ஆரம்பத்தை நோக்கி: பகுதி 19
உன்னுடைய ரப்பு வானவர்களை நோக்கி, “நிச்சயமாக நான் பூமியில் பிரதிநிதியை உண்டாக்கப் போகிறேன்.” என்று கூறிய போது….
(குர்ஆன் 2:30)
அல்லாஹ், மலக்கு(என்ற வானவர்)களிடம் தன் முடிவை தெரிவிக்க வேண்டிய காரணம் என்ன? இதில் மலக்குகளின் முடிவை அறிவதன் முலம் இரண்டாம் கருத்து தேவை என்ற நிலையே தெரிகிறது.
குர்ஆனின் மூலம் மனிதர்களுடனே உரையாடும் அல்லாஹ், மலக்குகளுடன் உரையாடியதில் புதுமை ஒன்றுமில்லை எனத் தோன்றலாம். ஆனால் இந்த உரையாடலின் தன்மை சற்று வேறுபட்டதே.
“நாங்கள் உன்னுடைய புகழ் கூறி உன்னைத் துதிப்பவர்களாகவும் இருக்கின்ற நிலையில் அதில் குழப்பம் செய்து இரத்தங்களை ஓடச் செய்பவர்களையா நீ அதில் உண்டாக்கப் போகிறாய்?” என்று அவர்கள் கூறினார்கள்…
(குர்ஆன் 2:30)
தெளிவு பெறும் விதமாக கேட்கப்பட்டதாக தோன்றும் இவ்வினா, அல்லாஹ்வின் முடிவிற்கு ஒரு மாற்று கருத்து. இதில் அனைத்து மலக்குகளின் முடிவும் ஒன்றே என்பதும் தெளிவாகிறது.
மனிதன் தெளிவற்றவன், குழப்பவாதி, போர்க்குணம் கொண்டவன் என்பதே மலக்குகளின் கணிப்பு. மேலும் அல்லாஹ், தன்னுடைய பிரதிநிதியாக மனிதனை (ஒருமை) பூமியில் படைக்க இருப்பதாக மட்டுமே இங்கு தெரிவிக்கிறான். ஓரே தவணையில் அல்லாஹ்வால் படைக்கப்பட்டதாக கூறப்படும் ஆன்மாக்களைப்பற்றி இங்கு நான் குறிப்பிடவில்லை.
குழப்பமும், இரத்தங்களை ஓட்டச் செய்யவும் மனிதர்கள் (பன்மை) தேவை. மேலும் மனிதனின் உடலமைப்பைப்பு, அவனின் திறமை, குணம், செயல்பாடுகள் மற்ற எல்லா விவரங்களும் அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் தெரியாது. கடந்த காலங்களில் நிகழ்ந்த போர்களும், அநீதிகளும், படுகொலைகளும், கலவரங்களும் இன்றும் தீவிரமாக தொடர்கிறது. மனிதர்களால் உருவாகும் குழப்பங்களால் இரத்த ஆறு ஒடும் என்ற மலக்குகளின் கூற்று மிக மிகச் சரியானது. அவர்களின் கணிப்பு சிறிதளவும் தவறவில்லை.வானவர்கள் அறிந்தது அல்லாஹ் தன்னுடைய பிரதிநிதியை பூமியில் படைக்க இருக்கிறான் என்ற ஒற்றை வரிச் செய்திமட்டுமே!. அல்லாஹ் மட்டுமே அறிந்த படைப்பின் ரகசியம் மலக்குகளுக்கு தெரிந்தது எப்படி?.