ரிக் வேதத்திலிருந்து ஆரியப் படையெடுப்புக் கதையை எடுத்தவர் மாக்ஸ் முல்லர். ஆரியக் கதையை நம்பும் தமிழ் மக்கள், முல்லர் அவர்கள் தானே ரிக் வேத மூலத்தைப் படித்து, மொழி பெயர்த்து இந்த ஆரியப் படையெடுப்பைக் கண்டு பிடித்தார் என்று நினைக்கிறார்கள். ரிக் வேதத்தின் மூலத்தைப் படித்து அவர் இந்தக் கதையைக் கண்டு பிடிக்கவில்லை. வேதத்துக்கும், வேதம் ஓதுதலுக்கும் நம் நாட்டில் கொடுக்கப்பட்ட மரியாதையை அவர் ஒருபோதும் அறிந்ததில்லை. ஒரு முறைகூட அவர் இந்தியாவுக்கு வந்ததில்லை. இந்து மதத்தின் தத்துவ மரபை நேரில் கேட்டு, கண்டு அவர் அறிந்ததில்லை. அவரது கவனம் வரலாற்று ஆராய்ச்சியில் இருந்தது. ரிக் வேத மொழிபெயர்ப்புகளைப் படித்து அவர் உருவாக்கின ’வரலாற்றுச்’ சிந்தனையே ஆரியக் கதை.
‘A History of Ancient Sanskrit Literature – The primitive religion of the Brahmans’ என்னும் நூலை 1859 – ஆம் ஆண்டு வெளியிட்டார். அதன் முன்னுரையில் மொழி ஆராய்ச்சியின் மூலம், வரலாற்றைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று கூறுகிறார். இந்தியாவில் சமஸ்க்ருத மொழியில் ஏராளமான நூல்கள் இருந்தன. எல்லா நூல்களிலும், வேதத்தைப் பற்றி புகழ்ந்து ஒரு குறிப்பாவது இருந்தது. யாரைக் கேட்டாலும், எந்த சமஸ்க்ருத நூலைப் படித்தாலும் வேதமே ஆதியானது என்று சொன்னர்கள். இது முல்லரின் கவனத்தைக் கவர்ந்தது. வேதம் என்பது ஆதி என்றால் அதில்தான் இந்திய வரலாற்றின் மூலம் இருக்க வேண்டும் என்று முன்னுரையில் வாதிட்டுள்ளார்.
இப்படி நினைத்தற்கு இன்னொரு காரணமும் உண்டு. அவர் பின் பற்றிய கிறிஸ்து மதத்தில் அவர்கள் மத நூலான பைபிளை முன்னிட்டே வரலாற்றை ஆராய்ந்தனர். கி-பி- 1654 – ஆம் ஆண்டு, ஐயர்லாந்தைச் சார்ந்த உஷர் என்னும் ஆர்ச்பிஷப் அவர்கள் பைபிளில் உள்ள விவரங்கள் அடிப்டையில் கி-மு. 4004 –ஆம் ஆண்டு அக்டோபர் 23–ஆம் தேதி காலை 9 மணியளவில் இந்த உலகம் தோன்றியது என்று கூறியுள்ளார். அதனால் அது முதற்கொண்டே உலகமும், மக்களும் இருந்திருக்கின்றனர் என்பதே அவர்கள் கோட்பாடு.
கி-மு- 4004 ஆம் ஆண்டு உலகம் தோன்றியிருந்தால், அதற்குப் பின் வந்த பைபிள் கூறும் பெரு வெள்ளம், கி- மு- 2448 ஆம் ஆண்டில் வந்திருக்க வேண்டும். பிறகு வெள்ள நீர் வற்றி மக்கள் வாழ்க்கையைத் தொடங்கி, அதன்பின் ஆங்காங்கு குடி பெயர, அடுத்த 1000 ஆண்டுகள் ஆகியிருக்கும். இந்தக் கணக்கின் அடிப்படையில் கி-மு- 1500 –இல் ஆரியப் படையெடுப்பு நிகழ்ந்திருக்கும். இதுவே முல்லர் போன்றவர்களது கருத்து. இவர்கள் இந்திய நூல்களைப் படிக்கவில்லை. இந்தப் பிரபஞ்சம் தோன்றின வரலாற்றைச் சொல்கின்றன நமது நூல்கள். அவை சொல்லும் காலக் கணக்கை அறிவியல் ஆமோதிக்கிறது.இதையெல்லாம் அறியாத காலத்தில், முல்லர் புகுத்திய குழப்பத்துக்கு ஆதரவு தரும் திராவிட அறிவிலிகளிடத்தில் இன்னும் நாம் பலி கடா ஆகிக் கொண்டிருக்கிறோம்
பைபிளைப் படித்த முல்லர் போன்றவர்களுக்கு இந்தியாவில் இருந்த பல நூல்கள் குழப்பத்தைத் தந்தன. மத நூல் என்று ஒரே ஒரு நூல் ஹிந்து மதத்தில் இல்லை. ஒரே ஒரு தெய்வம் இல்லை. தாங்களே இதற்கெல்லாம் விடை கண்டு பிடிப்பதற்கு முன், அவர்கள் ஹிந்து ஞானிகளை அணுகி விவரங்கள் கேட்டிருக்க வேண்டும்.யஞ்ஞவாக்கியர் பாணியில் ஞானிகள் சொல்லியிருப்பார்கள். தெய்வங்கள் மொத்தம் 3,003, 303, 33, 6, 3, 1-1/2, 1 என்று இயற்கை வழியில், தத்துவ நெறியில் கூறியிருப்பார்கள். ரிக் வேதத்தில் வரும் எல்லா தெய்வங்களும் இவற்றுக்குள் அடங்கி விடும். அப்படிக் கேட்காமல் ரிக் வேதத்தில் தாங்களாகவே இந்திய வரலாற்றைத் தேடினார்கள்.