ரிக் வேதத்தில் இந்திரனைப் பற்றி 250 பாடல்கள் உள்ளன. அதாவது நம்மிடையே உள்ள ரிக் வேதத்தில் கிட்டத்தட்ட கால் பங்கு இந்திரனைப் பற்றியது. 'நம்மிடையே உள்ள' என்று ஏன் சொல்கிறேன் என்றால், அநேக ஆயிரம் வேதங்கள் இருந்தன. பல் வேறு காலக் கட்டங்களில், பல முனிவர்கள் தங்கள் மோனத்தில் வேதத்தைக் கண்டு ஓதினர். ஆனால் அவை எல்லாமே இன்று இல்லை.
மகாபாரதப் போர் முடிந்த பிறகு, கிருஷ்ண த்வைபாயனர் என்னும் வியாசர் அவர்கள், வரப்போகும் கலி யுகத்துக்கு உதவக்கூடிய விஷயங்களை எல்லாம் தொகுக்கத் தொடங்கினார். அப்படி அவர் செய்த தொகுப்புகளில் ஒன்று வேதத் தொகுப்பு. அவர் வேதங்களை நான்காக வகைப்படுத்தினார். ரிக், யஜூர், சாம, அதர்வண என்னும் அந்த நான்கு வேதங்களும், அவை சொல்லப்பட்ட காலத்தால் வரிசைப் படுத்தப் படவில்லை. அதாவது வெவ்வேறு காலக் கட்டத்தில் சொல்லப்பட்ட வேதங்களை அவற்றில் காணலாம். அதனால் காலத்தால் ரிக் வேதம் முந்தியது, அதர்வண வேதம் பிந்தியது என்று சொல்ல முடியாது. வியாசர் அவர்கள் ஆங்காங்கே இருந்து எடுத்து தொகுத்திருக்கிறார் என்று தெரிகிறது. அதிலும் கலி யுகத்துக்கு என்று கொடுத்திருக்கிறார். அவற்றில் எவ்வளவு அழிந்து போனதோ நமக்குத் தெரியாது. வேதங்கள் வாய் வழியாகவே வந்திருக்கவே, அவற்றைச் சொல்பவர்கள் மறைந்த பிறகு, அவர்களிடமிருந்து யாரும் கற்றுக் கொள்ளாமல் இருந்திருந்தால் அவ்வளவுதான். அந்த வேதப் பகுதிகளை நாம் இழந்தவர்கள் ஆகிறோம்.
அதிலும் முஸ்லீம் படை எடுப்பின் போது வேதம் அறிந்தவர்கள் பெரிதும் அழிந்தனர். ராம் சரித மானஸ் என்று ராமாயணத்தை எளிய மக்களும் படிக்கும் வண்ணம் எழுதிய துளசி தாசர் அவர்கள், தன்னுடைய மற்றொரு படைப்பான 'துளசி சதகம்' என்னும் நூலில் அயோத்தியில் ராமர் பிறந்த இடம் அழிக்கப்பட்டதை விவரிக்கும் போது, பூணுல் அணிந்தவர்கள் எல்லாம் கொல்லப்பட்டனர். அப்படி கொல்லப்பட்டவர்களது மண்டை ஓடுகள் மலை மலையாகக் குவிக்கப்பட்டன என்கிறார். இதிலிருந்து, வேதம் பயின்றவர்கள் அன்று அதிக அளவில் இருந்தனர் என்று தெரிகிறது. ஆயிரம் வருடங்கள் ஓடிய முஸ்லீம் ஆதிக்கத்தில் வேதமும், வேதம் ஓதும் சூழ்நிலையும், அதை ஒதுபவர்களும் பெரிதும் அழிந்தனர்.
ஆனால் தமிழ் நாட்டில் எங்கும் வேத ஒலி கேட்டது என்று தெரிகிறது. பழந்தமிழ் நாட்டில் வேதமும், யாகமும், தெய்வ வழிபாடும் எங்கும் இருந்தன என்று சங்க நூல்கள் காட்டுகின்றன. கோவிலில் ஓதப்படும் வேத ஒலி கேட்டுத்தான் பாண்டியனும், மதுரை மக்களும் துயில் எழுவார்கள் என்றுபரிபாடல் கூறுகிறது. யாகங்கள் செய்வதற்குப் பெயர் போனவனாக இருந்ததால், பாண்டிய மன்ன ஒருவன் 'பல் யாக சாலை முது குடுமிப் பெருவழுதி' என்றே அழைக்கப்பட்டான். இமயத்தில் வேத ஒலி கேட்பது போல, பொதிகையிலும் வேதம் முழங்கியது. இப்படிப்பட்ட நிலை சென்ற நூற்றாண்டு வரை இருந்தது என்பதை, 'வேதம் நிறைந்த தமிழ் நாடு' என்றுமகா கவி பாரதியார் அவர்கள் சொல்வதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். நாத்திகம் பேசும் திராவிடத் தலைவர்கள் என்று தலை எடுத்தார்களோ, அப்பொழுதிலிருந்து நம் தமிழ் நாட்டில் வேதம் தேய்ந்து விட்டது.
