மீண்டும் ஒரு மொழி பெயர்ப்புக் கட்டுரை. இம்முறை “The Week” பத்திரிக்கையிலிருந்து. இவ்வார இதழில் இக்கட்டுரை சிறப்புக் கட்டுரையாக வெளியிடப்பட்டிருந்த்து. பாகிஸ்தானிலுள்ள சிறுபான்மை ஹிந்துக்கள் பற்றியும், இந்தியாவில் அவர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது பற்றியும் இக்கட்டுரை அலசுகிறது. இனி கட்டுரைக்குள் செல்வோம்.
பெண்கள் (ஹிந்துக்கள்) பாலியல் பலாத்காரத்திற்கு ஆட்படுத்தப்படுகிறார்கள். ஆண்கள் அடித்து உதைக்கப்படுகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர். குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். இப்படியொரு தாலிபானிய அட்டூழியம் பாகிஸ்தானில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானிலுள்ள சிறுபான்மை ஹிந்துக்கள் அடிக்கடி துன்புறுத்துதலுக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. அவ்வாறான அதிர்ஷ்டஹீனர்களான ஹிந்துக்களுக்கு தங்களது பூர்வீக தாய் பூமியான பாரதத்தைத் தவிர போவதற்கு வேறு இடமோ கதியோ இல்லை.
கடந்த ஐந்தாண்டுகளில், சுமார் 5000 பாகிஸ்தானிய ஹிந்துக்கள் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள எல்லையோர மாவட்டங்களான பார்மர், ஜெய்சால்மர், ஜோத்பூர் போன்ற இடங்களில் அடைக்கலமடைந்துள்ளனர். பாகிஸ்தானுக்கு எப்பொழுதும் திரும்பிச் செல்லவேண்டுமென்ற எண்ணமே இல்லாமல்.
இவர்களில் ராணாராம் பில் என்பவர் கனத்த இதயத்தோடு சிந்து மாகாணத்திலுள்ள தனது வீடு மற்றும் சொத்துக்களை விட்டுவிட்டு இந்தியாவில் அடைக்கலம் தேடியுள்ளார்.
காரணம், அடிப்படைவாத மத வெறியர்கள் அவரது மனைவியைக் கடத்திச் சென்று கட்டாயமாக இஸ்லாத்திற்கு மதம் மாற்றியுள்ளனர். உள்ளூர் உருது தினசரிகள் இந்நிகழ்வை ஏதோ பெரிய உத்ஸவம் போல் கொண்டாடித் தீர்த்தனர். அவர்களது அடுத்த இலக்கு ராணாராம் மற்றும் அவரது குழந்தைகள். அவர்களது கொடுமை சஹிக்க இயலாத்தாய் இருந்தபடியால், அவர் தனது பூர்வீக மண்ணை விட்டு வெளியேற வேண்டியதாகிவிட்டது. எனது மனைவி இன்று உயிரோடு இருக்கிறாரா என்று கூடத் தெரியவில்லை என்று ராணாராம் மிகவும் துக்கத்துடன் கூறுகிறார்.
இந்திராராம் மேக்வால், 55 வயதான இவர் 2006 ஆண்டு இந்தியாவிற்கு குடிபெயர்ந்து வந்தவர். பாகிஸ்தான் பற்றிய நினைவுகளை அசை போடுவதே இவருக்கு பீதியளிக்கக் கூடியதாய் இருக்கிறது. இஸ்லாத்தைத் தழுவ மறுத்த ஒரு ஹிந்து பண்டிட்டை பலமாடிக் கட்டிட உச்சியிலிருந்து தூக்கி வீசிக் கொன்றதை நேரில் கண்ட இவர், அக்காட்சியிலிருந்து இன்னமும் மீள முடியாமல் தவிக்கிறார்.
“அவர்கள் பண்டிட்டின் வீட்டை சூறையாடினர், அவரது குடும்பத்தார் அனைவரையும் கொன்றனர். தவிர அங்கிருந்த சிறு ஹிந்து கோவிலையும் தகர்த்தனர். இதுபோன்றதொரு நிலை எனது அயலாருக்கு ஏற்படும் போது எனக்கு ஏற்பட எவ்வளவு நேரமாகும் என்ற பயத்திலேயே இந்தியாவிற்குக் குடி பெயர்ந்தேன் என்று நடுக்கத்துடன் தெரிவிக்கிறார்.”
பொதுவாக பாகிஸ்தானிலுள்ள ஹிந்துக்கள் இந்தியாவிற்கு, இந்திய பாகிஸ்தான் போர்க்காலங்களில் குடிபெயர்வது இயல்பே. தவிர 1992 – இல் பாபர் மசூதி இடிப்பிற்குப் பிறகு பாகிஸ்தானில் ஹிந்துக் கோவில்களை இடிப்பதும், ஹிந்துக்களைத் துன்புறுத்துவதும் அதிகரித்துள்ளது. தற்போது பாகிஸ்தானில் தாலிபான்களின் செல்வாக்கு வேறு அதிகரித்து வருவதால், மதரீதியிலான துன்புறுத்தல்களும் அதிகரித்து வருகின்றன.
சமீபத்தில் பாராளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானதும், சஹிக்க முடியாததும் ஆகும் என வர்ணித்தார்.
தவிர, பாகிஸ்தானின் வட மேற்கு மாகாணத்தின் ஒரே ஹிந்து சட்டசபை அங்கத்தினரான கிஷோர் குமார், ஹிந்துக்கள் படும் துன்பங்களைப் பற்றியும், அவர்கள் அமைதியாக வாழ்வதற்குண்டான சூழ்நிலையை ஏற்படுத்தித் தருமாறும் பாகிஸ்தான் அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்
இவ்வாறு இந்தியா திரும்பும் பெரும்பாலானவர்களுடைய மூதாதையர்கள் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து வேலை தேடி பிரிவினைக்கு முந்தைய பாகிஸ்தானில் குடியேறியவர்கள். ஆனால் மீண்டும் தாயகம் திரும்புவது அவ்வளவு சுலபமானதாக இல்லை. தவிர, இந்தியாவில் அவர்களுடைய வாழ்க்கையும் மலர் படுக்கையாக இல்லை.
“பாகிஸ்தானிலிருந்து வெளியேறும்போது எனது தாயகத்திற்குத் திரும்புகிறேன் என்ற மகிழ்ச்சியில் இருந்தேன். ஆனால் இங்கு எங்களை முறையற்ற வழியில் பிறந்த குழந்தையைப் போல் பாவிக்கிறார்கள். அதிகாரிகளும் எங்களை பாகிஸ்தானியர்களாகவே கருதுகின்றனர்.” இவ்வாறு கூறுபவர் 2005 இல் இந்தியாவிற்குத் திரும்பிய ப்ரேம் சந்த் என்பவர்.
ப்ரேம் சந்தோடு, ஏழு நபர்கள் அடங்கிய குழு ஒன்று வாகா எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைய முயற்சித்த போது அவர்களுடைய விசாக்கள் போலியானவை என்று கூறி இந்திய அதிகாரிகள் இந்தியாவிற்குள் நுழைய அனுமதி மறுத்துள்ளனர். தவிர, ஒரு நபருக்கு ரூபாய் 5000 கொடுத்தால் அனுமதிப்போம் என்றும் கூறியுள்ளனர். அவர்களிடம் அவ்வளவு பணம் இல்லாததால், ப்ரேம் சந்தினுடைய வயது முதிர்ந்த தாத்தா அதிகாரியினுடைய காலில் விழுந்து கெஞ்சியுள்ளார். ஆனால் அம்முதியவரை இந்திய அதிகாரிகள் பூட்ஸ் காலால் எட்டி உதைத்ததில் அவர் நினைவிழந்து வீழ்ந்து விட்டார்.
இந்நிலையில் அதிகாரிகள் அவர்களிடமிருந்த அனைத்து பணத்தையும் பறித்துக் கொண்டு, எல்லைக்குள் அனுமதித்துள்ளனர். ஆனால் வழியிலேயே அம்முதியவர் இறந்து விட்டார். இந்தியாவிற்குள் நுழைவதற்காக அவர் கொடுத்த விலை, தனது உயிர்.
அகதிகளாக வருபவர்கள் குடியுரிமை பெற முயற்சிக்கிறார்கள். ஆனால் ஹிந்துக்களாக இருப்பது அவர்களுக்கு எவ்விதத்திலும் சலுகையளிப்பதாக இல்லை. 2004 ஆண்டு வரை, குடியுரிமை பெற விரும்பும் அகதிகள் ஐந்தாண்டுகள் வரை காத்திருக்க வேண்டும். தற்போது இது ஏழாண்டுகளாக நீட்டிக்கப்பட்டுவிட்டது. தவிர, இக்குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்வதற்குண்டான கட்டணம் ரூபாய் 100 லிருந்து தற்போது ரூபாய் 30,000 மாக சிறுகச் சிறுக உயர்த்தப்பட்டுவிட்டது.
ஜோத்பூரின் புறநகர் பகுதிகளான காலி பேரி மற்றும் ராம்தேவ் நகரில் நூற்றுக் கணக்கான அகதிகள் இவ்வாறு வசிப்பதைப் பார்க்கலாம். எல்லோரும் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட எலும்புக் கூடுகளாய் காட்சியளிக்கின்றனர். அவர்களது கிழிந்த ஆடைகளும், உணர்ச்சியற்ற முகங்களுமே அவர்களது கதையைக் கூறுகின்றன.
பெரும்பாலான அகதிகள் குடிசைகளில் வசிக்கின்றனர். குடிநீர், மின்சாரம், கழிப்பறை, சுகாதாரம் போன்ற எவ்விதமான அடிப்படை வசதிகளும் இல்லை. அருகிலுள்ள கல் குவாரிகளில் தினமும் 12 மணி நேர கடினமான வேலை. தவிர, சிலர் ரிக்ஷா ஓட்டிப் பிழைக்கின்றனர்.
”நான் பாகிஸ்தானில் விவசாயம் செய்து கொண்டிருந்தேன். ஆனால் தற்போது இங்குள்ள கல் குவாரியில் வேலை செய்கிறேன் என்றபடியே தனது கொப்பளித்த உள்ளங்கையைக் காட்டுகிறார்” மிது ராம் என்பவர்.
எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றுவதைப் போல், உள்ளூர் காவலர்களும் அடிக்கடி இவர்களிடம் மாமூல் வசூல் செய்கின்றனர். தர மறுப்பவர்களை சிறையில் தள்ளுவதாகவும் மிரட்டுவதாகத் தெரிவிக்கின்றனர்.
இதற்கெல்லாம் மேலாக, சட்டமும் அகதிகளை ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் நகர அனுமதிப்பதில்லை. யாராவது மோசமாக நோய்வாய்ப்பட்டால் கூட அருகிலுள்ள நகரிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாத நிலை.
பாகிஸ்தானுக்கே திரும்புவது என்பதுவும் கூட இயலாத காரியம். அஜிதா ராம், ஆறு வருடமாக இங்கு வசித்து வருபவர், தனது தாயினுடைய ஈமக் கடன்களைக் கூட செலுத்த பாகிஸ்தானுக்குத் திரும்ப முடியவில்லை. காரணம், இந்திய அதிகாரிகள் விசா மறுத்து விட்டனர்.
இந்த ஆதரவற்ற அகதிகளின் துயரக் குரல்களுக்கு செவி மடுப்பது ஹிந்து சிங் சோதா மட்டுமே. இவர் பாகிஸ்தான் விஸ்தபீட் சங் என்ற அமைப்பின் நிறுவனர் ஆவார். இவ்வமைப்பானது அகதிகளின் உரிமைகளுக்காகப் போராடும் ஒரு சமூகம் சார்ந்த அமைப்பாகும். இதன் நிறுவனரான சோதா, கடந்த பதினைந்து ஆண்டுகளாக அகதிகளின் நலனுக்காகப் போராடி வருகிறார். பல ஆண்டுகள் ஆகியும் குடியுரிமை கிடைக்காத்தால், இம்மக்களுக்கு வங்கிக் கணக்கு துவங்குவது முதல் ஓட்டுனர் உரிம்ம் பெறுவது வரை அனைத்துமே இயலாத காரியமாக இருக்கிறது என்று குமுறுகிறார்.
தனது நிலத்திலிருந்து வரும் சொற்ப வருவாயைக் கொண்டு மாதந்தோரும் ராஜஸ்தான் முழுக்க பிரயாணம் செய்யும் இவர், இதுவரை 13,000 பாகிஸ்தானிய ஹிந்து அகதிகளுக்கு குடியுரிமையைப் போராடிப் பெற்றுத் தந்திருக்கிறார். இன்னமும் போராடும் இவரை அம்மக்கள் தங்கள்து கடவுளாகவே பாவிக்கின்றனர். சோதா கூறுகையில், ”அரசாங்கம் இவர்களைக் கண்டுகொள்வதில்லை, காரணம் இவர்களிடம் அவர்களுக்குத் தேவையான ஓட்டு வங்கி இல்லை”.
ராஜஸ்தான் அரசாங்கம் 2001 ஆம் ஆண்டு, இப்பிரச்சனைகளை ஆராய்வதற்காக ஒரு கமிட்டியை அமைத்த்து. அக்கமிட்டியும் நிலையை ஆராய்ந்து, மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளுக்கு குடியுரிமை வழங்கும் அதிகாரத்தை அளிக்கப் பரிந்துரைத்த்து. ஆனால் 2007 ஆண்டு முதல் இதற்கான அதிகாரத்தை மைய அரசு ஸ்வீகரித்துக் கொண்ட்தால், அக்கமிட்டியின் பரிந்துரைகளும் விழலுக்கிறைத்த நீராய்ப் போனது.
தற்போதைய ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட் இது தொடர்பாக 2009 ஏப்ரலில் உள்துறையமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். ஆனால் இன்றுவரை அக்கடித்த்திற்கு எவ்விதமான பதிலோ, நடவடிக்கைகளோ இல்லை. இதற்கு முன் பதவியிலிருந்த வசுந்தரா ராஜே அவர்களும் அப்போதைய உள்துறையமைச்சர் சிவராஜ் பாட்டீலுக்கு கடிதமெழுதினார். அதற்கும் எவ்வித பதிலும் இல்லை.
2009 மார்ச்சில் தற்போதைய ராஜஸ்தான் அரசாங்கம் மீண்டும் ஒரு கமிட்டியை அமைத்த்து. ஆனால் அதுவும் செயல்படவில்லை.
”ஒருபுறம் வெறியர்களின் துன்புறுத்தல், மறுபுறம் சட்டச்சிக்கல்கள். நாங்கள் பிரிவினையை மேற்கொள்ளவில்லை, ஆதரிக்கவும் இல்லை, ஆனால் நாங்கள் ஏன் இவ்வாறு பந்தாடப்படுகிறோம்?? என்று கேட்கிறார் நைனு ராம்.
( Source : The Week, தமிழில் யதிராஜ் )
Thanks- Idly Vadai