தமிழ்ச் சங்க நூல்களில் இந்திரனை இயற்கைச் சக்தியாகக் காண்கிறோம். வேதத்திலும், புராணங்களிலும் சொல்லப் பட்டுள்ள இந்திரனைக் குறித்த பல கதைகளுக்குள் மறைந்துள்ள விளக்கங்களைத் தமிழ் நூல்களில் வரும் வர்ணனைகள் மூலம் சுலபமாக அறியலாம்.
இந்திரனது வில், மற்றும் வஜ்ராயுதம் பற்றி தமிழ் நூல்களில் வரும் குறிப்புகளை – பகுதியில் பார்த்தோம். தமிழ் நாட்டில் சாதாரண மக்களும் இவற்றைப் பற்றி அறிந்திருந்தனர். இவற்றைப் பற்றிய விவரங்களிலிருந்து இவை இயற்கையில் இருக்கும் சில சக்திகள் என்பது புலனாகிறது.
உதாரணமாக பரிபாடலில் (8) ஒரு வர்ணனை வருகிறது. மதுரையில் ஒலிக்கும் முரசொலி, முருகன் எழுந்தருளி இருக்கும் திருப்பரங்குன்றத்தில் எதிரொலிக்குமாம். முரசின் ஒலியானது, கடலிலிருந்து நீரைக் குடித்த மேகம் எழுப்பும் ஒலியைப் போல, இந்திரனது இடியைப் போல ஒலித்தது என்கிறது பரிபாடல்.
மேகத்தில் எழும்பும் இடியை இந்திரனது வஜ்ராயுதம் என்று ஆங்காங்கே சொல்லி இருக்கிறார்கள்.
அப்படி இடிக்கும் போது மின்னல் பளீரெனத் தெரிகிறது. அந்த மின்னல், இடி ஒசையுடனும், சில நேரங்களில் இடி விழுந்தும் நாசம் செய்கிறது. அந்த மின்னல் பயத்தைக் கொடுக்கிறது. எனவே மின்னலை இந்திரனது மற்றொரு ஆயுதமான இந்திர வில் என்றிருக்கின்றனர். சேர நாட்டு மக்கள் அந்த வில்லுக்குத் தான் பயந்திருக்கின்றனர், பகைவர் வில்லுக்கு அவர்கள் பயந்ததில்லை, ஏனென்றால் அவர்களுக்குப் பகைவர் தொந்திரவு இருந்ததில்லை என்று புறநானூறு (20) கூறுகிறது.
அந்த இந்திரனைக் “கரியவன்” என்கிறது மணிமேகலை (25- 55). மேகத்தின் நிறம் கருமை நிறம். அந்த மேகத்தை இந்திரனாக உருவகப்படுத்தி உள்ளனர். வேதம், புராணம் மற்றும் தமிழ் நூல்களிலும் அப்படி ஒரு உருவகமே வந்துள்ளது. ஆரியப் படையெடுப்பைச் சொல்வதாகக் கூறும் ரிக் வேத வரிகளில் இந்திரன் கருமையை விரட்டுபவன் என்று வருகிறது. அதாவது இந்திரன் வந்தான் என்றால் அங்கே இடி, மின்னல், மழை இருக்கும். இந்திரனே கரிய மேகம் என்பதன் உருவகம். அவனது ஆயுதங்களான இடியும் (வஜ்ராயுதம்) மின்னலும் (வில்) முழங்கினால், கரு மேகங்கள் மழையைப் பெய்விக்கின்றன என்று அர்த்தம். மழை பெய்யப் பெய்ய, கரு மேகம் சிதறுகிறது. கருமை சிதறுகிறது. இந்திரன் கருப்பர்களைச் சிதறச் செய்தான் என்று வரும் ரிக் வரிகள் இந்த இயற்கை சூழ்நிலையை எடுத்துக் காட்டுகிறது.
இந்திரன் ஆரிய நண்பர்களுடைய நிறத்தைக் காப்பாற்றினான், தன் வெண்ணிற நண்பர்களுடைய வயல்வெளியை, சூரிய ஒளியினாலும், தண்ணீரினாலும் காப்பாறினான் என்று ரிக் வேதம் கூறுகிறது. இங்கு மழையினால் வயல்வெளிகளது நிலை எப்படி இருக்கிறது என்று காட்டுகிறது. மழை இல்லாக் காலத்திலும், இந்திரன் தந்த மழை நீர் நிலத்தடி நீராக உதவுகிறது என்று இந்த வரிகள் தெரிவிக்கின்றன.
மழைக்கு அதிபனாக இந்திரன் இருக்கவே, எங்கெல்லாம் மக்கள் மழையை நம்பி உள்ளனரோ அங்கெல்லாம் இந்திரன் கடவுளாகப் பார்க்கப்பட்டான். அங்கு இந்திரனுக்கு விழா உண்டு.