புகார் நகரத்தின் பழமையைப் பற்றிய குறிப்புகள், ஐம் பெரும் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையில் வருகிறது.
மணிமேகலையின் பதிகச் செய்யுள் புகார் நகரைப் பற்றியே ஆரம்பிக்கிறது.முதல் 32 வரிகளில், புகாரின் தொன்மை விளக்கப்படுகிறது. முதலில் 'தீவத் தெய்வம்' என்னும் தெய்வத்தைப் பற்றிய விவரம் வருகிறது. தீவத் தெய்வம் என்றால் தீவின் தெய்வம் என்று பொருள். இங்கு எங்கே தீவு இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. இங்கு சொல்லப்படும் தீவு, நாவலம் தீவு!
நாவலம் தீவு என்பது மேரு மலைக்குத் தெற்கில் உள்ளது என்று புராணங்கள் முதலான பல வடமொழி நூல்களிலும் சொல்லப்பட்டுள்ளது. அதே விவரம், மணிமேகலையின் பதிகத்திலும் சொல்லப்படுகிறது . அது மட்டுமல்ல நாவலம் தீவைக் காக்கும் தெய்வமாக ஒரு தெய்வம் புகார் நகரில் கோயில் கொண்ட கதையையும் அது சொல்கிறது. அப்படிச் சொல்லி வரும் போது மற்றொரு முக்கியக் குறிப்பையும் சொல்லி, புகார் நகரின் தொன்மையை விளக்குகிறது. அவை என்ன என்று பார்ப்போம்.
மேரு மலைக்குத் தென் புறம் உள்ள நாவலம் தீவில், அந்நாளில் மாநில மடந்தைக்கு அசுரர்களால் துன்பம் ஏற்படுகிறது. அந்த அசுரர்களுக்கு அச்சம் உண்டாக்கி, அவர்களை விரட்டி அடிக்க, மேரு மலையிலிருந்து ஒரு பெண் தெய்வம் வந்தது. அந்தத் தெய்வம் சம்பு மரத்தின் அடியில் அமர்ந்து தவம் செய்து ஆற்றலைப் பெறுகிறது. சம்பு மரத்தடியில் தவம் செய்யவே அந்தத் தெய்வம் சம்பு என்ற பெயர் பெற்றாள். அசுரர்களை விரட்ட அவள் கோயில் கொண்டு அமர்ந்த பதியே 'சம்பாபதி' என்ற பெயர் பெற்றது. அதுவே புகார் நகரத்தின் ஆதிகாலப் பெயர் என்று துவங்குகிறது மணிமேகலை. இன்னும் சொல்லப்படும் விவரங்களைப் பார்பதற்கு முன், இது வரை வந்த விவரங்களைப் பார்ப்போம்.
முதலில் மேரு என்றால் என்ன? அது எங்குள்ளது? இந்த விவரங்கள், சரித்திரம் மறந்த நம் நாட்டவர்களுக்குத் தெரியாததால், மணிமேகலை போன்ற பழம் நூல்கள் அவற்றைப் பற்றிச் சொல்லும் போது, ஏதோ கற்பனை, கட்டுக்கதை என்றெல்லாம் அலட்சியப்படுத்தி வந்துள்ளனர்.ஆனால் மேரு மலை பற்றிய குறிப்புகளில் பல அறிவியல் உண்மைகள் புதைத்துள்ளன.
முதலில் மேரு எங்குள்ளது என்று பார்ப்போம். மேரு என்பதை மந்திர மலை என்றும் கூறுவது உண்டு. இந்த மேரு மலையை அச்சாகக் கொண்டு, வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக் கொண்டு, தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தார்கள் என்பது மிகப் பிரபலமான கதை.
சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையில் இந்தக் கதையைக் காண்கிறோம். பரிபாடலிலும் ஆங்காங்கே இந்தக் கதை வருகிறது. இப்படிக் கடைந்ததனால் லக்ஷ்மியும், இன்ன பிற செல்வங்களும், அமிர்தமும்,வந்தன. மேருவின் சிகரத்தை சப்த ரிஷி மண்டலம் சுற்றி வருகிறது. தேவர்களுக்குப் பகல் பொழுது வரும் போது, சூரியன் எந்நேரமும் அந்த சிகரத்தில் தெரிவான் என்று இந்தக் கதை கூறுகிறது.
