New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆதி மொழியும் 'அந்தணர் மறை’யும்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
ஆதி மொழியும் 'அந்தணர் மறை’யும்
Permalink  
 


ஆதி மொழியும் 'அந்தணர் மறை’யும்

First Published : 15 November 2015 10:00 AM IST http://www.dinamani.com/junction/arithalin-ellaiyil/2015/11/15/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E2%80%99%E0%AE%AF%E0%AF%81/article3129565.ece

 

எல்லா மானுட மொழிகளின் அடிப்படையும் அவற்றின் ஒலி வடிவமே. அனைத்து மனிதர்களுக்கும் மொழி, இன பண்பாட்டு வேறுபாடு இல்லாமல் ஒலி எழுப்பும் உயிரியல் செயல்பாடு ஒன்றேதான். மொழிக்கான மூளை மையங்கள், நரம்பியல் செயல்பாடுகளும் ஒன்றேதான். ஆனால் மொழிகள் வேறுபடுகின்றன. அதேநேரத்தில், வெளிப்படும் மொழிகளின் வேறுபட்ட ஒலி வடிவங்களைத் தாண்டி, ஒரு அடிப்படை ஒருமை, மொழிகள் எங்கே உருவாகின்றனவோ அங்கே இருக்க முடியுமா?

 

 

 

 

நாம் பேசும் மொழியின் ஒலி வடிவம் எப்படி உருவாகிறது என்பதை இந்திய மொழியியல் மரபு தீவிரமாக ஆராய்ந்திருக்கிறது. இந்தியப் பண்பாடு எப்போது உருவானதோ, அப்போதே மொழியின் ஒலி வடிவம் எப்படி உருவாகியது என்பதை குறித்த தேடல் தொடங்கிவிட்டது என்றே சொல்ல வேண்டும். வாக்கு நான்கு தோற்றங்கள் எடுக்கிறதென்றும், அதில் மூன்று மறைந்திருக்கின்றனவென்றும், நான்காவது தோற்றம் மட்டுமே மனிதர் பேசும் மொழியாக வெளிப்படுகிறதென்றும் ரிக் வேதம் கூறுகிறது.(1)

தொல்காப்பியத்தின் காலம், கி.மு. 5-ம் நூற்றாண்டு முதல் கி.மு. 2-ம் நூற்றாண்டு வரை எனப் பொதுவாக அறிஞர்கள் கருதுகின்றனர். கி.பி. 3-ம் நூற்றாண்டு வரைகூட தொல்காப்பியத்தைக் கொண்டு செல்வோரும் உண்டு. எதுவாயினும், அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பழமையான இலக்கண நூல் என்பதில் ஐயமில்லை. ரிக் வேதம் கூறும் இந்த ஒலி வடிவத்தின் நான்கு நிலைகள் கொண்ட தோற்றத் தொடரை தொல்காப்பியர் சுட்டுகிறார். தொல்காப்பியம் நான்காவது நிலையாக வெளிப்படும் ஒலி-வடிவ மொழிக்கான இலக்கணம் என அவர் கூறுகிறார் -

அகத்தெழு வளியிசை அரில்தப நாடி

அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே

அஃதிவண் நுவலா தெழுந்துபுறத் திசைக்கும்

மெய்தெரி வளியிசை அளவுநுவன் றிசினே.(2)

இங்கு அவர் அந்தணர் மறை எனக் கூறுவது வடமொழி வேதங்களை என்று ஒரு சாராரும், அப்படி அல்ல அவர் தமிழ் மறைகளையே கூறுகிறார் என்று மற்றொரு சாராரும் சொல்ல, ஒரு தேவையற்ற சர்ச்சை ஓடுகிறது. ஆனால், இந்த இரட்டையை தாண்டிய ஒரு விஷயத்தை, பாரத மொழியியல் மரபுக்குப் பொதுவான ஒரு உண்மையை தொல்காப்பியர் கூறுகிறார். 'அகத்தெழு வளியிசை’யை அவர் 'நுவலாது’, 'புறத்திசைக்கும் மெய்தெரி வளியிசை’ குறித்துப் பேசுகிறார். ஏனெனில், 'அகத்தெழு வளியிசை’, 'அந்தணர் மறை’யில் உள்ளது என்கிறார்.

மறை பொருள் கொண்ட இலக்கியம் எதுவும் 'அகத்தில் எழும் வளியின் இசை’ மொழியில் இருந்து முகிழ்ப்பது. அதற்குப் 'புறத்திசைக்கும்’ மொழியின் இலக்கணம் பொருந்தாது. அது எந்த மொழி என்பதல்ல விஷயம். இங்கு பேசப்படுவது ஒரு குறிப்பிட்ட மொழியல்ல. உலகளாவிய, மானுடம் அனைத்துக்குமான, அது எந்த மொழியாக, எந்தப் பண்பாடாக இருந்தாலும், அக மொழிக்கும் புற மொழிக்குமான தொடர்பும், வெளிப்பாடும் இங்கு பேசப்படுகிறது.

6-ம் நூற்றாண்டின் மொழியியலாளர் பத்ருஹரி. அவர் இந்த அகமொழியின் தொடர் தோற்றங்களை பரா, பச்யந்தி, மத்யமா என்றும், புறத்தில் வெளிப்படுவது வைகரி என்றும் கூறினார்.

சுவாரசியமான விஷயம் என்னவென்றால், மொழியின் ஒலிவடிவத் தோற்றங்களின் பெயர்களான பரா, பச்யந்தி, மத்யமா, வைகரி இவை அனைத்துமே, தேவியின் பெயர்களாக ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் கூறப்படுகின்றன.(3) அதேபோல, பிரக்ஞையின் பரிமாணங்களான விழிப்பு நிலை (ஜாக்ரத), கனவு நிலை (ஸ்வப்ன), ஆழ்-தூக்கம் (ஸுஷுப்தி) மற்றும் துரியம் ஆகியவையும் தேவியின் பெயர்களாக சஹஸ்ரநாமத்தில் சொல்லப்படுகின்றன.(4) பிரக்ஞையின் பரிமாணங்களும், மொழியின் தோற்றத் தொடர்ச்சிகளும் தேவியின் வெளிப்பாடுகள் என்பது ஒரு முக்கியமான முடிச்சை ஏற்படுத்துகிறது. மொழியின் தோற்றத்துக்கும் தன்னுணர்வுக்கும் (language and consciousness) ஒரு இணைப்பை அது முன்வைக்கிறது. இந்திய அழகியலாளரான பத்மா சுதி, இவை இரண்டுக்குமான தொடர்பை விளக்குகிறார் -

துரியம் பச்யந்தி மூலமாகவே வெளிப்பட முடியும். ஆனால் விழிப்பு, கனவு, தூக்கம் ஆகிய மூன்று நிலைகளும் மத்யமா மற்றும் வைகரி நிலையில் உள்ள மொழியால் வெளிப்படுத்தப்பட முடியும். ஆனால் (பச்யந்தி, மத்யமா, வைகரி என்கிற) மூன்று நிலைகளையும் துரியம் தாங்கி நிற்கிறது. இதுவே இரண்டற்ற ஒருமையுணர்வாகப் பிரக்ஞை இருக்கும் நிலை. இந்த நிலையிலேயே பேருணர்வு அனுபவங்கள் உணரப்படுகின்றன.(5)

ஆக, அந்தணர் மறை மொழி என்பது பச்யந்தி மொழி. அது புற மொழி அல்ல. ஆனால், அதிலிருந்து உருவாகும் மறை மொழி, அக ஞானத்தின் குறியீட்டு மொழியாக வைகரியில் வெளிவருகிறது. அதற்கான பொருளை வைகரி தளத்திலேயே அறிந்துகொள்ள இயலாது.

வைகரியாக வெளிப்படும் மொழி 'மெய்தெரி வளியிசை’தான். ஆனால், அதன் உள்ளடக்கம் அது வெளிப்படும் தளத்திலேயே இருக்க வேண்டியதில்லை. அது 'அகத்தெழு வளியிசை’ உணரும் விஷயங்களை வெளிக்கொண்டு வரலாம். அப்படிக் கொண்டு வரும்போது, நிச்சயமாக அதில் குறியீட்டுத்தன்மை இருக்கும். நம் குறியீடுகள் இவ்விதமே மொழியில் வருகின்றன. அவை, வைகரி வெளிப்படும் உலகில் இல்லாவிட்டாலும்கூட, மொழியினால் உருவாக்கப்படலாம். பத்ருஹரி, 'முயல் கொம்பு’, ‘கந்தர்வ உலகம்’ ஆகிய வார்த்தைகளை சுட்டுகிறார். அவை, இல்லாத பொருட்களை குறிப்பதாக இருந்தாலும், மனச் சித்திரங்களை உருவாக்கும் தன்மை கொண்டவையாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறார். வார்த்தைகள் 'அப்படியே’ புறவய யதார்த்தத்தை சித்தரிப்பவை அல்ல. புறப்பொருள் குறித்த அக-அறிதலில் இருந்தே வார்த்தைகள் உருவாகின்றன. அகண்ட அக-அறிதல் தன்னை வெளிப்படுத்த அடையும் சஞ்சலமே பச்யந்தி. சலனமற்ற நிலையில் அது பரா.(6)

இதனால், எந்தப் புறவயப் பொருளுக்கும்கூட அகவய மொழியில் ஒரு உருவகத்தை உருவாக்க முடிகிறது. கடல் என்பது அகமொழியில் வெறும் பெரு நீர்ப்பரப்பு அல்ல. அது ஒரு குறியீட்டுத்தன்மையை அடைய முடிகிறது. மொழியின் கவித்துவம், அது பச்யந்தியில் உருவாவதால் ஏற்படுகிறது. வைகரியிலிருந்து பச்யந்தியிலிருந்து வைகரிக்குச் செல்லும் மொழியை, ‘நிறமாலை’ ஒன்றை கற்பனை செய்துகொள்ளுங்கள். பச்யந்தி நிலை அனுபவ வெளிப்பாட்டுக்கு வைகரி மொழியை ஒருவன் பயன்படுத்தப் பயன்படுத்த, அது கவித்துவமும் குறியீட்டுத்தன்மையும் மறைஞான நிலையையும் அடைகிறது.

 

 

 

கலை என்பதே ஒருவிதத்தில் பச்யந்தி மொழியை வைகரியில் வெளிப்படுத்துவது எனக் கருதலாமா? கலை-இலக்கிய விமரிசகர் வெங்கட் சாமிநாதன், கலையை ஒரு பயணமாகக் காண்கிறார் -  

'கலை என்பதுதான் என்ன? அது ஒரு நுழைவாயில். ஒன்றிலிருந்து அது அல்லாத மற்றொன்றுக்கான பயணம். ரூபத்திலிருந்து ரூபமல்லாதத்தற்கான பயணம். சாதாரணத்திலிருந்து அசாதாரணத்துக்கான பயணம். ...மொழியிலிருந்து மொழியற்ற மொழி மீறிய ஒன்றுக்கான பயணம் என்று பேசப்பட்டது'.(7)

நாடகக் கலையாளர்களான பேராசிரியர் பீட்டர் மேல்கின், ரால்ப் யாரோ இருவரும், பச்யந்தி என்பதை நாடக அனுபவத்தை முழுமையாக்கி மேம்படுத்தும் ஒரு இயக்கமாகக் காண்கின்றனர். நாடக ரசிகரையும், நாடகக் கலைஞர்களையும் விராடத்தன்மை கொண்ட பொதுமை அனுபவத்துக்கு நகர்த்துவதற்கான ஒரு திறப்பாக, பச்யந்தி நிலையை அவர்கள் காண்கின்றனர். எனவே, யோகத்தின் மூலம் மனத்தை பச்யந்தி நிலைக்கு அருகாமையில் கொண்டு வருவது, நாடகக் கலைஞர்களுக்கான ஒரு முக்கியத் தொடர் பயிற்சி என அவர்கள் கருதுகின்றனர் -

பச்யந்தியிலிருந்து ப்ரவாகம் எடுத்துவரும் (கலை) இயக்கம், மௌனத்துக்கு இட்டுச் செல்கிறது. மௌனம், இயக்கத்தை சுயஇருப்பின் முழுமைக்குக் கொண்டு செல்கிறது. இயக்கத்தின் தொடக்கத்திலும் மௌனத்தின் விழும்பிலுமான நிலையாக பச்யந்தி இருக்கிறது. பச்யந்தியை உணர்வதன் மூலம், இயக்கத்தின் தொடர்ச்சி மாறுபாடு அடைகிறது. ...இயக்கம், நிகழ்த்தல், அசைவுகள், பேச்சு, அரங்கத்தின் முழுமை ஆகியவை மட்டுமல்லாமல், நாடகத்தை உருவாக்கும் அகச் செயல்பாடு அனைத்துமே பச்யந்தியில் நிலைகொள்ளும்போது, மேலும் முழுமை கொண்டவையாக மாறுகின்றன.(8)

ஆக, எந்த ஒரு மொழி வெளிப்பாடான கலையும், இலக்கியமும் அதாவது பிரதியும், பல தளங்களில் செயல்படும் சாத்தியங்களுடன் இருக்கின்றன. பெரும்பாலான இலக்கியங்கள், இத்தகைய மொழி வெளிப்பாடுகள்தான். இந்திய மரபில், இவ்விதமாக மொழி சிருஷ்டிகள் அனைத்தையும் உள்ளடக்கிய சூல் கொண்ட வயிறு என்றே சொல்லலாம். மொழி இப்படி பரா-பச்யந்தி-மத்யமா-வைகரி என வெளிப்படுவது, பிரபஞ்சம் வெளிப்படாத நிலையிலுள்ள பிரம்மத்திலிருந்து (அவ்யக்தா) வெளிப்படுவதுடன் இணைத்து இந்திய மரபில் பேசப்படுகிறது. அவ்யக்தம் எனப்படும் வெளிப்படாமல் இருக்கும் தன்மையும், வியக்தமான வெளிப்படும் தன்மையும் இணைந்தவளாக தேவி, வியக்தா+அவ்யக்தா = வியக்தாவ்யக்த ஸ்வரூபிணி(9) என அழைக்கப்படுகிறாள்.

 

 

 

 

தெரிதா

 

மொழி - தன்னுணர்வு - பிரபஞ்சம் இம்மூன்றுக்குமான ஒரு இணை செயலாக்கத்தை இந்திய மொழியியல் முன்வைக்கிறது. இதுவே, மொழியை வெறும் தகவல் தொடர்புச் சாதனமாக மட்டுமில்லாமல், பல பிரதிகளை உள்ளடக்கிய ஒரு சிருஷ்டி ஆற்றல் கொண்ட சக்தியாக மாற்றுகிறது. இந்த இந்திய மொழியியல் பார்வைக்கும், பிரெஞ்சு சிந்தனையாளர் ஜாக்கஸ் தெரிதா முன்வைத்த கட்டவிழ்ப்பு (deconstruction) எனும் கருத்தியலுக்கும் இருக்கும் இணையான தன்மைகளை, மொழிப் பேராசிரியர் வில்லியம் ஹானே (William S. Haney) சுட்டிக்காட்டுகிறார்.(10)

 

 

 

எர்னஸ்ட் கஸீரர் (Ernst Cassirer)

ஆனால், துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால், தெரிதாவை தெரியும் நமக்கு, பத்ருஹரியின் மொழியியல் கோட்பாடுகள் தெரியாது என்பதுதான். தெரிதா மட்டுமல்ல, எர்னஸ்ட் கஸீரர் - 20-ம் நூற்றாண்டின் முக்கியமான தத்துவவியலாளர். அறிவியல் – கலை இவற்றின் பரிணாமத்தை தத்துவரீதியில் அணுகியவர். குறிப்பாக, மானுட அறிதலில், குறியீடுகளின் மையத்தன்மை அவருக்கு முக்கியமானதாக இருந்தது. அவருடைய குறியீட்டு வடிவங்கள் கோட்பாடு (the theory of symbolic forms) இந்தியத் தரிசனங்களின் மொழியியல் பார்வையுடன் சிலவிதங்களில் ஒத்துப்போவதாக இருக்கிறது. கஸீரர், வேதவாக் கோட்பாட்டினை ஒரு உலகளாவிய மொழி கருத்துருவாக்கமாகக் காண்கிறார்.(11)

இவையெல்லாம் அருமையான ஊகங்கள்தான். ஏன், நல்ல சுவாரசியமான தத்துவ ஆராய்ச்சிகளாகக்கூட இருக்கலாம். ஆனால், இவற்றில் உண்மை இருக்கிறதா? இவற்றை இன்றைய உளவியல் ஆராய்ச்சிகளை புரிந்துகொள்ளும் ஒரு சட்டகமாக நாம் பயன்படுத்த முடியுமா?

பச்யந்தி -> வைகரி என்கிற பார்வையில் சொல்லப்படுகிற ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், ஒரு வார்த்தையை ஒலி வடிவில் வெளிப்படுத்துவது போன்ற நனவுணர்வுடனான செயல் (conscious action) செயல்படுவதற்கு முன்னரே அதற்கான இயக்கம் நனவுணர்வுக்கு அப்பாலான தளங்களில் செயல்பட ஆரம்பித்துவிடுகிறது என்பதுதான்.

இதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?

1965-ல், கார்ன்ஹ்யூபர், லூடர்டீக்கே (Hans H. Kornhuber and Lüder Deecke) என்கிற இரண்டு உளவியலாளர்கள், கை கால் அசைப்பது போன்ற எளிய உடல் அசைவுகளுக்கும் மூளையில் அப்போது ஏற்படும் மின்னியக்கங்களுக்கும் இருக்கும் தொடர்புகளை ஆராய்ந்தார்கள். அவர்கள் ஒரு சுவாரசியமான விஷயத்தை கண்டுபிடித்தார்கள். ஒருவர் தன் கையை அசைப்பதற்கு முழுமையாக ஒரு விநாடி முன்னால் அதற்கான மின்னியக்கம் மூளையில் செயல்பட ஆரம்பித்துவிடுகிறது.

 

 

 

 

இந்தப் பரிசோதனை, பெஞ்சமின் லிபெட் என்கிற உளவியலாளருக்கு ஒரு திறப்பினை தந்தது. ஒரு செயலை செய்ய ஒருவர் முடிவெடுக்கும் தருணம், அந்தச் செயலை அவர் செய்த தருணம், அந்தச் செயலை செய்ய அவரது மூளையில் மின்னியக்கம் தொடங்கிய தருணம் ஆகிய மூன்றையும் ஒப்பிடும் விதத்தில், ஒரு பரிசோதனையை லிபெட் வடிவமைத்தார். மூளையின் மின்னியக்கச் செயல்பாடுகள், ஒருவர் முடிவெடுத்ததாக உணர்வதற்கு 350 மில்லி விநாடிகள் முன்னரே தொடங்கிவிடுவதை அவர் கண்டறிந்தார்.(12)

 

 

 

 

தன்னுணர்வு ஏற்படுவதற்கு முன்னரே ஏற்படும் இந்த இயக்கம், எந்த அளவுக்கு அறிவு சார்ந்ததாக இருக்கும்? தன்னுணர்வு கொண்ட அறிதலைக் காட்டிலும், தன்னுணர்வுக்கு முந்தைய மூளையின் மின்னியக்கம், சிறப்பாகவும் விரைவாகவும் சுற்றி நடக்கும் விஷயங்களை கிரகித்துக்கொள்கிறது.

அயோவா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர். ஆன்டானியோ டமாஸியோ (Antonio Damasio), ஒரு பரிசோதனையை நிகழ்த்தினார். 16 பேருக்கு நான்கு கட்டு சீட்டுகளை கொடுத்தார். அவர்கள் எடுக்கும் சீட்டுகளில் இருக்கும் எண்களுக்கு ஏற்ப அவர்களுக்குப் பணம் கிடைக்கும்; அல்லது பணம் போகும். இந்தக் கட்டுக்களில், இரண்டு நீல நிறத்தவை, இரண்டு சிவப்பு நிறத்தவை. இதில் விளையாடுவோருக்குத் தெரியாத ஒரு அம்சம் இருந்தது. சிவப்பு நிறச் சீட்டுகளில் மிக அதிகப் பணம் கிடைக்கும் சீட்டுகளும் இருந்தன. மிக மோசமாக இழப்பை உருவாக்கும் சீட்டுகளும் இருந்தன. நீல நிறச் சீட்டுகளிலோ, சீராகப் பணம் கிடைக்கும்; அதிகமாகக் கிடைக்காது. அதுபோல, இழப்பும் அதிகமாக இருக்காது. சுருக்கமாக, சிவப்புக் கட்டுகளிலிருந்து கிடைக்கும் சீட்டுகளைவிட நீல நிறக் கட்டுகளிலிருந்து கிடைக்கும் சீட்டுகளே 'நல்ல’ சீட்டுகள். இதை விளையாட விளையாட ஆட்டக்காரர்கள் உணர்ந்துகொண்டார்கள். எப்போது உணர்ந்தார்கள்? ஏறக்குறைய 50-வது சீட்டை எடுக்கும்போது, எது 'மோசமான’ சீட்டு எது 'நல்ல சீட்டு' என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள். ஆனால், அப்படி உணர்வதற்கு நாற்பது சீட்டுகள் முன்னரே அவர்கள் உடலியக்கத்தை அளந்த கருவிகள், பத்தாவது சீட்டை எடுக்கும்போதே சிவப்பு சீட்டை (அதாவது ‘மோசமான’ சீட்டை) எடுக்கும் பட்சத்தில் வியர்க்க ஆரம்பிப்பதை காட்டியது. அதாவது, அவர்கள் தன்னுணர்வுடன் எது நல்ல சீட்டு, எது இழப்புகளை ஏற்படுத்தும் சீட்டு எனத் தீர்மானிப்பதற்கு முன்பே, ஒரு அறிதல் அதனை அவதானித்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.(13)

ஹார்ன் ஹ்யூபர், லிபெட், டமாஸியோ ஆகிய மூவரின் பரிசோதனைகளிலும், ஒரு பொதுவான அம்சம் என்னவென்றால், தன்னுணர்வுடனான ஒரு செயல்பாடு நிகழ்வதற்கு முன்னரே, அதற்கான ஒரு தயாரிப்பு அகத்தில் நிகழ்கிறது. அதாவது, பச்யந்தி -> வைகரி என்பது மொழியின் ஒலி வெளிப்பாடு மட்டுமல்ல, தன்னுணர்வுடனான அனைத்துச் செயல்பாடுகளுக்குமான ஒரு பொது இயக்கமாக இருக்கக்கூடும் எனக் கருதலாம். நம்முடைய அனைத்துச் செயல்பாடுகளும் மொழியுடன் இணைந்திருக்கிறது என்பதையும் நாம் கணக்கில் கொண்டால், மொழியின் வெளிப்பாடு என்பது மிகவும் அடிப்படையான ஒரு உயிர் இயக்கம் என்பதை உணரலாம்.

 

 

 

பச்யந்தி என்பது ஒரு முழுமையானது; பூரணமானது. வைகரியோ, நேர்கோடான ஒரு இயக்கம் கொண்டது. இவை இரண்டும் இணைந்துதான், எல்லா மொழி சார்ந்த – எனவே அறிதல் சார்ந்த - அனைத்து இயக்கங்களும் நிகழ்கின்றன. இந்த அடிப்படையான ஒலி வெளிப்பாட்டை, நாத பிரம்மம், சப்த பிரம்மம் என்றெல்லாம் உணர்ந்து, பிரபஞ்சத்துக்கே ஆதாரமான ஒரு இயக்கமாக நீட்டுவிக்கிறோம். நாம் எந்த அறிவார்ந்த செயலில் இறங்கும்போதும், இப்படிப் பிரபஞ்சப் பரிணாமத்தை பிரதியெடுக்கும் செயலில் இறங்குகிறோம் என்பதை நமக்கு நாமே உணர்த்திக்கொள்கிறோம். பூரணமான அவ்யக்தமான பச்யந்தியை காட்டும் சுழி அல்லது வட்டம், பின்னர் நாம் உணரும் நேர்கோட்டுக் காலத்தில் இயங்கும் வைகரி, இவற்றை இணைக்கும்போது கிடைப்பதோ, எதை எழுதும்போதும் தொடக்கமாக நாம் போடும் பிள்ளையார் சுழி.

பார்க்க -

(1)   ரிக் வேதம் 1.164.45

(2)   தொல்காப்பியம், எழுத்ததிகாரம், பிறப்பியல்

(3)   ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - நாமங்கள் 366,368,370,371

(4)   ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - நாமங்கள் 257,258,260,262

(5)   Padma Sudhi, Aesthetic Theories of India Vol. 1, Bhandarkar Oriental Research Institute, 1983, p.99 (quoted in William S Haney,2006, p.49)

(6)   Tandra Patnaik, Sabda : A study of Bhartrhari's philosophy of language (1947), D.K.Printworld, 2007,p.26

(7)   வெங்கட் சாமிநாதன், கலை உலகில் ஒரு சஞ்சாரம், சந்தியா பதிப்பகம், pp.74-5

(8)   Peter Malekin and Ralph Yarrow, The Pashyanti Project, in Performing Consciousness(Ed. by Daniel Meyer-Dinkgräfe, Per Brask),Cambridge Scholars,2009, pp.26-46

(9)   ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - நாமம்: 399

(10)  William S. Haney, Derrida's Indian literary subtext,in Cyberculture, Cyborgs and Science Fiction: Consciousness and the Posthuman,Rodopi, 2006, pp. 49-51

(11)  Annette Wilke, Sonic Perceptions and Acoustic Communication in Hindu India in Exploring the Senses: South Asian and European Perspectives on Rituals and Performativity (Ed.Axel Michaels & Christoph Wulf), Routledge, 2015.

(12)  Benjamin Libet et al.,Time of conscious intention to act in relation to onset of cerebral activity (readiness potential): the unconscious initiation of a freely voluntary act. Brain 106, 1983,pp 623–642

(13)  Antonio Damasio, Descarte’s Error, Harper Collins, 1994, p.212



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard