* நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்! * யாம் அறிந்த புலவர்களிலே கம்பனைப் போல், வள்ளுவன் போல், இளங்கோவைப் போல்....
இதெல்லாம் சிலம்பின் பெருமைகள்! சிலம்பு பேதைப் பெண் கண்ணகியை மட்டுமா காட்டுகிறது? மேதைப் பெண் கண்ணகியையும் அல்லவா காட்டுகிறது! ஊரு விட்டு ஊரு வந்து, புது மாநிலத்தில் ஒரு பொண்ணு, அந்தூரு முதலமைச்சரை....நேரடியாகத் "தேரா மன்னா"-ன்னு கேட்க முடியுமா? நம்ம பெண் எம்.பி.க்கள் கூட இலங்கைக் குழுவில் அமைதியாகத் தானே போய் வருவாங்க? :))* வள்ளுவர் அரசியல் பற்றியும், பெண்ணின் மாண்பு பற்றியும், ஊழ்வினை பற்றியும் தத்துவமாகச் சொல்லி விட்டுப் போனார்! * ஆனால் எளிய மக்கள் அதைத் தொடர்புப்படுத்தி பார்க்கும் வண்ணம், கதை நடையில் கொண்டு சென்றவர்இளங்கோ!
கண்ணகியைப் "பொழைக்கத் தெரியாதவள்", "புனித பிம்பம்" என்று ஒரு சொல்லில் அடக்கி, இந்தக் காலத்தில் கேலி பேசலாம்! ஆனால் அவள் உள்ளத்தில் இருந்த அறத்தின் மேன்மையை அறிந்தவர் யார்?
இளங்கோவின் காப்பியத்தில் தான் எத்தனை எத்தனை புரட்சிகள்? 1. கதையில் முதலில் தலைவனை அறிமுகப்படுத்தாமல், தலைவியை அறிமுகப்படுத்துகிறார்!
2. ஹீரோ, ஹீரோயின் எல்லாரும் வெகு சாதாரண குடிமக்கள்! அரசனைப் பாடாது, மக்களையும் அடியவரையும் பாடும் வித்தியாசமான பாணி இளங்கோவின் எண்ணத்திலேயே இருந்துள்ளது.
3. பெண்ணின் மென்மைத் தன்மையையும், வீரத்தையும் ஒருங்கே காட்டும் கவிஞர் அவர்! குடும்ப நலனே பெரிதென்று இருக்கும் ஒரு வன்சொல் அறியாத பெண், நாலு பேர் முன்னிலையில் "தேரா மன்னா" என்று அரசனைச் சொல்ல எவ்வளவு "தில்" இருக்க வேண்டும்? அதுவும் ஊரு விட்டு ஊரு வந்து, எந்த ஒரு பின்புலமும் அரசியல் சப்போர்ட்டும் இல்லாது?
4. அப்படியே சொன்னாலும், "யாரடி நீ...வாய் நீளுதோ...கொஞ்சம் கூட அவையடக்கம் இல்லாமல்?" என்று அதட்டி இருக்கலாம்! ஆனா அமைதியாக வழக்கு கேட்க, ஒரு ஆட்சி முறைக்குத் தான் எவ்வளவு பொறுப்பு இருந்திருக்க வேண்டும்? கேள்வி கேட்டாலே, வூட்டுக்கு ஆட்டோ அனுப்பும் "மன்னர்கள் ஆளும் மக்களாட்சி" ஆகி விட்டது இன்றைய கால கட்டம்! 5. ஓ, அவளா! அவள் ஒரு நடனப் பெண் தானே என்று மாதவியை வெகு ஈசியாக வில்லி ஆக்கியிருக்க முடியும்! படையப்பா ஸ்டைலில், ஒரு வில்லி அப்போதே உருவாகி இருப்பார்! ஆனால் இளங்கோ செய்தது என்ன? = குலத்தால் அவளை ஒ
5. ஓ, அவளா! அவள் ஒரு நடனப் பெண் தானே என்று மாதவியை வெகு ஈசியாக வில்லி ஆக்கியிருக்க முடியும்! படையப்பா ஸ்டைலில், ஒரு வில்லி அப்போதே உருவாகி இருப்பார்! ஆனால் இளங்கோ செய்தது என்ன? = குலத்தால் அவளை ஒதுக்காமல், குணத்தால் அவளை ஏற்றுக் கொண்டு, காப்பிய நாயகிக்கு இணையாக வைக்கிறார்!
