உலகில் தொடர்ந்து கெண்டிருக்கும் குழப்பங்களுக்கு, சமுதாய ஏற்றத்தாழ்வுகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. நாடு, மதம், மொழி, நிறம், இனம், பொருளாதாரம் எனவும் இவற்றிற்குள் பல உட்பிரிவுகளாகவும் பிரிந்து காணப்படுகிறது. இந்த பிரிவினைகள் ஏன்? இவ்வினாவிற்கு,
(ஆரம்பத்தில்) மனிதர்கள் அனைவரும் ஈமானுள்ள) ஓரே சமுதாயத்தினராகவே இருந்தனர். பின்னர் காலப் போக்கில் தமக்கிடையே வேறுபட்டு பிரிந்தனர்; அவர்களை நெறிப்படுத்த) பிறகு அல்லாஹ், நபிமார்களை நன்மாராயம் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிப்போராகவும் (அவர்களின்பால்) அனுப்பிவைத்தான். மேலும் அம்மனிதர்களிடையே எதில் அவர்கள் கருத்து மாற்றங் கொண்டார்களோ அதில் தீர்ப்பு செய்வதற்காக சத்தியத்தைக் கொண்டுள்ள வேதங்களையும் அவர்களுடன் இறக்கிவைத்தான்; (அவ்வாறு) தெளிவான அத்தாட்சிகள் அவர்களிடம் வந்த பிறகும், தங்களுக்கிடையே இருந்த பொறாமையினால் அ(வ்வேதத்)தைக் கொடுக்கப்பட்டவர்களேயன்றி (வேற எவரும்) கருத்து வேறுபாடு கொள்ளவில்லை; ஆயினும் சத்தியத்தில் நின்றும் எதில் அவர்கள் மாறுட்டிருந்தனரோ அ(ந்த சத்தயத்)தின் பால் முஃமின்களுக்கு அல்லாஹ் தன்னுடைய அருளைக் கொண்டு நேர்வழி காட்டினான். அல்லாஹ் தான் நாடியவரை நேரான வழியில் செலுத்துகிறான்.
மனிதன் பல சமுதாயங்களாக பிரிந்ததற்கு அவனது பொறாமை குணம் மட்டுமே காரணம். எனவே இறுதியாக மீண்டும் தூதுவர்களையும், வேதங்களையும் மனிதர்களிடையே அனுப்பி, பிளவுபட்ட சமுதாயத்தை இணைக்க நாடுவதாக கூறுகிறான். இங்கு அல்லாஹ் குறிப்பிடும் சமுதாயம், முஹம்மது நபிக்கு கட்டுப்பட்டு வாழும் கூட்டத்தையே குறிக்கிறது.
தெளிவான ஆதாரங்களைக் கொண்டும் வேதத்தைக்கொண்டும், இன்னும் மனிதர்களுக்கு அவர்களுக்காக இறக்கி வைக்கப்பட்டதை நீர் விளக்குவதற்காக திக்ரை உம்பால் இறக்கி வைத்தோம். அவர்கள் சிந்திப்பவர்களாகி விடலாம்.
(குர்ஆன் 16:44)
மேலும், எதில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்களோ அதனை அவர்களுக்கு நீர் விளக்கி வைப்பதற்காகவும், முஃமீனான கூட்டத்தினருக்கு நேர்வழிகாட்டியாகவும், ரஹ்மத்தாக இருப்பதற்காக தவிர வேதத்தை உம்மீது நாம் இறக்கவில்லை.
(குர்ஆன் 16:64)
அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இந்தக் குர்ஆனில் திட்டமாக நாம் தெளிவாக்கியுள்ளோம்…
(குர்ஆன் 17:41)
(நபியே) மக்களாகிய அவர்களை நேர்வழியில் செலுத்துவது உம்மீது (கடமை) யில்லை…
(குர்ஆன் 2:272)
(இஸ்லாம்) மார்க்கத்தில் எவ்வித நிர்பநதமும் இல்லை; …
இதில் எவ்வித நிர்பந்தமும் இல்லையென மென்மையாகக் கூறிய அல்லாஹ், வழியைத் தேர்தெடுக்கும் வாய்ப்பை மனிதனுக்கு வழங்கி, பொறுப்பிலிருந்து விலகியவன், குர்ஆனின் மற்றொரு பகுதியில் கூறுவதை கவனியுங்கள்,
…நேர்வழியாகிறது வழிகேட்டிலிருந்து (பிரிந்து) திட்டமாகத் தெளிவாகிவட்டது எவர் வழிகெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வைக் கொண்டு ஈமான் கொள்கிறாரோ அவர் (அறுந்து) போகாத உள்ள கயிற்றின் உறுதியான முடிச்சை திட்டமாக பற்றி பிடித்துக் கொண்டார்…
(குர்ஆன் 2:256)
அன்றியும் எவரேனும் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை தேடுவாரானால் அவரிடமிருந்து அது ஏற்கப்படவே மாட்டாது; இன்னும் அவர் மறுமையில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.
இஸ்லாம் மட்டுமே நேர்வழி. எனவே, அதைத் மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டுமென வலியுறுத்தி கூறுகிறான். அவ்வாறு ஒரு மனிதன் நேரான வழியைத் தேர்ந்தெடுப்பதும் தன்னுடைய விருப்பத்தின் அடிப்படையிலேயேதான் என வலியுறுத்தி மீண்டும் குழப்ப நாயனாகிறான். குர்ஆனில் பல வசனங்களில் “அல்லாஹ் தான் நாடியவரை நேர்வழியில் செலுத்துகிறான்” என்ற வாக்கியத்துடன் முடிவுறுவதை எல்லோரும் அறிந்த ஒன்று. எனவே மனிதன் நேர்வழியில் செல்வது அல்லாஹ்வின் நாட்டத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டது.
…அல்லாஹ் தான் நாடியவரை நேர்வழியில் செலுத்துகிறான்
(குர்ஆன் 2:272)
…அல்லாஹ் நாடினால் அவர்களை நேர்வழியின் மீது ஒன்று சேர்த்து விடுவான் ஆகையால் அறியாதவர்களில் உள்ளவராக திண்ணமாக நீர்ஆகிவிடவேண்டாம்
(குர்ஆன் 6:35)
தான் நாடுபவரை தன் ரஹ்மத்தில் புகச் செய்வான்.
(குர்ஆன் 76:31)
நிச்சயமாக எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் அல்லது அவர்களுக்கு நீர் எச்சரிக்காவிட்டாலும் (இரண்டும்) அவர்களுக்கு சமமேயாகும் அவர்கள் ஈமான் (நம்பிக்கை) கொள்ளமாட்டார்கள்.
(குர்ஆன் 2:6)
…வழியை விட்டும் அவர்கள் தடுக்கப்பட்டு விட்டனர்; – அல்லாஹ் எவரை வழி தவறச் செய்கிறானோ அவரை நேர்வழியில் செலுத்துபவர் எவருமில்லை.
(குர்ஆன் 13:33)
…அல்லாஹ் தான் நாடியவரை வழி தவறச் செய்கிறான்; இன்னும் தான் நாடியவரை நேர்வழியில் செலுத்துகிறான்…
(குர்ஆன் 14:04)
அல்லாஹ் நாடினாலன்றி (எதையும்) நீங்கள் நாடமாட்டீர்கள்.
(குர்ஆன் 76:30)
உம்முடைய ரப்பு நாடினால் மனிதர்களை ஒரே சமுதாயத்தவராய் அவன் ஆக்கியிருப்பான் (அவன் அப்படி நாடாமையினால்) அவர்கள் கருத்து வேறுபாடு உள்ளவர்களாகவே இருந்து வருவார்கள்.
வழி தவறச் செய்தது மட்டுமல்லாமல், மனிதன் நேர்வழியை அடைவதும் அல்லாஹ்வினால் தடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தடுக்கப்பட்ட மனிதனை திரும்ப நேர்வழியில் செலுத்த யாராலும் இயலாது. அல்லாஹ்வின் இந்த நிலையை மெய்பிக்க மேலும் சில குர்ஆன் வசனங்களை காண்போம்.
அல்லாஹ் அவர்களின் இதயங்களின் மீதும் அவர்களின் செவிப்புலன்களின் மீதும் முத்திரை வைத்து விட்டான் இன்னும் அவர்களின் பார்வைகளின் மீது திரையிருக்கிறது. மேலும் மகத்தான வேதனையுண்டு.
(குர்ஆன் 2:7)
அவர்களுக்கு முன்னால் ஒரு தடுப்பையும், அவர்களுக்கு பின்னால் ஒரு தடுப்பையும் நாம் ஏற்படுத்தி விட்டோம்; (இவ்வாறே) நாம் அவர்களை மூடி விட்டோம், எனவே அவர்கள் பார்க்க மாட்டார்கள்.
(குர்ஆன் 36: 9)
…அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ் அவர்களுடைய இதயங்களின் மீது முத்திரையட்டு விட்டான்
(குர்ஆன் 47:16)
அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ் அவர்களை சபித்து அவர்களை செவிடாக்கி அவர்களுடைய பார்வைகளையும் குருடாகவும் ஆக்கிவிட்டான்
(குர்ஆன் 47:23)
ஆனால் அல்லாஹ்வால், தடுக்கப்பட்டவர் -களையும், முடமாக்கியவர்களையும் இஸ்லாமெனும் பாதையில் மனிதர்களை ஒன்றினைய அழைப்பது வேடிக்கையாக இருக்கிறது. “நீர் அச்சமூட்டி எச்சரிப்பவர்” என அல்லாஹ்வினால் வர்ணிக்கப்பட்ட தன் தூதரிடம், தான் கூறும் வழியை அவ்வாறு பின்பற்ற இயலாத, தன்னால் முடமாக்கப்பட்டவர்களிடம் மிகக்கடுமையாக நடந்து கொள்ள உத்தரவிடுகிறான்.
ஃபித்னா நீங்கி மார்க்கம் அல்லாஹ்விற்காகே ஆகும்வரை அவர்களிடம் போர் புரியுங்கள்
(குர்ஆன் 2:193)
நிச்சயமாக எவர்கள் நம்முடைய வேத வசனங்களை நிராகரித்திட்டார்களோ அவர்களை நரக நெருப்பில் நாம் புகச் செய்வோம்; (அதில்) அவர்களுடை தோல்கள் கரிந்து விடும் போதெல்லாம் வேதனையை அவர்கள் அனுபவிப்பதற்காக அவையல்லா வேறு தோல்களை நாம் அவர்களுக்கு மாற்றிடுவோம்.
(குர்ஆன் 4:56)
உம்முடைய ரப்பு மலக்குகளிடம், நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். எனவே முஃமின்களை நீங்கள் உறுதிப்படுத்துங்கள். காஃபிரானவர்களின் இதயங்களில் திகிலை விரைவில் போடுவேன்; ஆகவே கழுத்துகளுக்குமேல் வெட்டுங்கள் அவர்களிலிருந்து ஒவ்வொரு கணுவையும் வெட்டுங்கள்…
(குர்ஆன் 8:12)
எந்த நபிக்கும் (விஷமங்களை தடுக்க) பூமியில் இரத்தத்தை ஓட்டுகின்றவரை (கொல்லாமல்) சிறைப்பிடித்து அவரிடத்தில் இருப்பது தகுமல்ல; உலகத்தின் (சொற்ப) நன்மையை விரும்புகிறீர்கள்.
(குர்ஆன் 8:67)
(போரிடுதல் தடைசெய்யப்பட்ட) புனிதமான மாதங்கள் சென்று விட்டால் முஷ்ரிக்கு (இணைவைப்பவர்)களை – அவர்களை நீங்கள் கண்ட இடங்களில் வெட்டுங்கள்; அவர்களைப் பிடியுங்கள், அவர்களை முற்றுகையிடுங்கள் (அவர்கள்) நடமாடும் பாதைகளையெல்லாம் அவர்களுக்காக நீங்கள் நோட்டமிட்டவர்களாக உட்கார்ந்திருங்கள்.
(குர்ஆன் 22:9)
இவ்வாறாக அல்லாஹ்வினால் நேர்வழியிலிருந்து தடுக்கப்பட்டவர்கள் யார்? ஏன் அவ்வாறு தடுக்கப்பட்டார்கள்?
அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிருகங்களில் கெட்டது (அல்லாஹ்வை) நிராகரித்தார்களே அத்தகையோராவர் எனவே அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.
(குர்ஆன் 8:55)
எனவே எவனொருவன்-அவனுடைய தீய செயல் அவனுக்கு அழகாக்கப்பட்டு அதை(ச் செய்வதை) அவனும் அழகானதாகவும் கண்டானோ அவனா? நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிதவறச் செய்கிறான்.
எந்த ஒரு மனிதனும் சுயமாக செயல்பட எவ்விதமான வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை. அனைத்தும் அல்லாஹ் இறுதி செய்த விதிப்படியே நடக்கிறது.
பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை, நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.
(குர்ஆன் 57:22)
அவர்களில் பெரும்பாலானவர்களின் மீது (விதியின்) சொல் திட்டமாக உறுதியாகி விட்டது எனவே அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.
(குர்ஆன் 36:7)
நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் விதியுடன்(கத்ர்) படைத்திருக்கின்றோம்.
உண்மையே பேசுபவரும், உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறீர்கள். பிறகு அவ்வாறே (40 நாட்களில்) அந்தக் கரு (அட்டைப்போன்று கருப்பையின் சுவரைப்பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக் கட்டியாக மாறிவிடுகின்றது. பிறகு, அவ்வாறே (இன்னொரு நாற்பது நாட்களில் மெல்லப் பட்டசக்கை போன்ற) ஒரு சதைப் பிண்டமாக மாறி விடுகின்றது. பிறகு அல்லாஹ் அதனிடம் ஒரு வானவரை நான்கு கட்டளைகளைத் தந்து அனுப்புகிறான் (அதன்படி) அதன் செயல்பாடு (எப்படியிருக்கும் என்று)ம் அதன் ஆயுளும், அதன் உணவும் (பிற வாழ்வாதாரங்களும் எவ்வளவு என்றும்) எழுதப்படுகின்றன. அக்குழந்தை துர்பாக்கியசாலியா நற்பாக்கியசாலியா என்பதும் எழுத்தப்படுகின்றது. பிறகு அதனுள் உயிர் ஊதப்படுகின்றது. இதனால் தான் மனிதன் நரகவாசிகளின் செயலைச் செய்தவண்ணமிருப்பான். இறுதியில் அவனுக்கும் நரகத்திற்குமிடையே ஒரு முழம் மட்டும் தான் இடைவெளியிருக்கும். அப்போது (எதிர்பாராத விதமாக) விதி அவனை முந்திக் கொள்ள, அவன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து சொர்க்கத்தில் நுழைந்து விடுவான். ஒரு மனிதன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்த வண்ணமிருப்பான். இறுதியில் அவனுக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் தான் இருக்கும். அப்போது (எதிர்பாராத விதமாக) விதி அவனை முந்திக் கொள்ள அவன் நரகவாசிகளின் செயலைச் செய்து நரகத்தில் புகுந்து விடுவான். இதைத் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மேற்கண்ட ஹதீஸ் விதியின் வலிமையைக் கூறுகிறது. பகுத்தறிவு ஏற்கவில்லையென்றாலும் கட்டயமாக நம்பியே தீரவேண்டும். விதியை மறுப்பவர்களை கடுமையாக எச்சரிக்கும் ஹதீஸ் ஒன்றைப் பார்ப்போம்.
…(இராக்கிலுள்ள) பஸ்ரா நகரில் மஅபத் அல் ஜுஹனீ என்பவரே விதியை(நம்புவது)ப் பற்றி மாற்றுக் கருத்துத் தெரிவித்த முதலாமவராவார். அக்கால கட்டத்தில் (யஹ்யா பின் யஅமர் ஆகிய) நானும் ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் அல்ஹிம்யரீ(ரஹ்) அவர்களும் ‘ஹஜ்’ அல்லது ‘உம்ரா’ச் செய்வதற்காக(ப்புனித மக்கா நோக்கி)ச் சென்றோம். அப்போது நாங்கள், “அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடைய தோழர்களில் ஒருவரை நாம் சந்தித்தால் அவரிடம் விதி தொடர்பாக இவர்களது (மறுதலிப்புக்) கூற்றைப் பற்றிக் கேட்க வேண்டும்” என்று சொல்லிக் கொண்டோம். அப்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்து கொண்டிருந்த அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.
உடனே நானும் என் தோழரும் அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்களைச் சூழ்ந்து கொண்டு, எங்களில் ஒருவர் அவர்களுக்கு வலப்பக்கத்திலும் மற்றொருவர் இடப்பக்கத்திலும் இருந்துக் கொண்டோம். பேச வேண்டிய பொறுப்பை என்னிடமே என் தோழர் விட்டு விடுவார் என எண்ணி நானே பேசினேன்: “அபூ அப்திர் ரஹ்மான் அவர்களே! எங்கள் பகுதியில் சிலர் தோன்றியிருக்கின்றனர். அவர்கள் குர்ஆனை ஓதுகின்றனர்; தேடித் திரிந்துக் கல்வி பயில்கின்றனர்” என அவர்களது (நல்ல) தன்மைகளை எடுத்துரைத்து, “ஆனால், அவர்கள் ‘விதி’ என்று ஏதுமில்லை எனவும், நிகழ்வுகள் அனைத்தும் தற்செயலாகத்தான் நிகழ்கின்றன என்றும் பேசத் துணிந்து விட்டனர்” என்றேன்.
அதற்கு அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்: “இத்தகையோரை நீங்கள் சந்தித்தால், அவர்களை விட்டு நான் விலகி விட்டவனாவேன்; என்னை விட்டு அவர்களும் விலகிவிட்டவர்களாவர் என அவர்களிடம் தெரிவித்துவிடுங்கள். (இந்த) அப்துல்லாஹ் பின் உமர் யார் மீது சத்தியம் செய்வானோ அ(ந்த இறை)வன் மீது சத்தியமாக! அவர்களில் ஒருவரிடம் உஹத் மலையளவு தங்கம் இருந்து, அதை அவர் (அறவழிகளில்) செலவிட்டாலும் அவர் விதியை நம்பிக்கைக் கொள்ளாதவரை அவரிடமிருந்து அல்லாஹ் அதை ஏற்கமாட்டான் (என்றுக் கூறி விடுங்கள்)”.
பிறகு அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்: “என் தந்தை உமர் பின் அல் கத்தாப்(ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்:…
குர்ஆனும் இந்த கருத்தை ஏற்றுக் கொள்கிறது. உலகின் ஒவ்வொரு நிகழ்வும் அல்லாஹ்வின் விதிப்படியே நிகழ்கிறது. விதியை உண்மையான முஸ்லீம்களால் மறுக்க முடியாது, மறுக்கவும் கூடாது. அது ஈமானின் (நம்பிக்கை)ஒரு பகுதியாகும்
முஸ்லீம் ஹதீஸ் : 1, அத்தியாயம்: 1, பாடம்: 1.01
…அடுத்து அவர், “ஈமான் (இறை நம்பிக்கை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனின் தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும். நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதாகும்” என்றுக் கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் “உண்மை உரைத்தீர்கள்” என்றார். …
அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)
நூல்: திர்மிதி
அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் செய்கின்ற செயல்கள் சுயமாக செய்கிறோமா? அல்லது விதிப்படி நடக்கிறதா? என்று உமர்(ரலி) அவர்கள் கேட்டார்கள். கத்தாபின் மகனே! எல்லாமே ஏற்கனவே எழுதப்பட்ட விதிப்படியே நடக்கின்றன. ஒருவர் பாக்கிய சாலியாக இருந்தால் பாக்கியம் பெறுவதற்கே செயல்படுகிறார், துர்பாக்கியசாலியாக இருந்தால் துர்பாக்கியமடையும் வகையில் செயல்படுகிறார் என்று நபி அவர்கள் விடையளித்தார்கள்.
அல்லாஹ் ஏற்படுத்திய விதியின் வழியே படைப்பினங்களின் ஒவ்வொரு அசைவும் நிகழ்கிறதென்றால், மனிதர்களை நேர்வழிப்படுத்துவதாகக் கூறி தூதர்களையும் வேதங்களையும் அனுப்ப வேண்டிய தேவை என்ன? மனிதர்கள் எல்லோரையும் இஸ்லாமை ஏற்கும்படியான விதியை ஏன் எழுதவில்லை? மனிதர்கள் அனைவரும் இஸ்லாம் என்ற பாதையில் செல்ல, அல்லாஹ் ஒருபொழுதும் விரும்பவில்லை. காரணம், நரகத்தை நிரப்புதல் மட்டுமே அல்லாஹ்வின் குறிக்கோள்.
நாம் நாடியிருந்தால் ஒவ்வோர் ஆத்மாவிற்கும் அதனுடைய நேர்வழியைக் கொடுத்திருப்போம். எனினும் ஜின்கள், மனிதர்கள் ஆகிய அனைவரிலிருந்தும் நரகத்தை திண்ணமாக நான் நிரப்புவேன் என்ற என்னிலிருந்து உள்ள சொல் உண்மையாகி விட்டது.
(குர்ஆன் 32:13)
(அவர்களில்) உம்முடைய ரப்பு அருள் புரிந்தவரைத் தவிர இதற்காகவே அவர்களை படைத்திருக்கிறான். (பாவம் செய்த) ஜின்கள், மனிதர்கள் அனைவரினாலும் நரகத்தை திண்ணமாக நான் நிரப்புவேன் என்ற உம்முடைய ரப்பின் வாக்கு பூர்த்தியாகிவிட்டது.
நரகத்தை நோக்கி, நீ நிரம்பி விட்டாயா? என்று நாம் கேட்கும் நாளில், இன்னும் அதிகம் இருக்கிறதா? என்று அது கூறும்.
(குர்ஆன் 50:30)
மறுமையின் மிக மிக முக்கியமான கேள்வி மார்க்கத்தைக் குறித்ததே. அப்படியானால் தீர்ப்பு நாளின் விசாரணை வேடிக்கையாக தோன்றவில்லையா? (தீர்ப்பு நாளின் வேடிக்கைகளை இத்தொடரின் இறுதியில் விரிவாகக் காணலாம்.) ஒருவர் இஸ்லாமை ஏற்பதும், மறுப்பதும் அல்லாஹ்வின் விதிப்படியே நிகழ்கிறது. எனவே இஸ்லாம் என்ற பாதையை தேர்ந்தெடுக்கத்தவறியவர்கள் தங்களது பாதை மாறிய பயணங்களுக்காக அல்லாஹ்வின் விதியின் மீது குற்றம் கூற முடியாது காரணம்,
துன்பத்திலிருந்து உங்களுக்கு ஏதாவது ஏற்படுமாயின் (அது) உங்களுடைய கரங்கள் சம்பாதித்துக் கொண்ட(தீய)வற்றினாலேயாகும்.
(குர்ஆன் 42:30)
உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது (இதுவே அல்லாஹ் உலகிற்கு ஏற்படுத்தித் தந்துள்ள விதியாகும்). இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால்தான் (,உனக்குத் தரப்பட்டுள்ள தீர்மானிக்கும் அறிவு குறை பாட்டால்தான்) வந்தது. (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு தூதராகவே அனுப்பியுள்ளோம் – அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்.
(குர்ஆன் 4:79)
(இப்பகுதியை மீண்டும் படித்தால் ஒருவேளை தெளிவான முடிவிற்கு வர வாய்ப்பு இருக்கலாம் என்று நினைக்…கி…க…வி…#@#?@&?!!?) விதி குறித்து இவ்வளவு தெளிவாக குழப்பும் குர் ஆன் தான் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிவிக்க வந்த மனிதக் கரங்களால் கரைபடியாத ஒரே வேதமாம். யாராவது தலை சுற்றி மயங்கி விழுந்தால் கம்பனி பொறுப்பல்ல.