ஒருமுறை ஓர் இந்து அமைப்பின் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்க நேர்ந்தது, அப்போது அவர் கூறிய ஒரு வார்த்தை எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. இந்து மதத்தில் அனைத்து விஷயங்களும் விஞ்ஞானபூர்வமானவை, ஆனாலும் ஒரு விஷயத்தால் அதன் புகழ் மங்கி வருகிறது, அது வர்ணாஷ்ரம தர்மம், அதை மட்டும் தன்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என கூறினார். தனது மதத்தின் மீது அவநம்பிக்கையுடன் இருந்து கொண்டு, உடல் சார்ந்த எண்ணங்களுடன் இலக்கில்லாமல் இயக்கம் காண்பவர்களாக, வெறும் மன எழுச்சியில் மக்கள் சேவகர்களாக இருக்கும் இத்தகையவர்களை எண்ணி வருந்தினேன். நாத்திகர்களின் பிராமண துவேஷத்திற்கும், பக்தர்களின் மீதான வெறுப்புணர்ச்சிக்கும், கடவுளை ஏற்காமலிருப்பதற்கும் வர்ணாஷ்ரம தர்மத்தின் மீதான தவறான அபிப்பிராயம் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்பது தவிர்க்க முடியாத உண்மை. எது எப்படி இருப்பினும் சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கும் கருத்துகள் அனைத்தும் 100 சதவிகிதம் ஏற்றுக்கொள்ளக் கூடியவை என்பதையும், அவ்வாறு ஏற்பதால் மட்டுமே புலனின்ப வாழ்விலிருந்து விடுபட்டு ஆன்மீக உலகினை அடைய முடியும் என்பதையும் இந்த கட்டுரையின் மூலமாக காண்போம்.

 

வர்ணாஷ்ரமத்தின் குறிக்கோள்

 

வர்ணாஷ்ரமாசார-வதாபுருஷேண பர: புமான்

விஷ்ணுர் ஆராத்யதே பந்தாநான்யத் தத்-தோஷ-காரணம்

 

அதாவது, வர்ண மற்றும் ஆஷ்ரம விதிகளை நிறைவேற்றுவதன் மூலம் ஒருவன் முழுமுதற் கடவுளான விஷ்ணுவை வழிபட வேண்டும் என்றும், வர்ணாஷ்ரம தர்மத்தினை நிறைவேற்றுவது பகவானைத் திருப்திபடுத்துவதற்கு மிகச்சிறந்த வழிமுறை என்றும் விஷ்ணு புராணம் (3.8.9) கூறுகிறது.

 

விஷ்ணுவை வழிபடுவது மனித வாழ்வின் இலட்சியமாகும். இதற்கான முதல்படியாக இருப்பதே வர்ணாஷ்ரம தர்மமாகும். வர்ணாஷ்ரம தர்மத்தின்மீது மக்களுக்கு தவறான கருத்து ஏற்பட்டிருப்பதற்கு காரணம், மெக்காலே கல்வியாளர்களால் அத்தகைய கருத்துகள் திணிக்கப்பட்டதேயாகும். வர்ணாஷ்ரம தர்மம் மக்களை பிறப்பின் அடிப்படையில் பாகுபடுத்துகிறது என்னும் தவறான கருத்தினை பல தலைமுறைகளாக பிரச்சாரம் செய்த காரணத்தினால், மக்கள் வர்ணாஷ்ரம தர்மத்தினை கண்மூடித் தனமாக எதிர்க்கிறார்கள்.

 

உண்மையான வர்ணாஷ்ரம தர்மம் பகவத் கீதையில் (4.13) விவரிக்கப்பட்டுள்ளது,

 

சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்குண-கர்ம-விபாகஷ:

தஸ்ய கர்தாரம் அபி மாம்வித்த்-யகர்த்தாரம் அவ்யயம்

 

அதாவது, இயற்கையின் வெவ்வேறு தன்மைகளையும் செயல்களையும் அடிப்படையாக வைத்து வெவ்வேறு வகையான மனிதர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளனர் என்று பகவத் கீதை கூறுகின்றது. அவர்கள் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு வகையான வர்ணங்களாகவும் (சமுதாயப் பிரிவுகளாகவும்), பிரம்மசாரி, கிருஹஸ்த, வானபிரஸ்த, சந்நியாசி என நான்கு வகையான ஆஷ்ரமங்களாகவும் (ஆன்மீகப் பிரிவுகளாகவும்) அறியப்படுகின்றனர். ஒவ்வொரு மனிதனும் கிருஷ்ண உணர்வில், அதாவது கடவுள் உணர்வில் முன்னேறுவதற்கு பயிற்சியளிப்பதே இந்த வேத கலாசாரத்தின் நோக்கமாகும்.

 

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பெரும் பக்தரான இராமானந்த ராயருடன் உரையாடியபோது, மனித வாழ்வின் அடிப்படைக் கொள்கை என்ன என்று கேட்டார்? வர்ணாஷ்ரம தர்மம் ஒப்புக் கொள்ளப்படும்போது மனித நாகரிகம் ஆரம்பமாகிறது என்று இராமானந்த ராயர் விடை கூறினார். அதாவது, வர்ணாஷ்ரம தர்ம நிலையை அடையாமல் மனித நாகரிகம் உருப்பெறுவதில்லை.

 

பிறப்பின் அடிப்படையில் அல்ல

 

மனித நாகரிகத்தின் அடிப்படையாக இருக்க வேண்டிய வர்ணாஷ்ரம முறை தற்போது இந்தியாவில் தலைகீழாக மாறியுள்ளது. பிராமண குடும்பத்தில் பிறந்த காரணத்தால், தான் பிராமணனாக ஒப்புக்கொள்ளப்பட வேண்டும் என்று ஒருவன் உரிமை கொண்டாடுகிறான். சூத்திர குடும்பத்தில் பிறந்ததால், தன்னை சமுதாயத்தில் தாழ்ந்தவனாக கருதி, தனக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று மற்றொருவன் உரிமை கொண்டாடுகிறான். ஆனால் இப்படிப்பட்ட உரிமைகளை சாஸ்திரங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. கோத்திரத்தின்படி ஒருவனின் மூதாதையர் பிராமணராக இருந்திருக்கலாம், ஆனால் அதுவே அவனை பிராமணனாக மாற்றிவிடுவதில்லை.

 

உண்மையான வர்ணாஷ்ரம தர்மத்தில், ஒருவனின் வர்ணம் (அல்லது ஜாதி) என்பது அவன் பெற்றுள்ள உண்மையான தன்மையை அடிப்படையாகக் கொண்டதே தவிர, பிறப்பு அல்லது கோத்திரத்தை அல்ல. உதாரணமாக, பௌதிக கல்வியில் சிறந்து விளங்குபவர் ஐஏஎஸ் படித்து மாவட்ட ஆட்சியாளர் ஆகலாம். அதே சமயத்தில் தனது தந்தையின் பெயரைக் கூறி, அவரது மகன் எந்த தகுதியையும் வளர்த்துக்கொள்ளாமல், நானும் மாவட்ட ஆட்சியாளர் என நினைத்தால், அதனை அரசோ மக்களோ நிச்சயம் ஏற்க மாட்டார்கள். ஆட்சியாளரின் மகனுக்கு ஐஏஎஸ் படிப்பதற்கான வாய்ப்பு, சூழ்நிலை, மற்றும் ஈடுபாடும் அவனது இல்லத்தில் இயல்பாகவே இருக்கலாம். இருப்பினும், தகுதியை ஏற்படுத்திக்கொள்ளாத நிலையில், கலெக்டரின் மகன் கண்டக்டராகவும் ஆகலாம். கண்டக்டரின் மகன் கலெக்டராகவும் ஆகலாம். இதனை யாரும் மறுப்பதற்கு இல்லை. அதுபோலவே, பிராமணரின் மகன் தகுதியை வளர்த்துக்கொள்ளாமல், புலனின்ப செயல்களில் பற்றுதல் கொண்டவராக இருந்தால், அவரை சாஸ்திரமும் வேத கலாசாரமும் பிராமணராக ஏற்பதில்லை. மேலும், பிராமண தகுதிகள் அனைத்தும் கொண்டு, பிறப்பினால் பிராமணராக இல்லாதபோதிலும், அவரை பிராமணராக ஏற்பதில் வேத சமுதாயம் தயக்கம் காட்டியதும் இல்லை.

 
 

சாஸ்திரங்களிலிருந்து சில உதாரணங்கள்

 

ரிஷபதேவர் தனது 100 புதல்வர்களில் மூத்த மகனான பரதனையும் அடுத்தபடியான ஒன்பது மகன்களையும் சத்திரியர்களாகவும், அதற்கடுத்த ஒன்பது குமாரர்களை ஸ்ரீமத் பாகவதத்தினை உபதேசிக்கும் பிரச்சாரகர்களாகவும், மீதமுள்ள 81 புதல்வர்களை வேத சடங்குகள் செய்யும் மேன்மைமிக்க அந்தணர்களாகவும் மாற்றினார் என்பதை ஸ்ரீமத் பாகவதத்தின் ஐந்தாவது காண்டத்தில் நாம் காண்கிறோம்.

 

பிராமணராக இருந்த அஜாமிளன் தனது தணியாத புலனின்ப வேட்கையாலும் வேசியின் தொடர்பாலும் நீசனாக மாறிய நிகழ்வினை ஸ்ரீமத் பாகவதத்தின் ஆறாவது காண்டத்தில் காண்கிறோம்.

சத்திரிய குடும்பத்தில் பிறந்த விஸ்வாமித்ரர் காலப்போக்கில் தகுதிகளை வளர்த்துக் கொண்ட பின்னர் பிராமணராக மாறியதையும், இராவணன் பிராமண குடும்பத்தில் பிறந்திருந்தபோதிலும், அவனது அசுர சுபாவத்தினால் ஒருபோதும் அவன் பிராமணனாக ஏற்கப்படவில்லை என்பதையும் நாம் காண்கிறோம்.

 

ஜபல உபநிஷத்தில், ஒரு சிறுவன் வேசிக்கு பிறந்தவனாக இருந்தபோதிலும், அவனிடம் உண்மையை பேசும் பிராமண சுபாவம் இருந்த காரணத்தால், அவனை கௌதம முனிவர் பிராமணராக ஏற்றார் என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வாறாக, வேத சாஸ்திரங்களில் பல இடங்களில் குணம் மற்றும் தொழிலை அடிப்படையாக வைத்து வர்ணங்கள் பிரிக்கப்பட்டிருப்பதை நாம் காண்கிறோம்.

 

வர்ணாஷ்ரமம் இன்று உள்ளதா

 

தற்போதைய உலகில் வர்ணாஷ்ரம தர்மம் பின்பற்றப்படுகிறதா என்றால், ஆம் என்றும் இல்லை என்றும் பதில் கூறலாம். வர்ணாஷ்ரம தர்மத்தின் பல்வேறு நெறிகளும் அதன் அமைப்பும் இன்றைய சமுதாயத்தில் இல்லை. ஆனால் அதே நேரத்தில், வர்ணாஷ்ரம தர்மம் எவ்வாறு மனிதர்களை பாகுபடுத்துகின்றதோ, அதே போன்ற பாகுபாடு இன்றும் மனித சமுதாயத்தில் (நாத்திகர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் மத்தியிலும்கூட) இருக்கத்தான் செய்கிறது. பிரிவுகள் இல்லையெனில் உலகம் சீராக இயங்க இயலாது.