காப்பியத்தில், தவறுகளை ஆணும் பெண்ணும் சரி சமமாகவே புரிகின்றனர். ஆனால் மாதவி மனம் மாறி, துறவு மனப்பான்மை மிகுந்து விடுகிறாள்; கண்ணகியின் நலம் குறித்து தான் விடும் தூதில் கேட்டனுப்பும் போது, நம் மனக்கண் முன் வெகுவாக உயர்ந்து விடுகிறாள் (அட மாதவியும் புனித பிம்பம் ஆயிட்டாப்பா என்று சொல்லிடாதீங்க
6. இளங்கோ, தான் சமணத் துறவியாக மாறிய போதிலும், காப்பியத்தில் பொது நோக்கம் தான் காட்டுகிறார்; பிற சமயங்களையும், தெய்வங்களையும், மக்கள் பழக்க வழக்கங்களையும், தனக்கு எதிரி நாடான சோழ/பாண்டிய நாட்டின் பெருமை பற்றியும்...மறைக்காது எழுதிய நல்ல உள்ளம், இளங்கோவின் "நெஞ்சம்"! அதனால் தான் போலும், அந்த நெஞ்சத்தைப் போற்றும் வகையில், "நெஞ்சை" அள்ளும் சிலம்பு என்றான் பாரதி!
கண்ணகியைக் காட்டும் காவியம், கண்ணனையும் நடுநடுவே பல இடங்களில் பேசுகிறது! தமிழ்க் கடவுளராகிய பெருமாள்-முருகன், தமிழ் மக்களின் அன்றாட வாழ்வில் எப்படி இயைந்து இருந்தார்கள் என்பதைத் துல்லியமாகக் காட்டுகிறது! அரங்கம், வேங்கடம், செந்தூர் என்ற ஆலயங்கள் எல்லாம் 1700 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தன என்றால் நம்ப முடிகிறதா? சிலப்பதிகாரம் படம் பிடித்துக் காட்டுகிறது, பார்க்கலாமா?
திருவேங்கட மலையில் நிற்பவன் யார்? = பெருமாளா? முருகனா??
இன்றளவும் சிலர் குழம்பித் திரிந்து, குழப்பியும் திரிகிறார்களே! அவர்களுக்கு இளங்கோவடிகள் பதில் சொல்கிறார் பாருங்கள்!
வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்குயர் மலையத்து உச்சி மீமிசை ... ... பகையணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் கையில் ஏந்தி நலங்கிளர் ஆரம் மார்பில் பூண்டு பொலம்பூ ஆடையில் பொலிந்து தோன்றிய 50 செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்
பகை அணங்கு ஆழியும் = சக்கரமும், பால் வெண் சங்கும் = சங்கும், தாமரைக் கையில் ஏந்தி, பூவாலேயே ஆடை அணிந்து (பூலங்கி = பூ+அங்கிச் சேவை என்று இன்றும் நடக்கிறது)
நெடியோன் நிற்கிறானாம், எங்கு? = வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும் மலையில்! சங்கு-சக்கரம் ஏந்திக் கொண்டு! ஒரு படத்தையே தமிழ்ச் சொற்களால் வரைந்து காட்டுகிறார் பாருங்கள்!
இன்னொரு இடத்திலும், வேங்கடம் யாருடைய மலை என்று காட்டுகிறார்! தமிழகத்தின் எல்லைகளை "வடவேங்கடம்-தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல் உலகம்" என்று தொல்காப்பியம் காட்டியது அல்லவா! அதில் வடவேங்கடம் என்று தான் வருகிறதே தவிர, அந்த வேங்கடத்தில் யார் நிற்பது என்று அதில் சொல்லப்படவில்லை! அதனால் இளங்கோ தன் கேமராவை இன்னும் Zoom செய்து காட்டுகிறார் போல! :)
நெடியோன் குன்றம் = நெடியோனாகிய திருமாலின் குன்றம் - திருவேங்கடம் தொடியோள் பெளவம் = தொடியோளாகிய குமரியின் கடல் தமிழ் வரம்பு அறுத்த = தமிழ் நாட்டு எல்லையாக வரம்பு செய்து தண்புனல் நன்னாட்டு = நீர்வளம் கொழிக்கும் நாட்டில்
குமரி ஆறு என்னாது குமரி பெளவம் என்று சொல்வது எதுக்கு-ன்னா, குமரி ஆறு கடல் கோளால் கடலுள் உள் வாங்கி விட்டது! பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக், குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள என்று இதே இளங்கோ, சிலம்பில் முன்பு சொல்லி விட்டார் அல்லவா!
இப்படி, இவ்வளவு தெளிவாக, வேங்கட மலையில் நிற்பது யார் என்பதை, ஒரு தமிழ் அறிஞர்...இளங்கோ படம் பிடித்துக் காட்டுகிறார்!
ஆனால் வேண்டுமென்றே கிளப்பி விட்டு, அப்பாவி மக்களைக் குழப்பித் திரியும் சில மதவாதிகள்.....அது முருகனோ, அவனோ, இவனோ...என்று இந்தக் காலத்திலும் குட்டையைக் கலக்கி, மீன் பிடிக்க எண்ணுகின்றனர்! "வேங்கட சுப்ரமண்யம்" என்றெல்லாம் பேர் வைத்து, தங்கள் குல அபிமானத்தையும், வடமொழி வெறியையும், சமயப் போர்வையும் ஒன்றுமறியாக் குழந்தைகளின் மேல் திணிக்கின்றனர்! :(((
பழுத்த தமிழர் - சமய விருப்பு/வெறுப்பு இல்லாதவர் - இளங்கோ அடிகள் சொல்வதைக் கூடக் காது கொடுத்து கேளாதவர்கள், தமிழைக் கேளாதவர்களே!
சரி, இளங்கோ சொல்வதைத் தான் கேட்கவில்லை! ஆனால் பின்னால் வந்த அரும்பெரும் முருக பக்தர் அருணகிரி சொல்வதைக் கூடவா கேட்க மாட்டார்கள்? இளங்கோவடிகள் காட்டும் அதே காட்சியை - திருமால் திருவேங்கட மலை மேல் நிற்பதை - அருணகிரியும் காட்டுகிறார்! இதோ....
உலகீன்ற பச்சை உமை அண்ணன் வடவேங்க டத்தில் உறைபவன் உயர் சாரங்க சக்ர கரதலன் மருகோனே திரை பாய்ந்த பத்ம தட வயலி- இல் வேந்த முத்தி அருள்தரு திருவாஞ்சி யத்தில் அமரர்....பெருமாளே!
இலக்கியம், வரலாறுகளைத் தங்கள் "மனம் போன" போக்கில் மட்டுமே கொள்வது, உண்மை அறிந்த பின்னும் பழையதே சாதித்துக் கொண்டுத் திரிவது......இதெல்லாம் தமிழும் அல்ல! முருகும் அல்ல! அவரவர் செய்து கொள்ளும் "சுய இன்பங்களே"!
சிலப்பதிகாரம் காட்டும் மாயோன் பற்றிய இதர பல செய்திகள்:
1. புகார்க் காண்டம் - மாதவி நாட்டியம் - முதல் வணக்கம் யாருக்கு?
இந்திர விழாவின் தொடக்கத்தில், மாதவி நடனம் ஆடுகிறாள்! பதினோரு ஆடல்! அனைத்து ஆடல்களுக்கும் முதன்மையான ஆடல் எது? = காக்கும் கடவுளான மாயோன் ஆடல்! மாயோன் பாணி!
2. மதுரைக் காண்டம் - ஆய்ச்சியர் குரவை - பொது மக்கள் ஆடும் திருமால் கூத்து
இந்தப் பாடல், முத்தமிழில், இசைத் தமிழ்! பண்ணுடன் பாடவல்ல சிலப்பதிகாரப் பாடல்!
கண்ணகி, மதுரைக்கு வெளியே, ஆயர்ப்பாடியில் இருக்கும் போது.... அவள் தனிமையைத் தணிவிக்க.... மாதரி-ஐயை மற்றும் இதர ஆயர்கள் ஆடும் கூத்து!
மாயோனாகிய பெருமாளை மையப் பொருளாக வைத்து = குரவைக் கூத்து! பண்டைத் தமிழ் மக்களின் நாட்டிய அமைப்பினை/பண்ணிசையை, சிலப்பதிகாரம் மிகவும் நுணுக்கமாகக் காட்டும் கட்டம் இங்கு தான்!
தமிழ்க் கடவுளும், ஆயர்களின் அன்பனுமான கண்ணன்! அவன் அழகும் பெருமையும் பாட்டில் ஒவ்வொன்றாக வருகிறது! அடியே தோழீ, கண்ணன் நம்ம வீட்டுக்கு வந்தால், அவனைப் பிடிச்சி, அவன் குழல் வாசிக்கும் இனிமையைக் கேட்போமா?- என்று பெண்கள் திட்டம் போடுகிறார்கள்! :)
ஐநூறு ஆண்டுகளுக்குப் பின்னால் வந்த கோதையாகிய ஆண்டாளும் சிலப்பதிகாரம் படிச்சி இருப்பாள் போல! அவளும் அதே சொற்றொடரைப் பயன்படுத்துகிறாள் பாருங்கள்! = கன்றுக் குணிலா எறிந்தாய் கழல் போற்றி!!
இது மாயோனுக்கென்றே ஆன மிக அழகான சங்கத் தமிழ்ப் பாடல்! ஆழ்வார் தமிழுக்கும் முந்தைய தமிழ்! ஆலயங்களில் கூடப் சிலம்பைப் பாடலாம்! அவ்வளவு அழகு!
நாராயணா என்னாத நாவென்ன நாவே, கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே, கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே?
என்றெல்லாம் இளங்கோ என்னும் தமிழ்க் கொண்டல் பொழிகிறது! இதை எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் ஐ.நா சபை நிகழ்ச்சியில் பாடி, அனைவரையும் கவர்ந்து இழுத்தார்கள்! இதோ ஒலிச்சுட்டி!
பெரிய கயிறாலும் கட்டுப்படாதவன், தாயின் தாம்புக் கயிற்றுக்கு அடங்கினாயே, உலகையே உண்ட வாய், வெண்ணெய்க்கு அலையுமோ? இப்படி இனிய மாயம் செய்யும் மாயோனே....இந்த மாயமெல்லாம் உன் மேல் எங்களுக்கு ஒரு மருட்கை (மயக்கத்தை) உண்டாக்குது!
மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகை முடியத் 1 தாவிய சேவடி சேப்பத், தம்பியொடும் கான்போந்து சேர் அரணும் போர் மடியத், தொல் இலங்கை கட்டழித்த சேவகன் சீர் கேளாத....செவி என்ன செவியே? திருமால் சீர் கேளாத...செவி என்ன செவியே?
பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம் 2 விரிகமல உந்தியுடை விண்ணவனை - கண்ணும் திருவடியும், கையும், திருவாயும் செய்ய கரியவனைக் காணாத கண்ணென்ண கண்ணே? கண்ணிமைத்துக் காண்பார் தம் கண்ணென்ண கண்ணே?
நாரணம் என்பது தூய தமிழ்ச் சொல்லே! =நாரம் (நீர்) + அணம் (அருகில்/இடம்) = நீர்மை தங்கும் இடம் = நாரணம்! இது குறித்த இராம.கி ஐயாவின் பதிவுகளையும் வாசியுங்கள்! சுட்டிகள் மேலே!
இப்படிப் பல அழகான இசைப் பாடல்களோடு, கண்ணன் கூத்து-ஆய்ச்சியர் குரவை முடிகிறது!
3. மதுரைக் காண்டம் - பழமுதிர் சோலை - மதுரைக்குப் போகும் "ரூட்"
மதுரைக்கு எந்த ரூட்டில் போகணும்? கொடும்பாளூரில் இருந்து இரண்டு வழிகள் பிரியும்! மதுரைக்குச் செல்லும் அந்த இரண்டு வழிகளைச் சொல்கிறார் இளங்கோ! ஒன்று வலப்பக்க வழி! இன்னொன்று இடப்பக்க வழி!
அந்த இடப்பக்க வழியில் சென்றால் வருவது, ஆறாவது படை வீடான = பழமுதிர் சோலை! அது என்ன மலையாம்? = திருமால் குன்றமாம்! :) அட, சொல்வது நான் இல்லீங்க! இளங்கோ! :) சரவணம் என்னும் பொய்கையையும் அங்கே காட்டுகிறார்! மாயோனும் சேயோனும் இணைந்து உறையும் சோலைமலை அல்லவா!
திருமால் குன்றத்துச் செல்குவிர் ஆயின் பெருமால் கெடுக்கும் பிலம் உண்டாங்கு விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபிற் புண்ணிய சரவணம் பவகாரணியோடு இட்ட சித்தி யெனும்பெயர் போகி 95 ... ... ஓங்குயர் மலையத்து உயர்ந்தோன் தொழுது 105 சிந்தையில் அவன் தன் சேவடி வைத்து வந்தனை மும்முறை மலைவலம் செய்தால் நிலம்பக வீழ்ந்த சிலம்பாற்று அகன்றலை
இளங்கோ, சமண அடிகளாய் இருந்தாலும், காப்பியத்தில் தன் சொந்த விருப்பு-வெறுப்புகளைப் புகுத்தவே மாட்டார்! தமிழைத் தமிழாய்ப் பார்ப்பார்! அதான் அவரு "நெஞ்சை அள்ளும்" இளங்கோ!
இதில் கூடப் பாருங்க.....திருமால் குன்றம்-சரவணப் பொய்கை-ன்னு வழிப்போக்கன் (மறையவன்) சொன்னாலும், கவுந்தி அடிகள் சமணர் அல்லவா? அவர் கூற்றையும் மறைக்காமல் சொல்லுவார்! "எங்களுக்குச் சரவணப் பொய்கையில் குளிக்கும் வழக்கமெல்லாம் இல்லை மறையவரே, எனினும் நன்றி"-ன்னு கடந்து செல்வதையும் இளங்கோ காட்டுவார்! = பிலம் புக வேண்டும் பெற்றி ஈங்கு இல்லை-ன்னு ஒரே வரியில் சொல்லி விடுவார் கவுந்தி அடிகள்!
இப்படி, * திருமால் குன்றம்-சரவணப் பொய்கையின் பெருமையும், * அதே சமயம் சமண அடிகளுக்கு அவை ஒரு பொருட்டல்ல என்றும் ஒருங்கே, உள்ளது உள்ளபடிக் காட்ட, இளங்கோவால் மட்டுமே முடியும்! muruga..i like this elango very much da:)
திருவரங்கத்தில் பெருமாள் என்னும் மாயோன், பாம்பணையில் துயில் கொண்டு இருப்பதையும், தன் கேமராவில் படம் பிடிக்கிறார் இளங்கோ!
ஒரு பெரிய நீல மேகம், வெள்ளி மலை உச்சியில் படுத்து இருப்பது போல் இருக்கிறதாம் = கருந் தெய்வமான மாயோன், வெண் பாம்பில் படுத்து இருப்பது! இப்படிக் காவிரியின் நடுவில், திருவாழ் மார்பன் கிடந்த வண்ணம் என்கிறார்! மதுரைக் காண்டம் - காடு காண் காதை நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப் 35 பால்விரிந்து அகலாது படிந்தது போல ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறல் பாயற் பள்ளிப் பலர்தொழுது ஏத்த விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித் திரு-அமர் மார்பன் கிடந்த வண்ணமும்
5. வஞ்சிக் காண்டம் - சேடக மாடப் பெருமாள்! (திருவனந்தபுரம்) வஞ்சிக் காண்டம் முருகப் பெருமானோடு தான் துவங்குகிறது! குன்றக் குரவை! குறவர்கள் ஆடும் கூத்து! முன்பு ஆயர்கள் ஆடும் கூத்து பார்த்தோம் அல்லவா? அது போல் இது குறவர்கள் ஆடும் குத்து! அது முல்லை, இது குறிஞ்சி! அது பெருமாள், இது முருகன்!
கூத்து நடக்கும் போது, அங்கு வந்த சேரன் செங்குட்டுவனுக்கு, இந்த மலைக் குறவர்கள் தான், கண்ணகி கோவலனோடு வானில் போன நிகழ்வைச் சொல்லுகிறார்கள்! சாத்தனார் முழுக் கண்ணகி கதையினைச் சொல்கிறார்!
அதன் பின்னரே, செங்குட்டுவன், வடபுல மன்னரை வெற்றி கொள்ளச் செல்கிறான்! அப்படியே கண்ணகி சிலை செய்ய, கங்கைக் கரையில் கல் எடுத்து வரவும் திட்டம்! போருக்குச் செல்லும் முன், வஞ்சிப் பூ சூடி, தெய்வம் பரவி, யானை மேல் ஏறுகிறான்! அப்போது இறைவன் மாலைகளைக் கொணர்வித்துத் தருகிறார்கள்!
வஞ்சி மாலையைப் போட்டுக் கொண்டு யானை ஏறும் முன்னால், சிவப் பிரசாதமாக மாலை தர, அதைச் சென்னியில் சூடிக் கொள்கிறான்! யானை ஏறிய பின், சேடகமாட ஆலயத்தில் இருந்து, இறைவன் அருட் கொடையாக இன்னொரு மாலை வருகிறது! (சேடகமாடம் = இன்றைய திருவனந்தபுரத்து ஆலயம் என்று கருதுவர்)
அதையும் செங்குட்டுவன் அன்போடு ஏற்றுக் கொள்கிறான்! ஏற்கனவே ஈசனின் மலர் சென்னியில் உள்ளதால், தலையில் வைக்க இடமில்லாமல், இந்த மாலையைக் கழுத்தில்/தோள்களில் தாங்கிக் கொள்கிறான்! பின்னர் சேர குலத்தின் மாலையான வஞ்சி மாலையும் அதே தோளில் சூடிக் கொண்டு உலா வருகிறான்!
வஞ்சிக் காண்டம் - கால்கோள் காதை குடக்கோக் குட்டுவன் கொற்றம் கொள்க’ என, (61) ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்தோன் சேடம் கோண்டு, சிலர் நின்று ஏத்த, தெண்- நீர் கரந்த செஞ் சடைக் கடவுள் வண்ணச் சேவடி மணி முடி வைத்தலின், ஆங்கு- அது வாங்கி, அணி மணிப் புயத்துத் தாங்கினன் ஆகி, தகைமையின் செல்வுழ ஈசனின் மாலை ஏற்கனவே தலையில் உள்ளதால், சேடகமாடத்தின் திருமால் மாலையை, "அணி மணி புயங்களில்", "தாங்கிக்" கொள்கிறான், தகைமையோடு!
ஆனால், ஒரு சிலர் மட்டும் இதை "வேறு மாதிரி" செல்லுவார்கள்! :) செங்குட்டுவன் சைவ மரபினன்! அதனால் ஈசன் மாலையைத் தலையில் வைத்துக் கொண்டான்! ஆனால் பெருமாள் மாலையை, "சரி...ஒழியுது, குடுக்கறாங்களே"-ன்னு அலட்சியமாய் வாங்கி, ஒப்புக்கு "ஒற்றைத் தோளில்" போட்டுக் கொண்டானாம்! :)
அணி மணி புயங்களில், சேரன், சும்மானா போட்டுக் கொள்ள வில்லை! "தாங்கிக்" கொண்டானாம்! ஏன்? இறைவன் அருட்கொடை என்பதால்! = தாங்கினன் ஆகித் தகைமையுடன் செல்வுழ! அப்பறம் வஞ்சிப்பூ மாலையைக் கூடத் தான் தோள்களில் போட்டு வருகிறான்! உடனே சேர குல அடையாளமான வஞ்சிப் பூ மாலைக்கு அவ்வளவு தான் மரியாதை என்றா சொல்வோம்? :)
தங்களின் "ஏற்றம்" மிகு செயல்களைச் சொல்லலாம்-ல்ல? மாட்டார்கள்! அடுத்தவரை "இறக்கிக்" கொண்டு மட்டுமே இருப்பார்கள்! ஆலயக் கருவறைகளில் தமிழை முன்னிறுத்த மாட்டார்கள்! ஆனால் பெருமாள் கோயில் கருவறையில் தமிழ் ஓதி வழிபடுவதை ஒதுக்கித் தள்ளுவார்கள்! திருமால் தமிழ்க் கடவுள் அல்ல என்று ஒதுக்கித் தள்ளுவார்கள்!
சிறுபான்மைச் சமூகங்கள் தங்களுக்கு அடங்கியே தங்கள் மரபைப் பேண வேண்டும்! நல்லதே செய்தாலும், ஒரு போதும் தங்களை மிஞ்சிடக் கூடாது என்ற "புத்தி"! தமிழைத் தாங்கள் தான் முன்னிறுத்தவில்லை! அடுத்தவர்களாச்சும் தமிழை முன்னிறுத்துகிறார்களே என்று "ஏற்ற" எண்ணம் வராது! "இறக்க" எண்ணமே வரும்! :(
சிலப்பதிகார வரிகளை, பொதுமக்கள் யார் போய்ப் படிக்கப் போகிறார்கள் என்ற துணிவில், சும்மானா அடித்து விடுவது! - "சேரன் செங்குட்டுவன் ஒற்றைத் தோளில் அலட்சியமாக திருமால் மாலையை வாங்கிக்கிட்டான்" என்று! :) அடக் கொடுமையே! தமிழைப் படிக்கும் போதாவது, சமயத்தைத் தாண்டி, தமிழைத் தமிழுக்காகவே படித்தால், தமிழ் தழைக்கும்!
கோவலன்-கண்ணகி ஒன்று சேர்ந்த பின்னர், பொருள் ஈட்டும் பொருட்டு, சுற்றம் அறியாது தன்மானத்துடன், மதுரைக்குச் செல்ல முடிவெடுக்கிறான்!
சொந்த ஊரை விட்டு மதுரைக்குக் கிளம்பும் முன், கோவலன்-கண்ணகி, முதலில் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டு, பின்னரே கிளம்புகிறார்கள்! அதன் பின்னர் இந்திர கோட்டமான புத்த விகாரத்தையும், சமணப் பள்ளியான திலாதலத்தையும் வணங்கிச் செல்கிறார்கள்!
புகார்க் காண்டம் - நாடு காண் காதை வான்கண் விழியா வைகறை யாமத்து, மீன் திகழ் விசும்பின் வெண் மதி நீங்க, கார் இருள் நின்ற கடைநாள் கங்குல்- ஊழ்வினை கடைஇ உள்ளம் துரப்ப (4), ... ... நீள் நெடு வாயில் நெடுங் கடை கழிந்து-ஆங்கு- அணி கிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த மணிவண்ணன் கோட்டம் வலம் செயாக் கழிந்து (10)
அரவத்தின் மேல் அறி துயில் அமர்ந்த மணிவண்ணன் கோட்டத்தை (கோயிலை) வலம் செய்து, சென்றார்கள்!
அடுத்து பெளத்த விகாரத்தையும், அதற்கு அடுத்து சமணப் பள்ளியாகிய சிலாதலத்தையும் வணங்கி... பின்னர் காவிரிக் கடைமுகம் தாண்டி, வடக்காகப் பயணம் துவங்கினார்கள்! கவுந்தி அடிகளும் அவர்களோடு சேர்ந்து கொண்டார்!
அவலம் நீத்துஅறிந்து அடங்கிய கொள்கை மெய்வகை உணர்ந்த விழுமியோர் குழீஇய ஐவகை நின்ற அருகத் தானத்துச் சந்தி ஐந்தும் தம்முடன் கூடி
இதில் இருந்தே கோவலன்-கண்ணகியின் சமயப் பொறைமையும், கண்ணகியின் மாசில்லாத அன்பும் தெரிகிறது அல்லவா? காதல் ஒருவனைக் கைப்பிடித்தே, அவன் காரியம் "யாவினும்" கைக்கொடுத்து...யம்மாடி கண்ணகி, நீ நல்லா இருக்கணும்! உன் உள்ளம் வாழி வாழி!!
மணிமேகலை மேல் உரைப்பொருள் முற்றிய சிலப்பதிகாரம் முற்றும்!!!