்றில் திரும்பத்திரும்ப திருஞானசம்பந்தர் வரலாற்றில் வரும் சமணர் கழுவேற்றம் பற்றி ஏராளமான ஜோடனைகளுடன் யாராவது ஒருவர் எழுதிக் கொண்டே இருக்கிறார். மதுரைக் கருகில் ஒரு ஊரில் எண்ணாயிரம் சமணர்களின் எலும்புகள் குவிந்துள்ளன, அவர்களை எரித்த சாம்பல் கூட இருக்கிறது என்றெல்லாம் சிறிது கூட அறிவியலுக்கும், பொதுப் புத்திக்கும் ஒவ்வாத வகையில் எழுதுகிறார்கள். எண்ணாயிரம் சமணர்களைக் கொன்று குவித்து, அந்த வன்முறை மூலம் வேத நெறியும், சைவ சமயம் பரவியதாக திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமே அதில் ஏதேனும் உண்மை இருக்குமோ என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள்.

இதற்கு இன்னொரு உள்நோக்கமும் இருக்கலாம். ஆபிரகாமிய மதங்களான கிறிஸ்தவம், இஸ்லாம் இவற்றின் வரலாறு முற்றாக வன்முறையும், போர்களும் நிறைந்தது. ஆரம்பகாலத்தில் அதற்கு முன்பிருந்த புராதன மதங்களையும், இயற்கை வழிபாட்டாளர்களையும் கிறிஸ்தவம் வன்முறை மூலமே அழித்தொழித்தது. அதன் பின் ஐரோப்பிய காலனியாதியாக்கமும், கிறிஸ்தவ மிஷன்களும் இணைந்து ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் உலகின் பல பகுதிகளில் பழங்குடிகளை ஈவிரக்கமின்றிக் கொன்றார்கள். அரேபியப் பாலைவனத்தில் இஸ்லாமிய மதம் தோன்றியவுடன், ரத்தவெறி கொண்ட போர்கள், கொள்ளைகள், கட்டாய மதமாற்றங்கள் ஆகிய வன்முறைச் செயல்கள் மூலமே பெரும்பாலும் பல பகுதிகளில் பரவியது. இந்த மனிதப் படுகொலைகள் தெளிவாக வரலாற்றில் பதிவு செய்யப் பட்டுள்ள. வரலாறு இந்த மதங்கள் மீது ஏற்றிவைத்துள்ள சுமை இது. எனவே, “மதச்சார்பற்ற” வரலாற்றில், இதனை ஈடுசெய்வதற்காக, இந்திய மண்ணிலும் பெரிய மதப்போர்கள் நடந்திருப்பதாக, வேண்டுமென்றே பொய்களையும், தங்கள் காழ்ப்புணர்வுகளையுமே வரலாறு என்ற பெயரில் திரித்துக் கூறுகிறார்கள்.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன?

பாரத நாட்டில் சமய விவாதங்கள் தொன்று தொட்டு நிகழ்ந்து வந்தன. வேத, உபநிஷதங்களிலும் சரி, புராண, இதிகாச இலக்கியங்களிலும் சரி, சமண, பௌத்த சமய நூல்களிலும் சரி, ஏராளமான உரையாடல்களையும், வாத விவாதங்களையும் நாம் பார்க்கிறோம். இன்றைக்கு இந்து மதத்தின் முக்கியமான தத்துவ நூலான விளங்கும் பகவத்கீதை இத்தகைய ஒரு உரையாடல் வடிவிலேயே உள்ளது. இந்திய கலாசாரம் இன்று வரை பல கட்சிகள் ஜன்நாயக முறையில் உரையாடும், ஓயாது தர்க்கம் செய்யும் இயல்பை இத்தகைய சமய விவாதங்கள் மூலமே பெற்றது என்பது தெளிவு. நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதையான பேராசிரியர் அமர்த்யா சென் Argumentative Indians என்ற தமது நூலில் இதனை மிக விரிவாகவே குறிப்பிடுகிறார். எனவே பண்டைய இந்திய வரலாற்றில் மத மோதல்கள், பூசல்கள் பற்றிய எல்லா சித்திரங்களும், கருத்துத் தளத்தில் நிகழ்ந்தவற்றையே குறிக்கின்றன. இந்த வாதங்கள் முற்றி, சிறிய அளவில் நேரடி வன்முறையாக சிற்சில இடங்களில் நடந்திருக்கலாம். ஆனால் மதப் போர்களும் பெரும் வன்முறையும் நடந்த்தற்கான ஆதாரங்கள் இல்லவே இல்லை.

200px-Ellora_cave34_001.jpgதமிழக சமணத்தின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் சம்பந்தர் காலத்தில் அது தனது வலுவிழந்த, சீரழிந்த நிலையில் இருந்தது எனலாம். அதனால் தான் சம்பந்தர் அதனை வாதத்தில் எளிதாகவே வென்று விட முடிந்தது. சமணத் துறவிகள் சமூகத்தில் இருந்து மேலும் மேலும் விலகிச் சென்று தனிமையை (seclusion) நாடினர். காலப் போக்கில், இந்தத் தனிமைச் சூழல் பல மாந்திரீக, தாந்திரீக முறைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் வழிவகுத்தது. பிற்காலச் சமணத்தில் தீர்த்தங்கரர் வழிபாட்டை விட அதிகமாக பரிவார தேவதைகள் மற்றும் யட்சிகள் வழிபாடு வலியுறுத்தப் பட்டது. இந்த தேவதைகள் மோட்சத்திற்காக அல்ல, லௌகீக வாழ்க்கைப் பலன்களுக்காகவே வணங்கப் பட்டனர். தமிழகத்தின் பல சமணக் கோயில்களில் பத்மாவதி, லலிதாட்சி ஆகிய யட்சிகளின் அழகு கொஞ்சும் சிலைகளை இன்றும் காணலாம். தமிழகத்தில் சமணம் வாழும் இன்றைய வடிவத்திலும், தீபங்குடி (தஞ்சை மாவட்டம்) போன்ற ஊர்களில் வாழும் சமணக் குடும்பங்கள் பெண்தெய்வ வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்து வருகிறார்கள்.

சமணர்களின் செயல்களாகப் பெரியபுராணம் கூறும் செய்திகள் மூலம் இது மேலும் உறுதியாகிறது. சம்பந்தர் பாண்டிநாட்டிற்கு வந்து சைவமடத்தில் தங்கியிருக்கையில், மந்திரத்தால் தீவைக்க முயன்றனர். பின்னர் அது பலிக்காமல் போகவே, உண்மையிலேயே தீமூட்டினர். மன்னனுக்கு வெப்பு நோய் பீடிக்க, பின்னர் மன்னன் நோய்தீர்ப்பவர் வெல்வார் என்ற போட்டிக்கும், பிறகு அனல் வாதம், புனல் வாதம் இவற்றிற்கும் சமணர் அறைகூவுகின்றனர். இதன் மூலம் ஆழ்ந்த சமய, தத்துவ விவாதத் தளத்திலிருந்து சமணம் வெகுவாக நகர்ந்து விட்டது புலனாகிறது. அதனால் தான், சைவம் மிக எளிதாகவே அதனை வென்று விட முடிந்தது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பெரியபுராணத்தின் படி, வாதத்தில் தோற்றால் தங்களை வேந்தன் கழுவேற்றட்டும் என்று சமணர் தாமாகவே கூறுகின்றனர்.

அங்கது கேட்டு நின்ற அமணரும் அவர்மேற் சென்று
பொங்கிய வெகுளி கூரப் பொறாமை காரணமேயாகத்
தங்கள் வாய் சோர்ந்து - தாமே தனிவாதில் அழிந்தோமாகில்
வெங் கழுவேற்றுவான் இவ்வேந்தனே என்று சொன்னார்.

அவர்கள் வாதத்தில் தோற்றவுடன், மன்னன் மந்திரியாகிய குலச்சிறையாரைப் பார்த்து, இவர்கள் மடத்திற்குத் தீவைத்த குற்றமும் புரிந்தவராதலின், தண்டிக்கப் படவேண்டியவர்கள், அதனால் இவர்களைக் கழுவில் ஏற்றுக என்று ஆணையிடுகிறான். அரச நீதியில் தலையிடுவது முறையாகாது என்று கருதி சம்பந்தர் திருவருளைச் சிந்தித்து, வாளாவிருந்தார், அதாவது அமைதியாக இருந்தார். குலச்சிறையார் அரசன் இட்ட ஆணையை நிறைவேற்றினார். புராணம் சொல்வது இது தான்.

இதில் “எண்ணாயிரவர்” என்பது எண்ணிக்கையை அல்ல, ஒரு குழுவினரைக் குறிக்கிறது என்றே கொள்வதற்கு ஆய்வு நோக்கில் இடமிருக்கிறது. எண்ணாயிரவர், நாலாயிரவர், மூவாயிரவர் என்று வணிகர் கூட்டஙக்ளுக்குப் பெயர்கள் இன்றளவும் உள்ளன. கேரளத்தில் மூவாயிரவர் என்ற குடும்ப்ப் பெயரில் இன்று நான்கைந்து குடும்பங்களே உள்ள சமூகக் குழுக்கள் இருக்கின்றன. இத்தகைய ஒரு குழுவைச் சேர்ந்த சமண குருமார்கள் வாதில் தோற்றுப் போயிருக்கலாம்.

மேலும் “கழுவேற்றம்” என்பது ஒரு குறியீட்டுச் செயலாகவே இருக்கலாம். வாதம் நடக்கும் ஞான சபையில் ஒரு கழுமரம் இருக்கும். வாத்த்தில் தோற்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளும் முகமாக, தங்கள் தோளில் இருக்கும் உத்தரீயத்தைக் கழற்றி அந்தக் கழுமரத்தில் வீசுவார்கள். அதாவது அவர்களது ஞானமும், பாண்டித்யமும் அங்கே வீழ்ந்து விட்டதாக இதற்குப் பொருள். அந்தக் காலகட்டத்துச் சூழலில், கற்றறிந்த ஒரு பண்டிதனுக்கு உயிர்போவதை விட அவமானகரமான ஒரு செயலாக இது கருதப் பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. கேரளத்தில் ஒரு இருநூறு ஆண்டுகள் முன்பு கூட வாத சபைகளில் உத்தரீயத்தைக் கழற்றி வீசும் இந்த மரபு இருந்து வந்திருப்பதாகத் தெரிகிறது. 


naneduma_i.jpg



இன்னும் இரண்டு முக்கியமான விஷயங்கள் கவனத்திற்குரியவை.

ஒன்று, சம்பந்தர் காலத்திற்குப் பின்னும், தமிழகத்தின் பல பகுதிகளில், சமணக் கோயில்களும், மடங்களும் எந்த இடையூறும் இல்லாமல் இன்றுவரை செயல்பட்டு வருகின்றன.

இரண்டு, கழுவேற்றம் பற்றிய இந்தக் குறிப்பு சமணர்களது எந்த நூல்களிலும் இல்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

இது பற்றி, தலைசிறந்த எழுத்தாளரும், சிந்தனையாளருமான ஜெயமோகன் கூறுகிறார் -

.... தமிழகமெங்கும் அதன்பின் பலநூறு வருடம் சமணரும் சமணக்கோயில்களும் எந்தவிதமான சிக்கல்களும் இல்லாமல் இருந்திருக்கின்றன. மதுரையைச் சுற்றியுள்ள சமண வழிபாட்டுதலங்கள் தொடர்ந்து இயல்பாகவே இயங்கியிருக்கின்றன. உளுந்தூர்பேட்டையில் அப்பாண்டநாதர் கோயில் இன்றும் நல்ல நிலையில் இருக்கத்தான் செய்கிறது. சமணர்களின் எண்ணிக்கை குறையக் குறைய கோயில்கள் கைவிடப்பட்டு பல நூறு வருடங்களில் பராமரிப்பில்லாமல் மெல்ல மெல்லத்தான் அழிந்திருக்கின்றன. திருநெல்வேலி ஸ்டேட் மானுவல் எழுதிய எச்.ஆர்.பேட்ஸ் வள்ளியூரைச் சுற்றி அப்படி கைவிடப்பட்டு கிடந்த பல சமண ஆலயங்களைப் பற்றிச் சொல்கிறார். பல ஆலயங்கள் பின்னர் இந்து ஆலயங்களாகஆகியிருமிருக்கலாம். பல ஆலயங்களில் இரு மதவழிபாடும் ஒரேசமயம் நிகழ்ந்திருக்கிறது.

திண்டிவனம் அருகே மேல்சித்தமூரில் இப்போதும் சமணர்களின் தென்னக தலைமை மடம் உள்ளது. பல்லவர் முதல் நாயக்கர் வரை ஆண்டகாலத்தில் அவர்கள் ஜைனக்காஞ்சியில்தான் இருந்தார்கள். நவாப் ஆட்சிக்காலத்தில்தான்மேல்சித்தமூருக்கு மடம் மாற்றப்பட்டது. பிரம்மாண்டமான அழகிய கோயில் இங்கு உள்ளது. எந்தச் சிதைவும் இன்றி. எல்லா மன்னர்களும் நிவந்தம் அளித்திருக்கிறார்கள். திருவிழாக்கள் நடந்திருக்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை சமணர்கள் நிறைந்து வாழ்ந்தது இந்த ஊர். இப்போது சமணர் எண்ணிக்கை மிக்க குறைவு. வீடுகள் கைவிடபப்ட்ட வெறும் தெருக்கள்.

நான் அங்கே மடத்துக்குச் சென்று மடாதிபதியிடம் உரையாடியிருக்கிறேன். சமணர் எண்ணிக்கை குறைவது அவர்கள் இந்துக்களாக மாறுவதனாலும் திருமணம் முதலிய சடங்குகளுக்காக அவர்கள் ஊர் விட்டு போவதனாலும்தான் என்றார்.தொண்டைமண்டல முதலியார்கள் அனைவருமே சமணர்களாக இருந்து சில நூற்றாண்டுகளுக்குள் மாறிச் சென்றவர்கள் என்று சொன்ன அவர் கழுவேற்ற ஐதீகத்தை கடுமையாக மறுத்தார். அது சைவர்கள் தங்கள் வெற்றிக்காக உருவாக்கியகதைமட்டுமே என்றார்.

காரணம் அச்சம்பவம் குறித்து தோற்றவர்கள் தரப்பில் ஒரு ஆவணம் கூட இல்லை. இத்தனைக்கும் கல்வியை அடிப்படையாக்க கொண்ட சமணம் விரிவான ஆவணப்பதிவை வழக்கமாக்க கொண்டது. சமணத்தின் வரலாறு அதன் தென்னகத் தலைநகர்களான சிரவணபெலகொளாமற்றும் முடுபத்ரே மடங்களில் தெளிவாகவே பேணப்படுகிறது என்றார். சமணரைக் கொன்றழித்த கதைகளை எழுதும் எவருக்குமே அதற்காகச் சமணரைப்பற்றி ஒரு ஆய்வுசெய்துபார்க்கலாம் என்ற எண்ணம் இல்லை.

[நன்றி: ஜெயமோகன் இணையதளம்]

தத்துவமும் அது உருவாக்கும் வாழ்வியலும்:

அக்காலகட்டத்தில் பாரத நாடெங்கும் நடைபெற்ற சமய, தத்துவ விவாதங்களில் பிரபஞ்சம், சிருஷ்டி, ஜீவன், ஆன்மா, முக்தி ஆகிய கருத்தாங்கள் குறித்த விரிவான அலசல்கள் நிகழ்ந்தன. இதில் பிரபஞ்சம் தன்னாலேயே ஒரு வெடிப்பு (explosion) மூலம் உருவாயிற்று என்ற சாங்கியக் கோட்பாட்டை முதல் தளத்தில் வேதாந்த, சமண, பௌத்த தரப்புக்கள் அனைத்துமே ஏற்றுக் கொண்டன. அடுத்த தளத்தில், இந்தப் பருப்பொருள் மயமான, ஜடமான இயற்கையில் உயிர்ச்சக்தி (சைதன்யம்) புகுந்தது எவ்வாறு என்ற கேள்வியும் முன்வைக்கப் பட்ட்து. நம்மாழ்வாரின் வரலாற்றில் செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” என்று எழுந்த கேள்வி இந்தத் தத்துவச் சிக்கலை அடிப்படையாகக் கொண்டது தான். அங்கு சமண, பௌத்த தரப்புகள் திணறி நின்றன. ஆனால் வேதாந்தம் பிரம்மம், பரம்பொருள் என்கிற அனைத்துமான ஒரு முழுமைத் தத்துவம் (Absolute) மூலம் இதற்கு விடைகாண முற்பட்டது. “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்பதே பதிலாக வைக்கப் பட்டது. வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி, ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்” ஆன மெய்ப்பொருள் தர்க்க அறிவினால் அல்ல, உள்ளுணர்வும், அனுபூதியும் கூடிய நிலையில் உணரப் படுகிறது என்றும் வேதாந்தத் தரப்பு சொன்னது. சைவ சமயம், இதனையே சிவனது பிரபஞ்ச லீலையாக, அருள் விளையாட்டாகக் கண்டது.

சமண, பௌத்த தத்துவங்களின் சூனியம் என்ற வெறுமைக் கோட்பாடு மறுப்பும், விரக்தியும் சார்ந்த வாழ்க்கை நெறிகளை நோக்கி இட்டுச் சென்றது. அதற்கு மாற்றாக வேதாந்தமும், சைவ சமயமும் முன்வைத்த “பூரணம்” என்ற கோட்பாடு உயர்தத்துவ அளவில் நிறைவானதாகவும், அதே சமயம் வாழ்க்கையின் வர்ணஜாலங்கள் அனைத்தையும் அர்த்தமுள்ளதாக ஆக்குவதாகவும் இருந்து. உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்” ”அலகில் சோதியன்” ஆன பரம்பொருளை “நிலவுலாவிய நீர்மலி வேணியன்” ஆகவும் “அம்பலத்து ஆடுவான்” ஆகவும் காணும் சமய நெறியில், உயர்தத்துவமும், உணர்ச்சிமயமான பக்தியும், கவித்துவமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தன.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

“குன்றெலாம் குயில்கூவக் கொழும்பிரச மலர்பாய்ந்து வாசமல்கு

தென்றலார் அடிவருடச் செழுங்கரும்பு கண்வளரும் திருவையாறே

என்பது சம்பந்தர் தேவாரம். இப்படி ஒவ்வொரு திருத்தலத்திலும் நதிகளையும், மலைகளையும், வயல்களையும், சோலைகளையும் உவகை பொங்க அவர் வர்ணித்துச் செல்வதன் காரணம் இவை அனைத்தும் அந்த பூரணத்தின் வெளிப்படுகளாகவே அவருக்குத் தோன்றுகின்றன.

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணில் செல்கதிக்கு யாதுமோர் குறைவிலை

என்று வாழ்க்கையை இம்மை, மறுமை இரண்டிலும் சாரமுள்ளதாக சம்பந்தரின் பாடல் காண்கிறது. இசை, நடனம், சிற்பம் ஆகிய கலைகள், கோயில்கள், திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், களியாட்டங்கள் ஆகியவற்றால் நிரம்பிய சைவ சமயம் சமூகத்தில் மிகப் பெரிய சக்தியாக ஆனதில் வியப்பே இல்லை. காலப் போக்கில் இதுவே சமணம் தமிழகத்தில் தேய்ந்து மறையவும் காரணமாயிற்று.

