நற்றிணை = நல்ல திணை! (ஒழுக்கம்) எது ஒழுக்கம்? = களவியல், கற்பியல் என்னும் காதல்-குடும்ப ஒழுக்கம்! அகப் பொருள்! அதைச் சொல்வதே நற்றிணை!
மொத்தம் 400 பாடல்களின் தொகுப்பு! பல கவிஞர்கள்! நல்ல தமிழ்ப் பெயர்களா வேணும்-ன்னா இதில் தேடலாம்! = கபிலன், பரணன், மாறன், உதியன், செம்பியன், செழியன், சேந்தன், நன்னன், மாயோன், வாணன், வழுதி! என்று அத்தனை பேரும் கவிஞர்கள்-மன்னர்கள்!
ஒவ்வொரு பாட்டிலும் 9-12 அடிகள்! குறுந்தொகை போல் மிகவும் குறுகியோ, நெடுந்தொகை போல் அதிகமாகவோ இல்லாது...அளவான அடிகளால் ஆன நூல் நற்றிணை! இதில் மாயோனாகிய பெருமாளைக் குறித்துப் பாடும் பாடலைப் பார்க்கலாமா?
நற்றிணை: 32 - கபிலர் - தலைவிக்குக் குறை நயப்பு போல் கூறியது
(மாயோன் போல பெரிய கரு மலைகளின் தலைவன் என்று தன் காதலனைப் பற்றித் தோழிக்குச் சொல்கிறாள்! என் காதலனைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்! நீங்களே விசாரித்து அறிந்து கொள்ளுங்கள் என்கிறாள்)
திணை: குறிஞ்சி துறை: குறை நயப்பு
மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன் வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி (மாயோனைப் போல் கருத்த மலை நாடன் என் காதலன்; வாலியோனைப் போல் வெண்மையான அருவிகள் அவன் மலைகளில் பாய்கின்றன! அவனைப் பற்றி நான் சொன்னால் தான் நம்ப மாட்டாய் தோழீ! நீயே பிற தோழியரோடு கலந்து பேசி அறிந்து கொள்......)
அம் மலை கிழவோன் நம் நயந்து என்றும் வருந்தினன் எனபது ஓர் வாய்ச் சொல் தேறாய் நீயும் கண்டு நுமரொடும் எண்ணி 5
அறிவு அறிந்து அளவல் வேண்டும் மறுத்தரற்கு அரிய வாழி தோழி பெரியோர் நாடி நட்பின் அல்லது நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே
தன் காதலனை யாரோடு ஒப்பிட்டுச் சொல்வது? தோழிகள், உற்றார்கள் எல்லாருக்கும் அவன் மேல் இளக்காரம்! அவனைப் பற்றி ஆயிரம் கேள்விகள்! அப்படி இருக்கும் நிலையில், அவன் சிறந்த ஆண்மகன் என்பதைச் சொல்லி, அவன் குணங்களை ஒவ்வொன்றாகச் சொல்ல வேண்டும்!
அத்தனை பேர் வாயையும் ஒரே மந்திரச் சொல்லால் அடைக்க வேண்டும்! = எப்படி? = என் காதலன் "மாயோன்" அன்ன கருமலை நாடன்! மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா! மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன்!
வாலியோனைப் பற்றி பேசும் சங்கப்பாடல்களையும் ஒரு முறை பார்க்க வேண்டும் இரவி. மாயோன் வழிபாடு தொடர்ந்து வந்திருக்கிறது. வாலியோன் வழிபாடு ஏன் மறைந்தது என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது என் நெஞ்சில்.
இந்தப் பாடலில் மாயோனும் வாலியோனும் (கருப்பனும் வெள்ளையனும்) ரெண்டு பேருமே சொல்லப்படுகிறார்கள். இந்தப் பாடலை நம் நண்பர் வெட்டிப்பயலுக்குக் காட்டினீர்களா? வெள்ளைமணி இந்த வாலியோன் தான்; வேறு யாரும் இல்லை என்று அவருக்குப் புரியும்.
இந்தப் பாடலில் மாயோன் மலைக்குத் தான் உவமையாக வருகிறான்; காதலனுக்கு இல்லை என்று தோன்றுகிறது.
//குமரன் (Kumaran) said... வாலியோனைப் பற்றி பேசும் சங்கப்பாடல்களையும் ஒரு முறை பார்க்க வேண்டும் இரவி//
பாத்துருவோம்! அடுத்து நீங்களும் ஒரு தொடர் போடுங்க! :)
//மாயோன் வழிபாடு தொடர்ந்து வந்திருக்கிறது. வாலியோன் வழிபாடு ஏன் மறைந்தது என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது என் நெஞ்சில். //
ஹா ஹா ஹா வாலியோன் பேசப்படுகிறான்! ஆனால் மாயோன், சேயோனைப் போல் மக்கள் தெய்வமாக இருந்தானா என்பது கேள்வியே!
* நிலத்துக்குரிய தெய்வமாகவும் இருந்து * மக்கள் வாழ்வியல் தெய்வமாகவும் இருந்து * இசை-நாட்டியம் என்று அனைத்திலும் பரவி * அன்றே செந்தூர், வேங்கடம் என்று ஆலயம் பல கண்டு...
இப்படி அனைத்து மக்களோடும் ஒட்டிய தெய்வம், காலத்துக்கும் பண்பாட்டில் நின்றது! மற்றவை சிறிது சிறிதாக ஏட்டளவில் நின்றன, அல்லது ஒரு சிலர் வீட்டளவில் நின்றன!
காலச் சுழற்சியிலும், பண்பாட்டுச் சுழற்சியிலும் தமிழ் நிலத்தில் ஈடு கொடுத்து நின்றனர்-நிற்கின்றனர் திருமாலும், முருகனும்!
முருகன் இங்கு பேசப்பட்ட அளவு அங்கு பேசப்படவில்லை! திருமால் இங்கும் பேசப்பட்டு, அங்கும் ஓகோ என்று பேசப்பட்டு விட்டான்!