இந்திரன், தேவன், அசுரன் போன்ற சொற்கள் எந்த அர்த்ததில் சொல்லப்பட்டன என்று சென்ற பகுதிகளில் பார்த்தோம். இவை பற்றி எதுவுமே அறியாத ஆங்கிலேயர்களும், பிற ஐரோப்பியர்களும் சூசகமான வேத மந்திரங்களுக்குப் பொருள் கூறத் தலைப்பட்டனர். அகராதி ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு வேதத்திற்குப் பொருள் சொல்ல முற்பட்டனர். அவர்கள் பொருள் சொன்ன ரீதியில், திருக்குறளுக்கும் பொருள் சொல்லி இருந்தார்கள் என்றால் குறளிலும் ஒரு யுத்ததைக் கண்டு பிடித்திருப்பார்கள்.
உதாரணமாக, தீவினையெச்சம் அதிகாரத்தில் ஒரு குறள் வரும். எப்படிப்பட்ட கொடிய பகையிலிருந்தும் ஒருவன் தப்பிவிட முடியும், ஆனால் ‘வினைப்பகை’யிலிருந்து தப்ப முடியாது. அது அவன் பின்னாலேயே சென்று அவனைத் தாக்கும் என்கிறது அக்குறள். இங்கு வினை என்பது, ஒருவரது கர்ம வினையால் ஏற்படும் விளைவுகள் என்பது பொருள். ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும், என்பது சிலப்பதிகாரத்திலும் தெளிவுபடுத்தப்பட்ட ஒரு கருத்து. ஊழ்வினை, கர்ம வினை போன்ற கருத்துக்கள் நம்மிடையே வழி வழியாக வழங்கி வரவே நாம் அப்படியே எளிதாகப் பொருள் கண்டு விடுவோம்.
இப்படிப்பட்ட நம் எண்ணங்களையும், வாழ்க்கை முறையையும் அறியாத ஒருவர், ஆனால் தட்டுத்தடுமாறி அகராதிகள் துணையுடன் பொருள் காண விரும்புவர் என்னவென்று சொல்வார்? வினை என்பதற்குத் தொழில் என்றும் ஒரு பொருள் உண்டு. வினைப் பகை என்பதை “தொழில் பகை”என்று அவர் பொருள் கொண்டு, ஒருவரால் எந்தப் பகையிலிருந்தும் தப்பி விட முடியும், ஆனால் தொழில் பகையிலிருந்து தப்பவே முடியாது, ஒருவனுடைய தொழில் எதிரி என்றைக்கும் விடாது துரத்தி வருவான் என்று இந்தக் குறள் கூறுகிறது என்று பொருள் கண்டால் எப்படி இருக்கும்? நமக்குச் சிரிப்புத்தான் வரும். இவனெல்லாம் அர்த்தம் கண்டு பிடிக்க வந்து விட்டான் பார் என்று தலையில் அடித்துக் கொள்வோம். அவன் அப்படி அதி மேதாவித்தனமாக எழுதியதைத் தூக்கிக் குப்பையில் போடு என்றும் சொல்வோம். ரிக் வேதத்திலிருந்து எடுக்கப்பட்ட கண்டுபிடிப்புகளும் அந்த ரகத்தைச் சேர்ந்தவையே.
அப்படி ஆங்கிலேயர்கள் கண்டு பிடித்த ஆரிய- திராவிடப் போர், முக்கியமான இரண்டுவகையான ‘சண்டைகளை’ அடிப்படையாகக் கொண்டது. இவற்றுள் அதிக அளவு ரிக் வேதத்தில் சொல்லப்படும் யுத்தம், ‘சுதாஸ்’என்பவனுக்கும், ‘தசராஜர்கள்’ எனப்படும் பத்து அரசர்களுக்கும் இடையே நடந்தது என்று இவர்கள் ’மொழிபெயர்த்துச்’சொல்லி இருக்கிறார்கள்.
சுதாஸ் என்பவன் பெயரில் ‘தாஸ்’ அதாவது ‘தாஸன்’ என்னும் சொல் இருக்கிறது. சுதாஸ் என்றால் சிறந்த தாஸன் என்று பொருள். தாஸன்என்ற வட மொழிச் சொல்லுக்கு நாம் என்ன பொருள் சொல்லுவோம்?அடியவன் என்போம். இந்தச் சொல் நம்மிடையே காலம் காலமாக வழங்கி வந்துள்ளது. இது ஒரு குறிப்பிட்ட இனத்தைக் குறிக்கும் சொல்லும் அல்ல. ஆனால் இதனை மொழி பெயர்த்த வெளிநாட்டான், இதை ‘அடிமை’ என்று பொருள் கூறி அதை ஒரு இனமாகக் கருதினான்.
அவர்கள் ஊரில் அடிமைகள் உண்டு. மனிதனை மனிதன் அடிமையாக நடத்தி வந்தது அவர்கள் நாட்டில் சமீப காலம் வரை நடந்திருக்கிறது. ஆனால் மனித அடிமை பாரத சரித்திரத்தில் இருந்திருக்கவில்லை. கி-மு- 3 – ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்து, வட இந்தியா, தென்னிந்தியா, தமிழ் நாட்டுப் பகுதிகள் என்று எங்கணும் சுற்றிப்பார்த்த கிரேக்கத்தூதர் மெகஸ்தனீஸ் அவர்கள் இந்தியாவில் அடிமைகளே இல்லை, மனிதனை அடிமையாக நடத்தும் செயலை எங்கும் தான் பார்க்கவில்லை என்று எழுதி இருக்கிறார்.
தாஸன் என்பதை நாம் என்றுமே அடிமை என்று பொருள் கொண்டதில்லை. தாஸனாக இருப்பது என்பது, தெய்வத்திற்கோ அல்லது தெய்வத்தொண்டு புரிபவர்களுக்கோ அடியவன் என்றும், அதாவது அடியார்க்கு அடியார் என்று இறையடியவர்களுக்கு நான் அடியேன் என்று சொல்லும் உயர்ந்த அடக்கப் பண்பாகத்தான் இருந்து வந்திருக்கிறது.நம்மிடையே வாழ்ந்த தாஸர்களைப் பாருங்கள் – துளசிதாஸர், ராம தாஸர், கபீர்தாஸர், புரந்தர தாஸர். இந்த வரிசையில் என்றோ இருந்த மன்னர் ஒருவர் சுதாஸ்.
அது மட்டுமல்ல, அடியவன் என்பதிலிருந்து அடக்கம் என்பது வந்தது. ஒருவன் அடக்கத்துடன் இருக்கிறான் என்றால் அவன் எண்ணம், மொழி, மெய் (மனம், வாக்கு, காயம்) ஆகியவற்றை அடக்கியவன் என்பது பொருள். அடக்கமுடைமை என்னும் அதிகாரத்துக்குப் பழைய உரையாசிரியர்கள் இந்த அர்த்தம் தந்துள்ளார்கள். அப்படிப்பட்ட அடக்கம் உடையவன் அமரருள் உய்க்கும் என்று சொல்லி வள்ளுவர் அடக்கமுடைமை அதிகாரத்தையே ஆரம்பிக்கிறார். அமரர்களுக்குத் தலைவனான இந்திரன், சுதாஸன் என்பவனது உதவிக்கு வருகிறான் என்றால், அவன் யாருக்கு தாஸனாக இருந்திருப்பான் என்று நாம் ஊகித்துக் கொள்ளலாம்.