எனவே, சமணத்தின் மீதான சைவத்தின் வெற்றி தத்துவச் செழுமையாலும், அது உருவாக்கிய வாழ்வியல் நெறிகளின் முழுமையாலும் தான் நிகழ்ந்ததே அன்றி வன்முறையாலோ, ஆக்கிரமிப்பாலோ நிகழ்ந்தது அல்ல என்று உறுதியாகக் கூறலாம்.

இன்றைக்கு சமண சமயத்தவர்களுக்கிடையிலும், சைவ, வைணவ சமயங்களைச் சேர்ந்த இந்துக்களுடையிலும் எந்தவிதமான மதப் பூசலோ, மோதலோ இல்லை. இந்தியா முழுவதும் சமணர்கள் விநாயகர், லட்சுமி, திருமால் முதலிய தெய்வ வடிவங்களை தீர்த்தங்கரர்களின் திருவுருவங்களோடு இணைத்து வைத்துப் பூசிப்பதையும், இந்துக்கள் சமணக்கோயில்களுக்குச் செல்வதையும் சகஜமாகப் பார்க்கிறோம். அகிம்சை, தர்மம், நீதிநெறிகள் ஆகிய துறைகளிலும் இரு மதங்கள் கொண்டும், கொடுத்தும், ஊடியும் வளர்ந்து செழித்திருக்கின்றன. எனவே, இந்தக் கட்டுரையின் நோக்கம் பழைய சமய, வரலாற்றுப் பூசல்களை மீட்சி செய்வதல்ல. மாறாக அவற்றைக் குறுக்கல்வாத நோக்குடனும், அரைகுறை தகவல்களுடனும் சித்தரித்து, அவற்றிலுருந்து ஒரு தீய வெறுப்பியல் களத்தை உருவாக்கும் போக்கினைச் சுட்டிக் காட்டி, அதனை விமர்சிப்பதே ஆகும்.

துணைபுரிந்த நூல்கள்:

[1] பெரியபுராணம் – திருமுருக கிருபானந்த வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்

[2] The Kalabhras in the Pandiya Country, M Arunachalam. University of Madras, 1979

[3] களப்பிரர், நடன. காசிநாதன், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை, 1981.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ஜடாயு said...

// கிருஷ்ணமூர்த்தி கூறியது

மறுபடி வெறும் வாதங்கள், ஊகங்களின் அடிப்படையில் இந்த நிகழ்வுகளுக்கு சப்பைக் கட்டு கட்ட முயற்சித்திருக்க வேண்டாமே! // 

இந்தக் கட்டுரை முழுவதும், ஐதிகமாக வரும் மரபுகள், புராணக் குறிப்புக்கள் எதைக் குறிக்கின்றன என்பதையே அலச முயன்றிருக்கிறேன். 

சேக்கிழார் காலத்தில் (சம்பந்தருக்கு 5-6 நூற்றாண்டுகள் பின்பு) இந்தக் கழுவேற்றம் பற்றீய கதை சைவ சமய ஐதிகமாகவே ஆகி விட்டிருந்தது. அதனால் சேக்கிழார் ஒரு நாடகத் தன்மையுடன் அதைச் சித்தரித்திருக்கின்றார். அவ்வளவே. அதில் அந்தக் கட்டத்தில் சம்பந்தர் ஏன் தடுக்கவில்லை என்று கேட்பது அந்த நாடகீயச் சித்தரிப்பை உண்மை வரலாறு என்று கருதி மயங்குவதால் விளைவது. 

“புராணம் பொய்யாகாது” என்பது பழமொழி. நானும் சேக்கிழார் சொன்னது “பொய்” என்று சொல்லவில்லை, அது சொல்லவரும் “உண்மை” என்ன என்று கண்டறியவே இங்கு முயன்றிருக்கிறேன். இல்லையா? 

நாயன்மார்கள் பற்றிய மற்ற சாதாரண புராணச் செய்திகளைக் கூட வரலாற்று நோக்கில் நாம் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லையே? சமகால கல்வெட்டுகள், செப்பேடுகள், அகழ்வாராய்ச்சி, தொடர்புடைய மற்ற இலக்கியங்கள், மரபுவழிச் செய்திகள் எல்லாவற்றையும் ஆராய்ந்து தான் நாயன்மார்களது காலம் உட்பட அனைத்து விஷயங்களையும் வரையறை செய்கிறோம். 

அப்படி இருக்கையில், எண்ணாயிரம் பேர் மாண்டனர் என்று ஐதிகக் கதையாக சொல்லப் படும் இத்தகைய ஒரு நிகழ்வின் வரலாற்றுத் தன்மை பற்றி ஆராயாமல் போகிற போக்கில் அதை அப்படியே ஏற்க வேண்டும் என்று சொல்ல வருவது தான் அராஜகம். 

இங்கு நான் குறிப்பிட்டது எதுவும் *வெறும்* ஊகமல்ல. ஆதாரபூர்வமான, சான்றுகளுடன் கூடிய தகவல்களே. சப்பைக் கட்டு எங்கே இருக்கிறது?



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Haranram said...

அருமையான கட்டுரை ஜடாயு. நல்ல முறையில் அலசியிருக்கிறீர்கள். அருள் பொழியும் சைவத்தை நிலை நிறுத்திய சம்பந்தப் பெருமானின் அருளுரைகளைக் கேட்ட மன்னன் சமணர்களைக் கழுவிலேற்றியிருப்பான் என்பது நமபத் தகுந்ததாக இல்லை. அப்படியே நடந்திருந்தாலும் எண்ணாயிரம் பேர்களை அவ்வாறு தண்டித்திருப்பான் என்பதும் நம்பத்தகுந்ததாக இல்லை. நீங்கள் கூறியுள்ள படி சமணர்களின் நூல்களில் அதற்க்கான ஆதாரங்கள் இல்லையெனும்போது அது ஒரு பொய்ப் பிரசாரமாகவே இருக்க வேண்டும். 

படிப்பதற்கு மிகவும் திருப்தியாக இருந்தது. மனமார்ந்த நன்றி. 

அன்புடன்

ப. இரா. ஹரன்.

கபீரன்பன் said...

நன்கு ஆராய்ந்து தரப்பட்டுள்ள பயனுள்ள தகவல்கள். நன்றி

///இதில் “எண்ணாயிரவர்” என்பது எண்ணிக்கையை அல்ல, ஒரு குழுவினரைக் குறிக்கிறது.... எண்ணாயிரவர், நாலாயிரவர், மூவாயிரவர் என்று வணிகர் கூட்டஙக்ளுக்குப் பெயர்கள் இன்றளவும் உள்ளன. .... இத்தகைய ஒரு குழுவைச் சேர்ந்த சமண குருமார்கள் வாதில் தோற்றுப் போயிருக்கலாம் ///

பல வருடங்களாக மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்விக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய விளக்கம் கிடைத்துள்ளது என்று நினைக்கிறேன்.
மிக்க நன்றி.


 
Anonymous thiruchitrampalam said...

மிக மிக சரியான கரூத்து. இப்படி உண்மையை உரைக்க யாரும் இல்லையே என்ற மனதின் மிக பெரும் வருத்தம் இன்று இக்கட்டுரையை படித்த உடன் நீங்கியது. எரிகின்ற தீயை வென்ற பச்சை பதிகம், ஓடுகின்ற ஆற்று புனலை வென்ற திரு ஏடகம் பதிகம், நவ கோள்களையும் அன்பினில் சிறந்த சிவபெருமானது சிவனடியார்களுக்கு நன்மையே (நன்மையை மட்டுமே) செய்ய வைத்த கோளறு பதிகம், ஆண் பனைகளை பெண் பனைகள் ஆக்கிய சைவ தழைக்க வந்த பிள்ளையின் வேத வாக்கினை, சிவ வாக்கினை, நாளேடு தமிழ் மட்டுமே படித்த அறிவு ஜீவிகள், பகலவனின் பயன் அறியா புழுக்கள் பேசும் குருட்டு சாக்குக்கு இன்று சாட்டை அடி கொடுத்த அய்யா அவர்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன். வயலிலே பயிரிடையே வளரும் களையை நன்றாக அழகாக இருக்கிறது என்று அழகா பார்க்கிறோம்? தாய் சொல்லித்தான் தந்தையை அறிகிறோம். இவன் என் தந்தை என்பதை நிருபி என்றா கேட்கிறோம்? தாயை நம்பாமல் கேட்பது போல், பகுத்தறிவு என மார்தட்டி இந்து கடவுளை மட்டும் பேசும் பகுத்தறிவு வீரர்களே சைவத்தின் உண்மையான பெருமையை அறிந்து பேசு.. இப்படிக்கு திருச்சிற்றம்பலம்...

9:02 PM

 
Anonymous s.n.ganapathi said...

அய்யா வணக்கம் 
திருசம்பந்தர் அரிய தமிழா பாடல்களை இறைவன் மேல் பாடி இறை உணர்வும் தமிழ் உணர்வும் வளர்துள்ளார் எத்துணை பேர் இதை அறிவார்கள் ..ஆனாலும் இவ்வளவு தெளிவாக எடுத்து சொன்னமைக்கு மிக்க நன்றி. 
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீரசிகாமணி என்ற ஊரில் சமணர்கள் வாழ்ந்த
குகை போல உளது .. சங்கரன்கோவிலுக்கு கிழக்கே ...கழுகுமலை 19 km தூரத்தில்உள்ளது அங்கே 
சமணர்களின் குகை கோவில் உள்ளது ஆனால் சமணர்கள் வழி ஆட்கள் இல்லை நாம் என்னை செய .....
நீங்கள் கூறியது போல் எண்ணைரம் என்பது அவர்களின் குடும்ப பெயராக இருக்கலாம்...... .போக மொகலாயர்கள் ஆட்சியல் செய்த மாதிரி மதம் மறு அல்லது வெட்டுவேன் உன் கண் முன் உன் 
தாய் கற்பளிக்கபடுவாள் என்றுநாம் செயவில்லையே ????? ..என்றும் மிரட்டி மதம் மாறவில்லை .. மாறு என்றும் சொல்லவில்லை ..அன்று முதல் இன்று வரை சைவ சமயம் எனது சமயத்து க்கு வா உனக்கு நிறைய தரேன் என்று யாரும் எமர்றவில்லை புரிந்தால் சரி ..நன்றி அன்பரே hamaragana/blogspot.com
u
--



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 


சம்பந்தரும் வள்ளலாரும் இந்து ஜிகாதிகளா?

 

 


சைவ பௌத்த மோதல் ஏன் 'புனிதப்போரா'கிடவில்லை என்று பதில் எதுவும் சொல்ல முடியாத பல ஆதாரங்களுடன் நண்பர் ஜாவா குமார் அவர்களின் அருமையான கட்டுரை ஒன்றை சென்ற பதிவில் போட்டிருந்தேன். அதில் கடைசியாய் இப்படி ஒரு அனானி பின்னூட்டம் வந்தது. 


"கமலஹாசனின் அன்பேசிவம் படத்தில் நாசர் பட்டை கொட்டையுடன் தென்னாடுடைய சிவனே போற்றி என்று அடிக்கொருதரம் சொல்லிக் கொண்டு கொஞ்சமும் கூசாமல் செய்யும் அயோக்கியத்தனங்களை அற்புதமாகப் படமெடுத்துக் காட்டியிருந்தார். அந்தக்காலத்திலிருந்து சைவர்கள் (வள்ளலார் போன்ற ஒருசிலர் விதிவிலக்காக இருக்கலாம்) இப்படித்தான்.வெளியே ஆன்மீகம், செய்வதெல்லாம் பிறமத அழிப்பு, அக்கிரமங்கள். ஞானசம்பந்தன் என்ற ஆரியப்பார்ப்பனன் வைதீக இந்துமதம் பரப்ப சமணர்களைக் கழுவேற்றிக் கொலை செய்தது மறுக்க முடியாத மறைக்க முடியாத உண்மை. இதற்கு இவர்கள் பாடியதை வைத்தே சப்பைக்கட்டு வேறு. கேவலமாக இருக்கிறது."

பதிவில் சொல்லிய எந்த விஷயத்துக்கும் அறிவார்த்தமாக பதில்தராமல் கமலஹாசன் என்ற கீழ்த்தர copycat நடிகனின் படத்தை வைத்து கருத்தை எழுதிய இந்த அனானிக்கு பதில்
தருவது வீண்வேலை என்று விட்டுவிட்டேன். அடுத்தநாள் திரு.சுவனப்பிரியன் இதையே தன் பதிவில் எழுதியிருக்கிறார். அனானியாக எழுதியது அவர்தான் எனில் என் பதிவில் தன் பேர் போட்டே தன் கருத்தை எழுதியிருக்கலாம். 
காண்க: http://suvanappiriyan.blogspot.com/2006/11/blog-post_22.html
அல்லது இந்த அனானியின் கருத்தினால் தாக்கம் பெற்று எழுதியிருந்தால் குறைந்த பட்சம் அதனை ஒத்துக்கொண்டிருக்கலாம். இரண்டும் இல்லையெனில் it is a case of remarkable coincidence. எதுவாயினும் நன்றி. இது குறித்து விளக்கமாக வெகுகாலமாக எழுத வேணும் என்றிருந்தேன். 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

அய்யா சுவனப்பிரியன் மற்றும் அனானி அவர்களே, 
மிகத்தெளிவாக இந்துசமய நூல்களிலெங்கும் சமணருக்கு எதிராக கூறப்பட்டிருக்கும் வன்மையான நிகழ்வு என்பது சமணர் கழுவேறிய சம்பவமே ஆகும். இதற்கு கல்வெட்டு ஆதாரமோ அன்றி சமண இலக்கிய ஆதாரமோ கிடையாது என்பதனை கணக்கில் எடுக்க வேண்டும். மேலும் அவ்வாறு கழுவேற்றப்பட்டதாக கூறப்படுவோரும் தாமகவே கழுவேறியதாக சைவ இலக்கியங்கள் கூறுகின்றனவா அல்லது வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டதாக சைவ இலக்கியங்கள் கூறுகின்றனவா என்பது அடுத்த கேள்வி. நீங்கள் எடுத்து எழுதியிருக்கும் சேக்கிழாரின் பெரியபுராணத்தில் சமணர்கள் கழுவேறியதை மட்டும் குறிப்பிட்டுவிட்டு முக்கியமான பாடல் ஒன்றை விட்டுவிட்டீர்கள். அதுசரி. நீங்கள் கட் அண்ட் பேஸ்ட்
பண்ணியிருப்பது எங்கோ எவனோ மிஷிநரி எடுத்த வாந்திதானே. இந்த விஷயம் சம்பந்தமாய் என்னிடம் இருந்த திரு.ஜாவா குமாரின் கட்டுரைகளில் ஆங்கிலத்தில் இருந்த சிலவற்றை விடுத்து தமிழில் இருந்தவற்றை மட்டும் தொகுத்துப்போட்டேன். விடுபட்ட ஆங்கிலக்கட்டுரை ஒன்றில் இந்தக் கேள்விக்கு அவர் அருமையாக பதில் தந்திருக்கிறார். 
அதனை தமிழில் தருகிறேன்:

தெய்வத்திரு ஞான சம்பந்தர் மீது கூறப்படும் இக்குற்றச்சாட்டு எந்த அளவு உண்மை?
நம் திரு ஆதீனங்களுக்கு என் பணிவான வணக்கங்கள். நம் தெய்வத் திருமுறைகளில் எவ்வித மாற்றமோ சொருகலோ இன்றி காப்பாற்றி வந்த பெருமைக்கு உரியவர்கள் அவர்கள். நம் தெய்வத் திருமுறைகள் உண்மையை பகிர்கின்றன. 
பாண்டியன் வெற்பினை தணித்த எம்மான் ஆளுடைய பிள்ளையார் தெய்வ தமிழ்ஞான சம்பந்த பெருமான் சமணரை வாதங்களில் வெல்கிறார். அப்போது அமைச்சர் குலச்சிறையார் அவ்வாதத்தில் தோற்போருக்கு என்ன ஆகும் என வினவ அதற்கான பதில் என்ன என்பதனை சேக்கிழார் பெருமான் திருவார்த்தைகளிலேயே கேட்கலாம்: (பெரியபுராணம் பாடல் 798)
அங்கது கேட்டு நின்ற அமணரும் அவற்மேற் சென்று
பொங்கிய வெகுளி கூரப் பொறாமை காரணமேயாகத்
தங்கள் வாய் சோர்ந்து - தாமே தனிவாதில் அழிந்தோமாகில் 
வெங் கழுவேற்றுவான் இவ்வேந்தனே - என்று சொன்னார்.


மத வைராக்கியம் கொண்ட சமணர்களை திருஞானசம்பந்தர் கழுவேற்றியதாக கூறித்திரிவோருக்கு ஒரே ஆதாரங்கள் சைவ இலக்கியங்களே. ஆனால் அந்த இலக்கியமே சைவர்கள் சமணர்களை கழுவேற்றியதாக கூறவில்லை. என்றாலும் இவர்கள் இதனை நாணமின்றி கூறித்திரிவர். 


பாட்டுக்குப்பாட்டு தமிழ்ஞானசம்பந்தன் என்றே தன்னை அடையாளமிட்டு தமிழ்ச் சமுதாயத்தை வாழ்விக்க வந்த தேவார முதல்வரான ஆளுடைய பிள்ளையாரை 'ஆரியவெறியனாக்கிய' அரசியலையும் இதில் அவர் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்: அந்தக்காலத்திலிருந்து சைவர்கள் (வள்ளலார் போன்ற ஒருசிலர் விதிவிலக்காக இருக்கலாம்) இப்படித்தான் - என்று அனானி எழுதியிருப்பதைப் படித்தால் உங்கள் பக்க கும்பலின் (அல்லது ஒரு வேளை உங்களின்) அறியாமையை நினைத்து சிரிப்புதான் வருகிறது. அந்த வள்ளலாருக்கே ஞானகுரு சம்பந்தர்தான். அது உங்களுக்குத் தெரியாது. வள்ளலார் எங்கும் வானத்திலிருந்து குதித்துவிடவில்லை. 'வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினில் யான் ஒருவன்' என்றுதான் அவர் தன்னைச் சொல்லிக் கொண்டது. தன் குருவான சம்பந்தரை'அமண இருள் அற வந்த தெய்வமே' என்றும் அவரே பாடுகிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 


  • ஐந்தாம் திருமுறை 009.ஆளுடைய பிள்ளையார்
  • அருண்மாலை செவ்வகை ஒருகால் படுமதி அளவே செறிபொறி மனம்அதன் முடிவில் (29)
  • எவ்வகை நிலையும் தோற்றும் நீ நினக்குள் எண்ணிய படிஎலாம் எய்தும் (30)
  • இவ்வகை ஒன்றே வருத்தமில் வகைஎன் றெனக்கருள் புரிந்தசற் குருவே (31)
  • தெவ்வகை அமண இருளற எழுந்த தீபமே சம்பந்தத் தேவே (32)

போதுமா, இனி வள்ளலாரையும் 'இந்து ஜிகாதிகள்' லிஸ்டில் சேர்த்து விடவும்.


எனக்கு என்ன வருத்தம் என்றால் தமிழ்நாட்டுச் சைவர்களை விட, ஈழத்துச்சைவர்கள் தங்களை சைவர்கள் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறார்கள். தமிழ்நாடு
போலில்லாமல் பாடசாலையில் தேவாரம் திருவாசகம் இவற்றை எல்லாம் படித்தும் இருக்கிறார்கள். அவர்கள் யாருமே இதுபோன்ற அவதூறுகளுக்கு விளக்கம் தர
முன்வருவதில்லையே. ஏன்?



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ஜடாயு said...

அருமையான பதிலடி. 

இது மட்டுமன்று. திருவடிப்புகழ்ச்சியில் "எம் பந்தம் அற எமது சம்பந்த வள்ளல் மொழி இயன் மணம் மணக்கும் பதம்" என்றும் வள்ளலார் போற்றுகிறார். "இறவாய் தமிழோடு இருப்பாய் நீ" என்று பாரதி வாழ்த்திய மனிய நேய ஞான யோகியன தாயுமானவரும் சம்பந்தரைத் தமது குருவாகவே பல பாடல்களில் ஏத்துகிறார். 

 

சுவனப்பிரியன் said...

அரவிந்தன் நீலகண்டன்!

ஒரு வரலாற்று சம்பவத்தை கல் வெட்டில் பொதித்திருந்தால்தான் ஒத்துக் கொள்வேன் என்பது எந்த வகை நியாயமோ எனக்குத் தெரியவில்லை. இங்கு நான் பதிவில் குறிப்பிட்டது ஏதோ ஓரிருவர் அல்ல. பல வரலாற்றாசிரியர்கள் சமணர்கள் கழுவிலேற்றிக் கொல்லப்பட்டதை ஆதாரத்தோடு விளக்குகிறார்கள். எந்த ஒரு மனிதனும் தன் உயிரை சித்திரவதைக்கு உடபடுத்தி தானாகவே கழுவிலேறி மாய்த்துக் கொள்ள விரும்ப மாட்டான். ஓரிருவர்என்றாலும் ஒத்துக் கொள்ளலாம். ஆனால் இங்கு சொல்லப் படுவதோ பல ஆயிரம் சமணர்கள்.

மேலும் பல ஆதாரங்களையும் பார்ப்போம்.

கழுகு மலை!

'அரைமலை' எனும் பெயருடைய 'கழுகு மலை' தூத்துக்குடி மாவட்டத்திலுள்ளது. கழுகுமலையின் தென்புற மலைச் சரிவில் முக்குடையின் கீழ் உள்ள சமண முனிவர்களின் சிலைகள் அறுபதுக்கும் மேற்பட்டவை செதுக்கப்பட்டுள்ளன. ஒரு பெரிய சமண சிலை மாடத்தினுள் இருப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சமணர்கள் சிறப்பாக வழிபாடு செய்தனர். சமண சித்தாந்தமும் போதிக்கப்பட்டது.
-தி.இராசமாணிக்கம், நெல்லைக் குடைவரைக் கோவில்கள், பக்கம் முப்பத்து நாலு,முப்பத்து ஐந்து.

'அரைமலை' என்று அழைக்கப் பட்ட மலையிலும் சமணர்கள் கழுவேற்றப் பட்டனர். அதனால் இவ்வூர் கழு (கு) மலை எனப் பெயர் பெற்றது பின்னால் மருவி கழுகுமலையானது என்றும் கூறப்படுகிறது.'
-இளசை.கு.பக்தவத்சலம், கழுகுமலைத் தல வரலாறு,கோயிற்பட்டி, 1972, பக்கம் எட்டு.

மதுரையில் பாண்டிய நாட்டு அமைச்சர் குலச்சிறையார் அரசப் பணியாளர் என்ற முறைப்படி கழுத்தறிகளை நாட்ட ஏற்பாடு செய்கின்றார்.
-ந.சுப்பு ரெட்டியார், ஞானசம்பந்தர், சென்னை, 1986, பக்கம் இருநூற்று இருபத்து மூன்று.

அனல்வாது, புனல்வாது புரிந்து தோல்வியுற்ற எட்டாயிரம் சமணர்கள் அரச நீதிப்படி கழுவிலேற்றித் தண்டிக்கப் பட்டனர்.
-கிருபானந்த வாரியார், சிவனருட்செல்வர், சென்னை 1986, பக்கம் நானூற்று முப்பது.

கழுவேற்றுதல் என்பது அன்றைய சைவர்களின் அரச நீதி என்கிறார் திருமுருக கிருபானந்த வாரியார்.தன் வாழ்நாளை இந்துமத பிரச்சாரத்துக்கு அர்ப்பணித்துக் கொண்ட மரியாதைக்குரிய கிருபானந்த வாரியார் சொல்வதை நம்புவதா? 'ஆர்.எஸ்.எஸ் ஒரு வன்முறை இயக்கமல்ல'என்று அதன் புகழ் பாடி வரும் அரவிந்தன் நீலகண்டனின் வார்த்தைகளை நம்புவதா என்பதை பதிவைப் படிப்பவர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

//எனக்கு என்ன வருத்தம் என்றால் தமிழ்நாட்டுச் சைவர்களை விட, ஈழத்துச்சைவர்கள் தங்களை சைவர்கள் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறார்கள். தமிழ்நாடு
போலில்லாமல் பாடசாலையில் தேவாரம் திருவாசகம் இவற்றை எல்லாம் படித்தும் இருக்கிறார்கள். அவர்கள் யாருமே இதுபோன்ற அவதூறுகளுக்கு விளக்கம் தர
முன்வருவதில்லையே. ஏன்? //

எப்படி வருவார்கள்? சைவர்களுக்கு எதிராக ஆதாரம் ஒன்றா? இரண்டா? ஏதோ சமாளிக்கலாம் என்பதற்கு. ஓராயிரம் சான்றுகளல்லவோ நம் சைவருக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது.! 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ஜெஹோவா said...

சுவனப்பிரியன்,

கிருபானந்த வாரியார் சொல்வதையே நம்புகிறேன்.

அன்று அரசு நீதி கழுவேற்றுவது என்றால் இன்று அரசு நீதி தூக்கில் போடுவது. 

அரசு தானே ஐயா செய்கிறது. சிவனின் பெயரைச் சொல்லி சைவ சமயத்தவர் ஒன்றும் செய்ய வில்லை. வாதத்தில் தோற்றால் சாவு என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடக்கிறது.

உமது இஸ்லாம் போல் நான் சொல்வதை ஒத்துக் கொள் இல்லை தலை துண்டாகும் என்பது இந்தியர் பண்பாடு அல்ல.

சவூதி அரசியல் சட்டம் சொல்லும் காட்டுமிராண்டி தண்டனைகளை ஞாயப் படுத்தும் உமது கூட்டத்திற்கு அன்றைய தமிழக அரசு தண்டனையோ, இன்றைய இந்திய அரசு தண்டனைகளையோ விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து. 

அன்று சைவர்களை சமணர்கள் விரட்டினார்கள் என்றாலும், சமணர்களை சைவர் கள் விரட்டினார்கள் என்றாலும் அது இந்துக்கள் பிரச்சனை. 

இஸ்லாத்தின் வருகையையும் அது நடத்திய வெறியாட்டங்களையும் இதன் மூலம் ஞாயப்படுத்திவிடலாம் என்ற எண்ணம் இருப்பின் நேர விரையம் தான் நடக்கிறது இங்கே.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

அரவிந்தன் நீலகண்டன் said...


ஐயா சுவனப்பிரியரே:

 விசயத்திற்கு வருவோம். சைவ இலக்கியங்கள் மட்டுமே சமணக்கழுவேற்றலைக் குறித்து குறிப்பிடுகின்றன. அதற்கு (சமண இலக்கியங்களில் அல்லது கல்வெட்டு சாசனங்கள் போன்றவற்றில்) புறச்சான்று கிடையாது. அத்துடன் சமணர்கள் தாமே கழுவேறுவதாகக் கூறினார்கள் என கூறியிருந்தேன். அதனை மறுத்து இல்லை. அவர்கள் கழுவேறுவதாகக் கூறவில்லை சைவ அரச நீதியின் படி சமணர்கள் கழுவேற்றப்பட்டார்கள் என்று திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளே கூறியுள்ளார் என்பதாக ஒரு ஆதாரத்தை அளித்துள்ளீர்கள். ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். நீங்கள் கூறிய இந்த 'ஆதாரத்தின்' தன்மையை உங்களுக்கே காட்டிடுகிறேன். நீங்கள் கூறுகிறீர்கள். 
//அனல்வாது, புனல்வாது புரிந்து தோல்வியுற்ற எட்டாயிரம் சமணர்கள் அரச நீதிப்படி கழுவிலேற்றித் தண்டிக்கப் பட்டனர். -கிருபானந்த வாரியார், சிவனருட்செல்வர், சென்னை 1986, பக்கம் நானூற்று முப்பது.//

இதோ சிவனருட்செல்வர் நூலில் உண்மையில் திருமுருக கிருபானந்த வாரியார் கூறிய வார்த்தைகளை அப்படியே தருகிறேன். நீங்கள் கூறியதற்கும் அதற்கும் இருக்கும் வேறுபாட்டினை நீங்களும் வாசிப்பவர்களும் உணர்ந்து கொள்ளலாம். "இந்த வாதில் தோற்றால் தோற்றவர் என்ன செய்வது?" என குலச்சிறையார் கேட்டார். கோபமும் பொறாமையும் கொண்ட சமணர்கள், "வாதில் நாங்கள் அழிவோமாயின் எம்மை இந்த மன்னவன் கழுவினில் ஏற்றட்டும்." என்று கூறினார்கள். ...நீதில் வழுவாத மன்னன் மந்திரியாரை நோக்கி "வாதில் தோற்ற சமணர்கள் முன்னம் ஞானசம்பந்தர் அடியார் குழாத்துடன் தங்கியிருந்த திருமடத்திற்கு தீ வைத்தார்கள். ஆதலின் இவர்கள் ஒப்புக்கொண்டபடி கழுவில் ஏற்றி அரசநீதியை நிலை நிறுத்துக" என்றான்." 

இதுதான் திருமுருக கிருபானந்த வாரியார் எழுதியது. இப்போது சொல்லும் ஐயா யார் கூறுவது உண்மை? 

மேலும் விளக்கமாக புதிய பதிவு போடுகிறேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Joke Party said...

