ஆற்றுப்படை-ன்னா? ஆறுபடைவீடு-ன்னு சொல்றாங்களே, அதுவா? இல்லை! பண்டைக் காலத்தில் ஆர்க்குட், முகப் புத்தகமான ஃபேஸ்புக் போன்ற தளங்கள் இல்லை-ல்ல? எப்படி ஒத்த சிந்தனை, ஒத்த குழுவில் உள்ளவர்கள் சமூக இணைப்பாக்கம் (Social Networking) செய்ய முடியும்? தான் பெற்ற பயனை இன்னொருவருடன் பகிர்ந்து கொள்வது எப்படி? = அதான் ஆற்றுப்படை! :) வறுமை அல்லது வேறு காரணங்களுக்காக வாட்டமுற்று இருக்கும் சில கவிஞர்கள், பாணர்கள் (விறலியர், பாணர், கூத்தர், பொருநர்)! அவர்களுக்கு யாரிடம் போய் உதவி கேட்கலாம் என்றும் தெரியாது! கண்டவர்களிடம் கேட்டு விடவும் மாட்டார்கள்! தமிழ்த் தன்மானம்! இனிப்பான அந்தத் தூத்துக்குடி உப்பு உடம்பில் ஓடுதுல்ல? :)
தன்னைப் போல் தமிழார்வமுள்ள, மதிப்பு தெரிந்த மன்னவர்களிடம் மட்டுமே உதவி கேட்கத் தோனும்! ஆனால் எந்தெந்த மன்னன் எப்படி-ன்னு தெரிந்து கொள்ள, மன்னர்களின் Orkut, Facebook, Linkedin, Blog-க்கு எல்லாமா போய்ப் பார்க்க முடியும்? :)
ஆனால், அந்த மன்னனிடம் ஏற்கனவே அறிமுகமான கவிஞர்/பாணர், அவர்களைப் பற்றி ஓரளவு அறிந்திருப்பார்! அந்த மன்னனின் கல்வி மாண்பும், தமிழ்க் காதலும், அறத்துப் பால் உள்ள ஆர்வமும் அறிந்து வைத்திருப்பார்! அவர், மற்ற கவிஞர்களை, அந்த மன்னனை நோக்கி ஆற்றுப்படுத்துவதே = ஆற்றுப்படை!
* ஆறு = வழி! உய்யும் "ஆறு" என்று எண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்-ன்னு வரும்-ல்ல? * ஆற்றுப்படை = வழி காட்டுவது! * ஆற்றுப் படுத்துவது = அந்த வழியில் அவனைச் செல்விப்பது!
பண்டைக் காலத் தமிழ்க் கவிஞர்கள் பலரும், மன்னனை நோக்கியே ஆற்றுப்படுத்த... நக்கீரர் தான் முதன்முதலில் இறைவனை நோக்கி ஆற்றுப்படுத்தினார்!
மன்னருக்கெல்லாம் மன்னன் முருகனை நோக்கி... பாடல் நடுவே சும்மா இரண்டு வரிகள் மட்டும் முருகனைப் பற்றிச் சொல்லாது, முழுக்க முழுக்க முருகனைப் பேசும் நூல்! ஆன்மீகம் மட்டுமே பேசும் வலைப்பூ போல! எனவே அவரே முதல் ஆன்மிகப் பதிவர்! :)
தமிழில் சிறந்த ஆற்றுப்படைகள், பத்துப்பாட்டில் தான் உள்ளன! பத்துப்பாட்டில் உள்ள பத்து பாட்டில், நான்கும் ஆற்றுப்படைகளே! 1. திருமுருகாற்றுப்படை 2. பொருநர் ஆற்றுப்படை 3. பெரும்பாண் ஆற்றுப்படை 4. சிறுபாண் ஆற்றுப்படை
நாம் பெரும்பாணாற்றுப்படையைப் பார்ப்போம்! அதில் தான் பண்டைத் தமிழர்களின் தெய்வமான திருமால் பற்றி பல அழகிய குறிப்புகள் வருகின்றன! பேரியாழ் வாசிக்கும் பாணன் ஒருவன், இன்னொரு பாணனை ஆற்றுப்படுத்துகிறான்! யாரிடம்? = தொண்டைமான் இளந்திரையனிடம்!
வெறும் மன்னன் புகழ் பாடுவதா ஆற்றுப்படை? இல்லை! கவிஞர்களின் வறுமைச் செல்வம், பாணர்களின் தமிழிசை, விறலிகளின் நாட்டியம், ஊருக்குப் போகும் வழிகள், நிலப்பரப்பு, மன்னனின் குடி வரலாறு என்னும் பல சேதிகளைச் சொல்வது ஆற்றுப்படை! அதில் தமிழ்க் கடவுளாகிய திருமாலின் குணங்களையும் சொல்லி ஆற்றுப்படுத்துவதைப் பார்ப்போமா?
(திருமறு மார்பன், கடல்வண்ணன், பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் என்றெல்லாம் திருமால் பற்றிய குறிப்புக்கள்) பாடியவர்: கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடப்பட்டவன்: தொண்டைமான் இளந்திரையன்
திணை: பாடாண்திணை துறை: ஆற்றுப்படை பாவகை: ஆசிரியப்பா மொத்த அடிகள்: 500
அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப். . . .1 பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பருதி காய்சினந் திருகிய கடுந்திறல் வேனிற் பாசிலை யழித்த பராஅரைப் பாதிரி ... ... இருநிலங் கடந்த திருமறு மார்பின் முந்நீர் வண்ணன் பிறங்கடை யந்நீர்த் . . . .30 திரைதரு மரபி னுரவோ னும்பல் மலர்தலை யுலகத்து மன்னுயிர் காக்கும் (உலகம் அளந்து, மார்பிலே திருமறு கொண்டு, கடல் வண்ணனான மாயோனின் வழியில்...தொல்மரபில் தோன்றிட்ட இளந்திரையன்) ... ... காந்தளஞ் சிலம்பிற் களிறுபடிந் தாங்குப். . . .371 பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் ஆங்கண் (காந்தள் மலர் பூக்கும் மலையிலே; களிறு கிடந்தாற் போல், பாம்பு அணையிலே பள்ளி கொள்ளும் திருமால்...)