ஆரிய-தஸ்யூக்களின் முன்னோனார்கள் வாழ்ந்த இடம் இளாவ்ருதம்.
பாரதத்தையும், அதற்கும் அப்பால் சைபீரியா போன்ற வட பகுதிகளையும், திராவிடத்தையும், தமிழையும் இணைக்கும் ஒரு முக்கிய இடம் இளாவ்ருதம் எனப்படும் இளாவ்ருத வர்ஷம்.
இந்த இளாவ்ருதம் எதிர்பாராத இடத்தில் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டுள்ளது.
எந்த சிந்து சமவெளி நாகரிகம் தமிழனின் மூலம் என்று திராவிடவாதிகள் நினைக்கிறார்களோ, அங்கு கிடைத்த பானை ஓட்டில் காணப்படும் எழுத்துக்களை, ஆரியப் படையெடுப்பு ஒரு கட்டுக்கதை என்று நிரூபித்துள்ள என்.எஸ். ராஜாராம், மற்றும் நட்வர் ஜா என்னும் பெங்காலிய ஆராய்ச்சியாளர் ஆராய்ந்தபோது அவற்றுள் ஒரு சொல் “இளாவ்ருத வர” என்று இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
’இளாவ்ருதத்தின் வரம்’ என்பது இதன் பொருள்.
‘The deciphered Indian Script” என்னும் அவர்களது நூலில் குறிக்கப்பட்டுள்ள இந்த விவரத்தைப் பற்றி 1999 ஆம் வருடத்திய மே 13-ஆம் தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் செய்தியும் வந்தது.
இந்த இளாவ்ருதம் பாரதத்தின் வடபாகத்தில், இமயமலைக்கும் வடக்கே இருந்த ஒரு பகுதி.
இதுவே ஆரிய, தஸ்யூக்கள் என்று சொல்லப்பட்ட பஞ்ச மானவர்கள் எனப்பட்ட, யது முதாலானவர்களது முன்னோர்கள் வசித்த இடம்!
அந்த முன்னோனின் பெயர் புரூரவஸ்.
இது மஹாபாரத, புராணங்களில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது.
இந்தப் புரூரவஸின் வம்சாவளியில் வந்தவர்கள் நஹுஷன், அவன் மகன், யயாதி, அவன் மகன்களான ஆரிய – தஸ்யூக்கள் (பகுதி 30) அவர்களது வம்சாவளியில் வந்தவன் துஷ்யந்தன். (துஷ்யந்தன் - சகுந்தலை கதை பலருக்கும் தெரிந்திருக்கும்.) அவர்களுக்குப் பிறந்தவன் பரதன், அந்த வம்சாவளியில் மேற்கொண்டு வந்தவர்கள் பாண்டவர்கள் என்று தொடர்பு செல்கிறது.
பரதன் வரை அதே வம்சாவளியைத் தங்கள் செப்பேடுகளில் சோழர்கள் (பகுதி 11) பொறித்து வைத்தார்கள்.
புரூரவசின் வழித் தோன்றலான யயாதியின் மகள் வழிப் பேரன் சிபி.
அந்த சிபியின் வம்சத்தில் சோழர்கள் வரவே இப்படி தொடர்பு செல்கிறது என்று பார்த்தோம். (பகுதி 32)
இவ்வாறாக, இளாவ்ருததை ஆண்ட புரூரவசுவிடமும் சோழர்களது ரத்த உறவு செல்கிறது.
இந்தப் புரூரவஸ் யார்?
இவனை ஐலன் என்று பல இடங்களிலும் மஹாபாரதம் கூறுகிறது.
ஐலன் என்ற ஒரு பரம்பரையே இருந்திருக்கிறது.
ஐலன் பரம்பரையிலிருந்து ஒரு நூறு வம்சாவளிகளும், இக்ஷ்வாகுவின் பரம்பரையில் ஒரு நூறு வம்சாவளிகளும் உண்டாகி அவர்கள் ஆங்காங்கே இந்த பாரத வர்ஷத்தை ஆண்டனர் என்று மஹாபாரதத்தில் சபாபர்வத்தில் 14 –ஆவது அத்தியாயத்தில் கிருஷ்ணர் சொல்கிறார்.
பாரதத்தில் எங்கு திரும்பினாலும், எந்த மன்னன் எந்தப் பகுதியை ஆண்டாலும் அவர்களது மூலம் இந்த இரண்டு பரம்பரைகளில் ஏதேனும் ஒன்றில்தான் ஆரம்பித்திருக்கும்.