மேடையில் பலர் யூத ராஜசிங்கத்தை பார்த்தார்கள். தேவனின் கண்களை பிரத்யட்சமாக கண்டார்கள்
என்று சகோ.வின்சென்ட் செல்வகுமாரின் 2010 டிசம்பர் மாத அற்புத இயேசுவின் தொனிபத்திரிக்கையில் பக்கம் 27ல் ஊழிய செய்திகள் தலைப்பில் மேற்கண்டவாறு எழுதப்பட்டுள்ளது. சேலம் நகரத்தில் நடந்த கூட்டத்தில் சகோ.வின்சென்ட் செல்வகுமார் அவர்கள் பிரசங்கித்தபோது மேலே குறிப்பிட்டவாறு பிதாவின் கண்களை கூட்டத்தில் கலந்துக்கொண்ட மக்கள் கண்டதாக அந்த பத்திரிக்கையில் இந்த செய்தியை எழுதியுள்ளார்கள். இது நானே வாசித்ததும் அறிந்ததுமாகும்.
சேலத்தில்தானே இந்த நிகழ்ச்சி நடந்ததாக அந்த பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார்கள்! நானும் சேலத்தில்தான் இருக்கிறேன். இதை நேரில் பார்த்த சேலம் நண்பர்கள் யாராவது இருந்தால் தயவுசெய்து நேரில்வந்து என்னை கண்டு தாங்கள் அந்தகூட்டத்தில் பார்த்ததை அறிவிக்கமுடியுமா? தயவுசெய்து ஏதாவது ஒரு செவ்வாய்கிழமை நீங்கள் என்னை நேரில் சந்தித்து இதைக்குறித்து விவரித்துகூறி விளக்கி எனக்கு உதவிசெய்யுங்களேன்! என் தொலைபேசி எண்: 0427-2387499 ஆகும். தயவுசெய்து தொலைபேசியில் இந்த விவரத்தை விவரிக்கவேண்டாம். என் வீட்டுக்கு நேரில் வாருங்கள். சிரமம்பாராமல் இந்த விஷயத்தை பகிர்ந்துக்கொள்ள வாருங்கள். வாக்குவாதம் செய்யும் நோக்கத்துடன் வரவேண்டாம். நீங்கள் கண்டதை விவரித்தால்போதும். நானும் உங்களுடன் வேத வசனத்தின் மூலம் அவைகளைக்குறித்து பேச அனுமதி கொடுங்கள். மேலே கண்டது பிசாசின் செய்தி மட்டுமல்ல, அது பொய் செய்தியுமாகும். அதற்கான விளக்கம் வேதவசனமூலம் கொடுக்க வாஞ்சிக்கிறேன்.
கோயமுத்தூரில் இயேசுவின் இரத்தம்: கோயமுத்தூரில் நடந்த கூட்டத்தில் சகோ.வின்சென்ட் செல்வகுமார் பிரசங்கித்ததை ஏஞ்சல் டிவியில் காட்டினார்கள். நானும் அதைக் காண நேர்ந்தது. பிரசங்கம் முடித்து அவர் ஜெபிக்கும் வேளையில் அவர் கூறுகிறார். இதோ சிவந்த வானத்தைக் காண்கிறேன். இயேசுவின் இரத்தத்தின் துளிகள் கூட்டத்தின்மீது தெளிப்பதை காண்கிறேன். சிலருடைய உடைகளில், கைகளில் அந்த இரத்த துளிகள் விழுந்திருப்பதை நீங்களே கண்களை திறந்து பாருங்கள். பல பெண்களுடைய கைகளில், உடைகளில் இரத்த துளிகள் காணப்பட்டதாக அந்த சாட்சி கூறுகிறது.
சகோ.வின்சென்ட் செல்வகுமார் பத்திரிக்கையிலிருந்து மேலும் சில பொய் சாட்சிகள்.............. தவறான பொருத்தனை - தவறான சாட்சி
சகோ.வின்சென்ட் செல்வகுமார் பத்திரிக்கைக்கு சாட்சி எழுதுவோம் என்ற எங்கள் பொருத்தனையை கர்த்தர் கேட்டார். எங்கள் பேரன் சிலரால் கடத்தப்பட்டான், பத்திரிக்கையில் சாட்சி எழுதுவோம் என்று பொருத்தனை செய்து ஜெபித்தோம். உடனே கடத்தல்காரர்களின் கண்களில் தயை கிடைத்தது. துலுக்கப்பட்டியில் கடத்திய அவனை சேலத்தில் கொண்டுவந்து விட்டுச்சென்றனர்.
- வசந்தா, துலுக்கப்பட்டி.
குறிப்பு: பையன் கிடைத்துவிட்டது உண்மையாக இருக்கலாம். ஆனால் பத்திரிக்கைக்கு சாட்சி எழுதுவேன் என்று பொருத்தனை செய்ததால்தான் பையன் கிடைத்தான் என்பது நூற்றுக்குநூறுபொய்யாகும். நம் தேவன் அந்த மாதிரி பொருத்தனையை அங்கீகரிக்கமாட்டார். ஆத்துமாவுக்குபிரயோஜனமான தீர்மானம் அல்லது பொருத்தனை செய்து ஜெபிக்கலாம். இன்று முதல் நான் பொய் பேசமாட்டேன், இன்று முதல் மதுபானம் குடிக்கமாட்டேன் என்மேல் இறங்கும் என்று ஜெபித்தால் அதன் அடிப்படையில் தேவன் உங்களுக்கு இறங்கி காரியங்களை வாய்க்கச் செய்யலாம். பத்திரிக்கையில் சாட்சி எழுதுவதால் உங்கள் ஆத்துமாவுக்கு என்ன பிரயோஜனம்? கர்த்தருக்கு எப்படி மகிமை உண்டாகும்? பத்திரிக்கை நடத்துகிற அந்த ஊழியருக்குத்தான் பெருமை சேரும். கர்த்தருக்கு போகவேண்டிய மகிமை ஊழியருக்கு போய் சேர்ந்துவிடும். மேலே குறிப்பிட்ட சாட்சியில் கடத்தல்காரர்களில் தயை கிடைத்ததாக எழுதியுள்ளார். கர்த்தரின் கண்களில் எங்களுக்கு தயை கிடைத்ததாக அறிவித்திருக்க வேண்டும். அந்த பெருமை கர்த்தருக்கு சேரவேண்டியது. இப்போது பெருமை கடத்தல்காரருக்கு சேர்ந்துவிட்டது. இதை வின்சென்ட் செல்வகுமாரை உயர்த்தும் விளம்பரம் என்று கூறலாம். சாட்சி என்று கூற இயலாது. சங்கீதக்காரன் இப்படி கூறுகிறான்: கர்த்தர் என் ஆத்துமாவுக்கு செய்ததை அறிவிப்பேன் என்கிறான். அதுதான் சரியான சாட்சி ஆகும். இதை எடுத்து வெளியிட்ட வின்சென்ட் செல்வகுமார் இந்த விஷயத்தில் யோசிக்காமல் தவறு செய்துவிட்டார். இந்த மாதிரி பல பத்திரிக்கைகளில் ஊழியனை உயர்த்தும் சாட்சிகளை ஏராளமாக காண்கிறேன்.
