ஆங்கிலேயர்களையும், அமெரிக்கர்களையும் பற்றி வேடிக்கையாக ஒன்று சொல்வார்கள். இருவருமே தங்கள் முன்னோர்களைப் பற்றித்தான் எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருப்பார்களாம். ஆனால் அதில் ஒரு வித்தியாசம் உண்டு. ஆங்கிலேயர்கள் தங்கள் முன்னோர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது பற்றியே பேசுவார்களாம். என் தாத்தா இப்படி வாழ்ந்தார், அவருக்குத் தாத்தா அப்படி வாழ்ந்தார் என்று பேசியே பொழுதைக் கழிப்பார்களாம்.
ஆனால் அமெரிக்கன் கதையே வேறு, என் தாத்தா யார், அவர் எங்கு வாழ்ந்தார், அவருக்குத் தாத்தா எப்படிப்பட்டவர் என்பதைத் தேடுவதிலேயே அவர்களுக்குப் பொழுது போய் விடுமாம். அதாவது அவர்களுக்குத் தங்கள் முன்னோர் யார், அவர்களது வம்சாவளி எது என்பதே தெரியாது.
ஆனால் இந்தியாவில் நமக்கெல்லாம் அந்த அவஸ்தை இல்லை. இன்றும் கூட கிராமப் புறங்களில் நம் மக்களிடம் உங்கள் பெயர் என்ன என்று கேட்டுப்பாருங்கள். இந்த ஊரைச் சேர்ந்த இன்னாருடைய மகன் இன்னானான என் பெயர் இது என்று ஒரு சிறு புராணமே பாடி விடுவார்கள். சங்கப் புலவர்கள் பெயரைப் பாருங்கள். அவர்கள் பெயரே ஊர் பெயரை ஒட்டியோ, அல்லது இன்னார் மகன் என்று தந்தை பெயரை ஒட்டியோ அல்லது செய்யும் தொழிலை ஒட்டியோதான் இருக்கும். தனி மனிதன் தன வம்சாவளியைத் தெரிந்து வைத்திருப்பது போல, நம் புராண, இதிகாசங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரை செல்லும் வம்சாவளியையும், சரித்திரத்தையும் சொல்கின்றன. அவை எல்லாம் சாதாரண மக்களுக்கும் தெரிந்திருந்தது. அந்தக் கதைகளைச் சொல்லித்தான் சோறு ஊட்டினார்கள், நல்லது கெட்டது பற்றிய பிரித்தறியும் சிந்தனையை வளர்த்தார்கள்.
ஆனால் இடையில் வந்த ஆங்கிலேயனும், ஐரோப்பியனும் தன் கதையைத் தேடி, நம் கதையில் கை வைத்து, அதைத் தன போக்கில் சொன்னதை நம்புவது முட்டாள்தனம். அதிலும் அவன் தேடினது என்ன? கண்டுபிடித்தது என்ன?
அவன் தேடினது, தங்களைப் போன்ற தம் முன்னோர்கள். அவர்களது உருவ அமைப்பு. அவர்களது முடியின் நிறம் கருப்பைத் தவிர எது வேண்டுமானாலும் இருக்கும். அவர்கள் கண்ணும் அப்படியே. அவர்கள் தோல் நிறம் வெளுப்பு. இந்த நிறப்பெயர்களை ரிக் வேதத்தில் படித்தான். உடனே முடிவு கட்டி விட்டான் - ரிக் வேதத்தில் சொல்லப்பட்டது தங்கள் முன்னோர்கள் என்று.
இவர்கள் ரிக் வேதம் படிக்காமல், ஜோதிடம் படித்திருக்கக் கூடாதா என்பது என் ஆதங்கம். அதில் கருப்பு, சிவப்பு, வெளுப்பு, மஞ்சள், பச்சை, பல வர்ணம் என்று எல்லா நிறங்களுமே கிரகங்களுக்கு இருக்கும். அதைப் படித்திருந்தால், தாங்கள் மட்டுமல்ல, உலகின் எந்த மூலையில் பச்சை போன்ற நிறங்களில் மக்கள் இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து, அவர்களும் இந்தியாவின் மீது படை எடுத்திருப்பார்கள் என்று உலகளாவிய அளவில் கண்டு பிடிப்புகள் செய்திருக்கலாமே. அப்படி அவர்கள் செய்திருந்தால், அது எப்பேர்பட்ட உலக மகா உளறல் என்று நம் மக்கள் தெளிவாக இருந்திருப்பார்கள்.
நம் துரதிர்ஷ்டம் அவர்கள் ரிக் வேதத்தை மட்டுமே குறி வைத்தார்கள். ஏன் ரிக் வேதம் முக்கியக் குறியானது?
ஆங்கிலேயன் இந்தியாவுக்கு வந்தபோது, இங்கிருந்த பல நூல்களைக் கண்டு ஆடிப் போய் விட்டான். அவனுக்கு இருந்த ஒரே நூல் பைபிள். ஆனால் இந்தியாவில் பல நூல்கள் உள்ளன. வேதம், உபநிஷத்து, கீதை, ராமாயணம், மகாபாரதம், புராணங்கள், அவை தவிர நீதிக் கதைகள், ஆங்காங்கே வட்டாரக் கதைகள் என்று பல இருந்தன. முன்பே எழுதியது போல, மாக்ஸ் முல்லர் பார்த்தார், எது ஆதார நூலோ அதை எடுத்து, அது சொத்தை என்று சொல்ல வேண்டும். அல்லது அது சொல்வது இதைத்தான் என்று தாங்கள் விரும்புவதைச் சொல்ல வேண்டும். இப்படிச் சொன்னால் இந்த மக்களின் ஆதார நம்பிக்கையை அசைத்து விடலாம். இந்த முயற்சியில் பிறந்ததுதான் ஆரிய- திராவிடப் போராட்டம்.
இந்த வகையான அணுகுமுறையை , இன்றும் மிஷனரிகளிடத்தில் காணலாம். இந்தியாவுக்கு மிஷனரி நோக்கில் வந்த முதல் மிஷனரி நொபிலி அவர்கள் காலத்திலிருந்து தமிழ் நாடு,கிருஸ்துவ மிஷனரிகளது குறியாக இருந்திருக்கின்றது. முதலில், இந்து மதத்தைத் தழுவி கிருஸ்துவத்தை வியாபாரம் செய்தார்கள். ஆனால் இப்பொழுதோ, மாக்ஸ் முல்லரின் அடிப்படை அணுகு முறையையே பின்பற்றுகிறார்கள்.
தமிழுக்கு எது ஆதார நூலோ, தமிழனுக்கு எது வேதம் போன்ற நூலோ அந்த நூலை எடுத்துக் கொண்டுள்ளார்கள். அப்படிப்பட்ட நூல். தமிழ் மறை என்று சொலல்பப்டும் திருக்குறள். அந்தத் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் ஒரு கிருஸ்துவரே என்ற பிரச்சாரம் கிளம்பி இருக்கிறது. திருவள்ளுவர் செயின்ட் தாமஸ் அவர்களது சிஷ்யர் என்ற கதையை இவர்கள் ஜோடித்திருக்கிறார்கள். அன்றைக்கு ஆரியப் படை எடுப்பைப் பற்றி கதை கட்டியது போல இன்று, திருக்குறளை விவிலிய வேதமாகவும், திருவள்ளுவரை கிருஸ்துவர் என்றும் கூறும் பித்தலாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. கூடிய சீக்கிரம், திருக்குறளில் இருந்தே நம் 'சரித்திரத்தை' எடுத்துக் கொடுப்பார்கள் என்று எதிர் பார்க்கலாம்.
ரிக் வேதம் போல, திருக்குறளிலும் போர் பற்றிய குறிப்புகள் இல்லையா என்ன? குறள் 733 ஐப் பாருங்கள். 'பிற நாட்டு மக்கள் குடியேறுவதால் உண்டாகும் சுமையைத் தாங்கி, தன் அரசனுக்குரிய இறைப் பொருள் முழுவதும் தர வல்லது நாடு' என்கிறது இந்தக் குறள். பிற நாட்டிலிருந்து குடியேறி இருக்கிறான் என்று இந்தக் குறள் சொல்கிறது பாருங்கள். ஆரியன் குடியேறி இருக்கிறான். ஆனால் அதையும் பொறுத்து, அவனால் வரும் சுமையையும் பொறுத்து இங்கிருந்த திராவிட அரசன் ஆண்டான் என்று சொல்வதற்கு இவர்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும்?
ஆரியன் வந்ததைக் காட்ட குறள்கள் இல்லையா? குறள் 936 ஐப் பாருங்கள். "மூதேவியாகிய சூதாட்டத்தில் மூழ்கியவர் வயிறு நிறைய உணவும் உண்ணாமல் பல வகைத் துன்பத்தையும் அடைவர்" என்கிறதே. மூதேவி என்பது ஆரியக் கருத்து. அந்தக் கருத்தைப் பரப்பும் ஆரியன், ஒரு பிராமணன். அவன்தான் விரதம் இருக்கிறேன் என்று உணவு உண்ணாமல் வயிற்றைக் கட்டுவான். அப்படி வந்தேறிய ஆரியனைக் குறள் சொல்கிறது பாருங்கள் என்று இவர்கள் ஆராய்ச்சி செய்யும் நாள் தூரத்தில் இல்லை.
இந்த வகையான ஆராய்ச்சிகளுக்கு ஆதரவு கொடுத்தது 'நடமாடும் தமிழே' என்று அடி வருடிகளைக் கொண்டு சொல்லப்படும் திராவிடத் தலைவர். இவர் 'திருவள்ளுவர் கிருஸ்துவரா? " என்னும் நூலுக்கு முன்னுரை எழுதியவர்.அந்தக் கருத்தை வைத்து சினிமா எடுக்கும் முயற்சிக்குத் தலைமை தாங்கியவர். இன்னும் ஒரு முறை அவருக்கு ஆட்சியைக் கொடுங்கள், அந்த சினிமா கண்டிப்பாக எடுக்கப்பட்டு விடும். ரிக் வேதத்துக்குத் தப்பும் தவறுமாக பொருள் கண்டது போல, தமிழ் வேதமான திருக் குறளுக்கும் அடாவடித்தனமாக பொருள் கூறுவார்கள்.
அப்படி செய்த அடாவடித்தனத்தில் வந்ததுதான் ஆரியப் படை எடுப்பு, ஆரிய- திராவிடப் போராட்டம் என்னும் கருத்துக்கள். இவற்றில் அவர்கள் கண்டு கொண்ட முக்கியக் கதாநாயகன் இந்திரன் என்னும் தேவர்கள் தலைவன்.