இயற்கையில் பொருள்கள் மூன்று பரிமாணங்களில் உள்ளன. அவற்றை திட, திரவ, வாயு என்று அறிகிறோம். மனிதனுக்கும் இந்த முப்பரிமாணம் உண்டு. நமது உடல் திட வஸ்து என்றால், ரத்தம், சுரப்பிகளில் உண்டாகும் நீர் போன்றவை திரவங்கள் ஆகும். காண இயலாத நம் மனது, எண்ணம் போன்றவை வாயுவினால் ஆனவை எனலாம்.
இந்த முப்பரிமணம் எல்லாவற்றிலும் இருக்கிறது. உலக அளவில் இந்தப் பூமி, அந்தரிக்ஷம் எனப்படும் வாயு மண்டலம், கிரகங்கள் இருக்கும் ஆகாயம் என்று மூன்று பரிமணங்களை வேதம் சொல்கிறது. தேவேந்திரனான இந்திரனுக்கும் இப்படிப்பட்ட முப்பரிமாணம் உள்ளது.
‘இதந்திரன்’ என்று சொல்லப்படும் தெய்வ ரூபத்தில் இந்திரன் இருப்பது ஒரு பரிமாணம். தெய்வக் கரு, திசைக் கரு என்று சம்பாபதித் தெய்வம் சொல்லும் திசைத் தெய்வமாகவும் இந்திரன் கருதப்படுகிறான். கிழக்குத் திசைக்கான கடவுள் இந்திரன்.. கிழக்கு என்றால் உதயம், முன்னோடி என்றெல்லாம் சொல்லலாம். முன்னோக்கி அழைத்துச் செல்லும் தெய்வமாக இந்திரன் கருதபப்டுகிறான். இந்திரனை முன்னிடுத்தான் பிற தெய்வங்கள் வருகின்றன. அதனால் வருடத்தின் முதல் விழா இந்திரனுக்கு நடந்தது.
அடுத்த பரிமாணம், கண்ணுக்குத் தெரியாத, ஆனால் உணரக்கூடிய சக்தியாக இந்திரன் இருப்பது. இடியிலும், மின்னலிலும், இருப்பவன் எவனோ, அவனது அந்த சக்தியைக் கொண்டே இன்று உலகத்தில் பல இயக்கங்கள் நடக்கின்றன. மொத்தம் 14 இந்திரன்கள் ஒரு கல்பத்தில் வருகிறார்கள். ஒவ்வொரு மன்வந்திரத்துக்கும் ஒரு இந்திரன் ஆட்சிப் பொறுப்பு ஏற்கிறான் என்று புராணங்கள் கூறுகின்றன. மன்வந்திரம் என்பது, குறிப்பிட்ட அமைப்புகளைக் கொண்ட மனித வர்கத்தைக் கொண்டுவரும். அந்த அமைப்புகளது உருவகமாக அல்லது அச்சாக அந்த மன்வந்திரத்தின் இந்திரன் அமைவான்.
இப்பொழுது நமக்கு 7- ஆவது மன்வந்திரம் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் இந்திரன் இடி என்னும் வஜ்ராயுதம் தாங்கினவன். அது மின்னியக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்று சென்ற பகுதியில் பார்த்தோம். அந்த மின் சக்தியே மனிதனது இயக்கத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. மனிதனது சிந்தனை, செயல் எல்லாவற்றையும் நுண்ணிய மின் செய்திகள் மூலம் மனித மூளை இயக்குகிறது என்பதை அறிவியல் மெய்ப்பித்துள்ளது.
இந்த இரண்டாவது பரிமாணாத்தைப் பற்றி உபநிஷத்துக்கள் வாயிலாக நாம் இன்னும் சில விவரங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்த மன்வந்திரத்தின் மக்களை மூன்று விதமாக்ப் பிரிக்கலாம். அவை தேவன், மனிதன், அசுரன் என்பதே. தேவர்கள் உலகத்தை விட்டு வேறு எங்கோ இல்லை. மனிதனே, தேவனாகவும், அசுரனாகவும் இருக்கிறான். அவனே மனிதத்தனத்துடனும் இருக்கிறான். இது பற்றிபிருஹதாரண்யக உபநிஷத்தில் ஒரு விளக்கம் வருகிறது. (5-2- 1,2,3)
தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள் இவர்களுக்குத் தந்தை பிரஜாபதி ஆவார். (பிரஜைகளை உண்டாக்குபவர்) இவர்கள் ஒருமுறை, பிரஜாபதியிடம் சென்று தங்களுக்கு உபதேசம் செய்யுங்கள் என்று கேட்டார்கள். அவர், தேவர்களிடம் ‘த’ என்று கூறி, ‘என்ன சொல்கிறேன் என்று தெரிகிறதா என்று கேட்டார். அவர்கள். தெரிகிறது. ‘தாம்யத’என்கிறீர்கள். அதாவது ‘அடக்கமாக இருங்கள்’ என்கிறீர்கள் என்றனர். அது சரியே என்றார் பிரஜாபதி.
தேவர்களிடம் பல நல்ல குணங்கள் இருந்தாலும், புலனடக்கம் கொள்வது சிரமம். மேலும், புலன்களை அடக்கியவன் தான் தேவனாவான். அவர்களுக்கு எது முக்கியமோ, எது சிரமமோ அதுவே உபதேசமானது.