அக்கினியும், மஞ்சளும் கலந்த ஒளி இறங்கி வந்தது.
அக்டோபர் 8, 9 தேதிகளில் இராமநாதபுரத்தில் சகோ.வின்சென்ட் செல்வகுமார் பேசி அங்கு நடந்த கூட்டங்களை அப்படியே ஏஞ்சல் டிவியில் மறுபடியும் காட்டினார்கள். அந்த டிவி நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த நிர்மலா என்பவர் தன் சாட்சியை கீழ்கண்டவாறு எழுதுகிறார். "அதை நாங்கள் டிவியில் பார்த்துக்கொண்டிருந்தபோதே சகோ.வின்செனட் செல்வகுமார் அவர்களின் ஜெபவேளையில்மஞ்சளும், அக்கினியும் கலந்த ஒளி டிவி பார்த்துக்கொண்டிருந்த எங்கள் மேலும் இறங்கிவந்தது" என்று எழுதுகிறார்.
- நிர்மலா, சென்னை.
இதுவரை நீங்கள் வாசித்த வின்சென்ட் செல்வகுமார் அவர்கள் மேலே கூறின இந்த தரிசனங்களும், வெளிப்பாட்டையும், அதை சாட்சியாக சிலர் எழுதிய கடிதத்தையும் வின்சென்ட்டின் தீர்க்கதரிசனத்தையும் உங்களால் நம்பமுடிகிறதா? வேத வசனத்தின் அடிப்படையிலா? இவர் தரிசனம் இருக்கிறது.
இயேசுவின் இரத்தம் இவர்களுக்கு என்ன பைப் தண்ணீரா? அல்லது மழை தண்ணீரா? இவர் ஜெபித்தவுடன் இரத்த தண்ணீர் ஜெபிக்கவந்த மக்கள் மீது தெளிக்கப்பட்டதாம்? என்ன விளையாட்டு இது? இயேசுவின் இரத்தம் அத்தனை சீப்பாக, சுலபமாக இவர்களுக்கு மாரியம்மன் கோவில் மஞ்சள் நீராட்டம்போல ஆகிவிட்டதே! இவர் கூட்டத்தில் கூறியதை கேட்ட மக்கள் அதை அப்படியே நம்பிஅக்கினியும் மஞ்சளும் கலந்த ஒளி இறங்கி வந்ததாக சிலர் சாட்சி எழுதியிருக்கிறார்களே! இதற்கு என்ன அர்த்தம்? இதன்மூலம் என்ன ஆசீர்வாதத்தை இவர்கள் அடைந்தார்கள் என்பதை இவர்கள் எழுதவில்லையே! அதை வின்சென்ட் செல்வகுமாராவது விளக்குவாரா? மஞ்சளும் - அக்கினியும் கலந்த ஒளி இறங்கியதற்கு விளக்கம் அவரால் கொடுக்க இயலுமா? என்ன ஏமாற்றுத்தனம் இது?
வின்சென்ட் பத்திரிக்கையில் சாட்சி எழுதுவோம் என்று பொருத்தனை செய்து ஜெபித்தவுடன் கடத்திய பிள்ளையைகூட கொண்டுவந்துபோட்டுவிட்டார்களாம். இவர் பத்திரிக்கையில் எழுதும் சாட்சிக்கு அவ்வளவு வல்லமையா? மக்கள் தவறாக பொய்யாக அல்லது மிகைப்படுத்தி சாட்சி எழுதுகிறார்கள் என்பதை வின்சென்ட் அறியாதவர் அல்ல, அதை வெளியிடும் வின்சென்ட் செல்வகுமாருக்கு அப்படி பொருத்தனை செய்வது தவறு என்று அவர்களை எச்சரித்து தடுக்கமுடியவில்லையே! பத்திரிக்கையில் சாட்சி எழுதுவேன் என்று பொருத்தனை செய்வதுமூலம் அதை எழுதியவரின் ஆத்துமாவுக்கு என்ன நன்மை ஆண்டவருக்கு என்ன பெருமை? அதற்கு பதில் கர்த்தாவே, வேதத்தை இனி ஒழுங்காக வாசிப்பேன், பாவத்தை விட்டுவிடுகிறேன்,ஒப்புரவாகிவிடுகிறேன் என் பிள்ளையை காப்பாற்றும் என்பதை போன்ற பொருத்தனை செய்தால் கொஞ்சமாவது ஆவிக்குரிய ஜீவியத்துக்கு பிரயோஜனமாக இருந்திருக்கும்.
அக்கினியும், மஞ்சளும் இறங்கியதாக கூறிய வின்சென்ட் செல்வகுமார் வாசகர்களுக்கு இதன்மூலம் என்ன கூறவிரும்புகிறார். கூட்டத்தில் கலந்துக்கொண்ட மக்களையும் மடையராக்கி இதை அவர் பத்திரிக்கை வாயிலாக வாசிக்கும் வாசகர்களையும் மடையராக்கி சாட்சி கூறிய அந்த கூட்டத்தில்தானும் அதில் ஒருவன் என்று கூறாமல் கூறி வெளிப்படுத்திவிட்டாரே! இது மிகப்பெரிய ஆவிக்குரிய மோசடி இது? கிறிஸ்தவ ஆவிக்குரிய நல்ல உயர் போலீஸ் அதிகாரி ஒருவர்முன் இப்படிப்பட்ட ஆவிக்குரிய மோசடி கூட்டங்கள் நடக்கிறது. அவரும் இப்படிப்பட்ட சில பொய் ஊழியர்கள் கூட்டத்தில் அடிக்கடி கலந்துக்கொள்கிறார். ஆனால் அவர் எப்படி இந்த மாயமாலத்தை விளங்கிக்கொள்ளமல் இருக்கிறார் என்பதை கேள்வி கேட்க வைக்கிறது. கர்நாடகா முதன்மந்திரி எடியூரப்பா போன்ற மந்திரிகளும், மிக உயர்ந்த போலீஸ் அதிகாரிகளும் காமலீலை நித்தியானந்தாவின் கால்களை பிடிக்கவில்லையா! ஆகவே கிறிஸ்தவ அதிகாரிகளும் வேதம் தெரிந்த பாஸ்டர்களும் இப்படிப்பட்ட கள்ளதீர்க்கதரிசிகளிடம் விழுவது பெரிய ஆச்சரியம் இல்லைதான்.
பரிசுத்த ஆவியை பெற்றேன் என்று கூறும் பாஸ்டர்மார்களை நான் கேட்கிறேன், குறிப்பாக பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்மார்கள் இவர் தரிசனத்தை உண்மை என்று நம்புகிறீர்களா? மேலே குறிப்பிட்டவைகளை பொய்சாட்சி என்று எனக்கு எப்படி வாசகர் பலர் கடிதம் எழுதி அறிவித்தார்களோ! அப்படித்தான் ஊட்டியைப்பற்றி இவர் கூறிய தீர்க்கதரிசனமும் இருந்தது என்பது இப்போதாவது உங்களால் உணரமுடிகிறதா?
சாது சுந்தர் செல்வராஜ் அவர்களும், வின்சென்ட் செல்வகுமார் அவர்களும் ஏஞ்சல் TV மூலமாககிறிஸ்தவர்களையும், பாமர மக்களையும், புறமதத்தவர்களையும் எண்ணமாய் ஏமாற்றுகிறார்கள்?. இந்த பொய்களை காண சகிக்காத சிலர் இந்த TV சேனலை நிறுத்த வழி இல்லையா என்று அங்கலாய்க்கிறார்கள். குறிப்பாக படத்தில் கண்டபடி டிவியில் இவர்கள் இருவரின் கலந்துரையாடலில் ஏராளமான பொய் தரிசனங்கள் செய்தியாக அறிவிக்கப்படுகிறது.
வின்சென்ட் கூட்டத்தில் கலந்துக்கொண்டால் யூத ராஜ சிங்கத்தையும், தேவனின் அதாவதுபிதாவின் கண்களையும் பிரத்யட்சமாக, அதாவது முகமுகமாக காணமுடியும் என்பதை இவர்கள் இப்படி எழுத, இப்படிப்பட்ட முட்டாள்தனமான தைரியத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது? உங்களால் நிதானிக்கமுடிகிறதா? இவர் கூட்டத்தில் கலந்துக்கொண்ட பெண்கள் உடையில் இவர் ஜெபிக்கும் வேளையில் இரத்தம் தெளித்திருப்பதை பார்க்கிறேன் என்று இவர்கூற கொஞ்சம்கூட கூச்சப்படவில்லையே! அந்த இரத்தகரையோடு அந்த பெண்கள் எப்படி கூட்டத்தைவிட்டு மக்கள்முன் வெளியேறிருப்பார்கள். இரத்தம் எங்கள் கைகளிலும் உடையிலும் நனைந்திருப்பதை நாங்களே பார்த்தோம் என்று கூச்சம் இல்லாமல் சாட்சி எழுதிய அந்த பெண்களுக்கு வெட்கம் இல்லாமல் போனதே! அப்படி எழுத எப்படி அவர்களுக்கு மனம் வந்தது. இவர்களெல்லாம் கிறிஸ்தவர்களா?
பல வருடங்களுக்கு முன்பேயும், சமீபகாலத்தில் 2 வாரங்களுக்கு (ஜன 2011) முன்பேயும் இந்த இரட்டை பொய்யர்களைப்பற்றி ஏராளமான கடிதங்களும், பெண்கள் சம்பந்தமான குற்றசாட்டுகளும், இவர்களால் வஞ்சிக்கப்பட்ட பெண்களின் கண்ணீருள்ள சாட்சிகளும் வந்துக்கொண்டிருந்தன. பலர் இது விஷயமாக ஃபாதர்.பெர்க்கமான்ஸ் அவர்களையும், உசிலம்பட்டி பாஸ்டர்.ஜோசப் பாலசந்தர் அவர்களையும், இன்னும் பிரபல பாஸ்டர் ஊழியர்களையும் சந்தித்து இவ்விவரங்களை அறிவித்து இவர்களிடமிருந்து மக்களை காப்பாற்றுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். இவர்களைப்பற்றி புகார் கூறியவர்களின் நோக்கத்தில் ஒன்று ஏஞ்சல் TVயை நிறுத்தவேண்டும் என்பதாகும்.
பல வருடங்களுக்குமுன்பே சகோ.வின்சென்ட் செல்வகுமாருக்கு அவரைப்பற்றி எனக்கு வந்த செய்திகளை, கடிதங்களைக்குறித்து தனி கடிதம் எழுதினேன். அவரும் அதற்கான பதிலை மிக திருப்தியான முறையில் எனக்கு பதில் எழுதினார். அது ஏஞ்சல் டிவி ஆரம்பிக்காததற்கு முன் உள்ள காலம். ஆனால் ஏஞ்சல் டிவியை சாது சுந்தர் செல்வராஜ் அவர்களுடன் இணைந்து நடத்த தொடங்கியபின் குறிப்பிட்ட புகார்கள் எண்ணிக்கை அதிகமானது. இது இவர்கள் வசனத்திலிருந்து விலகி எங்கோ போய் கொண்டிருக்கிறார்கள் என்பதை உறுதி செய்கிறது. மக்களை அந்த தவறான வழியில்கூட அழைத்து செல்வதால்தான் இதை வாசகர்களை எச்சரிக்கும் நோக்கத்தோடு எழுத வேண்டிவந்தது.
நான் என்ன சொல்கிறேன் என்றால் ஏஞ்சல் TV வந்ததால் பல கிறிஸ்தவர்கள் TV, சினிமா, சீரியல்பார்ப்பதை குறைத்துள்ளார்கள். ஏஞ்சல் TV நல்ல ஒரு மீடியா ஆகும். அதில் நல்ல விஷயங்கள் பலவும் சில நல்ல செய்திகளையும் அவ்வப்போது கேட்கவும், பார்க்கவும் முடிகிறது. குறிப்பாக வியாழக்கிழமை தோறும் ஆராய்ச்சி அரங்கம் என்ற தலைப்பில் பெங்களுர் பாஸ்டர் ஒருவர் மிக நல்ல நிகழ்ச்சிகளை தருகிறார். குறிப்பாக வேதகம சந்தேகங்கள், கேள்வி-பதில் பகுதிகளை நல்ல வசன ஆதாரத்தோடும், குழப்பமான வேதாகம விஷயங்களை உபதேச குழப்பம் உண்டாகாதபடி, ஞானத்தோடு ஆலோசனைக்கூறி அந்த நிகழ்ச்சிகளை நடத்துகிறார். இப்படிப்பட்ட நல்ல நிகழ்ச்சிகளை ஊறுகாய் போல்தான் ஏஞ்சல் டிவியில் அனுமதிக்கிறார்கள். இவர்கள் தங்கள் பொய்வெளிப்பாடுகளையும், தேவையற்றசம்பாஷனைகளையும் நிறுத்திவிட்டு இவர்கள் இதைப்போன்ற நல்ல செய்திகளை ஆவிக்குரிய நிகழ்ச்சிகளை இந்த டிவி நிகழ்ச்சியில் வரவைக்க இவர்கள் முயலுவார்களோயானால் அது கிறிஸ்தவ மக்களுக்கு நல்லது. ஏஞ்சல் டிவியை நிறுத்திவைப்பதைவிட நான் குறிப்பிட்ட நல்ல ஆவிக்குரிய நிகழ்ச்சிகளை வெளியிடும் முயற்சியால் இறங்குதல் கிறிஸ்தவர்களுக்கு நல்லது. ஆகவே அந்த டிவி சேனலை நிறுத்த முயற்சிக்க வேண்டாம். ஆனால் குத்துப்பாட்டுகள், சாது சுந்தர் செல்வராஜ், வின்சென்ட் செல்வகுமார் ஆகியவர்களின் பொய் தீர்க்கதரிசனங்களின் சம்பாஷனைகள், பரலோக பொய்கள் இனி வெளிவராமல் இருக்க யாராவது முயற்சி எடுத்தால் நல்லது. ஆனால் அது இயலாது என்றுதான் தோன்றுகிறது. காரணம் அந்த பொய்கள் மூலமாகத்தான் இவர்களுக்கு பணவரவு வியாபாரம் செழிக்கிறது ஆகவே அவர்கள் டிவி நிகழ்ச்சிகளை நிறுத்தமாட்டர்கள். ஜெபிப்போம். இப்படி தவறான செய்திகள் தொடர்ந்து வந்தால் அந்த ஏஞ்சல் TVயை காண்பவர்கள் அவர்களுக்கு பணம் அனுப்புவதை நிறுத்தி அவர்களின் இப்படிப்பட்ட முட்டாள்தனமாக மக்களை ஏமாற்றும் இப்படிப்பட்ட காட்சிகளைTVயில் காண்பிப்பதற்கு எதிர்ப்பு தெரிவியுங்கள். பணம் அனுப்புவதற்கு பதில் பல ஆயிரம் எதிர்ப்பு கடிதங்கள் ஏஞ்சல் TVக்கும், வின்சென்ட் செல்வகுமாருக்கும் எழுதி அறிவியுங்கள்.
நரகத்துக்கு தினம் விசிட் அடிக்கும் ஆசீர்வாதம் TV முதலாளிசகோ.ஆலன் பாலுக்கும் உங்கள் எதிர்ப்பு கடிதங்கள் எழுதுங்கள். ஜெபத்தோடு செய்யுங்கள். ஓரளவு பலன் கிடைக்கும். கொஞ்சமாவது மக்கள் எதிர்ப்பை இவர்கள் மதிக்கிறார்களா என்று பார்ப்போம்.
ஏஞ்சல் TV அல்லது ஆசீர்வாதம் டிவியை பார்த்து ரசிக்கிறவர்கள், ஏஞ்சல் TVயையும், ஆசீர்வாதம் டிவியையும் பணத்தால் தாங்குகிறவர்கள், ஒவ்வொருவரும் இவர்களுக்கு கடிதம் எழுதி இவர்களை கண்டிக்காமல் போனால், இவர்கள் தவறுகளை விமர்சனங்களாக இவர்களுக்கு எழுதி அறிவிக்காமல் போனால் இந்த பொய் தீர்க்கதரிசனம் வேறுவிதமான, மோசமான சாட்சியில்போய்முடியும். கிறிஸ்தவர்கள் இதை தட்டிக்கேட்காமல்போனால் பொதுமக்களே இவர்கள்மேல், இவர்கள் கூட்டத்தில் கல்லெறியும் காலமும் வரும். அப்படி நேர்ந்தால் அதையும் இவர்கள் இரத்த சாட்சியாக மாற்றி பெருமைப்பட்டு கொள்வார்கள். என்ன செய்ய?
வின்சென்ட் செல்வகுமாரும், சாது சுந்தர் செல்வராஜ் ஆகிய இந்த இரட்டையர் இப்படிப்பட்ட பொய் கற்பனைகளையும், தரிசனங்களையும் கூறக் காரணம் என்னவென்றால் இவர்கள் இருவரும் பயிற்சிப் பெற்ற பட்டறை பாளையம்கோட்டை இயேசு வருகிறார் ஊழியம் உரிமையாளர் மரித்த சகோ.ஜான் ரபீந்தர நாத் அவர்கள் கொடுத்த பயிற்சியாகும். அங்கு இந்த இருவரும் நண்பர்களாக இணைந்து இந்த இரண்டு பேரும் சகோ.ஜான் ரபீந்தர நாத் கூறிய அத்தனை பொய் பரலோக கற்பனைகளையும் அப்படியே காப்பியடித்து அதை இப்போது நடைமுறையாக்கியுள்ளனர். அநேக காலங்களுக்குபின் இவர்களுக்கு பணம் மிகுதியாக சேர்ந்தவுடன் இப்போது தாங்கள் காப்பி அடித்த தவறான தரிசனங்களை ஒவ்வொன்றாக டிவியிலும், பத்திரிக்கையிலும், கூட்டத்திலும் அவிழ்த்துவிடுகிறார்கள். சகோ.ஜான் ரபீந்தர நாத் அவர்களின் பழைய பத்திரிக்கைகளை நீங்கள்தேடி கண்டுபிடித்தால் இவர்கள் கூறும் புளுகுகள் அத்தனையும் சகோ.ஜான் ரபீந்தர நாத் தோட்டத்திலிருந்துஎடுத்தது என்பது விளங்கும். இதுவும் என்னமாய் முடியுமோ!
........நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் என்று சொல்லிக் கொண்டார்கள்.
......... இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள்........ ஆதி 11:4,6
........அவர்களுக்கு மாறுதல்கள் நேரிடாததினால் அவர்கள் தேவனுக்குப் பயப்படாமற்போகிறார்கள். சங் 55:19, பிர 8:11.
கர்த்தர் சொன்னார் என்ற பெயரில் பொய் நெ.1: கர்த்தர் கிறிஸ்தவ TV சேனல் ஒன்றை ஆரம்பிக்க சொன்னார் என்று கூறி சாதுசுந்தர் செல்வராஜ்அவர்களும், தம்பி.வின்சென்ட் செல்வகுமார் அவர்களும் ஏஞ்சல் டிவியை ஆரம்பித்தார்கள். அது வெற்றிகரமாகவும் நடந்தது. திடீரென்று கர்த்தர் உன்னை திபெத்துக்காகத்தான் நான் உன்னைஊழியத்துக்கு அழைத்தேன், அங்கு மறுபடியும் போய் அந்த ஊழியத்தை தொடங்கு என்றார் என்று அறிவித்தார். ஆகவே ஏஞ்சல் டிவியை நிறுத்தவேண்டியதாயிற்று என்று அறிவித்தார். அப்படியே நிறுத்தப்பட்டது. ஆனால் ஏஞ்சல் டிவி நிறுத்தப்பட்டதற்கு வேறு சில இரகசிய காரணங்களும் உண்டு என்பதை அன்றே ஜாமக்காரனில் அறிவித்தேன். அதை அவர் மறைத்தார். திபெத்துக்கு கர்த்தர் போக சொன்னார் என்று பெரிய பொய்யை கூறினார். 2008ம் வருடம் கர்த்தர் மறுபடியும் ஏஞ்சல் டிவியை கர்த்தர் ஆரம்பிக்க சொல்கிறார். எப்படி ஆரம்பிக்காமல் இருக்கமுடியும். நேயர்களான உங்கள் மூலமாக அதற்கான பணத்தை வாங்கும்படி கர்த்தர் சொன்னார் என்று எழுதினார். இப்படி மாற்றி மாற்றி பேசி பல பொய் அறிவிப்புகளை துணிகரமாக அறிவித்தார்.
ஒரு கோடி ரூபாய் உங்களை நம்பி கடனாக வாங்கிவிட்டேன். அந்த கடனை நீங்கள்தான்அடைக்கவேண்டும் என்று 1000, 1750, 2000 என்று ஏலம் இடுவதுபோல் பணம் கொடுக்கும்படி எழுதி கேட்டார். அதற்காக எழுதிய கடிதத்தில் கடைசியில் எழுதிய பயங்கர வாசகம் இதுதான், உங்கள் கால்களில் விழுந்து உங்கள் பாதம் தொட்டு தாழ்மையோடு கேட்கிறேன் என்று எழுதினார்.
கர்த்தர் சொன்னது உண்மையானால் மனிதனின் காலை ஏன் பிடிக்கவேண்டும், மனிதன் காலை ஏன் தொடவேண்டும்? இது கேவலமாக இல்லை? கர்த்தர் கட்டளையிட்டது உண்மையானால் அதற்கான வாசல்களை அவரே திறப்பாரே! இப்படி கர்த்தருக்கு அவமானம் உண்டாகத்தக்கதாக இப்படி படுகேவலமாக மனிதர்களின் காலில் ஊழியக்காரன் விழலாமா? டிவி நேயர்கள் சிந்திக்கவேண்டும்.
கர்த்தர் சொன்னார் என்ற பொய் நெ.2: இந்தியாவில் ராமநாதபுரத்தில் இவர்கள் சபை ஒன்றை ஆரம்பித்தார்கள். சபையில் சில பிரச்சனைகள் எழும்பின. அந்த சபையை திடீர் என்று இவர்கள் மூடிவிட்டனர். ஏன் சபை நிறுத்தப்பட்டது? அது என்ன பிரச்சனை? என்பதைக்குறித்து அந்த ஊர் சபை அங்கத்தினர்களே பலவிவரங்களையும், சில பதிவு செய்யப்பட்ட டேப்புகளையும் ஆதாரமாக அறிவித்துள்ளனார்.
ஆனால் திடீரென்று 2007ம் ஆண்டு ஒரு பெரிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டினார்கள். இது மக்கள் ஆராதிக்கும் சபைக்காக அல்ல! இது தீர்க்கதரிசன மையமாக இயங்கும் அதற்காகவே கர்த்தர் இதை கட்டசொன்னார் என்றார்கள். மேலும் கர்த்தர் சொன்னராம், இந்த கட்டிடத்தில் தான் (கர்த்தர்) வந்து வாசம் செய்யப்போவதாக அறிவித்தாராம்.
பொய் ஊற்றின் ஆரம்பம்!! (இது மாதிரி பொய்திட்டத்தை முதலில் இந்தியாவில் திறப்புவிழா செய்தவர் சகோ.DGS.தினகரன்அவர்கள் ஆவார். அன்று கோயமுத்தூர் காருண்யாவில் நைட் வாட்ச்மேன் வானத்திலிருந்து விழுந்த எரி கல்லை கண்டான். அது விழுந்த இடத்தை வட்டமிட்டு மறுநாளே சகோ.தினகரன் விழுந்தது நட்சத்திரம் என்றார். மேலும் இது வானத்தின் வாசல் இங்கு எப்போதும் தூதர்கள் வருவதும் வானத்துக்கு ஏறிபோவதுமாகயிருப்பார்கள். ஆகவே இதை வானத்தின் வாசல் என்று கர்த்தர் சொன்னதாக அறிவித்தார் அதனால்தான் இன்று கிறிஸ்தவ டூரிஸ்ட்டுகள் வேளாங்கன்னிக்கு போவதைப்போல் காருண்யாவில் உள்ள வானத்தின் வாசல் என்று அழைக்கப்பட்ட பெதஸ்தா குளத்துக்கும் வந்து காணிக்கை போட்டுவிட்டு போகிறார்கள். இப்போது இது ஒரு விக்கிரகம் நிறைந்த இடமாக அமைந்துள்ளது. அந்தஇரவு வாட்ச்மேனின் மனைவி எனக்கு எழுதிய கடிதம் என்னிடம் உண்டு. பழைய ஜாமக்காரனில் அவைகளைப்பற்றி விவரமாக எழுதியுள்ளேன்.
இவரைப்போலவே மரித்துப்போன சகோ.ஜான் ரபீந்திரநாத் அவர்கள் இயேசு வருகிறார் தோட்டம்என்ற பெயரில் கர்த்தர் சொன்னார் என்று தோட்டங்களை வாங்கிப்போட ஆரம்பித்தார்.
அடுத்தது நாலுமாவடி சகோ.மோகன் சி.லாசரஸ் அவர்கள் சகோ.DGS.தினகரனின் அதே பொய்யான கற்பனை வழியைப்பின்பற்றி திறப்பின் வாசல் என்ற பெயரில் இவரும் அவர் கூறியதைப்போல் கர்த்தர் இந்த கட்டிடத்தைக் கட்டசொன்னார் என்றார்.
சகோ.ஜவஹர் சாமுவேல், சகோ.ஆனந்தஸ்ரா போன்ற இன்னும் பலர் ஜெபதோட்டங்களையும், கோபுரங்களையும் கர்த்தர் சொன்னார் என்று கூறி ஆரம்பித்து, அந்த வியாபாரங்களும் இப்போது நன்றாக நடக்கிறது.
அடுத்தது, கர்த்தர் சொன்னார் என்ற பெயரில் ஜெபகோபுரங்களை கட்ட ஆரம்பித்தார்கள். இதையும் சகோ.தினகரன் அவர்களே ஆரம்பித்து வைத்தார். அதை மகன்.பால்தினகரன் பல்வேறு இடங்களில் பல கோடிகள் செலவு செய்து ஜெபகோபுரம் என்ற பெயரில் இந்தியாவில் மட்டுமல்ல, பல வெளிநாடுகளிலும் பல கோடி ரூபாய்கள் செலவழித்து கட்டிடங்களை கட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.
இவர்களை தொடர்ந்து குட்டி தினகரர்களான சகோ.ஜட்சன் ஆபிரகாம் அவர்கள் ஆந்திராவில்ஜெபகோபுரங்களை கட்ட கோடிக்கணக்கில் பணம் சேர்க்க தொடங்விட்டார்.
சகோ.ராபின்சன், சகோ.ஆலன்பால் இன்னும் நிறைய பேர்கள் கர்த்தர் சொன்னார் என்ற பகிரங்க பொய்களை அள்ளிவீசி ஜெபகோபுரங்களை கட்ட ஏராளமான பணம் சேகரிக்க ஆரம்பித்துவிட்டனர்.
இத்தனை கற்பனையும் கர்த்தர் சொன்னார் என்ற பெயரில் பொய்யான அத்தனை திட்டங்களுக்கும் ஆரம்பிக்க இந்தியாவில் சகோ.தினகரன் அவர்களே முழு காரணராகிறார். அமெரிக்கா நாட்டில் பலர் இப்படிப்பட்ட திட்டங்களை கர்த்தர் சொன்னார் என்ற பெயரில் தொடங்கியதை அப்படியே சகோ.தினகரன் அவர்கள் காப்பியடித்து இந்தியாவில் அறிமுகப்படுத்தினார்).
தீர்க்கதரிசன மையம் இராமநாதபுரத்தில் தீர்க்கதரிசன மையம் அடிக்கல் நாட்டு விழாவின்போது சகோ.வின்சென்ட் செல்வகுமார் பேசியதாவது: சாது சுந்தர் செல்வராஜ் அவர்களோடு கர்த்தர் பேசியதுபோலவே கர்த்தர் என்னோடும் பேசினார். இந்த கட்டிடம் நான் தங்கும் வாசஸ்தலம் என்று கர்த்தர் சொன்னார் என்றார். கழுகு தன் கூட்டைக்கலைப்பதைப்போல் சபையை கலைத்துவிட்டு இதை தீர்க்கதரிசன மையமாகமாற்றும் திட்டத்தைக்குறித்து தேவன் எங்களோடு பேசினார் என்றார். (அப்படியானால் சபையில் இருந்த ஆடுகளின் கதி என்ன? மேய்ப்பன் தீர்க்கதரிசியாகிவிட்டார்!). மேலும் அவர் கூறியதாவது: 2011 ஜீலை 25ம் தேதி 7 நாட்கள் நான் உபவாசம் செய்தேன். அப்போது என்னுடைய ஆவி மேலே எடுக்கப்பட்டுதீர்க்கதரிசிகளின் சங்கத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டது.
அந்த தீர்க்கதரிசன சங்கத்தில் வைத்து தீர்க்கதரிசன மையம் கட்டுவதற்கான பரம கட்டளைஎனக்கு கொடுக்கப்பட்டது. அடுத்தது 2011 ஜூலை 27 அன்று மறுபடியும் கர்த்தர் தரிசனம் காட்டி கட்டிடத்தின் உட்புறம், சுவர்கள், தரை, ஓடுகளின் நிறம், ரோமானியர் மாடல் தூண்கள் அடங்கிய மேடையின் கலை பாங்கு, தோட்டம் போன்ற தோற்றம், மேலும் எருசலேம் கற்களாலான சுற்றுபுற சுவர், அதில் ஒலி அமைப்பு அத்தனையும் காட்டிவிட்டார்.
இது சகோ.தினகரன் அவர்களுக்கு காருண்யா பல்கலைக்கழகம் கட்ட கட்டிட பிளானை தூதர்கள் சுமந்துகொண்டுவந்து காட்டினார்கள் என்று தினகரன் அவர்கள் அறிவித்த செய்தியைபோலவே, அப்படியே சகோ.வின்சென்ட் செல்வகுமார் அவர்கள் காப்பியடித்து கர்த்தர் ரோமானிய மாடல் தூண்களை அமைக்க அதன் மாடலை இவருக்கு வரைந்து காட்டியதாக அறிவிக்கிறார்.
மேலும் இந்த தீர்க்கதரிசன மையம் கட்டிடத்தை 2011 அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கவேண்டும் என்பது கர்த்தரின் கட்டளையாம். தீர்க்கதரிசன மாநாட்டையும் இந்த மண்டபத்தில் வைத்து நடத்தப்பட வேண்டும் என்ற கட்டளையை கர்த்தரிடமிருந்து பெற்றேன் என்று எழுதியுள்ளார். நாள் நெருங்கிவிட்டது இன்னும் கட்டிடத்தில் எருசலேம் கற்கள் பதிக்கப்படவில்லை. இதற்குள் பரலோகத்திலிருந்து இன்னொரு கட்டிடத்துக்கு மாதிரி வடிவம் கர்த்தர் கொடுத்துவிட்டார்! நான் என்ன செய்ய?
இந்த கடைசி நாட்களில் இப்படி ஒரு கட்டிடம் ஏன் தேவை? இவ்வளவு பெரிய தொகையை சுவிசேஷ ஊழியத்துக்கு செலவு செய்யலாமே என்று நீங்கள் கேட்கலாம், காரணம் தேவனாகிய கர்த்தர்தாமே தான்வந்து வாசம் செய்வேன் என்று கூறியதால்தான் இவ்வளவு பெரிய அளவில் செலவு செய்கிறேன் என்கிறார். (எவ்வளவு பெரிய பொய்!).
ஆரம்பகாலத்தில் சகோ.தினகரன் அவர்கள் கட்டிடம் பணியும்போது அதை ராஜஸ்தானிலிருந்து கொண்டுவந்த பளிங்கு கற்களால்தான் கட்டவேண்டும் கர்த்தர் சொன்னார் என்றார். காரணம்அருள்நாதர் தன் பாதங்களை இந்த பளிங்குகற்கள்மீது வைத்து நடந்து செல்வதற்காகவே இத்தனை விலை உயர்ந்த கற்கள் வாங்கவேண்டியதாயிற்று என்று அறிவித்தார். அதே பொய்யான காரணத்தைத்தான் வின்சென்ட் செல்வகுமாரும் இங்கு கூறியிருக்கிறார். என்ன கொடுமையான பதில் பார்த்தீர்களா? (ஆதிவாசிகள் ஆராதிக்கும் மண்தரை ஆலயத்தில் இவர்களின் அருள்நாதர் நிச்சயம் தன் காலை பதிக்கமாட்டார், அங்கு தங்கி வாசம் செய்யவும்மாட்டார் என்பது நிச்சயம்! என்ன பரிதாபம்!).
இந்த கட்டிடத்தில் இந்த நூற்றாண்டில் எப்படி வாழவேண்டும் என்பதை கற்று தரப்படும். இங்குதூதர்கள்வந்து அவ்வப்போது தங்குவார்களாம். இப்படி நீண்டுப்போகிறது இவர்களின் விசித்திரமானபொய் தரிசனங்கள். இப்போது இன்னும் எங்களுக்கு ஒரு கோடி ரூபாய் தேவை என்கிறார். 2012 மார்ச்க்குள் இந்த பணி முழுவதும் முடித்தாகவேண்டும் என்று எழுதி முடிக்கிறார். இதற்கு நீங்கள் காணிக்கை அனுப்பினால் 2012 மார்ச் மாதம் கட்டிட பிரதிஷ்டைக்கான பிரம்மாண்டமான அழைப்பிதழ்உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும். காணிக்கைக்கு கிடைக்கும் அற்புதமான பரிசு!.
மேலே வாசித்த விவரங்களை குறித்து வாசகர்களின் அபிப்ராயம் என்ன? உங்களால் ஏஞ்சல் டிவி ஊழியங்களைக் ஏற்றுக்கொள்ள முடிகிறதா?