மேரு என்பது பூமி சுழலும் அச்சு என்கிறது சூரிய சித்தாந்தம் என்னும் நூல். இந்த அச்சின் வடக்கு முனை மேருவின் சிகரம் ஆகும். ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இந்தியாவின் விண்வெளி அறிவில் முன்னோடியாக இருந்த பாஸ்கரரும், இலங்கை, உஜ்ஜயனி, குருக்ஷேத்ரம் ஆகிய இடங்களை ஒரு கோட்டினால் இணைத்தால் அது முடியும் வட துருவப் பகுதி மேருவின் சிகரத்தைக் குறிக்கும் என்று கூறியுள்ளார்.
அந்த மேருவைப் பற்றிய கதை ஒரு உருவகமாக உள்ளது. பூமி தனது அச்சில் இடை விடாமல் சுழன்று கொண்டிருக்கிறது. அதனால், பகலும், இரவும் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. அதாவது ஒளியும் இருட்டும், மாறி மாறி இந்தப் பூமியை இழுப்பது போல காட்சி அளிக்கிறது.
ஒளியை தேவர்களுக்கும் , இருளை அசுரர்களுக்கும் உருவகப் படுத்துவர். தேவன் என்னும் சொல்லே 'திவ்' என்னும் வட மொழிச் சொல்லிலிருந்து உருவானது. 'திவ்' என்றால் ஒளி என்று பொருள்.
ஒளி பொருந்தியவன் எவனோ அவன் தேவன் எனப்படுவான்.
அல்லது எது ஒளி மயமானதோ அது தேவனுக்கு உருவகமாகும்.
சூரியன் ஒளி பொருந்தியது. சூரியன் என்ற சொல்லிலிருந்து 'சுரா' அல்லது 'சுரன்' என்ற சொல் உண்டாகிறது. எனவே ஒளி பொருந்தியதை 'சுரன்' என்றனர்.
பூமியின் அச்சை மையமாகக் கொண்டு பகலும், இரவும் மாறி மாறி உலகை இழுக்கும் முறையை, மேரு மலையை அச்சாகக் கொண்டு தேவர்களும், (சுரர்களும்), அசுரர்களும் இழுத்தனர் என்று உருவகப் படுத்தப்பட்டது. இதனால், பூமியின் உள்ளே உருகிய நிலையில் இருக்கும், கனிமங்கள், எரிமலைக் குழம்பு போன்றவை அவ்வபொழுது வெளியாகின்றன. அவற்றிலிருந்து விலையுயர்ந்த ரத்தினம் முதல், நாம் உபயோகிக்கும் பல பொருட்களுக்கு ஆதாரமான தாதுப் பொருட்கள் வரை எல்லாம் கிடைக்கின்றன. இவையே பாற்கடலைக் கடைந்தால் கிடைத்த செல்வம் எனப்பட்டது. இதுவே மேரு மலையைப் பற்றிய கதையின் தாத்பரியம்.
எந்நேரமும் கடைதலால் பூமிக்குள்ளிலிருந்து வந்து கொண்டிருக்கும் உள்-பூமியின் திரவக் குழம்பு. அட்லாண்டிக் கடலின் அடியில் இப்படித் தென்படுகிறது.
இந்தத் தாத்பரியம் பல விதங்களிலும் உருவகப்படுத்தப்பட்டுள்ளது. ஒளி என்பது உயர்ந்த சிந்தனைக்கும், இருள் என்பது கீழ்த்தரமான சிந்தனைக்கும் உருவகமாகிறது. ஒளி நல்லவற்றுக்கும், இருள் கெட்டவற்றுக்கும் உருவகமாகிறது. அந்த அடிப்படையில், மக்களையும் உருவகப்படுத்தினர். பூமியின் பூமத்திய ரேகைக்கு வடக்கே உள்ளவர்கள் தேவர்கள் (சுரர்கள்) என்றும் தெற்கே உள்ளவர்கள் அசுரர்கள் என்றும் வகைப் படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்குள்ளே ஒற்றுமை இருந்ததில்லை. ஒளிக்கும், இருளுக்கும் பகைமை இருப்பது போல, இவர்களுக்குள் பகைமை இருந்திருக்கின்றது.
அசுரர்களுக்கு அருகாமையில், அமைந்த நிலப்பகுதி, நாவலம் தீவின் தென் பகுதி ஆகும். அதனால் சம்புத் தெய்வம் நாவலம் தீவின் தென் புறம் வந்து, தென் திசை நோக்கி அமர்ந்து, அந்தப் பகுதிக்கே காவல் தெய்வமாக விளங்கி இருக்கிறது.
இனி சம்பு என்றால் என்ன என்று பார்ப்போம். சம்புத் தீவு என்பதை நாவலம் தீவு என்றும் அழைத்தனர்.
ஜம்பு என்றாலும், நாவல் என்றாலும், நாகப்பழ மரத்தைக் குறிக்கும்.
நாவல் மரங்கள் அதிகம் காணப்பட்டதால் இந்தப் பகுதிக்கு நாவலம் தீவு அல்லது, ஜம்புத் தீவு என்ற பெயர் வந்தது. ஜம்பு என்பதே தமிழில் சம்பு என்றானது. மணிமேகலையில் சம்பு மரம் என்றும் சம்புத் தீவு என்றும் குறிக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும்.
தென் மொழியான தமிழ் மொழியும், வடமொழியும் கலந்து அந்த நாளில் இருந்து வந்ததை இது காட்டுகிறது.
சம்பு என்ற பெயராலேயே சம்பாபதி என்ற பெயரை புகார் நகரம் முதலில் பெற்றிருக்கிறது. அது இருந்த இடம் சம்புத் தீவு அல்லது நாவலம் தீவு என்னும் பெரும் நிலப்பகுதி ஆகும்.
எந்த வழிபாட்டிலும் முதலில் சொல்லபப்டும் சங்கல்ப மந்திரத்தில், ஜம்புத் தீவில் உள்ள, பாரத வர்ஷத்தில் உள்ள, பாரதம் என்னும் கண்டத்தில் நாம் இருக்கிறோம் என்றே வருகிறது. சம்புத் தீவு என்று பெயரே தமிழிலும் ஆதி நாளில் புழக்கத்தில் இருந்திருக்கிறது. ஆனால் சிலப்பதிகாரம் எழுந்த கி-பி-இரண்டாம் நூற்றாண்டில் நாவலம் தீவுஎன்ற பெயர் மக்களிடையே வழங்கி வந்திருக்கிறது. உதாரணமாக, சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவையில் நாவலம் தீவின் மன்னர்கள் பாண்டியனது ஏவலைக் கேட்டு இருந்தனர் என்று வருகிறது.
அதுபோல, சேர மன்னன் செங்குட்டுவன் கண்ணகி சிலைக்குக் கல் கொண்டு வர இமய மலைக்குப் பயணம் கிளம்பிய போது, 'இந்த நாவலம் தீவில் உள்ள பிற நாட்டு அரசர்களின் ஒற்றர்கள் நம் நாட்டு அரண்மனையைச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் காதில் விழும் வண்ணம், நாம் வட நாட்டுக்குப் பயணம் செய்வதை முரசு அறிவித்துச் சொல்லவும். அவர்கள் தங்கள் நாட்டு மன்னர்களிடம் நமது வட நாட்டுப் படையெடுப்புப் பற்றித் தெரிவிக்கட்டும்' என்கிறான். எனவே நாவலம் தீவு என்பது நாம் இருக்கும் இந்தியத் துணைக் கண்டம் முழுவதையும் உள்ளடக்கியது என்பதைத் தமிழ் நூல்கள் வாயிலாகவும் தெரிந்து கொள்கிறோம்.
நாவலம் தீவில் உள்ள சம்பாபதியில் சம்புத் தெய்வம் குடி கொண்டுள்ளது என்று மணிமேகலை கூறுகிறது.
இங்கே நாம் முன்னமே கண்ட நாளங்காடி பூதம் பற்றிய செய்தியையும் தொடர்பு படுத்தலாம். (பகுதி 11) . நாளங்காடிப் பூதம் என்னும் தெய்வம், சோழர்குல முன்னோனானமுசுகுந்தச் சக்கரவர்த்திக்கு அசுரர்களை விரட்ட உதவி செய்தது. அந்தப் பூதத்தை இந்திரனிடமிருந்து பெற்ற அந்த அரசன், புகார் நகரத்தில் அதனை நிலை நிறுத்தினான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது என்று பார்த்தோம். அதே புகார் நகரில், அசுரர்களிடமிருந்து காக்க சம்புத் தேவியும் குடி கொண்டனள் என்ற செய்தி முக்கியத்துவம் வாய்ந்தது.
இவர்கள் யாரைக் காக்க வேண்டும்?
அங்கு மக்கள் குடி இருந்திருந்தால, அவர்களை அசுரர்கள் தாக்குதலிலிருந்து காக்க சம்பு தேவியும் அங்கு கோயில் கொண்டிருப்பாள். அப்படி அவள் கோயில் கொண்ட காலம் எது வென்று தெரிந்தால், அப்பொழுதிலிருந்தே மக்களும் அங்குக் குடி இருந்திருக்கின்றனர் என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.
அந்தக் கால நிர்ணயத்தை, மணிமேகலையின் பதிகச் செய்யுள் சொல்கிறது.
ஒரு சமயம் சம்பாபதியை காந்தமன் என்னும் சோழ மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஒரு ஆசை எழுந்தது. தன்னுடைய நாட்டின் நீர் வளத்தை அதிகப்படுத்த விரும்பி, அகத்திய முனிவரிடத்தில் இருந்த காவேரியைத் தன் நாட்டுக்குக் கொண்டு வர விரும்பினான். அதன்படி அவன் அகத்தியரை வேண்டிக் கொள்ள, அவர் தன் நீர்க் கரகத்தைக் குடகு மலையில் கவிழ்க்க அதிலிருந்து 'காவேரிப் பாவை' ஆறாகப் பெருக்கெடுத்து ஓடலானாள். அவள் நேர்க் கிழக்கு திசை நோக்கி ஓடி, சம்பாபதி நகரத்தை அடைந்தது. அங்கே இருந்த கடலில் கலந்தாள்.
சம்பாபதியில் குடி இருந்த அந்த 'அருந்தவ முதியோள்" எனப்படும் சம்புத் தெய்வம், காவேரியைக் கண்டு மிகவும் மகிழ்கிறாள். அவளை "ஆகாய கங்கை" என்று விளித்து, சோழனுக்கும், அவன் குடி மக்களுக்கும் இருந்த நீண்ட நாள் அவாவினைத் தீர்த்தவளே வருக, வருக என்று வரவேற்கிறாள்.
குடகிலிருந்து காவேரியைப் பின் தொடர்ந்து அகத்திய முனிவரும் வந்து கொண்டிருந்தார். அவர் சம்பாபதி தேவியின் வரவேற்பைக் கண்டவுடன், மகிழ்ந்து காவேரியிடம் அந்த முது பெரும் தெய்வத்தை வணங்கச் சொல்கிறார். பிறகு காவேரியின் பெருமையைக் கூறுகிறார். அதுவும் எப்படிக் கூறுகிறார்?
"பாடல் சால் சிறப்பிற் பரதத் தோங்கிய கோடாச் செங்கோற் சோழர்தங் குலக்கொடி" என்கிறார்.
தமிழனையும், தமிழகத்தையும், பாரத நாட்டிலிருந்து பிரித்துப் பேசும் திராவிடவாதிகள் கவனிக்க வேண்டியது இங்கு உள்ளது. பலரால் பாடப்பட்ட சிறப்பை உடைய பாரத நன்னாட்டில் உயர்ந்து விளங்கிய, சிறந்த செங்கோன்மையுடன் விளங்கும் சோழர்கள் - அவர்களது குலப் பெருமையாக விளங்குபவள் காவேரி என்கிறார்.
நாவலம் தீவில் உள்ள பாரதத்தில் உள்ள சம்பாபதி என்பதால், பாரதத்தை ஒட்டித்தான் தமிழ்க் குடிகள் இருந்திருக்கின்றனர் எனபதற்கு இது ஒரு சான்று.
மேலும் அகத்தியனார் காவேரியைப் பலவாறாகப் புகழ்கிறார். எந்த ஜோதிடத்தைத் திராவிடவாதிகள் வெறுக்கிறார்களோ, அல்லது வெறுப்பது போல பாவனை செய்கிறார்களோ, அந்த ஜோதிடக் கருத்தை வலியுறுத்திகிறார். கோள்கள் நிலை திரிந்து, அதனால் கோடைக் காலம் நீடித்தாலும், தன் நிலை திரியாமல், தண்ணீர் தருபவள் இந்தக் காவேரி என்கிறார்.
இதை எல்லாம் கேட்ட சம்பாதேவி மகிழ்ந்து ஒரு முக்கியக் கருத்தைச் சொல்கிறாள். தாமரைப் பூவில் அமர்ந்திருக்கும் நான்முகப் பிரம்மன் 'தெய்வக் கருவையும், திசைக் கருவையும்' என்றைக்கு உருவாக்கினானோ, அன்றிலிருந்தே இருப்பது இம்மூதூர். இது என்பெயரால், சம்பாபதி என்று அழைக்கப்பட்டது. இனிமேல், உன் பெயராலேயும், "காவேரிப் பூம் பட்டினம்" என்று அழைக்கப்படும் என்கிறாள்.
" என் பெயர்ப் படுத்த இவ்விரும் பெயர் மூதூர்
நின் பெயர்ப் படுத்தேன் நீ வாழி'
என்று காவேரிக்குப் பெருமை சேர்கிறாள்.
பிற்காலத்தில் காவேரிப் பூம் பட்டினம் என்ற பெயரும் மருவி, காவேரி கடலுக்குள் புகுவதால், புகார் என்ற பெயரை அடைந்தது.
இங்கு சம்பாதேவி சொல்வதில், தெய்வக் கரு, திசைக் கரு என்பதெல்லாம், நிலப்பரப்பு தோன்றி, ஆங்காங்கே தெய்வ சக்திகள் நிலை பெற்ற ஆதி காலத்தைச் சொல்கிறது. மனிதன் புழங்க ஆரம்பித்த நாளிலேயே, அவனுக்குக் காக்கும் கடவுளாக, இந்த சம்பா தேவியும், புகாரில் குடி கொண்டிருக்கிறாள்.
அப்பொழுது அந்த நிலத்தில் காவேரி பாயவில்லை!
அதாவது காவேரி என்னும் ஒரு நதி குடகு மலையில் புறப்பட ஆரம்பித்ததற்கு முன்பே புகார் நகரம் இருந்திருக்கின்றது .
காவேரியை வரவழைத்த அரசனைப் பற்றி இந்தப் பதிகம் சொல்கிறது. அது உண்மையே என்று மெய்ப்பிக்கும் வண்ணம், திருவாலங்காட்டுச் செப்பேடுகளில், ஒரு சோழ மன்னன் காவேரியைக் கொண்டு வந்தான் என்று சொல்லப்பட்டதை, பகுதி 11 -இல் பார்த்தோம்.
செப்பேடுகளில் அந்த மன்னன் பெயர் 'சித்ரதன்வன்' என்று வருகிறது. மணிமேகலையில், 'காந்தமன்' என்று வருகிறது. இரண்டுமே ஒரே அரசனது பெயராகத்தான் இருக்க வேண்டும். செப்பேடுகளில், ஒரு விசேஷக் குறிப்புடன் இந்த மன்னனைப் பற்றி வருகிறது. அதாவது பாகீரதன் தவம் செய்து, கங்கையைக் கொண்டு வந்தான் என்று கேள்விப்பட்ட இந்த மன்னன், தானும் அப்படிப்பட்ட உயர்ந்த செயலைச் செய்து புகழ் ஈட்ட வேண்டும் என்று விரும்பி காவேரிக் கன்னியைத் தன் நாட்டுக்குக் கொண்டு வந்தான் என்று செப்பேடுகள் தெரிவிக்கின்றன.
காவேரியைக் கொண்டு வந்த இந்த மன்னன் காலத்துக்குப் பிறகு த்ரேதா யுகம் முடிந்தது என்று செப்பேடுகள் சொல்வது கவனிக்கத்தக்கது. பகுதி 15 -இல் லௌகீக யுகம் அதாவது மானுட வாழ்க்கைக்கு உகந்த சப்த ரிஷி யுகம் பற்றிய விவரங்களைக் கண்டோம். அதன்படி ஏறத்தாழ கி-மு 11, 700 இல் ஆரம்பித்து கி-மு 7,300 வரை த்ரேதா யுகம் யுகம் நடந்தது என்று அறிகிறோம். அதாவது இன்றைக்கு 13,000 ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து 9,000 ஆண்டுகள் வரை த்ரேதாயுகம் இருந்தது.
அந்தக் காலக் கட்டத்தில்தான் கங்கையும் உற்பத்தி ஆகி இருக்க வேண்டும்.
பாகீரதனைப் பற்றி இந்தச் சோழ மன்னன் நினைவு கூர்ந்ததைக் கவனிக்க வேண்டும். மேலும் பாகீரதன் பரம்பரையும், சோழன் பரம்பரையும் ஒன்றே என்பதை நாம் நினைவு கூற வேண்டும். இந்தத் த்ரேதா யுகக் காலக் கட்டத்தின் ஆரம்பத்திலேயே, அதாவது 13,000 ஆண்டுகளுக்கு முன்னால் பனி யுகம் முடிந்த வேகத்தில், பல ஆறுகள் உண்டாகி இருக்கின்றன. அப்படி கங்கையும் உண்டாகி இருக்கின்றது. அதை முன்னோடியாக கொண்ட சோழ மன்னன் தன் நாட்டுக்கும் ஒரு நதியைக் கொண்டு வர விரும்பினான். ஆனால் அவன் ஆண்ட தென் பகுதியில் பனிக் கரு கிடையாது.
அங்கே குடகு மலையில் குடத்திலிட்ட விளக்காக இருந்தது காவேரிதான். இன்றும் அந்த மலைக்குச் சென்று பாருங்கள். பிரம்ம கிரி எனப்படும் அந்தச் சிகரத்தில் குடம் போல ஒரு பெரும்பாறை இருக்கிறது. அதன் வாய் போன்ற ஒரு பெரும் துவாரம் இருக்கிறது. அதற்குள் காவேரி ஊற்றி நீராகத்தான் சுரந்து கொண்டிருக்கிறாள்!
காவேரியின் உற்பத்தி ஸ்தானத்தில் அவள் ஆறாக இல்லை.
குடம் அல்லது கமண்டலத்துக்குள் இருக்கும் நீர் போலத்தான் அதற்குள் நிறைந்து இருக்கிறாள்.
காவேரியின் உற்பத்தி ஸ்தானம் - பிரம்ம கிரி சிகரம்.
குளம் போன்ற இந்த இடத்தில் இருக்கும் சிறிய மண்டபத்தினுள்
காவேரி உண்டாகிறாள்.
அகத்திய முனிவர் அந்த மலையைத் தன் இருப்பிடமாகக் கொண்டிருந்தார். மகாபாரதத்தில் அகத்தியர் பற்றிய வர்ணனைகளில், அவர் பிரம்மகிரி மலைச் சிகரத்தில் இருப்பதாகத்தான் வருகிறது. இது இன்று கர்நாடகாவில் மேற்குத் தொடர்ச்சி மலையில், குடகு என்னும் இடத்தில் இருக்கிறது. அகத்தியர் பொதிகையில் வாழ்ந்தார் என்பது இதற்குப் பிறகே நடந்தது. அங்கு அவர் சென்றது தமிழ் நாட்டின் சரித்திரத்தில் ஒரு முக்கியத் திருப்பு முனை. அதை இந்த தொடரின் முக்கியத் தருணத்தில் பிறகு பார்ப்போம்.
இங்கு நாம் காவேரியின் தோற்றம் பற்றிப் பார்க்கலாம்.
இந்த சிறிய மண்டபத்துள் இருக்கும் துவாரத்திற்குள்
காவேரி ஊற்றாக வெளி வருகிறாள்.
கமண்டலத்துக்குள் இருப்பது போன்ற தோற்றத்துடன் இருக்கும் காவேரி சுமார் 3 கிலோமீட்டர் தூரம் அந்த மலைப் பாறைக்குள்ளேயே செல்கிறாள். அதன் பிறகு அதில் ஒரு துவாரத்திலிருந்து உடைத்தெடுத்து வெளியில் வருகிறாள். அங்கிருந்து அவள் ஆறாகப் பெருகி வருகிறாள்.
காவேரி பிறந்ததைப் பற்றி வழங்கி வரும் கதை இதன் உருவகம் போல் இருக்கிறது. காவேரி என்பவளை அகத்தியர் கமண்டலத்தில் அடைத்து வைத்ததாகவும், பிறகு விநாயகப் பெருமான், ஒரு காக்கையின் உரு வெடுத்து அந்தக் கமண்டலத்தைக் கவிழ்க்கவே காவேரி வெளிப்பட்டு ஆறாகி ஓடினாள் என்றும் ஒரு கதை வழங்குகிறது. செப்பேடுகளிலும், மணிமேகலையிலும் ஒரே விதமான விவரம் வரவே, காந்தமன் என்னும் சோழ அரசன், விநாயகப் பெருமானை வேண்டிக் கொள்ள, அகத்தியர் ஆசியுடன், கமண்டலம் போன்ற மலைப் பாறையில் துளை போட்டு, காவேரியை வெளிப்படச் செய்தான் என்று தெளிவாகிறது.
அவள் உயரமான மலையிலிருந்து வரவே, அவளை சம்பாதேவி 'ஆகாய கங்கை' என்றாள்.
கங்கை தோன்றின த்ரேதா யுகக் காலக் கட்டத்திலேயே காவேரியும் தோன்றி இருக்கிறாள் என்று செப்பேடுகள் தெரிவிக்கின்றன.
அது இன்றிலிருந்து 9,000 ஆண்டுகளுக்கு முன் எப்பொழுது வேண்டுமானாலும் இருக்கலாம்.
அதற்கு முன் - அதாவது இன்றிலிருந்து 11,500 ஆண்டுகளுக்கு முன் இருந்த புகார் நகரின் பகுதிகளைக் கடல் கொண்டுவிட்டது என்பதைச் சென்ற பகுதியில் பார்த்தோம். அந்தப் பகுதியில் மனித முயற்சியில் உருவாகியிருக்கக் கூடும் என்று நாம் நினைக்கத்தக்க அமைப்பு இன்று கடலுக்குள் மூழ்கிய நிலையில் இருக்கிறது. காவேரி நதியானது அந்த ஆண்டுக்கு முன்னும் தோன்றியிருக்கலாம், பின்னும் தோன்றி இருக்கலாம். ஆனால் அந்தக் காலக் கட்டத்தில் அங்கு மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
கடலுக்குள் தெரியும் அமைப்பை உண்டாக்கக்கூடிய அறிவுடைய மக்கள் அன்று இருந்திருப்பார்களா என்று கேட்டார்களே, அதே காலக் கட்டத்தில் மலையை உடைத்து காவேரி நதியைக் கொண்டு வந்திருக்கிறார்களே, அது மட்டும் சாதாரணச் செயலா?
கங்கையைக் கொண்டு வந்த பாகீரதனை இன்றும் பாரதம் நினைக்கிறது.
ஆனால், காவேரியைக் கொண்டு வந்த காந்தமனைப் பற்றி ஐம் பெரும் காப்பியத்தில் சொல்லப்பட்டும், ஏன் நம் மக்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டாடவில்லை?
இன்றைக்கு அறிவியல் மிகவும் வளர்ந்து விட்ட நிலையில், காவேரி போன்ற ஒரு ஆறு எத்தனை ஆண்டுகளாக இருந்திருக்கக்கூடும் என்று ஆராய்ச்சி செய்து சொல்ல முடியும். அப்படிப்பட்ட ஒரு ஆராய்ச்சி இன்று சிந்து சமவெளிப் பகுதியில் நடந்து கொண்டிருக்கிறது. அதில் தெரிந்து கொண்ட விவரம், சிந்து நதி அல்ல, சரஸ்வதி நதி தீரத்தில் மக்கள் வாழ்ந்த அடிச்சுவடுகளே அவை என்று தெரிய வந்திருக்கிறது.
நம் காவேரி நதியைப் பற்றி ஏன் நாம் ஆராயாமல் இருக்கிறோம்?
திராவிட மயக்கத்தில் சிக்காமல், இனியேனும் ஒரு மறத் தமிழன் இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளட்டும்.