ரஷ்யா வரை வேத நாகரீகம் பரவியிருந்த சாத்தியக் கூறுகளைப் பார்த்தோம். வட துருவப் பகுதியை ஒட்டியுள்ள வட சைபீரியப் பகுதி தேவருலகம் என்று கருதப்பட்டது என்பதை மஹாபாரத வர்ணனைகள் மூலம் அறிந்தோம். இந்த விவரம் சங்க நூலிலும் உள்ளது. இந்த விவரத்தைத் தரும் புறநானூற்றுப் பாடலான ‘எந்தை வாழி’ என்று தொடங்கும் பாடலில் சரித்திர ஆராய்ச்சிக்குட்பட்ட மற்றொரு விவரமும் வந்துள்ளது. புறநானூறு மட்டுமல்லாமல், மணிமேகலையிலும், தேவருலகம் குறித்த செய்தி வருகிறது. இந்த இரண்டு செய்திகளை இந்தப் பகுதியில் அறிவோம்.
புறநானூறு 175 – இல் வேங்கட மலையின் தலைவனான ஆதனுங்கன்என்பவனைக் கள்ளில் ஆத்திரையனார் என்னும் புலவர் வாழ்த்துகிறார். இரவு, பகல் என்ற வித்தியாசம் இல்லாமல், எந்நேரமும் அந்த அரசன் மக்களைக் காக்கிறான் என்கிறார். இந்த இயல்பை தேவருலக இயல்புடன் ஒப்பிடுகிறார். தேவருலகத்தில் சூரியன் அஸ்தமிக்காமல், ஆறு மாதம் வானத்தில் நிலை பெற்றிருக்கும். அப்பொழுது இரவு, பகல் என்ற வேறுபாடே அங்கு இருக்காது. அது போல ஆதனுங்கன் என்னும் இந்த அரசன், இரவு- பகல் என்ற வேறுபாடு இல்லாமல், எல்லா நேரத்திலும் மக்களைக் காக்கிறான் என்கிறார்.
இதில் என்ன விவரம் இருக்கிறது?
புலவர் தன் கற்பனையில் தேவருலகத்துடன் ஒப்பீடு செய்துள்ளார் என்று நினைக்கலாம்.
இங்குதான் ஒரு அதிசய விவரமும் தருகிறார் புலவர்.
இந்தத் தேவருலகம் செல்லும் வழியையும் கூறுகிறார்.
வானத்தைத் தொடுவது போலத் தெரியும் நீண்ட கொடியை உடைய தேரினைக் கொண்ட ’மோரியர்’ என்னும் அரசர், தங்கள் தேர்ச் சக்கரம் செல்வதற்கு வசதியாக, வெள்ளி மலையைக் குறுக்கே உடைத்துச் சென்றனர். அந்த இடத்துக்கு அப்பால் இருக்கும் உலகத்தின் பகுதி உலகின் இடை கழி ஆகும். (இடைகழி என்றால் வாயில் அல்லது இரண்டு பகுதிகளுக்கு இடையே உள்ள பகுதி) அந்த இடைகழியில், சூரியன், தேவர்களால் நிறுத்தப்பட்டு இரவு, பகல் என்ற வேறுபாடு இல்லாமல், வானில் தெரிவான் என்கிறார்.
வென்வேல்
விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்
திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த
உலக இடைகழி அறைவாய் நிலைஇய
மலர்வாய் மண்டிலத் தன்ன, நாளும்
பலர்புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே.
திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த
உலக இடைகழி அறைவாய் நிலைஇய
மலர்வாய் மண்டிலத் தன்ன, நாளும்
பலர்புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே.
என்கிறார்.