சகோ.வின்சென்ட் செல்வகுமாரும் - சாதுசுந்தர் செல்வராஜ் அவர்களும் இணைந்து நடத்தும் கூத்து மக்களை தவறான பாதைக்கு கொண்டுபோகும் பயங்கர திட்டமாகும்.
சபை ஆராதனைகளை நீக்கிவிட்டு சபை இனிவேண்டாம். தீர்க்கதரிசனமையம் போதும் - எதற்கு தீர்க்கதரிசனம்? எதைப்பற்றி தீர்க்கதரிசனம்? இனி நடக்கபோகும் காரியங்களை - உலக முடிவில் சம்பவிக்க போகிறவைகளைக்குறித்து ஆவியானவரே வேதத்தில் மிகத்தெளிவாக எழுதியபின், இயேசுகிறிஸ்துவும் தெளிவாக அறிவித்தபின் இவர்கள் மூலமாக புதிதாக என்ன தீர்க்கதரிசனத்தை கர்த்தர் கூறப்போகிறார். வேதத்தில் கூறப்படாத ஒன்றையும் புதியதாக இவர்களோ வேறு யாரும் இனி கூறமுடியாது.
மக்கள் ஏராளமானவர்கள் இவர்கள் இருவரும் சேர்ந்து மக்களை மிகவும் தவறான பாதையில் கொண்டுபோகிறார்கள் என்பதை விளங்கிக்கொண்டார்கள்.
எனக்கு டிவி பார்க்க நேரம் இல்லை. மேலும் ஏஞ்சல் டிவி எங்கள் பகுதி கேபிளில் வருவதில்லை. ஆனால் டிவியில் ஏஞ்சல் டிவி நிகழ்ச்சியை பார்த்தவர்கள் எழுதிய கடிதங்களிலிருந்து சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன்.
24.6.2011 அன்று சாதுசுந்தர் செல்வராஜ் அவர்கள் கூறியது: சகோ.தினகரன் அவர்கள் பிதாவைமுகமுகமாக பார்த்தது உண்மை.
5.7.2011 காலை 9.40 சாது செல்வராஜ் கூறியது: 1983ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி மரித்துப்போனசாதுசுந்தர்சிங் அவர்களின் மரித்துப்போன ஆவி என்னிடம் பேசியது. சாதுசுந்தர்சிங் ஆகிய நான் விட்டு சென்ற ஊழியத்தை நீதான் செய்யவேண்டும். எலியா ஆவி எலிசாவின் மீது இருந்ததுபோல (சாதுசந்தர் சிங்கின் ஆவி) என் ஆவி உன்மேல் இருக்கும் என்று கூறினார்.
20.6.2011 காலை 9.50 (ஏஞ்சல் டிவி) சாதுசுந்தர் செல்வராஜ் உரையாடல். நோவா குடிப்போதையில் ஆடை விலகி கிடந்தான். அப்போது அவர் மகன் காம் படுத்துகிடந்த தகப்பனோடு ஓரின சேர்க்கையில்(Homosex) ஈடுப்பட்டான். அதனால்தான் போதை தெளிந்து எழுந்த நோவா மகன் காமை சபித்தான். ஆதி 9:24,25. (சகோ.சாதுசுந்தர் செல்வராஜ் நேரில் கண்டதைபோல சம்பவத்துக்கு சுய விளக்கம் கொடுத்துள்ளார்).
ஏஞ்சல் டிவி. 8.8.2011 திங்கள் இரவு 7.55 மணி: சாதுசுந்தர் செல்வராஜ் ஆகிய எனக்கு ஒரு சந்தேகம். அதாவது திருமணமானவர்களுக்கு குழந்தை எப்படி உருவாகிறது? என்பது எனக்கு தெரியவில்லை. 23 வயது வாலிபனிடம் கேட்டு தெரிந்துக்கொண்டேன். வக்கிரமான இப்படிப்பட்ட செய்திகள் ஏஞ்சல் டிவியில் சாதுசுந்தர்செல்வராஜ் தான் பரிசுத்தவான் என்பதை அறிவிக்க இப்படி பேசுகிறாரோ என்று மக்கள் கேட்கிறார்கள்?. இந்த கடிதம் எழுதியவர் மேலும் எழுதுகிறார்: இந்தசாதுசுந்தர் செல்வராஜிக்கு இப்படி பேசுவது ஆபாசமாக தோன்றவில்லையா? சாட்லைட் சேனலில் உலகத்தில் பலர் இதை பார்த்துக்கொண்டிருப்பார்களே! நான் சாதுசுந்தர் செல்வராஜின் முழு சம்பாஷனையையும் எழுதவில்லை. பேசிய மற்றசெய்திகள் எல்லாம் அசிங்கம் மிக ஆபாசம் என்று மற்றொருவர் இதே நிகழ்ச்சியைக்குறித்து எழுதுகிறார். சாதுசுந்தர் செல்வராஜின் உரையாடலைமட்டும் யாரும் பார்க்க வேண்டாம் என்று ஜாமக்காரனில் எழுதுங்கள். இவர்கள் பேசுவது மிகமிக மட்டமான உரையாடல். இப்படி ஏராளமான வாசகர்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
கிறிஸ்தவ டிவி மீடியா என்பது மிக அற்புதமான ஊழியம். ஆனால் வின்சென்ட் செல்வகுமார், சாதுசுந்தர் செல்வராஜ், ஆலன்பால், ஆல்வின் தாமஸ் போன்றோரின் கையில் இது அகப்பட்டு முழு கிறிஸ்தவ உலகையும், புறமதஸ்தரையும் தவறான பாதையில் அழைத்துசெல்கிறார்களே! இவர்களின் நிகழ்ச்சிகளை பணம் கொடுத்து பெரும் கூட்டம் ஊக்கப்படுத்துகிறார்களே! இதை மாற்றமுடியாதா? என்று எழுதுகிற மக்களின் எண்ணிக்கை பெருகபெருக ஒரு உண்மை தெரிகிறது. அதாவது பெரும்அளவு மக்களுக்கு விழிப்புணர்வு வந்துவிட்டது. அதனால்தானே இத்தனை ஆயிரம்பேர் இவர்களின் தவறான உபதேசத்தையும் பணம்பிடுங்கும் தந்திரங்களையும் குறித்து பக்கம்பக்கமாக எழுதுகிறார்கள்.
இயேசு ராஜசிங்கம் வாயை திறந்துக்கொண்டு நிற்பதை நான் காண்கிறேன் என்கிறார். உடனே மக்கள் நாங்களும் இந்த கூட்டத்தின் நடுவே சிங்கம் ஒன்று உலாவுவதை கண்டோம். அல்லேலுயா என்று ஆர்ப்பரிக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவை சிங்கமாகவே மக்களுக்கு காட்டும் இப்படிப்பட்ட ஊழியர்களை கர்த்தரின் பாதத்தில் வைப்பதை தவிர நம்மால் ஒன்றும் செய்யமுடியாது.
மனம் திரும்பாத மக்கள் இவர்களுக்கு பண உதவி செய்யும்வரை இவர்களை பிசாசு மிக அதிகமாக உபயோகித்து மக்களை வழி விலகச்செய்வான். இது கடைசிகாலம்.
ஆசீர்வாதம் டிவி- ஏஞ்சல் டிவிக்காக ஜெபியுங்கள்: தமிழில் நமக்கு கிறிஸ்தவ டிவி சேனலான ஏஞ்சல் டிவியும், ஆசீர்வாதம் டிவி ஆகியவைமட்டும்தான் 24மணி நேரமும் தொடர்ந்து கிறிஸ்தவர்களாலும், மற்ற மத மக்களாலும் மிக அதிக அளவில் பார்க்கப்படுகிறது. தேவ ராகங்கள், பெங்களுர் பாஸ்டர் அவர்களின் வேதாகம கேள்வி-பதில்கள் இப்படி இன்னும் சில நிகழ்ச்சிகள் மக்களுக்கு பிரயோஜனமாக இருக்கிறது. சினிமா மட்டும் பார்த்து ரசித்த கிறிஸ்தவ கூட்டம் ஏஞ்சல் டிவி - ஆசீர்வாதம் டிவி ஆகியவைகளை அதிக நேரம் பார்க்க தொடங்கிவிட்டது நன்மையான காரியமாகும். ஆகவே ஏஞ்சல் டிவி - ஆசீர்வாதம் டிவி வேண்டாம் என்று ஜெபிக்க வேண்டாம். சாதுசுந்தர்செல்வராஜ் - வின்சென்ட் செல்வகுமார், ஆலன்பால், ஆல்வின் தாமஸ் போன்ற இன்னும் இப்படிப்பட்டவர்களின் தவறான பிரசங்கங்கள், தவறான போதனைகள், உபதேசங்கள், பொய்யான தரிசனங்கள், பரலோக கமிட்டி, புது யுகம் என்ற பிசாசின் போதனை, இவைகளோடு சினிமா நடிகைகள், சினிமா நடன கலைஞர்கள் கிறிஸ்தவ பாட்டுக்கு சம்பந்தமே இல்லாத அபிநய நடனங்கள் இவைகளொல்லாம் தெய்வ தன்மையை வெகுவாக நீக்கிவிடுகிறது. ஜீவனுள்ள பாடல்களிலிருந்தும் தெய்வதன்மை நீக்கி விடுகிறது. கொஞ்ச கொஞ்சமாக முழுசினிமாவின் ஆபாசகாட்சிகளும் சீக்கிரமே இப்படிப்பட்ட கிறிஸ்தவ டிவிசேனல்களை ஆக்கிரமிக்கும் நாள் தொலைவில் இல்லை. ஆகவே எங்களை போன்றோர் கேட்டுக்கொள்வது, ஏஞ்சல் டிவி - ஆசீர்வாத டிவி வேண்டும். ஆனால் அதை நடத்துபவர்கள் பிரசங்கிக்கிறவர்கள் மனந்திரும்பி - இரட்சிக்கப்பட்டு - பொய் பேசுவதையும், பொய்யான தரிசனத்தையும் பரலோகம்-நரகம் போய் வருவதையும் இவர்கள் நிறுத்தவேண்டும் என்று மட்டும் நாம் ஜெபித்துக்கொள்வோம். அவர்கள் பொய் பேசுவதை நிறுத்தாவிட்டால் அவர்கள் கையிலிருந்து இந்த சேனல்களை பிடுங்கி சரியான ஊழியர்கள் அதன் பொறுப்பெடுத்து நடத்த ஜெபிப்போம்.
ஜெபகோபுரங்கள், ஜெபதோட்டங்கள், திறப்பின் வாசல் இப்படிப்பட்ட யாவும் ஆரம்பத்தில் நான் எழுதிய வசனத்தின் சம்பவங்களை ஞாபகப்படுத்துகின்றன. பாபேல்கோபுரம் பணிந்தவர்களின் மனநிலைத்தான் மேலே கூறியவர்களின் மனநிலையும். இவர்கள் நடத்தும் ஊழியம், ஜெபகூட்டங்கள் யாவும் கர்த்தரை மகிமைப்படுத்த அல்ல. ஜெபகோபுரம், திறப்பின் வாசல் உபவாச ஜெபம், எஸ்தர் ஜெபக்குழு இப்படி இன்னும் சில பெயர்களில் சிங்கப்பூரில், மலேசியாவில் இன்னும் பல வெளிநாடுகளில்உலக எழுப்புதலுக்காக என்று மேலே குறிப்பிட்ட பெயர்களில் கூட்டப்படும் கூட்டம் இதை நடத்துபவர்களின் ஊழிய வருமானத்துக்காகவே நடத்தப்படும் கூட்டமாகும்.
உலக எழுப்புதலுக்காக ஜெபிப்பதானால் விளம்பரத்தில் இவர்கள் ஊழியத்தின் பெயர் வைக்கவேண்டிய அவசியம் இல்லையே! திறப்பின் வாசல் ஜெபம் என்ற பெயருக்கு பின்னே மோகன் சி.லாசரஸ்சையும், எஸ்தர் ஜெபக்குழுவுக்கு பின்னே திருமதி.தினகரனையும், ஜெபகோபுரங்கள் பின்னே பால்தினகரனையும்தான் காணமுடியும். இதைத்தான் தேவன் வெறுத்தார். நமக்கு பேர் உண்டாகப்பண்ணுவோம் என்ற நோக்கத்தின் அடிப்படையில்தானே பாபேல் கோபுரம் பணிந்து ஜனங்கள் தேவகோபத்துக்குள்ளானார்கள். ஆகவே இவர்கள் யாவரும் தங்களுக்கு பேர் உண்டாகவேஊழியத்தை செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த குறிப்பிட்ட டிவி நிகழ்ச்சி முதலாளிகளின் நோக்கமும் தங்களுக்குபேர் உண்டாகவேண்டும் என்பதாகும். இவர்களின் டிவி சம்பாஷனைகள் அனைத்தும் தங்களைப்பற்றியும், தாங்கள் பரலோகம் அடிக்கடி போய்வருவதைப்பற்றியுமே அமைந்துள்ளது. இது இவர்களைத்தான் பெருமைப்படுத்துகிறது.
இந்த ஊழியங்கள் மேலும்மேலும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஐரோப்பா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்ட்ரேலியா என்று பல நாடுகளிலிருந்து விவரம் அறியாதவர்கள் அனுப்பும் பணசெழிப்பு, காரணமாக கர்த்தர் தங்களை ஆசீர்வதிக்கிறார் என்று இதை நடத்துபவர்களும், கர்த்தர் இவர்களோடு இருக்கிறார் என்று பணம் அனுப்புபவர்களும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். மேலும் வேதம் கூறுவதுபோல், "அவர்களுக்கு மாறுதல்கள் நேரிடாததினால், அவர்கள் தேவனுக்கு பயப்படாமல் போகிறார்கள்". சங் 55:19.