 

உதாரணமாக, ஒரு பெரிய நிறுவனம் ஒன்றில் இந்த நால்வகை பிரிவினர்களும் உள்ளனர் என்பதை ஆராய்வோம். நிறுவனத்தின் கொள்கைகளையும் படைப்புகளையும் வடிவமைக்கக்கூடிய புத்திசாலிகள் ஒரு பிரிவினர், இவர்கள் பொதுவாக குறைந்த எண்ணிக்கையிலேயே இருப்பர், இவர்களை பிராமணர்களுடன் ஒப்பிடலாம். நிறுவனத்தினை நிர்வகிப்பவர்கள் இரண்டாம் பிரிவினர், இவர்களை சத்திரியர்களுடன் ஒப்பிடலாம். நிறுவனத்தின் படைப்புகளை வெளியில் சென்று விளம்பரம் செய்து வியாபாரம் செய்பவர்கள் மூன்றாம் வகையினர், இவர்களை வைசியர்களுடன் ஒப்பிடலாம். நிறுவனத்தின் படைப்புகளை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் நான்காம் வகையினராகவும் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களாகவும் உள்ளனர், இவர்களை சூத்திரர்களுடன் ஒப்பிடலாம்.

 

கடவுளை மறுக்கும் நாத்திகன், சமத்துவம் விரும்பும் கம்யூனிஸ்டுகள் போன்றவர்களுக்கும்கூட, கட்சி நடத்துகையில் இந்த நால்வகைப் பிரிவினர் கட்டாயம் தேவைப்படுகின்றனர். கட்சியின் கொள்கைகளை வகுப்பவர்கள் (அறிவாளி பிரிவினர்), எதிர்கட்சியினரிடம் போராடி கட்சியை நடத்துபவர்கள் (நிர்வாக பிரிவினர்), கட்சிக்கு தேவையான நிதியை திரட்டுபவர்கள் (வியாபார பிரிவினர்), ஆகியோர் மட்டுமின்றி அதிக எண்ணிக்கையில் தொண்டர்களும் (தொழிலாளர்கள்) தேவைப்படுகின்றனர். இந்த தொண்டர்கள் கூட்டம் நடத்த பந்தலிடுவது முதல், போஸ்டர், பேனர் ஒட்டுவது வரையுள்ள எல்லா வேலைகளையும் பார்க்கின்றனர்.

 

இப்போது சொல்லுங்கள் இந்த நால்வகை பிரிவினர்கள் இல்லாமல் உலகம் இயங்குதல் சாத்தியமா என்று.

 
 

பிறப்பின் அடிப்படையில் பிரிக்கவில்லையே

 

நாங்கள் இந்த விளக்கத்தை வழங்கும்போது, பொதுவாக கேட்கப்படும் கேள்வி: “நாங்கள் இதில் யாரையும் பிறப்பின் அடிப்படையில் பிரிக்கவில்லையே? வர்ணாஷ்ரமம் பிறப்பின் அடிப்படையில் ஜாதியை உருவாக்குகின்றது.”

 

உண்மை என்னவெனில், வர்ணாஷ்ரம தர்மமும்கூட பிறப்பின் அடிப்படையில் யாரையும் பிரிக்கவில்லை. சமீப காலத்தில் மட்டுமே பிறப்பின் அடிப்படையில் தன்னை உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று கூறும் வழக்கம் வந்துள்ளது. வேத காலத்தில் பிறப்பு என்பது ஓர் அடையாளமாக எடுத்துக் கொள்ளப்பட்டதே தவிர, அதுவே நியதியாக ஏற்கப்படவில்லை. பொதுவாக ஒவ்வொருவரும் தத்தமது கர்மத்தின் அடிப்படையில் பிறவியெடுப்பதால், வேத கலாசாரத்தில் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறப்பவர்கள் அக்குடும்பத்திற்கு உரிய குணங்களுடன் இருப்பர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கலி யுகத்திலோ அனைவரும் சூத்திரர்களாக இருப்பர் என்று கூறப்படுவதால், இங்கே பிறப்பின் அடிப்படையில் வர்ணத்தை முடிவு செய்தல் என்பது இயலாத ஒன்றாகும். பிறப்பினால் அனைவருமே சூத்திரர்கள் என்பதும், முறையான தகுதியினால் ஒருவர் உயர் குலத்தை அடைகிறார் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இதற்கான சில கூற்றுகளை நாம் மஹாபாரதத்திலிருந்து காண்போம்.

 

மஹாபாரதத்திலிருந்து சில கூற்றுகள்

 

மஹாபாரதம் வனபர்வம் பகுதி 311-ல், யுதிஷ்டிரர் யக்ஷனிடம் மேற்கொண்ட உரையாடலைக் காண்போம். யக்ஷன் யுதிஷ்டிரரிடம் வினவினார், “மன்னா, எத்தகைய பிறவி, நடத்தை, (வேத) படிப்பு அல்லது (சாஸ்திர) கல்வியினால் ஒரு மனிதன் பிராமணனாகிறான்? மெய்யுறுதியுடன் எமக்குச் சொல்வாயாக.” அதற்கு யுதிஷ்டிரர் பதிலளித்தார், “யக்ஷனே, கேள்! பிறவியோ, படிப்போ, பிராமணத் தன்மைக்குக் காரணமில்லை. நடத்தையே பிராமணத் தன்மையாகும், இஃது எப்போதும் நன்கு பாதுகாக்கப்பட வேண்டும். நடத்தையைக் கெடாமல் பராமரித்தால். அவன் ஒருபோதும் கெடு நிலையை அடைவதில்லை. நான்கு வேதங்களைப் படித்தும், ஒருவன் இழிந்தவனாக இருந்தால், அவன் சூத்திரனிலிருந்து வேறுபட்டவன் அல்ல. புலன்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவனே பிராமணன் என்று அழைக்கப்படுகிறான்.”

 

அதேபோல ஒருமுறை பீமன் நகுஷன் என்ற பாம்பிடம் அகப்பட்டு, அதன் உணவாக இருந்த நிலையில், பீமனை விடுவிக்கவேண்டி நகுஷனிடம் யுதிஷ்டிரர் வேண்டினார். தான் கேட்கும் கேள்விகளுக்கு ஆதாரபூர்வமான பதிலளித்தால் பீமனை விடுவிப்பதாக நகுஷன் கூறினான். அவ்வுரையாடலில், ஒரு சூத்திரன் பிறப்பால் மட்டுமே சூத்திரன் அல்ல என்றும், அதேபோல ஒரு பிராமணனும் பிறப்பால் மட்டுமே பிராமணன் அல்ல என்றும், யாரிடம் பிராமணருக்குரிய குணங்கள் இருக்கின்றனவோ அவரே பிராமணர் என்று ஞானமுள்ளோர் கூறியிருப்பதாகவும், யுதிஷ்டிரர் தனது முன்னவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நகுஷனிடம் பதிலளித்தார்.(வனபர்வம் பகுதி 83)

 

மேலும், மஹாபாரதத்தின் வனபர்வம் பகுதி 211-ல் தர்மவியாதன் என்ற வேடனை கௌசிகர் அணுகி நுட்பமான விஷயங்கள் குறித்து கேட்டறிந்தபோது, வேடன் பின்வருமாறு கூறலானான்: “ஒரு மனிதன் சூத்திர ஜாதியில் பிறந்திருக்கலாம், ஆனால் அவன் நற்குணங்களைக் கொண்டிருந்தால், வைசிய நிலையையும் சத்திரியருக்கு ஒப்பான நிலையையும் அடையலாம். மேலும், அவன் நேர்மையில் உறுதியாக இருந்தால், பிராமணராகக்கூட ஆகலாம்.”

 

வர்ணாஷ்ரமம் தேவையா?

 

பிரிவுகள் பிறப்பின் அடிப்படையில் அல்ல என்றபோதிலும், சமுதாயத்தில் பிரிவுகள் தேவையா என்று சிலர் வாதிடலாம். முன்னரே கூறியபடி, சமுதாயத்தில் பிரிவுகள் என்பது இயற்கையாகவே உள்ளது, பிரிவுகள் இல்லாத சமுதாயம் என்பது சாத்தியமே அல்ல. ஆனால் அந்த பிரிவுகள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் வடிவமைக்கப்பட்ட வர்ணாஷ்ரம தர்மத்தை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்டால், அஃது ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும். அத்தகைய வர்ணாஷ்ரமத்தின் நன்மைகள் பலவாக இருப்பினும், பகவான் விஷ்ணுவை நோக்கிச் செல்லுதல் என்பதே அதன் மாபெரும் சிறப்பாகும். இன்றைய சமுதாயம் மக்களை நரகத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது, ஆனால் வர்ணாஷ்ரம சமுதாயம் மக்களை கிருஷ்ணரை அல்லது விஷ்ணுவை நோக்கி அழைத்துச் செல்லக்கூடியதாகும்.

 

மனித சமுதாயம் சிறப்பான முறையில் செயல்பட்டு அதன் இலக்கை அடைய வேண்டுமெனில், வர்ணாஷ்ரமம் அவசியமாகிறது. இன்றைய சமுதாயம் தொழிற்சாலைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது, வர்ணாஷ்ரம சமுதாயமோ விவசாயத்தையும் பசு பராமரிப்பையும் அடிப்படையாகக் கொண்டு எளிய வாழ்வு, உயர்ந்த சிந்தனை என்னும் கொள்கையினைக் கொண்டுள்ளது. சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் அறிவில் சிறந்த பிராமணர்களால் வழிநடத்தப்பட வேண்டும் என்பது வர்ணாஷ்ரமத்தின் அடிப்படையாகும். தற்போதைய நிலையில் அத்தகு பிராமணர்கள் (ஆன்ம வழிகாட்டிகள்) மிகமிக குறைவான எண்ணிக்கையில் இருப்பதால், உலகம் முழுவதும் புலனின்பமே பிரதானம் என்று வாழ்ந்து வருகிறது; இதனால் சமுதாயத்தில் பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்த முரண்பாடுகளையெல்லாம் களைவதற்காகவே ஸ்ரீல பிரபுபாதர் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை துவக்கியுள்ளார். இதன் மூலமாக சமுதாயத்தில் பிராமணத் தன்மை கொண்டவர்கள் மீண்டும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றனர், இது மேலும் வலுபெறும்போது, மற்ற சமுதாய நலன்கள் தாமாகவே ஏற்படும்; இது மூளை சரியாக இருந்தால் உடலின் மற்ற பகுதிகளான கை, கால், வயிறு போன்ற உறுப்புகள் சரியாக இயங்குவதைப் போன்றதாகும்.

 

பிறப்பின் அடிப்படையிலான ஜாதி முறையை வேதங்கள் ஆதரிப்பதில்லை, கிருஷ்ண பக்தர்களும் அதனை ஒப்புக்கொள்வதில்லை. தகுதிகளின் அடிப்படையில் முறையான பிரிவுகளை ஏற்படுத்துவதற்கு பதிலாக, இன்றைய மக்கள் வர்ணாஷ்ரமத்தினை நிராகரிக்கின்றனர். கண்களில் புறை இருந்தால் அதனை குணப்படுத்த வேண்டுமே தவிர, கண்களையே பிடுங்கி எறிந்துவிடக் கூடாது. இதனால் இஸ்கான் இயக்கம் ஒவ்வொருவருக்கும் ஆன்மீகப் பயிற்சியை வழங்கி, அவர்கள் எந்த ஜாதியில் பிறந்திருந்தாலும், பிராமணனாகும் வாய்ப்பை அளிக்கின்றது. மனித சமுதாயம் நெறிப்படுத்தப்பட வேண்டுமெனில், சமுதாயத்தின் தலைப் பகுதியாக கருதப்படும் பிராமணர்களை முதலில் நெறிப்படுத்த வேண்டும் என்று ஸ்ரீல பிரபுபாதர் அடிக்கடி கூறுவார்.

 

பக்தர்களுக்கு தேவையா?

 

கிருஷ்ண பக்தன் சமுதாயத்தின் எந்த வர்ணத்தைச் சார்ந்தவனாகவும் எந்த ஆஷ்ரமத்தைச் சார்ந்தவனாகவும் இருக்கலாம். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய நான்கு வர்ணங்களிலும், பிரம்மசாரி, கிருஹஸ்தர், வானபிரஸ்தர், சந்நியாசி ஆகிய நான்கு ஆஷ்ரமங்களிலும் கிருஷ்ண பக்தர்கள் இடம் பெற்றுள்ளனர். கிருஷ்ண உணர்வில் இருப்பவர்கள் பிராமணர்களைவிட உயர்ந்தவர்களாவர். ஏனெனில், பிராமணர் என்போர் பிரம்மனை அறிந்தவர்கள், கிருஷ்ண பக்தர்களோ பிரம்ம ஞானத்தைக் கடந்து பரம புருஷ பகவானான ஸ்ரீ கிருஷ்ணரை அறிந்தவர்கள். இதனால் கிருஷ்ண பக்தர்கள் வர்ணாஷ்ரம நெறிகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று கூறப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில், கிருஷ்ண பக்தரானால் போதுமே, வர்ணாஷ்ரமம் தேவையா என்று சிலர் கேட்கலாம்.

பெரும்பாலான கிருஷ்ண பக்தர்கள், பக்தியில் ஆரம்பநிலையில் இருப்பவர்களாகவும் பக்குவம் பெறாதவர்களாகவும் உள்ளதால், வர்ணாஷ்ரமத்தின் நெறிகள் அவர்களுக்கு உதவியாக அமையும். கிருஷ்ண பக்தியைப் பயிற்சி செய்தல் என்பது கயிற்றின் மேல் நடப்பதைப் போன்றதாகும், வர்ணாஷ்ரம அமைப்பானது அதற்கு கீழ் இருக்கும் வலையைப் போன்றதாகும். அதாவது, ஏதேனும் துரதிர்ஷ்டத்தினால் நாம் நமது பக்திப் பாதை என்னும் கயிற்றிலிருந்து நழுவி கீழே விழ நேர்ந்தால், அச்சமயம் வர்ணாஷ்ரமம் என்னும் வலையானது நம்மைப் பாதுகாக்கும். பக்தித் தொண்டின் பாதையிலிருந்து பக்தர்கள் விலகாமல் இருப்பதற்கு வர்ணாஷ்ரமம் உதவும் என்பதாலும், ஸ்ரீல பிரபுபாதர் இத்தகைய தெய்வீக வர்ணாஷ்ரமத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்பினார்.

இதுமட்டுமின்றி, இன்றைய நவீன சமுதாயம் மக்களை கழுதைகளைவிட மோசமான முறையில் வேலை வாங்குகின்றது. இந்த நவ நாகரிக வாழ்விலிருந்து விலகி, உயர்ந்த சிந்தனையுடன் கூடிய அமைதியான வாழ்விற்கும் வர்ணாஷ்ரம சமுதாயம் உதவியாக அமையும்.

எனவே, வேறெந்த கழகத்திலும் அல்லாது, இன்றே கிருஷ்ண பக்தி கழகத்தில் இணைந்து வைஷ்ணவராவோம், வாரீர்! வாரீர்!!!