சுதாஸ் என்னும் அரசனுக்கு இன்னொரு பெயரும் உண்டு. அது பைஜவனன். பிஜாவனன் என்பவன் மகன் இவன், எனவே இவனுக்குப்பைஜவனன் என்ற பெயரும் உண்டு. இவன் இந்திரன் உதவியுடன், சிந்துவைக் கடந்து, மதில்களை அழித்து, தசராஜர்கள் எனப்படும் பத்து அரசர்களை வென்றான் என்று ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.
வாஜஸனேயி சம்ஹிதையில் இதே அரசன் 30 அரசர்களை வென்றான் என்று அந்த அரசர்களது பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஆரியர்கள் என்ற அடைமொழி கொண்டவர்களும் உண்டு. தஸ்யூ என்னும் அடைமொழி கொண்டவர்களும் உண்டு. அதாவது ஆரியர்கள், தஸ்யூக்கள் என இரண்டு வகை மக்களும் சுதாஸுக்கு எதிரி என்று நினைக்க வேண்டியிருக்கிறது. அதாவது தஸ்யூக்களும், ஆரியர்களும் ஒன்று சேர்ந்தும் போரிடுகிறார்கள். அவர்கள் ஒன்றாக தஸ்யூவை எதிர்க்கிறார்கள். அல்லது தஸ்யூவே, தஸ்யூவை எதிர்த்தும் போரிடுகிறான் என்றும் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது.
அதுமட்டுமல்ல. எந்த வசிஷ்டர் சுதாஸுக்கு உதவி செய்தாரோ அவரது மகன்களை, சுதாஸின் மகன்கள் கொன்று விடுகிறார்கள், அதனால் அவர்கள் அசுரர்கள் என்றும் புராணங்களில் அழைக்கப்பட்டார்கள். அசுரன், தேவன் என்னும் பெயர்கள் எவ்வாறு வந்தன என்று பகுதி 21–இல் நாம் தெரிந்து கொண்டோம். அசுரன் என்பது ஒரு இனமல்ல. ஒருவனது குணத்தால், நடவடிக்கையால், அந்தப் பெயர் வந்தது என்றும் பார்த்தோம். இங்கு தஸ்யூ என்ப்படுபவன் அசுரனாகிறான் என்பதால், தஸ்யூ என்பதும் குணத்தின் அடிப்படையில் வந்தது என்று சொல்லும் வண்ணம் இருக்கிறது.
சுதாஸ் என்னும் பெயருள்ள அரசன் யார் என்று புராண, இதிஹாசங்களைத் தேடினால், இரண்டு இடங்களில் சுதாஸ் என்னும் மன்னனைப் பற்றி விவரம் வருகிறது. ஒன்று ராமன் பிறந்த சூரிய குலம், மற்றொன்று புரு வம்சத்தில் வரும் சந்த்ர குலம். ராமனுக்கு முன்பும், ஆனால், கங்கையை பூமிக்குக் கொண்டுவந்த பாகீரதனுக்குப் பின்னும் இந்த மன்னன் பெயர் வருகிறது. இது விஷ்ணு புராணத்தில் காணப்படுகிறது. ஆனால் சுதாஸ் என்னும் இவன் பெயர் ராமனது திருமணத்தின் போது வசிஷ்டர் சொல்லும் பரம்பரையில் வரவில்லை. எனவே இவன் பட்டத்து இளவரசனில்லாமல், மற்ற சகோதர்களது பரம்பரையில் வந்திருக்க வேண்டும்.
அதே விஷ்ணு புராணத்தில் சந்திர வம்சாவளியினர் பெயர் வருகிறது. அதில் முத்கலனுக்கு மௌத்கல்ய பிராம்மணன் பிறந்தான் என்றும், முத்கலனது பேரன் திவோதாஸன், அவனது பேரன் சுதாஸ் என்றும் வருகிறது.