அந்த சுதாஸனுக்கு எதிரிகள் தஸ்யூக்கள் என்று ரிக் வேதத்தில் சில இடங்களிலும், ஆரியர்கள் என்று சில இடங்களிலும் வருகிறது.தஸ்யூ என்னும் சொல்லே தாஸன் என்றானது என்பது இந்த மொழிபெயர்ப்பாளர்கள் கருத்து. இந்த தஸ்யூக்களை ஆரியர்கள் எதிர்த்துப் போரிட்டு விரட்டினார்கள், அதில் அவர்களுக்கு இந்திரன் உதவி புரிந்தான் என்பதும் அவர்கள் கருத்து. இந்த தஸ்யூக்களே திராவிடர்கள் என்று சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பதும் அவர்கள் கருத்து. அப்படி இருக்க தஸ்யூவான சுதாஸுக்கு இந்திரன் எப்படி உதவி செய்தான் என்பதில் லாஜிக் இடிக்கிறது.
ரிக் வேதம் 7- ஆவது மண்டலத்தில் பல இடங்களில் சுதாஸுக்கு இந்திரன் உதவி செய்த குறிப்புகள் வருகின்றன. அது மட்டுமல்ல, சுதாஸுடன் சேர்ந்த த்ருட்ஸுஸ் என்பவனுக்கும், இந்திரனும் வருணனும் சேர்ந்து உதவி செய்தார்கள் என்றும் வருகிறது. இந்திரனும், வருணனும், எதிர்ப்படையானவர்கள் என்று முன் பகுதிகளில் பார்த்தோம். அவர்கள் எப்படி ஒன்று சேர்ந்து ஒருவருக்கு உதவி செய்ய முடியும் என்பதிலும் லாஜிக் உதைக்கிறது.
சுதாஸ், த்ருட்ஸு இருவரும் ஒரே அணியில் இருப்பதாகப் பல இடங்களிலும் வருகிறது. அவர்களது வெற்றிக்கு இந்திரன் உதவுகிறான். ஆனால் வேறு இடத்தில், அதே இந்திரன் த்ருட்ஸுவைக் கொன்று அவனிடத்தில் இருந்த ஆரியர்களது பசுக்களை மீட்டான் என்றும் வருகிறது. இந்தக் குழப்பத்தை எல்லாம் எப்படித்தான் மொழி பெயர்த்து, பொருள் சொன்னார்கள் என்றுத் தெரியவில்லை.
சரி, த்ருட்ஸு கதை அப்படியே ஆகட்டும். இந்தக் கதையில் த்ருட்ஸு ஆரியர்களது பசுக்களை முன்னம் ஒரு முறை கவர்ந்திருக்கிறான் என்றாகிறது. அப்படி என்றால் த்ருட்ஸு தஸ்யூக்களில் ஒருவனாகிறான். அவன் சுதாஸைச் சேர்ந்தவன் என்றும் வருவதால், அவன் தஸ்யூ என்பதில் சந்தேகமில்லை என்றும் எடுத்துக் கொள்வோம். ஆனால், இந்திரன் சுதாஸுக்கு செய்த உதவி மீண்டும் மீண்டும் போற்றப்படுகிறது. இந்திரனுக்கும், மற்ற தெய்வங்களுக்கும் சுதாஸ் அள்ளி அள்ளிக் கொடுக்கிறார். குதிரைகள், பொன், பொருள் என்று ஏகப்பட்ட அன்பளிப்புகள், தானங்களைத் தெய்வங்களுக்குக் கொடுத்தான் என்று சுதாஸைப் பற்றி சொல்லப்படுகிறது. நம் திராவிடவாதிகள் பார்வையில் இவர்கள் ஆரியத் தெய்வங்கள். அவர்களுக்கு இத்தனை அன்பளிப்பா? அதுவும், தஸ்யூக்கள் கொடுக்கிறார்களா?
