New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சீன இதிகாசக் கதைகள்- ஏவி.எம். நஸீமூத்தீன்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
சீன இதிகாசக் கதைகள்- ஏவி.எம். நஸீமூத்தீன்
Permalink  
 


சீனாவில் இருந்து உலகத்துக்கு

சீன இதிகாசக் கதைகள் / முன்னோட்டம்

Chinese-Painting-for-Chengyu-Cherishing-Official-Appointments-PhotosCom-135366482-676x450நமக்கெல்லாம் ‘இதிகாசம்’ என்றால் என்னவென்று தெரியும். நம் நாட்டில் மிக அதிகமாகப் பேசப்பட்ட இதிகாசங்கள் ராமாயணமும் மகாபாரதமும் ஆகும். இந்தக் கதைகளை அறியாதவர்கள் இருக்க முடியாது. ஆங்கிலத்தில் Mythology என்ற சொல் தமிழில் ‘தொன்மம்’ என்று பொதுவாக அழைக்கப்படுகிறது.  இருந்தும் இந்தப் புத்தகத்தில் சீன இதிகாசக் கதைகள் என்னும் தலைப்பே எளிமை காரணமாக வைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக உலகில் பேசப்படுகின்ற மொழிகள் ஒவ்வொன்றும் தமக்கென்று தனித்தன்மையோடு கூடிய வரலாறு, பண்பாடு, இதிகாசங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. தொன்மக் கதைகள் ஆதிமனிதர்கள் காலத்திலே தொடங்கியிருக்கவேண்டும். மனிதனின் அச்சம், ஆசை, ஆற்றாமை, கற்பனை, தனிமை, தன்னிரக்கம் என்றெல்லாம் மனிதச் சமூகம் காலங்காலமாகக் கொண்டிருந்த உணர்வுகளின் வெளிப்பாடே மனிதனின் சமூக, சமய வரலாற்றை வடிவமைக்கக் காரணமாயிற்று.

எல்லா மொழிகளிலும் உள்ள இதிகாசக் கதைகளைப் போலவே சீன மொழிக் கதைகளிலும் கற்பனை வளம், ஆற்றல், யதார்த்தத்தை உதைத்துக் கொண்டு துள்ளி எழுகின்ற மனித மனத்தின் ஆர்வ ஜாலங்கள், அமானுஷ்ய நிகழ்வுகள் வினோத கதாபாத்திரங்கள் ஆகியவை நிரம்பியுள்ளன. வாய்மொழி கதைகளாகத் தொடங்கி தலைமுறைகளைத் தாண்டி, இன்று வரை இவை பேசப்படுகின்றன. சீன இதிகாசம் உலகில் மிகத் தொன்மையானது என்பதற்கு அதன் தொடக்கம் கி.மு. 12ம் நூற்றாண்டு என்று கணிக்கப்பட்டுள்ளதிலிருந்து தெரிய வருகின்றது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, எழுத்து வடிவத்தை எட்டாமலே ‘மொழிதல்’ இலக்கியமாகத் தொடர்ந்து பின்னர் சற்றேக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்து வடிவில் இந்தக் கதைகள் உருப்பெற்றுள்ளன. தொடக்கத்தில் எழுத்தில் வடிக்கப்பட்ட நூல் ‘ஷன்-ஹாய்-ஜிங்’ (Shan Hai Jing) என்பதாகும்.

சீன நாட்டில் பல்வேறு பகுதிகளில் பேசப்பட்ட மொழிகளின் தன்மைக்கேற்ப அங்கங்கே வட்டார வழக்கிலும் ‘மொழிதல் இலக்கியம்’ வளர்ந்து, பின்னர் இவை நாட்டுப்புற மற்றும் நாடோடிப் பாடல்களாகவும், நாடகங்களாகவும் உருப்பெற்றன  இவையாவும் பிற்காலங்களில் எழுத்தில் பதிவு செய்யப்பட்டன.

மகாபாரதத்தைப் போன்று நீண்ட கதைகளை ஊர் ஊராகச் சென்று ‘கதைச் சொல்லிகள்’ இசைக் கருவிகளை இசைத்து சொல்லி இருக்கிறார்கள். ஊருக்கு ஊர், ஆளுக்கு ஆள், காலத்துக்குக் காலம் ஒரே கதையே அனேக மாற்றங்களுடன் உருவாகியுள்ளன. இவ்வாறு உருவாக்கப்பட்ட கதைகளே பின்னர் சீன இலக்கியத்தின் பண்டைய இலக்கியங்களாக இடம் வகித்துள்ளன. சில குறிப்பிட்ட சீன இனக் குழுக்களின் பங்களிப்பில் இத்தகைய இலக்கியங்களின் பெரும் பகுதி வெளிப்பட்டுள்ளன. இவற்றின் வழியாக சீன நாட்டின் வரலாறு, மன்னராட்சி வரலாறு, சமய நம்பிக்கைகள், சமூக நடைமுறைகள், மாயா விநோதங்கள் ஆகியன நீள் கதைகளாகப் படைக்கப்பட்டு மக்களிடையே வைக்கப்பட்டன. இத்தகைய மக்கள் இலக்கியம் கதைகளாக ,வாய்மொழியாகச் சொல்லப்பட்டும், நாடகங்களாக நடத்தப்பட்டும் நிலைகொண்டன.

முதல் முதலாக நெடுங்கதை வடிவில் கி.மு.பத்தாம் நூற்றாண்டளவில் ‘ஹேய்யான் சுவான்’ என்ற பெயரில் (கார் இருட்டிலே என்பது இதற்குப் பொருள்) ஒரு காப்பியம் இயற்றப்பட்டது. ஹன் தேசிய இனத்தின் ஒரே காப்பியம் இது. அவர்களுடைய வாழ்விடமாக அமைந்த ஷென்னோன்ங்கியா (Shennongjia) என்ற மலையகப் பகுதியின் நிகழ்ச்சிகளை, அந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்த மனிதர்களின் இயல்புகளை, கற்பனை வளர்ச்சியை எடுத்துக்காட்டக் கூடியதாக இது விளங்குகின்றது.

மேலும் சில படைப்புகள் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம்.

  1. செய்யுள் வடிவில் அமைந்த ‘லிசாவ்’ (Lisao); இதனை க்யூ யுஆன் (Qu Yuan) என்ற ‘Chu’ என்ற பகுதியைச் சேர்ந்தவரால் புனையப்பட்டது.
  2. Feng Hen yanyi என்ற பெயரில் Zhou  இனத்தினர் உருவாக்கிய கடவுளின் கதைகள். இவை மிகவும் விறுவிறுப்பானவை என்று அறியப்பட்டவை.
  3. சீனாவிலிருந்து இந்திய நாட்டுக்கு புனிதப் பயணம் செல்வதைக் கூறும் நெடுங்கதை. கதையின் தலைப்பு- “மேற்கு நோக்கிப் பயணம்” (Journey to the West) என்பதாகும். இதை எழுதியவர் யூ சென்ஜென் (Wu Chengen) என்பவர். ஸுவான்ஜாங் (Zuan Zang) என்ற ஊரிலிருந்து மலைகளையெல்லாம் கடந்து இந்தியாவுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்கின்றபோது எதிர்கொள்ளும் நிகழ்ச்சிகள், அச்சமூட்டும் பேய்கள், பூதங்கள், ராட்சஷர்கள், காண நேர்ந்த வினோத காட்சிகள் போன்றவை இதில் உள்ளன.
  4. ஒர் அற்புதமான காதல் கதையும் சீன இதிகாசத்தில் தலையாய இடம் வகிக்கின்றது. அது Baishe Zhuan. இதனை உருவாக்கியிவர் ஹாங் ஷுவு (Hang Zhou). இந்தக் கதையில் ஒரு பாம்பு மனித உருவில் பெண்ணாக மாறி ஒரு மனிதனைக் காதலிக்கும். சாகசங்கள், அறைகூவல்கள் அச்சுறுத்தல்கள், அமாஷ்ய நிகழ்வுகள் எல்லாமே இதில் உண்டு.

நுவா உலகில் ஏற்பட்ட ஊழிப்பெருவெள்ளத்திலே தப்பிப் பிழைத்த ஒரே பெண். இவளுடன் மிஞ்சி இருந்த இன்னொரு மனித உயிர் இவளுடைய சகோதரன். ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் இருவருமாக மீண்டும் மனித இனத்தைப் பூமியிலே நிலைபெறச் செய்யவேண்டும் என்று விரும்புகின்றனர். எனவே இவர்கள் திருமணம் செய்துகொள்கின்றனர்.

மண்ணிலே மனிதர்களும் விலங்குகளும் பறவைகளும் வேகவேகமாக பெருகவேண்டும். அப்பொழுதுதான் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கருதி, நுவா களிமண்ணைக் கொண்டு மனிதர்களை, விலங்குகளை, பறவைகளைப் படைக்கின்றாள். கடவுள் அவற்றை உயிர்பெறச் செய்கின்றார்.

ஒரு பிரளயத்தை ஒட்டி இப்படி ஒரு கதையைப் புனைந்தனர்.  கி.மு ஏழாம் நூற்றாண்டளவில் இந்த நுவா கதை தோன்றியுள்ளது.  இந்தக் கதை Three August Ones, Five Emperors ஆகிய சீன இதிகாசங்களில் சொல்லப்படுகின்றன. நுவா கதை மற்றும் இந்த இரண்டு இதிகாசங்களும் ஜியா வம்ச ஆட்சிக்காலத்தில் (கி.மு.2850-கி.மு.2205) தொகுக்கப்பட்டுள்ளன.

‘உலகம் தோன்றிய கதை’ என்பது பான்-கூ என்பவனைப் பற்றிக் கூறுவது. உலகத் தோற்றம் குறித்த சுவையான கதைகள் சொல்லப்பட்டுள்ளன. மன்னர்களைப் பற்றி சொல்லப்பட்ட கதைகள் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டவை. அவை ஹூவாங்டடி, யூ-ஹுவாங், ஷென்நாங், ஷாஹுவா, யாவோ, ஷன், யூ போன்ற பேரரசர்களின் கதைகள்.

இந்தக் கதைகளில் மன்னர்கள் கடவுளுடன் நேரடியாக தொடர்பு கொள்வார்கள். சில மன்னர்கள் கடவுளாகவே இருந்துள்ளனர். ‘ஜாட்’ என்ற மன்னன் மூவுலகங்களுக்கும் அதிபராக இருந்து நியாயத் தீர்ப்பு வழங்குவதாகச் சொல்லப்படுகின்றது.

பல நூறு ஆண்டுகள் ஒரே மன்னர் குலம் ஆட்சி புரிந்துள்ளதும் தெரியவருகிறது. அப்படி ஆண்ட மன்னர் குல ஆட்சிகள் : ஜியா வம்சத்தினர் மற்றும் ஷாங் வம்சத்தினர்.

சீனாவில் மிகப்பழமையான மன்னர்களாகவும், மிகவும் போற்றத்தக்க வகையில் தூய்மையான அரசை நடத்தியவர்களாகவும் தங்களின் மைந்தர்களை அரச பாத்யதைக்கு உரியவர் ஆக்காமல், வெளியிலிருந்து ஆட்சி நடத்துகின்ற தகுதியுடையவர்களைத் தேர்ந்தெடுத்து ஆட்சி உரிமையை அவர்களுக்கு அளித்தவர்களாகவும் இருந்த மாமன்னர்கள்  “முப்பெரும் வேந்தர்கள்” என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் பேரரசர் யாவோ, பேரரசர் ஷுன், பேரரசர் யூ ஆகியோராவார். ஆனால் மூன்றாவது பேரரசர் யூ மனம் மாறி, அவர் தேர்ந்தெடுத்தவர் தகுதியற்றவர் என்று தெரிந்தபிறகு தன் மைந்தனையே தன் வாரிசாகதேர்ந்தெடுக்கிறார். இவையாவும் வரலாற்று நிகழ்ச்சிகள். சீன இதிகாசக் கதைகளில் இவை இடம்பெற்றுள்ளன.

இந்த மூன்று மன்னர்களோடு மேலும் இரு மன்னர்களைச் சேர்த்து ஐந்து பேரரசர்கள் என்று அழைத்து அவர்கள் பெருமை கதைகளாக உருப்பெற்றுள்ளன. சில மாயவிநோதங்கள் இவற்றில் சுவைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளன.

மன்னர் கதைகளில் டிராகன்கள் வகின்றன. அந்த டிராகன்கள் வகை, வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பல விநோதப் பறவைகளும் விலங்குகளும் வருகின்றன. ‘சீனாவின் பெருந்துயரம்’ எனப்படும் பெருவெள்ளப் பேரிடர் அடிக்கடி கதைகளில் வருகின்றது.

மொத்தத்தில் வரலாற்று வாசனை இல்லாத கதைகள் என்று எதுவும் சீன இதிகாசங்களில் இல்லை. அதனால்தான் பல கதைகள் நிகழ்ந்த காலகட்டத்தை வரலாற்றாசியர்களால் கணிக்கமுடிந்திருக்கிறது. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வரலாற்றுக்கு சீனர்கள் அளித்துள்ள முக்கியத்துவத்தை இதிலிருந்து புரிந்துகொள்ளமுடிகிறது.

கி.பி.220-420 வரையிலான காலக்கட்டத்தில் தாவோ சமயத்தவர்களும், பௌத்தர்களும் கதைகளில் அதிக தாக்கம் செலுத்துகின்றனர். அவர்களுடைய மாய மந்திரங்கள், ஆவிகள் பற்றிய கற்பனைகள் ஆகியவை கதைகளில் பதிவாகியுள்ளன. இதே காலகட்டத்தில் கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய கடல் தொடர்புகள், கடல் பயணிகளின் அனுபவங்களுடன் கூடிய கற்பனைக் கதைகள் பல படைக்கப்பட்டுள்ளன. மேலும் ரசவாதிகளின் கண்டுபிடிப்புகள் பற்றிய யூகங்களும் உண்மைகளும்கூட கதைகளாக உருவாகியுள்ளன.

டாங் (Dong) பரம்பரை ஆட்சிக்காலத்தில் கதைப் படைப்பதில் படைப்பாளிகளின் முன்னேற்றம் தெளிவாகப் புலப்படுகின்றன. அப்போதுள்ள கதைகளில் (செய்யுள் நடைகளிலும்கூட) மனித வாழ்வைப் பிரதிபலிக்கின்ற நிகழ்வுகள், சமூக வாழ்க்கையின் நேர்க்காட்சிகள், மனித உறவுகள், பண்புகள், கயமைகள் என்று பல்வகைப் பொருள்கள் கதையின் தளங்களாக இடம்பெற்றுள்ளன.

அறிவுரை கூறும் எளிய கதைகளிலும்கூட கதைக்களமும் கதாபாத்திரங்களின் இயல்பும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. இதிகாசங்களில் இருந்து முன்னேறி அடுத்த கட்டமாக இலக்கியப் போக்குடன் கூடிய கதைகள் புனையப்பட்டன. பிறகு ஒரு கட்டத்தில் மீண்டும் இதிகாசத்துக்குக் கதைகள் திரும்பின. இதிகாசத்தின்மீது சீனர்களுக்கு அசைக்கமுடியாத ஆர்வம் இருந்ததை இந்தப் போக்கு உணர்த்துகிறது.

யுவான், மிங், கிங் ஆகிய மன்னர் பரம்பரையினரின் ஆட்சிக்காலத்தில் பேர்பெற்ற பல காவியங்கள். புனைக்கதைகள் கிளைமொழிகளில் தோன்றின. அவற்றில் குறிப்பிடத்தக்கவை, ‘மூன்று ராஜாக்களின் காதல் கதை’ (Romance of the Three Kingdom) நீர்க்கரைகள் (Water Margin), மேற்கு நோக்கிப் புனிதப் பயணம், (Pilgrimage to the West) பண்டிதர்கள், (The Scholars) சிவப்பு மாளிகைக் கனவு (Dream of the Red Mansions) ஆகியவை.

இந்தக் கதைகளைப் படைத்தவர்கள் சாமானியர்களாகவும் இருக்கலாம், பண்டிதர்களாகவும் இருக்கலாம். அவர்கள் எப்படி இருந்தாலும் அவர்களுடைய படைப்புகளின் அடிநாதம், மனித உணர்வுகள். அதனாலேயே இந்தக் கதைகள் சீனர்களுக்கு மட்டுமின்றி மனிதகுலம் முழுவதற்கும் சொந்தமானவை.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வெள்ளிச் சாணமும் நெருப்பு டிராகன் சட்டையும்

சீன இதிகாசக் கதைகள் / 1

Digital-Art-Dragon-Fireplay-by-AlectorFencerமுன்னொரு காலத்தில் கிராமம் ஒன்றில் ஒரு பெரிய மிராசு இருந்தான். இரண்டு மூன்று கிராமங்களின் விளைநிலங்களுக்கு அவன் சொந்தக்காரன். இந்த உலகத்தில் பணத்தைவிட வேறு எதுவும் பெரிதல்ல என்று வாழ்பவன். ஒரு சல்லிக்காசு கூட யாருக்கும் தர்மம் செய்ததில்லை. ஒரு மணி தானியத்தைக்கூட விரையமாக்காது காசாக்கிவிடுவான்.

அந்தக் கிராமத்தில் வாழ்பவர்களெல்லாம் ஏழை விவசாயிகள். இவன் பண்ணைகளில் கூலிக்கு வேலை செய்து பிழைப்பவர்கள். இவனுடைய நிலத்தை நம்பியே வாழ்பவர்கள். இவன் கொடுக்கும் கூலிப்பணம் குறைவென்றபோதிலும் வேறு வழியின்றி வாழ்பவர்கள்.

ஒரு சமயம் அவர்களது நிலப்பகுதியில் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. சாதாரணப் பஞ்சம் அல்ல: மூன்று நான்கு ஆண்டுகள் மக்களை, ஏழை விவசாயிகளை அது பாடாய்படுத்தியது. கால்நடைகள் மடிந்தன: மரங்கள்கூட காய்ந்த விறகுகளாக மாறி நின்றன.

உணவுக்காக எல்லோரும் படாதபாடு பட்டார்கள். ஆனால் இந்தக் கஞ்ச மிராசு மட்டும் வற்றாமல் வாடாமல் சற்றும் குறைவில்லாமல் இருந்தான். ஆண்டுதோறும் அறுவடையின்போது அவன் நிலத்தில் விளையும் தானியங்களுக்கு ஒரு குறிப்பிட்ட விலை அவனுக்குக் கிடைத்துவிடும். ஆம், இந்தக் கஞ்சனுக்குப் பஞ்சகாலத்திலும் அறுவடைதான். காரணம் அவனுடைய தானியக் களஞ்சியத்தில் ஆறெழு ஆண்டுகளுக்கு வேண்டிய தானியங்களை அவன் தன்னுடைய நிலங்களிலிருந்து முன்கூட்டியே சேமித்துவைத்துவிட்டான். அவனுக்கு இப்போது பஞ்சத்தின்மூலம் பெரும் அதிர்ஷ்டம் அடித்துவிட்டது. வழக்கத்தைவிட மூன்று, நான்கு மடங்கு விலை வைக்கலாம் அல்லவா?

ஊரைச் சேர்ந்தவர்கள், இவனது நிலத்தில் பணியாற்றியவர்கள், ஏன் சொந்த பந்தங்களுக்குக்கூட இவன் உதவி செய்யமறுத்துவிட்டான். கல்லான மனத்தோடு விலையைக் கறாறாகக் கறந்துவிடுவான். அது மட்டுமா? களஞ்சியத்தில் வீணாகின்ற தானியங்களைக்கூட யாருக்கும் கொடுக்க அவனுக்கு மனம் வரவில்லை. எந்த நேரமும் ‘பணம் பணம்’ என்று அலையும் இந்த மனித மிருகத்துக்கு எப்படியாவது பாடம் புகட்டவேண்டும் என்று விவசாயிகள் முடிவெடுத்தார்கள். கடைசியில் ஒர் எண்ணம் தோன்றியது. அதன்படி திட்டம் ஒன்றைத் தீட்டி, ஊரிலே எதையும் அதிகமாகப் பேசுகின்ற ‘பெரியவாய்’ அண்டப்புளுகனிடம் பேசினார்கள்.

அண்டப்புளுகனின் திறமை அலாதியானது: அவன் இல்லாத பொருளைக்கூட இருக்கிறது என்று தன் பேச்சால் நம்பவைத்துவிடுவான்; எதையுமே பெரிதாகக் காட்டிக் கொள்வான்; பெரிதாகப் பேசிக் கொள்வான். இப்படிப்பட்டவனைப் பிடித்துத்தான் ஒரு தந்திர நாடகத்தை நடத்த முன்வந்தார்கள் அந்த ஊர் மக்கள்.

இந்தத் தந்திர நாடகத்துக்குக் கொஞ்சம் செலவும் பண்ண வேண்டியிருந்தது. சிறிய மீனைப் போட்டுத்தானே பெரிய மீனைப் பிடிக்கமுடியும். கொஞ்சம் வெள்ளித் துண்டுகளை வாங்கினார்கள். கொஞ்சம் பஞ்சும் தேவையாக இருந்தது. அதன் பின்னர் ஊரிலே யாரிடமோ இருந்த அல்லது எங்கிருந்தோ பிடித்து வந்த ஓர் இளம் குதிரை குட்டியைக் கொண்டு வந்தார்கள். அதன் மலங்கழிக்கும் பின் துவாரத்திலே மூன்று அல்லது நான்கு தோலா எடையுள்ள வெள்ளித் துண்டுகளை உள்ளே செலுத்தினார்கள்: அதிலே பஞ்சைக் கொஞ்சம் மொத்தமாக கயிறுப்போல திரித்து உள்ளே திணித்தார்கள். இப்பொழுது அண்டப்புளுகனிடம் ஒப்படைத்தார்கள்.

அண்டப்புளுகன் அந்தக் கஞ்ச மகாப் பிரபுவின் பெரிய மாளிகைக்குச் சென்றான். அந்த மாளிகை ஒரு பெரிய நிலப்பரப்பில் அமைந்திருந்தது. மரங்கள் அடர்ந்திருக்கும் தோப்பில், வீட்டைவிட்டுச் சற்று தூரத்தில் தானியக் களஞ்சியங்களைக் கொண்டிருக்கும் கட்டடங்கள் அமைந்திருந்தன. அருகில் குதிரை லாயங்கள் இருந்தன. அண்டப்புளுகன் அந்தத் தோப்பில் நுழைந்து கஞ்சமகாப் பிரபுவின் கண்ணில் படும் வகையில் அவன்  மாளிகையின் முன் வாசலுக்கு நேரே தன் அருமை குதிரைக் குட்டியுடன் போய் நின்றான்.

எலும்புகள் துருத்திக் கொண்டு இரண்டு அடி எடுத்து வைக்கக்கூட திராணி இல்லாதது போல பார்க்க கொஞ்சம் அருவருப்பானதாகத் தோன்றுகின்ற அந்த குதிரைக் குட்டியையும், அதைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற அண்டப்புளுகனையும் பார்த்தவுடனே கஞ்ச மகாப்பிரபுக்கு எரிச்சல் வந்தது. “யாருய்யா அது? உனக்கு இங்கே என்ன வேலை? எதுக்காக இங்கே வந்தாய்?” என்று கத்தினான். அண்டப்புளுகன் பேச முயன்றான். “ஏய்… என்னுடைய பண்ணை வீட்டை அசிங்கம் பண்ண வந்திருக்கிறாயா… ஓடி விடு” என்று கஞ்ச மகாப்பிரபு சத்தம் போட்டான்.

அண்டப்புளுகன் தெனாவெட்டாக அப்படியே நின்று அவனைப் பார்த்தான். “யோவ் முதலாளி, எதுக்காக இப்படி கத்தி என் அருமைக் குதிரைக்குட்டியை பயப்பட வைக்கிறாய். நீ என் குதிரைக் குட்டியை பயமூட்டினால் அது மலங்கழிக்கும். அதைக் கொண்டு பணம் பார்க்கலாம் என்று நினைக்கிறாயா?” என்றாள்.

அண்டப்புளுகன் என்ன பேசுகிறான் என்பது ஒரு கணம் கஞ்ச மகாப்பிரபுக்கு புரியவில்லை: இருந்தாலும் ‘பணம்’ என்று ஏதோ சொல்கிறானே, என்னவென்றுதான் கேட்போம் என்று நினைத்து அருகில் சென்றான். அண்டப்புளுகன் சொன்னான். “இது என்ன சாதாரண குதிரைக் குட்டின்னு நினைச்சியா? இது போடும் சாணம் அவ்வளவும் வெள்ளி, தெரியுமா? சில சமயம் தங்கம்கூட வரும்”.

கஞ்ச மகாப்பிரபுவுக்கு மயக்கமே வரும் போலிருந்தது. இது உண்மையாக இருக்குமா? எப்படி குதிரை தங்கமும் வெள்ளியுமாகச் சாணம் போடும்? இருந்தும் மனமில்லாமல் கேட்டான். “எங்கிருந்து இந்தக் குதிரைக் குட்டியைப் பிடிச்சுட்டு வந்தே? நீ சொல்வதை எப்படி நம்புவது?” என்றான்.

மகா புளுகன் ‘அளக்க’ ஆரம்பித்தான்! “ஒரு நாள் என் தூக்கத்தில் நீண்ட வெள்ளைத் தாடியோடு கூடிய பெரிய மகான் ஒருவரைப் பார்த்தேன். பணக்கடவுளுக்கு வான மண்டலத்தில் தங்கம், வெள்ளி எல்லாம் சுமந்து போகும் குதிரை இது: இப்பொழுது வயசானதாலே இதை வேண்டாம் என்று பூமிக்கு அனுப்பி விட்டார்கள். மேலோகத்திலே இருந்ததால் இது சாணம் போட்டால் அது அசிங்கமல்லவா? அதனால் தங்கமும் வெள்ளியும் வருவதுபோல் தேவலோகவாசிகள் மாற்றிவிட்டார்கள். இதைப் பற்றி அந்த வெண்தாடி மகான் சொல்லி, என் தூக்கத்திலிருந்து எழுப்பி அதைப் பிடித்துக்கொண்டு போகச் சொன்னார். நான் நம்பால் தூங்கிவிட்டேன். மறுபடி சாமியார் கனவில் வந்து, “தாமதிக்காதே மகனே… நீ அந்தக் குதிரையைப் பிடித்து கொள்ளாவிட்டால் வேறு யாராவது கொண்டுபோய் விடுவார்கள்” என்றார். நான் உடனே எழுந்து வெளியில் சென்றேன். ஏகாந்த மலையருகே ஒரு நெருப்புப் பந்தம் போல் ஏதோ தெரிந்தது. அதன் அருகே நான் போனேன். போகப் போகத்தான் தெரிந்தது அது தகதகக்கும் குதிரைக் குட்டி! அதைப் பிடித்துக்கொண்டு வந்தேன். இந்த உலகத்துக்கு வந்த பின்னர் அது கொஞ்சம் சாதாரண குதிரைபோல் ஆகிவிட்டது. மறுநாள் குதிரைக்கு கொஞ்சம் சாம்பிராணி போட்டு எடுத்துக்கொண்டு போனேன். சட்டியில் இருந்த நெருப்பை ஊதி சாம்பிராணி போட்டவுடன் உடனே இது ஒரு துள்ளு துள்ளி சாணம் போட்டது. சாணமா அது? தங்கமும் வெள்ளியும்தான் வந்தது.” என்றான்.

பேராசை பிடித்த அந்தக் கஞ்ச மகாப்பிரபுவின் வாய் ஆச்சரியத்தில் பிளந்துவிட்டது. “நீ இங்கேயே இரு. இன்னொருமுறை எனக்காக சாணம் போடச்செய்” என்றவாறு வீட்டுக்குள் ஓடி, ஒரு சிறிய கனப்புச் சட்டியில் கொஞ்சம் நெருப்பும் சாம்பிராணியும் கொண்டுவந்தான் அந்தக் கஞ்ச சாம்பிராணி!

கஞ்ச மகாப்பிரபு வீட்டுக்குள் போன உடனேயே அண்டப்புளுகன் குதிரைக் குட்டியின் ஆசன வாயில் திணிக்கப்பட்டிருந்த பஞ்சு உருளையை இழுத்துவிட்டான்.

இப்போது சாம்பிராணியைக் குதிரைக் குட்டியிடம் கொண்டுப் போய்க் காட்டினார்கள். குதிரை உடனே கழுதையைப் போல செருமி கனைத்தது. அப்பொழுது அதன் சாணம் வெளியே வந்து விழுந்தது. ஏற்கெனவே திணிக்கப்பட்டிருந்த வெள்ளிய வெளியே வந்து கொட்டியது.

கஞ்ச மகாப்பிரபுவுக்கு சொல்லமுடியாத ஆச்சரியமும் பேராசையும் ஏற்பட்டது. அண்டப்புளுகனிடம் அவன் கேட்டான்,  “ஏனய்யா. ஒரு நாளைக்கு இது சாணமாக எவ்வளவு போடும்?”

“என்ன? என்னை மாதிரி ஆசாமி என்பதால் ஒரு நாளைக்கு மூணு அல்லது நாலு தோலா வெள்ளியை கழிக்கிறது. உங்களை மாதிரி, உம்ம்… பெரிய எஜமானர் என்றால் ஒரு நாளைக்கு முப்பது அல்லது நாப்பது தோலா வரைக்கும் கழிக்கும்; அந்தச் சாமியார் அதைத்தான் சொன்னாரே!” என்றான்.

கஞ்ச மகாப்பிரபு கணக்குப் போட ஆரம்பித்தான்: ஒரு நாளைக்கு முப்பது தோலாவா, சரி இருபது தோலாவாக இருந்தால்கூட ஒரு மாதத்துக்கு 600 தோலா. அப்படியானால் ஓர் ஆண்டுக்கு 7200 தோலா ஆகிறது. மலைத்துவிட்டார் அந்த மகாபிரபு. எப்படியாவது, என்ன விலை கொடுத்தாவது இந்தக் குதிரைக் குட்டியை தன்வசப்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு கஞ்ச மகாப்பிரபு வந்துவிட்டான். எனவே அண்டப்புளுகனிடம் பேச்சைத் தொடங்கினான்.

ஆனால் அண்டப்புளுகன் உடனடியாக அந்தக் குதிரைக் குட்டியை விற்பதற்கு உடன்படவில்லை.  முரண்டுப் பிடித்தான். கஞ்ச மகாப்பிரபு திரும்பத்திரும்ப அவனிடம் பேசினான். உண்மையில் சொல்லப்போனால் மன்றாட ஆரம்பித்துவிட்டான். உடனே அண்டப்புளுகன் முகத்தை வாட்டமாக வைத்துக் கொண்டு, “சரி, உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுக்கணுமே. எனக்குக் கொடுப்பினை இவ்வளவுதான் போலும்.  சரி, உங்களுக்கே விற்றுவிடுகிறேன். இதுவரை இந்தக் குதிரைக் குட்டி எனக்குக் கொடுத்த பொன்னும் வெள்ளியும் இன்னும் பத்து தலைமுறைக்கு போதும்! ஒன்று செய்யுங்கள், எனக்கு தானிய மூட்டைகளை இதற்குப் பதிலாகக் கொடுத்துவிடுங்கள். முப்பது வைக்கோல் வண்டி கொள்ளுமளவுக்கு தானிய மூட்டைகளை கொடுத்தால் போதும்” என்றான்.

கஞ்ச மகாப்பிரபுக்கு மிகவும் சந்தோஷமாகிவிட்டது: தான் நினைத்ததைவிட மிகவும் மலிவாகவே விலை சொல்கிறானே என்று நினைத்து, உடனே ஒப்புக் கொண்டார். முப்பது வைக்கோல் வண்டி நிரம்பும் அளவுக்கு தானியங்களைக் கொடுக்கச் சொல்லிவிட்டு குதிரைக் குட்டியை வாங்கிக்கொண்டார். பிறகு குதிரையை எங்கே கட்டி வைத்தால் பத்திரமாக இருக்கும் என்று ஒவ்வொரு இடமாகச் சென்று பார்த்து கடைசியில் தான் வாழும் மாளிகையில், அதுவும் ரத்தினக் கம்பளம் விரித்த தன் படுக்கை அறையில் குதிரைக் குட்டியை கட்டிப்போட்டான். அதையே பார்த்துக்கொண்டு இடத்தைவிட்டு அசையாமல் இருந்தான். அவன் குடும்பத்தினரும், குதிரைக் குட்டி சாணமாக தங்கத்தையோ, வெள்ளியையோ போடப்போகிறது என்ற ஆவலுடன் காத்துக்கிடந்தனர்.

சாம்பிராணி சட்டியை எடுத்துக்கொண்டு போய் குதிரைக் குட்டிக்கு ‘தூபம்’ போட்டான். நடு இரவு வரை ஒன்றும் நடக்கவில்லை: திடீரென்று குதிரை செறுமியது. ஒரு குதி குதித்து தன்னுடைய வாலைத் தூக்கிக் கொண்டது. ஆஹா! கஞ்சன் குதிரையின் வால் பக்கமாகப் போய் உற்றுப் பார்த்தான். அவ்வளவுதான்! குதிரை சாணத்தைப் பீய்ச்சியடித்தது. அவன் அணிந்திருந்த பட்டு உடைகள் எல்லாம் அசிங்கமாகிவிட்டது. அவன் தலை, முகம் முழுவதும் சாணம் மூடியிருந்தது. ஒரே நாற்றம். ரத்தினக் கம்பளமும் பாழ்!

கஞ்ச மகாப் பிரபுவின் படுக்கையறை குதிரை லாயத்தைவிட மோசமாக இப்போது  காட்சியளித்தது. அவன் வெட்கத்தாலும் வேதனையாலும் துடித்தான். அவனுடைய மனைவியும் மக்களும் பெரும் அவமானத்துக்குள்ளானது போல் காட்சியளித்தனர்.

அண்டப்புளுகனைக் கொன்று போடவேண்டுமென்று அவனுடைய ஆள்கள் அவனை ஊரெங்கும் வலைவீசித் தேடினர். அண்டப்புளுகன் எங்கே போய் பதுங்கினான் என்றே யாருக்கும் தெரியவில்லை. அவனை ஊர்மக்கள் பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்தார்கள்.

ஊர் முழுவதும் கஞ்ச மகாப்பிரபு குதிரையின் கழிச்சல் குறித்து கேலி பேசப்பட்டது. இந்நிலையில், தலை மறைவாக எங்கோ இருந்த அண்டப்புளுகன்  ஒரு பனிக் காலத்தில் கஞ்ச மகாப் பிரபுவின் ஆள்களிடம் பிடிபட்டுவிட்டான். அவனைப் பிடித்து இழுத்து வந்து கஞ்ச மகாப் பிரபுவின் மாளிகை முன் நிறுத்தினர் அவனை கஞ்ச மகாப்பிரபுவும் அவன் ஆட்களும் கடுமையாகத் தாக்கினர். அவனைப் பிடித்து இழுத்துப் போய் திறந்த வெளியில் இருந்த அரிசி ஆலையில் நடுப்பகுதியில் வைத்து அவன் அணிந்திருந்த உடைகளை எல்லாம் உரித்தெடுத்தார்கள். ஒரேயொரு பருத்தி சட்டை மட்டுமே எஞ்சியிருந்தது. இரவு முழுவதும் அங்கே இருந்தால் பனிக் காற்றில் உறைந்து செத்துவிடுவான் என்று கணக்குப்போட்டு வெளியேறினார்கள்.

அண்டப்புளுகன் தவியாகத் தவித்தான். திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது. உடம்பைச் சூடாக வைத்துக் கொள்ள பின்னோக்கி நடந்து கொண்டே இருக்கவேண்டும் என்று யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது. அந்த ஆலையைச் சுற்றி பின்னோக்கி நடக்கத் தொடங்கினான். அவன் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக வெப்பம் ஏற்பட்டது. அவன் ரத்த நாளங்களில் இப்பொழுது சீரான ரத்த ஓட்டம் பாய்ந்தது. வேகமாகவும் பிறகு கொஞ்சம் வேகத்தைக் குறைத்தும் என்று பின்னோக்கி நடந்தபடியே இருந்தான். இரவு எப்படியோ கழிந்தது.

மகா புளுகனின் இறந்த உடலைக் காண வந்த கஞ்ச மகாப்பிரபுவும் அவனுடைய ஆள்களும் திகைத்துப் போனார்கள். வியர்வை வடிய உயிரோடு அவன் நின்றுகொண்டிருந்தான். அது மட்டுமா? கஞ்ச மகாப் பிரபுவைப் பார்த்தது, “முதலாளி, மிகவும் கொதிக்கிறது. காற்று இல்லாவிட்டால் நான் செத்தே விடுவேன். காற்றோட்டமான இடத்துக்கு உடனே என்னைக் கூட்டிச் செல்லுங்கள்” என்று கெஞ்சினான்.

“இந்தக் கடும் குளிரில் உனக்கு மட்டும் எப்படி வியர்க்கிறது?” என்று கேட்டான் கஞ்ச மகாப்பிரபு.

“இதோ நான் அணிந்துள்ள இந்தச் சட்டைதான் என்னை இந்தக் கடும் குளிரில் இருந்து காப்பாற்றியது. இது விலைமிக்க ரோமத்தால் ஆன பின்னலாடை” என்றான்.

“நீ என்ன தான் சொல்லுகிறாய்… கொஞ்சம் விளக்கமாகச் சொல்; சட்டை எப்படி உனக்கு வெப்பம் ஏற்படுத்தும்! புரியாத புதிராய் உள்ளதே!” என்றான் கஞ்ச மகாப்பிரபு.

“முதலாளி, இது நெருப்பு டிராகனின் ரோமத்திலிருந்து எடுத்து நெய்யப்பட்டது. இது சாதாரணமாக யாருக்கும் இங்கே கிடைக்காது. ஒரு நாள் மேலோகத்தில் சொர்க்க ராணிக்கு அதிகம் குளிரடித்தது. அப்போது டிராகன்களின் தேவன் அங்கே சென்றான். அவனை ஒரு போடு போட்டு, அவன் தோலை உரித்து இந்த மேல் சட்டையைத் தயார் செய்தார்கள். அதனால்தான் எனக்கு ஒரே உஷ்ணமாக இருக்கிறது” என்றான்.

அண்டப்புளுகன் தொடர்ந்தான்.

“எப்படியோ என் மூதாதையர்கள்மூலமாக இது என் கைக்கு வந்து சேர்ந்தது. அது எப்படி என் மூதாதையர்களிடம் வந்து சேர்ந்தது என்பதற்கு பல கதைகள் சொல்லப்படுகின்றன. சரி, அதெல்லாம் இப்போது எதற்கு? எப்படியோ என் உயிர் பிழைத்ததே” என்றான்.

கஞ்ச மகாப்பிரபுவால் அமைதியாக இருக்கமுடியுமா? உடனே பேரம் பேசத் தொடங்கிவிட்டார்.

“சரி, நான் உன்னை விட்டுவிடுகிறேன். எனக்கு இதைக் கொடுத்துவிடு. நான் அடிக்கடி பனி இரவுகளில் பயணம் செய்கிறேன். எனக்கு இது உபயோகமாக இருக்கும்” என்றான்.

“அதெப்படி, இது என் பரம்பரைச் சொத்து அல்லவா?” என்றான் கஞ்ச மகாப்பிரவு.

“உனக்குத் தேவையான பணம் தருகிறேன்.”

அண்டப்புளுகன் ரொம்பவும் பிகு செய்துகொண்டான். முகத்தை மிகவும் சோகமாக வைத்துக் கொண்டான். கடைசியில் கஞ்ச மகாப்பிரபு தன்னுடைய விலையுயர்ந்த நரித் தோலால் ஆன நீண்ட ஃபர் அங்கியை அவனுக்குக் கொடுத்தான். அண்டப்புளுகன் தன்னுடைய மங்கிய சட்டையை ஒப்படைத்தான்.

கஞ்ச மகாப்பிரபு உடனே யோசிக்கத் தொடங்கிவிட்டார். மாமனார் பிறந்த நாள் விழா வரப்போகிறது. இந்த டிராகன் சட்டையைப் போட்டுக்கொண்டு எல்லாரையும் அசத்திவிட வேண்டியதுதான். வழக்கமாக குளிர் ஆடைகள் அனைத்தையும் விட்டுவிட்டு இதை மட்டும் அணிந்துகொண்டார்.

பயணம் ஆரம்பமானது. மாமனாரின் ஊர் மிகத் தொலைவில் இருந்தது. வழியில் எங்கேயும் தங்கிச் செல்வதற்கு சந்திரங்களோ சாவடிகளோ கிடையாது. கொட்டும் பனி. கடுமையான குளிர். கஞ்ச மகாப்பிரபுக்கு உடல் நடுங்கத் தொடங்கிவிட்டது. தாக்குப்பிடித்து முன்னேறினார். முடியவில்லை. ஒரு மரத்தடியில் ஒதுங்கினார். பலனில்லை. சிறிது நேரத்தில் இதயம் நின்றுவிட்டது.

மீண்டும் அண்டப்புளுகன் ஏமாற்றிவிட்டான் என்று அனைவரும் பேசிக்கொண்டார்கள். அவனைக் கொல்லவேண்டும் என்று கோபம் கொண்டார்கள். ஒரு நாள் அவனைப் பிடிக்கவும் செய்தார்கள்.

அண்டப்புளுகன் இதற்கெல்லாம் பயந்துவிடுவானா? சாவகாசமாகச் சொன்னான்.

“நீங்கள் எப்படி என்னைக் குற்றம் சொல்லமுடியும்? நான் கொடுத்த சட்டையைப் போட்டுக் கொண்டு மரத்தடியில் நின்றிருக்கிறார். சட்டையில் வெப்பம் அதிகரித்திருக்கிறது. அப்படியே தொடர்ந்து நின்றுகொண்டிருந்ததால் வெப்பம் அதிகரித்து மரத்தில் தீ பற்றிக்கொண்டுவிட்டது. இவர் இறந்திருக்கிறார். அதோ, பாதி எரிந்து கிடக்கும் அந்த மரத்தைப் பாருங்கள்.”

என்ன சொல்வது என்று ஒருவருக்கும் தெரியவில்லை. சரி போ என்று விட்டுவிட்டார்கள்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

குழலூதும் ஆட்டிடையன்

சீன இதிகாகச் கதைகள் / 2

fluteஒரு காலத்தில் சீனாவில் முஸ்லிம்கள் வாழும் பகுதியான உய்கர் என்ற மாகாணத்தில் ஒரு நிலச்சுவான்தார் ஆடுகள் மேய்க்கவும் பண்ணையில் எடுபிடி வேலைகளை பார்ப்பதற்காகவும் ஒரு ஆட்டிடையனை வேலைக்குச் சேர்த்துக்கொண்டான். அந்த ஆட்டிடையனின் பெயர் அனீஸ். பார்ப்பதற்கு மிகவும் துடிப்பாகவும் துருதுருப்பாகவும் இருப்பான். அவன் கையில் ஒரு மூங்கில் குழல்! வேலைகளை முடித்துவிட்டு அவன் குழலிசைப்பான். அவன் இசையிலே எல்லோரும் மயங்கிவிடுவார்கள். பண்ணையில் வேலை செய்பவர்கள், பண்ணைக்கு வந்துப் போகிறவர்கள், பறந்து வரும் பறவைகள், பால் சுரக்கும் கறவைகள் என்று எல்லா ஜீவன்களையும் அவன் இசை சுண்டி இழுக்கும். ஒரு சுகலயத்தில் அவர்களை எல்லாம் கட்டிப்போடும்!

ஒரு சாண் அளவுள்ள மூங்கிலில் எப்படித்தான் இன்ப ஒலி எழுப்புகின்றானோ, என்ன இது வித்தை என்று எல்லோரும் வியந்தார்கள். அவனைப் பாராட்டினார்கள்; அன்பு மழைப் பொழிந்தார்கள். ஆனால் ஒரே ஒருவர் மட்டும் அவனைக் கண்டு எரிச்சலுற்றார். அவனது வேணுகானத்தை வேண்டாம் என்றே வேம்பாக வெறுத்தார். அவனை அதற்காக கடித்துக்கொண்டார்.

ஆட்டிடையன் அனீசுக்கு எப்பொழுதெல்லாம் வேலை இல்லாமல் இருக்குமோ அப்பொழுதெல்லாம் தன் வேய்க்குழலை எடுத்து ஊதுவான்; அதைக் கேட்பதற்காக ஒரு கூட்டம் காத்திருக்கும்; அவன் குழல் ஊதப் போகின்றான் என்று தெரிந்தால், அவர்கள் அவனைச் சுற்றி வட்டமாக அமர்ந்துக்கொள்வார்கள்; அனிஸ் தானாகக் கற்ற கலையை, தன்னுயிர் இயற்றிய இசையை, தேனாக காதுகளிலே பாய்ச்சுவான். கேட்டவர்கள் எல்லாம் கிறங்கிக்கிடப்பார்கள்!

நாளுக்குநாள் இதனால் எரிச்சலடைந்த நிலச்சுவான்வான் அனீஸ் மீது ஆத்திரம் கொண்டான். அவனை எத்தனையோ தடவை எச்சரித்தும்கூட, அவன் மாறவில்லை; குழலூதுவதை அவன் விட்டுவிடவில்லை. அதே சமயம், தன் வேலைகளில் எதையும் அனீஸ் குறை வைக்கவுமில்லை. தனக்கிட்ட பணிகளைக் கொஞ்சம் அதிகமாகவே செய்துவிடுவான். அதன் பிறகுதான் அவன் குழலெடுப்பான்; இசைத் தொடுப்பான்! எனவே நிலச்சுவான்தாரால்  அவனுடைய வேலையில் குறை எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை, என்றாலும் அவனை, அவன் குழலை ஒழித்தே ஆக வேண்டுமென்ற ஒரு வெறியோடு, வெஞ்சினத்தொடு வெகுண்டெழுந்தான்.

அனீஸை நோக்கி, “அட கேடு கெட்டவனே… உன்னிடம் எத்தனை முறை உன் ஊதுகுழலை ஊதாதே என்று எச்சரித்திருப்பேன்.. நீ பண்ணை வேலைக்கு வந்தாயா… பண்ணிசைக்க வந்தாயா? உன்னுடைய திமிறை அடக்கவேண்டும். என் பேச்சைமீறி நீ நடந்துக் கொண்டாய்… உன்னைச் சும்மாவிடப் போவதில்லை” என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்த கோலை எடுத்து பலமாகச் சாடினான்;  தன் கோபம் தீருமட்டும், கை சலிக்கும்வரை அந்தக் கோலால் அனீஸின் உடலெங்கும் தாக்கினான். அனீஸ் வலிப் பொறுக்க மாட்டாமல் துடியாய் துடித்தான். கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அனீஸ் வைத்திருந்த அவனது வேய்க்குழலை பறித்து ஒடித்து வீசினான். அனீசை தனது பண்ணையிலிருந்து துரத்தி அடித்தான்.

அனீஸ் தன் அழுகையை அடக்கமுடியாமல் தெருவிலே கால் போன திசையிலே நடந்துப்போனான். வெள்ளை உள்ளத்தில் வீரிட்ட வேதனையும், உடலின் வலியும் அவனை தள்ளாடச் செய்தது; அப்பொழுது அங்கு வந்த ஒரு வயோதிகர், அன்பான குரலோடு அவனை அழைத்தார்.

“இளைஞனே… உனக்கு என்ன நிகழ்ந்தது? இங்கே ஏன் வந்தாய்? எதற்காக அழுகிறாய்… உன் தாய் தந்தையர்கள் யார்?” என்று கேட்டாய்.

“தாத்தா! நானொரு ஏழை ஆட்டிடையன். என் பெயர் அனீஸ்! பண்ணை முதலாளி என்னை அடித்து விரட்டி விட்டுவிட்டார். அவன் இட்ட ஏவல்களை, பணிகளை சரியாகச் செய்தேன். குற்றம் குறை செய்தேனில்லை. ஆனால் நான் செய்தது எல்லாம் ஓய்வு நேரத்தில் வேய்ங்குழல் இசைப்பது. அதற்காக அவர் கோபப்பட்டார்; என்னைத் தாக்கி துரத்தியடித்துவிட்டார். அந்த துயரிலே நான் அழுதேன். என்னுடைய வேய்ங்குழலை துண்டு துண்டாக ஒடித்து எறிந்துவிட்டார்” என்றான்.

“கலங்காதே அனீஸ்….” என்று அவன் முதுகில் வாஞ்சையோடு தடவிக் கொடுத்து விட்டு, “நீ என்னோடு வந்துவிடு; என்னுடனே தங்கிக் கொள்ளலாம்; உன்னுடைய குழலூதும் ஆசைக்கு இனித் தடையில்லை; அதைக் கொண்டே நீ உன் பண்ணை முதலாளியை பழித்தீர்த்துக் கொள்ளலாம்” என்றார். அனீஸ் ஒப்புக் கொண்டான்.

இப்பொழுது முதியவரின் வீட்டிலே அனிஸ் தங்கலானான். அங்கு அந்த முதியவர் அனீஸுக்கு நீண்ட மூங்கில்களால் ஆன குழல்களில் குழலூதக் கற்றுக் கொடுத்தார். இதுவரை அனீஸ் தனக்கு தோன்றியவாறு இசையைக் குழலில் எழுப்பினான். இப்பொழுதோ இசைப் பயிற்சியை முறையாகக் கற்றுக்கொண்டான். வேணுகான வித்தையிலே வேந்தனானான். அவன் குழலை எடுத்து ஊதினால், மனிதர்கள் முதல் எல்லா உயிரினங்களும் அவனிடம் வந்து இசை லயிப்பில், லாகிரியில் ஆழ்ந்துவிடுகின்றன. பறவைகளும் விலங்கினங்களும் அவனுடைய இசையைக் கேட்க ஓடிவரும். இப்படி வருகின்ற பறவைகளும் சரி, விலங்கினங்களும் சரி, அவனிடம் நெருங்கிப் பழகலாயின. அனீஸின் சொல்லுக்குக் கீழ்படிந்து நின்றன.

காலம் ஓடியது… ஒரு நாள் அந்த நிலச்சுவான்தார் கனவு ஒன்றைக் கண்டான். அக்கனவிலே வெண்பனியால் செய்தது போன்ற வெள்ளை வெளேர் முயலொன்று தோன்றியது. அதன் தலை அழகான கரும்புள்ளிகளோடு காட்சி அளித்தது! அதன் அழகிலே நிலச்சுவான்தார்  உள்ளத்தைப் பறிக் கொடுத்தாரன். எப்படியாவது கனவிலே கண்ட முயலை கண்டுப்பிடித்து தமக்கு சொந்தமாக்கிக்கொள்ள வேண்டுமென்ற அவா அவன் உள்ளத்தில் எழுந்தது.

கண்விழித்தவுடன் தன் மைந்தர்களை அழைத்தான். தான் கண்ட கனவை எடுத்துக் கூறி, அப்படிப்பட்ட முயலை அவர்களில் யாராவது ஒருவர் பிடித்துவந்தால் தனது சொத்து முழுவதற்கும் சொந்தக்காரனாகலாம் என்றான்.

“தந்தையே… கனவில் கண்டதை எப்படி நேரிலே போய் பிடிக்க முடியும்? அதை எங்கு போய் தேடுவது? அது எந்த காட்டிலே இருக்கும்?” என்றான்.

“எனக்கு அந்த முயல் வேண்டும். அதை எப்பாடுப்பட்டாவது பிடித்து வாருங்கள். அதை விட்டுவிட்டு வீண்பேச்சு வேண்டாம்.”

மூத்த மகன், முழுச் சொத்தும் தன் தந்தைக்குப் பின்னர் முறையாக தனக்குத் தான் வருமென்று அறிவான். ஆயினும் தன்னுடைய தம்பிமார்களில் யாரேனும் ஒருவன் அந்த முயலைப் பிடித்து வந்துவிட்டால் என்ன செயவ்து என்று னித்து அந்த முயலைத் தானே பிடிக்க பக்கத்து காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றான்.

போகும் வழியிலே அவன் அந்த முதியவரை பார்த்தான். தான் புறப்பட்ட காரியத்தைச் சொன்னான்.

அதற்கு அந்த முதியவர், “ அப்படியா.. சரி நீங்கள் காட்டில் உள்ளே போங்கள், அங்கே என்னுடைய செம்மறிகளை மேய்த்துக் கொண்டு ‘அனீஸ்’ என்ற என் ஆள் ஒருவன் இருப்பான். அவனிடம் சொன்னால் பிடித்துத் தருவான்” என்றார்.

புறப்பட்ட காரியம் இத்தனை எளிதாக நடக்கக் கூடுமென்று மூத்தமைந்தன் நினைக்கவே இல்லை. மகிழ்ச்சியோடு, புதிய வேகத்தோடு அவன் காட்டுக்குள் சென்றான்.விரைவில், அனீஸை கண்டுப் பிடித்து விட்டான். தன் தந்தையின் ஆசையையும் அவர் வர்ணித்து விளக்கிய முயலையும் பற்றிக் கூறி, வழியில் ஒரு முதியவர் தன்னை அவனிடம் அனுப்பிய விவரத்தையும் கூறி நின்றான்.

அனீஸ் அந்த நிலவுடமையாளரின் மூத்தப் பிள்ளைக்கு உதவுவதாக வாக்களித்தான். குறிப்பிட்ட அடையாளங்களைக் கொண்ட வெள்ளை முயலை பிடித்துத் தருவதாகவும், அப்படி அவனிடம் ஒப்படைத்தால் தனக்கு ஓராயிரம் ஸ்டிரிங்ஸ் தொகை தரவேண்டும் என்றும் அனீஸ் நிபந்தனை விதித்தான்.

அனீஸ் கேட்ட தொகை அதிகம்தான். ஆயினும் தன்னுடைய தந்தையிடமிருந்து தனக்கு வரப்போகின்ற சொத்தையும் செல்வத்தையும் கணக்கிட்டுப் பார்த்தால், இத்தொகை மிகவும் சொற்பம் என்பதால் ஒப்புக்கொண்டான்.

அனீஸ், அவனை அன்று மாலை நேரத்தில் வரச் சொன்னான்.

மாலை வந்தது, காடுகள் மாலை நேரத்தில் தான் மிக அழகாகத் தோற்றமளிக்கும். இரவானால் அச்சத்தை வரவழைக்கும். பொன் அந்தி மாலைப் பொழுதில் அனீஸ் இசைப்பது வழக்கம். அவன் வாசிப்பை நிறுத்தினால்தான் விலங்குகளும் பறவைகளும் தத்தம் நிலைகளுக்குத் திரும்பும்! இதை உணர்ந்திருந்த அனீஸ் வழக்கம்போல் தன் புல்லாங்குழலை எடுத்து வாசிக்கலானான். பறவைகளும் விலங்குகளும் கூடிக் குவிந்தன. வாசித்துக் கொண்டே அவன் எங்கோ கூர்ந்துப் பார்த்தான். பார்த்த இடத்திலே பனியை உருட்டிச் செய்தாற்போல ஒரு வெள்ளை முயல் குறுகுறு என்று நின்றது. அதன் தலையில் அழகுக்கு அழகுக்கூட்டும் கருமையான புள்ளிகள் இருந்தன.

அனீஸ் உடனே தன் வேய்ங்குழலை கீழே வைத்தான். சட்டென்று அந்த முயலை நோக்கிச் சென்றான். அதன் நீண்ட காதுகளைப் பிடித்துத் தூக்கி, அதை அப்படியே அந்த மூத்தச் சகோதரனிடம் அளித்தான். “இதோ, நீங்கள் தேடிய முயல், மிகவும் எச்சரிக்கையாகப் பிடித்துக் கொள்ளுங்கள். பத்திரமாக எடுத்துச செல்லுங்கள் இது உங்களை விட்டு தப்பி ஓடிவிட்டால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது” என்றான். அந்த மூத்த சகோதரன் மிகவும் பணிவாக நன்றிகளைக்கூறி ஆயிரம் ஸ்டிரிங் பணத்தையும் அளித்துவிட்டு அந்த முயலை இறுகப் பற்றியபடி அந்த இடத்தைவிட்டு அகன்றான்.

கொஞ்சம் நேரம் ஓடியதும், அனீஸ் மீண்டும் தன் குழலை எடுத்தான். காற்றை குழலில் ஊதி ஊதி,  ஓசைக்கு உருவம் கொடுத்தான். அது மறுபடியும் எல்லா உயிரினங்களையும் ஓடிவரச் செய்தது. அந்த ஒலி, காற்றிலே கலந்து மூத்தச் சகோதரன் எடுத்துச் சென்ற முயலின் நீண்ட காதுகளிலே போய்விழுந்தது. அவ்வளவுதான். அது ஒரு துள்ளல் துள்ளியது. கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடுகின்ற கன்றுக்குட்டிப் போல ஒரே பாய்ச்சலில் மறைந்துவிட்டது.

மூத்த சகோதரன் செய்வதறியாது தவித்தான். கணநேரத்தில் தன்னுடைய வாழ்வின் நற்பேறுகள் எல்லாம் முயலுடன் ஓடிவிட்டது போல உணர்ந்தான்; இனி என்ன செய்வது? அனீஸிடமே மீண்டும் திரும்பினான்.

அனீஸைப் பார்த்து, “அந்த வெண்முயல் என்னைவிட்டு ஓடிவிட்டது. அதை எப்படி மீண்டும் பிடிப்பது?” என்றான்.

“நான் அப்பொழுதே எச்சரித்துவிட்டேன். நீங்கள் தான் மிக கவனமாக பிடித்துக் கொண்டு போயிருக்க வேண்டும் இதற்கு நான் பொறுப்பாக முடியாது, அது என் வேலை அல்ல!” என்றான்.

மூத்த சகோதரன் பாவம், கனத்த உள்ளத்தோடு வெறும் கையோடும் வீடு திரும்பினான்.

இப்பொழுது அந்த நிலச்சுவான்தாரின் இரண்டாவது மகனின் முறை. அவன் தன் தந்தையிடம் சென்று, “தந்தையே… கவலையை விடுங்கள்…. நான் போய் கையோடு அந்த முயலை பிடித்து வருகின்றேன்” என்று கூறிச் சென்றான். அவனும் தன் அண்ணனைப் போன்றே அதே முதியவரைச் சந்தித்து,  பிறகு அவர் சொன்னபடி அனீஸைப் பார்த்து அதே ஆயிரம் ஸ்டிரிங்ஸ் தருவதாகப் பேசினான். அனீஸ் குழல் ஊத, முயல் வந்துசேர, அதை அவன் பிடித்துக்கொடுத்தான். மீண்டும் அதேபோல் அனீஸ் இன்னொருமுறை குழல் ஊத, முயல் திரும்பவும் ஓடிவந்துவிட்டது.

பிறகு, வீட்டிலிருந்த கடைசி சகோதரன் புறப்பட்டான். அவனுக்கும் அதே போலத்தான் எல்லாம் நடந்தது. அவனும் துயரத்தோடு வீடு திரும்பினான்.

நிலச்சுவாந்தார் ஆவேசம் கொண்டான். “அட முட்டாள்களே! உங்களால் எதுவும் முடியாது. ஒரு சிறு பூச்சியைக்கூட உங்களால் பிடித்து வர முடியாது. மூன்று நாட்களில் மூவாயிரம் ஸ்டிரிங்ஸ் இழந்ததுதான் மிச்சம்” என்று சாடினான். பின் தானே அந்த முயலை பிடித்து வருவதற்காக காட்டுக்குப் புறப்பட்டான்.

காட்டில் நுழைந்த தன் பழைய எஜமானை அனீஸ் இனங்கண்டுவிட்டான். அவன் நெஞ்சிலே அவனையும் அறியாமல் ஒரு வெறுப்புணர்ச்சி ஏற்பட்டது. தன்னிடம் முன்பு நடந்துக் கொண்டதற்குதக்க தண்டனையைத் தர வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அனீஸை அடையாளம் காணமுடியாத நிலச்சுவாந்தார், முயலைக் கண்டுபிடிக்கும் கோரிக்கையை அவனிடமே வைத்தார்.

அனீஸ் குழலெடுத்து இசைக்கத் தொடங்கினான். அவ்வளவுதான், காட்டிலுள்ள கொடிய மிருகங்களான ஓநாய்கள், நரிகள், கரடிகள், நச்சுமிக்க பாம்புகளள், குத்திக் கிழிக்கத் துடிக்கும் பயங்கரமான பறவைகள் என்று அனைத்தும் சூழ்ந்துகொண்டன. எந்த நேரமும் அவை நிலச்சுவாந்தார் மேல் பாய்ந்து தாக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. உடலெங்கும் வியர்வை ஓட, உடல் கிடுகிடுக்க வாய் உதற அனீஸின் கால்களிலே அவன் விழுந்தான்.

காலில் விழுந்தவனைத் தூக்கிவிட்டு, “ஐயா பெரியவரே! என்னை  யார் என்று தெரிகிறதா? பாருங்கள்” என்றான் அனீஸ். “நான்தான் ஆட்டிடையன் அனீஸ், என்னை அன்றொருநாள் அடித்துவிரட்டிவிட்டீரே, அதே அனீஸ். குழலூதக் கூடாதென்று தடுத்து என் புல்லாங்குழலை ஒடித்து எறிந்தீரே. அதே ஏழைச் சிறுவன்…”

ஒருவழியாக எச்சிலை விழுங்கி, ஆசுவாசப்படுத்திக் கொண்டு நிலச்சுவாந்தார் பேசத் தொடங்கினான். “ஐயா… உங்களிடம் நான் நடந்துக்கொண்டது போல என்னை நடத்திவிடாதீர்கள். ஐயோ நான் பெரிய பாவி, எத்தனை பெரிய கொடுமையை உங்களுக்குச் செய்தேன். அதற்குப் பழிவாங்க என்னை பலியாக்காதீர்கள். இனிமேல் நான் திருந்திவிடுகிறேன். நீங்கள் சொல்கிறபடி நடப்பேன்.”

“எத்தனையோ ஏழைகள் இங்கே ஒரு வேளை சோற்றுக்குத் தவியாய் தவிக்கின்றார்கள். நீ அவர்களை வேலை வாங்கிவிட்டு கூலி கொடுக்காமல் அடித்து விரட்டி இருக்கிறாய். பாவம் அவர்கள் பசியோடு இருந்தார்கள். ஆனாலும் உன்னை ஒன்றும் செய்யவில்லை. இதோ இங்குள்ள மிருகங்களும் பறவைகளும்கூட பசியோடுதான் உள்ளன. ஆனால் இவை உன்னைக் கொல்லாமல்விடாது.” என்றான்.

“நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறேன். என் உயிருக்கு ஈடாக என்ன வேண்டுமானாலும் தருகிறேன்! தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள்” மறுபடியும் காலில் விழுந்து கதறினான் நிலச்சுவாந்தார்.

“இனிமேலாவது திருந்து. ஏழைகளின் மேல் இரக்கம் காட்டு. நான் இந்தக் கொடிய மிருகங்களையும் பறவைகளையும் உன்னைவிட்டுப் போக வைக்கிறேன். அதற்கு ஈடாக நீ உமது சொத்துக்களில் பாதியை ஏழைகளுக்குத் தானமாக வழங்க வேண்டும்.” என்றான் அனீஸ்.

நிலச்சுவாந்தார் ஒப்புக்கொண்டான். அவனைவிட்டு கொடிய மிருகங்களும் பறவைகளும் விலகிச்சென்றன. வீட்டுக்குச் சென்றவுடன் முதல் வேலையாக அவன் ஏழைகளுக்கு சொத்து மதிப்பில் பாதியை அள்ளி அள்ளி வழங்கி அவர்கள் வாட்டம் போக்கினான். அனீஸ் தான் கற்ற வித்தையால் ஒரு கொடுமைக்காரனை திருத்தினான். பழிவாங்க வேண்டுமானால் இப்படித்தான் பழிவாங்க வேண்டும்!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 தங்கப் புல்லாங்குழல்

சீன இதிகாசக் கதைகள் / 3

79d156c0-83f3-4af2-826e-f963b2283042மலைக்கிராமத்திலே ஒரு பெண்ணும் அவளுடைய மகளும் இருந்தார்கள். அவர்கள் தங்களுடைய சிறிய நிலத்தில் வேலைகள் செய்வது வழக்கம். விதை தூவுவது, நடுவது, தண்ணீர் பாய்ச்சுவது, அறுவடைக் காலத்தில் அறுப்பது, கதிர் அடிப்பது என்று எல்லா வேலைகளையும் அவர்களே செய்வார்கள். அந்தப் பெண்ணின் மகள் சிவப்பு நிற உடைகளே அணிவாள். அதுவே அவளுக்குப் பிடிக்கும். அதனால் அவளை எல்லோரும் ‘சிவப்புச் சின்னவள்’ என்று அழைத்தார்கள்.

ஒருநாள் அந்தக் கொடுமை நடந்தது. ‘சிவப்புச் சின்னவள்’ தங்கள் கழனியிலே ஏதோ வேலையாக இருக்கும்போது, ராட்சச டிராகன் ஒன்று வானிலே பறந்து வந்தது. அது வந்தபோது அதன் இறக்கைகளின் அசைவிலே காற்று வேகமாக வீசியது. அதனால் மரங்களெல்லாம் ஆடின. மேகங்கள் கூட குலுங்கின. பார்ப்பதற்கு மிகவும் மூர்க்கமான, கோரமான, கடுஞ்சீற்றம் கொண்டதாக இருந்தது. வானிலே பறக்கும் பருந்து திடீரென்று பூமியில் பாய்ந்து கோழிக் குஞ்சை கவ்வுவது போல, சிவப்புச் சின்னவளை அப்படியே தன் கால்களால் அள்ளிக் கொண்டு போய்விட்டது. சிவப்புச் சின்னவளின் அவலக்குரல் அழுதுக்கொண்டே ஒலித்தது. அதைத்தான் அவளுடைய அம்மாவால் கேட்க முடிந்தது.

“அம்மா… என்னருமை அம்மா… பொறுத்திரு… பொறுத்திரு.

சகோதரனே சகோதரனே என்ன வந்து மீட்டு விடு!Ó

பெற்த் தாயின் கண்கள் கலங்கின; அவளின் ஆற்றாமையின் அழுத்தம் அவள் இதயத்தை பிசைந்தது. “பாவம், குழந்தை! அவளைப் போய் அந்த ராட்சசப் பேய் டிராகன் தூக்கிக்கொண்டு போய்விட்டதே! என்ன செய்வேன்? யாரிடத்தில் போய் கேட்பேன்! சிவப்புச் சின்னவளோ “சகோதரனே… சகோதரனே என்னை வந்து காப்பாற்று” என்றாளே… அவளுக்கு ஏது சகோதரன்… எனக்குப் பிறந்தது இவள் மட்டுந்தானே… பயத்திலே அப்படி உளறி இருக்கிறாள் போலும்” என்று நினைத்தாள். இப்படியெல்லாம் நினைத்து, தள்ளாடிக் கொண்டே வீட்டை நோக்கித் திரும்பினாள்.

திரும்பும் வழியிலே பாதி தூரம் வந்தபோது அவளுடைய நரைத்த தலைக் கூந்தலை யாரோ பிடித்து இழுப்பதுப்போல இருந்தது. சாலை ஓரத்தில் இருந்த புன்னை மரக் கிளை அது. காற்றில் ஆடித் தாழும்போது இவள் கூந்தல் மாட்டிக்கொண்டது போலும். வேறு வழியில்லாமல் கூந்தலை அறுத்தெடுத்துக் கொண்டு நடக்கின்ற போது,  நன்றாகச் சிவந்த சிவப்பு பெர்லி பழங்களைப் பார்த்தாள். கொஞ்சம் பறித்து எடுத்துக்கொண்டு நடந்தாள். அந்த சிவப்பு பெர்ரியை சுவைத்தாள்.

வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். வீட்டீக்கு வந்தவுடனே அவளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவள் சாப்பிட்டச் சிவப்பு பெர்ரிப் பழம் அவளைக் கருக்கொள்ள வைத்தது. ஒரு நாளின் சில மணிகளிலே அவள் கர்ப்பம் முதிர்ந்து குழந்தையும் பெற்றெடுத்தாள். அது ஓர் ஆண்குழந்தை அதற்கு “சின்ன பேபரி” என்று பெயரும் சூட்டினாள். குழந்தையும் வட்டமான தலையுடனும் சிவந்த கன்னங்களுடன் பேபரி போலவே இருந்தான்.

சின்ன பேபரி பிறந்த சில நாட்களுக்குள்ளேயே வளர்ந்து ஓர் இளைஞனாக ஆகிவிட்டான். பதினான்கு அல்லது பதினைந்து வயதுக்காரனைப் போல தோற்றம் தந்தான். அவனைப் பார்க்கும்போதெல்லாம்அவனுடைய தாய்க்கு ராட்சச டிராகன் தூக்கிக் சென்ற அவளின் மகள் சொன்ன வாக்கியங்கள் தான் நினைவுக்கு வந்தது.

“சகோதரனே சகோதரனே என்னை மீட்பாயாக”

பெற்றவளோ அதை அவளிடம் சொல்லத் தயங்கினாள். சொல்வதற்கு வாய் வரும். ஆனால் மனம் தடுத்துவிடும். இவனுக்கு ஏதாவது விபரீதம் நேரிட்டால் என்ன செய்வது? இதனால் தான் அவள் வாய் மௌனிக்கும், கண்களோ கலங்கும்!

ஒரு நாள் ஒரு காகம் அவள் வீட்டின் கூரையில் அமர்ந்து, பின் அங்கிருந்து இறங்கி, கூரை இறக்கத்தில் இருந்துக் கொண்டு, “உனது தமக்கை துன்பத்தில் கிடக்கிறாள்; அவளை துன்பத்திலிருந்து மீட்டு வருவாயாக! டிராகன் பூதத்தின் குகையில் மடிகிறாள். வெற்றுக் கைகளால் குகையை சுரண்டி சுரண்டி தவிக்கிறான். அதனால் அவளது உடைகளிலும் ரத்தக் கறைகள் இருக்கிறது. உடனே சகோதரனே, உன் சகோதரியை மீட்டு வா”

இதைக் கேட்டவுடன் சின்ன பேபரிக்கு ஆச்சர்யமாக இருந்தது. “அம்மா… எனக்கு அக்கா இருக்கிறாளா? எங்கேப் போனாள்? ஏன் என்னிடம் மறைத்து விட்டாய்?” என்று கேட்டாள்.

“ஆமாம் மகனே… உன் அக்காவை ராட்சச டிராகன் தூக்கிக் கொண்டு போய்விட்டது. அந்த டிராகன் பலரைத் தூக்கிக் கொண்டு போய் சாப்பிட்டு விட்டது!” என்றாள்.

