ரிக் வேதத்தில் மொத்தம் 85 இடங்களில் தஸ்யு என்னும் பதம் வருகிறது. இது ரிக் வேதப்பாடல்களின் மொத்த அளவில் 0.4% மட்டுமே என்று பார்த்தோம். ஆரியன் என்னும் பதம் இதை விடக் குறைவாகவே வருகிறது. மொத்தம் 36 இடங்களில், அதாவது, 0.2% க்கும்குறைவாகவே ஆரியன் என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து ஆரியப் படையெடுப்பு அல்லது ஆரிய ஆக்கிரமிப்பு என்று சொல்லப்படும் கருத்துக்கு ரிக் வேதத்தில் முக்கியத்துவம் இல்லை என்பது தெரிகிறது.
ஆரியன் என்றோ, தஸ்யு என்றோ குறிக்கப்பட்டு வரும் சொற்கள் சில குறிப்பிட்ட பெயர்களைக் குறிப்பதாகவும் வருகிறது. அந்தப் பெயர்களைக் கொண்டவர்கள் யார் என்று அறிந்து கொண்டால், ஆரியன் யார், தஸ்யு யார் என்று நமக்குத் தெரிந்துவிடும் அல்லவா? அந்தப் பெயர்களைப் பார்ப்போம்.
முன்பு நாம் ஆராய்ந்த சுதாஸின் எதிரிகளான தசராஜர்கள் தஸ்யூக்கள்என்று சொல்லப்பட்டனர். தத்துவ ரீதியாக தசராஜன் என்பதன் பொருளைக் கண்டோம். அந்தப் பெயரில் அரசர்கள் இருந்த்தார்கள் என்பதும் புராணங்கள் மூலம் தெரிகிறது.
சுதாஸ் மொத்தம் 30 பேரை வென்றான் என்றும் சொல்லப்படுகிறது. அவர்களுள் 13 முதல் 16 பெயர்கள் புரோஹிதர் பெயர்கள் என்று 14- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சாயனர் என்னும் உரையாசியர் கூறுகிறார்.
அந்த 30 பெயர்களில் 5 பெயர்கள் ரிக் வேதத்தில் பிற இடங்களிலும் வருகின்றன.
அவை பஞ்ச-மானவர்கள் அல்லது ஐந்து வித மக்கள் என்று ரிக் வேதத்தில் சொல்லப்படுகின்றனர்.
அவர்களுக்கிடையே சண்டை நடந்தது.
அவர்களுக்கு ஆரியர்கள் அல்லது தஸ்யுக்கள் என்ற குறியீடு வருகிறது.
அவர்கள் ஊர்-பேர் தெரியாத மக்கள் அல்லர்.
அவர்கள் எங்கிருந்தோ வந்தவர்கள் அல்லர்.
அவர்கள் யயாதி என்னும் மன்னனின் ஐந்து பிள்ளைகளான,
யது, துர்வசு, த்ருஹ்யு, அநு, புரு என்பவர்கள்.
இவர்களுக்குள்ளேயே சண்டை நடந்தது.
இவர்களைப் பற்றிய குறிப்புகள் ரிக் வேதத்தில் காணப்படுகிறது.
ஒரு சமயம் இவர்களில் சிலரை ஆரியன் என்றும், சிலரை தஸ்யு என்றும் ரிக் வேதம் அடைமொழியாக கூறுகிறது.
வேறு இடங்களில் இந்த அடைமொழி மாறிப்போய் விடுகிறது.
அதாவது ஆரியர்கள் என்று அழைக்கப்பட்ட இந்தப் பஞ்சமானவர்களுள் சிலர் தஸ்யூக்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
தஸ்யூக்கள் என்றழைக்கப்பட்ட மானவர்கள் வேறு இடங்களில் ஆரியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
இப்படி மாறி மாறி வருவதால் ஆரியன், தஸ்யு என்பவை இனப் பெயர்கள் அல்ல, ஒருவரைச் சித்தரிக்கப் பயன்படுத்தப்பட்ட சொற்கள் என்று தெரிகிறது.
ஆரிய- தஸ்யு போராட்டம் என்பது ஒளிக்கும், இருளுக்கும் நடந்த போராட்டம் என்று தத்துவார்த்தமாகச் சொல்லலாம்.
இருளை விரட்டும் ‘விடியல்’ (உஷஸ்) பற்றிய பாடல்கள் ரிக் வேதத்தில் உள்ளன.
இதே போன்ற கருத்தை ஆதித்ய ஹ்ருதயம் என்னும் பாடலிலும் காணலாம். அகத்திய முனிவர், ராவணனுடன் போர் ஆரம்பிப்பதற்கு முன் ராமனுக்கு உபதேசிக்கும் மந்திரம் இருளை விரட்டும் ஆதித்ய ஹ்ருதயம் என்னும் பாடல் ஆகும். அதன் முடிவில் நடுநிசியின் தலைவனுக்குத் துன்பம் கொடுப்பவன் ஆதித்யன் என்று சூரியனைப் பற்றிச் சொல்லப்படுகிறது. அந்த உபதேசத்தைப் பெற்று, ஆதித்தன் என்னும் சூரிய பகவானை வேண்டி ராமன், ராவணனை அழித்தான்.
சூரியன், இருளை அழிப்பது போல, ராமன் ராவணனை அழித்தான்.