பிப்ரவரி 7, 2008 திண்ணை இதழில் ஜெயமோகன் எழுதியிருக்கும் “நீதியும் நாட்டார் விவேகமும் ....“ என்ற கட்டுரை குறித்து சில விமரிசனங்கள்.
// ஜெ.மோ: இவற்றில் உச்சம் திருவள்ளுவர் என்றும் சமண மரபில் ஆச்சாரிய குந்தகுந்தர் என்றும் குறிப்பிடப்படும் சமண முனிவரால் எழுதப்பட்ட 'திருக்குறள்' //
திருவள்ளுவரின் சமயப் பார்வை பற்றிய ஆய்வுகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அவர் சைவம், வைணவம் இவற்றை உள்ளடக்கிய (இன்று இந்துமதம் என்றழைக்கப் படும்) வேத சமயத்தினர், சமணர் அல்லது பௌத்தர் ஆகிய மூன்று தரப்பிற்கும் பல்வேறு வலுவான ஆதாரங்கள் வைக்கப் படுகின்றன. இந்நிலையில் முடிந்த முடிபாக இவ்வாறு ஜெயமோகன் எழுதியிருப்பது சரியானதன்று. சமண மறுமலர்ச்சி பற்றி முழங்கும் தருண் சாகர் போன்ற ஜைன ஆசாரியர்கள் தான் தங்கள் பிரசார மேடைகளில் எல்லாம் “குந்தகுந்தர் தான் திருவள்ளுவர்” என்று பேசி வருகிறார்கள். சமீப காலங்களில் இந்த rhetoric அதிகமாகியுள்ளது என்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் ஆய்வு நோக்குள்ள ஒரு எழுத்தாளரின் இத்தகைய நிலைப்பாடு வியப்பூட்டுகிறது.
நீதி என்ற கருத்தியல் அடிப்படையை மட்டுமே கொண்டு திருவள்ளுவரின் “சமணத்” தன்மையை ஜெயமோகன் முன்னிறுத்துவதாகத் தெரிகிறது. ஆனால் திருவள்ளுவர் கண்டிப்பாக ஏன் சமணராகவும் (பௌத்தராகவும்) இருந்திருக்கவே முடியாது, அவர் இந்து/வேத சமயத்தினராக மட்டுமே இருந்திருக்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் கருத்தியல் மட்டுல்ல, குறள் நேரிடையாகக் குறிப்பிடும் பருப்பொருள் உண்மைகள், உவமானங்கள், கூறுபொருள்கள் இவை அனைத்தின் மூலமும் உறுதி செய்யப் படுகின்றன.
இது குறித்து யுகமாயினி என்ற இலக்கிய சிற்றிதழில் ஜாவா குமார் என்பவர் எழுதிய கட்டுரையை இதன் இறுதியில் பிற்சேர்க்கையாக இணைத்துள்ளேன். இந்தக் கட்டுரை இத்தகைய முக்கிய ஆதாரங்களை சுருக்கமாகத் தொட்டுக் காண்பிக்கின்றது. .
// ஜெ.மோ: சமணர்களால் உருவாக்கப்பட்ட நீதி அதுவரை இந்திய சமூகத்தில் இல்லாதிருந்த பல முக்கியமான அம்சங்களைக் கொண்டிருந்தது. ஒன்று அதற்கு மானுடமளாவிய ஒரு நோக்கு இருந்தது. அடிப்படை விழுமியங்களையாவது அனைத்துமானுடருக்கும் சமமாக வைக்க அதனால் இயன்றது. இரண்டு, வன்முறை சாராமல் மனிதனின் கருணையையும் அகச்சான்றையும் நம்பியே பேசும் நீதியை அவை முன்வைத்தன. //
நீதி என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு இட்டுச் செல்லுவது, வழிநடத்துவது என்று பொருள். அதனால் தான் நீதி நூல்கள் தத்துவ விவாதங்களாகவோ அல்லது தேடல்களாகவோ அல்லாமல் வெளிப்படையான அறவுரைகளாவும், இதைச் செய், இதைச் செய்யாதே என்று கட்டளையிடும் உபதேசங்களாகவும் உள்ளன. ஆனால், இந்த நீதியின் ஊற்றுக் கண்ணாக தர்மம் என்கிற கோட்பாடு (principle) உள்ளது. நீதிகளை (morals, ethics) உருவாக்குபவர்கள் அவற்றின் உண்மைத் தன்மையை தர்மம் என்ற உரைகல்லில் உரைத்தே உறுதி செய்ய வேண்டும். தர்மம் என்கிற மாறாத உண்மையின் கனி தான் நீதி என்பது.