அது மட்டுமல்ல. எதிரிகளின் மதிளை அழித்து, அவர்களை விரட்டி, சிந்துவைக் கடக்க சுதாஸுக்கு இந்திரன் உதவினான் என்றும் வருகிறது. இந்த சிந்து சப்த சிந்து எனப்பட்டது. இதையே சிந்து நதிஎன்று மொழிபெயர்ப்பாளர்கள் சொல்கின்றனர். சப்த சிந்து என்றால் ஏழு சிந்து என்று அர்த்தம். ஆனால் சிந்து நதியோ ஐந்து கிளைகளைக் கொண்டது. ஐந்து நதிகள் என்ற பொருள் தரும் பஞ்ச நதிகள் பாயவே, அந்த இடம் பாஞ்சாலம் என்று அழைக்கப்பட்டது என்ற சரித்திரம் எல்லாம், ஆங்கிலேயனுக்கு எப்படித் தெரிந்திருக்கும்?
அந்த சிந்துவைக் கடக்க ஆரியர்களுக்கும் இந்திரன் உதவி செய்தான், தஸ்யூவான சுதாஸுக்கும் உதவி செய்தான் என்றால் என்ன கருத்தை இதிலிருந்து எடுக்க முடியும்? தஸ்யூக்களும் படை எடுத்து வந்தார்கள் என்றுதானே பொருள் கொள்ள வேண்டும்?
இதை விடுங்கள். இந்த சுதாஸுக்குப் பகைவர்கள், பத்து அரசர்கள்.தஸராஜர்கள் என்று இவர்களை ரிக் வேதம் அடிக்கடி கூறுகிறது. இந்தத் தஸராஜர்களை இந்திரன் உதவியால், சுதாஸ் துவைத்து எடுத்து விடுவான். அவர்களை வெற்றி கொண்டதற்காக, இந்திரனுக்கும், தேவர்களுக்கும் வாரி வழங்கினான். இதில் வசிஷ்டரும் அவனுக்குத் துணை.
அதே சுதாஸ், வேறு ஒரு சமயத்தில், வசிஷ்டரை ஓரம் கட்டி விட்டு விஸ்வாமித்திரரைத் தனக்கு உதவிக்கு வைத்துக் கொள்கிறான். ஒரு சமயம், தஸ்யூக்களுடன் சண்டையிடுவதாக வரும். இன்னொரு சமயம், ஆரியர்களையும் எதிர்ப்பதாக வரும். இதிலிருந்து என்ன கதையை எடுத்தார்கள் இந்த ஆங்கிலேயர்கள் என்று பிரமிப்பாக இருக்கிறது.
இந்த முரண்பாடுகளைப் பார்க்கும் போது, ரிக் வேதம் என்பதே ஒரு உளறல் பாடல் என்று சொல்லலாமே என்றால் – இல்லை. ரிக் வேதத்திற்கு உரை எழுதி, யாரும் கற்பிக்கவில்லை. அதை ஒதும் முறையைத்தான் கற்று வந்திருக்கிரார்கள். சுபாஷ்கக் என்னும் விஞ்ஞானி, ரிக் வேதத்தில் சில அபூர்வ சங்கதிகள் (codes )மறைந்திருக்கலாம் என்கிறார். சதபத பிராம்மண்ம் என்னும் நூலில் தரப்பட்டுள்ள ஹோம குண்டத்தின் விவரங்களின் அடிப்படையை ஆராய்ந்து, அதில் மறைந்துள்ள விண்வெளி உண்மைகளை நிரூபித்துள்ளார் இவர்.
‘மறை’ பொருளாக, அதாவது மறைந்துள்ள பொருளாக பல செய்திகளை வேதங்கள் கூறுகின்றன என்பதே வழி வழியாக வந்துள்ள கருத்து.அப்படி மறைத்துக் கூறும் பொருளை குரு மூலமாக, தத்துவ ரீதியாகத்தான் அறிய முடியும். சுதாஸ் கதையில் வரும் கருத்து என்ன என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம். அதற்கு முன் சுதாஸைப் பற்றிய ஒரு விவரத்தைத் தெரிந்து கொள்வோம்.
