மஹாபாரதத்தில் சஞ்சயன் விவரித்த பாரதவர்ஷத்தின் தென் பகுதி நாடுகளில், திராவிடம், கேரளம், சோள தேசம் என்னும் பெயர்களைக் காண்கிறோம்.
இவற்றுள் கேரளமும், சோள தேசமும் தொடர்ந்து அதே பெயரால் வழங்கப்பட்டு வந்துள்ளது.
ஆனால் திராவிட தேசம் என்னும் பெயரில் ஒரு நிலப்பகுதி சங்க நூல்களிலும், பிற்காலத் தமிழ் மன்னர்கள் குறித்த விவரங்களிலும் காணப்படவில்லை.
அதே போல பாண்டிய தேசம் என்னும் பெயரும் சஞ்சயன் கொடுத்துள்ள வர்ணனையில் இல்லை.
அதனால் பாண்டிய தேசம் என்பதை அந்த நாளில் திராவிட தேசம் அழைத்திருக்கலாமே என்ற கேள்வி எழலாம். அதையும் ஆராய்வோம்.
பாண்டிய தேசம் என்ற பெயரில் ஒரு நிலப்பரப்பை மஹாபாரதம் சொல்லவில்லையே தவிர, பாண்டிய மன்னனைப் பற்றியும், பாண்டியனது படைகளைப் பற்றியும் விவரங்கள் உள்ளன.
மஹாபாரதத்தில், மொத்தம் 13 இடங்களில் திராவிடர் என்ற சொல்லும், 6 இடங்களில் பாண்டியர் என்ற சொல்லும் வருகிறது.
இவர்கள் இருவரும் ஒருவரே என்று சொல்ல முடியாதபடி குருஷேத்திரப் போர் வர்ணனை வருகிறது.
அதாவது மஹாபாரதப் போரில் சோழர், சேரர், பாண்டியர், திராவிடர் என்று தனித்தனியாகச் சொல்லப்பட்ட மக்கள் அனைவருமே கலந்து கொண்டார்கள் (மஹாபாரதம் 8- 12).
இவர்கள் திரௌபதியின் சகோதரனான திருஷ்டத்யும்னன் சார்பில் அவனுக்குப் படை பலம் கொடுத்துப் போரிட்டனர். திருஷட்த்யும்னனுக்கு உதவியாகப் போர் புரிந்த மற்றொரு தென்னாட்டு மக்கள் சிங்களவர்கள்ஆவார்!
இவரகள் அனைவருமே த்ரோணாசாரியரை எதிர்த்துப் போர் புரிந்தனர்.
இவர்கள் அனைவருமே, அதாவது பாண்டியர், சோழர், திராவிடர் இவர்களுடன் சிங்களர், ஆந்திரகர்கள் என்று அனைவருமே யுதிஷ்டிரர் செய்த ராஜ சூய யாகத்துக்கு வந்தனர் என்றும், அதற்குத் தங்கள் காணிக்கைகளைக் கொடுத்தனர் என்றும் மஹாபாரதம் விவரிக்கிறது. எனவே திராவிடர்கள் வேறு, தமிழ் மன்னர்களான சேர, சோழ, பாண்டியர்கள் வேறு என்று தெரிகிறது.
இவர்களுள் பாண்டிய மன்னன் ஒருவனைப் பற்றி விவரங்கள் உள்ளன.
அவன் பெயர் சாரங்கத்துவஜன். (மஹாபாரதம் 7-23).
அவனுக்கு கிருஷ்ணனுடன் முன்பகை இருந்தது.
ஒருமுறை கிருஷ்ணன் அவனது நாட்டின் மீது படையெடுத்து அவன் தந்தையைப் போரில் கொன்று வென்றான்.
அதனால் சாரங்கத்துவஜனுக்கு கிருஷ்ணனைப் பழி வாங்க வேண்டும் என்ற உந்துதல் இருந்தது.
அதன் காரணமாக கிருஷ்ணன் ஆண்ட துவாரகை மீது படையெடுக்க விரும்பினான்.
ஆனால் மதியூகிகளான அவனது நண்பர்கள் அவனைத் தடுத்தனர்.