//அனல்வாது, புனல்வாது புரிந்து தோல்வியுற்ற எட்டாயிரம் சமணர்கள் அரச நீதிப்படி கழுவிலேற்றித் தண்டிக்கப் பட்டனர். -கிருபானந்த வாரியார், சிவனருட்செல்வர், சென்னை 1986, பக்கம் நானூற்று முப்பது.//

வார்த்தைகளை பயன்படுத்தும் போதும், வரலாற்றை படிக்கும் போதும் ஆழ்ந்து படிக்க வேண்டும்,கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த கூற்றே உதாரணம். வரலாற்று ரீதியிலான ஒரு தவறுக்கு திருமுருக கிருபானந்த வாரியாரும் பலியாகியிருக்கிறார் என்பதை அறியும்போது வருத்தப்படத்தான் நேர்கிறது.

"எட்டாயிரம் சமணர்கள் கழுவிலேற்றப்பட்டனர்" என்பது தவறான செய்தி.
"எண்ணாயிரம் சமணர்கள் கழுவிலேற்றப்பட்டனர்" என்பது தான் சைவ இலக்கியங்கள் தரும் செய்தி.

எட்டாயிரத்துக்கும், எண்ணாயிரத்துக்கும் என்ன வித்தியாசம்?

'எட்டாயிரம்' என்பது எண். 'எண்ணாயிரம்' என்பது ஒரு ஊர்.

பாண்டி மண்டலத்தை சேர்ந்த(பல்லவ நாடாகவும் இருக்கலாம்) எண்ணாயிரம் என்ற ஊரில் இருந்த சமணமுனிவர்கள் தான் சம்பந்தருடன் வாது செய்து தோற்றவர்கள். மிகத்தீவிர மதப்பற்றுடன் இருந்த அந்த சமணர்கள் வாதில் தோற்றவுடன் முன்பு செய்த ஒப்பந்தப்படி ஒன்று மதம் மாற வேண்டும், அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது கழுவேற வேண்டும்.

முன்கூறிய இரண்டையும் ஏற்க அவர்களுக்கு மனம் ஒப்பவில்லை. சைவத்தை ஏற்பதை விட, சைவர்களிடம் மன்னிப்பு கேட்பதை விட கழுவேறுவதே மேல் என சொல்லி கழுவேறினர்.

குமாரில பட்டர் எனும் இந்துமுனிவர் பவுத்தர்களிடம் தோற்று இதுபோன்று முன்பு நெருப்பில் அணுஅணுவாக தம்மை எரித்துக்கொண்ட சம்பவம் பற்றி ஆதிசங்கரர் வரலாறு கூறுகிறது. அக்காலத்தில் இது சர்வ சாதாரண நிகழ்வு. பாண்டிய மன்னனோ,சம்பந்தரோ இதை கட்டளை பிறப்பித்து செய்யவில்லை.

"எண்ணாயிரம்(என்ற ஊரை சேர்ந்த) சமணர்கள் கழுவேறினர்" என்பதை அரைகுரையாக புரிந்துகொண்டு "எட்டாயிரம் சமணர்கள் கழுவிலேற்றப்பட்டனர்" என பின்வந்த வரலாற்று ஆசிரியர்கள் (மார்க்சிஸ்ட் முட்டாள்கள்) வியாக்கியானம் செய்து வரலாற்றில் ஏற்றி அதை நாம் இன்று வரை நம்பி வந்திருக்கிறோம்.

10:23 PM, November 27, 2006Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//வார்த்தைகளை பயன்படுத்தும் போதும், வரலாற்றை படிக்கும் போதும் ஆழ்ந்து படிக்க வேண்டும்,கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த கூற்றே உதாரணம். வரலாற்று ரீதியிலான ஒரு தவறுக்கு திருமுருக கிருபானந்த வாரியாரும் பலியாகியிருக்கிறார் என்பதை அறியும்போது வருத்தப்படத்தான் நேர்கிறது.//
திருமுருக கிருபானந்த வாரியார் சரியாகத்தான் கூறியுள்ளார். சுவனப்பிரியன்தான் தவறாக கூறியுள்ளார். "...ஆதலின் இவர்கள் ஒப்புக்கொண்டபடி கழுவில் ஏற்றிஅரச நீதியை நிலைநிறுத்துக என்றான். அரச நீதியில் குறுக்கிடாது சம்பந்தர் திருவருளை சிந்தித்திருந்தார்.ஞானமாதவத் திருமடத்தில் தீவைத்தஎண்ணாயிரம் சமணர்களையும் குலச்சிறையார் கழுவில் ஏற்றினார்."



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

கற்பழிக்கத் தூண்டிய கவிதை

எஸ். இராமச்சந்திரன்

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ சமய நாயன்மாரான திருஞானசம்பந்தர், மதுரை நகரில் சமணர்களுடன் வாதிட்டு அவர்களை வென்றார் என்று சைவர்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கைக்கு ஆதாரமாக அமைவது, மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ள “காட்டுமாவது உரித்து” எனத் தொடங்கும் தேவாரப் பதிகமாகும். இப்பதிகத்தில், சமணர்களை வாதத்தில் வென்று அழிப்பதற்கு ஆலவாய் அண்ணல் திருவருள் புரியவேண்டும் என்று தமது கோரிக்கையினைப் பத்து பாடல்கள் மூலமாகச் சம்பந்தர் வெளிப்படுத்தியுள்ளார். உண்மையில் சமணர்களை வாதத்தில் வென்று அழிப்பது மட்டுமின்றி, சமண-பெளத்தப் பெண்டிரைக் கற்பழிப்பதும் - அல்லது கற்பழிக்குமாறு பொதுமக்களைத் தூண்டுவதும் - சம்பந்தரின் நோக்கமாக இருந்திருக்கவேண்டுமென்று சிலர் வாதிடுகின்றனர்.

 

இவ்வாறு சிலர் வாதிடுவதற்கு ஆதாரமாக இருப்பது “பெண்ணகத்து எழிற் சாக்கியப் பேய் அமண் தெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே” என்ற சம்பந்தரின் தேவாரப் பாடல் வரியாகும். ‘பெண்ணகத்து எழில்’ என்ற அடைமொழி இடம் பெற்றிருப்பதால் ‘கற்பழிக்க’ என்று சம்பந்தர் குறிப்பிட்டிருப்பது “சாக்கிய (பெளத்த) மதத்தையும், சமண மதத்தையும் பின்பற்றும் பெண்டிரைக் கற்பழிக்க” என்ற பொருளிலேயே ஆகும் என்பது இவ்வாறு வாதிடுவோரின் கட்சியாகும்.

 

இது எந்த அளவுக்குச் சரியான வாதம் என்பதை ஆராய்வோம். இப்பதிகத்தில் இடம் பெற்றிருக்கும் பத்து பாடல்களிலும், சமணர்களை அழிப்பதற்கு ஆலவாய் இறைவன் திருவருளினைச் சம்பந்தர் வேண்டுகிறார் என்பது உண்மையே. இவற்றுள் ஏழு பாடல்களில் சமணர்களை வாதில் வென்றழிக்க அருள் புரிய வேண்டுகிறார்.

 

இரு பாடல்களில் “பொய்த்த வன் தவ வேடத்தராம் சமண் சித்தரை யழிக்கத் திருவுள்ளமே” என்றும், “கழிக்கரைப்படும் மீன் கவர்வார் அமண் அழிப்பரை யழிக்கத் திருவுள்ளமே” என்றும் வேண்டுகிறார். இவ்விரு பாடல்களிலும் வாதத்தில் வெற்றி கிடைக்க வேண்டுமென்று நேரடியாகக் கேட்கவில்லை. ஆயினும், “பொய்யான தவவேடம் பூண்டுள்ள இச்சமணர்கள் தம் அறிவுத்திறனால் அல்லது சித்து வேலையால் வாதம் புரியும் எதிரியை மருட்டுபவர்கள்; கழிமுகப் பகுதியில் ஒதுங்கும் மீன்களைத் தூண்டில் போட்டுப் பிடிப்பதைப் போலத் தமது மதத்துக்கு ஆள் பிடிக்கும் இச் சமணர்கள் வாதத்தில் அழிம்பு வேலை செய்பவர்கள்” என்ற தமது கருத்தினை இறைவனுக்குத் தெரிவிப்பதன் மூலம் இறையருள் பெற்று வாதத்தில் வென்று சமணர்களை அழிக்க விரும்புகிறார் எனத் தெரிகிறது. எனவே, இவ்வொன்பது பாடல்களிலும் சமணர்களுடன் வாது செய்து வெற்றி பெற்று அதன்மூலம் சமண மதத்தை அழிக்கவேண்டுமென்று சம்பந்தர் ஆவேசத்துடன் ஆலவாயனிடம் முறையிட்டுள்ளார் என்பது நிதர்சனமாகத் தெரிகிறது. அவ்வாறிருக்க, ஒரு பாடலில் மட்டும் வாதத்தில் கிடைக்கவேண்டிய வெற்றியையோ வாது புரியும் எதிரியையோ மறந்துவிட்டு, எதிரிகளின் மதத்தினைப் பின்பற்றும் பெண்டிரைக் கற்பழிக்குமாறு பொதுமக்களைத் தூண்டும் விதத்தில் சம்பந்தர் பாடினார் எனக் கொள்வது பொருத்தமாக இல்லை. சமண சமயம் அரசியல் மட்டத்திலும் சமூக அரங்கிலும் மிகுந்த செல்வாக்குப் பெற்றுக் கோலோச்சி வந்த ஒரு தலைநகரில் - ராஜதானியில் - சமண சமயத்துக்கு அன்று வரையிலும் ஆதரவாகவே இருந்து வந்த ஓர் அரசனின் முன்னிலையில் இத்தகைய ஓர் அராஜகமான கருத்தினை வெளிப்படுத்துவது, தமது வாதத்தின் நோக்கத்திற்கே எதிரான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதனைக்கூட உணராத உன்மத்த நிலையிலா சம்பந்தர் இருந்திருப்பார்? எனவே, கற்பழித்தல் என்ற சொல்லாட்சியைச் சம்பந்தர் என்ன பொருளில் பயன்படுத்தியிருக்கக்கூடும் என ஆராய்வது தேவை.

 

வடமொழி வேதங்கள், எழுதிவைத்துப் படிக்கப்படாதவை. ஒருவர் சொல்ல அடுத்தவர் தம் காதால் கேட்டு மனப்பாடம் செய்வதன் மூலம் தலைமுறை தலைமுறையாகக் கற்கப்பட்டவை. ஸ்ருதி என்று வேதங்களைக் குறிப்பிடுவர். ‘ஸ்ரு’ என்ற சமஸ்கிருத வேர்ச்சொல், காதால் கேள் என்று பொருள்படும். பழந்தமிழில் வேதங்களைக் “கேள்வி” என்று இப்பொருளில் குறிப்பிடுவதுண்டு. சங்க இலக்கியமான குறுந்தொகை ‘எழுதாமல் கற்கப்படுவது’ என்ற பொருளில் ‘எழுதாக் கற்பு’ என வடமொழி வேதத்தைக் குறிப்பிடுகிறது.1 தொலையாத கல்வி என்பது ‘தொலையாக் கற்பு’ எனப் பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.2 எனவே, கல் என்ற வேர்ச்சொல்லடியாகத் தோன்றிய கல்வி, கற்கை, கற்பு முதலிய சொற்கள் பொருள் தொடர்புடைய சொற்களே எனத் தெரிகிறது. Education, Study, Learning என்ற ஆங்கிலச் சொற்களை இவற்றுக்கிணையான சொற்களாகக் கொள்ளலாம்.

 

இந்த அடிப்படையில் பார்த்தால் சங்ககாலச் சமூகத்தில் ஆணின் தலைமையில் அமைந்த குடும்பம் என்ற நிறுவனம் வலிமையாக வேரூன்றிவிட்ட உயர்குடியினரிடையே குடும்பத்தின் தலைமகனால் குடும்ப உறுப்பினர்களுக்கு - குறிப்பாகப் பெண்டிர்க்குக் கற்பிக்கப்பட்ட சமூக ஒழுங்கே கற்பு எனத் தெரியவரும். இதனை ஒருவகையில் நாகரிகமான நடத்தை என்றும் கொள்ளலாம். இத்தகைய சமூக ஒழுங்குக்கு உட்படாத தாய்வழிச் சமூக அமைப்பிலமைந்த குலக் குழுவினரும் சமூக ஒழுங்கினை இன்னமும் கற்றுக்கொள்ளாத விடலைப் பருவத்தினரும் ‘கல்லா’ என்ற அடைமொழியுடன் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றனர். கல்லா மழவர், கல்லாக் கோவலர், கல்லா இளையர், கல்லா மாக்கள், கல்லா மாந்தர் - இன்னும் இவை போன்ற சொற்பிரயோகங்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. மதுரைக்காஞ்சியில் வருகிற ‘கல்லா மாந்தர்’ என்ற தொடருக்குக்3 “காம நுகர்ச்சியினையன்றி வேறொன்றையும் கல்லாத இளையோர்” என நச்சினார்க்கினியர் உரை கூறுகிறார்.4 அதாவது, காமம் முதலான உணர்வுகளைச் சமூக ஒழுங்குக்கு உட்பட்ட வகையில் வெளிப்படுத்தத் தெரியாத நிலையே கல்லாத நிலையாக நச்சினார்க்கினியரால் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இதுவே சரியான புரிதலாகும். அவ்வாறெனில் கற்புநிலை என்பது சமூக ஒழுங்குக்கு உட்பட்ட வகையில் காம உணர்வினை வெளிப்படுத்தல் மற்றும் துய்த்தலே ஆகும். அதனால்தான் உலகுக்குத் தெரியாமல் மறைவாகத் துய்க்கப்படும் காம இன்பத்தினைக் ‘களவு மணம்’ என்றும், குடும்பம் என்ற கட்டமைப்புக்கு உட்பட்ட வகையில் நாடறிய உலகறிய மணம் புணர்தல் ‘கற்பு மணம்’ என்றும் இலக்கியங்களிலும் இலக்கண மரபிலும் குறிப்பிடப்பட்டன. களவு மணக் காலத்தில் தலைவியின் உடலிலும் நடவடிக்கைகளிலும் நேர்கின்ற மாற்றங்களைக் கண்டு தலைவியின் தாய் தந்தையர் முருகன் (அல்லது பேய்) பிடித்திருப்பதாக ஐயுற்று, வேலன் வெறியாடல் என்ற சடங்கினை நிகழ்த்துவதுண்டு.5 அப்போது தலைவியே, இவ்வாறு வெறியாடுதல் தேவையற்றது என்று வேலனை விலக்குவதும் உண்டு.6 இது ‘வெறி விலக்குதல்’ என்ற துறையாக இலக்கியத்தில் வழங்கப்படும் அதே வேளையில் கற்பு மணம் புரிந்த தலைவி, கணவனைத் தவிர வேறு ஒரு தெய்வத்தைத் தொழுவது, தனது கற்புக்கு ஒவ்வாது என்று கூறுவது கலித்தொகைப் பாடல் ஒன்றில்7 இடம் பெற்றுள்ளது. இவள் வான்தரு கற்பினள்; அதாவது உலகம் வறட்சியுற்ற காலத்தில் மழைபொழிய வைக்கக்கூடிய கற்பை உடைய தலைவி.8 இவ்வாறு சமூக ஒழுங்கினையும் தமக்குரிய சமூகக் கடமைகளையும் கற்றறிந்து அவற்றின்படி நடக்கும் தன்மையாகிய ‘கற்பு’ அரசகுலப் பெண்டிர் போன்ற உயர்குடிப் பெண்டிர்க்கு அவசியம் எனக் கருதப்பட்டது. கி.பி. 6-7ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பெருங்கதையில் “உடன்முடி கவித்த கடனறி கற்பின் இயற்பெருந்தேவி”9 எனக் குறிப்பிடப்படுவது இதற்குச் சான்றாகும்.10

 

குடி, குடும்பம் ஆகிய சொற்கள் நிலவுடைமையுடன் தொடர்புடையவை. குடியானவர், குடும்பர் முதலிய சொற்கள் வேளாண்மை தொடர்பான பொருளிலேயே வழங்கிவருவது இதற்குச் சான்றாகும். குடும்பம் என்ற அடிப்படை அலகிலிருந்தே தனியுடைமை தோன்றுகிறது என்ற கருத்தும் மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகிய சிந்தனையாளர்களால் வலியுறுத்தப்படுகின்றன. பெண் ஓர் உற்பத்தி சக்தி என்ற நிலையிலிருந்து மாற்றமுற்று ஆடவனின் உடைமைப்பொருள் என்ற நிலையை அடைவதும் குடும்பம் என்பது ஆடவனின் தலைமையிலமைந்த நிறுவனம் என்ற தன்மையைப் பெறுவதும், நிலவுடைமையானது பாரம்பரியச் சொத்துரிமை என்ற நிலையை அடைந்துவிட்டதற்கான அடையாளங்கள் ஆகும். இத்தகைய தெளிவான அடையாளங்களை உடைய உயர்குடிப் பாரம்பரியத்திற்குப் பங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அச்சத்தின் காரணமாகவே பெண்டிரைப் பொருத்த அளவில் கற்பு பற்றிய விதிகள் கடுமையடைந்தன. ஆனால், இக்கோட்பாடுகளை உயர்குடிச் சமூகத்தைச் சார்ந்த குடும்பத் தலைவனுக்கும் கற்பிக்கவேண்டுமென்று அச்சமூகமும் கற்றுக்கொள்வது அவசியமென்று குடும்பத்தலைவனும் கருதவே இல்லையெனத் தெரிகிறது. இல்லாவிடில் பரத்தையர் என்ற வர்க்கம் இற்பரத்தை, சேரிப்பரத்தை போன்ற பிரிவுகளுடன் செழித்து வளர வழியில்லாமல் போயிருக்கும். மனைவி என்ற ஸ்தானத்துக்குரிய ஆதர்சமான கடப்பாடுகளாக வலியுறுத்தப்பட்டுவந்த - அல்லது ஆணாதிக்க சமூகத்தால் உயர்குடிப் பெண்டிரிடம் எதிர்பார்க்கப்பட்ட - ஒழுக்கக் கோட்பாடுகள், அன்றைய நிலையில் பெண்டிரிடம் மானசீக விலங்காகவே இறுகிப் போய்விட்ட நிலையைக் குறுந்தொகைப் பாடலொன்றில் காணலாம். பரத்தையிடம் சென்றுவந்த கணவனிடம் கோபித்துக்கொண்டு சுடுசொல் பேசுவதுகூட, மனைவியென்ற ஸ்தானத்துக்கு இழுக்கு ஏற்படுத்தக்கூடியது என்பதால் கோபத்தை அடக்கிக்கொள்கிறாள் இப்பாடல் தலைவி.11

 

இவ்வாறு, கணவனிடம் சுடுசொல் பேசாதிருத்தல் என்பது, மனைவிக்குரிய முன்னுதாரணமான நடத்தையாகக் கருதப்பட்டது போன்றே, பொது வாழ்க்கையில் ஈடுபடுகின்ற ‘ஊராண் மகளிர்’ (ஊராட்சித் தலைவியர்) ‘அவையல் கிளவி’ எனப்படும், சபையில் பேசத்தகாத சொற்களைப் பேசிவிட்டால் அது மிகுந்த ஒழுக்கக் குறைவான நடத்தையாகக் கருதப்பட்டது. ஊராண் மகளிர் மது அருந்திவிட்டு மந்திராலோசனை நடைபெறும் மன்றத்திற்கு வருதல் ஒழுக்கக் குறைவாகவோ, கற்புக்குக் களங்கமாகவோ கருதப்படவில்லை; போதையில்கூடத் தடுமாறாமல் இருப்பதுதான் ஒழுக்கம் எனக் கருதப்பட்டது. போதை வேகத்தில் விலங்குகள் - பறவைகள் ஆகியவற்றின் ஆண்பாற் பெயர்களை (சேவல், களிறு போன்ற பெயர்களை) வாய்தவறிக் கூறிவிட்டால் அது ஒழுக்கக்குறைவானது என அவ்வூராண் மகளிர் நாணுவார்கள் எனப் பெருங்கதை குறிப்பிடுகிறது.12 இத்தகைய ‘ஒழுக்கமான’ நடத்தையைக் கற்று - பயின்று - தேறியவர்களே உயர்குடிப் பெண்டிர் என்ற அந்தஸ்துக்குரியவர்களாகக் கருதப்பட்டனர்.

 

இவ்வாறு கற்பு என்ற கோட்பாடு உயர்குடிப் பெண்டிர்க்குரிய ஒழுக்கமான, நாகரிகமான நடத்தை என்ற கருத்தோட்டம் வேரூன்றிவிட்ட பின்னரும்கூட, ‘கற்பிக்கப்பட்டது’ அல்லது ‘சொல்லிக்கொடுக்கப்பட்டது’ என்ற இச்சொல்லின் மூலப்பொருள் முற்றிலும் மறைந்துவிடவில்லை. சங்ககாலத் தமிழகத்தில் முறையான கல்வியறிவினை மக்களிடையே பரப்புவதில் முன்னணியில் நின்றவர்கள் சமண பெளத்தரே ஆவர். பள்ளிக்கூடம் என்ற வழக்கு, சமண - பெளத்தப் பள்ளிகளே தொடக்ககாலக் கல்வி நிறுவனங்களாகச் செயல்பட்டமைக்குச் சான்றாகத் திகழ்கிறதென அறிஞர்கள் கருதுகின்றனர். சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை நாகரிகம் என்ற கருத்தோட்டத்துக்கு அடிப்படையாக அமைந்த நகர்ப்புற வாழ்க்கை முறையைப் பிரதிநிதித்துவப்படுத்திய நகரத்தார் (வணிகர்) சமண-பெளத்த சமயங்களையே முதன்மையாகப் பின்பற்றினர் என்பதற்குச் சான்றாகத் திகழ்கின்றன. எனவே, கல்விக்கும் கற்பு என்ற கோட்பாட்டின் வளர்ச்சிக்கும் சமண பெளத்தர்களின் பங்களிப்பினை நாம் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. மதுரையை எரித்த கற்பின் கனலி கண்ணகி, சமண சமயத்தின் சிராவக நோன்பினைப் பின்பற்றிய பெண்மணி என்பதை இங்கு நாம் எண்ணிப் பார்க்கலாம்.

 

திருஞானசம்பந்தர் சமண சமயத்தைக் கடுமையாக வெறுத்தார் என்பதில் ஐயமில்லை. சைவ சமயம் என்ற இயக்கத்தின் மூர்க்கமான பிரசாரகர் என்ற வகையில் எதிரியின் கருத்துகளிலுள்ள நியாயங்களைக்கூட உணர ஆயத்தமாக இல்லாமல், கடுந்தாக்குதலில் ஈடுபடுகிறார் என்பதிலும் ஐயமில்லை. ஆனால், “அமண் தெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளம் வைத்தல் வேண்டும்” என்று அவர் இறைவனை வேண்டுவது, வாதம் தொடர்பான சொல்லாட்சியே தவிரச் சமணப் பெண்டிரை அல்லது பெளத்தப் பெண்டிரைக் குறித்ததன்று. சமண-பெளத்தர்கள் கற்றுக்கொண்டதெல்லாம் வெறும் ஏட்டுக்கல்வியே; சொல்லிக்கொடுக்கப்பட்டதே. ஆனால், சைவர்களுக்குக் கிட்டக்கூடியது, பக்தியால் கிடைக்கின்ற ஞானம் - என்ற முரண்பட்ட ஒரு சித்திரத்தினை உருவாக்கச் சம்பந்தர் முனைந்துள்ளார். அந்த முனைப்பின் ஒரு வெளிப்பாடாகவே சமண-பெளத்தர்களிடம் தலைதூக்கியிருப்பதாகத் தாம் கருதிய வறட்டுத்தனமான நூற்படிப்பையும் அதன் விளைவாகத் தோன்றுகிற அகந்தையையும் அழிக்க நினைக்கிறார்.

 

சம்பந்தர்க்கு ஆயிரம் ஆண்டுகள் பின்னர் வாழ்ந்த தாயுமானவர், அறிவுச் செருக்கையும், யாரிடமும் எப்படியும் வாதம் செய்து வெற்றிபெற்றுவிட முடியும் என்ற அகந்தையையுமே தாம் கற்ற கல்வி தம்மிடம் ஏற்படுத்திற்று என்ற விரக்தியில் “கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்” என்று பாடுகிறார்.13 சரியாகவோ தவறாகவோ சமண-பெளத்தர்களைச் சம்பந்தர் இத்தகைய கண்ணோட்டத்தில்தான் நோக்கியுள்ளார். “வெல்லாமல் எவரையும் மருட்டிவிட வகை வந்த வித்தை”யினை அழிக்க முனைந்துள்ளார். ‘தெண்ணர்’ என்று சம்பந்தர் சமணர்களைக் குறிப்பிடுவது ‘சாமர்த்தியசாலிகள்’ என்ற பொருளிலாகும். பெண்ணகத்து எழிற்சாக்கியப்பேய் என்ற தொடர் மோகினிப் பேயாக அல்லது விஷ்ணு மாயையாக உருவெடுத்து முப்புர அசுரர்களைக் கலகம் செய்யத்தூண்டியவர் கெளதம புத்தரே என்ற புராணக் கதைக் குறிப்போடு தொடர்புடையதாகும்.14“பேயர் பேய் முலையுண்டுயிர் போக்கிய மாயன் மாயத்துப் பட்ட மனத்தரே” என்று அப்பர்15 குறிப்பிடுவதை இத்தொடர்பில் எண்ணிப் பார்க்கலாம். எனவே, சமண-பெளத்தர்களின் கல்விச் செருக்கினை அழிப்பதற்குச் சம்பந்தர் சிவபெருமானது அருளை வேண்டுகிறார் எனக் கொள்வதே சரியான புரிதலாகுமே தவிர, சமண-பெளத்தப் பெண்டிரைக் கற்பழிப்பதற்குச் சிவனடியார்களைத் தூண்டுகிறார் எனப் பொருள்கொள்வது சரியாகாது.

 

அடிக்குறிப்புகள்:

 

1. குறுந்தொகை பா. 156, வரி 5

2. பதிற்றுப்பத்து 43:31; 80:17

3. மதுரைக்காஞ்சி வரி. 420

4. பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், பக்கம் 384, உ.வே.சா. பதிப்பு, 1974.

5. இக்கருத்து ‘கழகக் கந்தன் என்கிற பரிஷத் முருகன்’ என்ற தலைப்பிலான கட்டுரையில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

6. வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தன் என்ற புலவரின் குறுந்தொகைப் பாடல் ஒன்றில் இத்தகைய வெறிவிலக்குதல் இடம்பெற்றுள்ளது:

முருகயர்ந்து வந்த முதுவாய் வேல 
சினவல் ஓம்புமதி வினவுவது உடையேன்
பல்வேறுருவிற் சில்லவிழ் மடையடு
சிறுமறி கொன்றிவள் நறுநுதல் நீவி
வணங்கினை கொடுத்தியாயின் அணங்கிய
விண்தோய் மாமலைச் சிலம்பன்
ஒண்தார் அகலமும் உண்ணுமோ பலியே (பா. 362)

7. கலித்தொகை பா. 16

8. “தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழு தெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை” - என்ற குறள் இப்பாடலுடன் நேரடியாகத் தொடர்புடையது போலத் தெரிகிறது.

9. பெருங்கதை 2:4:23-24.

10. காமம் எனும் யானை, கல்வி என்ற பாகனுக்கும் அடங்காமல் (மதம் பிடித்து) அலையக்கூடியது என்ற கருத்து சிலப்பதிகாரம் மங்கல வாழ்த்துப் பாடலில் குறிப்பிடப்படுகிறது.

11. “இது மற்றெவனோ தோழி துனியிடை
இன்னரென்னும் இன்னாக்கிளவி
திருமனைப் பலகடம் பூண்ட
பெருமுது பெண்டிரேமாகிய எமக்கே” - குறுந்தொகை 181.

12. மனமுணக் கிளந்த மந்திரக் கோட்டியுள்
புள்ளும் மாவும் உள்ளுறுத்தியன்ற
ஆண் பெயர்க் கிளவி நாள் மகிழ் கடவ
வழுக்கிக் கூறினும் வடுவென நாணி
ஒழுக்கம் நுனித்த ஊராண் மகளிர் - பெருங்கதை 1:36:277-81.

‘நாள்மகிழ்’ என்பது புறநானூறு 123, 400 ஆகியவற்றில் குறிப்பிடப்படுகிறது. “நாட்காலையே மதுவுண்டு நாளோலக்கத்து மகிழ்தல்” எனப் பழைய உரை கூறுகிறது. (பக்கம் 238, புறநானூறு மூலமும் பழைய உரையும் - உ.வே.சா. பதிப்பு, 1971.)

13. தாயுமானவர் பாடல்கள், சித்தர்கணப் பதிகம்.

14. ஆட்சியதிகாரத்தினால் அடையும் செல்வவளம் விஷ்ணு மாயா எனக் கூர்மபுராணத்தில் (2:33) குறிப்பிடப்படுகிறது. புத்தரை விஷ்ணு மாயையாகக் குறிப்பிடுவது திருப்புனவாயில் தலபுராணம் முதலிய பல புராணங்களில் காணப்படுகிறது.

15. தேவாரம் - திருமுறை 5:100:3



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard