நிறப் பெருமையில் ஆங்கிலேயர்களையும், ஐரோப்பியர்களையும் யாரும் அடித்துக் கொள்ள முடியாது. தாங்கள் உயர்ந்த இனம் என்ற எண்ணத்தைஅவர்களது வெள்ளை நிறம் தந்தது. அந்தக் காலக் கட்டத்தில் ஆப்பிரிக்கா முதல் அமெரிக்கா வரை அவர்களது காலனி ஆதிக்கம் அமோகமாக நடந்து கொண்டிருந்தது. மாறுபட்ட உருவ அமைப்பு, நிறம் கொண்ட மக்களைப் பார்க்கையில், அந்த உருவ, நிற அடிப்படியிலேயே மக்களை இனமாகப் பாகுபடுத்தத் தொடங்கினர். இதில் என்ன வினோதம் என்றால்,இனம் என்ற சொல்லே ஆங்கிலத்தில் இல்லை. இனம் என்றுபொருள்படும Race என்னும் ஆங்கிலச் சொல் 1580 -ஆம் ஆண்டுதான்ஆங்கில மொழியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தச் சொல் அராபிய மொழியிலிருந்து, இத்தாலிய மொழிக்கு வந்து பிறகு பிரெஞ்சு மொழியில் நுழைந்தது. அங்கிருந்து ஆங்கிலத்துக்கு வந்தது. இந்தச் சொல் 14- ஆம் நூற்ற்றண்டில்தான் மார்கோ போலோஅவர்களால் மக்கள் கூட்டத்தை இனம் காட்ட முதன் முதலில் உபயோகப்படுத்தப் பட்டது.
அந்தக் காலக் கட்டத்தில் ஐரோப்பியர்கள் கடல் வழியே உலகைச் சுற்ற ஆரம்பித்தனர். ஆங்காங்கே அவர்கள் பார்த்த மக்களைப் பற்றி தங்கள் ஊர் மக்களிடம் சொன்னார்கள். அந்த மக்களை வருணிக்கும் போது, அந்த ஊர்,அல்லது அவர்கள் பெயர் அல்லது அந்த மக்களிடம் காணப்பட்ட குறிப்பிட்ட அடையாளத்தைச் சொல்லி அந்த இனம் என்றனர். அப்படிஅவர்கள் முதலில் தங்கள் பேச்சில் சொன்ன இனம், 'பெர்ஷிய இனம்'(Persian race). மார்கோ போலோ அவர்கள், பெர்ஷிய மக்களை இப்படிக் குறிப்பிட்டார்.
முதலில் நாட்டை வைத்து இனம் என்றனர். நாளடைவில், மக்களது புறத்தோற்றத்தை வைத்து இனம் என்று பாகுபடுத்தினர். இதில் நிறம்,உருவம், முக அமைப்பு ஆகியவை முக்கியக் காரணிகளாக ஆயின. அந்த அடிப்படையில் சீனர்களை மங்கோலிய இனம் என்றனர். ஆப்பிரிக்காவில்இருந்தவர்களை நீக்ரோ இனம், கறுப்பர் இனம் என்றனர். கருமை என்னும் பொருள்படும நீக்ரோ என்ற சொல் ஸ்பானிஷ், போர்சுகீசிய மொழியிலிருந்து வந்தது. வெள்ளை நிறத்தவர்களான தங்களை 'காகசீய'இனம் என்று அழைத்துக் கொண்டார்கள்.
அந்த நாள் ஆங்கிலேயர் மற்றும் ஐரோப்பியர் கணிப்பில், உலகில் மொத்தம் மூன்று இன மக்களே உள்ளனர். ஏனென்றால் அப்படித்ததான் பைபிள் கூறுகிறது. நோவாவின் மூன்று மகன்கள் மூலம் மூன்று இன மக்கள் உண்டாக்கினர். அந்த மூன்று இன மக்கள் மங்கோலியர், நீக்ரோ,காகசீயர் ஆவர் என்பது அவர்கள் கருத்து. இதில் கறுப்பு என்பது அவர்களுக்குப் பிடிக்காத நிறம். இந்த நிற வேற்றுமையால் இவன் உயர்ந்த இனம், அவன் தாழ்ந்த இனம் என்று தங்கள் வசதிப்படி சொல்ல ஆரம்பித்தனர். இதனால் எத்தனையோ மக்கள் அடிமைப்பட்டும்,சிறுமைப்பட்டும் இருக்க வேண்டி வந்தது.
வைரமும், தங்கமும் நிறைந்த தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த கறுப்பர்களுக்கு தங்களிடமிருந்த சொத்தைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. அதைத் தெரிந்து கொண்டவன் ஆங்கிலேயன். அங்கிருந்த கறுப்பர் இன மக்களைத் தனக்கு அடிமையாக்கி, அவர்கள் சொத்தை அவர்களைக் கொண்டே எடுத்து, தான் வளமாக வாழ்ந்தவன் அவன். கறுப்பர்கள் அடிமைத் தொழில் செய்வதற்கே பிறந்தவர்கள் என்பது வெள்ளையர்கள் கருத்து. அமெரிக்காவிலும் இதை நடைமுறைப்படுத்தினர்.
வெள்ளையர்கள் முதலில் இந்தியாவுக்கு வந்த போது இந்தியர்களைப் பார்த்து ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. அவர்களுக்குத் தெரிந்த மூன்று இனங்களில் இந்தியர்களைச் சேர்க்க முடியவில்லை. இந்தியாவில் கறுப்பாகவும், மாநிறமாகவும் , வெளுப்பாகவும் என்று எல்லா விதத்திலும் மக்கள் இருந்தனர். முக அமைப்பும் அப்படியே. ஒரு இந்தியனிடம் காகசீய முக அமைப்பு என்று பார்த்தால், அவன் நிறம் கறுப்பாக இருக்கும். இப்படிப் புரிபடாத நேரத்தில்தான், ரிக் வேத மொழி பெயர்ப்பு அவர்களுக்கு புதுக் கருத்துக்களைக் கொடுத்தது.
வெள்ளை நிறம், கறுப்பு நிறத்தை வென்றது. ஆரியன் வென்றான், தஸ்யு அழிக்கப்பட்டான் போன்ற மொழி பெயர்ப்புக்கள், தங்களைப் போலவேஆரியர்களும் நிறம் சார்ந்த இனக் கொள்கை கொண்டவர்களாக இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தந்தது. அதே சமயம்,சம்ஸ்க்ருத மொழி ஆராய்ச்சியின் மூலம், ஐரோப்பிய மொழிகளுக்கும் சம்ஸ்க்ருதத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற எண்ணமும் வேரூன்றி இருந்தது. அதனால் தங்கள் மூல சரித்திரம் இங்குதான் எங்கோ இருக்க வேண்டும் என்று அவர்கள் தேடிக் கொண்டிருக்கையில், சிந்து சமவெளிப் பகுதியில் அகழ்வாராய்ச்சி முடிவுகளும் வந்தன. அவை ஒருகாலத்தில் அங்கு மக்கள் வாழ்ந்த அடையாளங்களைக் காட்டின. இவற்றைக் கொண்டு ஆரியக் கதை உருவாக்கினான்
ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது. சிந்து சமவெளிப் பகுதியில் காணப்பட்ட நாகரீகம் 5000 வருடங்களுக்கு முன் ஆரம்பித்தது என்று தெரிய வந்தது. ஆங்கிலேயர் பின்பற்றிய கிருஸ்துவ மதமும், 5000 ஆண்டுகளுக்கு முன்தான் மனிதன் தோன்றினான் என்று கூறுகிறது. இனப் பெருமை கொண்ட அவர்களால் சிந்து சமவெளி நாகரீகக் காலத்தை ஒதுக்க முடியவில்லை. ஆனால் அவ்வளவு வருடங்கள் முன்பே உயர்ந்த நாகரீகம் இந்தியாவில் இருந்தது என்பதை ஒத்துக் கொள்ளவும் முடியவில்லை. கி- மு- 5000 -இல் ஆரம்பித்த அந்த நாகரீகம் கி- மு-1500 - முடிந்தது என்று ஆராய்ச்சிகள் காட்டவே, அந்த நாகரீகம் எப்படி, ஏன் முடிந்தது என்பதற்கு ரிக் வேதத்தைத் துணை கொண்டான். ஆரிய- தஸ்யு சண்டையும், இந்திரன் கருப்பர்களை விரட்டியதும் நடந்த இடம் அந்த சிந்து சமவெளிப் பகுதிதான் என்று முடிவு கட்டினான்.
