அற்புத சுகமளிக்கும் கூட்டம்.  மாற்கு 13:21,22,23

 “அற்புத சுகமளிக்கும் கூட்டம்,  தெய்வீக சுகமளிக்கும் கூட்டம்  “கிறிஸ்து சுகமளிக்கிறார்” “அற்புதம் செய்கிறார்” என்று கூறிக் கூட்டம் சேர்க்கும் கிறிஸ்துவ போதகர்கள் மலிந்துகிடக்கிற இக்காலமே இவ்வுலகத்தின் முடிவு காலமாகும். ஏனெனில் உலகத்தின் முடிவு நாட்களைக் குறிக்கும் அடையாளங்களில் இதுவும் ஒன்றாக நம்முடைய இரட்சகரால் எச்சரிக்கப்படுகிறோம்.

மத்தேயு 24:24 ஏனெனில், கள்ளக் கிறிஸ்துகளும் கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கதக்கதாகப் பெரிய  அடையாளங்களையும் அற்புதங்களையும்  செய்வார்கள். இதோ முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.

 (மேலும் மாற்கு 13:6,21,22,23 வசனங்களையும் வாசித்தறியவும்)
 
 இவ்வாறாக நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து கடைசி காலத்தில் அற்பதங்களை செய்வார்கள் என்று முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன் என்று எச்சரித்திருக்கிறார்.

 பிரியமானவர்களே! கடைசி காலத்தில் கிறிஸ்துவின் நாமத்தை தரித்துக்கொண்டு (கிறிஸ்துவின் பெயராலே) அநேக கள்ளத் தீர்க்கதரிசிகளும் கள்ள கிறிஸ்துக்களும் எழும்பி வருவார்கள் என்று சொல்லி இருக்கிறபடியால் தேவனுடைய பிள்ளைகள் வஞ்சிக்கப்படாதபடிக்கு ஜாக்கிரதையாயிருப்பது அவசியம்.

 2தெசலோனிக்கேயர் இரண்டாம் அதிகாரம், பாவமனுஷன் வெளிப்படுவதையும், அந்த அக்கிரமக்காரனின் வருகையையும், செயலையும் விவரிக்கிறது. அந்த அக்கிரமக் காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும் கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத் தக்கதாய்ச் சத்தியத்தின் மேலுள்ள அன்பை அவர்கள் அங்கீகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும். (2தெச.2:9-10)

 இந்த பாவமனுஷன் ஒருவன் அல்ல. அநேகர் என்பதை சிந்திப்போர் அறியமுடியும். பொய்யான அற்புதங்களை நடப்பிக்கிற இந்த ஆவி பரிசுத்த ஆவியல்லவென்றும் வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவின் ஆவி அதுவே என்றும் அப்போஸ்தலனாகிய யோவான் தனது முதலாம் நிருபத்தில் கூறியிருக்கிறார்.

 1யோவான் 4:1 பிரியமானவர்களே, உலகத்தில் அநேக கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.
 
 தேவ ஆவியையும் பிசாசின் ஆவியையும் எப்படி சோதித்தறிவது என்று யோவான் கூறும்போது:

 1யோவான்.4:2-3; தேவ  ஆவியை நீங்கள் எதனாலே அறியலாம் என்றால்  மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கை பண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. மாமிசத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைப் பண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல, வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே. அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது என்று தெளிவாக ஒரு அளவுகோலை கூறியுள்ளார்.

 வீழ்ந்துபோன மனிதனை மீட்பதற்கு என்றும் மாறாதவரும், என்றென்றும் ஜீவனுள்ளவருமான பிதாவாகிய தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை இயேசு கிறிஸ்துவாக மாமிசத்தில் அனுப்பினார். அவருடைய மரணத்தினாலே மனிதனை இரட்சித்திருக்க, தேவன் அனுப்பிய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை தேவக்குமாரன் என்று அறிக்கை பண்ணாமல் அவரை தேவன் என்று அறிக்கை பண்ணுகிறதினாலே அந்த அறிக்கை  தேவனால் உண்டானது அல்ல, அபிஷேகம் பண்ணப்பட்ட இயேசுவையும் அவரை அபிஷேகம் பண்ணின தேவனையும் மறுதலிக்கிற அந்திக்கிறிஸ்துவின் ஆவி (Sprit of Anti Christ) அதுவேயாகும். ஆகவே இன்றைய நாட்களிலுள்ள அநேக போதகர்கள் இயேசுவை “தேவன்” என்று அறிக்கையிடுவதால், தேவனிடத்திலிருந்து வருகிற பரிசுத்த ஆவியை பெறாமல், அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்துவை மறுதலிக்கிற அந்திக்கிறிஸ்துவின் ஆவியைப்பெற்றிருக்கிறார்கள். அத்தகைய கள்ளத் தீர்க்கதரிசிகளின் ஆவியே அற்புதங்களையும் அடையாளங்களையும் நடப்பித்து மக்களை வஞ்சிக்கிறது.

அற்புத சுகமளிக்கும் கூட்டங்களுக்கு செல்லும் ஏராளமான மக்களைப்பார்க்கிறபோதும், ஜெபித்தவுடன் சுகம்பெறும் காட்சிகளைக் காண்கிறபோதும், ஜெபவேளைகளில் வியாதிகள் குணமாவதையும் பலவிதமான குடும்பப் பிரச்சனைகள் கடன்தொல்லைகள் தீர்ந்ததாக மக்கள் சாட்சி சொல்வதையும், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பார்க்கிறபோதும் இவர்கள் எப்படி பிசாசின் ஊழியக்காரர்களாக இருக்க முடியும்? இயேசுவின் நாமத்தினாலே தானே ஜெபித்து குணமாக்குகிறார்கள் என்று எண்ணத்தோன்றும்!

இதைக்குறித்து ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக் கொண்டவர்களாயிருக்கிறார்கள். அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே. அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத் தக்கதாயிருக்கும் என்று பவுல் அப்போஸ்தலர் எழுதியுள்ளார். (2கொரி.11:13,14,15) எந்த ஒரு போதகனும் தங்களை நாங்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கள்ளக்கிறிஸ்துகள், கள்ளத்தீர்ககதரிசிகள்என்று விளம்பரப்படுத்திக்கொள்ளமாட்டார்கள். நாங்கள் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரர்கள் என்றுதான் சொல்லுவார்கள். அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரர்களின் வேஷத்தைஅல்லவோ தரித்திருக்கிறார்கள். தாங்கள்  செய்கிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும்  தாங்களே அறியாதவர்களாக இருக்கிறார்கள். (1 தீமோ.1:7) அற்பத அடையாளங்களை செய்கிற ஒன்றே அவர்கள் கள்ளப்போதகர்கள் என்பதற்கு அடையாளம்.

ஏனெனில் மத்தேயு.7: 22-23; அந்நாளிலே அநேகர் என்னை நோக்கி, கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன் என்று இயேசு கூறியிருக்கிறார்.

 கிறிஸ்துவின் நாமத்தினாலே அற்புதங்களைச் செய்த போதகர்களையும் ஊழியக்காரர்களையும் பார்த்து இயேசுகிறிஸ்து ஏன் இவ்வாறு சொல்ல வேண்டும்? இத்தகைய போதகர்களின் செயல்கள் அக்கிரம செயல்கள் என்று ஏன் சுட்டிக்காட்ட வேண்டும்? ஆம், இயேசுகிறிஸ்துவை “கர்த்தாவே! கர்த்தாவே!” என்று சொல்வதும் அறிக்கையிடுவதும் பிதாவின் சித்தமல்ல. “இவர் என்னுடைய நேச குமாரன். இவரில் பிரியமாயிருக்கிறேன் இவருக்குச் செவி கொடுங்கள் “ என்று பிதா சொல்லியிருக்க (மத்.3:17;17:5) “பிதா தான் குமாரன் - குமாரன் தான் பிதா” என்று அறிக்கையிடுவது பிதாவின் சித்தமல்ல. “என் பிதா என்னிலும் பெரியவர்.”(யோவான்.14:28) என்று இயேசு கூறியிருக்க, பிதாவும், குமாரனும் சமமானவர்கள் என்று சொல்லுவது இயேசு கிறிஸ்துவுக்கு செவிகொடுப்பதாகாது. ஆகவே மத்தேயு 7:21  பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னைநோக்கி  கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை என்று இயேசு திட்டவட்டமாக அறிவித்தார்.

 ஒருவராலும் ஒப்பிட முடியாத, ஒப்பிடக்கூடாத தேவனுக்கு சமமாக குமாரனை ஒப்பிடுவதும் பரிசுத்த ஆவி “ஒரு தேவன்” என்று சொல்லி பரிசுத்த ஆவியாகிய தேவனுடைய பெலனை மறுதலித்து தேவ வல்லமையை அசட்டை பண்ணுவதும் பரிசுத்த ஆவிக்கு விரோதமான பாவம். (ஏசா 40:25; அப்.1:8; லூக்.24:49)

 குமாரனாகிய இயேசு பிதாவினால் அபிஷேகம் பண்ணப்பட்டவராகையால் அவர் ‘கிறிஸ்து’ எனப்பட்டார். (அப்10:38) ‘கிறிஸ்து’ என்ற கிரேக்க சொல்லும் ‘மேசியா’ என்ற எபிரேயச் சொல்லும் ஒன்றே. கிறிஸ்து  அல்லது மேசியா  என்ற வார்த்தைக்கு “அபிஷேகம் பண்ணப்பட்டவர்” என்பது பொருள் Anointed  என்பது இதன் ஆங்கில வார்த்தையாகும். “இயேசுவே கிறிஸ்து” என்று அறிக்கையிட வேண்டும். இயேசுவே அபிஷேகம்   பண்ணப்பட்டவர் என்று அறிக்கையிடவேண்டும் (அப்.5:42; 17:3; 18:5,28). இயேசு  தேவனால்  அவிஷேகம் பண்ணப்பட்டவர். இயேசுவானவர் “ கர்த்தருடைய கிறிஸ்து” என்று பரிசுத்த ஆவியினாலே சீமோனுக்கு அறிவிக்கப்பட்டது (லூக் 2:26) இப்படி இயேசு அபிஷேகம்  பண்ணப்பட்டவர் என்று அறிக்கையிடாத எந்த ஆவியும் தேவனால் உண்டாது அல்ல. வரும் என்ற அந்திக் கிறிஸ்துவின் ஆவி (Sprit of Anti- Christ) அதாவது கிறிஸ்துவுக்கு எதிரான ஆவி.

 அந்திக்கிறிஸ்துவின் ஆவி கடைசி காலத்தில் அநேக அற்புதங்களை நடப்பிக்கும். வானத்திலிருந்து அக்கினி இறங்கத்தக்கதாக பெரிய அற்புதங்களைக்கூட நடப்பிக்கும் (வெளி 13:13)

 ஆதி திருச்சபையில் “இயேசுவே கிறிஸ்து” என்று விசுவாசிக்கும்படி அப்போஸ்தலர்கள் போதித்தார்கள். (அப் 5:42) பவுல் ஆவியில் வைராக்கியங்கொண்டு இயேசுவே கிறிஸ்து என்று யூதருக்குத் திருஷ்டாந்தப்படுத்தினான். (அப் 18:5; 17:3) அப்பொல்லோவும் பலமாய்த்தர்க்கம்பண்ணி இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக் கொண்டு திருஷ்டாந்தப்படுத்தினான். (அப் 18:28) அப்போஸ்தலனாகிய பேதுரு பெந்தெகொஸ்தே நாளில் நிகழ்த்திய முதல் பிரசங்கத்தில்கூட நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே, தேவன் நமக்கு ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினார் என்று பிரசங்கித்தான். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் பாவ மன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்றவர்கள், பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்றுக்கொண்டார்கள் (அப் 2:36-41) தேவத் திட்டப்படி அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியின் வல்லமையால் அற்புதங்களை செய்தார்கள். அப்போஸ்தலர்கள் கையினால் செய்யப்பட்ட அற்புதங்களும், அடையாளங்களும், வல்லமையான செயல்களும், அவர்களின் போதனைகள் சத்தியம் என்பதற்கு சாட்சியாக அமைந்தது. அப்போஸ்தலர்கள் நிகழ்த்திய அற்புதங்களால் சபை விசுவாசத்திலும்  தெய்வ  பயத்திலும் நாளுக்கு நாள் விருத்தியாகி பெருகியது. அற்புதங்களையும் குணமாக்கும் வரம் பெற்றோரும் திருச்சபையின் ஒரு அங்கமாக இருந்தார்கள். (1கொரி.12:28) பேதுரு நடந்து போகையில் அவர் நிழலாகிலும் பிணியாளிகளின் மேல்படும்படிக்கு கட்டில்களில் மேல் கிடத்தி  வீதிகளில் கொண்டு வந்து வைத்தார்கள். திரளான ஜனங்கள் பிணியாளிகளையும் அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களையும் எருசலேமுக்கு கொண்டு வந்தார்கள். அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டவர்கள். (அப்.5:15-16) ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான். (அப் 6:8) நசரேயனாகிய இயேசுவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி பிறவி சப்பாணியை பேதுரு குணப்படுத்தினார். (அப் 3:6) மேலும் பேதுரு எட்டு வருஷமாய் திமிர்வாதமுள்ளவனாயிருந்த கனேயா என்பவனை குணமாக்கினார். யோப்பா பட்டணத்தில் மரித்துப்போன தபீத்தாள் என்ற சீஷியை ஜெபித்து உயிரோடே எழுப்பினார். (அப்9:33-40) பவுலின் கையினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தார். பவுலின் சரீரத்திலிருந்த உறுமால்களையும் கச்சையும் போட்டு, வியாதியஸ்தர்களை குணப்படுத்தினார்கள். பொல்லாத ஆவிகளும் அவர்களை விட்டுப்புறப்பட்டது.(அப் 19:11-12) இவ்விதமாக  ஆதிசபையிலே அப்போஸ்தலராலும் சீசர்களுடைய கையினாலும், பரிசுத்த ஆவியின் வரங்களினால் அற்புதங்களும் குணமாக்குதலும் நடைபெற்றது. இது அவிசுவாசிகளுக்கும் பொது ஜனங்களுக்கும் செய்யப்பட்டதேயொழிய சீஷர்கள் ஒருபோதும் தங்களுக்கென்று இவ்வரங்களை பயன்படுத்தவில்லை. (1தீமோ 5:23)

 அப்போஸ்தலர்கள் காலத்திற்கு பின்பு அநேக புறஜாதியார்களின் உபதேசங்கள் சபைக்குள் புகுந்தபோது, உண்மை  சத்தியம் மறைந்து தப்பறையான போதகங்கள் சபைக்குள் வந்தது. “இயேசுவே கிறிஸ்து” என்ற சத்தியத்தை விட்டு, “இயேசுவே தேவன்” என்று போதிக்கத் தொடங்கினார்கள். விசுவாசிகள் சத்தியத்தை விட்டு விலகி கட்டுக்கதைகளுக்கு செவி சாய்த்ததால் வஞ்சக ஆவி கிரியை செய்தது. கிறிஸ்துவின் மகிமையான சுவிஷேத்தின் ஒளி அவிசுவாசிகளுக்குப் பிரகாசமாய் இராதபடிக்கு இப்பிரபஞ்சத்தின் தேவையான பிசாசானவன் அநேகருடைய மனக்கண்களைக் குருடாக்கினான். (2கொரி.4:4)

 அற்புத அடையாளங்கள் செய்யும் வரங்களை ஆதிசபையின் விசுவாசிகள் பெற்றிருந்தாலும் கடைசி கால சபைக்கு அவ்வரங்கள் நிறுத்தப்பட்டது. அற்புத அடையாளங்களை கண்டு விசுவாசித்த காலம் மாறி காணாமல் விசுவாசிக்கும் பாக்கியமான காலம் கடைசிகாலமாய் இருக்கிறது. (யோவான் 20:29) நாம் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்கிறோம். (2கொரி.5:6) கடைசி காலத்தில் அற்புத அடையாளங்கள் செய்வது பரிசுத்த ஆவியின் வல்லமையாய் இராமல் அசுத்த ஆவியின் அடையாளமாய் இருக்கிறது. அற்புத அடையாளங்களும் அந்நியபாஷைகளும் அவிசுவாசிக்கு அடையாளம் (1கொரி.14:22)

 உண்மை கிறிஸ்துவ விசுவாசிகள்  கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நடந்து கிறிஸ்துவின் பாடுகளை சகிப்பது தேவசித்தமாகையால்  வீண் ஆடம்பரங்களை விரும்பாமல், பாடுகளை சுமந்து, உலகத்தாரால் பகைக்கப்பட்டு, வெறுக்கப்பட்டு, அவமானப்பட்டு, கிறிஸ்துவின் பாடுகளுக்கு பங்காளிகளாகி, இரட்சிப்பின் நல்ல போராட்டத்தை போராடுகிறவர்களாக இருப்பதினால் இவர்கள் அற்புத அடையாளங்களை நிகழ்த்துவதில்லை. ஆனால் தேவன் நல்லவர் என்பதை தங்கள் அனுதின வாழ்க்கையில் ருசித்துப் பார்க்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.

 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. அந்த ஒரே மத்தியஸ்தர் இயேசு கிறிஸ்துவே. (1தீமோ 2:5-6) என்று வேதம் சொல்லியிருக்கிறபோது

 “உங்கள் பிரச்சனைகளை, தேவைகளை எங்களிடம் சொல்லுங்கள். உங்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம்.”

 “நாங்கள் ஜெபித்தால் நீங்கள் குணமாவீர்கள்.”

 “எங்களுக்கு எழுதுங்கள், உங்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம்.”
 என்று சொல்லுகிற போதகர்கள், கிறிஸ்துவின் மத்தியஸ்தர் பணியை தாங்கள் எடுத்துக்கொள்வதால், இயேசுகிறிஸ்துவை மத்தியஸ்தர் ஸ்தானத்திலிருந்து தள்ளி அவரை அவமானப்படுத்துகிறார்கள். தேவனுக்கும் மனுஷருக்கும் கிறிஸ்து ஒருவர் மட்டுமே மத்தியஸ்தராயிருப்பதை மறுதலிக்கிறார்கள்.

 “இயேசுகிறிஸ்து சுகமளிக்கிறார்” என்று பொய்யான அற்புத அடையாளங்களைச் செய்து வஞ்சிக்கிறவர்கள் மத்தியில் உண்மை விசுவாசிகள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான். (1 யோவான் 5:1)

 “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சீமோன் பேதுரு அறிக்கையிட்டபோது, இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்: மாமிசமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார் என்று சொன்ன நமது இரட்சகரின் வார்த்தையை சிந்தித்துப் பார்க்கவும்.(மத் 16:16-17)

 பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம். (1யோவான் 4:14) இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார். அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான். (1 யோவான் 4:15)