ரஷ்யாவின் சைபீரியாப் பகுதி அதிக மனித நடமாட்டம் இல்லாத பகுதி.
அங்கு குளிரும் பனியும் அதிகம்.
பூமியின் சாய்மானத்தைப் பொறுத்து இந்தப் பகுதிகளில் மக்கள் வாழ்வதற்கு ஏற்றவாறு சீதோஷ்ண நிலை அமைகிறது.
பூமி தன்னுடைய அச்சில் இடை விடாமல் சுழன்று கொண்டிருக்கவே இந்த சாய்மானம், 22 டிகிரி முதல் 25 டிகிரி வரை மாறுபடுகிறது.
சாய்மானத்தில் இந்த வேறுபாடு வருவதற்கு 41,000 ஆண்டுகள் ஆகின்றன என்று கண்டுபிடித்துள்ளார்கள். மிலன்கோவிட்ச் என்பவர் இதைக் கண்டுபிடிக்கவே இதற்கு மிலன்கோவிட்ச் தியரி என்று பெயர்.
இதன்படி பூமியின் தற்போதைய சாய்மானமான 23-1/2 டிகிரி என்பது குறைந்து கொண்டே வருகிறது. அதிக சாய்மானம் இருந்த போது பூமியின் வடபாகம், அதாவது சைபீரியாப் பகுதிகள் பனியில் உறைந்து கிடந்தன. அந்தக் காலக் கட்டத்தைப் பனியுகம் என்கிறார்கள்.
சாய்மான மாறுபாட்டால், அந்தப் பகுதிகளில் வெயில் விழ ஆரம்பிக்கவே பனி யுகம் முடிந்தது.
பனி யுகம் முடிவுக்கு வந்த காலம் இன்றைக்கு 13,000 ஆண்டுகள் முதல் 17,000 ஆண்டுகளுக்குள் இருந்திருக்க வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.
இந்த விவரம் மிக முக்கியமான விவரம். பனியுகம் முடியவே பனி உருகி கடலில் கலந்து, அதனால் கடல் மட்டம் உயர்ந்து, மூன்று முறை கடல் கோல்களால் குமரிக் கண்டம் மூழ்கடிக்கப்பட்டது.
பனியுகம் முடிந்ததால், பாரதத்துக்கும், சைபீரியப் பகுதிகளுக்கும் போக்குவரத்து ஆரம்பித்தது.
இமயமலைக்கு அப்பால், வடக்கில் இருந்த அந்தப் பகுதி பல பெயர்களால் அழைக்கப்பட்டது.
மொத்தப் பகுதிக்கும் ஐராவத வர்ஷம் என்று பெயர்.
ஐராவதம் என்பது இந்திரனது யானையின் பெயர்.
இந்திரனது உலகம் அங்கு இருந்தது.
அதுவும் ஒரு ராஜ்ஜியமாகத்தான் இருந்திருக்கிறது.
இந்திரனுக்குச் சக்கரன் என்று இன்னொரு பெயரும் உண்டு.
அந்தப் பெயரைக் கொண்டு அந்தப் பகுதியை சக்கரவாளச் சக்கரவர்த்திகள் ஆண்டார்கள் என்று தமிழிலும்,
நான் அறிந்த வரையில் இரண்டு இடங்களில் சொல்லப்பட்டுள்ளன.
அவற்றை வரும் பகுதிகளில் காண்போம்.
ஐராவத வர்ஷத்தின் வடக்கில் வட கடல் உள்ளது (ஆர்டிக் கடல்)
அதை ஒட்டிய வட துருவப்பகுதி சோம கிரி என்ப்பட்டது.
ஐராவத வர்ஷத்தின் தென் பகுதி – அதாவது இமய மலையின் வட பகுதி உத்தர-குரு என்றழைக்கப்பட்டது.
(கு – என்பதைக் குயில் என்னும் சொல்லில் உள்ள கு- வைப் போல உச்சரிக்க வேண்டும்)
உத்தரம் என்றால் வடக்கு என்பது பொருள்.
இமய மலைக்கு வடக்கில் உள்ளது உத்தர குரு.
இமய மலைக்குத் தெற்கில் உள்ள நாட்டை தக்ஷிண குரு என்று அழைக்கவில்லை.
அதைப் பாரத வர்ஷம் என்றே அழைத்தனர்.
தெற்கில் குரு வம்சத்தினர் வாழந்தார்கள்.
பாண்டவர்கள் குரு வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்களது மூதாதையர் உத்தர குருவில் வாழ்ந்தனர் என்றே சொல்லியுள்ளனர்.
அதாவது இவர்களில் ஒரு பிரிவினர் உத்தர குரு சென்று குடி அமர்ந்துள்ளனர்.