தொல்காப்பியர் காலம் - வையாபுரிப்பிள்ளை
New Indian-Chennai News & More -> தொல் காப்பியம் -> தொல்காப்பியர் காலம் - வையாபுரிப்பிள்ளை
Admin (Guru)2018-05-27 04:02:53

RE: தொல்காப்பியர் காலம் - வையாபுரிப்பிள்ளை

கௌடில்யர்

தொல்காப்பியம் பொருளதிகாரத்தின் இறுதியில் முப்பத்திரண்டு வகை உத்திகள் சொல்லப்பட்டுள்ளன. இந்த உத்திகள் கௌடில்யரது அர்த்தசாஸ்திரம், சுசுருதம் முதலான நூல்களிலும் உள்ளன. கௌடில்யரது காலம் கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதன்று என்பர் ஆசிரியர் உவிண்டர் நீட்ஸ்8. எனவே தொல்காப்பியர் எண்வகை மெய்ப்பாடுகளைப் பற்றிக் கூறியுள்ளமை நன்கறியப்பட்டதே.

நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று

அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப               (மெய்ப்பாட்.3)

என்பது சூத்திரம் . இங்கே என்ப என்ற சொல் கவனத்தற்குரியது. தொல்காப்பியர் தாமே வகுத்துக் கொண்ட மெய்ப்பாடுகள் அல்ல இவை. பிறர் கூறியனவற்றையே இவர் எடுத்துச் சொல்கிறார். சூத்திரத்தில் வரும் என்ப எனும் சொல் இதனை நன்கு புலப்படுத்துகிறது. இப்பிறர் யார்? இளம்பூரணர், வியப்பெனினும் அற்புதம் எனினும் ஒக்கும்; காமம் எனினும் ஒக்கும்; அவலம் எனினும் கருணை எனினும் ஒக்கும்; உருத்திரம் எனினும் வெகுளி எனினும் ஒக்கும் என்று எழுதினர். பேராசிரியரும் இங்ஙனமே எட்டு மெய்ப்பாடுகளுக்கும் உரிய வடமொழிப் பெயர்களைக் குறித்தனர். இவ்வாறு வடமொழிப் பெயர்களைத் தருதலினால் இவ்வடமொழிப் பெயர்களே பெருவழக்கென்பதும் இக்கருத்துகள் வடமொழியிலுள்ளனவே என்பதும் ஊகிக்கத் தக்கதாகும். ஆகவே முன்கூறிய பிறர் ஒரு வடமொழியாசிரியர் என்பது பெறப்படும். வடமொழியில் இப்பொருள்களைக் குறித்து முதன்முதல் நூல் இயற்றியவர் பரத முனிவர்.

ச்ருங்கார ஹாஸ்ய கருணா ரௌத்ர வீர பாயநகா:

பீபத்ஸாத்புத ஸம்ஸ்ஞௌ சேத்ய நாட்யேரஸா: ஸ்ம்ருதா: (VI – 15)

எனத் தமது நாட்டிய சாஸ்திரத்தில் கூறினர். தொல்காப்பியர் இவரது நூலினையே பின்பற்றியுள்ளார் என்பது வெளிப்படை. இம்முனிவருக்குப் பின்வந்த வடமொழி ஆசிரியர்களுள் சிலர், சுவைகள் ஒன்பதென்றும், வேறு சிலர் ஒன்பதுக்கும் மேலாக உள்ளன என்றும், இன்னும் சிலர் சுவைகளை வரையறைப்படுத்தல் இயலாது என்றும் கொண்டனர். முனிவர் மட்டுமே சுவை எட்டு எனக் கொண்டுள்ளார்; இவரது மதத்தினையே தொல்காப்பியர் மேற்கொண்டனர்.