வேதத்தில் வரும் பல பெயர்களும் ஒரு காலத்தில் வாழ்ந்தவர்களது பெயர்களாக இருந்திருக்கும் என்ற சொல்லும்படி, புராணக் கதைகளிலும், சம்ஹிதை போன்றவற்றிலும் அந்தப் பெயர்கள், அவர்களை ஒட்டிய கதைகள் வருகின்றன. அவற்றை ஆராயாமல், ரிக் வேத்தை மட்டும் படித்துப் பொருள் கொள்ளவே அறிவீனமான ஒரு கொள்கை பிறந்து அது, இந்திய மக்களை, குறிப்பாகத் தமிழ் மக்களை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது.
அந்தக் கதைகள் மூலம், இந்த யுத்தங்களைப் பற்றிப் பார்ப்போம்.
சுதாஸ் என்ற அரசனைப் பற்றி மஹாபாரதத்தில், சாந்தி பர்வம் (60 –ஸ்லோகம் 38 முதல் 40 வரை) என்னும் பகுதியில் வருகிறது. இவன் ஒரு சூத்திரன் என்றும், இவன் இந்திராக்கினி என்னும் ஹோமத்தைச் செய்தான் என்றும், அதில் நூறாயிரம் கோடிப் பொன்னை தக்ஷிணையாகக் கொடுத்தான் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இன்றும், தலித்துக்கள் பற்றி அறிய பாரதக் கதைகளை ஆராய்பவர்கள் இந்த சுதாஸை சூத்திர அரசனாக எடுத்துக் காட்டுகிறார்கள்.
தஸ்யூ என்றும், சூத்திரன் என்றும் அடையாளம் காட்டப்பட்ட ஒருவனுக்கு இந்திரன் உதவி புரிந்து சிந்துவை கடக்கச் செய்து, வசிஷ்டர் முதல், விச்வாமித்திரர் வரை பெரிய ரிஷிகள் துணை நின்றிருக்கிறார்களே, அப்படி என்றால் படையெடுத்து வந்தவன் யார்? யார் யாரை விரட்டினார்கள்? ஹோமம் செய்தவன் சுதாஸ் என்னும் சூத்திரன் என்றால், அவன் பூணூல் அணியாமல் ஹோமம் செய்திருக்க முடியுமா? இந்த தஸ்யூ பூணூல் அணிந்தது மட்டுமல்லாமல், ஹோமம் செய்யத் துணை புரிந்த பிராம்மணர்களுக்கு நூறாயிரம் கோடிப் பொன் கொடுக்கத்தக்க அந்தஸ்துடன் இருந்திருக்கிறானே, இதற்கு என்ன அர்த்தம்? சூத்திரர்கள் ஆரிய மரபில் தாழ்த்தப்பட்டவர்கள் என்றால், எப்படி இது சாத்தியமாகும்? இங்கே சிந்து நதியைக் கடந்து போரிட்டு வந்ததும் சுதாஸ் போன்ற தஸ்யூக்கள் என்றால், வந்தவர்கள் தஸ்யூக்கள் அல்லது திராவிடர்கள் என்றுதானே ஆகிறது? ஆரியப் படையெடுப்பு நடந்தது என்பதற்கு இது முரண்பாடாக அல்லவா இருக்கிறது?
சுதாஸ் பற்றி பிற நூல்களில் வரும் குறிப்புகள் ஆரிய- திராவிடப் பிரிவைக் கேலிக்கூத்தாக்குகிறது. பாரத சரித்திரத்தைப் பற்றி ஒன்றும் தெரிந்து கொள்ளாமல் ஆங்கிலேயர் செய்த ‘ஆராய்ச்சி’ இன்றும் தமிழர்களை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது என்றால் தமிழனுக்குத்தான் வெட்கக்கேடு!
"கி-மு- 3 – ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்து, வட இந்தியா, தென்னிந்தியா, தமிழ் நாட்டுப் பகுதிகள் என்று எங்கணும் சுற்றிப்பார்த்த கிரேக்கத்தூதர் மெகஸ்தனீஸ் அவர்கள் இந்தியாவில் அடிமைகளே இல்லை, மனிதனை அடிமையாக நடத்தும் செயலை எங்கும் தான் பார்க்கவில்லை என்று எழுதி இருக்கிறார்."
