மனிதஇனத்தை படைப்பதற்கு முன்பே ஒளியினால் வானவர்கள் எனப் பொருள்படும் மலக்குகளையும், நெருப்பின் ஜுவாலையிலிருந்து ஜின்கள் என்ற படைத்து விட்டதாக குர்ஆன் கூறுகிறது.
மலக்குகள் அல்லாஹ்வின் உதவியாளர்கள். இந்த மலக்குகளுக்கு சுயமாக சிந்தித்து செயல்படும் திறன் கிடையாது. மனிதர்களைப் போன்று அவர்களுக்கு பசி, சுவை, அன்பு, கோபம், எரிச்சல், பொறாமை, தன்முனைப்பு, கவலை, வேதனை, சோர்வு, குறிப்பாக பாலியல் உணர்வு என்று எந்த உணர்வும் கிடையாது. அதனால் அவர்கள் பல்கிப்பெருகவில்லை அல்லாஹ் உற்பத்தி செய்த எண்ணிக்கையிலேயே இன்னும் நீடிக்கிறார்கள். அல்லாஹ்வின் ஆணைகளை மட்டும் செயல்படுத்தும் ஒருவகை இயந்திரங்களே எனலாம்! ஆனால் ஜின்கள் அவ்வாறல்ல. அவர்கள் மனிதர்களைப் போன்று அனைத்து தன்மைகளும் கொண்ட படைப்பு.
இந்த மலக்குகள் என்ற வானவர்கள், அளவு, தகுதி, திறமை, பொறுப்புகளுக்கேற்ப வரிசைப்படுத்தப்படுகிறார்கள். அழகான இந்த வானவர்களுக்கு இறக்கைகளும் உண்டு. ஜிப்ரீல், மீக்காயீல், இஸ்ராஃபீல், மாலிக் என்று சிலரது பெயர்களைக் குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் வழியாக அறியமுடிகிறது. அல்லாஹ்வை வழிபடுமாறு மட்டுமே கட்டளையிடப்பட்ட மலக்குகள் இன்றுவரை தொடர்ந்து வழிபாட்டிலேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதில் அவர்கள் சோர்வடைவதுமில்லை சலிப்படைவதுமில்லை. (இயந்திரங்கள் எங்கேயாவது சலிப்படையுமா?)
வானவர்களின் உருவ அமைப்பை சில ஹதீஸ்கள் விளக்குகின்றன.
Sunaan Abu Dawud, Vol iii, Book 40, Hadith number 4709:
Jabir b. ‘Abd Allah reported the Prophet (may peace be upon him) as saying: I have been permitted to tell about one of Allah’s angels who bears the throne that the distance between the lobe of his ear and his shoulder is a journey of seven hundred years.
(அல்லாஹ்வின் அர்ஷ் எனப்படும் அரியாசனத்தை சுமந்து கொண்டிருக்கும் வானவர்களின் காது மடல்களுக்கும் அவர்களது தோள்களுக்கும் இடைப்பட்ட அளவு 700 ஆண்டுகளின் பயணதூரமாக இருக்கும்.)
முஹம்மதின் காலத்தில் ஒட்டகம், குதிரை போன்றவைகளைத்தவிர வேறு வாகனங்கள் கிடையாது. அன்று அவர்கள் ஒரு நாளில் உத்தேசமாக 100 கிமீ பயணம் செய்ததாகக் கொண்டால், உடலின் குறிபிட்ட அந்த பகுதி மட்டும் 2,55,50,000 கிமீ தொலைவு இருக்கலாம். ஒளியின் வேகம் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது என்பதை ஏற்பதாக இருந்தால், அவ்வானவர்களின் இதர உடல் அளவுகளை உங்களது கற்பனைக்கே விடுகிறேன். அல்லாஹ்வின் உதவியாளர்களான இந்த வானவர்களுக்கு இறக்கைகளும் உண்டு.
1400 ஆண்டுகளுக்கு முன்பு வரை பூமிக்கு அதிக முறை வருகை புரிந்த வானவர் ஜிப்ரீல்/கேப்ரியேல் ஆவார். இவர்தான் வானவர் கூட்டத்திற்கு தற்பொழுதும் தலைவராக அறியப்படுகிறார்.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு அறுநூறு இறக்கைகள் இருக்க,அவரது (நிஜ) உருவத்தில் அவரைப் பார்த்தார்கள்.
(முஸ்லீம்)
மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
...இந்தச் சமுதாயத்தாரில் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்கேள்வி கேட்ட முதல் ஆள் நான்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது, (வானவர்) ஜிப்ரீலை (நான் பார்த்ததை)யே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை, அவர்படைக்கப்பெற்றுள்ள (நிஜத்) தோற்றத்தில் இந்த இரு தடவைகள் தவிரவேறெப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து (பூமிக்கு) இறங்கிக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம்வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக்கொண்டிருந்தது'' என்றுகூறினார்கள்.
(முஸ்லீம்)
முஹம்மதைச் சந்திக்க ஜிப்ரீல் பறந்து வருகிறார்
விண்வெளிப் பயணத்திற்காக மலக்குகளால் முஹம்மது தயார் செய்யப்படுகிறார்
ஜின்கள் என்றொரு படைப்பும் மனிதனுக்கு முன்பே படைக்கப்பட்டிருந்தது. ஜின் என்றால் மறைத்தல், மறைவானது என்றும் பொருள்கூறுகின்றனர்.இவர்கள் பறக்கும் தன்மையுடையவர்கள், நாய், பூனை, பாம்பு போன்ற வடிவங்களுக்கு உருமாறக்கூடியவர்கள் என்பதும் இஸ்லாமியர்களின் நம்பிக்கை.
கடுமையான வெப்பமுடைய நெருப்பால் இதற்கு முன் ஜின்னைப் படைத்தோம்.
(குர் ஆன் 15:27)
1400 ஆண்டுகளுக்கு முன்பு வரை பூமியில் அலைந்து திரிந்து கொண்டிருந்தன. முஹம்மது அவைகளை சந்தித்து தனது தூதுப் பணியையையும் செய்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் ஜின்களுக்கென்று சிறப்பான உணவுப் பதார்த்தங்களையும் ஏற்பாடு செய்தார்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
... அவர்கள் (இயற்கைக் கடனை) முடித்ததும் அவர்களுடன் நடந்து சென்றேன். அப்போது,எலும்பும் கெட்டிச் சாணமும் வேண்டாம் என்று ஏன் சொன்னீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அவ்விரண்டும் ஜின்களின் உணவாகும். என்னிடம் நஸீபீன் என்னு மிடத்தைச் சேர்ந்த ஜின்களின் குழு ஒன்று வந்தது. அவை நல்ல ஜின்களாயிருந்தன. அவை என்னிடம் உணவு தரும்படி கேட்டன. நான், அவை எந்த எலும்பையும் எந்த கெட்டிச் சாணத்தையும் கடந்து சென்றாலும் அதில் உணவைப் பெற்றுக் கொள்ள வேண்டும்என்று அல்லாஹ்விடம் அவற்றுக்காகப் பிரார்த்தித்தேன்என்று பதிலளித்தார்கள்.
(புகாரி)
ஆனால் இந்த மலக்குகளையோ ஜின்களையோ பார்த்த்தாகக் கூறிக்கொண்டவர்கள் முஹம்மதைப் போன்ற அல்லாஹ்வின் தூதர்களைத்(?) தவிர வேறு ஒருவருமில்லை. ஏனெனில் அவை வெகுமக்களின்கண்களுக்கோ, கருவிகளுக்கோ தென்படவாய்ப்பில்லையாம். ஆனால்,
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள் பின்வருமாறு) கூறினார்கள், நேற்றிரவு முரட்டு ஜின் ஒன்று எனது தொழுகையைக் கெடுக்க சதி செய்தது. அல்லாஹ் அதன் மீது எனக்குச் சக்தியை வழங்கினான். அதன் குரல்வளையை நான் பிடித்துவிட்டேன். காலையில் "எல்லாரும்' அல்லது "நீங்கள் அனைவரும்'வந்து அதைக் காணும்வரை இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அதைக் கட்டிவைக்க நான் நினைத்தேன். பிறகு என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள், "இறைவா! என்னை மன்னித்துவிடுவாயாக! மேலும்,எனக்குப் பின் வேறெவருக்கும் கிடைக்காத ஓர் ஆளுமையை எனக்கு நீ வழங்குவாயாக'' (38:35) என்று வேண்டியது என் நினைவுக்கு வந்தது. ஆகவே, (அந்த எண்ணத்தைக் கைவிட்டேன். பின்னர்) அல்லாஹ் அந்த ஜின்னை இழிந்த நிலையில் விரட்டியடித்துவிட்டான்.
(முஸ்லீம்)
மதவாதிகள் விளக்கமளிப்பதைப் போல ஜின்கள் என்ற உயிரினம்(?) மனிதக்கண்களுக்கு மறைவானவைகள் என்பது உண்மையானால் ”காலையில் "எல்லாரும்' அல்லது "நீங்கள் அனைவரும்'வந்து அதைக் காணும்வரை இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அதைக் கட்டிவைக்க நான் நினைத்தேன்.” என்ற முஹம்மதின் கூற்றில் ஏதாவது பொருளிருக்கிறதா?
சில நேரங்களில் சோதிடர்கள் கூறுவது உண்மையாகி விடுகிறதே என்று முஹம்மதிடம் அவரது தோழர்கள் கேட்டனர்.
(வானவர்கள் எனும்) உயர்ந்த கூட்டத்தினரிடமிருந்து (ஓரிரு சொற்களை)ஒட்டுக் கேட்பவனைத் தவிர அவர்கள் செவியுற முடியாது. விரட்டப்படுவதற்காகஒவ்வொரு பகுதியிலிருந்தும் அவர்கள் மீது எறியப்படும். அவர்களைப் பிரகாசமானதீப்பந்தம் விரட்டும்.அவர்களுக்கு நிலையான வேதனையுமுன்டு
(குர் ஆன் 37:8-10)
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வானவர்கள் மேகத்தில் இறங்கி விண்ணில் தீர்மானிக்கப்பட்ட விஷயத்தைப் (பற்றிப்) பேசிக் கொள்கிறார்கள். ஷைத்தான்கள் அதைத்திருட்டுத் தனமாக (ஒளிந்திருந்து) ஒட்டுக் கேட்டு, சோதிடர்களுக்கு அதை (உள்ளுதிப்பாக) அறிவித்து விடுகின்றன. சோதிடர்கள் அதனுடன் (அந்த உண்மையுடன்) நூறு பொய்களைத் தம் தரப்பிலிருந்து புனைந்து (சேர்த்துக்) கூறுவார்கள்.
(புகாரி 3210)
இந்த உள்ளுதிப்பு ஏற்படுத்துவதற்கு அல்லாஹ்வால் மட்டுமே முடியுமென்று நினைத்திருந்தேன். ஆனால்ஜின்களாலும்தாங்கள் விரும்புவதை மனிதர்களின் உள்ளங்களின் பதிய வைக்க முடியுமென்பதையே இந்த ஹதீஸ் நமக்கு விளக்குகிறது.
இந்த ஜின்களுக்கு பெருமை(!) சேர்க்கும் விதமாக குர் ஆனில்அத்தியாயம்-72 இருக்கிறது.முஹம்மதின் போதனைகளைக் கேட்டு முஸ்லீம்களாக மாறிய ஜின்களைக் குறித்து பேசுகிறது. காஃபிர்களாக இருக்கும் ஜின்களும் உண்டாம். அவைகள்தாம் ஒட்டுகேட்கும் வேலையை செய்கின்றன. இனி, வானில் எரிநட்சத்திரங்களைக் காணும் பொழுது, ஜின்கள் தாக்குதலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
முஹம்மதைப் போலவேகிருஸ்துவ மத நிறுவுனர் பவுல் தன் கண்ட மாயக்காட்சிகளைப் பற்றி சாட்சியம் கூறுகிறார்,
12. ஒரு முறை தலைமை ஆசாரியர் தமஸ்கு நகரத்திற்கு போகும் அதிகாரத்தையும் அனுமதியையும் கொடுத்தார்கள்.
13. நான் தமஸ்குவுக்குப் போய்க்கொண்டிருந்தேன். அது நண்பகல் பொழுது, நான் வானத்திலிருந்து ஓர் ஒளியைப் பார்த்தேன், சூரியனைக் காட்டிலும் அதிகமாக அவ்வொளி பிரகாசித்தது, அந்த ஒளி என்னையும் என்னோடு பயணம் செய்த மனிதர்களைச் சுற்றியும் பிரகாசித்தது.
14. நாங்கள் எல்லோரும் நிலத்தில் வீழ்ந்தோம். அப்போது யூத மொழியில் ஒரு குரல் என்னோடு பேசுவதைக் கேட்டேன். அக்குரல் “சவுலே, சவுலே, ஏன் இக்கொடுமைகளை எனக்கு எதிராகச் செய்கிறாய்? நீ என்னை எதிர்ப்பதன் மூலம் உன்னை நீயே துன்புறுத்திக்கொள்கிறாய்’ என்றது.
