பத்துப் பாட்டு நூல்களில் மிகவும் சிறப்பான நூல்! இயற்கை வாழ்வும், மக்கள் வளமும், முல்லை நிலக் காடும் கழனியும் என்று பலவும் பேசும்! தனித்தமிழ் அறிஞரான மறைமலை அடிகள், இதற்கென்றே, முல்லைப் பாட்டு - ஆராய்ச்சி உரை எழுதியுள்ளார்! அத்தனை இயற்கை வளம், கணவன் மனைவி மன உணர்வுகளைச் சொல்லும் நூல்!
ஹா ஹா ஹா! இப்போது தெரிகிறது, எதுக்கு எனக்கு முருகனை மறைமுகமா மனசுக்குள்ளாற ஆழமாகப் பிடிக்கிறது-ன்னு! :) ஆனால் அவனுக்காக காத்து "இருப்பதே" - இருத்தலும் இருத்தல் நிமித்தமும் - என்று ஆக்கி விட்டு விட்டாரே முல்லை நிலப் பெருமாள் என்று தலைவி ஏங்கலாமோ?
பாடியவர்: நப்பூதனார் (காவிரிப் பூம் பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார், நப்பூதனார்) பாடப்பட்டோன்: குறிப்பாக இன்னார் என்று இல்லை! சங்கத் தமிழ் வாழ்வியலே!
மனைவியைப் பிரிந்து, பகை வேந்தரோடு போர் செய்யப் போகிறான் தலைவன்! "கார்காலத் தொடக்கத்தில் வருவேன், அது வரை நீ ஆற்றி இரு" என்று சொல்லி விட்டுச் செல்கிறான்!
அவன் சொல்லையே வாழ்வாகக் கொண்டு ஆற்றி இருக்கிறாள்! கார் காலம் முடிந்தும் வரவில்லை! இருப்பினும் காத்து இருக்கிறாள்! Like Penelope who waited for Odysseus! திருமால் கோயிலுக்குச் செல்கிறாள்! அங்கே பெருமுது பெண்டிர் குறி சொல்லியும் அவளை ஆற்றுகிறார்கள்!
இது தான் பாட்டின் களம்! முல்லை நிலச் செய்திகள், இயற்கை அழகு, இயற்கையான வாழ்வியல், அழகான உவமைகள், காதல் உணர்வு, காதல் எப்படி திருமணத்துக்குப் பிறகு இன்னும் ஆழமாகிறது....என்றெல்லாம் வருகிறது!
பாட்டின் துவக்கமே, திருமாலைச் சொல்லித் தான் துவங்குகிறது!
நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர்செல நிமிர்ந்த மாஅல் போல (3)
சக்கரப் படையும், சங்கும் தன் கைகளில் உடைய திருமால்! திருமார்பில், துணைவியை அன்புடன் கொண்டுள்ள திருமால்! அவன் கைகளில் நீர் வாங்கிக் கொண்டே நிமிர்ந்து உலகளந்தான் போலே, மேகமும் நீர் வாங்கிக் கொண்டே, உலகெலாம் சுற்றி வருகிறதே!
அருங் கடி மூதூர் மருங்கில் போகி, யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு, நாழி கொண்ட, நறு வீ முல்லை அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது, 10 பெரு முது பெண்டிர், விரிச்சி நிற்ப
மேலும், ஊர்ப் பக்கத்தே திருமால் கோயிலுக்குப் போய், நாழி நெல்லும் முல்லையும் தூவி வணங்குதல் பற்றிச் சொல்கிறது! குறி சொல்லும் வழக்கம் - முதிய பெண்டிர்களின் விரிச்சி (குறி) கேட்டு, மனம் ஆறுதல் பெறும் இளம் பெண்கள் பற்றியும் பேசுகிறது!