ஞாயிறு 9.1.2011 அன்று காலை ஆசீர்வாதம் TVயில் சகோ.சாம்ஜெபதுரை அவர்கள் ஜெபத்தில் அபிஷேகம் வஸ்திரத்தின்மேல் இறங்குகிறது என்று சத்தமாக கூற அதைகேட்டு பாவம் ஜனங்கள் கதறுகிறார்கள். அபிஷேகம் என்றால் என்ன? அபிஷேகம் வஸ்திரத்தில் இறங்குவதால் யாருக்கு என்ன பிரயோஜனம்? இப்படி யாராவது கேட்டால் இவர்கள் பழைய ஏற்பாட்டு சம்பவத்தை காட்டுவார்கள்.அபிஷேகம் ஜனங்கள்மேல் ஊற்றப்படுகிறது, அபிஷேகம் அக்கினியாக இறங்குவதை காண்கிறேன். இதை கூறியவுடன் ஜனங்கள் என்னமோ ஏதோவென்று உணர்ச்சிவசப்பட்டு விடுகிறார்கள். மக்கள்திருப்பத்தூரில் கூடினாலும் சரி - கோடம்பாக்கத்தில் கூடினாலும் சரி, நாலுமாவடியில் கூடினாலும் சரி, அக்கினி - அபிஷேகம் என்ற வார்த்தையை கேட்டவுடன் உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறார்கள். இந்த ஊழியர்களின் கூட்டங்களில் கலந்துக்கொள்பவர்களை இவர்கள் சிலவேளைகளில் அழவைத்து, சத்தம் போட்டு கூச்சலிடவைத்து மனேதத்துவ ரீதியில் பைத்தியமாக்கி ஒரு வழியாக்கிவிடுகிறார்கள்! இந்த ஜனங்களும் இவர்கள் கூறுவதை நம்பி அக்கினி அபிஷேகம் கிடைத்துவிட்டது. நான் இந்த கூட்டத்தில் தான் அபிஷேகிக்கப்பட்டேன் என்று கூறி பெருமைப்பட்டுகொள்கிறார்கள். திருப்பத்தூர் கூட்டத்தில்மூவரணி, நால்வரணியாக மாறி இப்போதெல்லாம் இதில் ஒரு பெண்ணையும் தங்களோடு இணைத்துக்கொண்டு இவர்களுக்குகென்றுள்ள வேதத்திலில்லாத அக்கினி அபிஷேகத்தை திருப்பத்தூர் கூட்டத்துக்கு வந்த எல்லார்மேலும் இறக்கி அனுப்புகிறார்கள் என்று பலரால் கூறப்படுகிறது. இந்த கூட்டங்களில் விவரம் அறியாதவர்கள், படித்தவர்களாகயிருந்தும் வேதவசனம் அறியாதவர்களாகயிருப்பவர்கள், பாமரர்கள் ஆகியவர்கள் நிறைந்து இருக்கிறார்கள் என்பதையும் அறியமுடிகிறது. இவர்கள் அனைவரும் உணர்ச்சிவசப்பட்டவர்களாய், ஆத்துமாவுக்கு ஒரு பிரயோஜனமுமில்லாமல் இவர்கள் நடத்தும் ஜெபநேரங்களில் அழுததால் உண்டான ஆறுதலைமட்டும் பெற்றுவிடுகிறார்கள். இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு போகிறவர்கள் கொஞ்சமாவது வேதத்தை வாசித்து இருக்கமாட்டார்களா? என்பதை விளங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த கூட்டத்தை நடத்தும் இந்த ஊழியர்களின் வாழ்க்கையின் பழைய கதைகளை இவர்கள் கொஞ்சம் ஆழமாக ஆராயமுயன்றால் சில விவரங்கள் விளங்கும். அவைகளை இப்போது நான் கூறவிரும்பவில்லை.