நிறம், மொழி ஆகிய இவையே முக்கிய கருத்துக்களாகக் கொள்ளப்பட்டன.வட இந்தியாவுக்கும், தென் இந்தியாவுக்கும் இந்த இரண்டு விஷயங்களில்வித்தியாசம் தெரிந்தது. நிறம் கொண்டவர்கள் வடக்கே, கறுப்பான மக்கள்தெற்கே;
ஐரோப்பிய மொழி சாயலில் சம்ஸ்க்ருதமும்,
அதன் கிளையாக ஹிந்தியும் வடக்கே, திராவிடம் என்று சொல்லப்படும் தமிழ் சார்ந்த மொழிகள் புழங்கியது தெற்கே என்று இருந்தது.
இதன் அடிப்படையில், ரிக் வேதத்தில் தான் கண்டு பிடித்த ஆரிய வெற்றியை மையமாக வைத்து, கி-மு- 1500 -இல் ஆரியர்கள் என்னும்வெள்ளைத் தோல் மக்கள் சிந்து சமவெளிப் பகுதிக்கு வந்தனர். அவர்கள்அங்கிருந்த சிந்து சமவெளி நாகரீக மக்களை வென்று விரட்டியடித்து விட்டனர். அவர்களால் விரட்டப் பட்டவர்கள் தென்னிந்தியாவில் குடியேறினர். அவர்கள்தான் திராவிடர்கள். அவர்கள் தமிழ் உள்ளிட்ட பிற தென்னிந்திய மொழிகளைப் பேசினார்கள். இதுதான் அவர்கள் உருவாக்கிய ஆரியப் படையெடுப்புக் கதை.
வெள்ளை நிறத்துடன் இந்திரனும், ஆரியர்களும் சம்பந்தப்படவே,அவர்களைத் தங்களுடன் (ஐரோப்பியர்களுடன் ) தொப்புள் கொடி தொடர்பு படுத்திக் கொண்டனர். தங்கள் முன்னோர்கள்தான் ஆரியர்கள் என்றுநினைத்து, நீங்களும், நாங்களும் ஒன்று. உங்களை ஆள வந்த நாங்கள் உங்களைக் காப்பாற்றவே வந்திருக்கிறோம் என்றெல்லாம் இந்தியர்களிடம் டைலாக் விட்டனர்.
இந்த நிறக் கொள்கையை இன்று சொல்லியிருந்தால் எடுபட்டிருக்காது. தோல் நிறம் பற்றி எத்தனையோ ஆராய்ச்சிகள் நடந்து விட்டன. அவை நிறம் என்பது இனத்துக்கு அடிப்படை அல்ல என்று தெரிவிக்கின்றன.
இந்தியா முழுவதும் ஒரே கலாச்சாரம் உள்ள மக்கள் வாழ்கின்றனர்.
ஆனால் அவர்களுக்குள் நிறத்தில் வேறுபாடு இருக்கிறது.
அதனால் அவர்களை வேறு வேறு இனத்தவர்கள் என்று சொல்லலாமா?
கூடாது என்கின்றன நிற ஆராய்ச்சிகள்.