எனக்கும் வெகு நாட்களாக ஒரு சந்தேகம் உண்டு. இங்கே குறிப்பிட்டது போல கி.மு. வில் அடிமைகளே இல்லை என்றால் ஆதி திராவிடர்களை அடிமைகளை போல் நடத்தியது என்றிலிருந்து ஆரம்பித்தது. கி. மு. வில் அவர்களின் நிலை எப்படி இருந்தது.
இதைப் பற்றி கொஞ்சம் விளக்கமாக இந்த பின்னூட்டத்திலேயே பதில் எழுதவும்.
திரு சிவா அவர்களே, நீங்கள் கேட்ட கேள்விக்கும் அது தொடர்பான பிற கேள்விகளுக்கும் ஏன், எப்படி என்று படிப்படியாக இந்தத் தொடரில் பல விவரங்கள் வருகின்றன.
சுருக்கமாகச் சொல்வதென்றால், பறையர்கள் என்ற மூத்த தமிழ்க் குடிகளே சென்ற நூறு வருடங்களாக ஆதி திராவிடர்கள் என்று அழைக்கப்பட்டனர். இதைப் பற்றிய விவரங்களை ம. வெங்கடேசன் அவர்கள் ”நீதிக் கட்சியின் மறுபக்கம்” என்று தமிழ் ஹிந்துவில் எழுதிய தொடரில் காணலாம். அந்தத் தொடரின் 6-ஆவது பகுதியில் இந்தப் பெயர் மாற்றம் வந்த கதை விவரிக்கப்படுகிறது. அதை இங்கே காண்லாம்.
தமிழ்ச் சங்க நூல்களில் பறையர், பாணர், துடியர், கடம்பர் என்னும் நான்கு குடிகளும் மூத்த தமிழ்க் குடிகள் என்று வருகிறது. (புறநானூறு 335). இவர்கள் ஒரு குழுவாக இயங்கி வந்தனர். புறநானூறில் பல பாடல்கள் பாணர்களால் பாடப்பட்டன. அவர்கள் தனியாக அரசனிடம் சென்று பாடிப் பரிசில் பெறவில்லை. நான்கு குடிகளைக் கொண்ட குழுவாகச் சென்று தங்கள் திறமையைக் காட்டிப் பரிசில் பெற்றிருக்கின்றனர்.
இதில் பாணன் யாழ் இசைத்துப் (தம்புரா) பாட, பறையன் அதற்கு ஏற்றாற் போல பறை கொட்ட (பக்க வாத்தியமாக மிருதங்கம் அடிப்பது போல), துடியன், துடிப் பறை என்னும் இன்னொரு பறை அடிக்க, கடம்பன் கடம்ப மாலையை அணிந்து பாட்டுக்கேற்றாற்போல நடனமாட என்று இந்த நால்வரும் தங்கள் திறமையைக் காட்டிப் பரிசில் பெற்றிருக்கின்றனர்.
சங்க கால அரசர்கள் இருந்தவரை இவர்களுக்குக் குறைவில்லை. அதிலும் கொடைக்குப் பெயர் பெற்ற வேளிர் அரசர்கள் (பாரி, ஓரி போன்றவர்கள் வேளிர்கள்) இருந்தவரை இவர்களுக்கு ஒரு குறையும் இல்லை. இவர்கள் மட்டுமல்ல, மறை மலை அடிகள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று 18 ஜாதிகளை இனம் காட்டுகிறார். அவர்கள் தத்தமக்கென்று ஒரு கைத்தொழிலில் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்களும், சிறப்புடன் வாழ்ந்து வந்தார்கள். இவர்களை வேளிர் அரசர்கள் பாதுகாத்து வந்தனர். பல விவரங்களும் இந்தத் தொடரில் வருகின்ரன.
