தமிழ் நாட்டை ஒரு நோய் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. இது பழைய நோய்தான். புதிதில்லை. என்றாலும் கொஞ்சம் தீவிரமாக இப்பொழுது பரவிக்கொண்டு வருகிறது. இதைச் "சந்திரமுகி நோய்" என்று சொன்னால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். நல்ல வேளையாக இது அரசியல்வாதிகளின் மத்தியில்தான் அதிகம் காணப்படுகிறது. மக்களுக்குப் பரவினாற்போலத் தெரியவில்லை. ஆனால் அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால், அண்டை வீட்டுக் காரனுக்கு இரைச்சல் லாபம் என்பார்களே அதுபோல அரசியல்வாதிக்கு இந்த நோய் வந்துள்ளதால்,மக்களுக்குத் தலைவலிதான் லாபமாக இருக்கிறது. அப்படி என்ன நோய் இது என்று கேட்கிறீகளா? தொந்திரவு பிடித்த இந்த நோயின் பெயர்'திராவிட நோய்'! இதைதான் நான் சந்திரமுகி நோய் என்கிறேன்.
சந்திரமுகி நோய், கங்காவைப் பாடாகப் படுத்தியது. கங்காவை யாரால் மறக்க முடியும்? ஜோதிகாவின் ஆக்டிங்கில் கங்காவையும்,சந்திரமுகியையும் மாறி மாறி நாமெல்லாம் பார்த்தது இன்னும் நினைவில் நிற்கிறது. கங்காவுக்குத் தான் யார் என்பது அவ்வபொழுது மறந்து விடும். சந்திரமுகியின் கொலுசைப் பார்த்தால் அது தான் போட்டு ஆடியது என்று நினைப்பாள். சந்திரமுகியின் உடையைப் பார்த்தால் அது தன்னுடையதுதான் என்று நினைப்பாள். சந்திரமுகி சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் தொடர்புபடுத்தி, தானே சந்திரமுகி என்று கங்கா நினைத்து விடுவாள். நினைப்பது மட்டுமில்லை, சந்திரமுகியைப் போலவே நடந்து கொள்ளவும் ஆரம்பித்து விட்டாள். இதுதான் சந்திரமுகி நோய்.

நாம் நாமாக இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நாமே இன்னொருத்தர் என்று கற்பனை செய்யக்கூடாது. நம்மைப் பற்றித் தெரிந்து கொள்ளவில்லை என்றால்தான் இப்படியெல்லாம் பிரமை வரும்.தன்னையே இரண்டு வேறுவித மனிதனாகப் பார்க்கும் ஒருவித மனோ வியாதி இது.
இப்படிப்பட்ட ஒரு நோய்தான் இன்று திராவிடம் பேசும் தமிழ் நாட்டுத் தலைவர்களைப் பற்றியுள்ளது. நாம் தமிழர்கள் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இவ்வளவு வருடங்களாக தமிழ், தமிழ் என்று தமிழைப் பற்றியே பேசி இருக்கிறார்கள். சங்கத் தமிழைக் கரைத்துக் குடித்தேன் என்றும் சொல்லி வருகிறார்கள். அந்த நாள் தமிழ் அரசர்கள் போல, தமிழ் வளரச் சங்கம் கூட்டுவோம் என்று மாநாடும் நடத்துகிறார்கள். கூடவே நாம் திராவிடர்கள் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.