மதம் சார்ந்த வேதத்தை, அது சொல்லும் கருத்தை மத ஞானிகள் வாயிலாகத் தெரிந்து கொள்ள வேண்டும். வேதத்தின் பயன்பாடு இந்து மதத்தவரான நமக்குத் தான் தெரியும், ஆனால் அதை சரித்திரப்புத்திரமாக மாற்றிய பெருமை மாக்ஸ் முல்லரையே சார்ந்தது. ரிக் வேதத்தைப் படித்து அதில் அடிக்கடி சொல்லப்பட்ட இந்திரனால் மாக்ஸ் முல்லர் கவரப்பட்டார். இந்திரன் வெள்ளையர்களான தங்களைப் போலவே இருக்கிறானே என்று புளகாங்கிதம் அடைந்தார்.
அவர் கண்டுபிடித்த சாம்பிள்கள் சில:-
இந்திரன் தஸ்யுக்களை அழித்து ஆரிய 'நிறத்தைக்' காப்பாற்றினார். (ரிக்-III -34-9)
இந்திரன் தன் வெள்ளை நண்பர்களுக்கு வயலையும், சூரியனையும், நீரையும் கொடுத்தான். (ரிக் - I-100-18)
புயல் போன்ற அந்தக் கடவுள்கள், கோபமான காளை மாடு போலப் பாய்ந்து, கருப்பு நிறத்தைச் சிதற அடித்தார்கள். (ரிக் - IX -73-5)
இந்திரன் ஆரியனுக்காக, மோசமானவர்களையும், கொடூரமானவர்களையும், ஒளி இழந்த நிறம் உடையவர்களையும் விரட்டி அடித்தான். கருப்பு நிறத்தை வெற்றி கொண்டதைப் பற்றி ரிக் -I-130-8 கூறுகிறது.
மோசமான தச்யுவின் நிறமான கருப்பு நிறத்தை இந்திரன் உள்ளிட்ட கடவுளர்கள் அழித்தனர். ரிக் - II-20- 7 & II-12-4
மூக்கில்லாத தஸ்யுக்களையும், கருமை நிற தஸ்யுக்களையும் இந்திரன் அழித்தான்.
இந்திரனுடைய நிறம் பொன் நிறம். அவன் கன்னம் பொன் நிறம் தலை பொன் நிறம்.
இந்திரனுடைய தாடி மஞ்சள் நிறம். அவன் நகம், முடி எல்லாம் மஞ்சள் நிறம்.
இடியை ஆயுதமாக உடைய அவன் வெள்ளை நிறத்தவர்களின்நண்பன்.
இப்படியெல்லாம் இந்திரனைக் கண்டு பிடித்து, அவன் தனது ஆரிய நண்பர்களுக்கு உதவ வேண்டி, கருமை நிற, மூக்கில்லாத (சப்பை மூக்கு என்று முல்லர் போன்றவர்கள் உருவகப் படுத்திக் கொண்டார்கள்) தஸ்யுக்களை அழித்தான் என்று முடிவு கட்டி, தச்யுக்களைத் தேட ஆரம்பித்தனர்.
தஸ்யு என்ற சொல் பிரயோகம் ரிக் வேதத்தில் வருகிறது. தஸராஜன என்று பத்து அரசர்களை வெல்லும் சுதஸ் என்னும் அரசனைப் பற்றியும், அந்த வெற்றிக்கு உதவிய இந்திரனைப் பற்றிய செய்தியும் ரிக் வேதத்தில் வருகிறது. இந்தக் கருத்துக்கள் உருப்பெற்று வரும் சமயத்தில்தான் 1920 களில் சிந்து நதிப் பகுதிகளில் மொஹஞ்சதாரோ, ஹரப்பா என்னும் இடங்களில் (தற் சமயம் பாகிஸ்தானில் உள்ளன) அகழ்வாராய்ச்சிகளில் புதையுண்ட நகரங்கள் இருப்பது தெரிய வந்தது.
ஆரிய- தச்யுக்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்த ஆங்கிலேயர், ஐரோப்பியருக்கு இது புதுத் தெம்பு அளித்தது. ரிக் வேதத்தில் தாங்கள் கண்டெடுத்த கதைகள் உண்மையாகவே நடந்த கதைகள்தான் என்றே இந்த புதையுண்ட நகரங்கள் தெரிவிக்கின்றன என்று நினைத்தார்கள்.
அதற்குப் பிறகு அவர்கள் கதை பின்ன அதிகம் கஷ்டப்படவில்லை. இந்தியாவில் யார் கருப்பாக இருக்கிறார்கள் என்று பார்த்தார்கள். தமிழன் மாட்டிக் கொண்டான்.
ஏற்கெனவே கால்ட்வெல் என்னும் மொழி ஆராய்ச்சியாளர் (இவரும் கிருஸ்துவ மிஷனரி தான்) 1856 ஆம் வருடம் "திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளது இலக்கணம் பற்றிய ஒப்பீடு" (Comparative grammar of the Dravidian or South-Indian family of languages) என்ற நூலை எழுதி இருந்தார்.இவர்தான் திராவிட என்னும் சொல்லை அறிமுகப் படுத்தினார். அது தமிழ் மொழியின் பெயராக இருக்கலாம் என்றும் கூறி இருந்தார். மொழியைப் பற்றியே சொன்னார் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தத் திராவிடன் ரிக் வேத ஆராய்ச்சியாளர்களுக்கு உதவிக்கு வந்தான். தஸ்யுக்கள் கருப்பு நிறத்தவர்கள். அவர்கள் மூக்கும் சப்பை. அவர்களை இந்திரன் உள்ளிட்ட ஆரியர்கள் வெற்றி கொண்டு விரட்டி விடவே, அவர்கள் அதுவரை வசித்து வந்த ஹரப்பா போன்ற இடங்களில் இருந்து தப்பி ஓடி தமிழ் நாட்டில் குடி ஏறி இருப்பான் என்று முடிவு கட்டினர். தஸ்யுக்கள் எப்படி திராவிடர்களாக ஆனார்கள் என்று அவர்களுக்குச் சொல்ல கால்ட்வெல் அப்பொழுது இல்லை. அவர் இல்லை என்றால் என்ன? மாக்ஸ் முல்லர் தன் மனைவிக்கு எழுதின கடிதத்தில் சொன்னாரே (இந்தத் தொடரின் பகுதி - 4) அது போல இந்தியர்களின ஆதார நூலை திரிக்க வேண்டும். ரிக் வேதத்தைத் திரித்து ஆரிய - தஸ்யுக்கள் சண்டையைக் காட்டியாகி விட்டது. இப்பொழுது திராவிடத்தின் துணை கொண்டு அதை, ஆரிய - திராவிட சண்டையாக மாற்ற வேண்டியதுதான் பாக்கி.
அதன் எதிரொலியே, 1929 -ஆம் ஆண்டு ஆங்கிலப் பிரதம மந்திரி பால்ட்வின் அவர்கள் அவர்கள் பார்லிமெண்டில் அறைகூவல் விடுத்தது. ( இந்தத் தொடரின் பகுதி -3). இந்தியர்களாகிய நீங்கள் ஆரியர்கள். ஆங்கிலேயரான நாங்களும் ஆரியர்கள். நாங்கள் நன்றாக இருக்கிறோம். நீங்கள் சீரழிந்திருக்கிறீர்கள். உங்களத் தூக்கி விடத் தான் நங்கள் வந்திருக்கிறோம் என்றார். இந்த வலை விரிப்பில் விழுந்தது தமிழ் பேசுபவர்கள்தான்.
இந்தியாவின் எந்த மொழியிலும் இல்லாமல், தமிழில் மட்டுமே ஏராளமான அளவில் இந்திய பாரம்பரியமும் , வேத மதமும் இருந்திருக்கின்றன.
அவற்றை எல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு , நீதி தேடுகிறோம் என்ற பெயரில் சுயநல அரசியல் செய்த சிலர் இந்த திராவிடத்தைப் பிடித்துக் கொண்டனர். முதல் முதலாக 'திராவிடர் சங்கம்' என்ற அமைப்பு 1912 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அது முதல் ஆரம்பித்தது, திராவிட அரசியல்!