ஆனால் வேளிர் அரச குலம் அழிக்கப்பட்ட பிறகு, இவர்கள் தமிழ் மன்னர்கள், அவர்கள் அரசாண்ட பகுதியில் இருந்த மக்கள் போன்றோருடைய அதிகாரத்துக்கு உட்பட்டு வாழ வேண்டிய நிலமை வந்தது. இந்தக் காலக் கட்டம் கண்ணகிக்குக் கோயில் கட்டினான் என்று புகழுகிறோமே அவன் காலக்கட்டமும், அதற்குப் பிறகும் வந்தது. கடம்பர்களை முழுதும் அழித்தவன் கண்ணகி கொயில் எழுப்பிய சேரன் செங்குட்டுவன். புரவலர்கள் இல்லாத பலகுடி மக்கள் தமிழ் மூவேந்தர்கள் கீழ் இரண்டாந்தரக் குடிகளாக நடத்தப்பட்டனர். இதை post- sangam period எனலாம். கி-பி- 2 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு எற்பட்ட சமூக நிலை மாற்றம் இது.
இதற்கு ஜாதி இந்து, கீழ் ஜாதி என்ற பிரிவினை காரணமில்லை. ’நான் இங்கு இருந்தவன், நீ ஒண்ட வந்தவன், எனவே எனக்கு நீ ஒரு படி குறைவுதான்” என்று தமிழ் நிலம் முழுவதும் இருந்த எண்ணம்தான் காரணம். அதாவது, வழி வழியாகத் தமிழ் மண்ணில் இருந்தவர்கள் என்ற மக்களுக்கும், ”செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்” என்று தொல் காப்பியர் குறிப்பிடும் 12 நாடுகளுக்குக் குடி பெயர்ந்து வந்த மக்களுக்கும் இடையே, இந்தக் குடி பெயர்ந்த மக்களது புரவலர்கள் அழிந்த பிறகு, ஏற்பட்ட போராட்டம் இது.
அப்படியும் அவர்கள் தங்களைக் காத்துக் கொண்டு வந்திருக்கின்றனர். இன்றைக்கு ஜாதி என்பது, அன்று குடி என்ப்பட்டது. குடிகளாக, தங்கள் ஒற்றுமையை விடாமல் அவர்கள் தங்களை நிலை நிறுத்தி வந்துள்ளனர். ஜாதிப் பிரிவுகள் என்று இருந்தது, தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவியது.
இதை பிராம்மணர், பிராம்மணர் அல்லாதவர் என்று மாற்றியது காலனி அரசு. காலனி அரசிலிருந்து ஐடியா எடுத்துக் கொண்டு பிராம்மணர் - பிராம்மணர் அல்லாதோர் போராட்டமாக அதைத் திரித்தது நீதிக்கட்சியும், அதைத்தொடர்ந்து திராவிடக் கட்சிகளும்.
ஆங்கில அரசு, அரசுப் பணியில் வேறு வழி இல்லாமல் இந்தியர்களை அமர்த்த வேண்டி இருந்தது. ஆனால் அவர்களை நம்ப முடியவில்லை. ஒரே ஜாதியினர் சேர்ந்து கொண்டால் தங்களுக்குத் தொந்திரவு ஏற்படலாம் என்று காலனி அரசு நினைத்தது. அதிலும் பிராம்மணர்கள் காலனி அரசுகு எதிராக மக்களைத் தூண்டக் கூடும் என்று அரசு பயந்தது.