அவர்கள் ஆலோசனையின்படி, இந்தப் பாண்டிய மன்னன் கிருஷ்ணனுடன் நட்புறவு கொண்ட பாண்டவர்களுடன் சேர்ந்து போரிட்டான் என்று மஹாபாரதம் தெரிவிக்கிறது.
இதன் மூலம், கிருஷ்ணன் பாண்டி நாட்டுக்கு வந்திருக்கிறான் என்பது தெரிகிறது.
இறையனார் அகப்பொருள் உரையிலும், கடல்கொண்டுவிட்ட கபாடபுரத்தில் நடந்த இரண்டாம் சங்கத்துக்குத் ’துவரைக் கோமான்’வந்திருந்தான் என்று குறிக்கப்பட்டுள்ளது.
துவரை என்பது துவாரகையாகும்,
அதை நிர்மாணித்து ஆட்சி செய்தவன் கிருஷ்ணன்.
எனவே இரண்டாம் தமிழ்ச் சங்கத்துக்கு வந்த துவரைக் கோமான் என்பவன் கிருஷ்ணன் என்று தெரிகிறது.
நட்பின் காரணமாக அவ்வாறு வந்திருக்க முடியும்.
ஆனால் மஹாபாரதப் போரில் கலந்து கொண்ட பாண்டிய மன்னன் சாரங்கத்துவஜனுக்கு கிருஷ்ணனுடன் நட்பில்லை.
அவன் நாட்டின் மீது கிருஷ்ணன் படையெடுத்துள்ளான் என்றால், அது முரண்பாடாக இருக்கிறதே என்று தோன்றும்.
இங்குதான் ஒரு முக்கிய விவரத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அந்த நாளில் பாண்டிய தேசம், சோழ தேசம் என்று சொன்ன போது, அவை முழுதுக்கும், ஒரே அரசனே சொல்லப்படவில்லை. உதாரணமாக,சிலப்பதிகாரம் நடந்த கி-பி- 2- ஆம் நூற்றாண்டில் கண்ணகி நீதி கேட்ட மதுரையில் இருந்த மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியன்.
அவன் மறைவுக்குப் பிறகு பட்டம் ஏறினவன் வெற்றி வேல் செழியன்என்கிறது சிலப்பதிகாரம்.
இவன் கொற்கையை ஆண்ட மன்னன் என்று அந்நூல் கூறுகிறது.
அதாவது பாண்டியர்கள் ஆளுகைக்குள் ஆங்காங்கே இருந்த பகுதிகளை அவர்கள் உறவு வட்டத்தில் இருந்தவர்கள் ஆண்டிருகிறார்கள். அவர்களும் பாண்டியன் என்னும் பட்டப் பெயரைக் கொண்டிருக்கிறார்கள்.
கொற்கையை ஆண்டு வந்தவன் நெடுஞ்செழியனது தம்பியாக இருக்கலாம் என்ற கருத்து இருக்கிறது.
அது போலவே, சிலப்பதிகாரக் காலக் கட்டத்தில் சோழ நாட்டை ஆண்டவன் வளவன் கிள்ளி என்பவன்.
அவன் சேரன் செங்குட்டுவனது மைத்துனன் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
அவனுக்கும் ஒன்பது சோழ மன்னர்களுக்கும் சண்டை நடந்தது.
அதாவது ஒரே பரம்பரையில் வந்த உறவினர்களுக்குள்ளேயே ஆட்சிக்குப் போட்டி வந்து அதனால் சண்டை இட்டிருக்கிறார்கள்.
அந்த ஒன்பது மன்னர்களையும் வளவன் கிள்ளி ஒரு பகல் பொழுதிலேயே கொன்று தன் ஆட்சியை நிலை நாட்டியிருக்கிறான்.
இவ்வாறு ஒரே நாட்டில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்கள் உறவுக்குள்ளேயே சண்டையிட்டும், சுமுகமாகவும் இருந்திருக்கிறார்கள்.
சுமுகமாக இருந்த காலத்தில், கண்ணகி கதையில் வருவது போல, ஒருவர் மதுரையிலும், ஒருவர் கொற்கையிலும் தங்கள் ஆட்சியை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு முந்தின பகுதிகளில் இக்ஷ்வாகு மன்னர்கள் பல பரம்பரைகளாகப் பரந்து விரிந்து, ஆங்காங்கே ஆட்சி செய்தனர் என்று பார்த்தோம்.
ஆனால் அவர்கள் அனைவருமே தங்களை இக்ஷ்வாகுப் பரம்பரையினர் என்று ஒரே பரம்பரையைச் சொல்லிக் கொண்டனர்.
நமக்கு இக்ஷ்வாகு பரம்பரை என்றால் ராமன் நினைவுதான் வரும்.
அயோத்தியைத் தலை நகரமாகக் கொண்டு ஆண்ட இக்ஷ்வாகு பரம்பரையில் ராமன் வருகிறான்.
பிற இடங்களில் இக்ஷ்வாகுப் பார்ம்பரையில் வந்த மற்றவர்கள் ஆண்டிருக்கின்றனர்.
அது போலவே பாண்டிய நாடு என்னும் பொழுது, அதன் பல நகரங்களில், வேறு வேறு பாண்டிய மன்னர்கள் ஆண்டு வந்திருக்க வேண்டும்.
கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டியர், ராமனைப் போல மூத்தவன் பரம்பரையில் வந்தவர்களாக இருக்க வேண்டும்.
அந்தப் பரம்பரை வம்சாவளியினர் சங்கததை நடத்தியிருக்கிறார்கள்.
கபாடபுரததை ஆண்ட பாண்டிய மன்னன் கூட்டிய 2-ஆம் சங்கத்துக்கு கிருஷ்ணன் வந்திருக்கிறான்.
பாரதப் போரில் ஈடுபட்ட சாரங்கத்துவஜ பாண்டியன் மற்றொரு பாண்டியப் பகுதியை ஆண்டவனாக இருக்க வேண்டும்.
இவன் பாண்டவர் பக்கம் போரிட்டிருக்கிறான்.
ஆனால் வேறொரு இடத்தில், கௌரவர்களுக்காகப ஒரு பாண்டிய மன்னன் போரிட்டான் என்று நாம் எண்ணும் வண்ணம், பாண்டிய மன்னனைப் பாண்டவர்கள் கொன்றனர் என்ற செய்தி வருகிறது.(மஹாபாரதம் 9-2).
தங்கள் பக்கம் இருக்கும் பாண்டியனை பாண்டவர்கள் ஏன் கொல்ல வேண்டும்?
எனவே வேறோரு பாண்டிய மன்னனும் மஹாபாரதப்போரில் கலந்து கொண்டிருக்க வேண்டும் என்று இதன் மூலம் தெரிகிறது.
ஆக, மஹாபாரதம் மூலம், மூன்று பாண்டிய மன்னர்கள் ஒரே காலக்கட்டத்தில் இருந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது.
அவர்களுள் இருவர் பாரதப் போரில் எதிரெதிர் அணியில் சண்டையிட்டிருக்க வேண்டும் என்றும் தெரிகிறது.
சங்கம் கூட்டிய கபாடபுரம் இருந்த பாண்டிய நாடு, சாரங்கத்துவஜன் ஆண்ட நாடு, கௌரவர் பக்கம் போரிட்ட பாண்டிய மன்னனது நாடு என மூன்று பாண்டிய நிலங்கள் இருந்திருக்க வேண்டும்.
இவை தவிர வேறு எந்த நிலங்கள் இருந்தனவோ என்று நினைக்கும்போது, போன பதிவில் குறிப்பிட்ட நாடுகளில் சில பாண்டியன் ஆண்ட நாடுகளாக இருக்கலாம் என்ற சாத்தியம் இருக்கிறது.
அவற்றின் அன்றைய பெயர்கள் நமக்குத் தெரியாததால் நாம் குழப்பிக் கொள்கிறோம்.
இந்த நோக்கில் அடியார்க்கு நல்லார் அவர்கள் சிலப்பதிகார உரையில்,கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் இருந்ததாகச் சொன்ன நிலப்பெயர்கள் நமக்கு மேலும் தெளிவைத் தருகின்றன.
சிலப்பதிகாரம் வேனில் காதையின் முதல் வரியில் வரும் ‘தொடியோள் பௌவம்’என்னும் சொல்லை விளக்குகையில் உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் கடல் கொண்ட குமரிக் கண்டத்தின் பகுதிகளை விவரிக்கிறார்.
அவர் விவரித்தது, முதல் கடல் கோள் வருமுன்னர் இருந்த நிலப்பகுதியாகும்.
மஹாபாரதப் போர் நடந்த காலக்கட்டத்தில் அவற்றுள் பலவும் கடல் கொண்டு விட்டிருக்க வேண்டும்.
கபாடபுரததிற்கு கிருஷ்ணன் சென்றதாக சொல்லப்படவே, மஹாபாரதக் காலக்கட்டத்தில்,
அதாவது இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்,
இன்றைய தமிழ் நாடு இன்னும் இந்தியப் பெருங்கடலுக்குள் நீண்டிருந்தது என்பது புலனாகிறது.
மேலும், சஞ்சயன், தாமிரபரணி ஆறு முதல் மலய பர்வதத்துடன் முயல் போன்ற அமைப்பில் நிலப்பகுதி தெற்கில் இருந்தது என்று சொன்னான் என்பதை முந்தின பகுதியில் கண்டோம்.
எனவே அடியார்க்கு நல்லார் சொல்லியுள்ள நில்ப்பகுதிகளில் சில அந்தப் பகுதிகளில் இருந்திருக்க வேண்டும்.
தென்பாலி முகத்துக்கு வடவெல்லையாக இருந்த பஹ்ருளி ஆற்றுக்கும், குமரி ஆற்றுக்கும் இடையே ஏழேழு என்ற எண்ணிக்கையில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்தன என்கிறார்.
அவை ஏழு பெயர்களால் வழங்கி வந்தன. ஒவ்வொரு ஏழும், தனக்குள் ஏழு பிரிவாக இருந்திருக்கிறது.
அவை,
தெங்க நாடு ஏழு,
மதுரை நாடு ஏழு,
முன் பாலை நாடு ஏழு,
பின் பாலை நாடு ஏழு,
குன்ற நாடு ஏழு,
குணகரை நாடு ஏழு,
குறும்பனை நாடு ஏழு
இந்தப் பெயர்களை, சஞ்சயன் கூறியுள்ள பெயர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்.
தென்பாலி முகம் தொடங்கி தெற்கில் இந்த நாடுகள் செல்கின்றன.
’தனபாலம்’ என்ற பெயரை சஞ்சயன் குறிப்பிட்டுள்ளான்.
தென்பாலி என்பதன், மருவாக இது இருக்கலாம். தென்பாலிமுகம் என்று கூறவே, இது துறைமுகப் பட்டணமாகும்.
தெங்க நாடு என்னும் சொல்லுடன் இயைந்து ‘தங்கணம்’, ’பரதங்கணம்’ என்னும் பெயர்களும் வந்துள்ளன.
ஆனால் கபாடபுரம் மதுரை நாட்டின் தலைநகரமாக இருந்தது.
மருத நிலங்களே மதுரை என்று மருவி இருக்க வேண்டும். இந்த ஏழு பெயர்களுமே நில அமைப்பைப் பொறுத்து இருக்கவே மதுரை என்பது மருதம் என்பதன் திரிபு என்று சொலல் முடிகிறது.
அந்த மதுரை நிலப்பகுதியில் கபாடபுரம் இருந்தது. கிருஷ்ணன் சென்ற நகரமாகக் கபாடபுரம் இருக்கவே அதைப் பற்றிய குறிப்பு சஞ்சயன் வர்ணனையில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
‘காலதம்’என்னும் பெயரை சஞ்சயன் சொல்கிறான்.
இது கவாடம் அல்லது கபாடபுரத்தின் திரிபாக இருக்கலாம்.
மேலும் பல பெயர்களும் சம்ஸ்க்ருதப் பெயர்களாக இருப்பதைக் கவனிக்கவும்.
தமிழ், சம்ஸ்க்ருதம் இரண்டிலுமே இந்தப் பெயர்கள் இருந்திருக்க வேண்டும்.
பாலை, குன்றம், பனை நாடுகள் பற்றி சொல்ல முடியவில்லை.
ஆனால் குணகரை நாடு என்பது கீழ் நாடுகளாக இருக்கலாம்.
சஞ்சயன் ‘ப்ராச்சய நாடுகள்’என்று சொல்கிறான்.
அதற்குக் கிழக்கு நாடுகள் என்பது பொருள்.
குணகரை எனபதில் உள்ள குண என்பதும் கிழக்கு என்ற பொருள் கொண்டது.
கிழக்குக் கரை நாடுகளுக்குக் குணகரை நாடுகள் என்ற பெயர்.
எனவே குமரிக் கண்டத்தில் இருந்த நாடுகளில், மதுரை (கபாடபுரம் / காடம்), தெங்கம், குணகரை நாடுகளை சஞ்சயன் குறிப்பிட்டுள்ளான் என்று தெரிகிறது.
இந்த நாடுகள் ஒவ்வொன்றும் ஏழு ஏழாக இருந்தன. அவற்றுள் எத்தனை மீந்தது என்று தெரியாது.
ஆனால் கீழை நாடுகள் என்று வருவதால், குணகரை நாடுகள் ஒன்றுக்கு மேல் இருந்திருக்க வேண்டும்.
இவை தவிர சஞ்சயன் கூறும் நாடுகளில், குகுரம், என்பது குக்குட்டம்என்ற சம்ஸ்க்ருதச் சொல்லாக இருக்கலாம்.
மஹிஷம் என்பது, மஹிஷாசுரனை வென்ற காரணத்தில் ஏற்பட்டமைசூராகும்.
கர்ணாடகம் கர்னாடகப் பகுதியாகும்.
மாலவம் என்ற இடம் மாலத்தீவாக இருக்கலாம்.
இந்தப் படத்தில் வட்டத்தில் இருப்பது மாலத்தீவுகள்.
சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோவில் எழுப்பிய போது அந்தக் கும்பாபிஷேகத்தில், மாளுவ மன்னன் கலந்து கொண்டான்.
இதை மாள்வா நாட்டுடன் சில ஆராய்ச்சியாளர்கள் இணைக்கின்றனர்.
மாள்வா என்பது மத்தியப் பிரதேசத்தில் இருக்கிறது.
ஆனால் மாளுவம் என்பது மாலத்தீவாகவும் இருக்கலாம்.
அங்கு சேர மன்னர்கள் தொடர்பும், மலையாளம் கலந்த மொழி சாயலும் இன்றும் இருக்கிறது.
மேலும் மாலவம் என்பது தென் பகுதியில் இருப்பதாக சஞ்சயன் சொல்லவே, மத்தியப் பிரதேச மாள்வாவாக அது இருக்க முடியாது.
பாண்டியனுக்கும் திராவிடத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்று தேடும் போது, மேலும் ஒரு விவரம் கிடைக்கிறது.
யுதிஷ்டிரன் ராஜசூய யாகம் செய்த போது, தென் திசை நோக்கி பாண்டவர்களுள் ஒருவனான சஹாதேவன் படையெடுத்து வந்தான். அவன் வென்ற நாடுகள் என்று பௌண்டரியம் (பண்டரிபுரமாக இருக்கலாம்), திராவிடம், உத்ரகேரளம் (உத்ர கேரளம் என்பது சேரநாட்டுக்கு வடக்கில் இருந்த பகுதியாக இருக்கலாம்)ஆந்திரம், தலவனம்என்று சொல்லப்பட்டுள்ளது.
இவர்களைப் படை பலத்தால் வென்றிருக்கிறான்.
இங்கு தமிழ் மன்னர்களான சேர சோழ பாண்டியர்களின் மீது படை எடுத்ததாகவோ, அவர்கள் நாட்டுக்குச் சென்றதாகவோ எந்தக் குறிப்பும் இல்லை.
ஆனால் ராஜசூய யாகத்தில் சோழ, பாண்டியர்கள் கலந்து கொண்டு, தங்கம் நிரம்பிய பல பானைகளையும், மலய பர்வதத்தில் கிடைக்கும் சந்தனத்தையும் அளித்தார்கள் என்று வருகிறது.
அதாவது அவர்கள் பாண்டவர்களுடன் நட்புறவு கொண்டிருக்கவே அவர்கள் நாட்டின் மீது சஹாதேவன் படையெடுக்கவில்லை என்று புலனாகிறது.
திராவிட நாட்டின் மீது படையெடுத்துத் தங்கள் மேன்மையை ஒப்புக் கொள்ளச் செய்தான் சஹாதேவன்.
ஆனால் சோழ, பாண்டியர்கள் நட்புறவுடன் யாகத்தில் கலந்து கொண்டார்கள் என்பதால், திராவிடர்களுக்கும், திராவிடம் என்ற நாட்டவர்களுக்கும், தமிழின் மூவேந்தர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிகிறது.
சோழ பாண்டியர்களைப் போல நட்புறவுடன் ராஜசூய யாகத்தில் பங்கு கொண்டவன் சிங்கள மன்னன்!
சஹாதேவன் தென்புறம் வந்து திராவிடர் போன்றோரை வென்றவுடன், கடலோரப்பகுதிகளுக்கு வந்து, தன் தூதுவர்களை புலஸ்தியர் பேரனான விபீஷணனைச் சந்திக்க அனுப்பினான் (சபாபர்வம் -30).
விபீஷணனும் மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்று, தன் காணிக்கைகளாகப் பல அபூர்வ ரத்தினங்களைக் கொடுத்தான்.
தான் இவ்வாறு அடிபணிய வேண்டியிருப்பது காலத்தின் கோலம் அன்று அவன் எடுத்துக் கொண்டான்.
இங்கு விபீஷணன் என்றது, ராமாயாண காலம் தொட்டு இலங்கையை ஆண்ட விபீஷணர் பரம்பரையாக இருக்க வேண்டும்.
ஒரு காலத்தில் ராமனுக்குத் தோழனாக, வீர தீரத்துடன் இருந்த அந்தப் பரம்பரையினர், பாண்டவர்கள் காலத்தில், பலம் குன்றியவர்களாக அவர்களுக்கு அடி பணிய வேண்டியிருப்பதை இது தெரிவிக்கிறது.
சஞ்சயன் சொன்ன நாட்டு வர்ணனையில் இலங்கை என்ற குறிப்பு இல்லை.
ஆனால் திரிகர்த்தம் என்ற பெயர் வருகிறது.
இன்றைக்கு இருக்கும் ஸ்ரீலங்கா முழுவதையும், ராமாயண காலத்தில் இலங்கை என்று சொல்லவில்லை.
திரிகூட மலையின் உச்சியில் இலங்கை இருந்தது என்றே ராமாயணம் கூறுகிறது.
பின்னாளில் திரிகூடம் என்பதை திரிகர்த்தம் என்று அழைத்திருக்கலாம்.
தன்னைத் தேடி வந்த சஹாதேவனது தூதர்களுக்கு விபீஷணன் தக்க சன்மானம் கொடுத்துவிடுகிறான்.
அவன் ராஜசூய யாகத்துக்கு வந்ததாகச் சொல்லப்படவில்லை.
ஆனால் ராஜசூய யாகத்தில் சிங்களவர்கள் கலந்து கொண்டு பரிசுப் பொருட்களைக் கொடுத்துள்ளனர்.
இதன் மூலம் சிங்களம் வேறு விபீஷணன் ஆண்ட பகுதி வேறு என்று தெரிகிறது.
சிங்களவர்கள் பாண்டவர்களுடன் நட்புறவாடி, போரில் அவர்களுக்காகக் கலந்து கொண்டுள்ளனர்.
ஆனால் விபீஷணனது நாட்டவர் போரில் கலந்து கொள்ளவில்லை.
மஹாபாரத காலக்கட்டத்தில் இலங்கைத்தீவில் இந்த மக்களும் (விபீஷணன் ஆண்ட மகக்ளும், சிங்களவர்களும்) பெயர் பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டும்.
நமக்குத் தேவையான திராவிடம் பற்றிய செய்திகளை அலசியதில், திராவிடம் என்னும் ஒரு பகுதி இருந்தது என்றும், அங்கிருந்தவர்கள் திராவிடர்கள் எனப்பட்டர்கள் என்பதும் மஹாபாரதம் மூலம் தெரிகிறது.
ஆனால் இந்தப் பகுதியும் சேர, சோழ, பாண்டியப் பகுதியும் வேறு வேறு என்றும் தெரிகிறது.
மேலும் அந்தக் காலக்கட்டத்தில் பேசும் மொழியால் ஒரு நாட்டையோ அல்லது மக்களையோ அடையாளம் காட்டவில்லை. நாட்டுக்கென்று ஒரு சிறப்புப் பெயரோ அல்லது நாட்டை ஆள்பவனது பெயர் அல்லது வம்சத்தினாலோ பெயர்கள் இருந்திருக்கின்றன. ஒட்டு மொத்தமாக மொழியின் பெயரால் மக்களை அடையாளம் காட்டவில்லை.
தொல்காப்பியர் தமிழ் கூறும் நல்லுலகம் என்று சொன்னதில் திராவிடம் என்ற நாட்டை எங்கும் குறிப்பிடவில்லை.
அதுபோல சிங்களை நாட்டையும் தமிழ் பேசும் நல்லுலகத்துடன் சேர்க்கவில்லை.
ஆனால் வேறொரு இடத்தில் சிங்களமும், திராவிடமும் வருகிறது.
அவற்றை அறியும் முன், முயல் போன்ற வடிவிலான சாகத்தீவையும், குமரிக் கண்டத்தையும் நாம் அறிந்து கொள்வோம்.
அவற்றைத் தெரிந்து கொண்டால்தான் திராவிடதேசத்திலிருந்து மனுவும் மற்ற மக்களும் வந்தார்கள் என்று ஸ்ரீமத் பாகவதம் சொன்னது எப்படி என்று புரிந்து கொள்ள முடியும்.
எனவே அடுத்தாக சாகத்தீவை ஆராய்ந்து,
அதன் தொடர்ச்சியாக
முந்தைய தமிழர் வாழ்ந்தது குமரிக் கண்டத்தில்தான், சிந்து சமவெளியில் இல்லை
கௌரவர்கள் பக்கம் போரிட்டான் ஒரு பாண்டியன் என்றும் மஹாபாரதம் சொல்கிறது.
பாண்டவர்கள் பக்கம் போரிட்டவன் சாரங்கத்துவஜ பாண்டியன். ம-பா- 8-20-46 இல் மலயத்துவஜ பாண்டியனை அச்வத்தாமன் எதிர்த்துப் போரிட்டான் என்று வருகிறது. அஸ்வத்தாமன் அவன் தலையை சீவிக் கொன்ற விவரங்கள் அதில் வருகின்றன. அஸ்வத்தாமன் கொன்றது சாரங்கத்துவஜனா அல்லது மலயத்துவஜனா என்றும் ஒரு கேள்வி எழுகிறது. இது குறித்து எழும் கருத்துக்களைக் கொண்டுதான் நாம் சாகத்தீவில் நிழைய முடியும். அவை அடுத்த பதிவில் வருகின்றன.
ம-பா- 9-2 இல் வலிமை வாய்ந்த பாண்டியனே பாண்டவர்களால் கொல்லப்பட்டால் அதற்குக் கரணம் விதியல்லாமல் வேறு என்ன என்று வருகிறது.
”When the mighty Pandya, that foremost of all wielders of weapons, has been slain in battle by the Pandavas, what can it be but destiny?”
இப்படி ஒரு வரியும் ம-பா-வில் வருவதால் இதையும் சேர்த்துக் கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது. பாண்டியர்கள் இரு பக்கங்களிலும் போரிட்டிருப்பது சாத்தியமே. உதியன் சேரலாதன் இரண்டு பக்கத்துப் படைகளுக்கும் பெருஞ்சோறு படைத்தான் என்று வருவதால், இரண்டு பக்கத்தவர்களுக்கும் தன் படையை சேரனும் அனுப்பி இருக்கலாம். ஒரே நாட்டவர் / வம்சத்தினர் இரண்டு பக்கங்களிலும் போரிட்டிருக்கின்றனர். கிருஷ்ணனும் அவனது படைகளும் அப்படிப் போரிட்டவர்களே. அது போல திராவிடர்களும் கௌரவர் பக்கம் போரிட்டார்கள் என்றும் வருகிறது. (5- 161 மற்றும் 8-5). இது எப்படி?
திராவிடர் விஷயத்தில் வேறொரு விவரமும் இருக்கிறது. அவற்றைத் தக்க தருணத்தில் பார்ப்போம். ஒரே நாட்டவர் ஏன் இப்படி இரண்டு பக்கத்திலிருந்தும் போரிட வேண்டும் என்று ஆராய்ந்தால் கிடைக்கும் முக்கியக் காரணம், சிந்து சமவெளி நாகரிகத்தின் வளர்ச்சிக்கு அடிகோலியது. இந்தத் தொடரில் அவையெல்லாம் அலசப்படும்.