கேள்வி:ANGEL TV இரட்டையரில் ஒருவர் சகோ.வின்சென்ட் செல்வகுமார் அவர்கள் மூலமாக கர்த்தர் உரைத்த தீர்க்கதரிசன வார்த்தைகள் துண்டுப்பிரதியாக அச்சடித்து இங்கு எல்லாருக்கும் விநியோகிக்கிறார்கள். இத்துடன் அதை உங்கள் பார்வைக்கு அனுப்பியுள்ளேன். அந்த தீர்க்கதரிசனத்தைப்பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?
பதில்: அந்த தீர்க்கதரிசனத்தை நீங்கள் அனுப்பிய துண்டுபிரதியில் மட்டுமல்ல, ஏஞ்சல் TVயில் 24மணிநேரமும் பல வாரங்கள் தொடர்ந்துக்காட்டினார்களே! பைபிள் ஒழுங்காக வாசிக்காதவர்களுக்கெல்லாம் அது ஆச்சரியமாக இருந்திருக்கலாம். மற்ற விசுவாசிகள் அது சுய விளம்பரம் என்பதை நன்றாக விளங்கிக்கொண்டார்கள் என்பது எனக்கு வந்த பல கடிதங்கள்மூலம் அறிந்தேன்.
முதலாவது நீங்கள் அறிந்துக்கொள்ளவேண்டியது. வேதபுத்தகம் முழுவதும் எழுதி கொடுத்தப்பின் இப்போது தீர்க்கதரிசனம் மூலம் கர்த்தர் பேசுவதில்லை. காரணம், இனி வரப்போகிற ஆபத்துக்கள்,கொள்ளை நோய்கள், பூமி அதிர்ச்சிகள், கடல் அலை (சுனாமி) பெருகுவது யாவையும் சுவிசேஷ புத்தகத்தில் மத்.24, லூக்.21, மாற்.13,2, தெச.2:9, வெளிப்படுத்தின விசேஷம், பழைய ஏற்பாட்டில் தானியேல் போன்ற சில தீர்க்கதரிசிகள் மூலமாக வெளிப்படுத்தப்பட்டவைகளையும், நம் வேதப்புத்தகத்தில் அப்படியே தெள்ளத்தெளிவாக எழுதி நம் கையில் கொடுக்கப்பட்டுவிட்டதே! இதில் எழுதாத, எதையாவது இவர்கள் புதிதாக கூறியிருக்கிறார்களா? இல்லையே! இவர்கள் தீர்க்கதரிசனம் என்று கூறியது அத்தனையும் வேதத்தில் அப்படியே எழுதியிருக்கிறதைத்தானே கூறியிருக்கிறார்கள்!
மேலும் தம்பி.வின்சென்ட் செல்வகுமார் தான் எங்கு போய் பிரசங்கம் செய்தாலும் மக்களை இதே பாணியில் எச்சரிப்பதை இவரின் முந்தைய பிரசங்க CDக்களை கேட்டுப்பாருங்கள். அதை கேட்டால் ஊட்டியில் பேசியதை விசேஷமானதாக கூறமாட்டார்கள். அவர் ஊட்டியில் செய்தது நல்ல பிரசங்கம். ஆனால் அது தீர்க்கதரிசனம் அல்ல. உதாரணத்துக்கு ஒன்று கூறுகிறேன். காக்கா உட்கார பணம் பழம் விழுந்த கதையை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
பழைய ஏற்பாட்டு நியாயபிரமாணமும், 10 கட்டளைகள் யாவையும் தனித்தனியாக கைக்கொள்ள முயற்சித்து கஷ்டப்படவேண்டாம் என்பதற்காக வெகு எளிதானமுறையில் உன்னைப்போல் பிறனை நேசி என்று இரத்தின சுருக்கமாக சொன்னாரே, அதில் நியாயப்பிரமாணமும், 10 கட்டளைகளும் அப்படியே அடங்கியிருக்கிறதே. அதேபோல் வேதத்தில் ஆங்காங்கு எழுதப்பட்ட தீர்க்கதரிசன செய்திகளை நீங்கள் தியானித்தால்போதும் புத்தியுள்ள 5 கன்னிகைகளின் ஆயத்தம் நம் ஒவ்வொருவருக்கும் இருந்தால் வரப்போகும் ஆபத்துக்கள் வந்துகொண்டிருக்கும் இயற்கைமாற்றங்கள், பூமி அதிர்ச்சியிலும், வானத்திலிருந்து சூரியன் விழுந்தாலும் நமக்கு பயம் இருக்காது.
சகோ.வின்சென்ட் செல்வகுமார் எழுதியதாக நீங்கள் அனுப்பிய துண்டுப்பிரதியிலே அவரே தன்னைப்பற்றி எழுதியிருக்கிறார். கடைசி காலத்தில் கள்ளத்தீர்க்கதரிசிகள் எழும்புவார்கள், அவர்கள் மக்களை வஞ்சிப்பார்கள் என்றாரே, அதுதான் அவர் எழுதியதில் நூற்றுக்குநூறு உண்மை. அவர் தன்னைப்பற்றியும், தன் நண்பர் ஏஞ்சல் TV சகோ.சாது சுந்தர் செல்வராஜைப்பற்றியும் தெளிவாக அந்த துண்டுபிரதியில் அறிவித்துவிட்டார். இது அவரையும் அறியாமல் நடந்த விஷயம்.
பரலோக கமிட்டியில் மோசேயின் பக்கத்து சீட் சாது சுந்தர் செல்வராஜ்க்காக ரிசர்வ்செய்யப்பட்டிருக்கிறது. அதில் யாரும் உட்காரமாட்டார்கள் என்று கர்த்தர் சொன்னதாக அவர் சொல்வதை அந்த நிகழ்ச்சியில் அவருக்கு முன்னால் ஆடாமல் அசையாமல் இமை சிமிட்டாமல் தலையாட்டுவதற்காகவே உட்கார்ந்திருக்கிற நபர், முடி கத்திரிக்கிறவனுக்கு முன்பாக மௌனமாக இருக்கிறவர் என்று வேதம் வர்ணிக்கிறதைப்போல பரிதாபமாக சாதுவுக்கு முன் உட்கார்ந்திருக்கும் அந்த தம்பி எதையும் எதிர்த்துபேச துணியாமல் இருப்பதைப்போல, அதே நிகழ்ச்சியை பலமுறை திரும்பதிரும்ப தினசரி ஏஞ்சல் டிவியில் போட்டு காண்பிப்பதை பார்த்த எவரும் இப்படிப்பட்ட பச்சை பொய்யை எப்படி ஐயா துணிந்துபேசுகிறீர்கள் என்று கேட்க துணியவில்லையே! அப்படி துணிந்திருந்தால் நிச்சயம் அப்படிப்பட்ட நபர் அதன் காப்பியை ஜாமக்காரனுக்கு அனுப்பியிருப்பார். ஆக இப்படிப்பட்டபரலோக கமிட்டி புளுகுகள்போலதான் வின்சென்ட் செல்வகுமாரின் ஊட்டி தீர்க்கதரிசனம் ஆகும்.
பொய்யான பரலோக கமிட்டியை சகோ.வின்சென்ட் செல்வகுமாரும் எப்படித்தான் ஆதரிக்கிறாரோ தெரியவில்லை. அவர் தன் பத்திரிக்கையில் எழுதுவதற்கும் இதுபோல பொய்யான பரலோக கமிட்டியை ஒத்துக்கொள்வதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. பத்திரிக்கையில் சரியாக எழுதுகிறார். ஆனால் சாதுசுந்தர் செல்வராஜுடன் இணைந்து பேசும்போது சாது பேசும் பொய்களுக்கு உடந்தையாகி போய்விடுகிறாரே! இதை என்னவென்று சொல்வது?
காணிக்கை எடுத்து நடக்கும் இது போன்ற டீ.வி ஊழியங்களுக்கு மக்கள் விழித்துக்கொண்டு பணம் அனுப்பாமல் இருந்தாலே போதும், கடந்த முறை மாதிரி மீண்டும், "தேவன் இதை நிறுத்த சொல்லி விட்டார்" என்று ஒரு பொய்யை சொல்லி மூடி விடுவார்கள். இந்த டீ.வி மாத்திரம் இல்லை ஊழியர்களால்(!!) சுய மேட்டிமை பாராட்ட நடத்தப்படும் ஒவ்வொரு டீ.வி நிகழ்சிகளுக்கும் மக்கள் காணிக்கை அனுப்பாமல் இருந்தாலே போதும். பாவம் இவர்கள் இவர்களை வாயை கட்டி வைத்தை கட்டி அனுப்பும் பணத்தில் அவர்கள் பெயர் சம்பாதித்து ஹோண்டா அக்கார்ட் போன்ற கார்களில் சுற்றி திரிந்து மக்களுக்கு சாபம் இட்டு கொண்டு திரிகிறார்கள், என் காரின் வந்து தேவன் உட்கார்ந்தார் என்றும், பரலோகத்தில் எனக்கு ரிசர்வேஷன் (எந்த கோட்டாவோ!?) இருக்கிறது என்று பிதற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
கிறிஸ்தவர்களே, தேவன் உங்களுக்கு எதை செய்தாலும் அவரின் சித்தத்தின்படி நண்மைக்கு ஏதுவாக நிச்சயமாக செய்வார், இது போன்ற டீ.வி மனிதர்கள் மூலமாக தான் தேவனால் உங்களுக்கு செய்ய முடியும் என்று என்னாதீர்கள். இவர்களுக்கு அனுப்பும் பணத்தை காட்டிலும், உண்மையாகவே இல்லாதவர்களுக்கு (பத்திரம் அறிந்து பிச்சை போடுவது) கொடுங்கள், ஏழைக்கு கொடுப்பவன் தேவனுக்கு கடன் கொடுக்கிறான் என்கிறது வசனம். நீங்கள் பணம் அனுப்பும் இந்த ஊழியர்களில் யாரும் ஏழைகள் இல்லை, பஞ்சு மெத்தையிலும், மஞ்சத்திலும், உட்கார்ந்து உறங்கி, அதி நவீன கார்களை வாங்கி (என்னமோ தேவனே இந்த கார்களை இவர்கள் வாசலலில் கொண்டு வந்து நிறுத்தியது போல்) ஊர் ஊராக சென்று சாபம் இட்டு வரும் இந்த நவீன காலத்து அப்போஸ்தலர்கலுக்கு (இவர்களே சொல்லி கொள்வது தான்) தயவு செய்து கொடுப்பதை நிறுத்தி பாருங்கள், இவர்கள் வாக்கு கொடுக்கும் ஆசிர்வாதம், தேவன் உங்களுக்கு நேரடியாகவே தருவார்.
கடைசி காலத்தில் இவர்களை போல் கள்ள தீர்க்கதரிசிகள் வருவார்கள் என்று இவர்களே இவர்களை பற்றி சொல்லிக்கொண்டும், நாம் புரிந்துக்கொள்ளாவிட்டால் நமக்கு தான் நஷ்ட்டம்.
தேவன் தாமே இவர்களுக்கு பணம் அனுப்பாதவர்களை அவரின் சித்தத்தின்படி ஆசிர்வதிக்கட்டும்!!
பி.கு. சகோ ஆத்துமா அவர்கள், இந்த இரு கேள்வி பதில்களிலும் எங்கு இருந்து எடுத்து கொடுத்தீர்கள் என்று கட்டுரையின் கடைசியில் ஆதாரம்: (இந்த புத்தகம்) என்று சேர்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.