திராவிடக் கட்சிகள் பிரசாரம் செய்துள்ளதைப் போல பிராம்மணர்களுக்கு காலனி அரசுப் பணியில் அதிக இடம் இல்லை. 1825 ஆம் ஆண்டு மெட்ராஸ் ப்ரெஸிடென்ஸிப் பகுதியில் அரசுப் பணியில் இருந்தவர்களில் பிராம்மணர்கள் 23% சூத்திரர்கள் என்று சொல்லப்பட்டோர் 45%
அடுத்த வருடம் 1826 ஆம் ஆண்டு அரசுப் பணியில் இருந்தோரில் பிராம்மணர்கள் 20% மட்டுமே. இந்த அளவைக் கூட ஆங்கிலேயனால் பொறுக்க முடியவில்லை. பிராம்மணர்களைக் குறைக்க வேண்டும், ஒருவருக்கொருவர் ஜாதிப் பகைமையை மூட்டி விட வேண்டும் என்று நினைத்தது. அதாவது பிரித்தாளும் பாலிசியை அரசுப் பணியில் ஜாதி மூலம் ஆங்கில அரசு நுழைத்தது.
ஒரே ஜாதியினர் சேர விடக் கூடாது என்று 1851 -இல் ஆங்காங்கு இருக்கும் அரசு அலுவலகங்களில், ஆங்காங்கு அதிகப்படியாக இருக்கும் ஜாதி மக்களைப் பணியில் அமர்த்த வேண்டும் என்று முடிவானது. அதனால் ஜாதிய எண்ணங்கள் அதிகமாயின.
1871 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்ஸஸ் கணக்கின் அடிப்படைக் காரணம் பின் வருமாறு இருந்தது:-
‘அரசுப் பதவிகளில் அவர்களது (பிராமணர்களது) எண்ணிக்கையைக் குறைப்பதும், அதிக அளவு இந்து பிராமணரல்லாதாரையும், முஸ்லீம்களையும் அரசு உத்தியோகங்களில் ஊக்குவிப்பதும், அதன் விளைவாக எந்த ஒரு குறிப்பிட்ட சாதியும் மற்றவர்களைவிட அதிக முக்கியத்துவமோ அல்லது அதிக எண்ணிகைப் பலமோ பெற்றுவிட அனுமதிக்காமல் இருப்பதும்தான் அரசின் உண்மையான கொள்கையாக இருக்க வேண்டும்’
ஜாதிகளுக்கிடையே சந்தேகத்தை மூட்டி வைப்பதில் காலனி அரசு கருத்தாக இருந்தது.
பின்னாள் மன்னர் காலத்திலும், தங்கள் உரிமைகளை நாட்டி வந்த மக்கள், தாழ்த்தப்பட்டோர் என்னும் நிலைமைக்கு உள்ளானது ஆங்கில ஆட்சியில்தான். For quick reading என்னுடய ஆங்கிலத்தளத்தில் வெளியிட்டுள்ள சஞ்ஜீவ் நய்யார் என்பவர் எழுதிய கட்டுரையைப் படியுங்கள் :-
இதெல்லாம் இருக்கட்டும். ஒண்ட வந்த மக்கள் என்று முன்னால் குறிப்பிட்டுள்ளேனே அவர்கள் யார் என்ற ஆர்வம் வரலாம். திராவிடர்கள் என்று சொல்கிறார்களே அந்தக் காலக் கட்டமான கி-மு 1500 இல் அதாவது இன்றைக்கு 3500 ஆண்ட்டுகளுக்கு முன் உண்மையில் மக்கள் கூட்ட இடப் பெயர்வு தமிழ் நாட்டுக்கு வந்திருக்கிறது. அதனைத் தமிழக வரலாற்றில் ஒரு ட்விஸ்ட் என்று முன்பு ஒரு பின்னூட்டத்தில் எழுதியுள்ளேன். அவர்கள் வேறு, தமிழர்கள் வேறு. ஆனால் இன்று அவர்கள் தமிழ் நாட்டில் கலந்து விட்டனர். இந்த இடப் பெயர்வுக்கு தமிழ் உரையாசிரியர்கள், அக்ழ்வாராய்ச்சி மூலம் ஆதாரம் இருக்கிறது. அது ஆங்கிலேயர்கள் சொன்ன ஆரிய - திராவிடப் போராட்டமல்ல. எல்லா விவரங்களைச் சொல்லி இந்தத் தொடர் முடிக்கப்படும்