New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும்


Guru

Status: Offline
Posts: 24625
Date:
தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும்
Permalink  
 


 

தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும்

 

அ. கணேசன் & எஸ். இராமச்சந்திரன் (ஆய்வாளர்கள், தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம், சென்னை.)

aganesan.jpg   srchandran.jpg

 

ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களின் “எல்லீசன் என்றொரு அறிஞன்” என்ற கட்டுரை (தாமஸ் டிரவுட்மனின் ‘திராவிடச் சான்று’ மொழிபெயர்ப்பு நூலுக்கான முன்னுரை) காலச்சுவடு மே 2007 இதழில் வெளிவந்துள்ளது.

கட்டுரையின் முடிவில், “தமிழ்ப் புலமை உலகில் க.கைலாசபதியும் அவரைக் கண்மூடி வழிபடும் சிலரும் திராவிடக் கருத்தியலையும் கால்டுவெல்லையும் பழித்துவந்துள்ளதைக் காண்கிறோம்” என்று வேங்கடாசலபதி குறிப்பிட்டுள்ளார்.

இதில் கண்மூடித்தனமான வழிபாடு எங்கிருந்து வந்துள்ளது எனப் புரியவில்லை. ஆரியத்துக்கு எதிரானது திராவிடம் என்ற கருத்தியல் நிலைப்பாட்டை உருவாக்கி அதற்கு ஒரு சித்தாந்த வடிவத்தைக் கற்பித்தவர்கள் தமிழக வேளாளர்களே என்ற உண்மையைப் பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்தவர் க.கைலாசபதி ஆவார். அதற்காகத் தமிழியல் ஆய்வுலகம் அவருக்குக் கடமைப்பட்டுள்ளது. இந்தக் கடமை உணர்வை வழிபாட்டு மனப்பான்மை என்று சொல்வது கட்டுரை ஆசிரியரின் வேளாளச் சார்பு நிலையை வெளிப்படையாகக் காட்டுகிறது.

தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்கள் அனைத்துக்கும் உரியவர்கள் வேளாளர்களே என்ற பம்மாத்து வேலை மறைமலை அடிகள் போன்றவர்களால் தொடக்கி வைக்கப்பட்டு க.ப.அறவாணன் போன்றவர்களால் இன்று வரை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.

கால்டுவெல் எந்தவித உள்நோக்கமும் அற்ற உண்மையான ஆய்வாளர் அல்லர். ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற அவரது நூல் மிகச் சிறப்பான ஆய்வு நூல் என்பதில் ஐயமில்லை. அதே வேளையில் இந்தியப் பண்பாட்டு, மரபு பற்றிய ஏளனமான பார்வையும், கிறிஸ்தவத்தை இந்த மண்ணில் வேரூன்றச் செய்ய வேண்டுமென்றால் தம்முடைய மரபு குறித்த பெருமித உணர்வை இந்த மண்ணின் மைந்தர்களிடமிருந்து நீக்கிவிட வேண்டுமென்ற நோக்கமுமே அவருடைய செயல்திட்டத்துக்குப் பின்புலமாக அமைந்த அம்சங்களாகும்.

கால்டுவெல் எழுதிய History of Tinnevelly என்ற நூலின் மூலமும், சென்னை அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகத்தினரால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள மண்டல வரலாற்றுத் தொகுப்பு நூல்களின் மூலமும் தமிழர்களின் வரலாற்று உணர்வு குறித்து கால்டுவெல் கொண்டிருந்த ஏளனமான கண்ணோட்டம் புலப்படுகிறது. பாளையப்பட்டுகளின் வம்சாவளி வரலாறுகள் கிழக்கிந்தியக் கும்பினியின் சர்வேயர் ஜெனரல் காலின் மெக்கன்ஸியால் 1803ஆம் ஆண்டில் தொகுக்கப்பட்டன. இவ்வம்சாவளி வரலாறுகள் குறித்துக் “கட்டுக்கதையைவிட மோசமான புனைவுகள்” என்று கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார். பாளையப்பட்டுகளின் வம்சாவளி வரலாறுகள் சென்னைக் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 1980ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் இவ்வரலாறுகள் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளன. இவை சில இடங்களில் சற்று மிகைப்பட எழுதப்பட்டிருப்பினும் நம்பகமான வரலாற்று அடிப்படையைக் கொண்டவையே என்பதில் ஐயமில்லை. அவ்வாறிருக்க, இவ்வளவு கடுமையான விமர்சனத்தை இவ்வரலாறுகள் குறித்துக் கால்டுவெல் முன்வைத்ததன் நோக்கம் என்ன? இந்தியர்களுக்கு வரலாற்றுப் பார்வை அறவே இல்லை என்ற எண்ணம் கொண்டவர் கால்டுவெல் என்பதுதான் இதற்குப் பதில்.

காலின் மெக்கன்ஸி, பிரான்சிஸ் வைட் எல்லிஸின் நெருங்கிய நண்பர் என்பதோடு இவ்விருவரும் ஆய்வுப் பணிகளிலும் தம்முள் தொடர்ந்து கருத்துப் பரிமாற்றம் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஆவர். காலின் மெக்கன்ஸியும் எல்லிஸ¤ம் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியின் நிர்வாக அமைப்பில் அங்கம் வகித்தவர்கள் ஆவர். அவர்களுக்குக் கால்டுவெல்லைப் போல கிறிஸ்தவ மதப்பரப்பல் நோக்கம் இருந்ததில்லை. நல்ல நிர்வாகிகள் என்ற பெயரெடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் இருந்ததால் அவர்கள் இந்த மண்ணின் மரபுகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று உண்மையாகவே விரும்பினார்கள். அவர்களுடைய நடவடிக்கைகளில் காலனி ஆதிக்க மனப்பான்மை சிறிதும் இருந்ததில்லை என்பதல்ல எமது வாதம். ஆளப்படுவோரின் வாழ்வியலை அனுதாப உணர்வுடன் புரிந்து கொள்ள வேண்டுமென்ற முயற்சி அவர்களிடம் இருந்தது என்பதைத்தான் குறிப்பிட விழைகிறோம். கள ஆய்வு அனுபவங்கள் அவர்களுடைய கண்ணோட்டத்தைச் செழுமைப்படுத்தின.

கால்டுவெல்லுக்கோ மதமாற்றக் களத்தில் அமோக மகசூலை அள்ளிவிட வேண்டுமென்ற உள்நோக்கம் இருந்த அளவுக்கு இந்த மண்ணின் மரபுகள் குறித்து அனுதாபத்தோடு கூடிய புரிந்துணர்வு இல்லை. Tinnevelly Shanars என்ற அவருடைய நூல் நெல்லைச் சீமைச் சான்றோர் சமூகத்தவர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. புராடஸ்டண்ட் கிறிஸ்தவ மதத்தை விசுவாசத்தோடு பின்பற்றி வந்த சான்றோர் சாதியினரே அவர் மீது கடும் சீற்றம் கொண்டனர். ஞானப்பிரகாசம் நாடார் என்ற புராடஸ்டண்ட் கிறிஸ்தவர் 1883ஆம் ஆண்டில் பாளையங்கோட்டை நீதிமன்றத்தின் மூலம் இங்கிலாந்துப் பிரதமர் கிளாட்ஸ்டனுக்கு இந்த நூலைத் தடை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். அவ்வேண்டுகோள் ஏற்கப்படாது போய்விட்டாலும்கூட, நெல்லைச் சீமையில் தம்மால் நிம்மதியாகத் தொடர்ந்து வாழ முடியாது என்று உணர்ந்துகொண்ட கால்டுவெல் கோடைக்கானலுக்குச் சென்று தம் இறுதிக்காலம் வரை, சற்றொப்ப இருபது ஆண்டுகள் அங்கேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதற்கெல்லாம் காரணமாக அமைந்தது சான்றோர் சமூகத்தவரின் பெருமிதம் வாய்ந்த வரலாற்றுப் பாரம்பரியத்தைப் புரிந்துகொள்ளவோ, ஏற்கவோ இயலாத வண்ணம் அவருடைய பார்வையில் படிந்து போய்விட்ட, கிறிஸ்தவ மதம் சார்ந்த ஐரோப்பிய இன மேன்மை என்ற காமாலைக் கண்ணோட்டம்தான்.

திராவிட மொழிகள் குறித்த பிரான்சிஸ் வைட் எல்லிஸின் முன்னோடிப் பங்களிப்பிற்கு உரிய அங்கீகாரத்தைக் கால்டுவெல் வழங்கவே இல்லை. எல்லிஸ் கிறிஸ்தவ மதத்தின்பால் விசுவாசம் உடையவர் அல்லர். பெளத்த சமயம் குறித்த அனுதாபத்தோடு கூடிய புரிதல் அவரிடம் இருந்தது. திருவள்ளுவர் உருவத்தைப் பொற்காசில் பொறித்து வெளியிடும் அளவிற்கு திருக்குறளை நேசித்தவர் எல்லிஸ். சென்னைப் பட்டிணத்தின் குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்குவதற்காக 27 கிணறுகள் வெட்டுவித்து வார திதி, நக்ஷத்திர யோக கரணம் (பஞ்சாங்கம்) பார்த்துப் புண்யாஹவாசனம் செய்தவர் எல்லிஸ். (திருமலை நாயக்கர் அரண்மனைக் காட்சிக்கூடத்திலுள்ள கல்வெட்டு வாசகம்.) இப்படிப்பட்ட ‘பாசண்டி’யை கால்டுவெல் போன்ற விசுவாசமான கிறிஸ்தவரால் எப்படி ஏற்றுக்கொள்ள இயலும்? இதுதான் கால்டுவெல்லின் கண்ணோட்டத்தில் இருந்த அடிப்படைப் பிரச்சினை ஆகும்.

பாளையப்பட்டுகளின் வம்சாவளி வரலாறுகள் கட்டுக்கதையைவிட மோசமானவை எனக் குறிப்பிடும் கால்டுவெல் தஞ்சைப் பெரியகோயில் மாவு விற்ற கிழவியின் பொருளுதவியால் கட்டப்பட்டது என்றும், அவள் மாவு விற்கும் நேரத்தில் மழை பெய்து மாவு கரைந்துவிட்டால் அவள் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடுமே என்பதற்காகக் கரிகால் சோழன் மேகங்களைச் சிறை செய்தான் என்றும் குறிப்பிடும் ஓர் அபத்தமான கதையினை வரலாற்றுக் குறிப்பு என்ற பெயரில் தொகுத்துள்ளார்.

மழை பிணித்தாண்ட பாண்டிய மன்னன் பற்றிய புராணக் குறிப்பு சிலப்பதிகாரத்தில் முதன் முதலில் இடம்பெறுகிறது. புதிய கற்காலப் பண்பாட்டு நிலையிலிருந்து இரும்பு யுக நாகரிகத்திற்குத் தமிழ்ச் சமூகம் மாற்றம் அடைந்தபோது, நீரைத் தேக்கி பிரம்மாண்டமான நீர் நிலைகளை உருவாக்கிக் குடிநீர் மற்றும் நீர்ப் பாசன வசதிகளைப் பாண்டிய மன்னர்கள் மேம்படுத்தி அதன்மூலம் மழை பொய்த்த வறட்சிக் காலங்களிலும் நீருக்குத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க வகை செய்தனர் என்ற வரலாற்றினை இது உணர்த்தக்கூடும் எனத் தொல்லியல் அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கால்டுவெல்லின் கண்ணோட்டத்தில் மழை பிணித்தாண்ட பாண்டிய மன்னன் கரிகால் சோழன் என்றும், அவன் மேகத்தைச் சிறை செய்தது மாவு விற்கும் கிழவியின் வியாபாரத்தைக் காப்பதற்குத்தான் என்றும் தோன்றியிருக்கின்றன. தமிழக வரலாறு பற்றிய கால்டுவெல்லின் வரலாற்றுக் கண்ணோட்டம் இதுதான்.

பாளையப்பட்டுகளின் ஆதாரபூர்வமான வரலாற்றைக் கட்டுக்கதையைவிட மோசமானதென்று குறிப்பிடும் கால்டுவெல் “மாவு விற்கும் கிழவி” போன்ற சிறுபிள்ளைத்தனமான கதைகளை வரலாறு என்று குறிப்பிடுவதன் உட்பொருள் என்ன? கால்டுவெல் ஆய்வுக் கண்ணோட்டமில்லாத அடிமுட்டாள் அல்லர். மிகச் சிறந்த அறிஞர். ஆனால், ஆங்கிலேயர்களை எதிர்த்து இன்னுயிர் ஈந்த கட்டபொம்மன் போன்ற திராவிட வீரர்களை (பாளையக்காரர்களை) இந்த மண்ணுக்கு உரிமையற்றவர்கள் என்றும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டவர்களே உண்மையான திராவிடர்கள் என்றும் ஒரு சித்திரத்தைத் தீட்ட முயன்றவர் கால்டுவெல். அவர் தமிழர்களை முட்டாள்களாகவும், காட்டுமிராண்டிகளாவும் கருதியதால்தான் மாவு விற்கும் கிழவி பற்றிய அபத்தமான கதையை வரலாற்றுக் குறிப்பாகப் பதிவுசெய்துள்ளார் என்பதுதான் இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை. திராவிட இயக்கத்தாரின் தொடக்க கால கோஷங்களுக்கும், ‘தீ பரவட்டும்’ போன்ற இயக்கங்களுக்கும் கால்டுவெல் ஒரு முன்னோடியான உந்துசக்தியாக இருந்துள்ளார் என்பதை மறுப்பதற்கில்லை. இதைத்தான் திராவிட இயக்கத்தின் “அறிவுலக வேர்கள்” என்று வேங்கடாசலபதி குறிப்பிடுகிறார் போலும்.

“ஆரியம் போல் உலக வழக்கழிந்து ஒழியாத் தமிழின் சீரிளமைத் திறத்தை வியந்து மனோன்மணியத்திற்குத் தமிழ்த் தெய்வ வணக்கம் இயற்றிய பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை, கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதரத்து உதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும் என்று எழுதுவதில் இப்புலமைக் கருத்தாக்கத்தின் அழகியல் / அரசியல் வெளிப்பாட்டைக் காணலாம்” என வேங்கடாசலபதி குறிப்பிடுவதில் ‘அழகியல்’ என்ற சொல்லை நீக்கிவிட்டால் பொருத்தமாக இருக்கும்.

மகாபாரதத்தைத் தமிழில் இயற்றிய வில்லிபுத்தூராரின் மகனும், திருமுனைப்பாடி நாட்டுச் சனியூர் வீரராகவாச்சாரியார் பேரனுமான வரந்தருவார்,

ஓங்கலிடை வந்துயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலி நீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்றேனையது
தன்னேரிலாத தமிழ்


- என்று பாடியுள்ள வாழ்த்துப்பாவில் இடம்பெறும் தமிழ்த் தெய்வ வழிபாடு ஆரியத்தோடு ஒட்டியும் உறழ்ந்தும் தன்மயமாக்கியும் வளர்ந்த தமிழின் திறத்தை வியந்ததே தவிர ஆரியம் உலக வழக்கு ஒழிந்த மொழி என ஒப்பிட்டுப் பெருமைப்படவில்லை. வெங்கதிரோனுக்கு நிகரான கோள் எதுவும் இல்லாதது போலத் தமிழுக்கு நிகரான வேறொரு மொழி (சமஸ்கிருதம் உட்பட) உலகில் இல்லை என்று வரந்தருவார் பெருமிதத்தோடு கூறுவது வெளிவேஷம் என்று சொல்லிவிட முடியுமா? தன்னேரில்லாத தமிழைப் போற்றிய வரந்தருவார் போன்றவர்களைக்கூட ஆரியர்கள் என்று பட்டங்கட்டி இருட்டடிப்புச் செய்துவிட்டுத் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர்களைத் தமிழர்களின் தந்தையாகப் போற்றியதுதான் திராவிட இயக்கத்தின் மகத்தான சாதனை. பிராம்மணர் எதிர்ப்பு / வேளாண் தலைமை ஏற்பு / அன்னிய-ஐரோப்பிய ஆதரவு ஆகிய அடிப்படைகளே திராவிட இயக்க அறிவுலக வேர்கள் ஆகும். மனோன்மணியம் சுந்தரனாரைத் திராவிட இயக்க அறிவுலகப் பிரதிநிதிகளுள் ஒருவராக வேங்கடாசலபதி முன்மொழிவதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்க முடியாது. ஆனால் பிரான்சிஸ் வைட் எல்லிஸ் போன்ற திராவிட மொழிகள் தொடர்பான ஆய்வு முன்னோடிகளிடத்து திராவிட இயக்க அறிவுலக வேர்களைக் காண்பது அரைகுறையான புரிதலின் விளைவாக இருக்க வேண்டும் அல்லது ஆய்வு நேர்மை இன்மையின் வெளிப்பாடாக வே இருக்க வேண்டும். தாமஸ் டிரவுட்மனின் சொற்களிலேயே இதனைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

பா. ரெங்கதுரை says:

மறைமலை அடிகள் ஒரு ஜாதி வெறியர். இவர் பிறப்பினால் ஒரு தெலுங்கர் (24 மனைத் தெலுங்குச் செட்டியார்) என்றாலும், சைவ வேளாளப் பெண் ஒருவரை மணந்து வேளாளராக ஜாதி மாறினார். தன் தாய்மொழி தெலுங்கு என்பதை மறைத்துக் கொள்வதற்காகவே தனித் தமிழ் வேடம் கட்டி ஆடியவர். ஆனாலும், தம் பூர்வாசிரம உறவினர்களுடன் பேசும்போது உள்ளூர்த் தமிழர்களை அரவாடு என்றே இழிவாகக் குறிப்பிடுவார்.

 

பா. ரெங்கதுரை says:

ஆ. சிவசுப்பிரமணியன், ஆ.இரா.வேங்கடாசலபதி ஆகியோர் எழுதியவற்றை ஒழுங்காகப் படித்துள்ள எவருக்கும் அதில் வெளிப்படும் வேளாள ஜாதி வெறியும், சான்றோர் சமூகத்தின் மீதுள்ள வெறுப்பும் புலப்படும். எஸ்.வி. தவிர. 24 மனைத் தெலுங்குச் செட்டியார் சமூகப் பெரியோர்கள் எவரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். மறைமலை அடிகள் எந்த ஜாதி என்பதை அவர்கள் சொல்வார்கள். உங்களைப் போலவே தமிழ் விக்கியில் வேறு பெயரில் வக்கிரமாக எழுதிவிட்டு அதையே ஆதாரமாகக் காட்டினால்தான் நம்புவீர்களா?



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 



“திராவிடச் சான்றோடு திராவிட இயக்கத் தோற்றத்தை நேரடியாகத் தொடர்புபடுத்துவது இரண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நிகழ்ந்த பல வரலாற்று நிகழ்வுகளின் தாக்கத்தைப் புறக்கணிப்பதாகும். மேலும், திராவிட இயக்கம், தமிழ்நாட்டோடு நின்றுவிட்டது மட்டுமல்ல, அது பிராமண எதிர்ப்பையும் தன் தோற்றத்துக்கான முக்கியக் காரணமாகக் கொண்டிருந்தது. இவை திராவிடச் சான்றிலிருந்து நேரடியாக முகிழ்த்தவை அல்ல; மேலும், திராவிடச் சான்று குறித்த ஆய்வில் எல்லிஸ¤டன் ஈடுபட்ட சங்கரய்யா, பட்டாபிராம சாஸ்திரி ஆகியோர் தெலுங்கு பிராமணர்களாவர் என்பதும் மனங் கொள்ளத்தக்கது.” (பக்கம் 224.) 

மொழியியல் கண்ணோட்டத்தில் திராவிட மொழிகள் என்ற அடையாளத்தைக் காணும் முயற்சியின் ஆரம்பகட்டத்தை தாமஸ் டிரவுட்மன் (மொழிபெயர்ப்பாளரின் சொற்களில்) “அடிமுடி காணும் கதையின் மகிழ்ச்சியான பகுதி” (பக்கம் 221) என்கிறார். “அதை (திராவிட மொழிகள் என்ற கருத்தாக்கத்தை) சங்கரய்யா எல்லிஸிடமிருந்து பெற்றாரா, எல்லிஸ் அவரிடமிருந்து பெற்றாரா என்பதை நாம் உறுதியாகச் சொல்ல முடியாது. 1800ஆம் ஆண்டிலேயே - அதாவது எல்லிஸ¤க்கும் சங்கரய்யாவுக்கும் தொடர்பு ஏற்பட்டதற்கான ஆதாரம் கிடைக்கும் காலத்திற்கு முன்பே - திராவிடக் கருத்தையொத்ததொரு எண்ணத்தை எல்லிஸ் வெளிப்படுத்திவிட்டார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். நாம் முடிவாகச் சொல்லக் கூடியது என்னவென்றால் திராவிடக் கருத்து என்பது சென்னையில் வாழ்ந்த பல அறிஞர்களினுடைய சிந்தனைகளின் இணைவின் விளைவு என்பதேயாகும்” (பக். 221-222) என்று டிரவுட்மன் சிறிதும் குழப்பமின்றித் தெரிவித்துள்ளார்.

திராவிட இயக்க அறிவுலக வேர்களுள் ஒருவரான மனோன்மணியம் சுந்தரனார் குறிப்பிடுவது போல, கன்னடமும் களி தெலுங்கும் துளுவும் தமிழிலிருந்து உதித்தவை அல்ல. திராவிட மொழியியல் நிபுணர்கள் திராவிட மொழிகளின் பரிணாம வளர்ச்சி பற்றி வகைதொகைப்படுத்தி ஆராய்ந்துள்ள கருத்தின்படி தமிழ் மொழி திராவிட மொழிகளிலேயே மிகவும் செம்மையான மொழியாகும். இந்தோ-ஆரிய மொழிகளில் சமஸ்கிருதம் பெற்றுள்ள இடத்தையொத்த நிலை இதுவாகும். சமஸ்கிருதத்தைவிட முற்பட்டது வேத கால ஆரிய மொழி. வேத கால ஆரிய மொழிக்கு முற்பட்டவை இந்தோ-ஆரியப் பிராகிருத மொழிகள். இது போன்றே, முந்து-தென் திராவிட மொழியிலிருந்து (அம்மொழி காலப்போக்கில் சிதைந்து வழக்கொழிந்துவிட்டது) துளு தனி மொழியாகவும் தமிழ், கன்னடம், மலையாளக் கூறுகள் கலந்த முந்து-தமிழ் (proto-Tamil) தனி மொழியாகவும் பிரிந்திருக்க வேண்டுமென்றும் முந்து-தமிழிலிருந்து கன்னடம் தனி மொழியாகவும், தமிழ்-மலையாள மொழிக் கூறுகள் கலந்த முந்து-தமிழ் மொழி தனி மொழியாகவும் பிரிந்திருக்க வேண்டுமென்றும் கி.பி. 5ஆம் நூற்றாண்டளவில் இதிலிருந்து மலையாளம் பிரிந்து சென்றுவிட்டதால் முந்து-தமிழ் மொழி தமிழ் மொழியாக நீடித்ததென்றும் மொழியியலாளர்கள் கருதுகின்றனர்.

வேறொரு சித்திரமும் சில திராவிட மொழியியல் அறிஞர்களால் தீட்டப்பட்டுள்ளது. துளுவும் தமிழும் கி.மு. 1000இல் முந்து-தென் திராவிடத்திலிருந்து பிரிந்திருக்க வேண்டுமென்றும் அதனையொட்டி முந்து-மத்திய திராவிடத்திலிருந்து தெலுங்கு கிளைத்திருக்க வேண்டுமென்றும் துளுவும் தெலுங்கும் உறவாடிக் கன்னடம் காலப்போக்கில் தனிமொழியாக உருவாகியிருக்க வேண்டுமென்றும் மொழியியல் அறிஞர்கள் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் (தெ.பொ.மீனாட்சிசுந்தர கிராமணியார்), செக்கஸ்லோவேக்கியத் தமிழறிஞர் கமில் சுவலபில் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறிருக்க, வட இந்தியப் பிராகிருதம் அனைத்தும் சமஸ்கிருதத்திலிருந்துதான் தோன்றின என்று கூறுவது எத்தகைய அபத்தமான, மொழிகளின் பரிணாம வளர்ச்சி முறைக்கு நேர்மாறான கண்ணோட்டமாக இருக்குமோ அது போன்றதே மனோன்மணியம் சுந்தரனாரின் கருத்தும் ஆகும். மனோன்மணியம் சுந்தரனாரையும் கால்டுவெல்லையும் கண்மூடித்தனமாக வழிபடும் திராவிட இயக்கத்தாருக்குத் தற்காலத்து திராவிட மொழியியல் நிபுணர்கள் குறிப்பிடும் கருத்துகள் உவப்பானவையாக இரா. இக்கருத்துகளைப் படிப்பதால் அவர்களுக்கு ஓர் ஒவ்வாமைகூட ஏற்பட்டுவிடக்கூடும். அதற்காக எல்லிஸ் துரைமகனாரின் போற்றத்தக்க தமிழ்ப் பணிகளை வரிசைப்படுத்திக் கூறிவிட்டு போகிற போக்கில் திராவிட மாயைக்கு எதிரான கருத்தியலைப் பழித்து எழுதியுள்ளது வேங்கடாசலபதியின் ஆழ்மன அரிப்புகளை வெளிப்படுத்துகிறதே தவிர வேறொன்றுமல்ல.

வள்ளுவம் பற்றிய அயோத்திதாசப் பண்டிதரின் சில குறிப்புகளை மேற்கோள் காட்டும் வேங்கடாசலபதி, வள்ளுவர் குலத்தவர்கள் இன்றைக்குப் பறையர் சமூகத்தின் ஒரு உட்பிரிவாக இருப்பதையும், அவர்களே வானநூல், சோதிடம், மருத்துவம், இசை போன்ற துறைகளில் வல்லுனர்களாக இருப்பதையும், சமயத் தலைவர்கள் என்ற பொருளில் தரங்கம்பாடி ஆவணம் ஒன்றில் அவர்கள் குறிப்பிடப்பட்டிருப்பதையும் அறிவாரா? இப்போது பறையராகக் கருதப்படும் அவர்களிடையே நிலவுகின்ற தாழ்வு மனப்பான்மையைப் போக்குவதற்கும், தமிழ்ப் பண்பாட்டின் விழுமியத்திற்குச் சொந்தம் கொண்டாடும் உரிமை படைத்தவர்கள் அவர்கள் என்ற உண்மையை நிலைநாட்டுவதற்கும் ஆயத்தமாக உள்ளாரா? அயோத்திதாசப் பண்டிதர் பெளத்தராக மாறுவதற்கு மூல காரணமாக இருந்த பிரம்ம ஞான சபைத் தலைவர் ஹென்றி ஆல்காட் சிங்கள பெளத்தர்கள்பால் கொண்டிருந்த அளவுக்கு இலங்கைச் சைவத் தமிழர்கள்பால் பரிவு கொண்டிருக்கவில்லை. இலங்கைச் சைவத் தமிழர்களிடையே நிலவுகின்ற சாதி வேறுபாடு சிங்கள பெளத்தர்களிடையே இல்லை. வள்ளுவத்தையும், அயோத்திதாசரையும் போற்றுகின்ற வேங்கடாசலபதி போன்றவர்கள் இத்தகைய உண்மைகளை ஏற்றுக்கொள்ளத் தயாரா?



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

ப்ரவாஹன் says:

Similarly, all of Mr.Ramachandran’s researshes are either towards belittling vELaLars or inventing a false Kshatriyahood for his caste.

தமிழக வரலாறு எழுதுதலில் முன்னோடியாகக் குறிப்பிடப்படும் கனகசபைப் பிள்ளையில் தொடங்கி கே.கே. பிள்ளை என்றறியப்படும் கனகசபாபதிப் பிள்ளை வரையிலும், ‘நடுநிலை’ ஆய்வாளரிலிருந்து நவீன ‘முற்போக்கு’ ஆய்வாளர்கள் வரையிலும் தமிழகத்தில் நான்கு வர்ணங்கள் இருந்ததில்லை என்று வரலாற்றுத் தரவுகளையே திரித்துச் சொல்லும் பாங்கைக் காண்போம். தமிழர்களின் வரலாற்றை எழுதிய முன்னோடியாகக் கருதப்படும் கனகசபைப் பிள்ளை சொல்வதைப் பாருங்கள்:

“நான் விவரித்துக் கொண்டிருக்கும் காலத்திற்கு குறைந்தது ஐந்தாறு நூற்றாண்டுகள் முன்னதாகத் தமிழகத்தில் குடியேறத் தொடங்கிய பிராமணர்கள் தங்களின் சாதி முறையைத் தமிழர்கள் மீது சுமத்த முயன்றனர். கி.பி. முதல் அல்லது இரண்டாவது நூற்றாண்டில், தொல்காப்பியன் என்ற பெயர்கொண்ட ஒரு பிராமணரால் இயற்றப்பட்ட, நடப்பிலுள்ள முற்பட்ட இலக்கணப் பிரதியில் அறிவர் அல்லது துறவிகள் குறித்து அடிக்கடி சுட்டப்படுகிறது. ஆனால், சமூகத்தின் வகுப்புகள் குறித்து விவரிக்கின்ற அத்தியாயத்தில், அறிவர் பற்றி குறிப்பிடுவதெதையும் விடுத்து, பூணூல் அணிகிற பிராமணர்களை அவர் முதலிடத்தில் வைக்கிறார். போர் வீரர்கள் என்று சொல்லாமல், ஏதோ சேரர், சோழர், பாண்டியர் என்ற மூன்று அரசர்களே ஒரு சாதியாக ஆகிவிட முடியும் என்பதைப் போல எச்சரிக்கையுடன் அரசர்கள் என்பதாக புனித சாதியைச் சொல்கிறார்; வணிகத்தின் மூலம் வாழ்க்கை நடத்துகிறவர்கள் மூன்றாவது சாதியாகிறார்கள். அரசர்களோ அல்லது வணிகர்களோ பூணூல் அணிந்திருந்தனரா என்று அவர் சொல்லவில்லை. பிறகு வேளாளரைத் தனிமைப்படுத்தி, நிலத்தில் பயிரிடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு தொழிலில்லை என்கிறார். இங்கே அவர் வேளாளர்களைச் சூத்திரர் என்று சொல்லவில்லை, ஆனால், சாதாரண வேளாளர்களைச் சூத்திரர்களாகவும், அரசர்களாக இருந்த வேளாளர்களை க்ஷத்ரியர்களாகக் கௌரவிக்க வேண்டும் என்றும் மறைமுகமாகக் குறிப்பிடுகிறார். இதுதான் தமிழர்களைத் தங்களின் சாதியமைப்பின் கீழ் கொண்டுவர பிராமணர்கள் செய்த முதல் முயற்சி. ஆனால், க்ஷத்ரிய, வைசிய, சூத்திர சாதிகள் தமிழகத்தில் இல்லாததனால், அவர்களால் வெற்றிபெற முடியவில்லை; மேலும், தன்னை க்ஷத்ரியன் என்று சொல்லிக்கொள்கிற ஒரு படையாச்சி வீட்டிலோ அல்லது வைசியர் எனுந் தகுதிக்குரிய ஒரு வணிகர் வீட்டிலோ இன்றுவரையிலும் வேளாளர்கள் உணவருந்தவோ அல்லது தண்ணீர் குடிக்கவோ மாட்டார்கள்”. (The Tamils 1800 Years Ago, Kanakasabai Pillai, 1904)

தமிழகத்தில் க்ஷத்ரியர்களே இல்லை என்று சொன்ன இவர், அரசர்களாக உள்ள வேளாளர்களை க்ஷத்ரியர்களாக கௌரவிக்க வேண்டும் என்று தொல்காப்பியர் சொன்னதாகத் தம்போக்கில் அவிழ்த்து விடுகிறார். அதாவது தங்களுக்கு ‘க்ஷத்ரிய’ (அரச) அந்தஸ்து கோருகிறார். க்ஷத்ரியப் பிரிவு என்ற ஒன்று இருந்தால்தான் இவர்கள் அதைக் கோரமுடியும் என்பதற்காக, ‘அரசர்களாக உள்ள வேளாளர்களை க்ஷத்ரியர்களாக கௌரவிக்க வேண்டும்’ என்று தொல்காப்பியர் கூறியதாகச் சேர்த்து கொள்கிறார். இவர்களின் நான்கு வர்ணம் இல்லை; ஆனால் அது வேண்டும் என்பது எப்படிப்பட்டதென்றால், தமிழ்த் திரைப்படங்களில் பிரபலமாகிவிட்ட ‘வரும்… ஆனா வராது…’ என்ற வசனத்திற்கு ஒப்பாகச் சொல்லலாம்.

இவருக்குப் பிறகு சுமார் 60-70 ஆண்டுகள் கழித்து, ‘சாதியற்ற ஒரு சமுதாயமும் மனித சகோதரத்துவமுமே எனது இலட்சியம்’ என்று சொல்லிக்கொண்ட, வரலாற்றாசிரியர் எனப் பெயர்பெற்ற முனைவர் கே.கே.பிள்ளை எழுதுவதைப் பாருங்கள்:

“பிராமணிய (ராஜ)தந்திரத்திலான கில்லாடி வேலை என்னவெனில், இந்தியாவிற்கு வந்த காட்டுமிராண்டிகள் மற்றும் சமூக மேம்பாட்டைத் தேடிக்கொண்டிருந்த பூர்வகுடி சூத்திரர்கள் ஆகியோரிலிருந்து இருபிறப்பாளர்களாக தீக்ஷை அளித்து, க்ஷத்ரியர்கள் என்ற புதிய ஒரு வகையினைப் படைத்ததுதான். நாம் பின்னர் பார்க்கவிருப்பதைப் போல, இத்திட்டமானது கடைக்கோடி தெற்கில் முறையாகச் செயல்படவில்லை. அங்கே நன்கு வரையறுக்கப்பட்ட ஒரு க்ஷத்ரியர்கள் வகுப்பு இல்லை.”

“புறநாநூறில் நாற் சாதிகள் (வர்ணங்கள்) குறித்த ஒரு குறிப்பு உள்ளது, அது ‘வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்’ என்பதாகும். வெளிப்படையாகவே இது மரபார்ந்த இந்திய நான்-மடி சாதி அமைப்புமுறையைக் குறிப்பிடுகிறது. ஒருக்கால், இன்னும் மிக முன்னதாகவே, அதாவது, கடைச் சங்க செவ்வியல் நூல்களுக்கு முன்னரே யாக்கப்பட்டதாகத் தெரிகின்ற தொல்காப்பியத்தில், நாற் சாதிகள் வெவ்வேறு பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. தொல்காப்பியர் அவற்றை அந்தணர், அரசர், வைசியர் மற்றும் வேளாளர் என்று குறிப்பிடுகிறார். வேளாளர்கள் சூத்திரர்களோடு சமன்படுத்தப்பட்டனரா இல்லையா என்பது சர்ச்சைக்குரிய ஒரு விஷயம்; பிற்காலங்களில் வேளாளர்கள், சூத்திரரில் ஒரு பிரிவினராக மட்டுமே இருந்தனர். ஒருக்கால், வட இந்தியாவின் சூத்திர வகுப்பின் வகைப்பாடு முழுவதுமே பின்னர் தமிழகத்தில் வேளாளர் என விவரிக்கப்பட்டனர். எப்படியிருப்பினும், வகைப்பாட்டிலான இந்த வேறுபாடு காரணபூர்வமானதல்ல.”

“உள்ளபடியே க்ஷத்ரியர் என்போர் தமிழகத்தில் ஒருபோதும் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (க்ஷத்ரியர்களுக்கான) தமிழ் ஒப்புமையான வேந்தர்கள், சில நேரங்களில் வைசியர்களையும் கூட உள்ளடக்கிய ஒருங்கு சேர்ந்த ஒரு வகுப்பாகும்; வட இந்திய வழக்கிலிருந்தான இவ்வேறுபாடும் காரணபூவமானதல்ல.”

“க்ஷத்ரியர்களாகக் கருதப்பட்ட அரசர்கள், வேளாளர் சாதியிலிருந்து மணம் புரிந்துகொண்டதுடன், சில வேளாளர்கள் அரசர்களாகவும் ஆகியுள்ளனர்”. ( Chapter XV of Studies in the History of India with special reference to Tamil Nadu, K.K. Pillai, 1979)

பிராமணர்கள், க்ஷத்ரிய என்றொரு வகுப்பைப் படைத்தனர்; புறநாநூறில் நான்கு வர்ணங்கள் பற்றிய குறிப்பு உள்ளது; வேளாளர்கள் சூத்திரரா இல்லையா என்பது சர்ச்சைக் குரியது; க்ஷத்ரியர் என்போர் தமிழகத்தில் ஒருபோதும் தோன்றவில்லை; க்ஷத்ரியர்களாகக் கருதப்பட்ட அரசர்கள் வேளாள சாதியிலிருந்து மணம் புரிந்து கொண்டனர்; வேளாளர்கள் அரசர்களாகவும் ஆகியுள்ளனர், என அடுத்தடுத்து ஏறுக்குமாறாகக் குறிப்பிடுகிறார். தமிழகத்தில் க்ஷத்ரியர்கள் இல்லையென்றும் அதே நேரத்தில் தாங்களே க்ஷத்ரியர்கள் என்றும் சொல்வதற்குப் படுகின்ற பாட்டைப் பாருங்கள்.

க்ஷத்ரிய வர்ணம் ஒன்று தமிழகத்தில் இருந்தது என்பதை ஏற்றுக் கொண்டுவிட்டால், இவர்கள் கட்டமைத்துள்ள தமிழக வரலாறு மணல் கோட்டையைப் போலச் சரிந்துவிடும். திராவிட அரசியலுடன் நேரடித் தொடர்பு இல்லாத இவர்களைப் போன்றவர்கள் பிராமண எதிர்ப்பு திராவிட அரசியலுக்கு அமைத்துக் கொடுத்த அடித்தளம் இப்படிப்பட்டதெனில், திராவிட இயக்கம் செல்லம் கொஞ்சியவர்கள் எப்படிச் சொல்லியிருப்பர் என்பதை எவரும் எளிதாக ஊகித்துக் கொள்ளலாம். அடுத்ததாக, அடித்தள, விளிம்புநிலை மக்களின் வரலாற்றை ஆய்வு செய்கின்ற நவீன முற்போக்கு ஆய்வாளரின் முகத்திரையை நாம் பதிப்பிக்கின்ற இந்நூலின் பின்புலத்தில் கொஞ்சம் விலக்கிப் பார்க்கலாம்.

“திருவாங்கூர் மாநிலத்தின் ஒரு பகுதியாக குமரி மாவட்டம் இருந்தபோது பல்வேறு சாதிகளைச் சேர்ந்த பெண்கள் மார்பை மறைக்கும் உரிமையற்று இருந்தனர். அரை நிர்வாணக் கோலத்திலேயே இப்பெண்கள் பொது இடங்களில் நடக்கவேண்டிய அவலம் நிலவியது. அக்காலத்தில் ஆதிக்கச் சக்திகளாக விளங்கிய நாயர்களும் வெள்ளாளர்களும் இந்த விதிமுறையை நிலநிறுத்துவதில் உறுதியாக நின்றனர். இக்கொடுமையை எதிர்த்து, கி.பி. 1822,1828-1928,1858 என மூன்று கட்டங்களில் தென் திருவிதாங்கூர்ப் பகுதி நாடார் சமூகத்தினர், கிறித்தவ மிஷனரிகளின் ஆதரவோடு போராட்டம் நடத்தி வெற்றிபெற்றனர்.

தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் வாழ்ந்த நாடார் சாதியினருக்கு, கோவிலில் நுழைந்து வழிபடும் உரிமை இல்லாதிருந்தது. இதை எதிர்த்து 1872,1874 ஆம் ஆண்டுகளில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும், 1878 ஆம் ஆண்டில் திருத்தங்கலிலும், 1897 இல் கமுதியிலும், 1899 இல் சிவகாசியிலும் கோவில் நுழைவுப் போராட்டங்களை இச்சமூகத்தினர் தாங்களாகவே முன்னின்று நடத்தினர். கோவில் நுழைவுப் போராட்டங்களை இந்தியத் தேசிய காங்கிரஸ் அறிவிப்பதற்கு முன்னரே இப்போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.”

முதல் பார்வையில் மிகவும் நியாயமானது போலத் தோற்றமளிக்கும் இவரது எழுத்தில் உள்ள திரிப்புகளை நாம் காண்போம். ‘பல்வேறு சாதிகளைச் சேர்ந்த பெண்கள் மார்பை மறைக்கும் உரிமையற்று இருந்தனர்’ என்று சொல்வதன் மூலம் தொடக்கத்தில் இருந்தே சான்றோர்/நாடார் சமூகத்தினரும் அவ்வாறு இருந்ததாகச் சொல்லப்படுகிறது; உண்மையில் அவர்களிடம் வெகு இயல்பாக இருந்த உரிமை நாயர்களாலும் வெள்ளாளர்களாலும் திட்டமிட்டு திடீரென வலிந்து பறிக்கப்பட்டது. தாங்கள் இயல்பாக அனுபவித்துவந்த உரிமை திடீரெனப் பறிக்கப்பட்டதை எதிர்த்துத் தன்னெழுச்சியாகப் போராடிய நாடார்/சான்றோர் சமூகத்தினருடன், ஏற்கெனவே கிறித்தவத்துக்கு மாற்றியிருந்த நாடாரில் ஒரு பிரிவினரும் சேர்ந்து போராடியதை முன்வைத்து, சாதிய இந்து சமூகத்தில் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு கிறித்தவர்களே உய்வளிக்க வந்தவர்கள் என்பதான ஒரு சித்திரம் தீட்டப்படுகிறது.

”போலி க்‌ஷத்ரியத் தகுதி” என்று எஸ்.வி. குறிப்பிடுவதில்தான் சூட்சமம் அடங்கியுள்ளது என்பதை மேற்படி மேற்கோள்களிலிருந்து எவரும் அறிந்து கொள்ளலாம். ஏனெனில் தமிழகத்தில் ஷத்ரியர் என்ற ஒரு பிரிவு இருப்பதை அங்கீகரித்துவிட்டால் பார்ப்பனர்களுக்கு எதிராக அனைவரையும் ஒருங்கிணைத்து நிறுத்துவது இயலாமற் போய்விடும்.
அதனால் அதை மறுப்பதை திராவிட இயக்கம் தலையாய நோக்கமாகக் கொண்டது.
இலக்குவனார் போன்ற திராவிட இயக்கத்தின் பால் பரிவு கொண்ட ‘தமிழறிஞர்’ தொல்காப்பியத்தை மொழிபெயர்த்த போது அதில் வருகின்ற நான்கு வர்ணம் குறித்த பகுதிகள் இடைச்செருகல் என்று ஒரேயடியாகக் கூறி அதை மொழிபெயர்க்காமல் விட்டு ஆங்கிலத்தில் பதிப்பித்தார். இவர்களின் நான்கு வர்ணம் குறித்த நிலைபாடுகள் இவர்களின் ஞானத் தந்தையான கால்டுவெல்லின் கருத்தை ஒட்டியிருப்பதில் ஒரு வியப்புமில்லை. அந்தக் கால்டுவெல்தான் ‘அறியாதவர்’ (ignorant) என்று எஸ்.வி. சான்றளிக்கிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

ப்ரவாஹன் says:

“There is a difference between myself and Mr.Ganesan or You. I am neither a researcher, nor claim to be one.” நான் ஒரு ஆய்வாளர் அல்ல என்பதாகவே இருக்கலாம்… அதில் ஒன்றும் நான் குறைந்துவிடப் போவதில்லை… சாரமான விஷயம் என்னவெனில், வரலாற்று ஆய்வாளராகக் கருதப்படும் -அநேகமாக நீங்களும் கருதுகிற- திரு. கே.கே. பிள்ளை என்கிற கனகசபாபதிப் பிள்ளை, ஷத்ரியர்கள் இல்லையென்றும், புறநானூற்றில் நான்கு வர்ணம் பற்றி வருகிறதென்றும், ஷத்ரியர்களாகக் கருதப்பட்ட அரசர்கள் வேளாள சாதியிலிருந்தும் மணம் புரிந்து கொண்டார்களென்றும் கூறி அதன் மூலம்.. அதாவது பெண் கொடுத்ததன் மூலம் நாங்களும் ஷத்ரியர்கள்தான் என்று சொல்லவருவதை எஸ்.வி. ஆராய்ச்சிக் கருத்தாக ஏற்கிறாரா இல்லையா… அவர் கே.கே. பிள்ளையைப் பற்றி ஒரு ஆராய்ச்சியாளர் என நினைக்கிறாரா இல்லையா?
இது ஒரு பக்கமிருக்க…
கால்டுவெல் ஒப்பிலக்கணம் எழுதியதை கட்டுரையாளர்கள் திரு. அ. கணேசன் மற்றும் சீ. இராமச்சந்திரன் ஆகியோர் ”திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற அவரது நூல் மிகச் சிறப்பான ஆய்வு நூல் என்பதில் ஐயமில்லை” என்று சொல்லியிருப்பதை கவனிக்காமல் ஏதோ கால்டுவெல்லை அனைத்து வகையிலும் மோசமாகச் சித்தரித்துள்ளதைப் போன்று “His other contributions to Dravidian Linguistics can not be belittled ” என்று எஸ்.வி. எழுதுவதன் நோக்கம் என்ன?

“notion of kshatriyahood” என்று எழுதுவதன் மூலம்.. ஒரு சமூக நிறுவன வகைப்பாடாக/தகுதியாக இருந்த ஒன்றை ஏதோ வெறும் கருத்துருவாக மட்டுமே காட்ட நினைப்பதில்தான் சிக்கல். தமிழகத்தில் நான்காம் வர்ணமாக இருந்த வேளாளர்கள் என்பதை ஒப்புக் கொள்வதில்தான் அவர்களுக்கு இருக்கின்ற சிக்கல்… அதை எஸ்.வி.யிடமும் பார்க்க முடிகிறது. இது அவர்களை சிறுமைப்படுத்துவதன்று. மாறாக வரலாற்றில் எது எது என்னவாக இருந்ததோ அதை அதை அப்படியே பார்ப்பது.. மாற்றி இல்லாததாகச் சொல்ல விழைவதில்தான் சிக்கல்.

அடுத்து காவ்யா அவர்கள் கூறியுள்ளவற்றிற்கு சில விளக்கங்கள்:

”அவர் பார்ப்பனீயத்தைத் பழந்தமிழ் இலக்கியவுரைகளில் ஆங்காங்கே திணித்தார் என்று ஆதாரத்தோடு காட்டி மறுத்தார்கள் திராவிடச் சாயலையுடைய தமிழறிஞர்கள்” இதற்கு ஆதாரமென்ன என்பதைச் சொல்லாமல் நான் ஆதாரம் காட்டவில்லை என்று கேட்கின்ற காவ்யா செய்கின்ற வேலை… கண்ணாடி வீட்டுக்குள் நின்று கல்லெறிவது.
பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்ததில் எத்தனை சுவடிப் பிரதிகள் கிடைத்தனவோ அத்தனையிலும் உள்ள பாட பேதங்களுடன் உ.வே.சா. பதிப்பித்துள்ளதை என்றைக்கேனும் பார்த்ததுண்டா? பதிப்பு நெறி என்றால் அதை உ.வே.சாவிடம் கற்கவேண்டும் என்ற அளவுக்குப் பலரும் கூறியுள்ளனர். அநேகமாக ஆ.இரா. வேங்கடாசலபதியும் கூட அக்கருத்தைப் பதிவு செய்துள்ளதாக நினைக்கிறேன்.
திராவிட இயக்கச் சார்புள்ள இலக்குவனார் தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பில் வர்ணம் குறித்த பகுதிகளையெல்லாம் இடைச்செருகல் என்று கூறி விடுத்திருக்கின்ற ஒரு ஆதாரத்தை நான் ஏற்கெனவே சுட்டியிருக்கிறேன். அப்படி இருக்க நான் ஆதாரமின்றிப் பேசுவது போல காவ்யா எழுதுவதை என்னவென்று சொல்ல?

மறைமலை பற்றி ”தமிழ் தானாகவே நிற்கும் என்பது மறைமலையின் நிலைபாடு.” என்று கூறுகின்ற காவ்யா… அந்த மறைமலை தனது தமிழ் நூல்களுக்கு ஆங்கிலத்தில் முன்னுரை வரைந்தார் என்பதை நோக்கியதுண்டா?

தமிழ்ச் சமூகம் குறித்து, தமிழ்ப் பண்பாடு குறித்து மறைமலை எழுதியவற்றை ஒழுங்காகப் படித்துப் பார்த்ததுண்டா? ஈ.வே. ரா வின் திராவிட இயக்கத்தினை “வைணவக் குறும்பு” என்று மறைமலை கூறியதாவது காவ்யாவுக்குத் தெரியுமா?

கிராமக் கோயில்களில் ஆடு, கோழி பலியிடுவதை மறைமலை இழித்து எழுதியிருப்பது காவ்யாவுக்குத் தெரியுமா?

இன்னும் இப்படி நிறைய கூறமுடியும்… எனவே விவரம் தெரிந்து பேசவும். மேலும் மையமான விஷயத்தைவிட்டுவிட்டு சலசலப்புகளை அடியொற்றி நான் அதிகம் போக விரும்பவில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

ப்ரவாஹன் says:

Hello Mr. Govind Gocha..
இந்திய நாகரிகம், அதிலும் தமிழர் நாகரிகம்தான் வளர்ச்சியடைந்த ஒன்று என்பதில் எந்த ஐயமுமில்லை. நாகரிகத்திற்கான உங்களின் அளவுகோல் ரோடில் வெளிக்கி போவது… அதற்குப் பல்வேறு காரணங்களைச் சுட்டலாம்…. போதுமான எண்ணிக்கையில் பொதுக் கழிப்பிடங்களின்மை…. பொதுக் கழிப்பிடங்கள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை… அங்கே வசூலிக்கப்படும் கட்டணம் சராசரி மனிதனுக்கு செலுத்த ஏலாததாக உள்ளது..
நாகரிக வளர்ச்சிக்கான வேறுபல அளவுகோல்கள் உள்ளன… சமூகவியல் மற்றும் மானுடவியல் துறைகளில் உள்ளவர்களைக் கேட்டுப் பாருங்கள்..
மாற்று சகோதர மணவுறவுக்கு முதலில் வளர்ச்சியடைந்தவர்கள் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பிரிவினர்… வெகு காலம் வரையிலும் சகோதர சகோதரிகளுக்குள்ளேயே மணம் செய்து கொண்டவர்கள்தான் நீங்கள் ‘புகழ்’கின்ற மேலை நாட்டவர்கள். சமூகத்தின் பண்பாட்டு வளர்ச்சிக்கான அடிப்படையான அளவீடுகளில் இது முக்கியமானது.
சாலைகளில் கட்டிப் பிடித்து ஆணும் பெண்ணும் முத்தம் கொடுத்துக் கொள்வது நாகரிகத்தின் அடையாளமல்ல… அது வளர்ச்சியின்மையின் சின்னம்.
கூட்டம் கூட்டமாக நீச்சல் உடைகளில் பொது இடங்களில் திரிவது நாகரிக வளர்ச்சியல்ல… தனியறையில் செய்ய வேண்டியவற்றை பொது இடங்களில் செய்பவர்கள்தான் நீங்கள் புகழ்கின்ற மேலைத் தேயத்தார்..
பெற்றோர்களை வயோதிக காலத்தில் கவனித்துக் கொள்வது என்பது பண்பட்ட ச்மூகத்தின் அடையாளங்களுள் ஒன்று… நீங்கள் சொல்கின்ற மேலைத் தேயத்தில் தாய் தந்தைய்ர்கள் கவனித்துக் கொள்ளப்படுவதில்லை என்பது பெருங்குறை…
தத்துவஞானத் தளத்தில் கீழைத் தேய… அதிலும் குறிப்பாக இந்திய தத்துவஞானம் எங்ஙனம் மேம்பட்டது என்பதை சுவாமி விவேகானந்தர் எடுத்துச் சொல்லியிருக்கிறார்…
எனவே உங்கள் விருப்பத்திற்கு எதைவேண்டுமானாலும் பேச நினைக்காதீர்…
மேலும் பலவற்றை நான் பட்டியலிடமுடியும்… ஆனால் நீங்கள் எடுத்துக் காட்டியுள்ள விஷயம் உங்களின் தராதரத்தைக் காட்டுகிறதாகவே கருதுகிறேன்.. எனவே இந்த விளக்கம் பெரிதும் மற்றவர்களுக்கானதேயன்றி உங்களுக்கானதல்ல…



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

ப்ரவாஹன் says:

கோவில் கோபுரங்களில் பல வித உடலுறவு காட்சிகளை வைத்திருப்பது யார்?

In this regard (for others and not the one who raised this question) lots of studies have been published. great psychoanalytic authors have studied this subject from various perspectives…
people who need can search and find…



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard