9.1.2011 ஞாயிறுமதியம் 12.30 தமிழன் டிவியில் கோடம்பாக்கம் ரூஹா சபை பாஸ்டர்.ஆல்வின் தாமஸ் கிறிஸ்தவ டிவி நிகழ்ச்சியில் இப்போது புதிதாக கிளம்பியிருக்கிறார். இவர் 2011க்கான தீர்க்கதரிசனத்தை கர்த்தர் சொல்ல சொன்னார் என்று கூறி இந்தியாவுக்கும், உலகத்துக்கும் சேர்த்து 2011ம் வருட தீர்க்கதரிசனம் கூறினார். வருடம் ஒரு தீர்க்கதரிசனம் கூறுவதை வேதத்தில் எங்காவது வாசித்ததுண்டா? இது சகோ.DGS.தினகரனும், தம்பி.பால்தினகரனும் இணைந்து பாஸ்டர்.சாம்சுந்தரம் சபையில் வருடத்தின் முதல்நாள் பல தீர்க்க தரிசனங்கள் கூறி அது நிறைவேறாததை பலர் விளங்கிக்கொண்டதால் அவர்கள் வருடாவருடம் கூறும் தீர்க்கதரிசனத்தை நிறுத்தினார்கள். அவர்கள் கைவிட்ட வருடாந்திர தீர்க்கதரிசனத்தை இப்போது இவர் தொடர ஆரம்பித்துவிட்டார். இந்தியாவின் ஒவ்வொருமாநிலத்தைப்பற்றியும் தீர்க்கதரிசனம் கூறத் தொடங்கினார். எல்லா மாநிலத்திலும் இப்போதுள்ள முதல்வர்களை கர்த்தர் இந்த தேர்தலில் மாற்றப் போகிறார் என்று கூறி, டெல்லி மத்திய அரசாங்க மாற்றத்தைப்பற்றியும் கூறிவிட்டார். தமிழக முதல்வர் இந்த தேர்தலில் ஜெயிக்கமாட்டார் என்று இவர் கூறிய செய்தியை DMK கட்சியினர் கவனிக்கவில்லைபோல் இருக்கிறது. இப்போது இயேசுவைஅரசியல்வாதியாக மாற்றி எலக்ஷன் களத்தில் இயேசுவை இவர் இறக்கிவிட்டிருக்கிறார்கள்.
இந்த ஆல்வின் தாமஸ் ஆகட்டும், ஆசீர்வாதம் டிவியின் ஆல்வின் பால் ஆகட்டும்,பால்தினகரன் ஆகட்டும், வின்சென்ட் செல்வகுமார், சாது சுந்தர் செல்வராஜ், மோகன் சி.லாசரஸ், எசேக்கியா பிரான்சிஸ், ஜவஹர் சாமுவேல், ஜான் சாமுவேல் இவர்கள் எல்லாம் தன் வாசகர்கள் முன்பாகவும் கூட்டத்திலுள்ள மக்களுக்குமுன்பாக தாங்கள் தெய்வத்துக்கு மிக அருகில்இருப்பதைப்போல் தன்னை ஒரு தீர்க்கதரிசியாக காட்டத்தான் இந்த பொய்தீர்க்கதரிசனத்தை உபயோகிக்கிறார்கள். இவர்கள் கூட்டத்தில் இவர்கள் கூறியதைக் கேட்டவர்களில் வேதத்தை படித்தவர்கள் இருந்தால் கொஞ்சம் யோசியுங்கள். இவர்களுக்குமட்டும் இந்த குறிப்பிட்ட நாடுகளைப் பற்றி கர்த்தர் ஏன் தீர்க்கதரிசனம் கொடுக்கவேண்டும் என்று யோசித்தார்களா? அதுவும் வெளிநாடுகளைப்பற்றி இந்தியாவில் உள்ளவர்களுக்கு ஏன் தீர்க்கதரிசனம் கூறவேண்டும்? அதனால் வெளிநாடுகளுக்கு என்ன பயன்? இவர் சபை மக்கள் இவைகளைப்பற்றி யோசிக்கத்தான் முயன்றார்களா? அந்த குறிப்பிட்ட சபை விசுவாசிகளில் சிலரே இதைக்குறித்து சந்தேகமாக கேட்கிறார்கள்? ஆனால் பல சபைகளின் பாஸ்டர்களுக்கு இதைக்குறித்து சந்தேகம் வரவில்லையே! இதைக்குறித்து இப்படியாக யோசித்து பார்க்கவில்லையே! நல்ல சபைபாஸ்டர்கள் இப்படிப்பட்ட கள்ளதீர்க்கதரிசிகளிடமிருந்துதங்கள் சபை ஜனங்களை எப்படி காப்பாற்றபோகிறார்களோ? முடிவாக நீங்கள் அறிந்துக்கொள்ளவேண்டியது, இப்படிப்பட்ட தீர்க்கதரிசனம் கூறுபவர்கள் எல்லாரும் தாங்கள் தேவனோடு நெருங்கியிருப்பதைப்போல ஜனங்களை நம்பவைக்கவே இவர்கள் பொய் தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள் என்பதை உணரவேண்டும்.
ரூஹா சபை பாஸ்டர்.ஆல்வின் தாமஸ் இந்த வருடம் கர்த்தரை நேசிக்கும் தன் சபைக்கும், உலகக்கும் கர்த்தர் சொல்லசொன்னதாக கூறிய வாக்குத்தத்தத்தை இவர் மிகவும் கஷ்டப்பட்டு கண்ணை இருக அடைத்துக்கொண்டு அந்த தீர்க்கதரிசனத்தை கஷ்டப்பட்டு வானத்திலிருந்து வரவழைத்ததுபோல் தன் செய்கைகள்மூலம் காண்பித்து கூறுகிறதை டிவியில் கண்டேன். கர்த்தர் சொல்லசொன்னதாக அவர் கூறிய வாக்குத்தத்தம் என்ன தெரியுமா? என்னை கனம் பண்ணுகிறவர்களை நான் கனப்படுத்த போகிறேன். 1 சாமு 2:30 என்று கூறிவிட்டார் இப்படி கூறி முடிக்கமுடித்தவுடன் அந்த சபைமக்கள் கதறுதலோடு கூறின அல்லேலுயா சத்தம் வானைப்பிளந்தது. இந்த வசனத்தின் ஆரம்பபகுதியில் காணப்படும் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், இந்த வருடம் உங்கள் எல்லாரையும் கர்த்தர் கனப்படுத்தப்போகிறார் - அல்லேலுயா சத்தமாக கூறுங்கள்! என்றார், கைகளை சத்தமாக தட்டுங்கள் என்றார். இப்படித்தான் பல ஊழியர்கள் மக்களை சந்தோஷப்படுத்தும் - காதுக்கு தினவு உண்டாக்கும் ஆசீர்வாத வார்த்தைகளை கூறுகிறார்கள். மேடை அற்புத ஊழியர்கள் அனைவரும் இப்படியேதான் கூறுகிறார்கள்.
இந்த சபைமக்களில் வேதம் படித்தவர்களுக்கு இந்த வசனம் 2011க்காக சொல்லப்பட்டது அல்ல என்று விளங்கவில்லையே! வேதம் கைகளில்வந்த நாளிலிருந்து இந்த குறிப்பிட்ட வசனம் அங்குதானே இருக்கிறது. இந்த ஆசீர்வாதம் வசனம் அடுத்த 2012க்கு இல்லையா? அல்லது வரும் காலங்களுக்கு பொருந்தாதா? வருடத்துக்கு ஒரு வாக்குத்தத்தம் என்று ஆண்டவர் வேத புத்தகத்தில் எங்காவது கூறியிருக்கிறாரா? பல உண்மை பாஸ்டர்களுக்கும் சபையில் உள்ள உண்மையான விசுவாசிகளுக்கும் கூறாத இந்த வாக்குத்தத்தம் இரகசியமாக பாஸ்டர் ஆல்வினுக்குமட்டும் கூறியிருப்பாரா? வேதத்தில் எழுதப்பட்ட வாக்குத்தத்த வசனங்கள் எல்லாம் எல்லாருக்காகவும், எல்லா காலத்துக்கும் பொருந்த கூடியதாகுமே! அதை ஒவ்வொரு நாளும் வேதம் வாசிக்கும்போது உரிமைப்படுத்திக்கொள்ள வேண்டாமா? யாரோ ஒருவர் சொல்லித்தான் அதை உன் வாக்குத்தத்தமாக உரிமைப்படுத்த வேண்டுமா? இந்த விஷயத்தில் விசுவாசிகளுக்கு இன்னும் விழிப்புணர்வு உண்டாகவில்லையே!.
தினசரி வேதத்தை வாசித்து ஒவ்வொரு வசனத்தையும் தியானித்தாலேபோதும் வாசிக்கும் ஒவ்வொரு வசனமும் உனக்காகவே எழுதப்பட்டதைப்போல தோன்றுமே!
கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் என்று ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் கூறும் ஊழியர்களை நம்பாதீர்கள்.
சரி, இப்போது ரூஹா ஆல்வின் தாமஸ் கர்த்தர் கூறினதாக சொன்ன அந்த வாக்குத்தத்த வசனத்தைப் கவனித்துப்பாருங்கள். 1 சாமு 2:30 இந்த வசனத்தை இவர் கர்த்தர் சொன்னதாக அறிவிக்கும்போது இந்த வசனத்தின் ஆரம்ப பாகத்தை மறைத்துவிட்டு ஆசீர்வாதத்தைமட்டும் அறிவித்து தன் சபைமக்களை சந்தோஷப்படுத்தியிருக்கிறார் என்பதை எச்சரிக்கையோடு கவனியுங்கள். உண்மையில் கர்த்தர் கூறுவதென்னவென்றால் என்னை கனப்படுத்தினால்தான் உன்னை நான் கனப்படுத்துவேன் என்று கர்த்தர் வேதத்தில் கூறியிருக்கிறார். ஆனால் ஆல்வின் தாமஸ் கூறியது என்ன? உன்னை நான் கனப்படுத்தபோகிறேன், நீ உயர்த்தப்படப்போகிறாய், உன் கர்ப்பம் திறக்கப்படபோகிறது!, உனக்கு பதவி உயர்வு உண்டாகப்போகிறது, உன் கடன் மறையப்போகிறது என்று மிகுந்த சத்தமாக கூறி எல்லாரும் பலமாக கைதட்டுங்கள்!, பலமாக அல்லேலுயா கூறுங்கள்!. உங்களை உயர்த்தியதற்காக கர்த்தரை துதியுங்கள் என்றார். அந்த CDயை வாங்கிப்பாருங்கள். இதுதான் செழிப்பு உபதேசமாகும்.
வேதத்தில் குறிப்பிடும் எந்த ஆசீர்வாதத்துக்கும் கன்டிஷன் உண்டு. கன்டிஷன் இல்லாத ஆசீர்வாதம் இல்லை. ஆனால் ஆசீர்வாதம் கர்த்தரிடமிருந்து பெறுவது என்பது சாதாரண காரியமல்ல. பாவமன்னிப்பைகூட லகுவாக பெற்றுக்கொள்ள வழியுண்டு. இந்த குறிப்பிட்ட ஊழியர்கள் எல்லாம்ஆசீர்வாதம் ஆசீர்வாதம் இது உங்கள் அற்புதத்தின் நேரம் என்று சொல்லிச்சொல்லி பெரும்பாலான மக்களை தங்கள் வார்த்தையினாலேயே அவர்களுக்கு ஆசைக்காட்டி ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். பாவம் வசனத்தை எப்படி படித்து அர்த்தம் எடுத்துக்கொள்வது என்பதுகூட தெரியாத அந்த ஏழை கிறிஸ்தவர்கள் ஒவ்வொருமுறையும் அவர் எடுக்கும் வீடியோவுக்காக கண்ணீர்விட்டதுதான் மிச்சம். அந்த கண்ணீர்விட்ட சாட்சியைகாட்டி பணம்பெறும் வியாபாரம்தான் இவர்கள் செய்கிறார்கள். இவ்வளவு பெரிய ஏமாற்றுதனத்தை இவர்கள் செய்கிறார்கள். இவர்களுக்கு எப்படி புரியவைப்பது என்று ஒவ்வொரு முறை இந்த ஊழியர்களின் ஏமாற்று பிரசங்கத்தை கேட்கும்போதெல்லாம் என் உள்ளம் மிகவும் வேதனைப்படுகிறது. என்ன சொல்வேன்? என்னால் எழுதத்தான் முடியும். தயவுசெய்து இரட்சிக்கப்பட்டவர்கள் இணைந்து இப்படிப்பட்ட ஊழியர்களுக்காக ஜெபியுங்கள்.
1 சாமு 2:30ன்படி அந்த வசனத்தின் முதல் பகுதி மிகவும் முக்கியம். அதை நீங்கள் நிறைவேற்றாதுபோனால் பின்பகுதியில் உள்ள வார்த்தை செயலிழந்துபோகும்.
முதலாவது பகுதியில் கூறப்பட்டபடி கர்த்தரை எந்தவிதத்தில் கனப்படுத்தபோகிறீர்கள்?, எதையெல்லாம் நீங்கள் விட்டால் கர்த்தர் கனப்படுவார்?, எந்த பாவத்தைவிட்டால் கர்த்தரின் நாமம் கனப்படும்?, கொள்ளையடித்த ஏமாற்றிய பணத்தை திருப்பிக்கொடுத்தால் கர்த்தரின் நாமம் கனப்படுமே! அதன்பின்தான் கர்த்தர் உன்னை மேலும்மேலும் உயர்த்தி கனப்படுத்துவார் அல்லவா! இதுதான் வேதம் கூறும் உண்மையான வாக்குத்தத்தம் ஆகும். உங்களுக்கு இந்த வருஷம் ஆசீர்வாதம் உண்டாகும் என்றுகர்த்தர் சொன்னார் என்று கூறும் எந்த ஊழியரையும் இனிமேலாவது நம்பி ஏமார்ந்துப்போகாதீர்கள். அப்படி கூறுவது கிளி ஜோஸ்யம் ஆகும். இவைகள் எல்லாம் மாற ஜெபிப்போம்.