ஆரம்பத்தை நோக்கி: பகுதி 3
நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப்பின் சஹாபாக்களுக்குள் ஏற்பட்ட குழப்பத்தை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதை மறப்பதற்காக எனது சிந்தனையை வேறு வழியில் திருப்பினேன். இரத்தக்கறை படிந்த வரலாற்று செய்திகளை அறிந்து கொள்வதை முற்றிலும் நிறுத்தினேன். அரசியல் அதிகாரங்களுக்காக நடந்த படுகொலை வரலாற்றை படித்து வெறுப்படைவதற்கு பதிலாக, ஹதீஸ்களைப் பொருளுணர்ந்து படித்து மார்க்க அறிவைப் பெருக்கிக் கொள்வது என்று முடிவு செய்து கொண்டேன்.
ஒரு முறை லுஹர் தொழுகையில் இமாம் இரண்டாம் ரக்ஆத் முடிவில் அத்தஹியாத் (தொழுகையின் இடையே அமரும் சிறு இருப்பு) அமர்வதற்கு மறந்து விட்டார். அவரைப் பின்பற்றி தொழுகையை நிறைவேற்றிய அனைவருக்கும் இந்தத் தொழுகை கூடுமா? கூடாதா? என்று குழப்பம் ஏற்பட்டது நினைவிற்கு வர தொழுகை மற்றும் நோன்பு தொடர்பாக எனக்கு ஏற்பட்ட அடிப்படையான சில சந்தேகங்களுக்கு விளக்கங்களை தெரிந்து கொள்ளவும் விரும்பினேன். கவனக் குறைவாக தொழுகையில் இருக்கும் வேளைகளில் எனக்கு தொழுகையில் ஏற்படும் மறதிகள், உதாரணத்திற்கு நான்கு ரக்ஆத்களுக்கு இரண்டு ரக்ஆத்துகளை அல்லது ஐந்து ரக்ஆத்கள் தொழுவது அல்லது இரண்டாம் ரக்ஆத் முடிவில் அத்தஹியாத் இருக்க மறப்பது இவைகளுக்கு விளக்கம் தெரிந்து கொள்ள ஹதீஸ்களில் தேடுதல் துவங்கினேன். தொழுகையில் ஏற்படும் கவனக் குறைவுகளைப் பற்றி முஹம்மது நபி(ஸல்) அவர்கள் என்ன சொல்கிறார்?