15. நான், “ஆண்டவரே நீங்கள் யார்” என்றேன். ஆண்டவர், நான் இயேசு, நீ துன்பப்டுத்துகிறவர் நானே.
16. எழுந்திரு, நான் உன்னை எனது ஊழியனாகத் தேர்தெடுத்திருக்கிறேன். நீ எனக்கு சாட்சியாக இருப்பாய், இன்று பார்த்த என்னைப் பற்றிய செய்திகளையும், உனக்கு நான் காட்டப்போகிற விஷயங்களையும் நீ மக்களுக்கு கூறுவாய்.
அவரது இந்தஅனுபவத்துக்குப் பிறகு பவுல் கிறிஸ்துவத்தின் தீவிரமான பின்பற்றுபவராகவும்,கிறிஸ்துவத்தின் மிஷனரியாகவும் ஆகிறார். தீவிர மத ஆர்வத்தையும், மதமாற்றவேகத்தையும் பெறுகிறார்.
முஹம்மதுவும் ஜிப்ரீலை அவரது இயற்கைத் தோற்றத்தில் கண்டதாகவும் விண்வெளிக்குச் சென்றதாகவும் கூறிக்கொண்டார். இவ்விண்வெளிப்பயணக் கதையைப் பலவாறு கூறுகின்றனர் அந்தப் பயணத்தின் பொழுது, ஏழாம் வானத்தில் 70,000 தலைகள் கொண்ட உலகைவிட பெரிய உருவம் கொண்டதொரு வானவரைக் கண்டதாகவும், அந்த மலக்கின் 70,000 தலைகளிலுள்ள ஒவ்வொரு தலையிலும் 70,000 வாய்கள் இருந்ததாகவும், ஒவ்வொரு வாயிலும் 70,000 நாக்குகள் இருநத்தாகவும், ஒவ்வொரு நாக்கும் வெவ்வேறு விதமான 70,000 மொழிகளில் அல்லாஹ்வைப் புகழ்ந்து துதிசெய்து கொண்டிருந்ததாகவும் கூறியதாக கற்பனக்கெட்டாத கதைகளைக் கூறுகின்றனர். இதைவிட விட பலமடங்கு பெரிய கதையை யோவான் வெளிப்படுத்தின விசேஷம் கூறுகிறது.
இது போன்ற விநோதமான காட்சிகளை நேரடியாகவும், வெளிப்பாடுகளாகவும் கண்டதாக, கடவுள் தங்களிடம் பேசியதாகவும் கூறிக்கொண்டவர்கள், பாப் என்ற சையத் மிர்ஸா அலி முஹம்மது, பஹாவுல்லா என்ற மிர்ஸா ஹூஸைன் அலி நூரி, செயிண்ட் பிர்கிட்டா, ஜோன்ஆஃப் ஆர்க், மிர்ஸா குலாம் காதியானி, ஜோஸப் ஸ்மித் என்று பிரபலமானவர்களின் பட்டியல் நீளுகிறது இவர்களைப் போன்றவர்களை நாம் இன்றும் காணமுடியும். முஹம்மதிற்கும் மற்றவர்களின் வாக்குமூலத்திற்கும் என்ன வேறுபாடு? இதற்காக சிந்தித்து மண்டையைப் பிய்த்துக் கொள்ள வேண்டியதில்லை, மிக எளிமையான பதில், மற்றவர்கள் கூறினால் பொய் என்று கூறி எள்ளிநகையாட வேண்டும், முஹம்மது கூறினால் அறிவியல் பூர்வமான உண்மையென்று வாதிடவேண்டும், மறுப்பவர்களை காஃபிர்கள் என்று ஃபத்வா வழங்கி தீர்த்துக்கட்ட வேண்டும். இவ்வாறு செயல்படுவதுதான் அல்லாஹ்விற்கு மிகவும் பிடிக்கும், அதுதான் ஈமாந்தாரிகளின் இலக்கணமும் கூட. (இத்தகைய ஈமான்ந்தாரிகளுக்கு கூடுதலாக ஹூருலீன்கள் வழங்கப்படலாம்!)
யஃஜூஜ், மஃஜூஜ் என்றொரு கூட்டமும் நம்முடன் வாழ்ந்து வருகிறது. இதைபற்றி குர் ஆன் கூறுவதை பாருங்கள். (இதைப் பற்றி நண்பர்கள் பலரும் எழுதியுள்ளனர், என் பங்கிற்கு நானும் எழுதிவிடுகிறேன்)
"துல்கர்னைனே! யஃஜூஜ், மஃஜூஜ் என்போர் பூமியில் குழப்பம்விளைவிக்கின்றனர். எங்களுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்பை நீர்ஏற்படுத்திட உமக்கு நாங்கள் வரி தரட்டுமா?'' என்று அவர்கள் கேட்டனர்.
"என் இறைவன் எனக்கு அளித்திருப்பதே சிறந்தது. வலிமையால் எனக்கு உதவுங்கள்!உங்களுக்கும், அவர்களுக்கு மிடையே தடுப்பை அமைக்கிறேன்'' என்றார்.
"என்னிடம் இரும்புப் பாளங்களைக் கொண்டுவாருங்கள்!'' என்றார். இரு மலைகளின் இடைவெளி மட்டமான போது "ஊதுங்கள்!'' என்று கூறி அதைத் தீயாக ஆக்கினார். "என்னிடம் செம்பைக்கொண்டு வாருங்கள்! அதன் மீது ஊற்றுவேன்'' என்றார்.
அதில் மேலேறுவதற்கும், அதில் துவாரம் போடவும் அவர்களுக்கு இயலாது.
இது எனது இறைவனின் அருள். என் இறைவனின் வாக்கு நிறைவேறும் போது இதை அவன்தூளாக்கி விடுவான். என் இறைவனின் வாக்குறுதி உண்மையானது என்றார்.
(குர் ஆன் 18:94-98).
துல்கர்னைனால் கட்டப்பட்ட இந்த சுவர் முஹம்மதின் காலத்திலும் இருந்திருக்கிறது. அதில் துளை ஏற்பட்டிருப்பதை அவர் உறுதி செய்கிறார்.
ஸைனப் பின்த்து ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் நடுக்கத்துடன் வந்து, வணக்கத்திற் குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரு மில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபுகளுக்குக் கேடு நேர விருக்கின்றது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவர் இதைப் போல் திறக்கப்பட்டு விட்டதுஎன்று தம் கட்டை விரலையும் அதற்கடுத்துள்ள விரலையும் இணைத்து வளையமிட்டுக் காட்டியபடி கூறினார்கள். உடனே, நான் அல்லாஹ்வின் தூதரே! நம்மிடையே நல்லவர்கள் இருக்க, நாம் அழிந்து விடுவோமாஎன்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம்; தீமை பெருகிவிட்டால்...என்று பதிலளித்தார்கள்.
முஹம்மது மட்டுமல்ல வேறொருவரும் அந்த தடுப்புச் சுவரை பார்த்த்தாக சாட்சியமளிக்கிறார்.
... நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர், நான் அந்தத் தடுப்புச் சுவரை, பல வண்ணக் கோடுகள் போட்ட ஒரு துணியைப் போல் பார்த்தேன்என்று சொன்னார். அதற்கு நபி யவர்கள், உண்மை தான்; நீங்கள் பார்த்ததுஎன்று தெரிவித்தார்கள்.
(புகாரி, பாடம் : 7, யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்)
இன்றுவரை துல்கர்னைன் கட்டிய தடுப்புச்சுவர் பாதுகாப்பாகத்தான் இருக்கவேண்டும். அநேகமாக முஹம்மது விரலைமடக்கிக் காட்டிய அளவிலேயே அத்துளை நீடிக்கிறது என்று உறுதியாக நம்பலாம். ஒருவேளை அத்துளை பெரிதாகி, சுவர் உடைக்கப்பட்டிருப்பின், யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் பூமியில், முஹம்மது பயந்து நடுங்கியதைப் போன்று பெரும் குழப்பங்களை விளைவித்திருப்பார்கள். இன்றுவரை அவ்வாறு எதுவும் நிகழவில்லை.
இரண்டு மலைகளின் இடையே உள்ள இடைவெளியை மறைக்குமளவிற்கு கட்டப்பட்ட இரும்புச் சுவர் இப்பொழுது எங்கே இருக்கிறது? தனிமவரிசை அட்டவனையில்முறையே 26, 29–ம் இடங்களிலுள்ள இரும்பும், செம்பும் மனிதகண்களுக்குத் தென்படவாய்ப்பில்லாத் உலோகங்களா? இவை எப்பொழுது மலக்குகள், ஜின்களைப் போன்ற மாயத்தன்மையைப்(!) பெற்றன?
இணையதளத்தில் ”பறக்கும் ஸ்பாகெட்டி அதிசய உயிரி” (The Flying Spaghetti Monster) என்றொரு கடவுள்உலாவருகிறது. அதனுடன் இணைந்துள்ள நூடுல்ஸ் போன்ற கால்களால் அந்த Spaghetti Monsterதங்களைத் தொட்டதாக பலர் வாக்குமூலமும் அளிக்கின்றனர். அதனிடமிருந்து வேதவெளிப்பாடுகளும் வருகின்றன. அதைப் பின்பற்றுபவர்களிடையே சீர்திருத்தம் காரணமாக பிரிவுகளும் உண்டாகியுள்ளது. இப்படியொரு கடவுள் இல்லையென்று மெய்ப்பிப்பது எப்படி?
இதைப் போன்ற அடிப்படையற்ற நம்பிக்கைகளைக் கொண்டே மதங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன தடையங்களின் மீது அல்ல. இவர்கள் “நம்பிக்கையில் நம்பிக்கைகொண்டவர்கள்” எந்த ஒரு தடயத்தையும் அறியமுடியாத செய்திகளை மிகத்துள்ளியமாகக் கூறுகின்றனர். நாம் இது போன்ற கட்டுக்கதைகளை ஏற்க முடியாது என்று கூறினால், நம்பிக்கைகளை தவறு என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அதைப்பற்றி மறுப்பவர்களுக்குதான் உள்ளது என்று மதவாதிகள் உளறுகின்றனர். இவர்கள் பைத்தியங்கள் அல்ல; இவர்களது நம்பிக்கைகளின் மையம் முழுவதுமே பைத்தியக்காரத் தனமானவை.
பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் இவர்களுக்கு தனது “வானத்து தேநீர் கோப்பை” எனும் குட்டிக்கதை மூலம் சுவைபட பதிலளித்துள்ளார். பூமிக்கும் செவ்வாய்க் கோளுக்கும் இடையில், நீள்வட்ட வடிவில், சூரியனைச் சுற்றி, பீங்கானில் செய்த தேநீர் கோப்பை ஒன்று, சுழன்று வருவதாகவும், மிகவும் சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளும் கூட அதைக் காண்பிக்க முடியாது என்றும் பழங்கால நூல் ஒன்றில் எழுதி, இந்த செய்தி புனிதமென்றும், கடவுளின் வார்த்தை என்று கூறி அப்பாவிகளின் மனதில் ஏற்றியிருக்க, அதை எவரேனும் நம்பத்தயங்கினால் அது கிறுக்குத்தனமாகிவிடும். சகிக்கமுடியாத மதநிந்தனைக் குற்றமாகவும் கருதப்படும். வானத்து தேநீர்கோப்பையையும், பறக்கும் ஸ்பாகெட்டியையும் இல்லையென்று நிரூபிக்க முடியாது. எனவே அதையும் ஏற்பதுதானே முறை?
ஒவ்வொரு மதத்தவரும் தங்கள் மதம் கூறும் கடவுளும், அவரது வழிகாட்டுதலே ஒளி நிறைந்தது, உண்மை நிறந்தது அது மட்டுமே சிறந்தது என நம்புகிறார்கள். நாம் அவர்கள் நம்பிக்கைகளை மதிக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறார்கள். ஆனால் எந்த அளவிற்கு?
நன்றி இப்னு லஹப். ஜின்கள் மற்றும் யஃஜூஜ் மஃஜூஜ் கதையிலுள்ள முரண்பாடுகள் மிக எளிமையானது வெளிப்படையாகவே தெரியக்கூடியது. இதை உணர்ந்துகொள்ள பெரிய ஆராய்ச்சிகள் ஒன்றும் தேவையில்லை. குர்ஆன் மனிதனின் கைச்சரக்கு என்பதற்கு எளிமையான ஆதரங்கள் இவை. முஸ்லீம்கள் சிந்திக்க வேண்டும்.
அருமையாக சொன்னிங்க தஜ்ஜால்..பயம் என்ற கருவியை வைத்து இசுலாத்தில் பயன செய்யவைத்து கொண்டு இருக்கின்றார்கள்.அதில் இருந்து வெளியவருவது என்பது சுலபமான காரியமல்ல. நானும் அப்படிதான் பயனித்து கொண்டு இருந்தேன்...
@ சிவப்புக் குதிரை // நானும் அப்படிதான் பயனித்து கொண்டு இருந்தேன்...// உண்மைதான். நானும் அப்படித்தான் இருந்தேன். மதம் என்ற மாயவலையை தேடல் என்ற ஆயுதத்தால் தகர்த்தெறிய எனக்கு நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டது.