ரிக் வேதத்தில் அதிகமாகச் சொல்லப்படுவது சுதாஸ் என்னும் அரசன் செய்த போர்கள் ஆகும். இந்த அரசனைப் பற்றி பகுதி – 23 இல் பார்த்தோம். இவனுக்கு இந்திரனது பரிபூரண ஒத்துழைப்பு கிடைத்தது. இந்த அரசனுக்கு அவன் மந்திரியான வசிஷ்டர் கூடவே இருந்து உதவினார்.
வசிஷ்டர் ஒரு முனிவர். ராமனுடைய குலத்துக்கு குருவாகவும் இருந்தவர். அந்த வசிஷ்டரைப் பற்றியும் ரிக் வேதம் துதி செய்கிறது. வசிஷ்டர் கேட்டுக் கொள்ளவே சுதாஸுக்கு இந்திரன் உதவி செய்தான் என்றும் பாடல் வரிகள் ரிக் வேதத்தில் உள்ளன. வசிஷ்டரது உதவியால் சுதாஸ் ’பேதம்’ என்பவனை ஒழித்தான் என்றும் ரிக் வேதம் கூறுகிறது(7-83). பேதம் என்றால் என்ன என்று நமக்குத் தெரியும். பேதம் என்றால் என்றால் வித்தியாசம் என்று பொருள். இதுவரை இந்தத் தொடரில் நாம் அறிந்த இந்திரனைப் பற்றிய கருத்துகளிலிருந்தும், வேதம் தத்துவ ஞானமாக விளங்குகிறது என்னும் ஹிந்து மதக் கோட்பாட்டின்படியும், பேதம் என்றால் நமக்குத் தெரிய்ம் அர்த்தத்தின் படியும், சுதாஸ் பேதத்தை எதிர்த்துச் செய்த ‘யுத்தம்’ எப்படிப்பட்ட யுத்தமாக இருந்திருக்கும் என்று நாம் ஊகிக்கலாம்.
நமது ஊகத்துக்கு உரம் ஊட்டுவது அவன் தச-ராஜர்கள் (தசம் என்றால் பத்து என்று பொருள்) என்னும் பத்து அரசர்களை அழித்தான் என்று வரும் வர்ணனைகள். இந்த அரசர்களை சப்த சிந்துவைத் தாண்டி வந்து அழித்தான் என்றும் வருகிறது.
இதற்குப் பின் இருக்கும் தத்துவ ஞானத்தைப் பார்ப்போம். இந்திரன் என்பவன் ஐந்து இந்திரியங்களுக்கு, அதாவது ஐம்புலன் நுகர்ச்சிகளுக்குத் தலைவன். இவை தவிர இன்னும் ஐந்து நுகர்ச்சிகள் நம்மை ஆட்டி வைக்கின்றன. இவை யாவை என்று அறிய கீதையில் கிருஷ்ணர்சொல்வதைக் கவனிக்க வேண்டும்.
கீதை இரண்டாவது அத்தியாயத்தில் கிருஷ்ணர், நம் ஐம்புலன்களையும் அடக்க வேண்டியதன் அவசியத்தைக் கூறுகிறார். (கீதை 2- 62 &63).
ஒரு ஆமை எப்படி தன் உறுப்புகளை உள்ளிழுத்து அடக்கிக் கொள்கிறதோ அது போல நாமும் ஐம்புலன்களையும் அடக்கிக் கொள்ளவேண்டும். ஐம்புலன்களும் ஐந்து எதிரிகள் போன்றவர்கள். இந்த ஐந்து எதிரிகளை அடக்கவில்லை என்றால், சங்கிலித் தொடர் போல மேலும் ஐந்து எதிரிகள் உண்டாவார்கள். ஆக மொத்தம் பத்து எதிரிகள் ஒரு மனிதனுக்கு உண்டு.