பரத முனிவரின் காலம் கி.பி. நான்காம் நூற்றாண்டென்பர்9. ஆகவே தொல்காப்பியரின் காலம் நான்காம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதாகும். தலைவனைக் கண்டு பிரிந்த தலைவிக்குப் பத்து அவத்தைகள் உளவெனத் தொல்காப்பியர் கூறுவர். இது,

வேட்கை யொருதலை யுள்ளுதல் மெலிதல்

ஆக்கஞ் செப்பல் நாணுவரை யிறத்தல்

நோக்குவ எல்லாம் அவையே போறல்

மறத்தல் மயக்கம் சாக்காடு என்றுஅச்

சிறப்புடை மரபினவை களவென மொழிப (களவியல். 9)

என்ற சூத்திரத்தாலும் அதன் உரையாலும் விளங்கும். மொழிப என்று சூத்திரத்தில் வருவதனால் இவ்அவத்தைகள் தொல்காப்பியர் தாமே படைத்துக் கொண்டன அல்ல என்பது தெளிவு. இவற்றை தசாவஸ்தை என்பர் வடநூலார். இந்த அவத்தைகள் வாத்ஸாயனாரது காமசூத்திரத்தில் ஐந்தாம் அதிகரணத்தில், முதல் அத்தியாயத்தில் காணப்படுகின்றன. இக்காமசூத்திரமானது கி.பி. 4ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதென்பது வடமொழியாராய்ச்சியாளர்10 கருத்து. எனவே, தொல்காப்பியர் காலமாக நாம் மேலே கண்ட முடிவு வலியுறுதல் காணலாம்.

வர்ணனைக்குரிய மரபுகளில் ஒன்று வண்டே இழையே (களவியல் – 3) என்ற சூத்திரத்தில் காணப்படுகின்றது. இம்மரபு சங்கச் செய்யுட்களில் காணப்பெறவில்லை. தொல்காப்பியம் இம்மரபினைக் கூறுவதால், அச்செய்யுட்களுக்கு இவ் இலக்கணம் பிற்பட்டதாகும்.

மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்

துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை             (களவு.45)

என்ற தொல்காப்பியச் சூத்திரத்தில் ஓரை என்ற சொல் வந்துள்ளது. இச்சொல் கிரேக்க மொழியிலிருந்து வடமொழியிற் புகுந்ததெனறும், இதனை வழங்கிய தொல்காப்பியம் 4ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதென்றும் ஆசிரியர் பெரிடேல் கீத் கூறியுள்ளார். இங்ஙனமாக எவ்வகையால் நோக்கினும், ஆசிரியர் தொல்காப்பியர் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனக் கொள்ளுதலே பொருந்துமெனத் தோன்றுகிறது.

குறிப்புகள்

  1. Sreenivasa Iyengar, Tamil Studies, P.17.
  2. பூஜ்யபாதர் இயற்றிய ஜைனேந்த்ர வியாகரணத்தை ஐந்திரம் என்று சிலர் கூறுவர். இது கி.பி. 5ஆம் நூற்றாண்டில் தோன்றியது.
  3. Systems of Sanskrit Grammar, P.11
  4. History of Civilization: Ancient India and Indian Civilization, P.247.
  5. History of Civilization: Ancient India and Indian Civilization, P.248.
  6. Kielhorn i. pp.379 – 380, 382, 392.
  7. C. Chakravarthi : Linguistic Speculations of the Hindus, P.409.
  8. Winternitz; History of Indian Literature (German Edition) Vol. III, P.523.
  9. R. Bhandarker: Indian Antiquary Vol.41 (1912), P.158. Jacobi : Bhavasatte of Dhanavala, P.84. Probably 3rdCentury A.D.
  10. Winternitz; History of Indian Literature (German Edition) Vol. III, P.540.

.வையாபுரிப்பிள்ளை

        இக்கட்டுரை ‘தமிழ்ச்சுடர்மணிகள்’ நூலில் உள்ள “தொல்காப்பியர்” என்னும் கட்டுரையின் ஒரு பகுதியாகும். இது பா.இளமாறன் பதிப்பித்த தொல்காப்பியம் பன்முக வாசிப்பு (திசம்பர் 2008) எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டு ஆய்வுலக வாசகர் பார்வைக்குத் தரப்படுகின்றது. அப்பதிப்பாளருக்கு இனம் நன்றி நவில்கின்றது.

இதன் தொடர்ச்சியாக இனி, ஒவ்வொரு இதழிலும் தொல்காப்பியர் காலம் குறித்த பதிவுகள் வெளிவரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.