பேபரி உடனே ஒரு பெரிய உலக்கைப் போன்ற ஒரு தடியை எடுத்துக் கொண்டாள், “அம்மா… இதோ இப்பொழுதே போய் என் தமக்கையை மீட்டெடுக்கப் போகிறேன்… ராட்சச டிராகனை இந்தத் தடியால் அடித்து கொன்று விடுவேன்… இனிமேல் அவன் யாருக்கும் தீங்கு செய்யமுடியாத அளவுக்கு செய்துவிட்டு வருகிறேன்.” என்று சொல்லி புறப்பட்டான்.

அவனது தாய் கண்ணீரில் மறைத்த பார்வையோடு, கதவின் இடைவெளியிலே அவன் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் உள்ளத்தில் மகிழ்ச்சியும் அச்சமும் ஒருங்கே எழுந்தன.

பேபரி, வெகு தொலைவுகள் நடந்தான். நடந்து, நடந்து எப்படியோ ஊர்க் கோடியிலுள்ள ஒரு மலைச் சாலையின் முடிவுக்கு வந்து விட்டான். அதன் பிறகு சாலையின் தொடர்ச்சி இல்லை. ஆனால் மிகப்பெரிய பாறாங்கல் ஒன்று பாதையை அடைத்தது போல் நின்றிருந்தது.

இந்தப் பாதையை கடந்து போக வேண்டுமானால் அந்தப் பாறையைத் தாண்டிக் குதிக்க வேண்டும். அப்படி குதித்தால் ஒரு காலடி தவறினால் கூட மலைக்கு கீழே அதள பாதாளத்துக்குள் போய் விழ வேண்டும். யாரும் அவ்வளவு பெரிய முயற்சி எடுப்பதில்லை. ஆனால் பேபரி அந்த பாறாங்கல்லை நகர்த்தி விட்டால் போதுமென்று நினைத்தான்.

பேபரி தான் எடுத்து வந்த கோலை அந்த பாறாங்கல்லின் அடியில் நுழைத்து, தன் பலங்கொண்ட மட்டும் அந்த கல்லை உயர்த்திடப் பார்த்தான். அவன் கொண்டு வந்த தடி இரண்டாக உடைந்தது. என்ன செய்வது? உடனே தன் இரு கைகளையும் பாறாங்கல்லின் அடியில் கொடுத்து அதை உருட்டப் பார்த்தான். எங்கிருந்துதான் அவனுக்கு அந்த பலம் வந்ததோ, ஆம் பாறாங்கல் அசைந்து கொடுத்தது, அவன் தன் பலத்தால் இயன்ற அளவு உயர்த்திக் கொண்டு அப்படியே பின்னால் தள்ளினான். பாறாங்கல் உருண்டு ஓடி பள்ளத்தாக்கில் போய் விழுந்தது.

அதே நேரம் அந்தப் பாறாங்கல் இருந்த இடத்திலே தகதகத்துக் கொண்டிருக்கும் தங்க புல்லாங்குழல் ஒன்று இருந்தது. பேபரி அதை கையிலெடுத்தாள். அதை துடைத்து விட்டு குழலில் காற்றை ஊதினான். அதில் ஓசை எழுந்தது. அதை மீண்டும் ஊதினான். அவ்வளவுதான் அந்த மலையிலே, மலைச்சாலையிலே உள்ள புழு பூச்சிகளும் தவளைகளும், பல்லிகளும் நாட்டியமாடத் தொடங்கின. புல்லாங்குழலை வேகமாக ஊதினால் வேகமாக ஆடின. “ஓ…. இது போதும், இதை வைத்தே அந்த ராட்சச டிராகனை ஒரு கை பார்த்து விடலாம்” என்று நெஞ்சத் துணியோடு நிமிர்ந்து நடந்தான்.

கொஞ்ச தூரம் நடந்து போனதும், பெரிய மலைப்பாறை தெரிந்தது. அவன் கஷ்டப்பட்டு அந்தப் பாறையின் மேல் ஏறிக்கொண்டான். அங்கிருந்து பார்த்தால் ஒரு குகையின் வழியை முழுதும் அடைத்துக்கொண்டு அந்த ராட்சச டிராகன் அமர்ந்திருந்தது. டிராகனைச் சுற்றிலும் எலும்புகள் குலியலாகக் கிடந்தன. எல்லாமே மனிதர்களைச் சாப்பிட்டுவிட்டுப் போட்ட எலும்புகளே.

அவனுக்கு அடுத்து ஒரு பெண் கண்ணீரோடு அமர்ந்திருப்பது தெரிந்தது. டிராகன் தன் நீண்ட கூரிய நகங்களால் அவளின் முதுகை கீறிக் கீறி கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தது. “அட நன்றிக்கெட்ட சிவப்புப் பெண்ணே! நீ என்னோடு இருக்கும் வரைக்கும் யாரும் உன்னைத் தொடமுடியாது. திருமணம் செய்துகொள்ளமுடியாது. எத்தனை நாளானாலும் சரி, எத்தனை குன்றுகளைத் தாண்டி வந்தாலும் யாரும் உன்னை என்னிடமிருந்து கைப்பற்ற முடியாது. அப்படி வந்தால் உன்னை சாகடித்து மண்ணுக்குள் போட்டிடுவேன்” என்று கூறிக் கொண்டிருந்தான்.

பேபரிக்கு அவள்தான் தன்னுடைய உடன் பிறந்தவள் என்று தெரிந்துவிட்டது. உடனே தானிருந்த இடத்திலிருந்து குரல் கொடுத்தான்.. “அடே கெட்ட புத்தி ராட்சசனே! என் அக்காவைக் கொடுமைப்படுத்தியதற்கு தண்டனைக் கொடுக்க நான் வந்துவிட்டேன். இந்தப் புல்லாங்குழலை ஊதி வாசித்தே உன்னை ஒரு வழி பண்ணப் போகிறேன்… உன் கதை முடிந்தது. உன் உயிர் இப்பொழுது என் கையில்” என்று சொல்லிவிட்டு புல்லாங்குழலை ஊதினான். வேக வேகமாக ஊதினான்.

அவன் புல்லாங்குழலை ஊத ஊத தனது பெருத்த உடலைத் தூக்கிக் கொண்டு ராட்சச டிராகன் ஆட ஆரம்பித்துவிட்டது. தன்னை மீறிய ஆட்டம். எது நடந்தாலும் என்ன செய்தாலும் உணர முடியாத ஆட்டம்!

இதுதான் தக்க தருணமென்று ‘சிவப்புச் சின்னவள்’ மெல்ல குகையை விட்டு வெளியே வந்தாள். வெளியில் நின்று ராட்சச டிராகன் போடும் ஆட்டத்தைப் பார்த்தாள். அதன்  கண்கள் செருகி இருந்தது. தன்னை மறந்த நிலையில் அது ஆடிக் கொண்டிருந்தது. அதன் கண்களிலிருந்து நெருப்பு ஜீவாலை வீசியது. மூச்சுக் காற்றாக கொதிக்கின்ற ஆவி வெளிவந்தது. வாயைத் திறந்து திறந்து மூடி மூச்சு வாங்கியது. தன் தம்பியிடம் பேச சிவப்புச் சின்னவள் முயன்றாள். பேபெரி கையால் சாடைக் காட்டினாள். அவன்  புல்லாங்குழல் வாசிப்பதை நிறுத்தினால், அவனையும் அவளையும் அவன் உயிரோடு கொன்று சாப்பிட்டுவிடுவான். எனவே அவன் புல்லாங்குழலை ஊதிக்கொண்டே இருக்க டிராகன் மூச்சு வாங்க ஆடியது, அதனால் இப்பொழுது முடியவில்லை. பெரிய வயிற்றை தூக்கிக் கொண்டு ஆட ஆட அதற்கு அது ஏதோ வேதனையாக இருந்தது. எனவே பேபரியிடம் கெஞ்சத் தொடங்கியது.

“தம்பி… புல்லாங்குழல் வாசிப்பதை கொஞ்சம் நிறுத்து.. நீ ஆற்றல் வாய்ந்தவன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். இனிமேலும் என்னால் தாங்க முடியாது. ஐயோ, இந்த இம்சையைப் பொறுக்கமுடியவில்லை. புல்லாங்குழல் ஓசையைக் கேட்டு ஆடாமல் இருக்க முடியாது. அதுப்போல ஆடிக் கொண்டே இருக்கவும் முடியாது. கொஞ்சம் இரக்கம் காட்டு, உன் சகோதரியை விட்டு விடுகிறேன்.” என்றது டிராகன்.

ஆனால் அவன் நிறுத்துவதாக இல்லை. தன் அக்கா சொல்லியபடி இதே இடத்திலே இவனை விட்டு வைக்கக் கூடாது, அப்படி விட்டு வைத்தால் மறுபடி மனிதர்களைத் தூக்கிக்கொண்டுபோய் கொன்று தின்பான். இவனிடம் இரக்கம் காட்டக்கூடாது என்று நினைத்து, பேபரி மெல்ல நடந்துகொண்டே புல்லாங்குழலை வாசித்தான். அவள் தமக்கை அவனோடு சேர்ந்து நடந்தாள். பின்னாடியே, ராட்சச டிராகன் ஆடிக்கொண்டே வந்தது. அதுவும் இவன் வேகமாக வாசிக்க வாசிக்க அது நிலைக்கொள்ளாமல் ஆடிக்கொண்டே வந்தது. வழியில் ஒரு பெரிய குளம் இருந்தது. ராட்சச டிராகன் ஒன்றும் முடியாமல் நேராக குளத்தில் போய் விழுந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டது. குளத்தில் அது விழுந்தவுடன் பல அடி தூரத்துக்கு நீர் மேலேழுந்து அடித்தது. குளமே கொந்தளித்து வழிந்தது. அதே நேரம் ராட்சச டிராகனின் கண்களிலிருந்து நெருப்பு ஜுவாலை வீசியது, மூக்கிலிருந்து சுவாசக் காற்றாக கொதிக்கும் நீராவி வந்தது. வாயிலிருந்து மூச்சு சீறி சீறி எழுந்தது.

அது பேபரியிடம் கெஞ்சியது; “ஐயா, பெருமகனே… இதோடு வாசிப்பை நிறுத்தி விடுங்கள். இதே இடத்திலே நான் கிடந்து விடுகிறேன்…” என்றது.

“சரி… நீ யாருக்கும் துன்பம் இழைக்கக்கூடாது. கேடு புரியக்கூடாது. அப்படியானால் வாசிப்பை நிறுத்துவேன்” என்றான் பேபரி.

ராட்சச டிராகன் அதற்கு ஒத்துக்கொண்டது. அக்காவும் தம்பியும் வீடு திரும்பினார்கள். தாய் மகிழ்ச்சியில் தத்தளித்தாள்.

சில நாடள்களுக்குப் பின்னர் ராட்சச டிராகன் இருக்கின்ற குளத்திலே குளிக்கப் போனவர்கள் காணாமல் போனார்கள். அடி ஆழத்திலிருந்து மேலெழுந்து வந்து டிராகன் குளிக்க வருகிறவர்களை துன்புறுத்தலானது. சிலரை தூக்கிக் கொண்டு அடி ஆழத்துக்குச் சென்றது.

இதைக் கேள்விப்பட்டவுடன் பேபரி மறுபடியும் குழலுடன் குளத்தருகே வந்தான். குழலை வேக வேகமாக வாசித்தான். இப்படி ஏழு நாட்கள் வரை செய்தான். தண்ணீருக்குள் ராட்சச டிராகன் தண்டாமாலை ஆடியது. ஆடி, ஆடி, களைத்து வீழ்ந்தது. கடைசியில் செத்தும் போனது.

தமக்கையும் தம்பியும் மனநிறைவோடு வீடு திரும்பினார்கள். டிராகனின் மேல் தோலை எடுத்து வீடு கட்டிக் கொண்டனர். டிராகனின் எலும்புகளை தூண்களாகவும் கூரையைத் தாங்கும் வாரைகளாகவும் அமைத்துக் கொண்டனர். டிராகனுடைய கொம்பை வெட்டி எடுத்து அதை நிலத்தில் உழவுக்குப் பயன்படுத்திக்கொண்டனர்.

இவ்வாறு அக்காவும் தம்பியுமாக டிராகனின் உடலிலிருந்து. பலவகையில் பயன் பெற்றனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 நுவா

சீன இதிகாசக் கதைகள் / 4

nu_wa_by_uuyly-d3dvp0aசீனப் பெரு நிலமெங்கும் பல்வேறு இனக் குழுக்களிலும் மொழிச் சமூகங்களிலும் (சீன நாடு நம் நாட்டைப் போன்று பல்வேறு இனங்கள், மொழிகள் கொண்ட நாடு) நுவாவின் கதை பன்னெடுங்காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. கதை மட்டுமின்றி பாடல் வடிவிலும் நுவா பிரபலமான ஒரு பெயர். சீன இலக்கியத்தில் மறக்கமுடியாத ஒரு கதாபாத்திரமும்கூட.

உலகமெங்கும் ஓர் ஊழிப் பெருவெள்ளம் ஏற்பட்டது என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நோவா என்ற இறைத் தூதர் காலத்தில் ஏற்பட்ட இந்தப் பெருவெள்ளம் கடவுளின் சீற்றத்தால் ஏற்பட்டது. மனிதர்கள் மிருகங்களைவிடத் தாழ்ந்தவர்களாக, கேவலமானவர்களாக, கொடியவர்களாக, கயவர்களாக மாறிவிட்டதைத் தொடர்ந்து கடவுள் கோபம் கொண்டு வெள்ளத்தை ஏற்படுத்தினார். ஓயாத பெருமழையால் உலகம் முழுவதையும் மூழ்கடித்து மனித இனத்தையே முற்றிலும் அழிக்கச் செய்தான் கடவுள். அதிலே சில நல்லவர்கள், இறைத்தூதர் நோவாவின் முன்னெச்சரிக்கை அறிவுறுத்தலை ஏற்று நோவா கட்டிய கப்பலில் தப்பிப் பிழைத்தார்கள். பின்னர் இவர்களிடம் இருந்துதான் மனித இனம் மீண்டெழுந்தது.

இதே ஊழிவெள்ளம் நுவாவின் கதையிலும் நடக்கிறது. வானம் உடைந்தது போல மழை பெய்துக்கொண்டே இருந்தது. பகலா இரவா என்று அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு இருள் சூழ்ந்துகொண்டது. ஒருவருடைய முகம் இன்னொருவருக்குத் தெரியவில்லை. எங்கிருக்கிறோம், எங்கு போகிறோம் எதுவும் புரியவில்லை. மழையோடு காற்றும் சேர்ந்து பேயாட்டம் ஆடுகிறது. வெள்ளச் சுழலில் மனிதர்கள் சிக்கி இறந்தார்கள்.

வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்தது. உயிர்கள் அனைத்தும் அழிந்துவிட்டநிலையில், தூரத்திலே மலை உச்சியில் கைகளைக் கோர்த்தவாறு இரண்டு பேர் செல்கிறார்கள். அவர்கள், நுவா, அவர் அண்ணன் ப்யுக்ஸி. எப்படியோ இந்த இருவர் மட்டும் உயிர் தப்பிவிட்டார்கள்.

அண்ணனும் தங்கையுமாக குன்லுன் என்ற மலைப் பகுதியில் அவர்கள் இருக்கிறார்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள். வேறு மனிதர்கள் இல்லை. உயிரின் வாசனையே இல்லை.

வேறு துணை கிடைக்காததால் அண்ணன், தம்பி இருவரும் தங்களுக்குள் திருமணம் செய்துகொள்ள நினைக்கிறார்கள். ஆனாலும் ஒரு குற்றவுணர்வு. அண்ணனும் தங்கையும் எப்படி மணம் செய்து கொள்வது? இது முறைகேடல்லவா?

ஊழிவெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் அவர்கள் தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்துப் பார்க்கின்றனர். தந்தையோடும் தாயோடும் உடன்பிறப்புகளோடும் பாசத்தில் திளைத்து பரவசத்தில் மிதந்த அந்தச் சின்னஞ்சிறு பருவத்தை நினைக்கும்போதெல்லாம், இழந்த சொந்தங்களை எண்ணும்போதெல்லாம் அவர்கள் கண்களில் மற்றொரு வெள்ளம் பெருக்கெடுக்கும். அந்தச் சின்னஞ்சிறு பருவத்தைக் கடக்கும் முன்னே இயற்கை அவர்களை வஞ்சித்துவிட்டது. உறவுகள் இன்றி அவர்கள் தனிமைப்பட்டுப்போனார்கள்.

தனிமை அவர்களைக் கொல்லாமல் கொன்றது. இந்நிலையில்தான் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார்கள். குழந்தைகள் பிறந்தால் தனிமை தொலையும் அல்லவா? இந்த நினைப்பை முதலில் யார் சொல்வது? தங்கையிடம் சொல்ல அண்ணன் தயங்கினான். அண்ணனிடம் தலையாட்ட தங்கை கூசினாள். மௌனப் போராட்டம் தொடர்ந்தது. கடைசியில் அண்ணன் எப்படியோ தங்கையிடம் சொல்லிவிட்டான். அதற்கு பின்வான் உலகத்திலுள்ள கடவுளிடம் அனுமதி வாங்கவேண்டும் என்பது நியதி. இருவரும், கடவுளிடம் அனுமதி வாங்கிவிட்டு திருமணம் புரிய உறுதிப் பூண்டார்கள்.

ஒரு நாள் அண்ணன் தன் தங்கையை அழைத்துக்கொண்டு குன்லுன் மலை மேல் சென்று கடவுளிடம் தங்கள் கோரிக்கையை முன்வைத்தான். “கடவுளே, உலகில் இப்பொழுது அண்ணன் தங்கையாகிய நாங்கள் மட்டும் மிஞ்சி இருக்கின்றோம். எங்கள் மனித இனம் பெருகவேண்டும். எங்களுக்குத் துணையாக மனிதர்கள் இருக்கவேண்டும். அதற்கு நாங்கள் இருவரும் மணம் புரிந்துகொள்ளவேண்டும். அதன்மூலம் எங்களுக்குக் குழந்தைகள் பிறக்கும். எங்கள் இனம் தழைக்கும். எங்கள் வாழ்வு சுவைக்கும். ஆகவே உன்னுடைய அனுமதியை வேண்டி நிற்கின்றோம். எங்கள் திருமணத்துக்கு நீ அனுமதி அளித்தால் அதற்கு அடையாளமாக நாங்கள் மூட்டும் புகைமூட்டம் அடர்ந்து கலையாமல் இருக்கவேண்டும். காற்றிலே பரவிப்போகாமல் இருக்க வேண்டும்.  உன் அனுமதி இல்லையென்றால் அந்தப் புகைமூட்டம் கலைந்து போகட்டும்” என்றான்.

புகை கலையவில்லை. நெடுநேரம் ஆகியும் காற்றில் கலக்கவில்லை. இருவரும் மகிழ்ந்தனர். கடவுளின் அனுமதி கிடைத்துவிட்டு என்று குதூகலித்தனர். மகிழ்ச்சி பொங்கும் முகங்களோடு அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்தனர். நுவா அங்கேயே கோரைப் புற்களால் ஒரு விசிறி செய்தாள். திருமண வெட்கம் அவளுக்கு ஏற்பட்டது. அதனால் அந்த விசிறியைக் கொண்டு முகத்தை மறைத்துக்கொண்டு ப்யுக்சியோடு சேர்ந்து நடந்தாள். திருமண நாளின்போது மணப்பெண் ஒரு விசிறியைக் கொண்டு முகத்தை மறைத்துக்கொள்ளும் மரபு இதற்குப் பிறகே தொடங்கியது.

நுவாவும் ப்யுக்சியும் தம்பதிகள் ஆகிவிட்டனர். குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டனர். ஒராண்டு ஓடியது. ஒரு குழந்தை பிறந்தது. இன்னொரு ஆண்டு ஓடியது. மற்றொரு குழந்தை பிறந்தது. ஆனால் இந்த வேகம் அவர்களுக்குப் போதவில்லை. அவர்களுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. களிமண்ணால் மனிதர்களையும் மனிதர்களுக்கு உதவக்கூடிய  மிருகங்களையும், மனிதர்களோடு பழக பறவைகளையும் படைத்தால் என்ன? நுவா களிமண்ணால் இப்பொழுது உருவங்களை வடிக்கத் தொடங்கினாள்.

நுவா முதல் நாளில் கோழிகளைப் படைத்தாள்.

இரண்டாவது நாளில் நாய்களைப் படைத்தாள்

மூன்றாவது நாளில் செம்மறி ஆடுகளைப் படைத்தாள்

நான்காம் நாள் பன்றிகளைப் படைத்தாள்

ஐந்தாவது நாள் பசுக்களைப் படைத்தாள்

ஆறாவது நாளில் குதிரைகளைப் படைத்தாள்

ஏழாவது நாளில் அவள் மஞ்சள் களிமண்ணைக் கொண்டு மனிதர்களைப் படைத்தாள்.

இப்படியே நூற்றுக்கணக்கில் களிமண் உருவங்களை செய்து குவித்தாள். இந்தப் பணியின் பளுவிலே அவளுக்கு களைப்பு ஏற்பட்டது. ஆனால் உற்சாகம் குன்றவில்லை.

களிமண் உருவங்கள் உறுதியாக இல்லை. ஈரம் உலருமுன் அவை வழிந்து உட்கார்ந்தன. எனவே அவற்றை மறுபடி சீர்செய்து,  நிமிர்த்தி, வழிந்து உட்காராமல் இருக்க சின்னஞ்சிறு கயிறுகளால் சுற்றி வைத்தாள். மனித உருவங்களில் சில கீழே சாய்ந்துவிட்டன. அப்படி சாய்ந்துவிட்ட உருவங்கள் பொதுமக்களாக, ஏவலர்களாக பின்னர் மாறின. நிமிர்ந்து நிலைத்து நின்றவை பிரபுக்களாக, அதிகாரம் செலுத்துபவர்களாக ஆயின.

இப்படியாக, நூற்றுக்கணக்கில் மனிதர்கள், மிருகங்கள், பறவைகளின் உருவங்களைத் தாங்கிய களிமண் பொம்மைகளுக்கு உயிர் கொடுக்கும்படி நுவா இறைவனை வேண்டிக்கொண்டாள். கடவுளுக்கு அவளது வேலை பிடித்திருந்தது. எனவே கடவுள் அந்தக் களிமண் உருவங்களுக்கு உயிர் கொடுத்துவிட்டான். ஆம் அவை உயிர்பெற்றெழுந்தன. மஞ்சள் களிமண்ணால் படைக்கப்பட்ட மனித உருவங்கள் இப்பொழுது மஞ்சள் நிற மனிதர்களாக மாறிவிட்டார்கள்.

ஒரு வழியாக மனிதர்களும் மிருகங்களும் பறவைகளும் பெருகிவிட்டன. நுவா மகிழ்ந்தாள். ஒவ்வொரு உயிரிடத்திலும் பாசத்தைப் பொழிந்தாள். அந்த உயிர்களும் நுவாவையும் அவள் கணவனையும் தங்களுடைய தாய் தந்தையாகப் போற்றினர். அவர்களை நென்ஹுவாவ் என்று அழைத்தனர். இதற்கு மனித குலத்தின் பெற்றோர் என்பது பொருளாகும்.

ஒரு சமயம் சீனர்களின் கடவுள்களுக்கிடையே பெரும் சண்டை மூண்டது. ஒண்டிக்கு ஒண்டியாக இரண்டு கடவுளர்கள் மோதிக்கொண்டார்கள். தண்ணீருக்கான கடவுள் நீர் தேவன் எதிரியிடத்தில் தோற்கப்போகும் நிலைக்கு உள்ளானான். எனவே அவன் வெறிகொண்டான். அந்த வெறியோடு தனது தலையை புஷாவ் மலையில் மோதினான். அவ்வளவுதான், மலை கிடுகிடுத்தது. ஆட்டம் கண்டது. இந்த மலைதான் வான மண்டலத்தைத் தாங்கி நின்ற தூண்களில் ஒன்றாகும். இப்படித் தூணாக இருந்த மலை அவன் மோதியதால் குப்புற விழுந்தது. அதனால் வானம் வட மேற்காகத் தாழ்ந்தது. பூமி தென் கிழக்காகச் சாய்ந்துபோனது. இதனால் எத்தனையோ பேரிடர்கள் பூமியிலே நிகழலாயிற்று.

நாட்டிலும்கூட காட்டுத்தீ போலத் தீப்பிடித்துக்கொண்டது. இன்னொரு புறத்திலே வெள்ளம் பெருக்கெடுத்து ஊர்களை மூழ்கடித்தது. மூர்க்கமான அரக்கர்கள் தோன்றி பெரிய மிருகங்களைக்கூட விழுங்கினார்கள். கொடிய சீற்றங்கொண்ட கோரமான விலங்குகள் மக்களைத் தாக்கின. வானத்திலே அச்சந்தரும் பறவைகள் ஆலவட்டம் போட்டன.

நுவா வானத்தில் உடைப்பைச் சரிசெய்ய எண்ணினாள். சாய்ந்து போன வானப்பகுதியை நிமிர்த்தவும், உடைந்துப் போன வான முகட்டினை மீண்டும் ஒட்டவும் முயற்சித்தாள். ராட்சஷ ஆமைகளின் கால்களை வெட்டி, முட்டுக்கொடுத்து சாய்ந்து கிடந்த வானத்தைக் கொஞ்சம் நிமிர வைத்தாள். வானமுகட்டிலே காணப்பட்ட ஓட்டையை ஏழு வகையான நிறங்களைக் கொண்ட கற்களைக் கொண்டு மூடினாள். (இது முதல் தான் ஏழு வண்ணங்களில் வானவில் தோன்றியதாம்). ஆனாலும் அவளால் வானத்தை முழுமையாகச் சரிசெய்ய முடியவில்லை.

ஏனெனில் சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் போகின்ற பாதை வடமேற்கு. எனவே அதை முழுதும் மறைக்கும்படி சுவர் வைத்துவிட்டால். இவற்றுக்குப் பாதை இருக்காது. மேலும் சீனாவில் பாய்கின்ற நதிகள் எல்லாம் தென்கிழக்குப் பகுதியிலிருந்து புறப்படுகிறது. எனவே என்ன நுவா முகடுவரை ஏறி வடமேற்கிலிருந்து, தென்கிழக்கு வரை தன்னுடைய உடலால் அந்த ஒட்டை ஏற்பட்ட இடைவெளியை மறைத்தாள். கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்த வெள்ளத்தைத் தடுத்தாள். இதன் நினைவாக ஆண்டுதோறும் ஒரு தினத்தை ஒருவர்மீது ஒருவர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து கொண்டாடுகிறார்கள். நுவாவை வானத்தின் திருமகளாக நினைத்து இன்றுவரை வழிபடுகின்றனர். சீன மக்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

நாய் முகத் தொப்பி

சீன இதிகாசக் கதைகள் / 5

Puppy-font-b-Dog-b-font-baby-infant-knitted-animal-Costume-Set-0-3-months-newbornசீனாவில் நாட்டுப்புறப் பகுதிகளில் சிறுவர்கள் அணிகின்ற தொப்பி அது. ஆனால் கொஞ்சம் விசித்திரமானது, வேடிக்கையானது. அந்தத் தொப்பியை குழந்தைகள் அணிவதற்கு என்ன காரணம்?

சீன மக்கள் அனைவருக்கும் அந்தக் கதை தெரியும். வெகு காலத்துக்கு முன்னர் ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் வாழ்ந்து வந்தார்கள். இருவருக்கும் திருமணம் முடிந்து, இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்கள். இதிலே மூத்த சகோதரரும் அவரது மனைவியும் நேர்மையானவர்களாகவும், நிதானமும் பொறுமையும் கொண்டவர்களாகவும், தாராள நெஞ்சுடையவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கோ குழந்தை கிடையாது. அக்காலத்தில் சீன மக்கள் குழந்தைப்பேறு இல்லையென்றால் பெரிய குறையென்று கருதுவார்கள். வாழ்க்கை பொருளற்றது என்று நினைத்து வருந்துவார்கள். இந்தத் தம்பதியரும் அதே போல் வாட்டமுற்றார்கள். குழந்தையில்லா வெறுமையிலே கவலைக்கொண்டார்கள். தன்னுடைய குடும்பத்தில் ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தார்கள்.

மூத்த சகோதரரின் தம்பிக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். இந்த இருவரில் ஒரு பிள்ளையைத் தத்து எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள். ஒரு பிள்ளை அண்ணன் குடும்பத்துக்கும் இன்னொரு பிள்ளை தம்பி குடும்பத்துக்கும் வாரிசாகத் திகழ்வார்கள் அல்லவா? இந்த எண்ணத்தைத் தன்னுடைய தம்பியிடம் தெரிவித்து அவனது ஒப்புதலைப் பெறலாம் என்று எண்ணினார் அண்ணன்.

ஒருநாள் அண்ணன் தனது தம்பியிடமும் தம்பி மனைவியிடமும் தன்னுடைய தத்து எடுக்கின்ற எண்ணத்தை வெளிப்படுத்தினார். தம்பி அதை விரும்புவான், ஏற்றுக்கொள்வான் என்று அண்ணன் நினைத்தார். ஆனால் நேர்மாறாக தம்பியும் தம்பி மனைவியும் தங்கள் விருப்பமின்மையை சொல்லாமல் சொல்லிப் போனார்கள். தம்பியின் போக்கு அண்ணனுக்குப் புரியவில்லை. எதனால் அவர்கள் மறுக்கிறார்கள் என்று அவர் குழம்பிப்போனார்.

நீண்ட காலத்துக்குப் பிறகு தம்பி ஒரு நாள் திடீரென்று மரணமடைந்தான். அவருடைய மனைவியால் தன் இரண்டு குழந்தைகளை வளர்க்கமுடியாமல் போனது. வருமானம் இல்லாமல் போனதால் அவள் திண்டாடினாள். இந்த நிலைமையை அறிந்த மூத்த சகோதரர் திரும்பவும் அவளிடம் சென்று அவன் குழந்தைகளில் ஒன்றைத் தான் தத்து எடுத்துக்கொண்டு வளர்க்க விருப்பம் என்று கூறினார். அப்பொழுதும் அவள் மறுத்துவிட்டாள். இப்போதும் காரணம் தெரியவில்லை.

ஆண்டுகள் ஓடின. தம்பி, மனைவி எப்படியோ கஷ்டப்பட்டு தன் பிள்ளைகளை வளர்த்துவந்தாள். ஆச்சரியமூட்டும் வகையில், அண்ணனின் மனைவி கர்ப்பம் தரித்தாள். அண்ணன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். தன் மனைவியை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொண்டார். அக்காலத்தில் ஊருக்கு ஒரு மருத்துவச்சிதான் இருப்பாள். அவளை மனைவியின் பேறு காலத்துக்கு முன்கூட்டியே சொல்லி வைத்தான். அதே நேரத்தில் தன்னுடைய வியாபார தொடர்பு காரணமாக அடிக்கடி வெளியூர்களுக்கு அவன் செல்லக்கூடியவன் என்பதால் பிரசவ நேரத்தில் தான் வெளியூருக்கு செல்ல நேரிட்டால் என்ன செய்வது என்று கவலையும்கொண்டான். ஆனால் அவனுக்கு ஆறுதலாக தம்பியின் மனைவி தானாக முன்வந்து அவன் இல்லாதபோது அவளைக் கவனித்துக் கொள்வதாகக் கூறினாள்.

பேறுகாலம் வந்தது. அண்ணன் வியாபார விஷயமாக வெளியூரில் இருந்தான். இடுப்பு வலி எடுத்தவுடன், தம்பி மனைவி ஓடோடிப்போய் மருத்துவச்சியை அழைத்துவந்தாள். உண்மையில் தம்பியின் மனைவி இப்படியெல்லாம் உதவிகரமாகச் செயல்பட்டதற்கு ஓர் உள்நோக்கம் இருந்தது. தன் கணவனின் அண்ணனுக்கு வாரிசு இல்லாமல் போகவேண்டும், அவர்களுடைய முழு சொத்தும் தன் கைக்கு வரவேண்டும் என்பதுதான் அவளுடைய கெட்ட எண்ணம். இதனைச் செயல்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு அல்லவா? பிரசவத்துக்கு உதவுவதுபோல நடித்து எப்படியாவது குழந்தையைத் தொலைத்துக்கட்டிவிடுவது என்று முடிவெடுத்தாள்.

தன் பிள்ளைகளில் ஒன்றைத் தத்துக்கொடுக்க அவள் மறுத்ததற்குக் காரணமும் அதுதான். தத்து கொடுத்த குழந்தை அவர்களோடு போய்விட்டால் சொத்தை அனுபவிக்கமுடியாதே! இப்போது அவளுடைய திட்டம், பிரசவம் பார்க்கும் மருத்துவச்சியைக் கையில் போட்டுக்கொண்டு, குழந்தையை அப்புறப்படுத்துவது.

எதிர்பார்த்தபடியே ஒரு நாள் குழந்தை பிறந்தது. பெற்றெடுத்தவள் சற்று நேரம் மயக்கமுற்றாள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு இருவரும் அந்தக் குழந்தையைத் தூக்கிக்கொண்டுபோய் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில், யாரும் காணாத இடத்தில் போட்டுவிட்டுத் திரும்பிவிடுகின்றனர். இரண்டு கண்கள் இதையெல்லாம் உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை. திரும்பியவுடன் ஒரு குட்டி நாயைப் பிடித்து தோலை முழுமையாக உரித்து அதைத் துணியிலே நன்றாகச் சுற்றிக்கொண்டு வந்து மயக்கமாக இருக்கும் பெண்ணுக்கு அருகில் வைத்து விடுகிறார்கள். சின்னஞ்சிறு நாய், தோல் உரித்தெடுத்தப் பின்னர் குறைமாதக் குழந்தையைப் போலத் தோன்றும் போலும்.

மயக்கம் தெளிந்து எழுந்தவள், தனது அருமைக் குழந்தையைக் காணும் ஆவலுடன் திரும்பினாள். பேரதிர்ச்சியடைந்தாள். துயரத்தில் மூழ்கி கண்ணீர் வடித்தாள். கதறி அழுதாள். குழந்தை பிறந்த செய்தி கேட்டு வீடு திரும்பிய கணவனும் உடன் சேர்ந்து அழுது தீர்த்தான். பாவம், இருவரும் உடைந்துபோனார்கள்.

அந்தத் துயரமான வேளையில் அவர்கள் வீட்டு வாசலிலே ஒரு பழுப்பு வண்ண நாய் வந்து நின்றது. துயரில் தலை கவிழ்ந்துக் கிடந்த கணவனுடைய அருகில் சென்று தன் முன் கால்களால் அவனைப் பற்றி இழுத்தது. அது அவனை வெளியே கூப்பிடுகிறது என்று தெரிந்து அவனும் அதன் கூடவே சென்றான். நாய் அவனது வீட்டுக்குப் பக்கத்திலே உள்ள ஒரு தோப்பின் இடையில் உள்ள தன் தங்குமிடமான ஒரு மர இடுக்கின் இடையில் ஓடியது. அங்கே ஓர் அழகிய குழந்தை கை, கால்களை ஆட்டி உதைத்து அழுதுக்கொண்டிருந்தது. அண்ணன் ஆசையுடன் அந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டான். அவனுக்கு உண்மைப் புலப்பட்டுவிட்டது. தன் குழந்தையைத் தன் தம்பி மனைவியும், மருத்துவச்சியும் சேர்த்து சதி செய்து போட்டு விட்டிருக்கிறார்கள். நாய்தான் அதைக் கண்டெடுத்து காப்பாற்றியிருக்கிறது.

வீடு திரும்பினான். தானும் தன் மனைவியும் எப்பொழுதாவது சிறிதளவு உணவு கொடுக்கும் அந்த நாயை நினைத்து நன்றியால் கண்கள் வழிந்தான். நாலு கால் பிராணிக்கு உள்ள நேயமும் நேர்மையும் தன் தம்பி மனைவிக்கு இல்லையே என்று கொதித்தான். ஊர் நாட்டாண்மையிடம் சென்று புகார் உரைத்தான். ஊரே இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தது. அவளையும் மருத்துவச்சியையும் தண்டிக்க குரல் கொடுத்தது. அவர்கள் இருவரும் தண்டிக்கப்பட்டார்கள். நன்றியுடன் குழந்தையை மீட்டெடுத்துக்கொடுத்த அந்த நாயை ஆச்சரியத்துடன் போற்றிப் புகழ்ந்தார்கள்.

குழந்தை மறுபடி கிடைக்கப்பெற்ற தாயின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தங்கள் குடும்பத்துக்கு ஒரு வாரிசு வந்துவிட்டது. தங்கள் வீட்டில் ஓர் ஒளிவிளக்கு ஒளிரத் துவங்கிவிட்டது. தங்கள் வாழ்க்கையில் இதுவரை இருந்துவந்த இருளும் இறுக்கமும் மறைந்து விட்டது என்று மகிழ்ந்தாள். அனைத்துக்கும் காரணமான அந்த நாயை நினைத்து நினைத்து நெகிழ்ந்தாள். அந்த நாய்க்கு தான் காட்டும் நன்றியின் அடையாளமாகத் தன்னுடைய குழந்தைக்கு ஒரு தொப்பி செய்தாள். அந்தத் தொப்பியின் வடிவம் நாய்முகத் தோற்றத்தில் அமைந்திருந்தது. அந்தத் தொப்பியை அணிந்த அந்தப் பிள்ளை எங்கு சென்றாலும் அதைப் பார்த்தவர்கள். “அதோ… நாய் மீட்டெடுத்த குழந்தை” என்று கூறுவார்கள்.

பின்னர் அக்குழந்தை அணிந்த தொப்பிக்கு ‘மவுசு’ ஏற்பட்டு விட்டது. எல்லாக் குழந்தைகளும் அதைப் போன்ற தொப்பியை அணிய ஆசைப்பட்டனர். எல்லாக் குழந்தைகளும் இப்பொழுது “நாய்த் தொப்பியை” அணிந்துக் கொண்டு மகிழ்ச்சியோடு உலா வருகின்றார்கள். நாயின் நன்றியுணர்ச்சிக்கு நன்றி தெரிவிக்கும் அடையாளமாக இன்று அந்தத் தொப்பி மாறிவிட்டது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 புலிமுகச் சப்பாத்துகள்

சீன இதிகாசக் கதைகள் / 6

0f889dd38d9cad9b9b4c2a8d5caa0d56புலிமுகச் சப்பாத்துகளை சீனாவின் கிராமங்களில் சிறுவர்கள் அணிந்துச்செல்வதை இப்பொழுதுகூட நாம் பார்க்கலாம். இந்தச் சப்பாத்துகள் துணியினால் செய்யப்படுபவை. ஆனால் அதன் முகப்புப் பக்கம் அதாவது கால் விரல்கள் வைக்குமிடத்தின் வெளிப்புறத் தோற்றம் தோலினால் புலிமுகத்தைப் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்தச் சப்பாத்துகளுக்கு அவ்வளவு கிராக்கி. இதற்குப் பின்னால் விறுவிறுப்பான கதை ஒன்று இருக்கிறது.

முன்னொரு காலத்தில் சீனாவில் பிரபலமாக அறியப்பட்ட சீமைகளில்  ஒன்று யாங்ஷு. பழமையான இந்த நகரத்தில் பிங்யாங் என்ற படகோட்டி வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் பெருந்தன்மையும் பிறருக்கு உதவும் உள்ளமும் கொண்டவன். ஒரு தடவை தன் படகில் பயணம் செய்த பெண் பயணி ஒருத்தி அவனுக்கு அன்பளிப்பாக ஓவியம் ஒன்றைக் கொடுத்துச் சென்றாள். அந்த ஓவியம் மிகவும் அழகாக வரையப்பட்டிருந்தது.

அச்சித்திரத்தில் பேரழகியான ஒரு பெண், ஒரு புலிமுகச் சப்பாத்துக்கு அதன் முகத்தை உருவாக்குவது போல வரையப்பட்டிருந்தது. படகோட்டி இந்த ஓவியத்தை தன் படுக்கையறையில் தன் தலைக்கு நேராக மாட்டி வைத்துக் கொண்டான். காலையில் கண் விழிக்கும்போது, அன்பு மனைவியைப் பார்ப்பது போல அந்த ஓவியத்திலுள்ள பெண்ணை காதல் ததும்பப் பார்ப்பான். அவன் நெஞ்சில் ஆசை அலைகள் எழும்பும். வேலை முடித்து வீடு திரும்பியதும் அச்சித்திரத்தைப் பார்ப்பான். உறங்கும்போதும் அந்தச் சித்திரத்தைப் பார்த்துக் கொண்டே உறங்குவான்.

ஒரு நாள் இரவு கவிந்த வேளையில் பிங்யாங் வீட்டிலே ஓய்வாக தன் படுக்கையிலே படுத்த வண்ணம் அந்த ஓவியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது ஓவியப் பெண் உயிர் பெற்று வந்தாள். பிங்யாங் வியப்பிலும் உவகையிலும் ஆழ்ந்தான். அந்தப் பெண் அவனருகே வந்தாள். பனி கொட்டும் பூவைப் போல இருந்தாள். தண்ணீரில் மீன்கள் புரள்வது போல அவள் கண்கள் புரண்டன. நீண்ட கூந்தல் ஒரு பேரலையைப் போல எழுந்து அவனைப் புரட்டிப்போட்டது. அவன் காமச் சாகரத்தில் அடித்துச் செல்லப் பட்டான்.

ஒவ்வொரு நாள் இரவும் அவள் ஓவியத்திலிருந்து எழுந்து வருவாள். இரவு முழுவதும் அவனோடு இருந்து அவனை ஆட்கொண்டாள். புதிதாக அரிந்தெடுத்த அத்திப் பழ இதழ்களால் அவள் முத்தங்கள் பதிப்பாள். அவள் அவனின் ஒவ்வொரு அசைவிலும் ஆலிங்கத்திலும் ஒரு குழந்தையைப் போல மகிழ்வான். தன்னை மறந்து உறங்கி போவான்! காலை விடிவதற்கு முன்பு அவளும் இவனிடமிருந்து பிரிந்து மீண்டும் ஓவியத்தில் போய் அமர்ந்து விடுவாள்.

இருவரின் இன்ப உறவில் ஒவியப் பெண் கர்ப்பம் தரித்தாள். ஓர் அழகிய ஆண் குழந்தையைப் பெற்றுக்கொடுத்து, பிங்யாங்கை வளர்க்கச் செய்தாள். இரவு வந்தால் ஓவியப் பெண் வந்து தன் குழந்தையைக் கொஞ்சுவாள், சீராட்டுவாள். குழந்தை தன் தாயோடு ஒட்டிக்கொண்டு மகிழ்ச்சியுறும்; தன் தாயின் முகம் பார்த்து குதூகலிக்கும். இவ்வாறு காலங்கள் ஓடின. குழந்தையாய் இருந்தவன் இப்பொழுது இளஞ்சிறுவனாகிவிட்டான்.

அவர்களுடைய இன்ப வாழ்க்கையில் ஒருவன் குறுக்கிட்டான். அவன் அந்த நகரத்தில் அதிகாரம் கொண்ட அதிகாரி. பிங்யாங் ஓவியம் பற்றி கேள்விப்பட்டு அதை அவன் கைப்பற்றிக்கொண்டான். பாவம், பிங்யாங் மிகவும் துயரப்பட்டான். தன் ஆசை மனைவியை இழந்து தத்தளித்தான். அவனுடைய அருமை மகனும் தாயைப் பிரிந்து துடியாய் துடித்தான். தனது தாயைக் கண்டுபிடித்துத் தீரவேண்டுமென்று பிடிவாதம் பிடித்தான். அம்மா வெளியூர் சென்றிருக்கிறாள் என்று சொல்லிப் பார்த்தான். ஆனால் மகன் விடுவதாகயில்லை. சரி, எதையாவது சொல்லி வைப்போமென்று அவள் மேற்கு எல்லைக்கு போனதாக சொன்னான் பிங்யாங்.

மகன் உடனே தன்  தாயைப் பார்ப்பதற்கு மேற்கு எல்லைக்கு புறப்பட்டுச் சென்றான். மிக நீண்ட பயணம். பல பகல்கள், இரவுகள் கழிந்தபிறகு, எத்தனையோ ஊர்களை, நதிகளை, வயல்வெளிகளை, காடுகளைக் கடந்தபிறகு மேற்கு எல்லையில் ஒரு காட்டுப்பகுதிக்கு வந்து சேர்ந்தான். அங்கே தன் தாயை அவன் கண்டுகொண்டான். ஆம், அவள் அங்குள்ள தாமரைக் குளத்தில் அவளைப் போன்ற தேவதைப் பெண்களுடன் நீராடிக் கொண்டிருந்தாள்.

தன் தாயிடம் ஓடோடிச் சென்றான். தன் தாயை அப்படியே தழுவிக் கொண்டாள். தாயும், “என் அருமை மகனே என்னைத் தேடி எவ்வளவு பெரிய பயணத்தை மேற்கொண்டு இங்கே வந்திருக்கிறாய்?” என்றாள். இதைச் சொல்லும்போது அவளையறியாது அவள் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. அது மகனின் கன்னங்களில் உருண்டது.

“மகனே. . . . நீ ஊருக்குப் புறப்பட்டுப் போ. உன்னைப் பிரிந்திருப்பது எனக்கு எவ்வளவு துன்பமானது என்பதை நீயறிவாய். நாம் மறுபடியும் சேரவேண்டுமானால் நான் சொல்கிறபடி நடந்துக்கொள்” என்றார். மகனும் “அம்மா. . . என்ன செய்ய வேண்டும்… சொல்லுங்கள்” என்றான்.

“நீ நேராக அந்த அதிகாரியின் படுக்கையறைக்குச் செல். அங்கு தான் அந்த ஓவியம் உள்ளது. அந்த ஓவியத்தில் நான் உனக்காக செய்து வைத்த ஒரு ஜோடி சப்பாத்துகள் இருக்கும். அவற்றை நீ எடுத்து அணிந்துக்கொள். அதுவரை நீ என்னை பார்க்கமுடியாது. இப்பொழுது நீ உன் கண்களை மூடிக்கொள். வீட்டுக்கு உன்னை அனுப்பிவைக்கிறேன்” என்றாள்.

மகன் கண்களை மூடி நின்றான். மீண்டும் கண்களைத் திறந்தபோது வீட்டில் இருந்தாள்.

அதன் பிறகு, அவன் அந்த அதிகாரிக்குச் செய்தி அனுப்பினான். அவனால் அந்த ஓவியத்திலுள்ள அழகுப் பெண்ணை உயிர் உருவமாக எழுப்பச் செய்ய முடியும் என்று கூறினான். இதைக் கேட்ட அந்த அதிகாரி ஆர்வத்தோடு அவனை அழைத்து வரச் சொன்னான். அந்த அதிகாரியின் வீட்டுக்கு மகன் நுழைந்து நேராக அவனுடைய படுக்கையறைக்குச் சென்றான். அங்கே அந்த ஓவியம் இருந்தது. அந்த ஓவியத்தில் காட்சியளித்த தன் தாயைப் பார்த்தான். பின்னர் தன் தாய் செய்து வைத்திருந்த சப்பாத்துக்களை கை நீட்டி எடுத்துக் கொண்டான். தாமதமின்றி அணிந்துக்கொண்டான். தன் தாயின் உயிர்ச்சித்திரத்தையும் பார்த்து, “அம்மா, வாங்க, போய் விடலாம்” என்றான். அவனது தாய் அந்த ஓவியத்திலிருந்து எழுந்து வந்தாள்.

அதிகாரி அவளைப் பார்த்ததும் அப்படியே மலைத்துப் போனான். உடனே அவர்களைத் தடுத்து நிறுத்தினான். மங்கையும் மகனும் அவனிடமிருந்து விலகிச்செல்ல முயன்றனர். அவனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. வலுக்கட்டாயமாக அவளைப் பற்றி இழுத்திடப் பாய்ந்தான். ஆனால், அவளது மகனோ, அவனைக் குப்புறத் தள்ளிவிட்டான். சின்னஞ் சிறியவன் தன்னை என்ன செய்யமுடியுமென்று திமிரோடு அந்த அதிகாரி எழுந்தான். மகனைத் தாக்கினான். மகன் அணிந்திருந்த மாய சப்பாத்துகள், ஆம் அந்தப் புலிமுக சப்பாத்துகள் அவனுக்கு இந்தச் சண்டையில் மிகவும் ஆச்சர்யப்படத்தக்க வகையில் உதவின. சப்பாத்துகள் சட்டென்று பெரிய உருவமெடுத்தது. சிறுவனுடைய கால்களுக்குக்கீழே ஒரு பெரிய புலி கர்ஜனை செய்தபடி அந்த அதிகாரி மேல் பாய்ந்தது. அவ்வளவுதான், அந்த அதிகாரி வீழ்ந்தான்.

நகரம் முழுவதும் அந்த அதிகாரி உதவிக் கேட்டு கெஞ்சிய ஈனக்குரலும், புலியின் பயங்கரமான உறுமல் ஓசையும் கேட்டது. மக்கள் திகைத்தனர். திகிலோடு ஓடிவந்தனர். உண்மையைத் தெரிந்துக் கொண்டார்கள். பெண்ணைக் காப்பாற்றிய அந்தப் புலியை அவர்கள் புகழ்ந்தார்கள்.

இருவரும் வீடு திரும்பினார்கள்.  பிங்லாங் தனக்கு மிகவும் வினோத ஆற்றல் வாய்ந்த மனைவியும், பராக்கிரம மகனும் கிடைத்திருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியில் திளைத்தாள்.

அதுமுதல் அந்த நகரத்து மக்கள் புலி முகம்கொண்ட சப்பாத்துகளை அணியலானார்கள். அப்படி அணிவதால் தங்களின் குடும்பத்துக்கு,  குடும்பப் பெண்களுக்குப் பாதுகாப்பு ஏற்படும் என்று நம்பிக்கைக் கொண்டார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சுவர்க்கத்துக்கு ஒரு பயணம்

சீன இதிகாசக் கதைகள் / 7

fire12சீனாவில் ஏதோ ஒரு காலத்திலே, எங்கோ ஒரு ஊரில் மூன்று பேர் இருந்தார்கள்; இந்த மூன்று மனிதர்களின் பெயர்களும் ஒன்றே! ஆம், மூவரின் பெயரும் ஜென்ஜியா என்பதாகும்!

ஒரு ஜென்ஜியா அங்குள்ள தொன்குடியினரின் தலைவன். அடுத்தவன் அவன் வீட்டு சமையற்காரன். இன்னொருவன் அந்த ஊர் தச்சன்! தச்சனுக்கு வாய்த்த மனைவியோ பேரழகி. குணத்திலேயும் அவள் தங்கம்! ஒழுக்கத்தை உயிராக நினைக்கும் உத்தமி!

இந்தப் பேரழகி, சமையற்காரன் ஜென்ஜியா கண்ணிலே எப்படியோ பட்டுவிட்டாள். அவளை நினைத்தே இரவும் பகலும் ஏங்கினான் அந்தச் சமையற்காரன். ஆனால் அவள் அவனை அலட்சியம் செய்தாள். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்தாள்.

சமையற்காரனுக்கு வழி ஒன்றும் புலப்படவில்லை. அந்தத் தச்சனை ஒழித்துக்காட்டினால் தான் இந்தப் பேரழகியை நெருங்கமுடியும் என்று நினைத்தான். அதற்காக வாய்ப்புக்காக காத்திருந்தான்!

ஒருநாள் தொல்குடித் தலைவனான ஜென்ஜியாவின் தந்தை மரணமடைந்தான். அவனுக்குச் செய்யவேண்டிய இறுதிக் கடமைகளை, மறுஉலகத்துக்கு ஏற்பாடுகளை எல்லாம் தலைவன் ஜென்ஜியா மிகவும் உருக்கமாகச் செய்துக்கொண்டிருந்தான். அப்பொழுது திருமறைச் சுவடிகளை எல்லாம் சமையற்கார ஜென்ஜியா அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான். அந்த கால திருமறை வசனங்களைப் படிப்பதில் இவனுக்குத் திறமை இருந்தது. தூய சீனமொழியிலே அமைந்த வாசகங்கள் பேச்சு சீன மொழிபோல் இருக்காது! நம் சங்கத் தமிழ் போல் தூய்மையாக இருக்கும்! இதில் ஒரு ஏட்டை அவன் எடுத்தபோது அவனுக்கொரு யுக்தி தோன்றியது.

ஆம், பண்டைய சீனமொழி நடையில் தொன்குடித்  தலைவனின் இறந்துபோன தந்தை எழுதுவதுப் போல எழுதி, அடுக்கி வைத்த திருமறைச் சுவடிகளில் வைத்துவிடவேண்டும். பிறகு அதை எடுத்து தலைவனிடம் காட்ட வேண்டும். அதை வைத்து அந்தத் தச்சனை மாட்டிவிட வேண்டும் என்பது அவன் திட்டம்!

இறந்துபோன தந்தை தன் மகனுக்கு எழுதுவதுபோல் எழுதியிருந்தான்.

“அருமை மகனே… நான் இறந்த பிறகு என்னைச் சுவர்க்க உலகுக்கு அழைத்துப்போனார்கள். நான் உலகில் வாழ்ந்திருந்தபோது செய்த நன்மைகளால் என்னைச் சுவர்க்க உலகில் ஓர் அதிகாரியாக நியமித்திருக்கிறார்கள். ஆனால் எனக்கு அலுவலக மாளிகை கிடைக்கவில்லை. அலுவலக மாளிகையை நிர்மாணிக்க இங்கே கொத்தனார்கள் இருந்தாலும் கதவுகள், ஜன்னல்கள் செய்யவும், அலுவலகத்துக்கு வேண்டிய மேஜை, நாற்காலிகள், மற்றும் நான் தங்கும் இடத்தில் சாப்பாட்டு மேஜை, கட்டில் என்று எதுவும் செய்ய ஆள் இல்லை! என்னவோ தெரியவில்லை, தச்சர்கள் யாருமே சுவர்க்கத்துக்கு வருவதில்லை போலும்! அதனால் என் அருமை மகனே, எனக்காக நமது ஊர் தச்சன் ஜென்ஜியாவை இங்கே அனுப்பி வை, வேலை முடிந்ததும் திருப்பி அனுப்பிவிடுகிறேன்.” என்று அந்த ஏட்டில் எழுதி வைத்தான்.

ஒருநாள் சமையற்காரன் தலைவன் ஜென்ஜியாவிடம் “ஐயா, நான் இந்த திருமறை ஏடுகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த போது புதியது போல தோன்றிய ஏடு ஒன்றும் இருந்தது. ஆனால் அதன் மொழிநடை புரியவில்லை. ஏதேனும் முக்கியமாக இருக்குமோ என்று உங்களுக்கு காட்ட வந்தேன்” என்றான்.

தலைவன் ஜென்ஜியா அதை வாங்கிப் பார்த்தான். தொல்சீர் மொழி நடையில் இருந்ததால் அவனுக்குப் புரியவில்லை. சரி, இதன் பொருள் என்னவென்று தெரிந்துகொள்ள இதையெல்லாம் படிக்கத் தெரிந்த தன் செயலாளருக்கு அனுப்பி வைத்தான். அவர் இவனிடம் வந்து வரிக்கு வரி, சொல்லுக்குச் சொல் பொருள் கூறி இந்தக் கடிதத்தை ஒப்படைத்தார்.

தலைவன் ஜென்ஜியாவுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது, தன்னுடைய தந்தை சுவர்க்க உலகில் நல்ல நிலையில்தான் உள்ளார் என்பதை அறிந்துகொண்டதிலும், அவர் தன்னிடம் ஒரு தச்சனை அனுப்ப கோரிக்கை விடுத்ததிலும் உற்சாகம் கொண்டான். உடனே அந்த ஊரிலேயே இருந்த ஒரே தச்சனான ஜென்ஜியாவை அழைத்துவரச் சொன்னான். அவனிடம் தனது தந்தையின் அழைப்பின்படி சுவர்க்க உலகுக்கு அவன் செல்லவேண்டும் என்று கட்டளை இட்டான்.

தச்சன் ஜென்ஜியா ஆடிப் போய்விட்டான். அதே சமயம் தங்கள் தலைவன் சொல்வதைத் தட்டவும் முடியாது. என்ன செய்யலாம்? கொஞ்ச நாள் அவகாசம் கேட்டு வைக்கலாம். அதற்குள் ஏதாவது செய்தாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, தலைவனான ஜென்ஜியாவிடம், “ஐயா… உங்கள் உத்தரவை எப்படி மறுப்பேன்… அதுவும் உங்கள் தந்தையாருக்குப் பணிசெய்வதற்கு தயங்குவேனோ? இல்லை… எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது. ஏழு நாள்கள் மட்டும் பொறுங்கள். அதற்குள் என் குடும்பத்துக்காக செய்ய வேண்டிய வேலைகளை முடித்துவிட்டு வருகிறேன். ஏழு நாட்கள் கழிந்த பின்னர் நமது ஊரில் வழக்கமாகப் பலி கொடுக்கின்ற இடத்தில் என்னை சுலர்க்கலோகம் அனுப்புவதற்கு நெருப்பு மூட்டுவதற்காக விறகுகளைத் தயார் செய்யுங்கள்; வந்து விடுகின்றேன்” என்றான். தலைவனும் அவன் பேச்சில் திருப்தியுற்று அவனை ஒரு வாரம் கடந்ததும் வரச்சொல்லி அனுப்பிவிட்டான்.

ஜென்ஜியா வீட்டுக்கு வந்தான். தன் மனைவியிடம் நடந்ததைச் சொன்னான். யாரோ தனக்கெதிரானவரின் சதியாகவே இதை நினைத்தான். இது குறித்து துப்பறிந்தான். அவனுக்குக் கிடைத்த செய்தியில் அவன் மனைவிமேல் சமையற்காரன் பித்துப்பிடித்துக் கிடப்பது தெரிந்தது. தன்னை ஒழித்துக்கட்ட அவனே இந்தச் சூழ்ச்சியைச் செய்திருக்கிறான் என்பதை ஜென்ஜியா தெரிந்துகொண்டான். ஆபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள திட்டம் வகுத்தான்.

தன் மனைவியிடம் ஜென்ஜியா திட்டத்தை விவரித்தான். தன் வீட்டிலிருந்து பலி கொடுக்கும் இடம் வரை ரகசியமாக ஒரு சுரங்கவழியைத் தோண்ட வேண்டும். அதற்கே இந்த ஒரு வாரம் ஓடிவிடும். அதன் பின் பலிகொடுக்கும் இடத்தில் புகை அடர்த்தியில் யாரும் சரியாகப் பார்க்கமுடியாத நிலையில் இவன் அதே இடத்திலுள்ள ரகசியமான சுரங்கவாயிலில் நுழைந்து அதை அடைத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடவேண்டும். வீட்டிலும் தங்கி விடாமல் வீட்டின் கீழ் உள்ள சுரங்கப் பகுதியிலே அடைப்பட்டுக்கிடக்க வேண்டும். ஓராண்டுக்குப் பிறகு மற்றதைப் பார்த்துக்கொள்ளலாம் என்றான்.

திட்டமிட்டப்படி அவனும் அவன் மனைவியும் அவர்கள் படுக்கை அறையின் தரைப் பகுதியிலிருந்து தோண்டி மண்ணை எடுத்து, வழி ஏற்படுத்தினார்கள். சரியான திசையில் சுரங்கம் தோண்டப்பட்டது. மிகச் சரியாக “பலிகொடுக்கின்ற இடம்” வரை சுரங்கம் தயார் ஆனது.

பலி கொடுக்கின்ற நெருப்பு வளர்க்கின்ற பெரிய குழி இருக்கும் பகுதியில் சற்று தள்ளி புதர்கள் மண்டிக் கிடந்தன. அந்தப் புதர்கள் உள்ள இடத்தில்தான் இவன் சுரங்கத்தின் ஒரு வாயிலை ஏற்படுத்தியிருந்தான். புதர்களின் மறைவில் அந்தக் குழி தெரியவில்லை!

குறிப்பிட்ட தினம் வந்தது. சமையற்காரனிடம் எச்சரிக்கையாக நடந்துகொள் என்று தன் மனைவியிடம் கூறிவிட்டு தலைவன் ஜென்ஜியாவிடம் வந்தான். தலைவன் ஜென்ஜியா அவனை அன்புடன் வரவேற்றான். தன் தந்தைக்காக ‘சுவனம்’  செல்பவன் என்று அவனை எண்ணித் தழுவிக்கொண்டான். பின்னர் இருவரும் ஊர் மக்கள் திரண்டிருந்த பலி கொடுக்கும் இடத்துக்கு வந்தார்கள். அங்கே சமையற்காரன் ஜென்ஜியாவும் இருந்தான். அவன் கண்களில் மகிழ்ச்சி தென்பட்டது.

விறகுகள் கொழுந்துவிட்டு எரிந்தன. மேலோகம் போவதற்காக ‘சுலோகங்கள்’ சொல்லப்பட்டன. தலைவன் ஜென்ஜியா தச்சு வேலைக்குரிய கருவிகள் கொண்ட பெட்டியை தச்சன் ஜென்ஜியாவிடம் கொடுத்து அவன் தோளிலே மாட்டிக்கொள்ளச் சொன்னான். இன்னொரு பையிலே அவனது ஆடைகளை வைத்து கையிலே எடுத்துக்கொள்ளச் சொன்னான். பின் பற்றி எரிகின்ற விறகுகளினிடையே அமைக்கப்பட்ட இருக்கையில் போய் படுக்கச் சொன்னான்.

சுற்றி எரியும் நெருப்பைப் பார்த்தப்படி கொஞ்சம் பயத்தோடு தச்சன் ஜென்ஜிஜா முன்னேறினான். இப்பொழுது மந்திரங்கள் வேகமாக முழங்கின. விறகுகளை கொண்டுவந்து நெருப்பில் போட்டனர். நெருப்பு ‘திகுதிகு’ என்று எரிந்தது. புகை அடர்த்தியாகப் பரவியது. ஒவ்வொருவரும் கண் எரிச்சலில் கண்களைக் கசக்கிக்கொண்டனர். தச்சன் ஜென்ஜியா யாரும் அறியாமல் சட்டென்று அந்த இடத்தைவிட்டு அகன்றான். புதரில் போய் படுத்தான். அப்படியே உருண்டுக்கொண்டே சுரங்கக் குழியில் விழுந்தான். அவனை யாருமே பார்க்கவில்லை!

நெருப்புக்கொழுந்துகள் நீண்ட நாக்குகளை நீட்டி நீட்டி உயர்ந்தன. யாருமே எட்டிப்பார்க்கக்கூட முடியாத அளவுக்கு வெப்பமும் நெருப்பின் உக்கிரமும் இருந்தது. சமையற்காரன் தயாராக இருந்தான். ஒருவேளை தச்சன் அழுது புலம்பி தன்னை விட்டுவிடும்படி கேட்டுக்கொண்டால் என்ன செய்வது என்று முன்னெச்சரிக்கையுடன் அவன் ஒரு திட்டம் போட்டு வைத்திருந்தான். அவன் அழுகையோ குரலோ கேட்கமுடியாதபடி முரசுகளை ஓங்கி ஒலிக்கச் சொன்னான். அவனோ மேலுலகம் செல்கிறான். அவனுக்கு அப்படித்தான் ஒரு மரியாதை செய்யவேண்டும் என்று அங்குள்ள கூட்டத்தாரிடம் விளக்கம் சொன்னான்.

நின்றெரிந்த நெருப்புத் தணிந்தது. நெருப்பை அணையவிட்டு அந்த இருக்கையை ஓடிப்போய் பார்த்தார்கள். இருக்கை முழு சாம்பலாக இருந்தது. சரி… தச்சன் சுவர்க்கம் போய்விட்டான் என்று மக்கள் நம்பி வீடு திரும்பினர். சமையற்காரன் ஜென்ஜிஜா முழு உற்சாகத்தோடு, தன் திட்டம் வெற்றிபெற்ற மகிழ்வில் வீடு சென்றான்.

திட்டப்படி, தச்சன் ஜென்ஜிஜா சுரங்க அறையில் பதுங்கியிருந்தான். அவன் மனைவி அவனுக்குச் சமைத்து எடுத்துக்கொண்டு போய் தங்களின் படுக்கையறைக்குக் கீழுள்ள சுரங்கப் பகுதியில் தன் கணவனுக்கு உணவளிப்பாள். யாரும் இதை அறியவில்லை. இப்படியே ஓராண்டுகள் ஓடின.

இந்த ஓராண்டில் சமையற்காரன் பலமுறை தச்சன் பெண்டாட்டியைத் தேடிச் சென்றான். பசப்பு வார்த்தைகள் பேசினான். பாசத்தைக் கொட்டினான். சில சமயங்களில் காதல் மொழிகளையும் பேசினான். ஆனால் அவளோ தொடர்ந்து அவனை வெறுத்து ஒதுக்கி வந்தாள். சில சமயம், தொந்தரவு கொடுக்கின்ற கோழிகளையோ வாத்துக்களையோ மிரட்டுவதாக பாவனை பண்ணிக்கொண்டு, “என்கிட்டே ஏதாவது வச்சிக்கிட்டே உன் தலையை அறுத்துப்புடுவேன்” என்று அரிவாளைக் காட்டுவாள்!

ஓராண்டு முடிந்த பிறகு ஒரு நாள் தச்சன் ஜென்ஜியா ஊர்த் தலைவன் ஜென்ஜியாவிடம் சென்றான். சுரங்கத்துக்குள்ளேயே ஓராண்டு முழுவதும் இருந்ததால் வெளியே சென்று வேலைகள் எதுவும் செய்யாததனால் இப்பொழுது தச்சன் ஜென்ஜியா வெயில் படாமல் வெளுத்திருந்தான். சதைப் போட்டு ஜம்மென்று இருந்தான். ஊர்த் தலைவன் ஜென்ஜியா அவனிடம், “உங்கள் தகப்பனாருக்கு குறை எதுவுமில்லை. நன்றாக இருக்கின்றார். நான் அவருடைய வீட்டுக்கு ஆக வேண்டிய எல்லா தச்சு வேலைகளையும் செய்து கொடுத்துவிட்டேன். ரொம்பவும் திருப்தி என்றார். ஆனால் என்ன குறையென்றால். அவர் உங்கள் வீட்டு சாப்பாட்டுக்காக ஏங்குகிறார். அங்கே அதுப்போல சமைக்க ஆளில்லை. உங்களிடத்தில் சொல்லி ஒரு சமையற்காரனை, அட நம்ம சமையல் ஜென்ஜியாவை அனுப்பிவைக்கச் சொன்னார்” என்றான்.

தலைவன் ஜென்ஜியாவுக்கும் சமையற்காரன் ஜென்ஜியாவுக்கும் அவன் சொல்வது உண்மையாகப்பட்டது. தச்சன் ஜென்ஜியா தளதளவென்று தக்காளி மாதிரி வந்திருக்கிறான். சுவர்க்கத்தின் புஷ்டி உணவும் வானிலையும் காரணமாக இருந்திருக்குமோ?

எப்படியோ, சமையல்காரன் ஜென்ஜியாவை அனுப்ப முடிவெடுத்தான் தலைவன் ஜென்ஜியா. முன்பு போலவே ஒரு நாள் குறிக்கப்பட்டது. தாரை தப்பட்டங்கள் முழங்கின. விறகுகள் நெருப்பைக் கக்கின. புரண்டெழுந்த நெருப்பு ஜுவாலைகளுக்கிடையே சமையற்காரன் ஜென்ஜியா போனான். சில விநாடிகள்தாம். பலி இருக்கையில் எரிந்த சமையற்காரனின் எலும்புகள் கரியாகிக் கிடந்தன!

சமையற்காரன் ஓராண்டில் திரும்பிவிடுவான் என்றுதான் எல்லோரும் நினைத்தனர். ஆனால் அவன் வரவேயில்லை. தச்சன் தன் மனைவியுடன் பழையபடி மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவரத் தொடங்கினான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 மாண்டவள் பெற்ற மைந்தன்

சீன இதிகாசக் கதைகள் / 8

PM EDELWISE HOLIDAY WHITE_001AAஹான் மன்னன் பரம்பரை ஆட்சிக் காலத்தில் ‘டான்’ என்பவர் இருந்தார். அவர் ஒரு படிப்பாளி. நாற்பது வயது ஆகியும் திருமணம் புரிந்துகொள்ளவில்லை!அவர் அடிக்கடி அந்நாட்டு காதல் பாடல்களை விரும்பிப் படிப்பது வழக்கம். தனிமை வாழ்வின் தவிப்பை அப்போது அவர் உணர்வார்!

ஒருநாள் நட்ட நடு இரவில் ஓர் அழகிய இளம்பெண் அவர் முன்னே தோன்றினாள். பளபளப்பான ஆடைகள் அணிந்திருந்த அந்தப் பெண் சற்று தடுமாறிய நிலையில் தன் முகத்தை நேரடியாகக் காட்டமல் நின்றுகொண்டிருந்தாள். “என்னைத் திருமணம் செய்துகொள்ளுங்கள்” என்றாள் அவள். முகத்தையும் உருவத்தையும் தெளிவாகப் பார்க்கமுடியாததால் டான் தயங்கினார். ஆனாலும், வயதான காலத்தில்  வலிய வரும் திருமண விண்ணப்பத்தை ஏன் தட்டிவிடவேண்டுமென்ற எண்ணமும் அவருக்கு ஏற்பட்டது.

அப்போது அந்தப் பெண் பேசினாள். “ஒரே ஒரு நிபந்தனை. அதை நீங்கள் மீறக் கூடாது. என்மீது விளக்கின் வெளிச்சத்தைக் காட்டக்கூடாது. என் உருவத்தை எக்காரணத்தைக் கொண்டும் பார்த்துவிட முயலக் கூடாது. இந்த நிபந்தனை முதல் மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே!” என்றாள்.

டான் இதற்கு ஒப்புக்கொண்டார். இருவரும் திருமணம் புரிந்துகொண்டனர். ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது. குழந்தை பிறந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ‘டான்’ தன் மனைவியை எப்படியாவது பார்க்கவேண்டும் என்று ஆர்வம் கொண்டார்.

ஒரு நாள் இரவு, அவள் உறங்கிக்கொண்டிருந்த வேளையில், டான் மெழுகுவர்த்தியை எடுத்து, அவள் உருவத்தைப் பார்த்தார். ஐயோ, கொடுமை! இடுப்புக்கு மேலே பொலிவுடைய பெண் ஒருவரைக் கண்டார்! ஆனால், இடுப்புக்குக் கீழே வெறும் எலும்புகளே இருந்தன. அவர் அதிர்ச்சியுற்று அசைவற்று நின்றபோது அதே நேரம், அவள் கண்விழித்தாள். “நிபந்தனையை மீறிவிட்டீர்களே. இன்னும் ஓராண்டு பொறுத்திருந்திருக்கக்கூடாதா? அப்படி இருந்திருந்தால் இடுப்பு வரை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த உடலின் தசைகள் இடுப்புக்குக் கீழே கால்களிலும் வளர்ந்திருக்கும்! நானும் முழு பெண்ணாக ஆயிருப்பேன். இப்போது எல்லாம் நாசமானது” என்றாள்.

டான் அவளிடம் மன்னிப்புக் கேட்டான். தன்னுடைய தேவையற்ற அவசரம் இப்படியோர் நிலைக்கு தள்ளிவிட்டதே என்று வருந்தினான்.

“இதை மன்னிக்கமுடியாது. இனிமேல் நாம் நிரந்தரமாகப் பிரிந்துவிட வேண்டியதுதான். என்றாலும் நான் பெற்ற என் செல்வத்துக்காக பணவசதி செய்துதர வேண்டும். ஆகவே என்னுடன் நான் செல்கின்ற இடத்துக்கு வாருங்கள். அங்கே நீங்களும், என் மகனும் வாழ்வதற்காகஒரு ஏற்பாட்டை செய்து தருகின்றேன்.” என்றாள்.

அவ்வாறு அவள் அவனை ஒரு பெரிய மாளிகைக்குக் கூட்டிச் சென்றாள். முத்துக்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்த விலை உயர்வான கவுனை எடுத்து அவனிடம் தந்தாள்.

“இதோ இதை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் இருவரின் முழு வாழ்க்கைக்கும் தேவையான பொருள் இந்த கவுனை விற்றால் கிடைத்துவிடும்.” என்றாள்.

பின் அவன் அணிந்திருந்த மேல் சட்டையின் கையோடு கொஞ்சம் உடல் பகுதியையும் கிழித்தெடுத்துக்கொண்டு சட்டென மறைந்துபோனாள்.

டான் அந்த கவுனை எடுத்துக்கொண்டு கடைவீதிக்கு சென்றான். அங்கே அந்த வேலைப்பாடு மிக்க கவுனை சுய்யாங்கை சேர்ந்த குறுநிலத் தலைவன் வாங்க் என்பவருக்காக ஒருவர் விலை கொடுத்து வாங்க வந்தார். அவர் பெருமளவு பொற்காசுகளைக் கொடுத்து அந்த கவுனைப் பெற்றுக் கொண்டார். டான் மிகவும் மகிழ்ச்சியோடு வீடு திரும்பினான்.

வாங்க் அந்த கவுனை பார்த்தவுடனே, “ஆ, இது என் மகளின் கவுன்; அவளுடைய சவ அடக்கத்தின்போது இதைத் தான் அணிவித்து அடக்கம் செய்தோம். இதை விற்றவன் ஒரு புதைக்குழியைத் தோண்டித் திருடக்கூடிய மாபாதகனாக இருக்கவேண்டும். உடனே அவனைப் பிடிக்க ஏற்பாடு செய்யுங்கள்” என்றான்.

அந்த குறுநிலத் தலைவனின் கட்டளைப்படி காவலர்கள் டானை உடனே பிடித்து வந்தார்கள். டான் குறுக்கு விசாரனை செய்யப்பட்டான். டான் எவ்வளவோ சொல்லியும் வாங்க் அவனை நம்பவில்லை. இருந்தாலும் இவன் சொல்வதைச் சோதித்துப் பார்த்துவிடலாம் என்று கருதி  தன் மகளின் புதைகுழியை தோண்டிப் பார்ப்பதற்காகப் புறப்பட்டான். டானும் வாங்க்கும் நின்றுகொண்டிருக்க புதைகுழி தோண்டப் பட்டது.  என்ன ஆச்சர்யம், அவன் மகளின் சடலம் டானின் கையுடன் கூடிய சட்டைப் பகுதியை கையிலே வைத்திருந்தது. வாங்க் உண்மையிலே அசந்துவிட்டான். ஆனாலும் இன்னும் ஒரு சோதனையாக டானின் மகனை அழைத்து வரச் செய்தான்.

டானின் மகனின் முகம்கூட அவள் மகளின் முகத்தை ஒத்திருந்தது. புதை குழியில் இருந்த டானின் மனைவி பிணத்தை வெளியே வைத்ததும், டானின் இரண்டு வயதான மகன் ஓடிப்போய் “அம்மா” என்று கத்திக் கொண்டே தாயின் கன்னத்தோடு தன் கன்னத்தை இழைத்தான். அந்த இளம் பிஞ்சுவின் விழிகளிலிருந்து நீர் முத்துக்கள் உருண்டன.

இப்பொழுதுதான் வாங்க் உண்மையை அறிந்தான். டானின் கூற்று உண்மையென்று ஒப்புக்கொண்டான். தன் மகள் மரணமடைந்தப் பிறகு புதைகுழியிலிருந்து எழுந்துச் சென்று இவனை மணம் புரிந்திருக்கிறாள்! ஏதோ தெய்வ வரம் பெற்றிருக்கிறாள். ஆனால் பாவம், டானின் அவசர புத்தியால் தன் உடலை முழுமையாகத் திரும்பப்பெறும் வாய்ப்பை இழந்துவிட்டாள். நல்ல வேளை அவர்களுக்கு ஒரு குழந்தையாவது பிறந்ததே என்று ஆறுதல் பெருமூச்சு விட்டான் வாங்க்.

இப்பொழுது டானின் மகன் வாங்க் மாளிகைக்கு வந்துவிட்டான். வாங்க் டானிடம் அந்த கவுனை திரும்பக் கொடுத்துவிட்டாள். டானை தன்னுடைய சட்டரீதியான மருமகனாகவும் அவன் ஏற்றுக்கொண்டு விட்டான். டானின் மகனுக்கு பிற்காலத்தில் ஒரு பெரிய பதவியையும் அவன் ஏற்படுத்திக்கொடுத்தான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 இரண்டு கதைகள்

டோன் யோங்கின் மனைவி

tiger_outline_by_hadesgodofthedead-d3df7eoஹான் மன்னன் பரம்பரை ஆட்சி நடைபெற்ற காலத்தில் க்யான்செங் என்னும் ஊரில் டோன் யாங் என்றொருவன் இருந்தான். குழந்தையாக இருந்தபோதே இவன் தாய் இறந்துவிட்டாள். தந்தைதான் அவனை வளர்த்து வந்தார். டோன் யாங் வயல்களிலே வேலை செய்து தந்தையைக் காப்பாற்றி வந்தான். டோன் யாங் கடுமையான உழைப்பாளி. அவன் எங்கு வேலைக்குப் போனாலும் தந்தையை ஒரு தள்ளு வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வருவான். தந்தை இருக்கும் வண்டியை ஓரிடத்திலே நிற்கவைத்துவிட்டு இவன் வேலைகளைச் செய்வான். ஒரு நாள் பாவம், அவன் தந்தை இறந்துவிட்டார்.

சவ அடக்கம் செய்வதற்கு கையிலே சல்லிக்காசு இல்லை. என்ன செய்வது, பாவம், டோன் யாங் தன்னையே அடிமையாக விலைக்கு விற்க முடிவெடுத்தான். டோன் யாங் ஒரு நேர்மையாளன் என்பதை உணர்ந்து ஒரு பணக்காரன் பத்தாயிரம் காசுகள் கொடுத்து அவனை விலைக்கு வாங்கிக்கொண்டான்.

அந்த ஊரின் வழக்கப்படி இறந்தவனுக்காக மூன்று ஆண்டுகள் துக்கம் அனுஷ்டிக்க வேண்டும். இந்த மூன்று ஆண்டுகளும் டோன் யாங் எந்த வேலையிலும் ஈடுபடக்கூடாது. இதையறிந்த அடிமை கொண்டவனும் மூன்று ஆண்டுகள் கழித்து அவனை வேலையில் அமர்த்தலாம் என்று முடிவு செய்தான்.

மூன்று ஆண்டுகள் கழிந்தன. டோங் யாங் தன்னை விலை கொடுத்து வாங்கிய எஜமானனிடம் வேலைக்குப் போவதற்குப் புறப்பட்டான். போகின்ற வழியில் ஒரு பெண்ணை அவன் பார்க்க நேரிட்டது. அந்தப் பெண் இவனிடம் “உன்னை மணமுடிக்க எனக்கு விருப்பம்” என்றாள். இவனுக்கும் அது சரி எனப்பட்டது. எனவே அவளையும் அழைத்துக்கொண்டு தன் அடிமை முதலாளியிடம் போனான்.

டோங் யாங்கைப் பார்த்து எஜமானன் மகிழ்ந்தான். அவனிடம், “உன்னிடம் பணம் கொடுத்தேன், அதை என்ன செய்தாய்?” என்றான்.

“ஐயா! நீங்கள் பெருந்தன்மையோடு எனக்குச் செய்த நன்மையினால் நீங்கள் அளித்த அந்தத் தொகை என் தகப்பனின் ஈமச் செலவுகளுக்கு சரியாக இருந்தது. இப்பொழுது நான் எப்பொழுதும்போல ஒன்றுமில்லாதவன். மேலும் கீழ்ச்சாதிக்காரன். ஆகவே என்னால் கடுமையான உழைப்பை நன்றிக் கடனாகச்  செலுத்த முடியும்” என்றான்.

“சரி… அப்படியானால் நீ வாங்கிய தொகைக்காக எனக்கு உழைக்கவேண்டும். அது முடிந்தவுடன்தான் நீ என்னைவிட்டுப் போக முடியும். நீயும் உன் மனைவியுமாக எனக்காக வேலை செய்தால் உன் கடனைச் சீக்கிரம் அடைக்கலாம். உன் மனைவிக்கு என்ன வேலைத் தெரியும்?”

“அவள் ஆடை நெய்வதில் கெட்டிக்காரி”.

“அப்படியானால் எனக்கு நூறு சுருள்கள் உயர் ரகப் பட்டுத் துணிகள் நெய்து தரட்டும்.”

எஜமானன் டோங்கின் மனைவிக்குப் பட்டு நூல்கள் மற்றும் உயர் ரக பட்டுத் துணி தயாரிப்புக்கான பொருள்கள் போன்றவற்றை அனுப்பினான். எப்படியும் நூறு சுருள்கள் பட்டுத் துணி என்றால் அதை  நெய்து முடிப்பதற்கு இரண்டு மூன்று ஆண்டுகளாவது ஆகும். (1 சுருள் என்பது 100 பேர்களின் ஆடைகள் தைக்க பயன்படும்). எனவே மூன்று ஆண்டுகளுக்கான தன் தேவையை அவள் மூலம் பெற்றுவிடலாம், அதன் வழியே கிடைக்கப்போகின்ற லாபம் பெரியது என்று எஜமானன் நினைத்துக்கொண்டான்.

டோங்கின் மனைவி நெசவுப் பணியைத் தொடங்கினாள். பத்து நாள்களுக்குள் நூறு சுருள்கள் உயர் ரகப் பட்டுத் துணி தயார் செய்துவிட்டாள். டோங் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனான். இவ்வளவு வேகத்தில் இப்படியொரு வேலையைப் பார்க்க முடியுமா? அதை அவளிடமே கேட்டான்.

அவள் நிதானமாகக் கூறினாள்.

“நான் மேலுலகத்துப் பெண். சுவர்க்கத்தில் நெசவு செய்பவள். ஆகவே வேகமாக என்னால் பணியாற்ற முடியும். உன்மேல் இரக்கப்பட்டு எங்கள் சுவர்க்கலோகத்தின் பேரரசர், என்னை உனக்கு உதவும்படி இங்கே அனுப்பி வைத்தார். உன்னுடைய இந்தப் பணிவும், மரியாதையும் எங்கள் மாமன்னரை நெகிழச் செய்தது. உன் துன்பத்தை, அடிமைத்தனத்தை என் உழைப்பின் வழியாகப் போக்கிவிட்டு நான் போகவேண்டும். அதை செய்துவிட்டேன். நான் போகிறேன்”.

சொன்னதொடு நில்லாமல் காற்றில் கரைந்து விண்ணகம் ஏறினாள்.

யாருக்காக பயம்?

ஒரு காலத்தில் சீனா பல நாடுகளையும் பல மன்னர்களையும் கொண்டிருந்தது. இந்த நாடுகளில் சில சிறியவை, சில பெரியவை. பல்வேறு தரப்பட்ட மக்கள் வெவ்வேறு கலாசாரங்களைப் பின்பற்றி வந்தனர்.

நாடுகளுக்குள் அவ்வப்போது போர்கள் நடைபெறும். ஒரு நாடு அல்லது மன்னன் இன்னொரு நாட்டையோ மன்னனையோ தாக்கவும் அழிக்கவும் ஆதிக்கம் செலுத்தவும் போரில் இறங்குவான். இப்படிப்பட்ட போர்கள் ஓயாது நடைபெறும்.

‘ச்சூ’ (Chu State) என்ற ஒரு சின்ன நாட்டில் மிகுந்த ஆற்றல்மிக்க அமைச்சர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் ஷோவாஸிக்ஸு (Zhaoxixu).  இவருடைய அறிவுத் திறன், ராஜ தந்திரம், தூரநோக்கு ஆகியவற்றின் காரணமாக இவரிடம் மற்ற நாடுகளின் அரசாங்கங்கள் அல்லது அமைச்சர்கள் அஞ்சி கிடந்தனர். ஏன் உள்நாட்டிலும்கூட பங்காளி காய்ச்சல் இருந்தாலும் வாய் மூடிக் கிடந்தனர்.

ஒருநாள் அரசன் தன் அமைச்சர் ஷோவாஸிக்ஸு குறித்து அரசவையில் பேச்சு எழுப்பினான்.

“நம் அமைச்சர் ஷோவாஸிக்ஸுவின் பெயரைக் கேட்டால் அண்டை நாடுகள் எல்லாம் அஞ்சி நடுங்குகின்றன. ஏன், நம் நாட்டில் கூட அவர் பெயருக்கு பெரிய மதிப்பும்அச்சமும் காட்டுகிறார்கள். உண்மையிலேயே அவருக்கு இப்படியோர் பெயர் உள்ளதா?”

அரசவையில் இருந்த அமைச்சர் குழுவிலிருந்தும் சரி, பிரதானிகள் பக்கமிருந்தும் சரி; யாரும் இதனை ஆதரிக்கமோ மறுக்கவோ இல்லை.

அரசன் அந்த அமைச்சரின் மேல் உள்ள அபிமானத்தால் இதைக் கேட்கிறானா, அல்லது எரிச்சலுற்றுக் கேட்கிறானா என்று தெரியாமல் கேள்விப்பொறியில் சிக்கிக் கொள்ள யாருக்கும் துணிவில்லை.

‘ஜியான்ங்ஈ’ என்ற அமைச்சர் மன்னரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமென்று நெடுங்காலமாகக் காத்திருந்தார். இந்தத் தருணத்தை நல்வாய்ப்பாகப் பயன்படுத்த நினைத்தார்.

அவர் எழுந்து, “மன்னர் பிரானே! அந்த அமைச்சர் மேல் பக்கத்து நாடுகளும், மக்களும் கொண்டிருக்கின்ற மதிப்பு எப்படி என்பதை ஒரு கதை மூலமாக உங்களுக்கு விளக்க விரும்புகிறேன்” என்றான்.

“என்ன அது, சொல்வீர்!” என்றான் மன்னன்.

ஒருமுறை நரி, புலியிடம் மாட்டிக்கொண்டது. தப்பிக்கும் வழி நரிக்குப் புலப்படவில்லை. எனவே ஓர் உபாயம் செய்தது.

“யோவ். . . புலியே. . .  என்ன தைரியம் இருந்தால் என்னைக் கொல்லத் துடிப்பாய்?” என்று தலையை நிமிர்த்திக் கேட்டது.

புலிக்கு ஒன்றும் புரியவில்லை. “ஏன் உன்னைப் பிடித்துக் கொல்லக்கூடாது?” என்று திருப்பிக்கேட்டது.

நரி தன் குரலை மேலும் உயர்த்திக்கொண்டு, “உன்னிடம்தான் சொல்லவேண்டும். கடவுள் என்னை இந்தக் காட்டிலுள்ள எல்லா மிருகங்களுக்கும் ராஜாவாக நியமித்திருக்கிறார். நீ என்னைக் கொன்றால் அவ்வளவுதான், கடவுளுக்கு எதிரி ஆகிவிடுவாய். . . உன்னைக் கடவுள் கடுமையாகத் தண்டிப்பார்” என்றது.

புலி சந்தேகத்துடன் பார்ப்பதைக் கண்டதும் நரி சொன்னது.

“சரி. . . நீ நம்ப வேண்டுமானால் இந்த காடு முழுவதும் போவோம். என்னைப் பார்த்தவுடன் எல்லா மிருகங்களும் பய பக்தியோடு ஒதுங்கி கொள்வதை நீயே பார்க்கலாம்” என்றது.

இருவரும் கிளம்பி காட்டுக்குப் போனார்கள்.

நரி திமிருடன் நடந்துசென்றது. ஆங்காங்கே இருந்த மிருகங்கள் நரியைப் புலியிடன் பார்த்ததால் நடுக்கத்துடன் ஓடி ஒளிந்துகொண்டன.

“பார்த்தாயா புலியாரே! என்னைப் பார்த்தால், இவையெல்லாம் எப்படி ஓடுகின்றன. . .  என்ன மரியாதை? என் எதிரில் இருக்கக்கூடத் தயக்கம், அச்சம்! இப்பொழுதாவது புரிகிறதா? என்னிடம் நீ வாலாட்டினால் உன் கதை முடிந்தது.” என்றது நரி.

பயந்துபோய் நரியைவிட்டு விலகி தன் வழியில் சென்றது புலி.

“இப்படித்தான் அரசே, உங்கள் கீழ் உள்ளதால் உங்களை நினைத்தே அனைவரும் அந்த அமைச்சருக்கு அஞ்சுகிறார்கள். உங்களது ராஜ தந்திரம், வீரம், விவேகம், ஆற்றல் ஆகியவற்றைக் கண்டுதான் உண்மையில் அவர்களுக்கு அச்சம்” என்றார் அந்த அமைச்சர்.

அரசர் அவருக்குப் பொன்னும் பொருளும் அளித்து மகிழ்ந்தார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 நான்கு கதைகள்

சீன இதிகாசக் கதைகள்

நல்லதும் கெட்டதும்

snake womanஒரு காலத்தில் பாலைவனத்தில் முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். மிகவும் நல்லவராக, எதுவும் எச்செயலும் ஏதோ ஒரு நன்மையின் பொருட்டே நிகழ்கிறது என்ற நம்பிக்கை கொண்டவராக இருந்தார். அவரிடம் குதிரைகள் நிறைய இருந்தன.

ஒருநாள் தன்னுடைய நிலத்திலே வேலைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பினார்; அப்பொழுது அவருடைய குதிரைகளில் ஒன்று, அதுவும் பெண் குதிரை  காணாமல் போனது தெரிந்தது. அவருடைய வீட்டினர், அக்கம்பக்கத்து மனிதர்கள் என்று எல்லாருமே எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தனர். ஓடிப்போன குதிரை கிடைக்கவே இல்லை. எல்லோரும் அவரிடம் சென்று, “குதிரை காணாமல் போனதால் உங்களுக்கு ஏற்பட்ட இந்த இழப்பு ஒரு துரதிஷ்டம்தான்!” என்று தங்கள் அனுதாபத்தை அல்லது வருத்தத்தைத் தெரிவித்தனர். அதற்கு அவர், “குதிரை காணாமல் போனதை ஏன் துரதிஷ்டம் என்று நினைக்க வேண்டும். அதுவே அதிர்ஷ்டத்தை கொண்டு வரலாம், அதற்கு நேரம் வாய்க்கும், வரவேண்டும்” என்றார்.

மறுநாள் அதிகாலைஅடிவானத்தின் பக்கமிருந்து இரண்டு குதிரைகள் ஓடி வருவதை அந்தப் பாலைவனத்துப் பாமரக் கிழவர் பார்த்தார். ஆம், அவரை விட்டு ஓடிய அந்த இளம் பெண் குதிரை ஒரு பொலி குதிரையுடன் திரும்பி வந்து கொண்டிருந்தது. தூரத்திலிருந்து பார்க்கும்போது அந்தப் புதிய குதிரையின் பொலிவும் உடல் வலிவும் ஒரு போர்க் குதிரையாகவும் இருக்கும் என்று நினைக்க வைத்தது.

இரண்டும் இவருடைய இடத்துக்கு வந்து சேர்ந்தது. வந்தவுடன் பார்த்தால் நல்ல வாளிப்பான உடல் வாகுடன் அந்தப் புதிய குதிரை தோற்றமளித்தது. சந்தேகத்துக்கு இடமில்லால் இது போர்க்குதிரைதான் என்றறிந்து, ‘யாரேனும் படை வீரர் ஒருவருடைய குதிரையாகவே இது இருக்கவேண்டும். அவரிடமிருந்து தப்பி ஓடி வந்திருக்கவேண்டும். ஆகவே இது குறித்து விசாரித்து அதை உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று ஓர் கோரிக்கையை அப்பகுதியின் மாஜிஸ்டிரேட்டிடம் இவர் வைத்தார். மாஜிஸ்டிரேட்டும், உரியவர் வந்து கோரும்வரை இவரிடமே வைத்திருக்கச் சொல்லி, பொறுத்திருந்து பார்க்கச் சொன்னார்.

ஓடிப் போன குதிரை கிடைத்ததற்காகவும்,  ஒரு புதிய குதிரை உடன் வந்ததற்காகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வண்ணம் ஒரு சிறு விருந்து நிகழ்ச்சி இவருடைய குடும்பத்தினராலும், அண்மையிலுள்ள குடும்பங்களாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இவரை அழைத்து இவரது மகிழ்ச்சியைக் குறித்து பேசவும் கோரினார்கள்.

முதியவர் அமைதியாக இருந்தார். அவர் முகத்தில் எந்த மகிழ்ச்சியின் அறிகுறிகளும் இல்லை. அவர் சொன்னார், “புதிய துடிப்பான இளங்குதிரை கிடைத்தற்காக நான் மகிழ்ச்சியடையவில்லை. இது நல்லது என்று எடுத்துக்கொள்ளவும் கூடாது. இதன் விளைவு என்ன என்பது காலம் வரும்போது தெரியும்” என்றார்.

ஒருவாரம் சென்றது, முதியவரின் மைந்தன் ஒரு நாள் புதிய குதிரையின் மேல் ஏறி சவாரி செய்தான். ஒரு போர்க்குதிரையின் மேல் ஏறி சவாரி செய்யும் அளவுக்கு அவனுக்குப் பயிற்சியோ திறமையோ கிடையாது. அடங்காத போர்க்குதிரை கீழே தள்ளிவிட்டு ஓடியது. பாவம், மைந்தனின் கால் உடைந்தது.

இப்பொழுது எல்லோரும், “ஐயோ பாவம் இந்தப் போர்க்குதிரை  துரதிஷ்டத்தை அல்லவா கூட்டிக்கொண்டு வந்திருக்கிறது. இவருடைய பிள்ளையின் கால் முடமாயிற்றே” என்றனர். அப்பொழுது இவர், “என் மகனுக்கு ஏற்பட்ட விபத்து கெட்டது என்று ஏன் நினைக்க வேண்டும். நன்மையையும் குறிக்கலாம், காலம் வரும்போது தெளிவாகும்” என்றார்.

கொஞ்ச காலத்துக்குப் பின்னர், முதியவர் வாழ்ந்த நாட்டின் அரசன் பக்கத்து நாட்டுடன் வீண் சண்டைக்குப் போனான். அவன் போர் தொடுத்ததில் கொஞ்சமும் நியாயம் கிடையாது. அவன் கொடிய குணத்தையே அது பிரதிபலித்தது. அவன் தன் நாட்டு மக்கள் அனைவரையும் போரில் கட்டாயமாகக் கலந்து கொள்ளவேண்டுமென்று ஆணையிட்டான். நாடு முழுவதும் ஒரு குக்கிராமம் கூட விடாது ராணுவ அதிகாரிகள் இளைஞர்களைக் கட்டாயமாக இழுத்துச் சென்றனர். வீடு வீடாகச் சென்று சோதித்து யாரையும் விட்டுவிடாமல் பிடித்தனர். முதியவருக்கோ ஒரே பிள்ளைதான், இவனும் ராணுவத்திற்கு போய்விட்டால் அது அந்தக் குடும்பத்துக்கு பெரும் இழப்பாகவும் முடியலாம்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக முதியவரின் மகன் இப்போது முடவன் ஆகிவிட்டான் என்பதால் ராணுவத்தில் பணியாற்றுகின்ற தகுதியை இழந்திருந்தான்.  அதனால் அவர்களுக்கு அது வசதியாகப் போய்விட்டது.  ராணுவத்தினர் வீட்டில் நுழையும்போதே, அதன் வாயிலில் கட்டியிருந்த கம்பீரமான அந்தப் போர்க்குதிரையைப் பார்த்தனர். “ஓ. . . இதோ இங்கே ஒரு விலை மதிப்புள்ள போர்க்குதிரை கட்டிக்கிடக்கிறது. எனவே இந்த வீட்டிலுள்ளவர் பெரிய ராணுவ வீரனுடைய வீடாகவே இருக்கும்” என்று பேசிக்கொண்டனர்.

உள்ளே நுழைந்து வீட்டிலுள்ளோரைப் பார்த்தப்போது அந்த வீட்டில் முதியவரும், அவர் மனைவியும், முடவனான அவருடைய மைந்தனுமே இருந்தனர். “பாவம் ஏதோ போரில் இவனுக்கு கால் போயிருக்கிறது. இந்தக் குடும்பத்திலிருந்து ராணுவத்துக்கு யாரையும் எடுக்க முடியாது” என்று சொல்லி அகன்றனர்.

அக்கம்பக்கமுள்ளவர்கள் சொன்னார்கள், “நல்ல வேளை! இவருடைய மைந்தனைக் குதிரைத் தள்ளி விட்டது.  பெரியவர் சொன்னபடி இதுவே அதிர்ஷ்டமாகிவிட்டது! ஒவ்வொன்றையும் நல்லது எது, கெட்டது எது என்று அறிவுப்பூர்வமாக பார்வையிடுகின்ற இந்தப் பெரியவரின் அறிவாற்றல் சாதாரணமானதல்ல!” என்று பாராட்டினர்.

வாழ்வில் அவ்வப்பொழுது நடைபெறுகின்ற நிகழ்வுகளைக் கொண்டு நல்லது, கெட்டது என்று தீர்மானித்துவிடக்கூடாது. காலம்தான் ஒவ்வொரு நிகழ்வின் விளைவையும் தோலுரித்துக் காட்டக்கூடியது.

==

தெரியாத விலங்கு

முன்னொரு காலத்தில் குய்ஷு (Guizhoo) என்ற ஊரில் கழுதைகள் கிடையாது. ஒரு கழுதையைப் பிடித்து அரசாங்க அலுவலர் ஒருவர் அந்த ஊருக்கு அனுப்பிவைத்தார். ஆனால் அந்தக் கழுதையை எதற்கு பயன்படுத்துவது என்று தெரியாமல் அப்படியே மலை, காடு பகுதிகளில் ஊர்க்காரர்கள் விட்டுவிட்டார்கள்.

கழுதை மலையும் காடும் சேர்ந்த பகுதிகளில் தன்னிச்சையாகத் திரிந்தது. அடிக்கடி வாலைத் தூக்கிக்கொண்டு தன் கனகம்பீரக் குரலை ஒலிக்கச் செய்யும். இதன் குரலின் உரத்த ஒலியால் இதைப் பற்றி அறியாத அங்குள்ள மிருகங்கள் திடுக்கிட்டு ஓடும்.

அங்கே ஒரு புலி இருந்தது. காட்டிலிருந்து வந்த அந்தப் புலி அதுவரை கழுதையைப் பார்த்ததில்லை. கழுதையின் உருவத்தைப் பார்த்து இது சக்திவாய்ந்த மிருகமாக இருக்குமென்று நினைத்தது. கழுதையைப் பார்த்த புலி, கழுதையைப் பார்க்காதவாறு தன்னை மறைத்துக்கொண்டது. கழுதையை எங்கேனும் தூரத்தில் கண்டால், தொலைவாக இருந்து கொண்டது. இந்தப் பெரிய மிருகம் ஒருவேளை தன்னைக் கொல்லவும் கூடும் என்ற அச்சமும் அதற்கு இருந்தது.

நாளாக, நாளாக, கழுதைக்கும் புலிக்கும் உள்ள இடைவெளி குறையலாயிற்று. கழுதையைக் கொஞ்சம் கொஞ்சமாக அளந்துப் பார்க்கத் தொடங்கியது புலி. கழுதையின் உரத்த குரலொலியும் அதன் நீண்ட நேர ஆலாபனையும் திடுக்குறச் செய்தபோதிலும் கழுதையை உன்னிப்பாக புலி கவனித்துவந்தது. பிற காட்டு மிருகங்கள்கூட கழுதையைக் கண்டு அஞ்சி, அதன் காட்டுக் கத்தலைக் கேட்டு அலறியடித்துக் கொண்டு ஓடின.

ஒருநாள் புலி, கழுதையின் எதிரே இருந்தது. கழுதையின் மேல் சின்னதாக ஒரு அடிப்போட்டது. அவ்வளவுதான் கழுதைக்குக் கோபம் வந்தது. தன் இரண்டு பின்னங்கால்களைத் தூக்கியடித்தது. அடி ஒன்றும் பலமாகவுமில்லை. அது தாக்குதலாகவும் தெரியவில்லை. உடனே புலி ஒரேயடியாகப் பாய்ந்தது. கழுதையின் கழுத்தைக் கவ்வி,  பூமியில் கவிழ்த்தது. ஒரு பெரிய உறுமலுடன் அதைப் புரட்டிப் போட்டுக் கிழித்தது. திருப்தியாக கழுதை மாமிசம் உண்டது.

ஒருவருடைய உண்மை நிலையைத் தெரியாமலே நாம் ஒருவர்மீது மதிப்பும் பயமும் கொள்கிறோம். தெரிந்துவிட்டால்?

===

ஆயிரம் நாளும் போதை

சோன்ங்ஷான் (Zhongshan) என்ற ஊரில் டிக்ஸி (Di Xi) என்பவர் இருந்தார். அவர் மது தயாரிப்பதில் கெட்டிக்காரர். அதிக போதையில் ஒருவரை நிறுத்தி வைக்கின்ற வகையில் புதுவகை மதுவை தயாரிக்கின்ற முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார். அதாவது, ஒரு கோப்பை மதுவின் தாக்கம் ஆயிரம் நாள்களுக்கு நீடிக்கவேண்டும் என்பது அவர் திட்டம்.

அதே ஊரில் லியூக்ஸாவான்ஜி என்பவன் இருந்தான். அவனொரு மொடாக்குடியன். எவ்வளவு குடித்தாலும் அவனுக்குப் போதை ஏறாது. ஒருநாள் அவன் இவரிடத்தில் மது குடிக்க வந்தான்.

இவர் அவனிடம் “மது எதுவும் மிச்சமில்லை, ஒரு புதிய மது ரகம் ஒன்றை இப்பொழுதுதான் காய்ச்சிக் கொண்டிருக்கிறேன். அதை உனக்குத் தர முடியாது. நீ போகலாம்” என்றார்.

அவனோ பிடிவாதமாகத் தனக்கு அந்த மதுதான் வேண்டுமென்று கூறிக்கொண்டு நின்றான்.

“இந்த மது உனக்குச் சரியாக இருக்காது. நீயோ அதிகமாகக் குடிக்கக் நினைப்பவன். இந்த மதுவோ ஒரு கோப்பைக்கு மேல் அருந்தக்கூடாது” என்றார்.

“சரி. . . அந்த ஒரு கோப்பையாவது கொடு. நான் இப்பொழுது குடித்தே ஆகவேண்டும்” என்று உட்கார்ந்துவிட்டான்.

டிக்ஸி தனது முதல் பரிசோதனையை இவனிடம் மேற்கொள்ள முடிவெடுத்தார். தனது புதிய கண்டுபிடிப்பை அவனுக்கு முதன் முதலாக ஊற்றிக் கொடுத்தார்.

ஒரு கோப்பையை அவன் அருந்திய பிறகு, மீண்டும் மது கேட்டு கெஞ்சினான். டிக்ஸி மறுத்துவிட்டார். “இனிமேல் கொடுக்கமுடியாது, இந்த ஒரு கோப்பை மதுவே உன்னை மூன்று ஆண்டுகள் மயக்கத்தில் கிடத்திவிடும். . . . நீ முதலில் இடத்தைக் காலி செய்” என்றார்.

லியூ வேறு வழியில்லாமல் கிளம்பினான். அவன் வீடு பக்கத்தில்தான் இருந்தது. ஆனால் என்னவோ நடக்க நடக்க வீடுவெகு தூரமாக தெரிந்தது. எப்படியோ ஒரு வழியாக வீடு போய் சேர்ந்தான். வீட்டுக்குப் போய் படுக்கையில் வீழ்ந்தான். அப்படியே கட்டையோடு கட்டையாகிவிட்டான்.

அவனை அவன் வீட்டினர் பார்த்தார்கள். அவனது முகத்தின் நிறமே மாறிப்போய் இருந்தது. சாராயம் விஷமாகி இவனைச் சாகடித்து விட்டது என்று நினைத்தனர். அவனுக்கு எந்த உணர்வும் இல்லை. அவன் இறந்துவிட்டாக எண்ணி, இடுகாட்டில் புதைத்தனர்.

மூன்று ஆண்டுகள் கடந்தன. டிக்ஸி தன்னுடைய புது வகை மதுவின் வேலையைப் பற்றி தெரிந்துகொள்ள நினைத்தார். அதைக் குடித்துவிட்டுப் போன லியூவைத் தேடத்தொடங்கினார்.

லியூவின் வீட்டை விசாரித்து அவனது வீட்டுக்குச் சென்றார். விசாரித்தபோது விட்டிலிருந்தபவர்கள்,  “அவன் இறந்து ஆண்டுகள் ஓடிவிட்டனவே!” என்றனர்.

“இல்லை; அவன் இறந்திருக்கமுடியாது. நானொரு சிறப்பு வகை மதுவைப் பரிசோதனையாக அவனுக்குக் குடிக்கக் கொடுத்தேன். அந்த மது மூன்று ஆண்டுகளுக்குப் போதையில் இருத்தும். அந்த மதுவின் தாக்கத்தில் உணர்விழந்து கிடந்தவனை நீங்கள் உயிரற்றவன் என நினைத்து அடக்கம் செய்துவீட்டீர்கள். இன்றுதான் அவன் கண்விழித்து எழவேண்டிய ஆயிரமாவது நாள். ஆகவே இப்பொழுதே நாம் போய் அவனது புதைக் குழியைத் தோண்டிப் பார்க்க வேண்டும்” என்றார் டிக்ஸி.

அவரை நம்புவதற்கு அவர்கள் தயங்கினார்கள். டிக்ஸி மிகவும் வலியுறுத்தி லியூவின் கல்லறையை உடைக்கவும் தோண்டவும் செய்தார். கல்லறையை உடைத்து மண்ணைத் தோண்டிய போது, சவப்பெட்டி அருகே மண்ணிலிருந்து வியர்வையின் வாசம் அடித்தது. இது எல்லோருக்கும் வினோதமாக பட்டது. மண்ணை முழுவதும் எடுத்து சவப்பெட்டியை மேலே கொண்டுவந்து திறந்தபோது லியூ தூங்கி, படுக்கையிலிருந்து எழுவதைப் போல எழுந்தான்.

கண்களைத் திறந்து சுற்றும் முற்றும் பார்த்தான். தான் எங்கிருக்கிறோம்? ஏன் இவ்வளவு பேர் தன்னைச் சூழ்ந்துகொண்டு நிற்கிறார்கள் என்பதையெல்லாம் அந்தக் குடிகாரன் கவனிக்கவில்லை. தனக்கு மதுவை ஊற்றிக் கொடுத்தவர்தான் கண்ணில் தெரிந்தார். “ஹலோ டிக்ஸி, எனக்கு ஒரு கோப்பை இன்றைக்கும் அந்த மதுவைத் தா” என்றான்.

எப்படி இருந்தது புதிய சரக்கு என்று டிக்ஸி கேட்டபோது அந்தக் குடிகாரன் சொன்னான். “அடேங்கப்பா, நானும் எவ்வளவோ குடிச்சிருக்கேன். ஆனால் உன்னுடையது பிரமாதம். சூரியன் எவ்வளவு தூரம்  ஏறியிருக்கிறான் பார்! அதுவரை நான் தூங்கி மயங்கி இருக்கிறேன் என்றால் எல்லாம் உன் புதுச்சரக்கு செய்த வேலைதான்!”

எல்லோரும் அதைக் கேட்டு சிரித்தனர்.மூன்று ஆண்டுகளாக அவன் தூங்கியது அவனுக்கே தெரியவில்லை. எல்லோரும் கல்லறைத் தோட்டத்திலிருந்து சிரித்துக் கொண்டே வீடு திரும்பினார்கள்.

===

நாக தேவதை

ஒரு காலத்தில் வெள்ளை பாம்பு, பச்சை பாம்பு இரண்டும் இர்மை (Er-mei) என்ற மலையில் வாழ்ந்து வந்தன. அங்கு வாழ்ந்த காலத்தில் இந்த இரண்டு பாம்புகளுக்கும் மந்திர ஆற்றல் கிடைத்தது. அதனால் அவை தங்களை இரண்டு அழகிய இளம் பெண்களாக மாற்றிக்கொண்டன. இள மங்கையர்கள் இருவரும் ஹேங்ஷோன் என்ற நகருக்கு வந்து வசிக்கலானார்கள்.

அந்த நகரின் அழகான ஓரிடம் மேற்கு ஏரி. அங்கு இருவரும் அடிக்கடி சென்று பொழுதைக் கழிப்பது வழக்கம். ஒரு நாள் அதே இடத்துக்கு வந்திருந்த ஹ்சுஷெங் என்னும் ஆணழகன் இவர்களைக் கண்டான். அவனைக் கண்டு வெள்ளை பாம்புப் பெண் உடனே காதல் வயப்பட்டாள்.

ஒருநாள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.  தன் கணவனுக்கு வருவாய் இல்லை என்பதை உணர்ந்த வெள்ளை நாக மங்கை மூலிகை மருந்தகம் ஒன்றைத் தொடங்க அவனுக்கு உதவினாள். காடுகளிலும் மலைகளிலும் பாம்பாகச் சுற்றியிருந்ததால் எந்தெந்த செடிகள், தாவரங்கள் எந்தெந்த நோய்களைத் தீர்க்கும் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. கூடுதலாகத் தன் மந்திர சக்தியையும் அவள் பயன்படுத்தினாள்.

இந்த மூலிகை மருந்தகத்தின் மருந்துக்கள் பெருமளவுக்கு மக்களால் விரும்பப்பட்டது. அவர்களுடைய நோய்கள் இந்த மருந்துகள்மூலம் குணமடைந்ததால் அவர்கள் மகிழ்ந்தனர். குணமே ஆகாது என்று கைவிடப்பட்ட நோய்களும்கூட இவளுடைய மந்திர சக்தியினால் குணமானது. எப்பொழுதும் இவர்களுடைய மருந்தகத்தில் கூட்டம் அலை மோதியது. ஏழை, எளியவர்களுக்காக இன்னொரு பக்கம் இலவச மருந்து உதவி மையமும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. மொத்தத்தில், இவர்களுடைய மருந்தகத்தின் பெயர் நாடெங்கும் பரவிப் பிரபலமாயிற்று.

ஒரு நாள் முதிய துறவி ஒருவர் இந்த மருந்தகத்துக்கு வந்தார். மாயத் தோற்றங்களையும் மெய்தோற்றங்களையும் கண்டறியும் தவ ஆற்றல் கொண்டவர் அவர். பெயர், பஹாய். இவருடைய கண்களிலே நாக மங்கை பட்டுவிட்டாள். இவர் ஹ்சுசெங்கிடம் சென்று அவன் மனைவி மானிடப் பெண் அல்லள், மாய ஆற்றல் கொண்ட நாக மங்கை, எனவே அவனுக்கு ஏதேனும் ஆபத்து நேரிடலாம் என்று எச்சரித்துவிட்டுச் சென்றார்.

இந்நிலையில், அந்த ஊரில் ஒரு விழா நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறுகின்ற டிராகன் படகு விழா அது. இள வயதுடைய ஆண்களும் பெண்களும் போட்டிகள், கேளிக்கைகள் என்று மகிழ்ந்திருக்கூடிய சமயம் அது. விழா சமயத்தில் மக்கள் தங்கள் வீடுகளை நறுமண  நீர்ச்செடிகளைக் கொண்டு அலங்கரிப்பது வழக்கம். ஆங்கங்கே நீர் குடுவைகளைக் கட்டித் தொங்கவிடும் வழக்கமும் இருந்தது. இவ்வாறு செய்தால் கெட்ட ஆவிகள் நெருங்கி வராதாம்! இருக்கும் ஆவிகளும் அவர்கள் எழுப்பும் புகை மற்றும் விருந்துகளால் வெகுண்டோடுமாம்.

ஹ்சுஷெங்கின் வீடும் இதேப்போன்று அலங்காரம் செய்யப்பட்டது. வீட்டிலிருந்து இரண்டு நாக மங்கையர்க்கும் இது மிகவும் துன்பத்தையும் நெருக்கடியையும் கொடுக்கக்கூடியது. என்றாலும் ஏதும் தெரியாதவர்கள் போல் அவர்கள் இருவரும் விருந்தில் பங்கேற்றனர்.

வெள்ளை நாக மங்கை அப்போது கர்ப்பம் தரித்திருந்தாள். இந்த நேரத்தில் அவளுடைய மந்திர சக்தி எடுபடாது. ஒரு நாள், தன் கணவனையும் அவனுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களையும் திருப்திபடுத்த, அவள் மது அருந்த நேரிட்டது. மது அருந்த அருந்த அவள் தன் கட்டுப்பாட்டை இழந்தாள். சுயநினைவு இல்லாததால் தன் சுய உருவை எடுத்தாள்! யாருக்கும் தெரியாமல் தன் படுக்கையறையில் போய் விழுந்தாள்.

பெரிய பாம்பு வடிவில் அவள் படுக்கையறையில் கிடந்தாள். கணவன் ஹ்சுஷெங் அறைக்கு வந்தான். அவளுடைய கோலத்தைக் கண்டான். அதுவரை அப்படியோர் வெள்ளை நிறப் பாம்பை அவன் பார்த்ததில்லை. அவனுக்கு அச்சமேற்பட்டது. அச்சத்தில் மயங்கினான். அச்சம் அவனை மரணம் வரை இழுத்துக்கொண்டு போனது.

வெள்ளை நிற நாக மங்கை தன் கணவனின் நிலைமையைத் தெரிந்துகொண்டாள். அவன் உயிரை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டுமென்று உறுதி எடுத்தாள். அவளுக்குத் தெரியாத மருந்து வகைகளா? இதற்கு மருந்து எங்கே கிடைக்குமென்று அவள் அறிந்தாள். ஆம், பெரு வெள்ளத்துக்குப் பின்னர் மனித குலம் மீண்டும் தோற்றமெடுப்பதற்கு காரணமான நுவா தம்பதிகள் வாழ்ந்த குன்லான் மலையிலே அந்த மூலிகை கிடைக்குமென்று தெரிந்துகொண்டாள்.

ஆனால் குன்லான் மலையிலே அலைந்தும் அந்த மூலிகை கிடைக்கவில்லை. என்ன செய்வதென்று தவித்துப்போனாள். அவள் காதல் உதவிக்கு வந்தது. தன் கணவன்மீது அவள் கொண்டிருந்த அன்பின் ஆற்றலால் அந்த மூலிகை இடம் பெயர்ந்து இவளிடம் வந்தது. அதைக் கொண்டு சிகிச்சை செய்து கணவனை அவள் மீட்டெடுத்தாள்.

ஏற்கெனவே அவனை எச்சரித்திருந்த அந்தத் துறவி மீண்டும் குறுக்கிட்டார். அந்தப் பாம்புகளை நான் பார்த்துக்கொள்கிறேன், நீ துறவறம் பூண்டுவிடு என்று அவர் உத்தரவிட்டார்.

தன்னை பஹாய் ஒழித்துக் கட்டிவிடுவான் என்று தெரிந்து வெள்ளை நாக மங்கை பஹாயைத் தாக்க முடிவெடுத்தாள். நீருக்கடியே வாழும் உயிரினங்களைக் கொண்டு ஒரு பெரிய வெள்ளம் ஏற்பட வைத்து பொன் மலைக் கோயிலை மூழ்கடிக்கவும், பாஹாயுடன் போர் தொடுத்து அவனை ஒழிக்கவும் திட்டமிட்டாள். பாஹாய் தன்னுடைய மாய ஆற்றலைக் கொண்டு வானுலக வீரர்களை வரவழைத்து தன் கோயிலை தற்காத்துக் கொண்டான்.

வெள்ளை நாகப் பெண்ணுக்குப் பேறு காலம் நெருங்கியது. எனவே போரிடுவதிலிருந்து விலகிக்கொண்டாள். குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு இதற்குத் தீர்வு காணலாம் என்று அமைதி கொண்டாள்.

அழகிய ஆண் குழந்தைப் பிறந்தது. ஹ்சுஷெங் தன் மகனைப் பார்க்கச் சென்றான். அப்பொழுது தன்னிடம் பாஹாய் தந்த ஒரு மந்திரத் தொப்பியைக் கொண்டு தன் மனைவி வெள்ளை நாகப் பெண்ணை அவன் சிறைப்பிடித்தான். பாஹாய் அந்த வெள்ளை நாகப் பெண்ணைத் தன்னுடைய கோயிலிலேச் சிறை செய்தான்.

பச்சை நாகப் பெண்ணால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தன்னுடைய மந்திர ஆற்றலைக் கொண்டு பஹாயிடமிருந்து தப்பிப்பதே போதும் போதும் என்றாயிற்று அவளுக்கு!

வெள்ளை நாகப் பெண்ணின் மகன் வளர்ந்தான். இப்பொழுதுதான் பச்சை நாகப் பெண் அவனுடன் சேர்ந்து தன் வெஞ்சினத்தைத் தீர்த்துக் கொண்டாள். பொன்மலைக் கோயிலைத் தரை மட்டமாக்கினாள். வெள்ளை நாகப் பெண்ணை விடுவித்தாள்.

வெள்ளை நாகப் பெண் தன் கணவனுடனும் மகனுடனும் ஒன்று சேர்ந்தாள். வெள்ளை நாகப் பெண்ணின் காதலையும்அன்பையும் அறிந்த ஹ்சுஷெங் மனம் மாறினான்.  மனைவியோடும் மகனோடும் மகிழ்ச்சியோடு சேர்ந்து வாழ்ந்தான்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard