New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சைவ சமயமும் விக்கிரக வழிபாடும்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
சைவ சமயமும் விக்கிரக வழிபாடும்
Permalink  
 


சைவ சமயமும் விக்கிரக வழிபாடும்

சிவமயம்

சைவர்களை தடம் மாறிப் போக,முஸ்லிம்களும் கிருத்துவர்களும் செயல்பட்டு வருகின்றனர்….நம் மக்களை குழப்ப நம் சமய நூல் கருத்துக்களை திரித்து நம்மிடம் கூறுகின்றனர்..இவர்களில் இப்படிப்பட்ட ஒரு சூழ்ச்சி தான் “விக்கிரக வழிபாடு இடைகாலத்தில் சிலரால் புகுத்தப்பட்டது..வேதம் போன்றவை விக்கிரக வழிபாட்டை ஆதரிக்கவில்லை..” என்ற இவர்களுடைய கருத்து..விக்கிரக வழிபாடு என்றால்,ஆத்மார்த்த பூசையான வீட்டில் சிவலிங்கம் முதலான விக்கிரகங்கள் மூலமமும்,பரார்த்த பூசையான கோவிலிலுள்ள சிவலிங்கத்தின் மூலமும் ,எங்கும் நிறைந்த சிவபிரானை வழிபடுவதாகும்…   ஆக,விக்கிரக வழிபாட்டை நம் மக்களிடமிருந்து பிரித்து விட்டால், கோவிலில் பூசைகள் போன்றவை குறைந்துவிடும்,பிறகு கோவிலுக்கு எவரும் போக மாட்டார்,வீட்டிலும் சிவபூசை செய்யமாட்டார்…ஆதலால்,இவர்களை சுலபமாக இஸ்லாம் மற்றும் கிருத்துவ சமயத்துக்கு மதம் மாற்றிவிடலாம் என்று எண்ணுகிறார்கள் இந்த முஸ்லிம்,கிருத்துவர் போன்றோர்… ஆகையினால்,இவர்களின் இத்தகைய புளுகை முறியடித்தும்,நம் மக்களிடம் உண்மையை உணர்த்துதல் நம் கடமையாகும்…விக்கிரக வழிபாடு,சைவ சமயத்துக்கு உடன்பாடே எனும் கருத்தை சைவ நூல்களிலிருந்து பல ஆதாரங்களுடன் நிருபிப்போம்..முதலில் வேதத்தில்,விக்கிரக வழிபாட்டைப் பற்றிய கருத்தைப் பார்ப்போம் :

1)

” சம்வத்சரஸ்ய ப்ரதிமாம் யாம் த்வா ராத்ர்யுபாசதே ப்ரஜாம் சுவீராம் கருத்வாவிச்வ மாயுர் வியச்னவத் ப்ரஜாபத்யாம்” -(5ஆம் கண்டம்,7ஆம் பிரசினம்,2ஆம் அநுவாகம்,யஜூர் வேதம்)

பொருள் : காலரூபியாகிய உமது பிரதிமையை செய்து இருட்டறையில் உபாசிப்பவன் வலிமையுள்ள புத்திரனையும் பூரண ஆயுளும் அடைகிறான்..பிரஜைகளுக்கு எஜமானனாகுந் தன்மையையும் மடைகிறான்…

2)

“அச்மானம் ஆகணம் ப்ரபத்யே” -(4ஆம் பிரசினம்,யஜூர் வேத ஆரண்யகம்)

பொருள் : நன்கு சித்திரிக்கப்பட்ட சிலையை வணங்குகிறேன்

3)

“ஏஹி அச்மானம் ஆதிஷ்ட அச்மாபவது தே தநூ : ”  – ( 1ஆம் கண்டம்,2ஆம் கற்பகம்,3ஆம் துவனி,அதர்வண வேதம்)

பொருள் : சுவாமி வாரும் இந்த கற் பிரதிமையில் நில்லும் இந்தக் கற்பிரதிமையே உமக்குச் சரீர மாகுவதாக

4)

“சிவலிங்காயநம : ” -(தைத்தீரிய ஆரண்யம்,10ஆம் பிரசினம்,16ஆம் அநுவாகம்,யஜூர் வேதம்)

பொருள் : சிவலிங்கத்துக்கு வணக்கம்

5) ”

சிவலிங்கம் த்ரிசந்தியம் அஹரஹ : அப்யர்ச்சயேத்” -(பஸ்மஜாபால உபநிஷத் )

பொருள் : சிவலிங்கத்தை தினந்தோறும் காலை உச்சி மாலை என்ற முப்போதும் பூஜிக்க

சிவலிங்க வழிபாட்டைப் போலவே,சிவனடியார் வழிபாட்டையும் வேதம் கூறுகிறது :

“அதோஸ்ய சத்வானோ ஹம் தேப்யோகரம் நம : ” -(தைத்திரீய சங்கிதை,4ஆம் காண்டம்,ஸ்ரீ ருத்ரம்,நமகம் 1-9 ,யஜூர் வேதம்)

பொருள் : உருத்திரருடைய அடியார்கள் எவர்களோ அவர்களுக்கு நான் நமஸ்காரஞ் செய்கிறேன்

அடுத்து,சிவாகமத்தில் உள்ளதா என்று ஓர் ஐயம் எழும்…சிவாகமத்தில் விக்கிரக வழிபாடு நிச்சயம் உண்டு…இன்றுவரை நம் சிவாலயங்களை எவ்வாறு கட்டுவது,எவ்வாறு பூசை செய்வது போன்ற விஷயங்களுக்கு சிவாகமமே ஆதாரம்…இருப்பினும், சிவாகமங்களில்,கோவில் பூசை ,பரார்த்த பூசை என்று அழைக்கப்படுகிறது..சிவாகமத்திலுள்ள விக்கிரக வழிபாட்டைப் பற்றிய கருத்துக்களைப் பார்ப்போம் :

1)

” ஆத்மார்த்தஞ்ச பரார்த்தஞ்ச ஸ்வாதி சைவேந பூஜிதம் |

ஆதிசைவ இதிப்ரோக்தஸ்ஸ சிவ ப்ராஹ்மணோ குரு : ”  – ( 30-வது நித்தியார்ச்சன விதிப்படலம், பூர்வ காரணாகமம் )

பொருள் : ஆத்மார்த்த பூஜையும் பரார்த்த பூஜையும் ஆதி சைவர்களால் செய்யப்பட வேண்டும்..ஆதி சைவரே சிவப்பிராமணரும் குருக்களுமாவார்

2)

“பரார்த்த யஜநம் கார்யம் சிவவிப்ரைஸ்து நித்யச : |

தார்மிக : கத்யதே நித்யம் ஆதிசைவோத் விஜோத்தம :|| ”   -(காமிகாகமம்)

பொருள் : பரார்த்த பூஜை,நித்தியம் சிவபிராமணர்களால் செய்யப்பட வேண்டும்..தர்மிஷ்டராகிய ஆதி சைவ உத்தம பிராமணரால் நாள் தோறும் செய்யபப்ட வேண்டும்..

ஆதிசைவர்கள் சிவாலயத்தில் பரார்த்த பூசை செய்ய வேண்டும் என்று இச்சிவாகமங்கள் கூறுகின்றன …அடுத்து,திருமுறைகளைப் பார்ப்போம் :

1)

“சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்”  – (4ஆம்  திருமுறை )

பொருள் :  நீரும் மலரும் புகையும் (பிறவும்) கொண்டு நின்னை வழிபடுவதை மறந்தறியேன்.

2)

“கைகாள் கூப்பித்தொழீர் – கடி

மாமலர் தூவிநின்று

பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்

கைகாள் கூப்பித்தொழீர்”  – (4ஆம் திருமுறை )

பொருள் : கைகளே! மணங்கமழும் சிறந்த மலர்களைச் சமர்ப்பித்துப் ,படம் எடுக்கும் வாயை உடைய பாம்பினை ,இடையில்  இறுகக்   கட்டிய    மேம்பட்ட பெருமானைக் ,கூப்பித் தொழுவீராக

3)

“ஆக்கை யாற்பயனென் – அரன்

கோயில் வலம்வந்து

பூக்கையா லட்டிப் போற்றியென் னாதஇவ்

ஆக்கை யாற்பயனென் ”   –  (4ஆம் திருமுறை )

பொருள் : எம் பெருமானுடைய கோயிலை வலமாகச் சுற்றி வந்து பூக்களைக் கையால் சமர்ப்பித்து அவனுக்கு வணக்கம் செய்யாத உடம்பினால்    யாது பயன்?

4)

“கால்க ளாற்பயனென் – கறைக்

கண்ட னுறைகோயில்

கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக்

கால்க ளாற்பயனென்”  –  (4ஆம் திருமுறை )

பொருள் :நீலகண்டனான எம்பெருமான் தங்கியிருக்கும் கோயிலாகிய, அழகான கோபுரத்தை உடைய கோகரணம் என்ற தலத்தை வலம் வாராத   கால்களால் யாது பயன்?

இந்தத் திருமுறை வாக்கியங்கள் ,நீர்,மலர்,தூபம் போன்றவையுடன் சிவவழிபாடு செய்ய வேண்டும் என்று நமக்கு உணர்த்துகிறது ……விக்கிரகம் இல்லாமல்,பூ,நீரை,தூபத்தைக் கொண்டு என்ன செய்ய முடியும் ??? ஆக,இங்கு கூறப்படும் வழிபாடு கோவில் மற்றும் ஆத்மார்த்த பூசை  வழிபாடே…கோவில்களை வலம்வருதல், கோவில் பூசைக்கு பூக்களை சமர்ப்பித்தல் போன்றவற்றையும் இந்தத் திருமுறைப் பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன…கோவிலில் விக்கிரக வழிபாடு தான் செய்யப்படுகிறது என்று எல்லோருக்கும் தெரியும்…அடுத்து மகாபாரதத்தில் விக்கிரக வழிபாட்டைப்  பற்றிய சில பகுதிகளைப் பார்ப்போம் :

1.

“கிருஷ்ணன் ,மகாதேவ பூஜைக்காக முப்பத்து நான்கு தினம் இரவும் பகலும் மஹோத்சவம் நடப்பதென்று சொல்லி , ‘எல்லா வருணத்தாரும் யாதவரனைவர்களும் கடலில் உள்தீவுக்குச் செல்ல கடவர்’ என்று நகரத்தில் பறையறை அறிவித்தார்.” – (ஆதி பர்வம்,அத்தியாயம் 241 )

2.

“வியாசர் விக்நேஸ்வரருக்குப் பூஜை செய்து… பிரார்த்தித்தார்”  – ( ஆதிப்பர்வம் )

3.

“அர்ஜுனன் பிநாகியை சரணமடைந்து…..அந்த சிவபிரானை மலர் மாலையால் பூஜித்தான்”   – (வனம். அத்தியாயம் 20 )

புராணங்களில் பல இடங்களில்,விக்கிரக வழிபாட்டைப் பற்றிய குறிப்பு உண்டு…அதில் ஒன்று தான்,விஷ்ணு ஆயிரம் மலர்கொண்டு சிவபூசை செய்கையில்,ஒரு மலர் குறைய,தன் கண்ணை பிடுங்கி வைத்ததாக வருகிறது…இந்த வரலாறு பல சைவப் புராணங்களில் பார்க்கலாம்…தமிழிலுள்ள கஞ்சிப் புராணத்திலும் இவ்வரலாறு உண்டு..இந்த வரலாறுக்கு சான்றாக வேதத்தில் ஒரு வசனம் உண்டு :

“யோவாமபாதார்ச்சித விஷ்ணு நேத்ர : …..தஸ்மை ருத்ராய நமோ அஸ்து ” – சரபோபநிஷத்

இதன் பொருள் :  “எவன் இடது பாதத்திலே அர்ச்சிக்கப்பட்ட விஷ்ணுவின் நேத்ரத்தை(கண்ணை) உடையவனோ, அவ்வியல்புடைய சிவபிரானுக்கு நம்ஸ்காரம் ஆகுக”

இனி,சைவ சமய நெறி எனும் நூலில்,சிவப்பூசையைப் பற்றிய சிலப் பாடல்களைப் பார்ப்போம் :

சுத்தமுங் கேவலமும் மிச்சிரமுந் தொண்டரவர்

பத்தியினா லர்ச்சிக்கும் பாங்கு ( 3 : 471 )

பொருள் : சிவனடியார்கள் பத்தியினால் பூசிக்கும் சிவ பூசை,சுத்தமும் கேவலமும் மிச்சிரமும் என்று மூன்று பேதமாம்

 சுத்தஞ் சிவலிங்க மொன்றுமே சுந்தரியு

மொத்துறைதல் கேவலமென் றோர் ( 3 : 472 )

பொருள் : சிவலிங்கம் ஒன்றை மாத்திரம் பூசித்தல் சுத்த பூசையாம்,அதோடு உமாதேவியாரையும் கூட்டி பூசித்தல் கேவலப் பூசை என்று அறி  குறிப்பு : சிவலிங்கம்,உமாதேவியார்,விநாயகர்,கந்தன் ரிஷப தேவர் என்ற ஐவரை பூசித்தலும் கேவல பூசையே …

அருக்கன் கரிமுகவ னாதிசண் டாந்தம்

விரித்தருச்சிக் கைமி ச்சிரம் ( 3 : 473 )

பொருள் : சூரியன் விநாயகர் முதலாகச் சண்டேசுரர் இறுதியாக விரித்து பூசித்தல் மிச்சிர பூசையாம்

ஆக,பல சைவ நூல்களிலிலிருந்து சில ஆதாரங்களைப் பார்த்தோம்..வேதம்,சிவாகமம்,திருமுறை,சித்தாந்த சாத்திரம்,புராணம்,இதிஹாசம்  மற்றும் சிவதருமோத்தரம்,சைவ சமய நெறி போன்ற பிற்காலத்து சைவ நூல்களிலும் விக்கிரக வழிபாடு ஆதரிக்கப்படும் ஒன்றே…ஆகையினால், சில முஸ்லிம்,கிருத்துவர்கள் அவிழ்த்துவிடும் புளுகு மூட்டைகளை நம்பி மோசம்போகாமல், சைவ நூல்களான இவற்றை கற்று உண்மையை உணருங்கள்,மக்களே…

ஆதாரமாகக் கொள்ளப்பட்ட நூல் :

1. திருத்தொண்டர் புராணம் மூலமும் சூசனமும்

2.சுலோக பஞ்சக விஷயம் (ஆ.ஈஸ்வரமூர்த்தி பிள்ளை)

3.சைவ சமய நெறி மூலமும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் புத்துரையும்

4.சமய சாதனம் பத்திரிக்கை



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard