தமிழ் நாட்டின் தென் பகுதியில் உள்ள புகார் நகரில் நடந்த இந்திர விழாவுக்கு, ஆரியர் துவன்ற பேரிசை இமயம் எனப்பட்ட இமய மலைப் பகுதியிலிருந்து ஒரு புதுமணத் தம்பதி வந்தனர். தேனிலவு போலத் தங்கள் நேரத்தை ஆடல், பாடல், விழா போன்றவற்றில் செலவழிக்க வந்தனர். அப்பொழுதுதான் பங்குனிப் பௌர்ணமியன்று காமன் விழாவைத் தங்கள் ஊரில் கொண்டாடியிருந்தனர். இன்றைக்கு வட நாட்டவர்களால் ஹோலிப் பண்டிகை என்று கொண்டாடப்படுகிறதே, அதுவே காமன் பண்டிகைஎனப்பட்டது.
அந்தப் பண்டிகை, பண்டைய தமிழ் நாட்டில், தெய்வத்தின் திருமண நாளாக - பங்குனி உத்திரத் திருநாளாக, எல்லாக் கோவில்களிலும் கொண்டாடப்பட்டது. திருவரங்கத்தில் அத்திருநாள் கொண்டாடப்பட்ட விதம்அகநானூறிலும் சொல்லப்படுகிறது. ஆரிய மூட நம்பிக்கை என்றோ, ஆரியப் பழக்கம் என்றோ இன்றைய திராவிடத் தலைவர்கள் சொல்ல முடியாதபடி, அத்திருநாள் பாவை நோன்பின் பலன் தரும் திருமண நாளாகவும் தமிழ் நிலத்தில் இருந்தது.
அந்தக் காமன் பண்டிகை நிறைவேறிய கையோடு , அதற்கடுத்த பௌர்ணமியில், அதாவது சித்திரா பௌர்ணமியில், இந்திர விழா நடந்தது. அதைக் காணத், தன் துணையுடன் வந்த அந்த இளைஞனை, இளங்கோவடிகள் விஞ்சை வீரன் என்கிறார். அவனது ஊர் வெள்ளி மலை என்று சொல்லப்படும் பனி படர்ந்த இமய மலைக்கும் அப்பால் உள்ள வட சேடி நாடு என்கிறார் அவர்.
இவ்விடத்தில் நாம் இது நடந்த காலம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். கண்ணகி கதை நடந்த சில வருடங்களிலேயே சிலப்பதிகாரம் எழுதப்பட்டது. அதன் காலம் பற்றி நிர்ணயிக்கப் பல சான்றுகள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியச் சான்று, பத்தினிக் கோட்டம் என்னும் கண்ணகி கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்த போது, அதில் கலந்து கொண்ட இலங்கை அரசன் ஒருவனைப் பற்றியது. அவன் கயவாகு என்னும் இலங்கை அரசன். அவன் கி-பி- இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையை ஆண்டவன் என்று இலங்கையின் சரித்திரத்தில் எழுதப்பட்டுள்ளது. எனவேகண்ணகியின் காலம், கி-பி- முதலாம் நூற்றாண்டின் இறுதி அல்லது, இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பம் எனலாம்.
கணணகி கதை நடந்து 1500 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டன. ஆனாலும் நாம் இன்னும் அதை நினைக்கிறோம். அதைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்கிறோம். அந்தப் பத்தினி தெய்வத்துக்கு இன்றும் கேரளாவில்,ஆட்டுக்கல் என்னும் இடத்தில் கோவில் இருக்கிறது. மதுரையை எரித்த பின் கண்ணகி சேர நாடு சென்ற வழியில் ஆட்டுக்கல்லில் தங்கினாள் என்று அங்கே கதை வழங்குகிறது. அங்கே பகவதி கோவில் என்று அவளுக்கு ஒரு கோவிலும் இருக்கிறது. இன்றும் அங்கே வருடாந்திர பொங்கல் திருவிழா நடக்கிறது. அப்பொழுது கண்ணகியின் கதை பாடலாகப் பாடப்படுகிறது. அந்தக் கோவிலின் கோபுரத்திலும், கண்ணகியின் வாழக்கையில் நடந்த சம்பவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றை எல்லாம் மிஞ்சும் வண்ணம், அங்கு பொங்கல் விழாவன்று, பெண்கள் மட்டுமே பங்கு கொண்டு, பொங்கலிட்டு அந்தப் பத்தினித் தெய்வத்தை வணங்குகின்றனர். அதிகப்படியாக பெண்கள் கூடும் பண்டிகை என்று அது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
1,500 ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழ் நாட்டில் நடந்த சம்பவம் நினைவில் இருக்கும் போது, அதற்கு 1,500 ஆண்டுகள் முன்னால் நடந்த, ஆங்கிலேயர்கள் கூறும் ஆரியப் படையெடுப்பு, அதனால் வீடிழந்து, நாடிழந்து திராவிடர்கள் தென்னிந்தியப் பகுதிகளுக்கு ஓடி வந்த மாபெரும் துக்க வரலாறு ஏன் அன்று நினைவில் இல்லை?
ஒரு 1,500 ஆண்டுகளில் தங்கள் முந்தைய சரித்திரத்தை மறந்து விட்டு, தங்களை விரட்டிய இந்திரனுக்கு, புகார்நகரில் விழா எடுக்கிறார்கள் என்றால் அது ஒத்துக் கொள்ளும்படியாக இருக்கிறதா?
அப்படி நடந்த விழாவுக்கு, இந்திரனுடன் நட்பு பாராட்டிய நாட்டு மக்கள் வந்து கலந்து கொண்டார்கள் என்றால், அங்கே முன் பகை இருந்திருக்க முடியுமா?
இந்திர விழா அந்த வட சேடி நாட்டவர்க்கு முக்கிய விழா. அதற்குக் காரணம் இருக்கிறது. முன்பொரு காலத்தில் வட சேடியை 'உபரிசர வஸு' என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனைப் பற்றிய கதையை புராணங்களிலும், இராமாயண, மகா பாரதத்திலும் காணலாம். அவன் இந்திரனுக்கு நண்பன். இந்திரன் அசுரர்களை வெல்ல, நாராயணன் அருளால் நான்முகப் பிரம்மனிடமிருந்து ஒரு கொடியைப் பெற்றிருந்தான். பிறகு அதைத் தன் நண்பனான உபரிசர வஸுவிடம் கொடுத்தான். உபரி சர வஸு தன் நாட்டில் அதை ஏற்றி மிக விமரிசையாக விழா எடுத்தான். அந்த விழா எடுக்கும் மன்னனைப் பகைவர்கள் வெல்ல முடியாது. அந்த நாட்டு மக்கள் சுகத்துடன் வாழ்வார்கள் என்று, இந்த விழா எடுக்கும் விதத்தை விரிவாக விளக்கும் வராக மிஹிரர் கூறுகிறார்.
வட சேடியில் கொண்டாடப்படும் இந்திர விழா, புகார் நகரில் நடக்கவே, அதைக் காண விரும்பி அந்த வித்யாதரத் தம்பதியினர் வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.
வட சேடி நாடு இன்று இருக்கிறதா என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அது இருந்த இடம கைலாய மலையில் உள்ள மானசரோவர் என்னும் ஏரிக்கு அப்பால் என்று வருணனைகள் உள்ளன. அதன் படி வட சேடி நாடு இன்றைய திபெத் நாட்டின் அருகே இருந்திருக்க வேண்டும். .
அந்த நாட்டு மக்கள் வித்யாதரர்கள் எனப்படுவர். சிலப்பதிகார உரை ஆசிரியரும், இந்த விஞ்சை வீரனை வித்யாதரன் என்கிறார். இவர்கள் இந்திரனுக்கு நண்பர்கள்!
இவர்கள் உயரமான மலைப் பகுதிகள் சஞ்சரிப்பவர்கள். அழகானவர்கள். வித்தைகளில் கற்றுத் தேர்ந்தவர்கள். அதனால்தான் வித்யாதரர் என்ற பெயரே அவர்களுக்கு ஏற்பட்டது. அவர்கள் நாட்டுப் பெண்கள் மிகவும் அழகானவர்கள். அவர்கள் ஜோடி சகிதமாக தென்னிந்தியாவின் மலைப் பகுதிகளிலும் ஆங்காங்கே சஞ்சரிப்பார்கள் என்று பல நூல்களில் வர்ணனை வருகிறது. அனுமன் மகேந்திர மலையிலிருந்து இலங்கைக்குத் தாவின போது அங்கிருந்த வித்யாதரர்கள் அதைப் பார்த்தனர் என்று ராமாயணத்தில் வர்ணனை வருகிறது. அந்த மலையின் பேரே மகேந்திர மலை! மகேந்தரன் என்பது தேவர்களுக்குத் தலைவனான இந்திரனுக்கு ஒரு பெயர். இந்த மலை இருப்பது தமிழ் நாட்டில்! எந்த அளவு இந்திரனைத் தமிழ் மக்கள் கொண்டாடியிருந்தால் இப்படியெல்லாம் பெயர் வந்திருக்கும்!
இந்திர விழாவுக்கு வந்த வித்யாதர இளைஞனைப் பார்ப்போம். அவன் தன் காதலியோடு வரும் பயண வழியை இளங்கோவடிகள் விவரிக்கிறார். புகார் நகரில் இந்திர விழா சிறப்பாக நடக்கும், பார்க்கலாம் வா என்று தன் காதலியை அழைத்துக் கொண்டு, இமய மலையைக் கடந்து, அங்கிருந்து கங்கை நதியை அடைந்து, பிறகு அங்கிருந்து உஜ்ஜயினி நாட்டைக் காட்டி, பிறகு விந்திய மலையைக் காட்டி, ஸ்ரீனிவாசப் பெருமான் எழுந்தருளியிருக்கும் திரு வேங்கட மலையைக்காட்டி பிறகு, காவேரி பாயும் சோழ நாட்டின்கண் புகார் நகரை வந்தடைந்தான் என்கிறார் இளங்கோவடிகள்.
இந்தியா முழுவதும் ஒரே கலாசாரம் இருந்திருக்கவே, இப்படி அவர்கள் வருகிறார்கள் என்றும் தெரிகிறது. அவன் வந்த வழி இப்படி இருந்தது. இன்றைய இந்தியாவே இந்தப் பயணத்தில் அடங்கி விட்டது.
வேங்கட மலையைக் கண்டு விட்டு, புகார் நகருக்கு வருகிறார்கள். அங்கு நடக்கும் இந்திர விழாவில் மாதவியின் ஆடலையும் பார்க்கலாம் என்று அந்த வித்யாதரன் தன் காதலியிடம் சொல்கிறான். அந்த மாதவி யார் என்றும் சொல்கிறான்.
ஒரு முறை இந்திரன் ஆளும் தேவ லோகத்தில், ஆடல் பாடல் நடக்கிறது.
நாரதர் வீணை வாசிக்க, உருப்பசி என்னும் ஊர்வசி நடனமாடுகிறாள். மிக அற்புதமாக நடக்கிறது நடனம். அதைக் காண தமிழ் முனியான அகத்தியரும் அங்கு இருக்கிறார். அப்பொழுது ஊர்வசி ஆட்டத்தில் மயங்கின, இந்திரன் மகனான ஜயந்தனும் ஆடல், பாடலில் கலந்து கொள்கிறான். அப்பொழுது ஊர்வசியும், ஜயந்தனும் ஒருவரை ஒருவர் பார்த்து லயிக்கின்றனர். அதில் காமக் குறிப்புகள் தென்பட்டன. இதைக் கண்ட நாரதர் அவர்களை சுய நினைவுக்குக் கொண்டு வர அபஸ்வரம் மீட்டுகிறார். இதையெல்லாம் அறியாத அகத்தியர், அந்த அபஸ்வரத்தில் வெகுண்டு அவர்கள் அனைவரையும் சபிக்கிறார். நாரதரது வீணை மணையாகப் பிறக்க வேண்டும்;
நடனத்தின் போது அந்த மணையில் தட்டப் பாடும் கோலாக ஜெயந்தன் பிறக்க வேண்டும்.
ஊர்வசி புகார் நகரின்கண் கணிகையாகப் பிறக்க வேண்டும் என்று சாபமிடுகிறார்.
அப்படிப் பிறந்த ஊர்வசி மாதவி எனப்பட்டாள்.
அவள் வம்சத்தில் பிறந்தவள்தான் சிலப்பதிகாரம் நடந்த காலக் கட்டத்தில் வாழ்ந்த மாதவி.
இந்தக் கதையை வித்யாதரன் தன் காதலிக்குச் சொல்லி, மாதவியின் நடனத்தைப் புகழ்கிறான். அதைப் பார்க்கலாம் என்று அழைத்து வருகிறான்.
இந்திர சபையில் ஊர்வசியின் நடனம் நடந்தது போல, புகார் நகரில் மாதவியின் நடனம் நடைபெற்றது. இது ஏதோ அந்த வித்யாதரன் சொன்ன கதை அல்ல. முன்னமேயே அரங்கேற்றுக் காதையில், இந்தக் கதையைச் சொல்லித்தான் இளங்கோவடிகள், மாதவியின் நடன அரங்கேற்றத்தை விவரிக்கிறார்.
இளங்கோவடிகளின் வாயிலாகவே, அவருக்குப் பின் அடியார்க்கு நல்லார் போன்ற உரை ஆசிரியர்கள் வாயிலாக, இந்திர சபையில் ஆடிய ஊர்வசியே, தமிழ் நாட்டில் மாதவியாகப் பிறந்தாள் என்று சொல்லப்படுகிறது. அவள் வம்சத்தில் கோவலன் மயங்கிய மாதவி பிறந்தாள் என்று சொல்லப்படுகிறது.
எந்த இந்திரன் திராவிடர்களை அடித்து விரட்டினா னோ அந்த இந்திரனது மகன், தலைக்கோல் என்று தமிழ் மரபிலும் வணங்கப்பட்டான். அந்த தலைக்கோலை வணங்கி விட்டுத்தான் மாதவி நடனத்தை ஆரம்பிக்கிறாள். இன்றும் பரதம் ஆடுவோர், அதைத் தெய்வமாக வணங்கி விட்டே நடனத்தை ஆரம்பிக்கின்றனர்.
பரத நாட்டியத்தின் கதை இப்படி இந்திரனது சம்பந்தம் பெற்றிருக்கையில், இளங்கோவடிகளும், அந்த மரபுகள் தமிழ் மண்ணில் இருந்தது என்று காட்டி, அவற்றைப் பற்றி விவரித்திருக்கையில், நம் திராவிட விரும்பிகள் என்ன செய்தார்கள்? பரத முனியின் நாட்டியம் என்றால், அது குறித்த ஆராய்ச்சி நமக்கு வேண்டாமாம். பரந்த நோக்கில் செய்யப்படும் அந்த ஆராய்ச்சிகளுக்குத் தரப்பட்ட நிலத்தையும் பிடுங்கிக்கொல்வார்களாம். ஏனென்றால் அது ஆரியப் பண்பாடாம். பரதம் ஆரியக் கலாசாரமாம்.
இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தில் காணப்படும் நடனம் குறித்த விவரங்கள் ஆரியத்தனம் அல்லவாம்.
அவை பச்சை திராவிடனின் கலாசாரமாம்.
அதனால், இளங்கோவடிகளது பெயரையும் சேர்த்து அந்த ஆராய்ச்சி மையத்தைத் துவக்கினால் அதற்கு ஆரியத்த் தீட்டு போய், திராவிட சுத்தம் வந்து விடுமாம்.
இப்படி ஒரு கேலிக் கூத்தாக இந்த நடன ஆராய்ச்சி மையத்துக்குப் பெயரிட்டு வைத்திருக்கிறார்கள்.
இந்திரன் மகனே தலைக்கோலாக இருக்க, இந்திர லோக ஊர்வசியே, மாதவியின் தலை மகளாகத் தமிழ் மண்ணில் பிறந்திருக்கும் போது - இளங்கோவடிகளே அதை விவரிக்கும் போது, எங்கே இருந்து வந்தது ஆரியத் தீட்டு?
இளங்கோ பெயர் இருந்தால், மாதவி இந்திர லோகத் தொடர்பு இழந்து விடுவாளா?
அல்லது இன்றும் வணங்கப்படும் தலைக் கோலாக ஒரு காலத்தில் இந்திரன் மகன் பிறந்தான் என்பது மூட நம்பிக்கை ஆகி விடுமா? அவை எல்லாம் மூட நம்பிக்கை என்றால், சிலப்பதிகாரம் முழுவதுமே மூட நம்பிக்கைதானே! எத்தனை கடவுள்கள், எத்தனை பூதங்கள் , எத்தனை விழாக்கள், எவ்வளவு பேரை தெய்வம் ஆவிர்ப்பித்துக் குறி சொல்கிறது, எத்தனை பூர்வ ஜன்மக் கதைகள் வருகின்றன சிலப்பதிகாரத்தில்! இவை எல்லாம் ஆரியத் தாக்கம் என்று இந்தத் திராவிடத் தலைவர்கள் சொல்வார்களா?
சிலப்பதிகாரம் மட்டுமல்ல, அந்த நூலையும் சேர்த்து, மாதவி பெற்ற மகளான மணிமேகலையைப் பற்றிய நூலும், தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் வைக்கப்பட்டுள்ளனவே? அவை எல்லாம் ஆரியம் பரப்பும் நூல்கள் என்று சொல்லலாமே?
சங்கத் தமிழில் ஆங்காங்கே இந்த ஆரியத்தனம்தானே காணப்படுகிறது?
அதன்படி தமிழன் கலாச்சாரமே ஆரியத் தனமானதுதானே? மூடத்தனமான, ஆரியத்தாக்கமான, தமிழை ஏன் இவர்கள் இன்னும் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். திராவிடம் எங்கே என்று கண்டு பிடித்து அங்கே போய், திராவிடத்தனமாக இருந்து கொள்ளட்டுமே?